றேடியோஸ்புதிர் 63 “கிட்டார் இசைப்பதைப் பாராய்” பதிலோடு வாராய்
By admin | February 23, 2012

வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் மக்கள்ஸ்,
ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டுமொரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த றேடியோஸ்புதிர் சற்று வித்தியாசமாக ஐந்து பாடல்களின் இடையிசை தரப்பட்டு அந்தப் பாடல்கள் எதுவென்று கண்டுபிடிக்கும் போட்டியாக அமையவிருக்கின்றது. இந்தப் போட்டியில் இடம்பெறும் ஐந்து பாடல்களிலும் பொதுவாக அமையும் அம்சங்கள், இவை அனைத்தும் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த பாடல்கள் என்பதோடு இந்த இடையிசையில் கிட்டார் வாத்தியத்தின் பயன்பாட்டைக் காணலாம்.
புதிரில் இடம்பெறும் பாடல்கள் எவை என்பதே போட்டி, எங்கே ஆரம்பிக்கட்டும் உங்கள் பொது அறிவு
ஒகே மக்கள்ஸ், கடந்த இரண்டு நாள் அவகாசத்தில் வந்த பதில்களில் ஒரேயொருவர் மட்டுமே அனைத்துப் புதிர்களுக்குமான பதிலை அளித்திருக்கின்றார். அவர் பெயர் மணி, காண்க பின்னூட்டத்தில்.
போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ![]()
இதோ விடைகள்.
பாட்டுப்புதிர் 1
அந்தப் பாட்டு கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் வந்த, இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடும்
“கானம் தென்காற்றோடு போய்ச் சொல்லும் தூது”
பாட்டுப்புதிர் 2
இந்தப் பாட்டு காக்கிச் சட்டை படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,பி.சுசீலா பாடும் “பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்”
பாட்டுப்புதிர் 3
அந்தப் பாடல் ஜெயச்சந்திரன், முடிவல்ல ஆரம்பம் படத்துக்காகப் பாடும் “பாடி வா தென்றலே”
பாட்டுப்புதிர் 4
இந்தப் புதிருக்கான பதில், இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடும் “நிலவே நீ வரவேண்டும்” பாடல் என்னருகே நீ இருந்தால்” படத்தில் இருந்து
பாட்டுப்புதிர் 5
இறுதிப் புதிருக்கான பதில் “பூந்தளிர் ஆட பொன் மலர் சூட” என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் பாடல் பன்னீர்ப்புஷ்பங்கள் திரைப்படத்திற்காக.
Topics: Uncategorized | 39 Comments »
இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன் பாடல்களோடு பேசுகிறார்
By admin | February 16, 2012
தமிழ் சினிமா உலகம் தன் கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருந்தும் அதிகம் பயன்படுத்திக் கொள்ளாத அற்புதமான கலைஞர்களில் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனும் ஒருவர். எண்பதுகளிலே எவ்வளவுக்கெவ்வளவு இசைஞானி இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு அனுபவிக்க வேண்டும் என்ற தீரா வெறி இருந்ததோ அதையும் கடந்து மனதில் தென்றலாக வந்து போன இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜாவுக்கு அடுத்த தட்டில் வைத்து என் மனசு எப்போதும் கெளரவிக்கும் வி.எஸ்.நரசிம்மன் இசையமைப்பாளராகக் கொடுத்த பங்களிப்பை.
இசைஞானி இளையராஜாவின் முக்கிய வாத்தியக்காரராகப் பாடல்களின் பின்னால் ராஜாங்கத்தின் ஆஸ்தான கெளரவத்தோடு இருந்த வி.எஸ்.நரசிம்மன் அவர்களை இளையராஜாவே ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி இசை நிகழ்ச்சி நடந்த மேடையில், “இவரை இசையமைப்பாளராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று சொன்னபோது இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கண்பட்டு தனது “அச்சமில்லை….அச்சமில்லை…!” திரைக்காக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணியாற்றியது மிகச் சொற்பப் படங்களே. அச்சமில்லை அச்சமில்லை, புதியவன், ஆயிரம் பூக்கள் மலரட்டும், கல்யாண அகதிகள் போன்ற குறிப்பிடத்தக்க படங்களோடு, சின்னத்திரையில் கலக்கிய “ரயில் சினேகம்” தொடருக்கும் பாடல்களோடு இசையமைப்பாளர் என்ற பணியையும் மேற்கொண்டார்.
ஆவாரம்பூவு ஆறேழு நாளா பாடலில் பொங்கி வரும் அருவியாகப் பாயும் இசையாகட்டும், பூமேடையோ பொன்வீணையோ பாடலில் ஒரு மினி இசை ஆலாபனையைப் பாடலின் இடையிசையில் நிரப்பிவைத்திருப்பதாகட்டும், வி.எஸ்.நரசிம்மனின் தனித்துவத்துக்குச் சின்ன உதாரணங்கள் அவை. வி.எஸ்.நரசிம்மன் இசைக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்க “சின்ன மணிக்குயிலே” என்று எடுக்கவிருந்த படத்தில் வந்த “அழகிய கல்யாணப்பூமாலை தான் விழுந்தது என் தோளில் தான்” என்ற பாடலுக்கு ஆயுட்கால அடிமை நான்.
வி.எஸ்.நரசிம்மன் அவர்களை என் ஊடக வாழ்வில் ஒருமுறையாவது பேட்டி எடுத்துவிடவேண்டும் என்ற கனவு அவ்வளவு சீக்கிரம் நனவாகும் என்று நினைக்கவில்லை. வழக்கம் போல ரேகா ராகவன் சார் வி.எஸ்.நரசிம்மனின் தொடர்பிலக்கத்தைப் பெற்றுத்தர, நானோ தயக்கத்தோடு அழைக்கிறேன். மீடியாவின் வெளிச்சம் அதிகம் படாத, தொலைக்காட்சிப் பேட்டிகளுக்கே வரக் கூச்சப்படும் இவர் வானொலிப்பேட்டிக்குச் சம்மதிப்பாரா என்ற எண்ணம் தான் காரணம். ஆனால் என் பேட்டி பற்றிச் சொன்னதுமே “ஒரு மணி நேரத்தில் செய்வோமா” என்ற போது நாட்கணக்கில் இழுத்தடிக்கும் பிரபலமே இல்லாத பிரபலங்களும் திடீரென்று வந்து போயினர். பேட்டி முடிந்ததும், “திருப்தியா இருந்துச்சா, நான் பேசினது எல்லாம் கரெக்டா” என்று கேட்டபோது நிறைகுடமாகப்பட்டார்.
வி.எஸ்.நரசிம்மன், திரையிசையிலும், திரையிசை கடந்தும் செய்த சாதனைகள் ஏராளம், அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு அவரின் தெரியாத பக்கங்களைச் சொல்ல இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட அளவில் எனக்குப் பரமதிருப்தி.
இதோ அவர் பேசுவதைக் கேளுங்கள், பாடல்களோடு
வி.எஸ்.நரசிம்மனின் இசையில் மலர்ந்த பாடற்தொகுப்பு ஒன்று
வி.எஸ்.நரசிம்மனின் இசையில் மலர்ந்த பாடற்தொகுப்பு இரண்டு
வி.எஸ்.நரசிம்மன் அவர்களின் வயலின் இசை ஜாலத்தைக் கண்குளிரக் காண
Topics: Uncategorized | 11 Comments »
றேடியோஸ்பதி வழங்கும் =>” நானும் பாடுவேன்” போட்டி நிகழ்ச்சி
By admin | February 3, 2012
வணக்கம், வந்தனம், வெல்கம் மக்கள்ஸ்,
நீண்ட இடைவெளிக்குப் பின் றேடியோஸ்பதி சார்பில் ஒரு போட்டி நிகழ்ச்சியை உங்கள் பங்களிப்போடு வழங்கலாம் என்றிருக்கிறோம். அந்தவகையில் ஒரு அறிமுகப் பகிர்வாக இந்தப் பதிவு இது. பாத்ரூமுக்குள் மட்டும் பாடும் பாடகர்களாக இருக்கும் பலரின் திறமையையும், ஏற்கனவெ தம் பாடற்திறமையைக் காட்டிவரும் அன்பர்களுக்கும் கூட இந்தப் போட்டி வகை செய்ய இருக்கின்றது. “நானும் பாடுவேன்” என்ற இந்தப் போட்டி இன்று முதல் வரும் மார்ச் 15 ஆம் திகதிவரை நிகழவுள்ளது. மார்ச் 15 ஆம் திகதி வரை அனுப்பப்பட்ட ஆக்கங்கள் பின்னர் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை றேடியோஸ்பதி தளத்தில் நேயர்கள் பார்வைக்காகப் பகிரப்படும். ஆக்கங்களை அனுப்பியவர்களில் சிறந்த பாடகர்கள் ஆண், பெண் என்ற இரு வகையில் தனித்தனியாக வாக்களிக்கும் வசதி செய்யபட்டு இரண்டு பிரிவுகளிலும் அதிக வாக்குகளைப் பெறும் ஆண், பெண் பாடகர்களுக்குச் சிறப்புப் புத்தகப் பொதி ஒன்று பரிசாக வழங்கப்படும். இந்தப் பரிசு இசை சார்ந்த நூல்களாக அமையவுள்ளன.
இதோ தொடர்ந்து போட்டி விதிமுறைகளைப் பாருங்கள்
1. இதுவரை வந்த தமிழ்த் திரையிசைப்பாடலில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் குரலில் பாடி அனுப்ப வேண்டும்.
2. ஒருவர் எத்தனை ஆக்கங்களும் மார்ச் 10 இற்கு முன் அனுப்பலாம் ஆனால் மார்ச் 15 ஆம் திகதிக்குள் தாம் அனுப்பியதில் எதைப் போட்டிக்காகப் பரிசீலிக்க வேண்டும் என்பதை அறியத் தரவேண்டும். ஒருவர் பாடிய ஒரு ஆக்கம் மட்டுமே போட்டிக் களத்தில் இருக்கும்.
3. பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் போது இசை சேர்த்தோ அல்லது இசை இல்லாமல் தனித்தோ பாடுவது உங்கள் சுய விருப்பம் சார்ந்தது.
4. தமிழில் வந்த திரைப்படப்பாடல்களை மட்டுமே போட்டிக்காகத் தேர்தெடுக்க வேண்டும்
5. பாடல்களில் தனிப்பாடலைத் தவிர்த்து, ஜோடிப்பாடலையும் தேர்ந்தெடுத்து இன்னொரு ஜோடிக் குரலையும் சேர்த்துப் பாடலாம், ஆனால் இருவரில் ஒருவர் மட்டுமே அதே பாடலின் போட்டியாளராக இருக்க முடியும்
6. நீங்கள் பாடிப் பதிவு பண்ணிய ஒலிப்பதிவை radiospathy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்
7. போட்டியில் மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டத்திலோ அல்லது மேற்சொன்ன மின்னஞ்சலிலோ அறியத் தாருங்கள்.
8. ஆண், பெண் இருப்பாலாருக்குமான இந்தப் போட்டியில் வயது எல்லை கிடையாது.
கணினியில் நீங்கள் பாடலைப் பதிவு பண்ண Audacity http://audacity.sourceforge.net/ போன்ற மென்பொருட்களைப் பரிசீலிக்கலாம்.
ஒகே ரெடி ஸ்டார்ட் மியூசிக்
Topics: Uncategorized | 6 Comments »
இசைஞானி இளையராஜா & இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கூட்டுப்படையல்
By admin | January 21, 2012

எண்பதுகளின் தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குனர்களின் பெருங்கனவாக இருந்தது இசைஞானி இளையராஜாவோடு சேர்ந்து படம் பண்ணவேண்டும் என்பது, அதன் தொடர்ச்சி தொண்ணூறுகளிலும் இருந்ததென்று தான் சொல்ல வேண்டும். இளையராஜாவின் இசை தம்முடைய இலட்சியப்படைப்புக்கு உணர்வூட்டிப் லம் சேர்க்கும் என்பதே இதன் அடிப்படை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
அறிமுக இயக்குனர்களோடு இசைஞானி இளையராஜாவின் இசை ஜோடி சேர்ந்து கொடுத்த வெற்றிப்படங்களை ஒரு பட்டியல் போடலாம். அது இன்னொரு பதிவுக்கு உதவும் ![]()
எண்பதுகளிலே திரைப்படக்கல்லூரி மாணவர்களின் வருகை தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்பட்டபோது அந்த வாசல் வழியாக வந்தவர் தான் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். எடுத்த எடுப்பிலேயே அன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி ஏழு நட்சத்திரங்களில் இருவர் பிரபு, கார்த்திக் ஆகியோரை வைத்து ஆர்.வி.உதயகுமார் கொடுத்த படம் “உரிமை கீதம்” அந்தப் படத்துக்கு ஆபாவாணன் வழியில் இசையமைப்பாளர்கள் மனோஜ் கியானை இசைக்க வைத்தார். தொடர்ந்து “புதிய வானம்” படத்தில் சிவாஜி,சத்யராஜை இயக்கிய போதும் அவர் தேர்ந்தெடுத்தது இசையமைப்பாளர் ஹம்சலேகாவை.
முதற்படத்தில் இருந்து தானும் பாடலாசிரியராகத் தன் படங்களில் இருக்க ஆர்.வி.உதயகுமார் தவறவில்லை.
இசைஞானி இளையராஜாவோடு ஆர்.வி.உதயகுமார் கூட்டணி அமைத்த முதற்படமாக அமைந்தது தொடர்ந்து வந்த “கிழக்கு வாசல்”. தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இசைஞானி இளையராஜாவை வைத்துப் பண்ணிய வெற்றிப்படங்களில் “கிழக்கு வாசல்” பெரு வெற்றி கண்ட படமாக அமைந்து சாதனை படைத்தது. கார்த்திக், ரேவதி ஆகியோரின் சினிமாப் பயணத்தில் தவிர்க்க முடியாத படமாக இது இன்றளவும் இருக்கின்றது.
“தாங்கிடத்தத்த தரிகிட தத்த” என்று சந்தம் போட்டு நெஞ்சின் கதவுகளைத் தட்டி உள்ளே சென்று உட்காரும் “அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்” பாடலாகட்டும் சித்ராவின் தேன் குரலில் “வந்ததேஏஏஏஏ குங்குமம்” என்ற மெல்லிசையாகட்டும் படத்தில் மீதமுள்ள பாடிப் பறந்த கிளி உள்ளிட்ட எல்லாப் பாடல்களையும் சேர்த்து கிழக்கு வாசல் படத்தின் பாடல்கள் தங்கக் கிரீடம் சூட்டவேண்டிய தராதரம். “வந்ததே குங்குமம்” பாடலை இன்னொரு ஸ்பெஷல் பதிவுக்காக மனதில் ஒதுக்கி வைத்திருக்கிறேன்.
அதிலும் குறிப்பாக “பச்சமலப்பூவு நீ உச்சி மலைத் தேரு” பாடலை பாடல் ஒலி நாடாவில் இரண்டு பக்கமும் ஒலிப்பதிவு செய்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கேட்டு ரசித்ததாக அன்றைய காலகட்டத்தில் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் ஒரு மேடை நிகழ்ச்சியில் சொல்லியிருந்தது ஞாபகத்து வருகின்றது. கிழக்கு வாசல் பாடல்களில் எதை இங்கே கொடுப்பது என்று வரும் போது ஓரவஞ்சனையுடன் “பச்சமலைப் பூவு” தான் வந்து விழுகிறது.
ஒரு படம் இடைவேளைக்குப் பின் மீண்டும் தன் வழக்கமான இரட்டை நாயகர்கள் செண்டிமெண்டில் வந்த படம் “உறுதிமொழி” இதில் சிவகுமார், பிரபு முக்கிய நாயகர்கள். ஆர்.வி.உதயகுமாரோடு திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்து வெளியே வந்து ஒளிப்பதிவாளராக இயங்கிய ரவி யாதவ், இவரின் தயாரிப்பில் வந்த படமே உறுதிமொழி. இப்போது ரவி யாதவ் முழுமையாகத் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி மும்பை சென்று விட்டார். கிழக்கு வாசல் கொடுத்த பெருங்கவனிப்போடு ஒப்பிடுகையில் உறுதிமொழி திரைப்படம் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் இந்தப் படத்தில் வந்த “அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா” பாடல் அந்த நாளில் சென்னை வானொலியில் திரைகானத்திலும், நேயர் விருப்பத்திலும் ஒலித்துத் தன் இருப்பைக் காட்டியது இன்னும் இந்த ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி கொடுத்த இந்த ஜோடிப்பாட்டை நேசிப்பவர்கள் நெஞ்சாங்கூட்டில் வைத்திருப்பர்.
தொடர்ந்து கார்த்திக், சிவகுமார் கூட்டணியோடு வந்தது “பொன்னுமணி”. இந்தப் படத்தை எவ்வளவு தூரம் தமிழகத்து ரசிகர்கள் ரசித்தார்களோ தெரியவில்லை. ஆனால் ஈழத்து ரசிகர்களிடையே இந்தப் படம் வந்த காலகட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மின்சாரம் இல்லாது மண்ணெண்ணையில் நீர் இறைக்கும் மெஷினை இயக்கி மின்சாரம் தருவித்துப் படம் பார்த்த அந்தக் கற்காலத்தில் வந்த பொற்காலச் சினிமா இது. இசைஞானி இளையராஜாவின் மூத்த புதல்வர் கார்த்திக் ராஜா தன் தந்தையை “ஏ வஞ்சிக்கொடி” என்று முதன்முதலில் பாடவைத்து இசையமைத்தார். ஏனைய பாடல்களில் “நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா” எம் ஊரில் நாதஸ்வரம் வாசிப்பவர்களின் வாசிப்பில் அந்தக் காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு பாடலாகக் கல்யாண வீடுகளிலும், கோயில் திருவிழாவின் ஜனரஞ்சக வாசிப்பு நேரத்திலும் இடம்பிடித்த பாடலது.
“பாவலர் கிரியேஷன்ஸ்” இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் தயாரிப்பில் கமலை “சிங்காரவேலன்” ஆக்கி ஆர்.வி.உதயகுமார் இயக்கிய படம். “அதிவீரராம பாண்டியன்” என்ற படத்துக்காக கமல் தனக்குக் கொடுத்த கால்ஷீட் என்றெல்லாம் தம்பி கங்கை அமரன் கோபித்தார். ஆனாலும் படம் இன்னொரு கரையில் வளர்ந்தது. படத்தில் வில்லன் உட்பட எல்லோருமே சிங்காரமாக இருக்கவேண்டும் என்பதை முன்னுறுத்துவதாக அப்போது பேட்டியில் எல்லாம் சொன்னார் ஆர்.வி.உதயகுமார். இசைஞானி இளையராஜாவின் நீண்ட சாம்ராஜ்யத்தில் எக்கோ இசைத்தட்டுக்கள் காலம் பெரியது. ஆனால் அவர்களோடு கொண்ட பிரிவால் தயாரிப்பாளர் ஏக்நாத் உடன் சேர்ந்து பனையோலை விசிறியைச் சின்னமாகப் போட்டு வந்த “ராஜா ரெக்காட்ஸ்” இல் சிங்காரவேலனும் வந்தது. அப்போது பாடல் ஒலிநாடா வாங்குபவர்களுக்குப் போட்டியும் பரிசு வெல்பவர்களுக்கு சிங்காரவேலன் படத்தின் வெற்றி விழாவில் கெளரவமும் கிட்டும் என்றெல்லாம் விளம்பரம், ஆனால் என் சிற்றறிவுக்கு எட்டியவரை அதெல்லாம் நடக்கவில்லை. ஏக்நாத்தும் காணாமற் போய்விட்டார் திரையுலகில் இருந்து. சும்மாவே இசைஞானியின் பாடல்கள் பட்டையைக் கிளப்பும், அதிலும் தன் குடும்பத் தயாரிப்பில் வந்த படம் என்றால் சொல்ல வேண்டுமா? பம்சுக்க பம்சுக்க பம்பம் தான் ;0
புதுச்சேரி கச்சேரி பாடலில் வரும் “டைகராச்சாரி” சொல் மட்டும் ஒலி இழந்து இலங்கை வானொலியில் ஒலித்தது, காரணம் ஏன் என்பதும் வேணுமோ?
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் பாடல் இன்றளவும் என்னை இம்சை செய்யும் இனிய காதலியாய்
“சின்னக்கவுண்டர்” ஆர்.வி.உதயகுமாருக்கு கிழக்கு வாசலுக்குப் பின் மீண்டும் பெரியதொரு வெற்றியைக் கொடுத்து அழகு பார்த்தது. படத்தில் விஜயகாந்த், மனோரமாவின் கெட் அப் மற்றும் சுகன்யாவின் பொருத்தமான பாத்திரத் தேர்வு, கவுண்டமணி செந்தில் இவற்றையெல்லாம் விஞ்சி இசைஞானி இளையராஜா போட்டுக் கொடுத்த ஒவ்வொரு பாடல்களுமே வெறும் அஞ்சு பாட்டுக் கணக்கல்ல. ஒவ்வொன்றும் காட்சிகளோடு இழத்துச் சேர்த்த முத்துக்கள். அதிலும் “முத்துமணி மாலை என்னைத் தொட்டுத்தொட்டுத் தாலாட்ட” பாடல் கடந்த ஒரு வருஷமாக நான் செய்யும் புதிய வானொலி நிகழ்ச்சியான “முத்துமணிமாலை” இன் மகுடப்பாடல். இந்தப் பாடல் வந்த சமயத்தில் இலண்டனில் இருக்கும் அண்ணர் வாங்கித் தந்த டேப் ரெக்காடரில் அப்போது இயங்கிய எஃப் எம் 99 என்ற வானொலியை ஒலிக்கவிட்டு “முத்துமணி மாலை” பாடலைப் பதிவாக்கியது ஒரு அழகிய நினைவாக.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் பார்வை தொடர்ந்து வெற்றிப்படம் கொடுக்கும் ஆர்.வி.உதயகுமார் மீது விழுந்த போது அது ஏவி.எம் என்ற பெரும் தயாரிப்பு நிறுவனமும் கூட்டுச் சேர “எஜமான்” படமாகியது. படம் முழுவதும் ரஜினியை வேஷ்டி கட்டவைத்து வானவராயர் ஆக்கியது ஒரு புதுமை என்றால், ஏவிஎம் உடன் ஊடல் கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவை வைத்துத் தான் படம் பண்ணுவேன் என்று விடாப்பிடியாக இருந்து அதைச் சாதித்தது ஆர்.வி.உதயகுமாரின் இன்னொரு சாதனை. கிழக்கு வாசல் படத்தில் வாலியும் பாட்டெழுதினார் ஆனால் தொடர்ந்து வந்த உறுதி மொழி, பொன்னுமணி படங்களில் முழுமையாக ஆர்.வி.உதயகுமாரே எல்லாப்பாடல்களையும் எழுதினார். மீண்டும் வாலிக்கும் ஒரு வாய்ப்பு எஜமான் படத்தில்.
இசைஞானி இதில் கொடுத்த பாடல் முத்துக்கள் ஒவ்வொன்றுமே நட்சத்திரத் தகுதி. அதிலும்
“ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இனியான இளமானே துணையான இளமானே”
என்ற பாடல் உச்சம். இதே பாடலை சோக மெட்டோடு ராஜாவே பாடியிருப்பது படத்தில் மட்டும் வரும்.
நடிகர் பிரபுவின் 100வது படம் யார் இயக்குவது என்ற தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்புக் கொடுக்கப்பட்டவர் ஆர்.வி.உதயகுமார். அமெரிக்கா சென்ற நதியாவை மீண்டும் களமிறக்கி, மீனாவையும் சேர்த்து இரட்டை ஜோடியாக்கி “ராஜகுமாரன்” படமாக்கினார். அன்றைய காலகட்டத்தில் இந்தப் படத்துக்கான விளம்பரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பே படத்தின் வெற்றிக்கு ஆப்பு வைத்தது. என்னதான் இசைஞானி இளையராஜாவின் முத்தான பாடல்கள் இருந்தாலும் வெற்றி கொடுக்காத படம், பாடல்களை மட்டுமே வெற்றியாக்கியது. “சித்தகத்திப் பூக்களே” பாடலோடு “என்னவென்று சொல்வதம்மா” பாடல் மறக்கமுடியாத எஸ்.பி.பி கானம்.
பட்டகாலிலே படும் என்பது போல அடுத்த சறுக்கல் “நந்தவனத் தேரு” படம் மூலமாக ஆர்.வி.உதயகுமாருக்கு. தனக்கு ஆரம்ப காலத்தில் வெற்றி தேடித்தந்த நாயகன் கார்த்திக்கை வைத்து இலக்கியத்தரமான தலைப்பை வைத்தவர் கதையில் கோட்டை விட்டதால் வெற்றியில் ஓட்டை விழுந்து விட்டது. அதனால் அழகான அறிமுகம் ஶ்ரீநிதிக்கும் ஒரு முற்றுப்புள்ளி.
வழக்கம் போல எல்லாப்பாடல்களும் ஆர்.வி.உதயகுமார் எழுதினார். குறிப்பாக “வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே” பாடல் வெற்று வார்த்தைக் கவிஞர் அல்ல இவர் என்பதைக் காட்டிய ஒரு பாட்டு. மீண்டும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள் மீண்டும் ஒருமுறை கிறங்கிப் போவீர்கள்.
தமிழ் சினிமாவின் எண்பதுகளின் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்கிப் பெருமை கொண்ட ஆர்.வி.உதயகுமாருக்கு முழுமையாக அரிதாரம் பூசிக்கொண்டால் என்ன என்று தோன்றியிருக்கும். அவ்வப்போது சிறு சிறு துண்டு வேடங்களில் வந்தவர், நடிகர் ஜெயராமோடு, தானும் நாயகனாகி “சின்ன ராமசாமி பெரிய ராமசாமி” என்ற படத்தை இயக்கினார். படத்தில் நடித்த பல நடிகர்களே ஃபீல்டை விட்டுப் போய்விட்டார்கள் ஆனால் படம் பத்து வருஷங்கள் கடந்தும் வெளிவராமல் இன்னும் பெட்டிக்குள் தூங்குகின்றது. இதுவரை இசைஞானி இளையராஜா, ஆர்.வி.உதயகுமார் சேர்ந்த கூட்டணியில் இறுதிப்படம் என்ற பெருமை மட்டும் தான் இப்போது இதற்கு. வாழையடி வாழையா என்ற கே.ஜே.ஜேசுதாஸ் பாடி இந்தப் படத்துக்காக இசைத்த பாடல் மட்டும் இன்னும் ஒலிக்கிறது வானொலிகளில்.
இசைஞானி இளையராஜாவோடு இணைந்து இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கொடுத்த இந்த முத்தான பத்துப் படங்களோடு இன்னொரு சுற்றும் இணையவேண்டும் என்பதே உங்களைப் போன்ற என் ரசிகனின் அவா. பார்ப்போம் பொறுத்து.
Topics: Uncategorized | 20 Comments »
பாடகர் அருண்மொழி பாடல்களோடு பேசுகின்றார்
By admin | January 9, 2012

எண்பதுகளின் இறுதிக் காற்பகுதியில் இருந்து தொண்ணூறுகளின் ஆரம்ப காலங்கள் வரை தமிழ்த்திரையிசைப்பாடல்களில் பாடகர் அருண்மொழியை விலக்கி விட்டுப் பட்டியல் இடமுடியாத அளவுக்கு நிறைய அருமையான மெலடிப் பாடல்களைத் தந்தவர். அதுவும் இசைஞானியின் செல்லப்பிள்ளை போல அவருக்குக் கிடைத்த மெட்டுக்கள் எல்லாமே அதியற்புதம். அருண்மொழி வேறு இசையமைப்பாளர்களிடம் பாடிப் புகழ் பெற்றிருந்தாலும், இசைஞானி அவருக்குக் கொடுத்த முகவரி தான் இன்று வரை அவரின் பேர் சொல்ல வைத்திருக்கின்றது.
பாடகர் அருண்மொழியை வானொலிப் பேட்டி காணச் சில வாரங்கள் முன்னர் எண்ணிய போது, அவரின் தொடர்பிலக்கத்தைப் பெற்றுத் தருவதில் பெரிதும் துணை நின்றவர் வழக்கம் போல ரேகா ராகவன் சார். அவர் நண்பர் ஆர்.வி.எஸ். மூலமாகப் பெற்றுத் தர உதவினார். ஆர்.வி.எஸ் அவர்களும் றேடியோஸ்பதியோடு இணைந்த இசைரசிகர் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
பாடகர் அருண்மொழியைத் தொடர்பு கொண்டபோது எந்தவிதச் சாக்குமின்றி உடனேயே வானொலிப்பேட்டிக்குச் சம்மதித்தார். என் ஆதர்ஷப் பாடகர்களில் ஒருவர், இசைஞானியின் இசைப்பண்ணையில் இருப்பவரோடு பேசும் போது கனவுலகத்தில் மிதந்தவண்ணம் உரையாடினேன். தெரியாத பல சுவையான தகவல்களோடு அருண்மொழி அவர்கள் கொடுத்த அந்தப் பேட்டியை “முத்துமணி மாலை” என்னும் என் வானொலி நிகழ்ச்சியில் அவருடைய முத்தான பல பாடல்களோடு ஒலிபரப்பினேன்.
அந்தப் பேட்டியைக் கேட்க
Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்
இந்தப் பேட்டியை நான் வானொலியில் ஒலிபரப்பும் போது, பேட்டியைக் கேட்டவண்ணம் ட்விட்டர் வழியாக அறிமுகமான நண்பர் நாமக்கல் ராஜா வேகவேகமாக பேட்டியில் அருண்மொழி சொன்ன சுவையான குறிப்புக்களைத் தட்டச்சுச் செய்து தன் நண்பர் ஒருவருக்குப் பகிர்ந்ததாகக்ச் சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார். என் வானொலிப்பேட்டியில் அவர் சேர்த்த துளிகள் இவைதான்.
-இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் தான் என்னை அறிமுகம் செய்தார்கள்.
- மலையாளப் படத்திற்கு பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதுதான் இளையராஜா என் வாசிப்பை கேட்டு என்னை சேர்த்துக் கொண்டார். அவருடன் சேர்வதற்கு முன்னால் பெரும்பாலான எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி இருந்தேன்.
- ‘ஒரே முறை உன் தரிசனம்’ இளையராஜாவுடன் என் முதல் பாடல். அதில் வரும் புல்லாங்குழல் இசை என்னுடையது.
- பாடகரானதும் சுவையான அனுபவம் தான். ராஜா பாடகர்களுக்கு ரிட்டர்ன் நோட்ஸ் தான் எழுதுவார். அது வெஸ்டர்ன் நோட்ஸில் இருக்கும். ஆரம்பத்தில் புரியவில்லை. பின்னர் அதை நானே கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு விளக்கும் அளவுக்கு தேறினேன். நான் அப்படி வாய்ஸ் ரூமில் பாடிக்காட்டுவதை ஹெட்போனில் ராஜா சார் கேட்டார். அப்படித்தான் ஒருமுறை கங்கை அமரன் பாடிய ஒரு பாடலை என்னை பாட வைத்து வாய்ஸ் தேர்வு செய்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் ரிலீஸாகவில்லை.
அடுத்த நாளே சூரசம்ஹாரம் பட பூஜை. அதில் பாடினேன். அவராகவே அருண்மொழி எனப் பெயரிட்டார். வாலியும் ராஜாவும் சேர்ந்து இட்டப் பெயர். அன்று நான் பாடிய பாடல் தான் ‘நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி’. அதில் எல்லாப் பாடல்களும் நான் தான் பாடினேன். அது பெரிய ஹிட் ஆனது. அதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள்.
- பார்த்திபனுக்காக என் குரலை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. அது தானாக அமைந்தது. எதேச்சையாக அவருக்கு பாடப்போய், என் குரல் அவருக்கு மாட்ச் ஆனதும், பார்த்திபனே என்னை மற்ற இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று பாட வைத்தார்.
- பிற இசையமைப்பாளர்களிடம்: ‘சலக்கு சலக்கு சரிகை சேலை’ எஸ்.ஏ.ராஜ்குமாரிடம் பாடிய பிறகு அதேபோல் குத்துப் பாடல்களாக தொடர்ந்து வர ஆரம்பித்தன. அதனால்தான் பாடுவதை நிறுத்தினேன்.
- பாடல்கள் கூட எழுதியிருக்கிறேன். ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ படத்தில் எல்லா பாடல்களும் நான் தான் எழுதினேன். போலவே, அரசியல் படத்திலும், வித்யாசகர் இசையில் ‘வாசுகி வா சகி’ பாடலும் நான் எழுதியது.
- பாடகர் அருண்மொழியை விட இசைக் கலைஞர் அருண்மொழிதான் எனக்குப் பிடிக்கும்.
- நான் பணியாற்றிய பாடல்களில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘இள நெஞ்சே வா’, ‘தாலாட்டும் பூங்காற்று நீ அல்லவா’ ஆகிய பாடல்களிலும், சின்னத்தம்பி படத்தின் பாடல்களிலும் புல்லாங்குழலுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அப்படி இன்னும் பலப்பாடல்கள் உள்ளன.
- ராஜாவின் பாரவையிலேயில் நான் விஜய்க்கு பாடிய சோகப் பாடல் ‘அம்மன் கோவில் எல்லாமே’ நான் ட்ராக் பாடியது. அதை அப்படியே படத்தில் பயன்படுத்திக்கொண்டு விட்டார்கள்.
- அஞ்சலி, மௌனராகம் இப்படி கிட்டத்தட்ட எல்லா படங்களையுமே பின்னணி இசையில் வேலை வாங்கிய படங்களாகச் சொல்லலாம். அவற்றுள் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின் ரீ ரெகார்டிங்கை ராஜா சார் என்னை செய்ய சொல்லிக்கொடுத்து விட்டார். நாட்டுப்புறப் பாட்டு படத்தையும் நானே செய்தேன். இப்படி சில படங்களில் என்னுடைய ரீ ரெகார்டிங் பங்களிப்பு இருந்தது.
- ராஜா சாரிடம் பணியாற்றி வருவது பெருமைக்குரிய விஷயம். இதுவரை நான் அவரிடம் ஒரு கோபச்சொல் கூட வாங்காதது என் அதிர்ஷ்டம்.
- இன்றைய இசையை மிகவும் மாறிவிட்டது. என்னால் அதன் வித்தியாசத்தை உணர முடிகிறது. அன்று 20 முறை ரிகர்சல் செய்து வாசித்த காலம் மாறிவிட்டது. இப்போது சில சமயம் வீட்டில் வாசித்து ஈமெயில் நான் அனுப்பிவிட்டால், அதையே கூட பயன்படுத்திக்கொண்டு விடுகிறார்கள். தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது.
Topics: Uncategorized | 16 Comments »
பதிவர்கள் பார்வையில் 2011 - ஒலிப்பகிர்வு
By admin | December 31, 2011
2011 ஆம் ஆண்டு விடைபெறப்போகின்றது. 2012 ஆம் ஆண்டை வரவேற்கும் வானொலிப் பணியில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வழியாக http://tunein.com/radio/ATBC—Australias-Tamil-Radio-s111349/ தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றேன். இந்தவேளை கடந்த ஆண்டு ட்விட்டர் வழியாகவும், வலையுலகம் வழியாகவும் அறிமுகமான நண்பர்களை வைத்து 2010 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்கிய பாங்கில் இந்த ஆண்டும் 2011 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்க எண்ணியபோது நண்பர்கள் கைகொடுத்தார்கள். அந்த வகையில் நண்பர் அப்பு 2011 இல் தொழில் நுட்பம், நண்பர் கிரி ராமசுப்ரமணியன் 2011 இல் திரையிசையுலகம், நண்பர் சதீஷ் குமார் 2011 இல் இந்தியா மற்றும் தமிழகம் ஆகிய பகிர்வுகளை அளித்திருந்தார்கள். உண்மையில் ஒரு தேர்ந்த வானொலியாளர்களின் பாங்கில் இவர்கள் கொடுத்த இந்தப் பகிர்வுகளுக்கு வானொலி நேயர்கள் மத்தியில் பாராட்டும் கிட்டியதை இவ்வேளை மகிழ்வோடு சொல்லிக் கொள்கின்றேன்.
என்னோடு கூடப் பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் இந்த வேளை இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்தை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து ஒலிப்பகிர்வுகளைக் கேளுங்கள்.
2011 இல் தொழில் நுட்ப உலகு - வழங்குவது அப்பு
2011 இல் திரையிசை - வழங்குவது கிரி ராமசுப்ரமணியன்
2011 இல் இந்தியா - வழங்குவது சதீஷ்குமார்
2011 இல் தமிழகம் - வழங்குவது சதீஷ்குமார்
புகைப்படம் நன்றி: http://caricaturque.blogspot.com/
Topics: Uncategorized | 2 Comments »
ஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு
By admin | December 26, 2011
ஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே
அதனைத் தொடர்ந்து நண்பர் KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களை இந்தப் படத்தின் பின்னணி இசையைப் பிரித்துக் கொடுக்கின்றேன் தகுந்த உரையை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்ற போது மனுஷர் வாக்கு மீறாது அருமையானதொரு பகிர்வைத் தந்தளித்தார். உண்மையில் படத்தின் முழு ஒலிப்பதிவயும் வழங்கியபோது எந்தவித காட்சி ஓட்டமும் இல்லாது ஒலியை வைத்தே முன்னர் அவர் பார்த்த இந்தப் படத்தினை அசைபோட்டு எழுதிக் கொடுத்தது என்னளவில் ஒரு சாகித்யம் என்பேன். ஏற்கனவே மெளன ராகம் படத்துக்கும் இதே பாங்கில் தன் முத்திரையைக் காட்டியவர். மீண்டும் இவரோடு இணைந்து இன்னொரு இசைக்காவியத்தைக் கொடுப்பதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன். இனித் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சங்கீத சாம்ராஜ்யத்திற்கு கண்ணபிரான் ரவிசங்கர் துணையோடு அழைத்துப் போகின்றேன். இசையென்னும் இன்ப வெள்ளத்தை அள்ளிப் பெருகுங்கள்.
ராமாயணம்-ராஜாயணம்
* கம்ப இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!
* இராஜா இராமாயணம் = இசைக் காப்பியம்!
வால்மீகி எழுதிய ஒரு வரலாற்று-கற்பனையை…
தமிழ் மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் = கம்பன்!
இசை மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் = இளையராஜா!!
ஒரே படத்துல 16 பாட்டை இந்தக் காலத்துல யாருப்பா கேட்பாங்க? என்னமோ BGM, BGMன்னு சொல்றாங்களே! என்ன பெருசா இருக்கு இந்த SRR - ஸ்ரீ ராம ராஜ்ஜியத்துல? பார்க்கலாமா??
இராமாயணத்தின் கதை எல்லாருக்கும் தெரிஞ்சது தான்! அது மட்டுமா? ஒவ்வொருத்தரும் அவங்க சொந்த இராமாயணத்தையும் இதுல கொண்டாந்து சேர்ப்பாங்க!:)
ஆத்திகனோ, நாத்திகனோ, இலக்கியவாதியோ, புரட்சிவாதியோ - எல்லாருக்கும் இராமாயணத்தில் ஏதோ ஒன்னு இருக்கு!
தெரிஞ்ச கதை தான்! ஆனால் தெரியாத உணர்ச்சிகள்! = அதை எப்படி ஒருத்தருக்குச் சொல்வது?
* சீதை துன்பப் பட்டாள், தெரியும்!
* இராகவன் லூசுத்தனமா நடந்துக்கிட்டான், தெரியும்!
ஆனா, நமக்கு-ன்னு நடக்காத வரை, அது வெத்துக் கதை தானே!
எத்தனை பேரு, காதலில் சண்டை போட்டுட்டு, அவள் தவிக்கும் போது, ஒளிஞ்சி இருந்து பாத்து இருக்கோம்??
அட அவளா? இந்நேரம் சிக்குனு சிக்கன் பிரியாணி தின்னுக்கிட்டு இருப்பா-ன்னு நாம் நினைக்கும் அந்த அவள்…
காதல் பரிசான கைக்கடிகாரத்தை…கண்ணின் மேல் வச்சிக்கிட்டு…
அந்த நொடித் துடிப்பின் சத்தத்திலே…
தரையில் படுத்துக் கிடப்பதை…ஒளிஞ்சி இருந்து பார்த்தோம்-ன்னா?
இந்த உணர்ச்சிகளை எதில் எழுத முடியும்?
* பாட்டில் எழுதினா = காவியம்!
* இசையில் எழுதினா = இளையராஜா!
தெரிந்த கதை, ஆனால் தெரியாத உணர்ச்சிகளைப் படீர்-ன்னு நம் மனத்தில் போட்டு அடிக்கும் வித்தையைப் பார்க்கலாம், வாருங்கள்!
முதல் காட்சி! எல்லாரும் ஊருக்குத் திரும்புதல்! அயோத்தியில் இதையே தீபம் ஏத்தி வச்சி தீபாவளியாகக் கொண்டாடினார்கள்-ன்னும் சிலர் சொல்லுவாய்ங்க!
ராஜா ஏற்றி வைக்கும் தீபாவளி எப்படி? = ஜகதானந்த காரகா
பாட்டு ஒலிக்க, BGM ஒலிக்க….. மீண்டும் அதே பாட்டு, BGM…..
இதுலயே அந்த இன்ப மயமான தருணங்களை மாறி மாறி நெய்து விடுகிறார், ஒரு சீலையப் போல!
ரொம்ப ஆராவாரம் இல்லை…அதே சமயம், மகிழ்ச்சிக்கும் குறைவில்லை! = ஏன்?
ஏன்னா…ரொம்ப துன்பப்பட்டு வரும் இன்பத்தில்…அத்தனை மகிழ்ச்சி இருக்காது!
வலியின் நிழல் தங்கி, மனசுல ஒரு பக்குவமான நிலை இருக்கும்! ராஜா நெய்வதைக் கேளுங்க!
ஜகதானந்த காரகா = தியாகராஜர் பஞ்சரத்தினக் கீர்த்தனை!
ஜய ஜானகி பிராண நாயகா = என்ன ஆனாலும், அவனே அவளோட உயிரு-ன்னு மறுபடி மறுபடி ஒலிக்க வச்சி, பின்னால் வரப் போவதைக் காட்டுகிறாரோ?
ஒரு இராம சினிமாக் காவியத்தை, தியாகராஜர் மரபிசையோடு ஆரம்பிக்கணும்-ன்னு உனக்கு எப்படிய்யா தோனுது, இளையராஜா?
இது இப்படின்னா, பட்டாபிஷேகக் காட்சி = Symphony!
தியாகராஜரில் ஆரம்பிச்சி, கேட்டுக்கிட்டு இருக்கும் போதே, Symphony-இல் ஏத்தி வுடறது! அப்பப்போ, உன் டகால்ட்டி வேலையைக் காட்டிடுற ராஜா நீயி!!:)
Western என்று நெருடாமல், பட்டாபிஷேக கம்பீரம் என்றே இந்த இசை அழகாக அணி வகுக்கிறது!
Pl Note: இந்தப் படத்தில், பல BGM களின் துவக்கம், ஒவ்வொரு பாட்டின் முடிவில் இருந்தே துவங்குது!
உற்று கவனிச்சிப் பாருங்க! கண்டு புடிச்சிருவீக…வேறெந்த படத்திலும் இது ராஜா செய்யாத Technique! மெளன ராகம் உட்பட…
சீதையைக் காட்டுக்குத் துரத்தும் BGM பற்றி நான் இங்கே பேசப் போவதில்லை! எனக்கு ரொம்ப வலிக்கும் காட்சிகள் அவை!
நாடு-நாட்டு மக்கள் கருத்து தான் முக்கியம்-ன்னா, தம்பி கிட்ட நாட்டைக் குடுத்துட்டு, தானும் அவளோடு போயிருக்கலாமே??
தம்பிகள் ஒத்துக்க மாட்டாங்கன்னா….யானை யாருக்கு மாலை போடுதோ…அவங்களை மன்னன் ஆக்கிட்டு…..தம்பிகளோடு…அவளுடன் போய் இருக்கலாமே??
- அப்படிச் செஞ்சி இருந்தியானா….கோயிலில் உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டு இருப்பேன்…ஏனோ உன்னைக் கோயிலில் பார்க்க மட்டுமே தோன்றுகிறது! வணங்க அல்ல!!:(
இராம கதையைச் சொல்லும் மூன்று பாட்டு!
* தேவுள்ளே மெச்சிந்தி (Practice Song)
* ராமாயணமு (அயோத்தி தெருக்களில்)
* சீதா-ராமு சரிதம் (அரண்மனையில்…கம்பீர இசை)
தெருக்களில் பாடும் போது, அயோத்தி மக்களை இடிக்கும் இசை…டேய், ஒங்களாலத் தான் ஒரு அப்பாவி தனியாக் கிடந்து துடிக்குறா…பாட்டு வரிகளும் அப்படியே! எழுதியது யாரோ?
சீதையும் ராமனும் சந்திப்பது போலான மாயக் காட்சி! மெய்நிகர் (Virtual Reality)
இந்த இடத்தில் ராஜா போடும் BGM கேட்டாத் தெரியும், எதுக்கு எல்லாரும் ராஜா ராஜா-ன்னு அனத்துறானுங்க-ன்னு :))
* பழைய பாடலையே BGM ஆக்கி, Flashback காட்டுவாரு!
* அதே சமயம், பழைய பாடலில் எல்லாமே புதுப்புது வாத்தியங்கள்!
என்னமா இசையால் ஒரு Flashback இயக்கம்! யோவ் இளையராஜா - நீ என்ன படத்தின் இயக்குனாரா? வெறும் இசை இயக்குனர் தானே? :))
அவன் அவளைப் புரிஞ்சிக்கிட்டானோ இல்லையோ, அவள் அவனை நல்லாப் புரிஞ்சி வச்சிருக்கா!
அவளா சந்தேகப்படுவா?…தன் புருசன் இன்னோரு கண்ணாலம் கட்டிக்கிட்டானோ?-ன்னு…
இல்லை!
ஆனா, ஊரு சொன்னா எதையும் செய்யத் துணியும் லூசு ஆச்சே தன் புருசன்!
ஏதோ நாட்டுக்காக அஸ்வமேத யாகம் செய்யறான், பொண்டாட்டி பக்கத்துல இல்லாமச் செஞ்சா, நாட்டுக்கே ஆபத்து-ன்னு ஒத்தைப் பிராமணன் கெளப்பி விட்டாப் போதுமே…
ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி ஐயா, இன்னோரு கண்ணாலம் கட்டிக்குவாரா?
இராமன் என்ன நிலையில் இருக்கான்-ன்னு பாக்கத் துடிக்குது அவளுக்கு! தன்னை ஊர் அறிய மறுதலித்தவன்…இப்போ உள்ளத்து அளவிலும் மறுதலிப்பானோ?-ன்னு படக்படக்…
வால்மீகி மூலமா, ஆவியாகி, anonymous ஆக உள்ளே வரும் சீதை…தனக்குப் போட்டியாக…இன்னொருத்தியைக் காணும் காட்சி…
சீதையின் சிலையை வடிச்சி வச்சிக்கிட்டு…நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்!!!
அவன்-அவள் = ஊர் அளவில் பிரிஞ்சாலும், உள்ளத்து அளவில் பிரிவதே இல்லை!
இந்த BGM இல் கல்லும் கரையும்! காதலிச்சி இருக்குறவன் எவனும் கட்டாயம் இந்த BGM கேட்டு கண் பனிக்கும்!!
ராமரின் பள்ளியறைக்கு சீதை ஆவியுருவில் வந்து, ராமர் தன் நினைவில் என்றும் இருக்கும் உண்மையைக் கண்டுணரும் போது
படத்தின் Grand Finale & Graphic Effort - ஒருத்தியின் தாங்கும் எல்லை தான் எவ்ளோ?
இலங்கையில் மரத்தின் கீழ் தற்கொலை முயற்சி, அப்பறம் பலர் முன்னிலையில் மறுதலிப்பு-தீக்குளித்தல்…..அப்படியே தொடர்ச்சியா ஒவ்வொன்னா….
பூமி பிளந்து, அவள் உணர்ச்சியை எல்லாம் ஒட்டு மொத்தமாய் விழுங்கும் சுனாமிக் காட்சி!
பாலகிருஷ்ணா = இராமரா? நயன்தரா = சீதையா?
அடக் கொடுமையே-ன்னு கேலி பேசுபவர்களையும்….பாலகிருஷ்ணா/நயன் முன்னேயும் பின்னேயும் இசையை ஓடவிட்டு, அவர்கள் நடிக்காததையும், உணர்ச்சியால் கொண்டு வந்து தந்த படம் இது!
படத்தில், பாடல்களின் இசையைச் சொல்ல, தனிப் பதிவு தான் போடணும்! இங்கு BGM பற்றி மட்டுமே கொஞ்சமே கொஞ்சம் பேசினோம்!
இவ்வளவு பெரிய புராணப் படத்துக்கு, ராகங்கள் இல்லாத பாட்டா?
சின்னக் கண்ணன் அழைக்கிறான்-ரீதிகெளளை புகழ் இளையராஜா…இந்தப் படத்தில் போட்ட ராகங்கள் என்ன-ன்னு அறிஞ்சவங்க வந்து சொல்லட்டும்! நமக்கு இலக்கணம் அம்புட்டு போதாது:)
ஸ்ரீராம லேரா = அம்சாநந்தி-ன்னு மட்டும் தெரியுது!
கலி நிங்கி நீரு = கீரவாணியா?
சீதா சீமந்தம், அதை விட, தாண்டகம் என்னும் இசைப் பகுதி அமர்க்களம்! கேட்டுப் பாருங்க!
படம் முழுக்க தபேலா + வீணையின் ஆட்சி!
BGM-இல் வீணையை இம்புட்டு புழங்கி இருப்பது, இதுவாத் தான் இருக்கும்-ன்னு நினைக்கிறேன்!
SPB = கலக்கல்! ஸ்ரேயா கோஷல் = ஓக்கே, நல்லாப் பண்ணி இருக்காங்க!
சித்ரா = ஒரே ஒரு பாட்டு தானா?
இந்த ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செஞ்சாரு?
BGM என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை!
தன் இசைப் புலமையைக் காட்ட வேணும்-ன்னு நினைச்சா, இசையே பெருசாகி, காட்சி கவிழ்ந்து விடும் அபாயம்…
அதே சமயம், உணர்ச்சிகள் பேச வேண்டிய இடத்தில், இசை மட்டுமே பேசி ஏங்க வைக்கும் இசை!
BGM இல்லாம, காதுல பஞ்சி வச்சிக்கிட்டு…..இன்னொருகா அரங்கத்தில், ஸ்ரீ ராம ராஜ்ஜியம் பாருங்க…
இளையராஜாவுக்கு இப்பதிவிலே முகஸ்துதி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!
மனித உணர்வுகளை…….இசையோடு கோர்த்துக் கட்டும் மாயம்!
அதுவும் நாகரீக keyboard காலத்திலும்…வீணை, தபேலா, நாதசுரம், புல்லாங்குழல் போதாது-ன்னு, இன்னும் என்னென்னமோ Western Instruments…..
நூறு வாத்தியக் கருவி, ஒன்னா வந்து, உங்க முன்னாடி வாசிச்சா எப்படி இருக்கும்???
பல BGM களின் துவக்கம், ஒவ்வொரு பாட்டின் முடிவில் இருந்தே துவங்கும் புது முயற்சி!!
ஏ, மாயக் காரனே, இளைய-ராஜாவே……
* அன்று கம்பன் செய்த இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!
* இன்று நீ செய்த இராமாயணம் = இசைக் காப்பியம்!
திருவாசகத்துக்குப் பின்….இந்தப் படத்தால்…..
கம்பனைப் போல்……….”காவியப்” புகழ் உனக்கு!
இறவா இசையோடு இருப்பாய் நீ!
முகப்பு இசை
ராமர், சீதை மஞ்சத்தில் காதல் மொழி பேசும் நேரம்
ராமர் சீதையோடு மஞ்சத்தில் இருக்கும் போது ஆராய்ச்சி மணி ஒலிக்க, சீதை தடுத்தும் ராமர் நீதி கேட்கப் புறப்படும் போது
சீதை குறித்த அபாண்டத்தை பத்ரன் தயங்கித் தயங்கி ராமரிடம் கூறும் போது
சீதை குறித்த புறணியைக் கேட்டு ராமர் மதி கலங்கும் போது
ராமரின் கட்டளைப்படி இலக்குவன் சீதையைக் காட்டுக்கு அழைத்துச் செல்லும் காட்சி
வால்மீகி முனிவர் காட்டுக்குள் சீதை வரவேற்கப்படும் போது
சீதைக்கு முறையான வளைகாப்பு நடத்தவில்லையே என்று ஆதங்கப்படும் கோசலை தன் மனக்கண்ணில் அந்த நிகழ்வைக் காணும் போது
ராமர் இன்னும் தன் நினைவில் இருப்பாரோ அல்லது இன்னொரு துணை தேடியிருப்பாரோ என்று கலங்கும் சீதை
ராமர் செய்யும் அஸ்வமேத யாகம்
அஸ்வமேத யாகத்தில் பயணித்த குதிரையை லவ குச சகோதரர்கள் காட்டுக்குள் கட்டிப்போடும் போது இலக்குமணன் தன் படையோடு வந்து அவர்களோடு போர் புரியும் காட்சி
லவகுச சகோதரர்களைச் சந்திக்க வரும் இராமர், சீதையைக் காண்பதும் லவ குச சகோதர்கள் தன் பிள்ளைகள் என்று உணர்வதும், இறுதியில் பூமாதேவியிடம் சீதை தன்னை ஒப்புவிப்பதும். இது நீண்டதொரு இசைத்துண்டு
Topics: Uncategorized | 11 Comments »
இசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க
By admin | December 6, 2011

வணக்கம் மக்கள்ஸ்! இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான அறிமுகத்தைக் கொடுத்துவருவது உங்களில் பலர் அறிந்ததே.
தற்போது இன்னொரு அறிவிப்பும் இணைந்திருக்கின்றது. அதாவது இசைஞானி இளையராஜாவின் தலைசிறந்த 10 பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப்படுத்தி அனுப்பினால் அவற்றை மேடையில் இசைக்கக் காத்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றார். இசைரசிகர்களாகிய எமக்கு, குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் பல்லாயிரம் முத்துக்களில் எந்த முத்தைக் கோர்ப்பது என்பது சவாலான காரியம். ஆனாலும் ஜாலியாக நாம் எல்லோருமே பின்னூட்டம் வாயிலாக எம் ஒவ்வொருவருக்கும் பிடித்த இசைஞானி இளையராஜாவின் தலைசிறந்த 10 பாடல்களைப் போடுவோமா?
எங்கே ஆரம்பிக்கட்டும் ஆட்டம்.
Youtube: shivshiva85’s Channel
Topics: Uncategorized | 51 Comments »
The Dirty Picture ஒரு நடிகையின் ப(பா)டம்
By admin | December 3, 2011
எப்பவுமே சினிமாக்காரனைக் கூத்தாடி என்றெல்லாம் சொல்லும் அதே ஜனங்கள் தான் அவனைப் போற்றித் துதிக்கவும் தயங்குவதில்லை, இது ஒருவகை ஈகோயிசம் என்ற சாராம்சத்தில் பிரேமி என்ற தன் சின்னத்திரை நாடகத்தில் கே.பாலசந்தர் ஒரு பாத்திரத்தின் மூலமாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது.
சினிமாவுக்குத் தேவையானது மூன்றே மூன்று சரக்கு entertainment, entertainment, entertainment என்னால் கொடுக்கமுடிந்தது ஒன்றே ஒன்று அது entertainment, இப்படியாக The Dirty Picture என்ற ஹிந்திப்படத்தில் சில்க் என்ற நாயகி பாத்திரம் பேசுகிறது. எண்பதுகளில் உச்சாணிக்கொம்பில் இருந்த ஒரு ஒரு கவர்ச்சி நடிகை சில்க். சில்க் என்ற நடிகைக்கு முன்னரும் பின்னரும் எத்தனையோ இருந்திருக்கின்றார்கள் ஆனால் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் அவரின் தற்கொலையோடு முடிவுக்கு வருகின்றது அந்த நடிகையின் பயணம். சினிமா ஆசை என்ற பெருங்கனவில் வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வரும் ரேஷ்மா ஒரு வறிய குடும்பத்துப் பெண் தன் முன் இருந்த சவால்களை எதிர்கொண்டு ஜெயித்துக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் எல்லாம் தொலைத்துத் தன்னையும் தொலைத்த கதைதான் இந்தப் படத்தின் கரு.
“அவளோட புகழ் சோளப்பொரி போல, மேலே போனது கீழே வரத்தான் செய்யும்” சூர்ய காந்த் என்ற உச்ச நடிகர் ஒரு இடத்தில் பேசுவார், சினிமாவில் மட்டுமல்ல நம் வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவர் எப்போது கீழே விழவேண்டும் என்று காத்திருக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. வித்யாபாலன் என்ற நடிகைக்கு ரேஷ்மா என்ற அபலைப்பெண்ணில் இருந்து சில்க் என்ற உச்ச நடிகையாக மாறி அந்தப் பாத்திரமாகவே வாழவைத்திருக்கின்றது இந்தப் படம். வித்யாபாலனுக்கும் சில்க் இற்குமான தோற்ற நிலையில் ஏற்கமுடியாது ஆரம்பிக்கும் படம் முடியும் போது வித்யாபாலனின் உழைப்புக்கு சபாஷ் போட வைக்கின்றது.
சினிமா என்ற கனவுலகத்தைத் தேடிப் போய் அவமானங்கள் பட்டு ஜெயிக்கும் ரேஷ்மா என்ற சில்க், ரசனை மாறும் போது தனக்குப் போட்டியாக வரும் நாயகியை ஏற்றுக் கொள்ளா முடியாத ஒரு சராசரி மனித மனம் என்ற அளவுக்கு இந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
சினிமா என்ற கனவுத்தொழிற்சாலையைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கனவுத்தொழிற்சாலை ஆக்கியபோது விகடனில் நடிகை லட்சுமியின் கண்டனத்தோடு கூடிய சந்திப்பை ஏற்படுத்த வேண்டியிருந்தது. ஒரு நடிகையின் கதை என்ற தோரணையில் கவிஞர் வைரமுத்து கவிதை பாடி நடிகை சுஹாசினி தலைமையில் அவருக்கு எதிராகப் போராட்டம் எல்லாம் நடந்தது வரலாறு. ஆனால் உண்மையில் ஒரு நடிகையாக வாழ்க்கைப்பட்டவளைச் சுற்றி சூழலில் எந்தப் பெண்ணுமே உடல் அல்லது உணர்வு ரீதியான காயத்துக்கு ஆளாகாமல் தப்பமுடியுமா என்பது கேள்விக்குறி. அதைப் பட்டவர்த்தனமாகக் காட்டி நிற்கின்றது இந்தப் படம்.
ஏப்ரஹாம் என்ற தலைசிறந்த இயக்குனர்(இம்ரான் ஹசானி) சினிமாவில் கவர்ச்சி மாயை வெறுத்து நல்ல கதை தான் ஜெயிக்கும் என்ற உணர்வோடு இருப்பவர். அவரின் அசரீரிக் குரலாகத் தான் சில்க் என்ற நடிகையின் வாழ்க்கை இந்தப் படத்தோடு பயணிக்கின்றது. ஏப்ரஹாம் வெறுத்து ஒதுக்கும் சில்க், தயாரிப்பாளர் செல்வ கணேஷ் இன் பார்வை பட்டு சினிமாவில் நுழையவும், கூடவே சூர்யகாந்த் என்ற முது வயது சூப்பர் ஹீரோவின் அரவணைப்புக் கிட்டி மெல்ல மெல்ல அவள் பெரும் புகழ் என்ற உச்சாணிக்கொம்பை அடைவதும், கூடவே அவளின் தோல்விக்காகவும் தன் வெற்றிக்காகக் காத்திருக்கும் ஏப்ரஹாம் என்ற இயக்குனரும் என்று இந்த முக்கிய புள்ளிகளே கதையை நகர்த்திச் செல்கின்றனர்.
ஒரு நடிகையை ஒரு எல்லைக்கோட்டுக்கு மேல் ஏற்காத வெளிச்சமூகம் மட்டுமல்ல திரையுலகத்துக்குள்ளும் அதே நிலை என்பதையும் வெறும் பாலியல் ரீதியான பந்தத்தை மட்டுமே எதிர்பார்க்கும் ஆண்களிடமிருந்து உண்மையான அன்பைத் தேடும் சில்க் ஆகவும் இந்த நடிகையின் பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது.
பரபரப்புப் பத்திரிகையாளர் பாத்திரத்தை நாம் வழக்கமான வாராந்த சஞ்சிகையின் எழுத்தில் தரிசிக்க முடிந்ததைத் திரையில் காணமுடிகின்றது.
வேலையிடத்தில் சந்திக்கும் சவால்கள் என்பது பொதுவான ஒரு விடயம். ஆனால் கலை என்று வரும் போது அங்கே உணர்வு ரீதியான பல சவால்களைச் சந்திக்க வேண்டும். ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு குதிரை சட்டென்று தாமதித்தால் கூடவரும் குதிரைகள் முன்னே ஓடிவிடும் அல்லது இடறித்தள்ளிவிடும். என் ஊடகத்துறையில் கடந்த பதினோரு ஆண்டுகளில் தனிப்பட்ட ரீதியில் சந்தித்த காழ்ப்புணர்வுகளைத் திரையில் ரேஷ்மா என்ற சில்க் பாத்திரத்தோடு பொருத்திப் பார்க்க முடிகின்றது. உன்னால் ஏராளமான வெற்றிகளைக் கொடுத்து ரசிகர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிகின்றதே அதே வெற்றி உன் ஒரு படத்தின் தோல்வியால் அழிக்கப்பட்டு விடும் என்று ஏப்ரகாம் சொல்லும் உண்மை எல்லோருக்கும் பொருந்தும்.
சில்க் என்ற நடிகையின் கதை என்ற மையத்தை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான காட்சிக் கோர்வை, புத்திசாலித்தனமான வசனங்கள் என்று போவதால் படத்தை ரசிக்க முடிகின்ற அதே சமயம் இயக்குனர் எப்ரகாம் , சில்க் காதலும் கூடவே வரும் பாடலும் ஸ்பீட் ப்ரேக்கர்.
இளமையாகக் காட்டிக் கொண்டு தொப்பை மறைத்து ஹீரோயிசம் காட்டும் நஸ்ருதின் ஷா கலக்கியிருக்கிறார். ஆனால் படத்தின் ஆரம்பத்தில் “சத்யா மூவீஸ்” தங்க மகன் போஸ்டரில் இருந்து ப்ளஸ் டூ பாஸ் ஆகித் தன் தாய் மடியில் செல்லம் கொட்டும் காட்சியிலும், தொய்ந்து விழும் திறந்த உடம்போடு அவர் போடும் ஆட்டமும் ரஜினியில் இருந்து தென்னக மூத்த நடிகர்கள் எல்லோரையும் பதம் பார்க்கின்றது. முழுமையாகக் கோடம்பாக்கத்தின் சூழலும் வருவதால் படத்தின் முகப்பில் இருந்து ஒரு சில காட்சிகள் வரை “அட்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க” பாடலும் தமிழ்ப் பேசுவதோடு பாத்திரங்கள் எல்லாமே தென்னிந்திய வாடையோடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.
என்னடா இது, பகையாளி கூட என்னை எதிர்க்கமுடியாத நிலை என் நிலை என்று மருகுவதாகட்டும், அப்பாவிப்பெண்ணில் இருந்து படிப்படியாகச் செல்வாக்கு மிக்க நடிகையாக மாறுவதும் தேய்வதும் அவரது நடிப்பின் வாயிலாகவே காட்டிச் சிறப்பிக்கின்றார். தன் கனவைத் தொட்டுவிடத் துடிக்கும் ஏழைப்பெண், சாதித்துக்காட்ட முனையும் வெறி, சவால்களை எதிர்கொள்ளும் விதம், எல்லாம் தொலைந்து நிர்க்கதியான நிலை எல்லாவற்றையும் தாங்கி வெளிப்படுத்துகின்றார் வித்யா பாலன். கவர்ச்சி நடிகையின் படம் என்பதால் இந்திய சினிமா தொடமுடியாத உச்சங்களையும் தொடுகின்றார்.
இப்படியான உணர்வுபூர்வமான கதையை வைத்து கோடம்பாக்கத்து பாபுகணேஷ் போன்ற மொக்கைகள் கைமா பண்ணிக் காசு பார்த்திருப்பார்கள். ஆனால் நேர்த்தியான திரைக்கதை, வசனம், தேர்ந்த நடிகர்கள், புத்திசாலித்தனமான இயக்கம் (Milan Luthria) என்று இந்தப் படம் சிறப்பானதொரு படைப்பாக வந்திருக்கின்றது.
எண்பதுக்கே உரிய மண்ணிறச் சாயம் கொண்ட ஒளிப்பதிவின் சொந்தக்காரர் Bobby Singh.
புகழ் என்ற நட்சத்திரத்தை அடைய நினைப்பவர்கள் அந்த எல்லையைத் தொட்டதும் தடுமாறாமல் பயணிக்க வேண்டிய சதுரங்க ஆட்டத்தில் நின்று நிலைப்பதென்பது எவ்வளவு சவாலானதொரு நிலை என்பதோடு, காலவோட்டத்துக்கேற்பத் தன்னைப் புதுப்பிக்காதவன் ஓரம் கட்டப்பட்டு விடுவான் என்பதை மறைமுகமாகச் சொல்லிவைப்பதில்
The Dirty Picture, a neat film
பிற்குறிப்பு: இப்படம் வயது வந்தோருக்கு மட்டுமே உகந்தது
Topics: Uncategorized | 13 Comments »
ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்
By admin | November 20, 2011
மனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஶ்ரீ ராம ராஜ்யம், தெலுங்கில் வரப்போகும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளிவந்த நாளே கேட்டுக் களித்துக் கொண்டிருக்க வைத்து விட்டது. அதை ஆந்திராவின் இசையுலகமும் நிரூபிப்பது போல இப்படத்தின் பாடல் இசைத்தட்டுக்கள் விற்பனையில் சாதனையைப் படைத்து விட்டது.
சில மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் இப்படம் வெளியாகியிருக்கின்றது. ஏற்கனவே இந்தப் படம் வந்தால் தியேட்டர் சென்று பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்த எனக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்து விட்டது. ஶ்ரீ ராம ராஜ்யம் படம் பார்க்கவேண்டும் என்பதற்கு முழுமுதற்காரணியாக அமைந்தது இசைஞானி இளையராஜா ஏற்கனவே தந்து விட்ட பாடல்களும், படத்தில் தரப்போகும் பின்னணி இசை தான். ஏற்கனவே “சீனி கம்” (ஹிந்தி), “ரசதந்திரம்”, “பாக்யதேவதா” (மலையாளம்) வந்தபோதும் இன்னொரு மொழிப்படத்துக்காகத் தியேட்டரை எட்டிப்பார்க்க வைத்தார் ராஜா. இப்போது முதன்முறையாக ஒரு தெலுங்குப் படத்துக்குப் போகும் பெருமையை இந்தப் படம் பெற்றுக்கொண்டது.
இராமாயணத்தின் முக்கியமான பகுதியாக இராவணன் சங்காரம், சீதை சிறைமீட்பு என்பதோடு படங்கள் வந்துவிட்டன. அதன் நீட்சியாக சம்பூர்ண ராமாயணம், லவ குச போன்ற படங்கள் இராமர் சீதை, இலக்குமணர் சகிதம் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் பூண்டு ஆட்சி செய்யும் போது சீதை மீதான அவதூறால் சீதையைக் காட்டில் விட, காட்டிலே வால்மீகி முனிவரின் பராமரிப்பில் சீதை லவ குச என்ற பிள்ளைகளை ஈன்றெடுத்து வளர்த்து வரும்போது மீண்டும் தந்தை இராமனை லவ குச சந்திப்பதும், சீதை எடுக்கும் முடிவும் என்று செல்லும். இந்த ஶ்ரீராம ராஜ்யம் படம் இராவண சங்காரத்துக்குப் பின்னான கதையை மட்டுமே எடுத்தாண்டிருக்கின்றது.
இசைஞானி இளையராஜாவை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போதே, இது உங்கள் படம் என்று அதீத உரிமை கொடுத்திருப்பார்கள் போல. படத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்னோட்டம் காட்டியவர், இரண்டரை மணி நேரப்படத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னைக் காட்டி நிற்கின்றார். படத்தின் எழுத்தோட்டத்தில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜ்ஜியம், ஆரம்பக் காட்சியில் இராமர், சீதா, லக்குவணன் சமேதம் அயோத்யா வரும் காட்சி “ஜெகதானந்த” என்ற பாடலோடு இனிமையான பாரம்பரிய நடன அமைப்போடு நெஞ்சை நிறைக்கின்றது. படத்தின் முதல் 20 நிமிடங்களுக்குப் பாடல்கள் தான் அணி சேர்க்கின்றன. என் நினைவுக்கு எட்டியவரை இப்படித் தொடர்ந்து காட்சிகளுக்கு நெருக்கமாகப் பாடல்களைக் கொடுத்த சினிமா எழுபதுக்குப் பிந்திய காலத்தில் இருந்ததாக நினைவில் இல்லை.
அதுவரை பாரம்பரிய இசையோடு அமைக்கப்பட்ட காட்சிகளில் இருந்து விலகி, இராமர் பட்டாபிஷேகம் செய்யும் போது ஒரு சிம்பொனியை எடுத்து விடுகிறார் ராஜா. மேற்கத்தேய இசை நயம் உறுத்தவில்லை தொடர்ந்து தையோடு இராமர் காதல் கொள்ளும் போது ஒரு மெல்லிசை, சீதை மேல் ஐயம் கொண்டு இராமர் குழம்பித் தவிக்கும் போது கலவையாகக் கொட்டித் தீர்க்கும் வாத்திய முழக்கங்கள், சீதையின் தனிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொன்றுக்குமே தனித்தனி ஆலாபனைகள். இப்படியொரு பிரமாண்டமான வரலாற்றுக்கதைக்களனுக்கு இசைஞானியின் தேவை இன்றி மற்றெல்லாம் வெறும் ஒலிச்சத்தங்களாகவே இருக்கும்.
படத்தில் திடீர் திடீரென்று முளைக்கும் பாடல்கள் கதையோட்டத்தோடு பயணிப்பதால் உண்மையில் ஒரு சுகானுபவம் கிடைக்கின்றது. எத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்)சைகளை விடுத்து இப்படியான வாத்தியங்களின் உணர்வுபூர்வமான உழைப்பைக் கேட்டு. தியேட்டர் சென்று பார்ப்பவர்களுக்கு வாத்தியங்களின் சல்லாபத்தை இன்னும் நெருக்கமாக அனுபவிக்கக்கிட்டும்.
இசைஞானி இளையராஜா எங்கும் போகவில்லை, இப்படியான நல்ல படைப்புக்கள் வரும்போது தன்னை அவர் வெளிப்படுத்துவார் என்பது போன்று அமைந்திருக்கின்றது ராஜாவின் அதீத உழைப்பு.
இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு இன்னொருவகையில் பெரிதும் கை கொடுத்திருப்பது திறமையான கிராபிக்ஸ் காட்சிகள். வனவாசத்தில் மான்கள் கூட மாந்தரோடு நடைபயில்வதும், அடவியில் சலசக்கும் பறவைகளும், பூஞ்சோலைகளும் என்று எல்லாமே உயிரோட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பூமாதேவி சீதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி உச்சம்.
இந்தமாதிரியான படத்துக்குத் தேவை தானே என்று எண்ண வைக்கும் பிரமாண்டமான செட், ஆனால் எதிர்பார்ப்பை மீறி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கலைரசனை கொண்டு அமைக்கப்பட்டிருப்பது வெகு சிறப்பு. குறிப்பாக அந்த அரண்மனையின் பிரமாண்டம், சின்னச் சின்னக் கற்களில் கூட ஏதோ ஒன்றைப் பொறித்து அழகு நயம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதிகாச காலத்துக்குக் கொண்டு செல்லும் வண்ணமயமான ஒளிப்பதிவாளர் P.R.K.ராஜீவின் பங்கும் நிறைவாக இருக்கின்றது.
ஶ்ரீ ராம ராஜ்யம் படம் ஆரம்பிக்கின்றது. படத்தின் எழுத்தோட்டத்தின் பின்னணியில் தபேலாவும், வீணையும் சேர்ந்து முழங்க, இராமாயணத்தின் ஆரம்பக் காட்சிகள சித்திரமாகப் போட்டுக் கொண்டே பயணிப்பது புதுமை. ஆரம்பமே இசைஞானி இளையராஜாவின் முழு ஈடுபாட்டைக் காட்டி நிற்க, எந்தவிதமான கதாநாயகத்தனமும் இல்லாத அறிமுகமாக புஷ்பக விமானத்தில் அயோத்தி நோக்கிப் பயணிக்கும் இராமர் (பாலகிருஷ்ணா), சீதை (நயன்தாரா), இலக்குவணன் (ஶ்ரீகாந்த்).
பாலகிருஷ்ணா இராமர் வேஷம் கட்டுகிறார் என்ற போது கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது. அவரின் தந்தை என்.டி.ராமராவ் கிருஷ்ணராகவே வாழ்ந்தவர், தனையனோ ஒற்றை விரலால் ரயிலை நிறுத்தி மசாலாச் சகாசங்கள் நிகழ்த்திய வகையில் தான் அதிகம் அறியப்பட்டவர். ஆனால் சொன்னால் நம்பமாட்டீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பாலகிருஷ்ணாவை விட இன்னொரு நடிகர் இவ்வளவு பாந்தமாக நடித்திருக்க முடியுமா என்று எண்ண வைத்துவிட்டார். சீதையோடு காதல் காட்சிகளிலும், தனிமையில் உருகும் காட்சிகளிலும் எல்லாம் மிகைப்படுத்திவிட்டார் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பை மனுஷர் தந்துவிட்டார்.
சீதையாக வந்த நயன்தாராவுக்கு ஒரு சில காட்சிகள் தவிர மற்றைய எல்லாக் காட்சிகளுமே இராமனை நினைத்து உருகி அழும் தோரணையில் இருப்பவை. நயன்தாராவை விட்டால் இந்தப் பாத்திரத்துக்கு யார் பொருத்தம் என்பதை விட இப்போது வேறு யார் இருக்கிறார்கள்? என்ற கேள்விக்குறியோடு முடித்துக் கொள்ளலாம். இனிமேல் வால்மீகியை நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வருமாற்போல வால்மீகியாக வரும் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன் நடிப்பு. சிறுபையனாக உருமாறி வால்மீகி வனத்தில் உலாவரும் கலகலப்பான அந்தச் சுட்டிப்பையனும் கவர்கின்றான்.
என்னதான் தெரிந்ததொரு இதிகாசக்கதை என்றாலும், இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது இயக்குனர் எவ்வளவு தூரம் தெரிந்த கதைக்கு வித்தியாசமான திரைக்கதையைக் கொடுத்து இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கின்றார் என்பது இந்தப் படத்தைப் பார்த்து அனுபவித்தவர்களுக்குப் புரியும். இராமருக்கு சீதை மேல் ஏற்பட்ட மனக்குழப்பம், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் எல்லாமே உணர்வு ரீதியான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இராமன் இன்னொரு பெண்ணைக் கரம்பிடிப்பானோ என்று மனம் சஞ்சலமடைந்து உணர்விழந்து சீதை நிற்கும் சமயம், வான்மீகி முனிவர் சீதையின் ஆவியை மட்டும் அயோத்திக்கு அனுப்பி அங்கே இராமன் தன் மஞ்சத்தில் சீதையைச் சிலைவடிவாக்கி நிதமும் உருகிநிற்பதுவும், சீதை அதைக் கண்டு மருகுவதுமான அந்தக் காட்சி ஒரு காவியம். இப்படி ஏகப்பட்ட காட்சி அமைப்புக்களில் தெரிவது இயக்குனர் மற்றும் திரைக்கதாசிரியர் பாபு. இந்தப் படத்தைத் தமிழிலும் மொழியாக்கிக் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் இப்போது மேலிடுகின்றது.
ஶ்ரீ ராம ராஜ்யம், சினிமாவுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு புதுவெள்ளம் பாய்ச்சுகின்றது இசைஞானி இளையராஜாவின் துணையோடு.
Topics: Uncategorized | 22 Comments »
« Previous Entries





