அதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸

பள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருத்தி ஏதோவொரு தன்மையால் கவனத்தை ஈர்ப்பாள். அப்படித்தான் இந்தத் திரையிசைப் பாடல்களும். இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது பிரபல்யமாக்கப்பட்ட பாடல்களையே அதிகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றையும் தாண்டி எத்தனையோ பாடல்கள் இந்தத் திரையிசைச் சுரங்கத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் அல்லது கொண்டாடப்படாமல் இருந்து வருகின்றன.
இந்த விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூட விதி விலக்கு அல்ல. 
இன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் அலை பாயுதே பாடல்களுக்கு முன் வந்த பாடல்கள் பலதும், வந்த போது கொண்டாடித் தீர்த்த அளவு, பின்னர் வானொலிகள் கூட அதிகம் சீண்டுவதில்லை. ஏனோ “பிரபல்யம்” ஒட்டிய பாடல்களை என் மனம் அதிகம் நாடுவதில்லை. ஒரு படத்தில் அதிகம் கவனிக்கப்படாத பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பேன். அப்படியான பாடல்களில் ஏனோ இன்னும் நெருக்கமாக இசையமைப்பாளர் என்னோடு உரையாடுவது போல இருக்கும். அப்படியானதொரு பட்டியலோடு ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளில் அவரின் அரிய பாடல்களோடு வந்திருக்கிறேன்.
🎷 நெஞ்சே நெஞ்சே மறந்து விடு (ரட்சகன்)
https://youtu.be/f00Jc2mlywY
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே என்று புலம்ப வைக்கும் அளவுக்கு மிக நெருக்கமான காதல் பாட்டு இது. பாடலின் வரிகளை மெட்டோடு மட்டும் இசை கலக்காது பாடிப் பாருங்கள். ஒரு இசையமைப்பாளனின் அசாத்தியத் திறமை இங்கே தான் இருக்கிறது. அது என்னவெனில் ஒரு பாடலை ரசிகன் தான் நினைத்த எந்த வடிவிலும் தன் எண்ணவோட்டத்துக்கேற்ப 
ஓட்டிப் பார்த்து வித விதமான ரசிக்க முடியும்.
கே.ஜே.ஜேசுதாஸுக்கு ரஹ்மானால் கொடுக்கப்பட்ட ஆகச் சிறந்த பாட்டாக இதையே எடுத்துக் கொள்வேன்.
வட இந்தியப் பாடகி சாதனா சர்க்கத்தின் பால் மணம் மாறாத் தமிழ்க் குரல் இந்தப் பாடலுக்கு ஒரு பலம்.
“காதல் பிச்சை கேட்கிறேன் ஹாஆஆ…” என்று அவர் உருகும் போது கல் நெஞ்சமும் இளகி விடும் அக்கணம்.
காதலனும் காதலியும் போட்டி போட்டுக் கொண்டு 
சம விகிதத்தில் உருகித் தள்ளும் அபூர்வமான பாடல்களில் இதுவுமொன்று.
முதல் சரணத்துக்கு முந்திய இடையிசையில்
 “தீம்தர தீம்தர தீம்தர தீம்தரா 
    தீம்தர தீம்தர தீம்தர தீம்தரா” என்ற சங்கதிக்கு அமைவாக முணுமுணுக்கும் இசையும் கூட வரும் கோரஸ் கூட்டணி “அஹஹாஹா” என்று இணையும் அந்தக் கணம் நேரமெடுத்து நேர்த்தியாக இசை பண்ணும் ரஹ்மானை அனுபவத்தை நேரடியாக உணரலாம்.
🎷 நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம் (டூயட்)
https://youtu.be/49IgoOITI-A
இசை சார்ந்த ஒரு படத்தின் சாரத்தை ஒரு பாடலுக்குள் அடக்க முடிந்தால் இம்மாதிரியானதொரு பாடலாகத் தான் அது வடிவெடுக்கும். சாக்சபோன் வாத்தியம் ஆரம்பித்து வைக்கப் பின் அதனோடு மொழி பேசும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் மீண்டும் அதுவும் அவரோடு இசையால் பேசும் அழகியலுமாகப் புதைந்திருக்கிறது இந்தப் பாடலில்.
“சிங்கார வேலனே தேவா” பாடலில் எப்படி குரலும் நாதஸ்வரமும் அந்நியோன்யமாகப் பேசிப் பழகினவோ அவை மறு பிறவி எடுத்துப் புத்திசையாகப் பேசுமாற் போல இந்தப் பாடல்.
🎷 உன்னைக் கேளாய் ( தேசம்)
https://youtu.be/DSJzrIGOzM0
தேசம் என்ற ஒரு படம் ரஹ்மான் இசையில் வெளிவந்ததே புலம் பெயர் தமிழ் வானொலிகள் மூலமே அதிகம் அறியப்பட்டது. காரணம் தாய் நாட்டை இழந்து பிரிந்து வாடுதலின் சோகத்தைப் புனைந்து பாடிய “உந்தன் தேசத்தின் குரல்” https://youtu.be/Z5cjyAjRiCQ பாட்டு.
ஸ்வதேஷ் திரைப்படம் தமிழில் “தேசம்” ஆனது. 
பாடல்கள் முழுதும் எழுதியது கவிஞர் வாலி
ஹிந்தியில் ஹரிஹரன், உதித் நாராயணன், கைலாஷ் கர்  பாடிய Yun Hi  Chala Chal” தமிழுக்கு வந்த போது அதே ஹரிஹரனுடன் T.L.மகராஜனுடன் இணைந்து கொடுத்த அட்டகாஷ் துள்ளிசைப் பாடல் இது.
தத்துவப் பாடலொன்றைக் கேட்கும் போது இருக்கும் சோக மன நிலையை இன்னும் கீழிறக்கும் பாங்கு கொண்ட பாடல்கள் ஒரு பக்கமிருக்க, இம்மாதிரித் துள்ளிசை கலந்து கொடுக்கும் தத்துவப் பாடல்களைக் கேட்கும் போது அலாதி இன்பமும் உற்சாகமும் பிறக்கும்.
“ரும்தும் தானன ரும்தும் தானன ரததும் தானன” என்று 
நாட்டுப்புறத்தானும் நகரத்தானும் நட்போடு கை கோர்க்கும் அந்த அழகியல் அற்புதமான பாடலாக விரிகிறது. 
“எத்தனை கால்கள் சென்றனவோ 
எத்தனை கதைகள் வென்றனவோ”
சாலை வழியே வாழ்க்கைப் பயணத்தைப் பாடலில் ஓட்டிப் பார்ப்பது எவ்வளவு சுகானுபவம்.
🎷 செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ (பவித்ரா) 
https://youtu.be/7SjAaavQVpw
அப்போது வரிசையாக ஒவ்வொரு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியவிதத்தில் பவித்ரா படத்தில் கே.சுபாஷ் உடன் கை கோர்த்திருந்தார் ரஹ்மான். 
படத்தில் “உயிரும் நீயே” , “அழகு நிலவே” பாடல்களோடு “கோயம்முத்தூர் கோயம்முத்தூர் தாண்டி” என்ற எள்ளல் பாடல் அளவுக்குக் கூட செவ்வானம் பாடல் அப்போது பிரபலமாக இருக்கவில்லை. இந்தப் பாடல் வந்த நேரம் நான் கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த நேரம் எப்போதாவது அரிதாக இலங்கை வானொலி இந்தப் பாட்டைக் கொடுக்கும் போது நின்று கேட்டுவிட்டுப் போவேன்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சகோதரி எஸ்.பி சைலஜாவிற்கு இளையராஜாவால் ஆரம்பத்திலிருந்து பாடும் வாய்ப்புகள் அதிகம் கிட்டியது போல, எஸ்.பி.பி மகள் பல்லவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாய்த்திருக்கிறார். காதலிக்கும் பெண்ணின் கைகள் (காதலன்) படப்பாட்டில் தந்தையுடன் சேர்ந்து பாட வாய்ப்புக்கிட்டியது இவருக்கு. ஜீன்ஸ் படத்தில் உன்னிகிருஷ்ணனுடன் “ஹைர ஹைர ஐரோப்பா” வரிசையில் பவித்ராவில் இந்தப் பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் முன்னுறுத்தியும் தொடர்ந்தும் நிறையப் பாடவில்லை இவர். ஶ்ரீராம் சிட்ஸ் அதிபரின் மகனைக் காதலித்துத் திருமணம் முடித்து அமெரிக்கா சென்றதாக ஞாபகம். 
நீல மலர்கள் படத்தில் வந்த இது இரவா பகலா நீ நிலவா கதிரா பாடலைப்போலவே இந்தப் பாடலின் வரிகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
எஸ்.பி.பல்லவியை திரையிசையில் தனித்துவமான பாடகி என்றெல்லாம் உயர்த்த முடியவில்லை என்றாலும்,  அப்பாவித்தனம் ஒட்டிய அந்தக்குரலில் ஏனோ ஈர்ப்பு இருக்கிறது. குறிப்பாக “செவ்வானம் சின்னப்பெண் சூடும்” பாடல் அவருக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு. மனோவை முந்திக் கொண்டு இவர் பாடும் போது கொடுக்கும் நுணுக்கமான சங்கதிகளைக் கவனித்தால் நீங்களும் என் கட்சியில் சேர்ந்துகொள்வீர்கள்.
🎷 சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே (வண்டிச்சோலை சின்ராசு) 
https://youtu.be/aNEcfbaI66g
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்ப காலத்து மெது நடைப் பாடல்களில் இதையெல்லாம் ஒதுக்கி விட்டுக் கடக்க முடியாது என்னுமளவுக்கு வசீகரம் நிறைந்த இசை கொண்ட பாட்டு. 
ஜெயச்சந்திரன், மின்மினி பாடும் போது இந்த ஜோடிக் குரல்களை மனதில் வைத்துக் கொண்டே மெட்டுக் கட்டியிருப்பாரோ என்னுமளவுக்கு அச்சொட்டான ஜோடிக் குரல் பொருத்தம் இசையோடு இழைந்திருக்கும். ஒரு பாடலுக்குத் தேர்ந்த குரல்களும் எவ்வளவு தூரம் அணி செய்கின்றன என்பதை இம்மாதிரியான உதாரணங்களின் மூலமே நிறுவ முடியும்.
இதையே தெலுங்கில் கொடுத்த போது எப்பேர்ப்பட்ட ஜாம்பவானான எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா கூட்டணி இருந்தும் மனதில் ஜெயச்சத்திரன் & மின்மினி குரல்கள் மாற்றீடைத் தேடாது பதியம் போட்டிருக்கு
இந்தப் படத்தை ஒரு மாறுபட்ட முயற்சியாக, அப்போது தொடர்ந்து கிடைத்த நகரப் பின்னணி சார்ந்த படங்களில் இருந்து விலகியதாகரஹ்மான் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.
பண்பலை வானொலிகள் மெல்ல முளைத்துக் கொண்டிருந்த சமயம் “செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே” என்ற சாகுல் ஹமீத் பாட்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம். 
“பரோட்டா பரோட்டா” கவிஞர் நா.காமராசன் ரஹ்மானுக்காக இதுவரை எழுதிய ஒரே பாடல் (நேரடிப் படத்தில்) என நினைக்கிறேன்.
“இது சுகம் சுகம்” வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜோடி சேர்ந்த இன்னொரு மென் காதல் மெட்டு.
“சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே” பாடலைக் கேட்கையில் “ஆத்தங்கரை மரமே” (கிழக்குச் சீமையிலே) பாடலின் மெது நடையாகப் படும் எனக்கு. 
🎷 ஒண்ணு ரெண்டு மூணடா (புதிய மன்னர்கள்) 
https://youtu.be/e-06nR9tc_E
“நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கிப் போனேன்டி” பாடலை வாங்குவதற்குள் இயக்குநர் விக்ரமன் ஏ.ஆர்.ரஹ்மானைக் கசக்கிப் பிழிந்து விட்டாராம். தெம்மாங்குப் பாட்டொன்று இருந்தால் நல்லா இருக்கும் என்று ரஹ்மானிடம் விக்ரமன் எதிர்பார்க்க, ரஹ்மான் கொடுத்த ஒவ்வொரு மெட்டும் அவருக்குத் திருப்தியில்லாமல் அமைந்து விடுகிறது. கடைசியில் பழநி பாரதி அவர்களைக் கொண்டு பாடலை எழுதி வாங்கி அதற்கு மெட்டுப் போடச் சொன்னாராம். 
அந்தப் பாட்டுக்கு மெட்டுக் கட்டி ரஹ்மான் கொடுத்த அட்டகாசமான பாடல் தான் இந்த “நீ கட்டும் சேலை மடிப்புல”.
புதிய மன்னர்கள் படத்தின் பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் வழக்கமான நிறம் இருக்காது. பின் நாட்களில் ஹிந்தி உலகில் லகான், ரங் தே பாசந்தி என்று தேசிய எழுச்சி சார்ந்த அடையாளப் படங்களுக்கு முன்னோடி இது. 
ஆண்களா பெண்களா உசத்தி என்பது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் இருந்து பட்டி மன்ற மேடைகளில் இருந்து திரையிசைப் பாடல்கள் வரை ஏட்டிக்குப் போட்டியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அப்படியானதொரு பாங்கில் அமைந்த பாட்டுத் தான் “ஒண்ணு ரெண்டு மூணடா”.
இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் சக மாணவியர் கூட்டத்தைக் கலாய்த்துப் பார்த்த காலம் என்பதால் பள்ளிக் காலத்துப் பசுமை நினைவுகளைக் கிளறி விடும் என்பதால் மீன் பொரியலை வெறுஞ் சோறுடன் அள்ளிச் சாப்பிடும் சுவை போல ரசிப்பேன். 
“இசையமைப்பாளரே! எனக்கு ஒரு போட்டிப் பாட்டு வேணும் அந்தப் பாட்டில் பாடும் ஆணோ பெண்ணோ தங்கள் பாலினத்தை விட்டுக் கொடுக்காத தில் பாட்டு முடியும் வரை இருக்கணும்” இப்படியொரு எதிர்பார்ப்போடு இயக்குநர் விக்ரமன் ரஹ்மானிடம் யாசித்திருப்பாரோ என்று அந்த இசையமைப்புச் சூழலைக் கற்பனை பண்ணிப் பார்ப்பேன். விடுவாரா ரஹ்மான்? பாட்டு முழுக்க அந்த சக்தியை (energy) வீரியம் மிகுந்த இசையால் பின்னிக் காட்டியிருக்கிறார்.
தொம்த தொம்த தொம் தொம் என்று அந்தப் பாடலில் வரும் ரிதத்தின் உதைப்பைப் பாடலைக் கேட்டு முடித்த பின்னரும் அசை போட்டுக் கொண்டிருப்பேன்.
இசையை விலத்தி வரிகளை மட்டும் பிரித்துப் பார்த்தால் அந்த மெட்டில் ஆங்காங்கே ஒரு சாஸ்திரிய சங்கீதத்தனம் ஒட்டியிருக்கும். மனோ சித்ரா காதல் ஜோடிப் பாட்டுக்காரர்களை இப்படிப் போட்டியாளர்களாகப் பாட வைக்கும் புதுமையும் இனிக்கிறது. 
தேனிசைத் தென்றல் தேவாவால் களம் இறக்கப்பட்ட பாடலாசிரியர் கவிஞர்  காளிதாசன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எழுதிய ஒரே பாடல் இதுவாகத் தானிருக்கும். இந்தப் படத்தின் மற்றைய பாடல்கள் அனைத்தையும் எழுதி, ரஹ்மானுடன் முதன் முதலில் கை கோர்த்தார் பழநி பாரதி.
(தொடரும்)

இசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻

தொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு.
இசைஞானி இளையராஜாவுக்கு ஒரு அன்னக்கிளி, தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஒரு மனசுக்கேத்த மகராசா, தேவேந்திரனுக்கு ஒரு மண்ணுக்குள் வைரம் போன்று எடுத்த எடுப்பிலேயே ஒரு கிராமிய மணம் கமிழும் படத்துக்கு இசையமைப்பாளர் சிற்பியின் வருகை அமைந்திருக்கிறது. இயக்குநர் மனோபாலாவின் “செண்பகத் தோட்டம்” திரைப்படம் சிற்பி அவர்களின் திரையுலக அரிச்சுவடியில் முதல் படம்.
“முத்து முத்துப் பூமாலை” https://youtu.be/AnPPw0wSbv8 மனோ & ஸ்வர்ணலதா கூட்டாகச் சந்தோஷ மெட்டிலும் அதே பாடலை எஸ்.ஜானகி மனோவோடு இணைந்து https://youtu.be/pCoCraCnrU8 சோக ராகத்திலும் பாடிய பாடல்களும், கே.ஜே.ஜேசுதாஸ் இன் “ஓ வெண்ணிலா” http://youtu.be/gbQBHcQeimY பாடலும் அன்றைய கால கட்டத்தில் விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்கள். இன்னும் ஸ்வர்ணலதா பாடிய “ஒத்த நெலா விளக்கு முத்தம்மா பூ விளக்கு” https://youtu.be/HrdXUrcVxeE பாடலும் தாமதமாக ரசிப்புப் பட்டியலில் சேர்ந்த பாடல். செண்பகத் தோட்டம் படத்தில் மேற்கூறிய பாடல்கள் ஜனரஞ்சக அந்தஸ்த்தை அடைந்திருந்தாலும் சிற்பி அவர்களைப் பரவலாக அறிமுகப்படுத்தத் தவறி விட்ட படமாக அமைந்து விட்டது.
“கோகுலம்” திரைப்படம் இயக்குநர் விக்ரமனை “புது வசந்தம்” படத்துக்குப் பின் நிமிர வைத்த படம். கதைச் சூழல் பாடகியை வைத்துப் பின்னப்பட்டதால் படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமான சிற்பி பின்னி எடுத்து விட்டார். “புது ரோஜா பூத்திருக்கு” காதல் துள்ளிசை இன்றும் கூட கொண்டாடி மகிழக் கூடிய ஜோடிப் பாடப் என்றால் மீதி எல்லாம் மெல்லிசை கலந்த இன்னிசைப் பரவசம் கொட்டிய பாடல்கள். புல்லாங்குழலோடு போட்டி போடும் “தெற்கே அடிக்குது காற்று” ,  
“அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்” ஆகிய பாடல்கள் சித்ராவுக்கானதாக அமைய “நான் மேடை மீது பாடும் தென்றல் காற்று” “சிட்டாக ரெக்க கட்டு” என்று  இன்னும் இரண்டு பாடல்கள் ஸ்வர்ணலதாவுக்கான அணி கலன்கள். இந்த “சிட்டாக ரெக்க கட்டு” எவ்வளவு அழகானதொரு புத்தாண்டுப் பாடல். ஆனால் வானொலிகள் தொலைக்காட்சிகள் ஏனோ அதிகம் சீண்டுவதில்லை.
உமா ரமணனுக்கென வாய்த்தது “பொன் மாலையில்”.
தொண்ணூறுகளின் முத்திரைப் பாடகர் உன்னிமேனன் & P.சுசீலா பாடிய “செவ்வந்திப் பூ எடுத்தேன்” இன்னொரு காதல் ஜோடிப் பாடலாக இனிமை கொட்டியது. “சின்னச் சின்ன ஆசை” பாடலை நகலெடுத்துப் பின் வரிகளை மாற்றி சுஜாதா பாடிய பாடலும் உண்டு.  ஒரே படத்திலேயே ஐந்து முன்னணிப் பாடகிகளை நாயகிக்காகக் கொடுத்த விதத்திலும் புதுமை படைத்தது “கோகுலம்”.
உள்ளத்தை அள்ளித்தாவுக்கு முன்பே பாடலாசிரியர் பழநிபாரதி – சிற்பி சேர்ந்த வெற்றிக் கூட்டணி இது.
ஆர்ப்பாட்டமான உலகில் இருந்து விலகி அமைதி தவழும் சூழலுக்கு மாற்ற வல்லது இந்த கோகுலம் படப் பாடல்கள். அதனால் தான் இன்றும் பெரு விருப்புக்குரிய ஒரே படத்தில் அமைந்த முழுப்பாடல்கள் பட்டியலில் “கோகுலம்” தவிர்க்க முடியாத சிம்மாசனம் இட்டிருக்கிறது.
கோகுலம் முழுப் பாடல்களையும் கேட்க https://youtu.be/EROpxDMLYCY
இயக்குநர் விக்ரமனின் படத்துக்கான நிறம் இன்னது என்பதை உணர்ந்து எப்படி ஆரம்பத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இணைந்து வெற்றிகரமாக அதைக் காட்டினாரோ அதே போல் சிற்பியும் விக்ரமன் படத்தின் தன்மை உணர்ந்து அதைத் தன் இசையில் நிரூபித்துக் காட்டினார். லாலாலா மாமூலாக என்ற விமர்சனம் இருந்தாலும் ஒரு பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் இது விக்ரமன் படம் தான் என்று கணிக்கக் கூடிய  பாடல்களில் விக்ரம ஆதிக்கம் மிகுந்திருக்கும்.
மறைமுகமாக அப்படியொரு நிறத்தை இசையிலும் பூசிக்காட்டிய விதத்தில் விக்ரமனுக்கு அது வெற்றியே.
படத்தின் சந்தைப்படுத்தலுக்கும் கை கொடுத்தது.
1993 ஆம் ஆண்டைப் பொறுத்த வரை விக்ரமன் – சிற்பி கூட்டணியில் இரட்டை விருந்தாக “கோகுலம்” படத்தைத் தொடர்ந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” அடுத்ததாக வந்தது.
“ஏலேலங்கிளியே எனைத் தாலாட்டும் இசையே” கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் சந்தோஷ ராகம் புதுவசந்த காலத்தில் அவரே பாடிய “பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா” வை ஞாபகப்படுத்திப் பரவசம் கொள்ள வைத்தது. அதே பாடல் ஜோடிப் பாடலாக இருந்தது போல “பூங்குயில் ராகமே” பாடலும் தொண்ணூறுகளின் சூப்பர் ஹிட் பாடல்களில் இடம் பிடித்தது.
“நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல்களைக் கேட்க
https://youtu.be/bdXQD6OerZM
“அன்னை வயல்” இப்படியொரு கவிதைத் தனமான தலைப்பைத் தன் படத்துக்கு வைத்தவர் எவ்வளவு நிரம்பிய கனவுகளோடு தன் கன்னி முயற்சியைக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் இருந்திருப்பார். அவர் தான் இயக்குநர் பொன்வண்ணன். 
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த பொன்வண்ணன் அடிப்படையில் ஓவியர். அதனாலோ என்னவோ தன் “அன்னை வயல்” படம் குறித்து அப்போது பேசும் படம் போன்ற திரை இதழ்களில் பேசும் போதெல்லாம் அவரது பேட்டியே ஒரு கலாபூர்வமாக இருந்தது. ஆனால் துரதிஷ்டம் அவருக்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வடிவிலேயே வந்து சேர்ந்தது. 
தன்னுடைய முதல் முயற்சியைத் தான் நினைத்தவாறு  திரைப் படைப்பாக்கிக் கொடுக்க வேண்டும் வேண்டும் என்று எத்தனை வருடங்களாகக் கருக்கட்டிச் சுமந்திருப்பான் ஒரு படைப்பாளி. ஆனால் அவனின் அந்த இலட்சியத்துக்குச் சரியான பாதை போடாது முட்டுக்கட்டை போட்டு அந்தப் படைப்பையே சிதைத்து விட்ட கதையாக “அன்னை வயல்” படத்துக்கும் நேர்ந்தது. 
எனது ஞாபகக் குறிப்பின் படி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தன் மகனையும் நடிக்க வைத்து அந்தப் பாத்திரத்தை இயக்குநர் பொன்வண்ணனின் சிந்தனையை மீறி அதீத நாயக அந்தஸ்தைக் காட்ட மூக்கை நுழைத்தது தான் காரணமென்று நினைவு. பின்னர் அதே தயாரிப்பாளர் தான்  “சந்தைக்கு வந்த கிளி” படத்தையும் எடுத்ததாக நினைப்பு.
“அன்னை வயல்” படத்தில் வந்த “மல்லிகைப் பூவழகில் பாடும் இளம் பறவைகளே” பாடல் தொண்ணூறுகளின் பாடல்களோடு வாழ்ந்தவர்களின் சுவாசம்.
இந்தப் பாட்டைக் கேளாதவருக்கு எப்படியாவது கொண்டு சேர்த்த பெருமை உள்ளூர் தனியார் பேரூந்துகளுக்கு உண்டு.
இந்தப் பாடலைப் பற்றிச் சொல்ல வேண்டிய, சொல்ல மறந்தது ஒன்று => பாடலின் ஆரம்பத்தில் அழகாக அமைந்திருக்கும் கோரஸ் குரல்களோடு ஒட்டிய ரயிலோசை
இசையமைப்பாளர் சிற்பிக்கு அழகானதொரு இன்னொரு முகவரியைக் காட்டிய பாட்டு இது.
பாடலாசிரியர் பழநி பாரதியின் வரிகளோடு அப்படியே எங்கள் ஊரின் வயல் வெளிகளில் ஆனந்தமாக ஓடி நெற்கதிர்களைத் தலையாட்டும் காற்றுக்கு நிகராக இசையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி கூட்டுப் படையலுமாக இனியதொரு அனுபவம்.
அன்னை வயல் படத்தின் அனைத்துப் பாடல்களும் சிற்பிக்கு இன்னொரு செண்பகத் தோட்டமாய் அமைந்த கிராமியத் தெம்மாங்குகள். 
அன்னை வயல் முழுப்பாடல்களையும் கேட்க
https://youtu.be/LJmKgcwERW8
தொண்ணூறுகளில் வெளியான மணி-ரத்னம் படத்தின் பெயரைப் பலர் மறந்தோ அல்லது தெரியாது விட்டாலும் “காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா” என்ற பாடலைத் தெரியாதவர்கள் குறைவு எனலாம்.
குறிப்பாகக் கிராமங்களில் வாழ்ந்து கழித்தவர்களுக்கும் இப்பொழுதும் கிராமியக் கொண்டாட்ட வீடுகளில் லவுட்ஸ்பீக்கர் கட்டிக் குழாய் வழியே பாடல் கொடுக்கும் ஒலி-ஒளி அமைப்பாளரும் இந்தப் பாட்டை மறக்க மாட்டார்கள்.
மணி-ரத்னம் என்று சட்டச் சிக்கல் இல்லாமல் பெயரை வைத்து விட்டார்கள். இந்தப் படத்தின் தலைப்புக்கு அந்தக் காலத்தில் இயக்குநர் மணிரத்னம் மேல் இருந்த உச்ச நட்சத்திர அந்தஸ்தும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.
“காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா” பாடல் இடம் பெற்ற மணி-ரத்னம் திரைப்படம் ஆனந்த்பாபு, (வீட்ல விசேஷங்க) மோகனா போன்றோர் நடித்தது.
படத்துக்கு இசை சிற்பி, இன்னொரு வேடிக்கை இந்தப் பாடலையும் YouTube மற்றும் இணைய அன்பர்கள் இளையராஜா தலையில் கட்டி விட்டார்கள். அவ்வளவுக்கு நேர்த்தியான இனிய இசையைச் சிற்பி அளித்திருக்கிறார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல் தேர்வும் அட்டகாஷ்.  அந்தப் பாடலைக் கேட்க https://youtu.be/OmRKEEcEcJ8
இசைமைப்பாளர் சிற்பிக்கு முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்த “நாட்டாமை” இல் “மீனாப் பொண்ணு மீனாப் பொண்ணு”, சூப்பர் குட் பிலிம்ஸ் முதன் முதலில் பெரும் எடுப்ப்பில் தமிழ், தெலுங்கில் தயாரித்த “கேப்டன்” இல் “கன்னத்துல வை” https://youtu.be/hJgIDN8t0iQ
சிற்பிக்கு இன்னொரு சூப்பர் ஹிட் முகம் கொடுத்த உள்ளத்தை அள்ளித்தா, இவற்றோடு “அன்புள்ள மன்னவனே” பாடிய மேட்டுக்குடி, “நீயில்லை நிலவில்லை” சோக ராகம் இசைத்த “பூச்சூடவா” என்று எனக்குப் பிடித்த பாடல்களோடு நீட்டி முழக்கினால் தொடர் கட்டுரைகள் தேறும். எனவே இத்தோடு நிறுத் 😀
இசையமைப்பாளர் சிற்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐💐
கானா பிரபா
15.12.17

இசையமைப்பாளர் ஆதித்யன் 🎸🥁🎹

“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார். “சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே” பாடல் வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்பின் சன்னல் கதவைத் திறந்தடிக்கும் காற்று உள் வந்து சில்லிட, உள்ளே படிக்கும் மேசை கூடக் கிடையாது வெறுந்தரையில் ப்ளாஸ்டிக் பாய் விரிப்பில் நானும் நண்பர்களுமாகப் படுத்தெழும்பவும், படிக்கவும் பாவிக்கும் அந்த ஒற்றை அறையின் மூலையில் தானும் உட்கார்ந்து இசையை அந்த அறை முழுக்கப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அமரன் படப் பாட்டின் துல்லிய இசையை அந்த ஒற்றை ஸ்பீக்கர் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியின் பிரவாகமாகக் காட்டுகிறது. 
அந்த நேரத்தில் புதுசா என்ன பாட்டு வந்திருக்கிறது என்பது நமக்குப் படிப்பை விட முக்கியம்.
தொண்ணூறுகளில் கொழும்பு வந்து தங்கியிருந்த பொழுதுகளில் இதுதான் நித்தமும் நடக்கும்.
அமரன் படப் பாடல்கள் அறிமுக இசையமைப்பாளர் ஆதித்யன் இசையோடு வந்த போது பரவலான கவனத்தை ஈர்த்தது. இயக்குநர் ராஜேஷ்வர் ஏற்கனவே இதயத் தாமரை, நியாயத் தராசு போன்ற படங்களில் சங்கர் – கணேஷ் இடமிருந்து வெகு வித்தியாசமான பாடல்களை வாங்கியிருப்பார். அப்பேர்ப்பட்ட இயக்குநர் படமல்லவா?
நடிகர் கார்த்திக் ஐப் பாடகராக்கி “வெத்தல போட்ட ஷோக்குல நான்”, “முஸ்தபா முஸ்தபா” என்றும்
சாஸ்திரிய இசையின் முப்பெரும் பாடகிகளில் ஒருவராகக் கொள்ளப்படும் எம்.எல்.வசந்தகுமாரியின் புதல்வி, நடிகையாக அதுவரை பயணப்பட்டவர் துள்ளிசைப் பாடலாக “சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு” என்று துள்ளிசைப் பாடலோடு வருகிறார். ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று தொடங்கும் அந்த ஆரம்ப அட்டகாசத்துக்காகவே வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பி மகிழ்ந்திருக்கிறேன் ஶ்ரீவித்யாவின் பாடலை. ஒரு பாடலை இன்னார் பாடினால் எப்படியிருக்கும் என்று மனம் ஒப்பிட்டுப் பார்த்திருக்கும் பல வேளை ஆனால் இங்கே கே.ஜே.ஜேசுதாஸ் உம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உம் பாடும் “சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே” பாடல் இரண்டு வடிவமுமே இவ்விருவரின் தனித்தன்மைக்கேற்ப அமைந்திருக்கும். ஜேசுதாசின் குழைந்து தோயும் குரல் ஒரு பக்கம் என்றால் இன்னொரு புறம் விரக்தியும், நம்பிக்கையும் கலந்தவொரு தொனியில் 
வார்த்தைகளைத் தெறித்து விடும் பாங்கில் எஸ்.பி.பி கொடுத்திருப்பார். வசந்தமே அருகில் வா தொண்ணூறுகளின் மென் சோகப்பாடல்களில் தனித்துவமானது.
அமரன் என்ற இறுக்கமாக நகரும் படத்தில் பாடல்களின் புதுமை அப்போது இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. “ரோஜா” பட வருகையின் போது ஏ.ஆர்.ரஹ்மான் கொண்டாடப்பட்ட போது அப்போது சற்று எரிச்சலாக இருந்தது. இந்த மாதிரிப் புதுமையான இசையை அமரன் படத்தில் பார்த்து விட்டோமே என்று. பல வருடங்களுக்குப் பின் தான் அறிந்து கொண்டேன் அமரன் படத்தில் ஆதித்யனின் இசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் கீ போர்ட் வாத்திய இசையும் துணை புரிந்ததென்று.
சந்திரரே சூரியரே மற்றும் முஸ்தபா பாடல்களுக்கு இசை விஸ்வகுரு. கவனத்துக்கு எடுத்து வந்த நண்பர் வெங்கடேஷ் இற்கு நன்றி.
“சின்னச் சின்ன கனவுகளே கண்ணா” 
https://youtu.be/paqAoGhAjBU
எவ்வளவு அற்புதமான மெல்லிசைப் பாடலிது. சித்ராவின் குரலில் “துறைமுகம்” படத்துக்காகப் போடப்பட்ட பாடல் “காதலர் கீதங்கள்” என்ற என்னுடைய இரவு நேர வானொலி நிகழ்ச்சிக்கு அதிகம் பயன்பட்டது. ஆதித்யனும் இயக்குநர் ராஜேஸ்வரும் மீண்டும் இணைந்த போது “துறைமுகம்” கிட்டியது. அருண்பாண்டியன் மற்றும் ஷோபனா போன்ற நட்சத்திரங்கள் இருந்தும் எடுபடாமல் போன படத்தை விட இந்தப் பாடல் இன்னொரு புகழ் பூத்த படத்தில் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைப்பேன்.
இதே போல் தொண்ணூறுகளில் புதுமுகங்களின் அலை அடித்த போது நெப்போலியன் குணச்சித்திர வேடத்தில் நடித்த “மின்மினிப் பூச்சிகள்” திரைப்படத்தில் வரும் “கண்மணிக்கு நெஞ்சில் என்ன சோகமோ” https://youtu.be/fb1mGsRfURc பாடலும் அரிய ரகம். ஆதித்யனைப் பெரிய அளவில் எடுத்துச் செல்ல அந்தப் படம் துணை நிற்கவில்லை.
P.B.ஶ்ரீனிவாஸ் அவர்களைத் தொண்ணூறுகளில் கூட்டி வந்து பாட வைத்த பெருமை ஆதித்யன் இசையில் “நாளைய செய்தி” திரைப்படத்தின் வழியாகக் கிட்டியது. P.B.ஶ்ரீனிவாஸ் உடன் சங்கீதா பாடிய “உயிரே உன்னை உலகம் மறந்து விடுமோ” 
https://youtu.be/awmhqQSGVUM
என்ற பாடல் தான் அது. பிரபு – குஷ்பு அலையடித்த போது இந்த ஜோடி “கலைஞன்” படத்தினை இயக்கிய G.B.விஜய் இயக்கத்தில் நடித்த பெயர் மட்டும் தங்கியது. இன்றும் இந்தப் பாடலை இன்ன படத்தில் தான் வந்தது என்று அறியாமலேயே ரசிக்கும் கூட்டமுண்டு.
தொண்ணூறுகளில் சின்னத் திரைத் தொலைக்காட்களில் நடனப் போட்டிகள் என்று வரும் போது “சக்கு சக்கு வத்திக்குச்சி பத்திக்குச்சு” 
https://youtu.be/v697hDz1tio பாடலும் இருக்க வேண்டும் என்றொரு எழுதப்படாத விதி இருந்ததோ என்னமோ ஆதித்யன் பாஷையில் “ஆட்டமா தேரோட்டமா” ஆக தொண்ணூறுகளின் ஆகச் சிறந்த துள்ளிசைகளில் ஒன்றாக அசுரன் திரைப்படத்தில் இடம் பிடித்தது.
“அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது” https://youtu.be/QIVp0kqvo3c இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஆதித்யன் என்பதை நம்ப முடியாத அளவுக்கு வித்யாசாகர் தனமான இன்னிசையைக் கொட்டியிருப்பார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தப் பாடலுக்கு மிகப் பெரிய பலமாகவும் அமைந்தார். மிஸ்டர் மெட்ராஸ் இல் வித்யாசாகர் இசையில் எஸ்.பி.பி. பாடிய “பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம்” பாடலுக்கு அருகே இந்தப் பாடல் உட்கார்ந்து கொள்ளும். ரோஜா மலரே படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுடன் “ஆனந்தம் வந்ததடி” https://youtu.be/DNpMyOGnLTU பாடலும் ஆதித்யனுக்குப் புகழ் கொடுத்தவை. சில ஆண்டுகளுக்கு முன் ரோஜா மலரே படத்தின் தயாரிப்பாளர் புதுப்படமொன்றின் விளம்பரத்தை இப்படி வைத்தார் “அழகோவியம் உயிரானது” பாடலை அளித்த தயாரிப்பு நிறுவனம் தரும் படம் இது என்று. ஒரு பாடலை முன்னுறுத்தி இன்னொரு படத்திற்கு விளம்பரம் செய்தது புதுமை அல்லவா?
அமரன் அளவுக்கு ஆதித்யனுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்த படம் “சீவலப்பேரி பாண்டி”. ஜூனியர் விகடனில் செள பா எழுதிய பரபரப்புத் தொடர் பி.ஜி.ஶ்ரீகாந்த் தயாரிக்க பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியானது.
நெப்போலியனுக்கு அருவா நாயகன் பட்டமும் இதிலிருந்து ஒட்டிக் கொண்டது.
“கிழக்கு செவக்கையிலே கீரை அறுக்கையிலே” https://youtu.be/aonfZhg2wds பாடலும் “ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு” https://youtu.be/I3jol6GfFSA பாடலும் அதிரி புதிரி ஹிட் அடித்த பாடல்கள். அரண்மனைக் கிளி அஹானாவுக்கு இரண்டாவது ஹிட் படமானது.
அமரன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்ட் வாத்தியக் கலைஞராக இருந்தது போல சீவலப்பேரி பாண்டி படத்தின் கீபோர்ட் இசை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியிருந்தார்.
லக்கி மேன், மாமன் மகள் போன்ற தொண்ணூறுகளின் நகைச்சுவைச் சித்திரங்களுக்கும் ஆதித்யனே இசை.
தொண்ணூறுகள் Pop மற்றும் தனிப் பாடல்களில் உச்சம் கண்ட ஆண்டுகள். அந்த நேரம் சுரேஷ் பீட்டர்ஸ் இன் மின்னலே, மற்றும் ஏனைய இசைத் தொகுப்புகளான காதல் முதல் காதல் வரை, காதல் வேதம் போன்றவற்றோடு மால்குடி சுபாவின் வால்பாறை வட்டப்பாறை பாடல் எல்லாம் திரையிசைக்கு நிகராகக் கொண்டாடப்பட்டன. அப்போது காதல் நேரம் மற்றும் Pop பாடல்களின் வழியாகவும் தடம் பதித்தார் ஆதித்யன். பழைய பாடல்களை Re-mix வடிவம் கொடுத்து வெளியிட்டார். பின்னாளில் அவை திரையிசையிலும் பலர் பின்பற்ற வழி செய்தார்.
Sound Engineer ஆக இருந்து இசையமைப்பாளர் ஆகியவர் என்ற அந்தஸ்தோடு ஆதித்யன் தொண்ணூறுகளில் கொடுத்த இசை தமிழ்த் திரையிசை வரலாற்றில் ஒன்றாகப் பதியப்படும். உண்மையில் இன்று மேற்கத்தேயக் கலவையோடு அனிருத் போன்றோர் கொடுக்கும் பாடல்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல தொண்ணூறுகளில் ஆதித்யன் கொடுத்தவை. ஆதித்யனோடு வேலை செய்யக் கூடிய திறமையான இயக்குநர் கூட்டணி இன்னும் அதிகம் அமைந்திருக்கலாம். அவர் பின்னாளில் சமையல் நிகழ்ச்சிகளுக்கு வருவதைக் கூடத் தடுத்து இசையுலகில் தொடர்ந்து தக்க வைத்திருக்கும் அது.
ஆதித்யன் தன் இசை போலவே நவ நாகரிகமான தோற்றத்தில் தன்னைத் தயார்படுத்தியதும் அதுவரை திரையிசை உலகம் கண்டிராதது.
ஆதித்யன் கொடுத்த எந்தப் பாடல்களையும் தேடி ரசிக்கக் காரணம் குறித்த பாடலின் ஒலித்தரம் என்பது மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது.
“ இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே
நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையிலே” போய் வாருங்கள் ஆதித்யன்
கானா பிரபா
06.12.17

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼 🐞 கனம் கோட்டார் அவர்களே 🔨

பெங்களூருச் சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி வெளியே வந்து நடமாட்டம் என்றெல்லாம் பரபரப்புக் கூட்டியிருக்கும் இந்த வேளை, இதே மாதிரித் தான் ஜெயில் கைதி ஒருவன் அடிக்கடி வெளியே வந்து தன் காரியத்தைச் செய்து விட்டுப் போவதை 29 வருஷங்களுக்கு முன்னமே படமாக எடுத்து விட்டார் இயக்குநர் மணிவண்ணன். தன்னுடைய கூட்டாளி சத்யராஜ் ஐ எடுத்த அந்தப் படம் தான் இந்த “கனம் கோட்டார் அவர்களே”.
சத்யராஜ் இன் நகைச்சுவை ஜோடியாக ஜனகராஜ் அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் கலக்கியிருக்கிறார். அது போலவே இந்தப் படமும் அவருக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. தன்னுடைய சட்டப் படிப்பு மாணவன் சத்யராஜ் உடன் சேர்ந்து கலகலக்க வைக்கிறார். எண்பதுகளின் இறுதியில் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நகைச்சுவையே பண்ணாமல் முழு நீள சிடு மூஞ்சிப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார், அதில் இதுவுமொன்று. தவிர அம்பிகா, ஶ்ரீவித்யா, சந்திரசேகர், சில்க் ஸ்மிதா, பிரதாப் போத்தன், கேப்டன் ராஜ் என்று நடிகர் பட்டாளமே இருக்கிறது.
அண்மைக் காலத்தில் வெளிவந்த Jolly LLB என்ற ஹிந்திப் படம் (உதய நிதி நடித்த ஒரேயொரு உருப்படியான படமாகத் தமிழில் மீளத் தயாரித்த மனிதன் படம் தான்) சட்டம் படித்தவொரு அப்பாவி மாணவன் பின் தன் சாதுர்யத்தால் மூத்த வழக்கறிஞரையே மண்டியிட வைப்பதாக எவ்வளவு அழகாக் காட்டியிருக்கும். கிட்டத்தட்ட அதே பாங்கில் படம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியுடன் சத்யராஜ் நடித்த அந்தத் தெனாவெட்டுக்கு வேணுமென்றால் சபாஷ் போடலாம். ஆனால் தமிழ் சினிமா மசாலா மாயையில் மூழ்குகிறது பாதிப் படம். இயந்திரத் துப்பாக்கி, காற்றாடி விமானச் சண்டை என்று படம் முடியும் போது படம் பார்த்தவன் ஏதோ வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளிக் கதவைத் திறக்கும் திருப்தி தான் மேலிடுகிறது.
வேதம் புதிது படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பும், அறிமுகமும் சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இருவரும் இசையமைப்பாளர் தேவேந்திரனை ஒப்பந்தம் செய்யக் காரணமாக இருந்திருக்கும். தேவேந்திரனைப் பொறுத்தவரை மண்ணுக்குள் வைரம், வேதம் புதிது ஆகிய மண் வாசனை சார்ந்த படங்களைப் பண்ணி விட்டு இப்படியொரு பிரமாண்ட மசாலாப் படத்தில் இணைந்தது புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
இயக்குநர் மணிவண்ணன் தன் படங்களில் இளையராஜா தொட்டு கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா ஈறாக இசையமைப்பாளர்களோடு பணி புரிந்தாலும் பாடல்கள் விஷயத்தில் அவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அவருடைய படங்களில் நல்ல பாடல்கள் இருந்தது வேறு விடயம். கனம் கோட்டார் அவர்களே படம் கூடப் பாடல்கள் இல்லாமேயே வந்திருந்தாலும் பாதகமில்லை எனுமளவுக்கு அமைந்த படம் வேறு.
படம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியோடு வரும் சத்யராஜ் ஐ வித விதமான உருவத் தோற்றங்களில் அழகு பார்த்தது
“பட்டப் படிப்பு தேவை இல்லை கனம் கோட்டார் அவர்களே” என்ற எஸ்.பி.பி பாடும் பாட்டு
https://youtu.be/K7Z2T8b75HM
நீதிபதியில் இருந்து வழக்காடு மன்றத்தில் இருக்கும் ஒவ்வொரு பாத்திரங்களாகத் தோன்றுவார்.
இதே மாதிரி மலேசியா வாசுதேவன் பாடும் “யார் இட்ட சட்டம்”
https://youtu.be/ZmuDC-QKl2o
பாடலில் கடற்படை, விமானப்படை, காவல்துறை அதிகாரியாகவெல்லாம் வருவார். இந்தப் படத்தின் விளம்பரத்துக்கு அவர் இம்மாதிரி வரும் தோற்றங்கள் கை கொடுத்திருக்கும். பின்னாளில் சத்யராஜ் நடித்த படங்களின் முழுப் பாத்திரங்களாக இவற்றில் சில இடம் பிடித்தன. சத்யராஜ் இயக்கிய வில்லாதி வில்லன் கூட இதே பாதிப்புத் தான்.
“காதல் கவிதை பாட கனவே நல்லது”
https://youtu.be/hqE624-UcL4
கனம் கோட்டார் அவர்களே படத்தின் மொத்தம் ஐந்து பாடல்களில் இன்றுவரை இனிப்பது இந்தப் பாடல் தான்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா மற்றும் குழுவினர் பாடும் இந்தப் பாடல் இடைக்காலப் பாடல்கள் தொகுப்பில் தவிர்க்க முடியாதது. பலர் சந்திரபோஸ் இசையில் வந்ததாகக் கூட நினைக்கிறார்கள்.
காதல் கவிதை பாட பாடலின் இசையில் தேர்ந்த இசையமைப்பாளரின் நுட்பம் மிளிரும். பாடல் இடம் பிடித்த இப்படம் பற்றிய பின்னணி தெரியாதவர்கள் ஏதோவொரு முழு நீளக் காதல் கதை கொண்ட படப் பாடல் என்று நினைக்குமளவுக்கு இனிமை கொண்டது இந்தப் பாடல்.

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 🎻 காலையும் நீயே மாலையும் நீயே 🎷 🥁 உழைத்து வாழ வேண்டும் 🎺

எவ்வளவு தான் திறமை இருப்பினும் ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு அதிஷ்டமென்பது இவ்வளவு தூரம் கிடைக்குமா என்றே இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணத்தை ஆச்சரியத்தோடு நோக்க வேண்டியிருக்கிறது.
எடுத்த எடுப்பிலேயே எண்பதுகளின் உச்சமாக விளங்கிய தயாரிப்பாளர் கோவைத்தம்பியின் “மண்ணுக்குள் வைரம்”, அதனைத் தொடர்ந்து அதுவரை இசைஞானி இளையராஜாவோடு வெற்றிக் கூட்டணியாக இயங்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவோடு “வேதம் புதிது” இவற்றைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு தேவேந்திரனுக்கு இரட்டை அதிஷ்டம் வாய்க்கிறது. அதுவே இந்தப் பதிவில் சொல்லப்படுகின்றது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உச்ச நட்சத்திரங்களுக்கு அடுத்து வைக்கக் கூடிய அளவுக்கு திரையுலகில் அப்போது மின்னியவர் விஜய்காந்த். அதிலும் கிராமியம், நகரம் என்று எல்லா விதக் கதைப் பின்னணியும், ஏற்கனவே அனுபவப்பட்ட இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள் என்று விஜய்காந்த் அளவுக்கு தில்லாக நடித்துத் தள்ளிய நடிகர் யாருமிலர். இப்படியானதொரு கால கட்டத்தில் ஒரே ஆண்டில் விஜய்காந்த் நடித்த இரண்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு தேவேந்திரனுக்குக் கிட்டுவதென்பது எவ்வளவு பெரிய அதிஷ்டம். அவற்றில்
ஒன்று ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் “காலையும் நீயே மாலையும் நீயே” இன்னொன்று அமீர் ஜான் இயக்கத்தில் “உழைத்து வாழ வேண்டும்”.
இசையாசிரியராகப் பள்ளியொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரனை அப்பள்ளி விழாவுக்குப் பிரதம விருந்தினராக வந்த இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. அப்பள்ளி விழாவில் தேவேந்திரன் இசைமைத்து மாணவர்கள் பாடிய பாட்டு ஆர்.சுந்தரராஜனை வசீகரிக்க, அவரும் தேவேந்திரனைத் தன் புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார். ஆனால் அந்தப் படம் அப்போது எடுக்க முடியாத சூழல் ஏற்படவே தேவேந்திரனின் அறிமுகம் “மண்ணுக்குள் வைரம்” வழியாக நிகழ்கிறது.
(தேவேந்திரன் – ஆர்.சுந்தரராஜன் சந்திப்பு குறித்த தகவல் உதவி நன்றி விக்கிப்பீடியா)
எண்பதுகளில் மாமூல் கதைகளை வைத்து இசையால் அவற்றுக்குத் தங்க முலாம் பூசி பெரு வெற்றிகளைக் குவித்தவர் ஆர்.சுந்தரராஜன். அவர் நினைத்திருந்தால் இளையராஜாவோடு சேர்ந்து இன்னொரு படம் பண்ணியிருக்கலாம். ஆனால் முன்னர் ஒரு பதிவில் நான் குறிப்பிட்டது போல அந்தக் காலகட்டத்து உச்ச இசைமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்று படத்துக்குப் படம் கலந்து கட்டி இசைக் கூட்டணி போட்டவர் ஆர்.சுந்தரராஜன். அவர் வழியாகத் தேவேந்திரன் அறிமுகம் நிகழாவிட்டாலும் ஆர்.சுந்தரராஜனின் குரு பாரதிராஜா, பாரதிராஜாவின் சிஷ்யர் மனோஜ்குமார் போன்றோரால் ஏற்கனவே
அடையாளப்படுத்தப்படுவதற்குக் காரணி ஆகி விட்டார்.
ஆர்.சுந்தரராஜன் கலந்து கொண்ட நிகழ்வில் தன் மாணவர்களுக்காக இசைத்த பாடலைச் சிறிது மாற்றம் செய்து “பொங்கியதே காதல் வெள்ளம்” என்று ஆக்கினாராம் தேவேந்திரன்.
கிராமியத் தெம்மாங்கில் “மண்ணுக்குள் வைரம்”, சாஸ்திரிய சங்கீதம் கலந்து பாடிய “வேதம் புதுது” ஆகிய படங்களுக்குப் பின்னால் இரண்டு பெரிய மசாலாப் படங்களைக் கையிலெடுக்கிறார் தேவேந்திரன்.
“காலையும் நீயே மாலையும் நீயே” இந்தப் படத்தில் விஜய்காந்த் மற்றும் பிரபு என்று இரட்டை நாயகர்கள். கூடவே விஜய்காந்துக்கு அப்போது வகை தொகையில்லாமல் ஜோடி கட்டிய ராதிகா இங்கேயும்.
“குக்கு கூ எனக் கூவும் குயிலோசை” அடடா இந்தப் பாட்டைக் கேட்டு எத்தனை வருடமாகி விட்டது உச்சுக் கொட்டுமளவுக்கு இனிய மெல்லிசை எஸ்.ஜானகி மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜோடி சேர. பாடலுக்குக் கொடுத்த இசையில் அதீத ஆர்ப்பரிப்பு இல்லாவிட்டாலும் இந்தப் பாட்டுக்குப் போட்ட மெட்டு வசீகரிக்க வைக்கிறது. அப்படியே இந்த மெட்டைத் தேவேந்திரன் ஆர்.சுந்தரராஜனுக்கு எப்படிச் சொல்லியிருப்பார் என மனதில் ஓட்டிப் பார்க்க முடிகிறது.
“வாடி என் சிட்டுக் குருவி” மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி குழு பாடியது அதிகம் பிரபலமாகாததொன்று.
ஆனால் ஜெயச்சந்திரன் மற்றும் எஸ்.ஜானகி பாடிய இந்தப் படத்தின் மூன்றாவது ஜோடிப் பாடல் “சம்மதம் சொல்ல வந்தாள்”அதகளம். அந்தக் காலத்து ரெக்கார்டிங் பார்களின் தேவ கீதமாக இந்தப் பாட்டு இருந்தது. எஸ்.ஜானகி என்ற பாடகியை மட்டும் வைத்துக் கொண்டு எஸ்.பி.பியோடு மெது வேகப் பாட்டு, மலேசியா வாசுதேவனோடு தெம்மாங்கு ரகம், ஜெயச்சந்திரனோடு மெல்லிசை என்று மூன்று முத்துகளைக் கொடுத்துத் தனி முத்திரை பதித்திருக்கிறார் தேவேந்திரன். “காலையும் நீயே” பாடல் எஸ்.ஜானகி குழுவினர் பாடியது இரண்டு பாட்டாகக் கிட்டுகிறது.
“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” பாட்டைக் கேட்டாலே எண்பதுகளின் காளையர்க்குக் கண்கள் பழுத்து விடும். பழைய காதலியை நினைத்து ஒன்றில் பாட்டைத் தேடுவார்கள் அல்லது பாட்டிலைத் தேடுவார்கள். “காலையும் நீயே மாலையும் நீயே” படத்தில் இருந்து உச்சமாக இருக்கும் ஒரு பாட்டைக் காட்டச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” https://youtu.be/3pwdEh0cyqk பாடலை நோக்கித் தாராளமாகக் கையை நீட்டலாம். இந்தப் பாடலின் மெட்டு, கே.ஜே.ஜேசுதாசின் மது தோய்த்த தளர்ந்த, விரக்தியான, சோகம் சொட்டும் ரசங்கள் காட்டும் குரலினிமை, வரிகள், அதனோடு இசைந்து பயணிக்கும் இசை என ஒரு சோகப்பாட்டை அனுபவித்துக் கேட்க முடியுமென்றால் இந்தப் பாடல் அதற்கான பரிபூரண தகுதி கொண்டது.
“அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னைத்தான்
யார்கிட்ட சொல்லி அழுவேன்” என்று முத்தாய்ப்பாய் வரும் இடம் பாடலைக் கேட்ட பின்னரும் நினைவில் பாடிக் கொண்டிருக்கும்.
“காலையும் நீயே மாலையும் நீயே” படத்தின் பாடல்களை அறிமுகம் ராஜசுந்தர், கவிஞர் வாலி மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதினார்கள்.
ரெங்கபாபு மற்றும் செல்வி ஆகிய பாடகர்கள் அறிமுகமானார்கள். ரெங்கபாபு – செல்வி தம்பதி track இல் பாடிய பாட்டு “குக்குக்கூ எனக் கூவும் குயிலோசை” இந்தப் பாட்டு இவர்களின் குரலில் தனக்குப் பிடித்தமானது என்று எனக்கு Vinyil Records தந்த அன்பர் “காலையும் நீயே மாலையும் நீயே” இசைத்தட்டைத் தன்னுடனேயே வைத்து ஆசையோடு இன்றும் கேட்டு வருகிறார்.
அனைத்துப் பாடல்களையும் கேட்க
https://youtu.be/DJx3McKzZuw
“வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம்” https://youtu.be/6i1sNyWOvTY இந்தப் பாடலை அச்சரம் பிசகாமல் பாடிய எண்பதுகளின் வாலிபக் குருத்துகளைக் கண்டிருக்கிறேன். “உழைத்து வாழ் வேண்டும்” திரைப்படத்துக்காக தேவேந்திரன் போட்ட மெட்டு இன்று முப்பது ஆண்டுகள் கடந்தும் கே.ஜே.ஜேசுதாஸ் பேர் சொல்லும் பாட்டு.
எண்பதுகளின் சோகப் பாடல்கள் அதுவும் தனிப் பாடல்கள் என்றால் கே.கே.ஜேசுதாஸ் தான் உச்சம். எப்படி இளையராஜாவுக்கு ஒரு “கனவு காணும் வாழ்க்கை யாவும்”, ரவீந்திரனுக்கு ஒரு “பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்”, எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ஒரு “ராஜ்ஜியம் தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்”, மனோஜ் – கியானுக்கு ஒரு “அழகான புள்ளி மானே” என்று இந்தச் சோகப்பட்டியலை நீட்டிக் கொண்டு போக முடிகிறதோ அங்கே கண்டிப்பாக தேவேந்திரனின் “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” பாடலும் “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” பாடலும் இருக்கும்.
உழைத்து வாழ வேண்டும் படத்திலும் விஜய்காந்துக்கு ராதிகா ஜோடி. மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத்தம்பி தயாரிக்க, அமீர்ஜான் இயக்கிய படமிது.
“முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா” https://youtu.be/-BxG0XersDU கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா ஜோடியில் பிரபலமான பாடலாக அமைந்தது.
“வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான்” https://youtu.be/EldFmSj4nwg பாடலும் எஸ்.பி.பி மற்றும் கூட்டுக் குரலோடு இனிமை சேர்த்த பாட்டு.
“பூமி என்ன பூமி” என்றொரு பாட்டு மலேசியா வாசுதேவன் குரலில் இடம் பிடித்தது. Life is funny என்றொரு போட்டிப் பாட்டு அனுராதா, எஸ்.பி.பி & குழுவினர் பாடியது கடனே என்று சேர்த்தது.
காலையும் நீயே மாலையும் நீயே மற்றும் உழைத்து வாழ வேண்டும் ஆகிய படங்களை இந்தத் தொடர் எழுதுவதற்கான ஆராய்ச்சிக்காகப் பார்த்தேன். என்னதான் திறமையான இசை வல்லுநராக இருப்பினும் திரைப்படமொன்றுக்குத் தேவையான, அதுவும் இந்த இரண்டு மசாலாப் படங்களுக்கும் உயிர் நாடியாக விளங்கும் பின்னணி இசையில் அதிகம் தேற முடியாத நிலையே தேவேந்திரன் இசையில் தென்பட்டது. இரண்டு படங்களின் மாமூல் திரைக்கதையமைப்பும் இவற்றை மீண்டும் பார்த்து ரசிக்க முடியாமல் ஆக்கி விட்டது.
‪கானா பிரபா‬
‪10.11.2017‬

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிது

மண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு தனக்குக் கிட்டுமென இசையமைப்பாளர் தேவேந்திரன் நினைத்திருப்பாரா? இன்று வரை தமிழ்த் திரையிசையில் ஒரு அழுத்தமான பதிவாக அமைந்து விட்டது “வேதம் புதிது” திரைப்படத்தின் பாடல்கள்.
கடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்குப் பின்
இயக்குநர் பாரதிராஜாவும் பாடலாசிரியர் வைரமுத்துவும் புதிய கூட்டணியை நாடிய போது அப்போது தேவேந்திரன் அறிமுகமும் சேர்ந்து கொள்கிறது. அதுவரை நிழல்கள் படம் நீங்கலாக சமுதாயப் பிரச்சனையை அதிகம் கலக்காது எடுத்து வந்த பாரதிராஜா, நாடகாசிரியர் கண்ணன் அவர்களின் “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்ற மேடை நாடகத்தைக் கையிலெடுத்து “வேதம் புதிது” ஆகத் திரை வடிவம் கொடுத்தார்.
சத்யராஜுக்கு வாழ் நாளில் பேர் சொன்ன பாத்திரங்களில் ஒன்றாக அமையவும், அழகுப் பதுமை அமலாவுக்கு நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தவும் இந்தப் படம் வகை செய்தது.
இதில் இடம் பெற்ற
“நான் கரையேறிட்டேன் நீங்க கரையேறிட்டீங்களா”
இன்று வரை புகழ் பூத்த வசனம்.
முதல் மரியாதை படத்தின் பாடல்களை விரும்பிக் கேட்ட போது மேலதிகமாக ரசிக்க வைத்தது பாடலாசிரியர் வைரமுத்து ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுக்கும் விளக்கம். அதையொட்டிய பாங்கில் வேதம் புதிது படத்தின் ஒவ்வொரு பாடல்களுக்கும் வைரமுத்துவின் அறிமுகம் கொடுக்கப்பட்டது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் “ஜாதிகள் இல்லையடி பாப்பா” பாடலைத் தவிர மீதிப் பாடல்களை வைரமுத்துவே எழுதினார்.
இளையராஜா பாசறையில் இருந்து வெளியே வந்த பாரதிராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் அந்தக் கூட்டணியை மீறிய இசைப் படைப்பைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். இசையமைப்பாளர் தேவேந்திரனுக்கோ முதல் படத்தில் கிட்டிய பெயரைத் தாண்டிய கவனமும் தன் இருப்பைத் தக்க வைக்க வேண்டிய நிலை. இவையெல்லாம் சேர்ந்து “வேதம் புதிது” பாடல்கள் ஒவ்வொன்றையும் செதுக்க வேண்டிய தேவை இருந்ததை அவை ஒவ்வொன்றையும் கேட்டுச் சுவைக்கும் போது உணரலாம்.
எடுத்த எடுப்பிலேயே “சந்திக்கத் துடித்தேன் பொன் மானே” பாடலைத் தான் சொல்வேன். எவ்வளவு அமைதியாகக் காதலின் ஆழம் பேசும் பாட்டு இது.
ஆனால் துரதிஷ்டவசமாக இந்தப் படத்தில் இடம் பெறாது போனதால் பரவலாகப் போய்ச் சேராத அரிய சரக்கு இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஜோடி கட்டும் இந்தப் பாட்டு “மந்திரம் சொன்னேன் வந்து விடு” பாடலுக்குப் பதிலீடாக முந்திப் பிரசவித்திருக்குமோ?
“கண்ணுக்குள் நூறு நிலவா இதுவொரு கனவா”
https://youtu.be/QqKA8pgY4S4
நூறு இடைக்காலப் பாடல்களைப் பட்டியல் போடச் சொன்னால் எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடிய இது முந்திக் கொள்ளும் தரவரிசையில் இருக்குமளவுக்கு ரசிகர் நெஞ்சில் இடம் பிடித்தது. சில பாடல்களுக்குத் தான் அந்தப் பாடல்கள் பிறந்த போது வாழ்ந்த தலைமுறை தாண்டி முந்திய, பிந்திய தலைமுறைகளும் நேசிக்க வைக்கும் கொடுப்பினை இருக்கும். அந்த மாதிரிப் பாடல்களில் இதுவுமொன்று. குருவைப் போற்றும் “ஓம் சஹனா வவது” உப நிஷதமும் “அம்பா சாம்பவி” இராஜராஜேஷ்வரி அட்டகமும்
கலந்து கொடுக்கும் புதுமையை காதல் பாடலுக்குள் உறுத்தல் இல்லாமல் செய்து காட்டினார் தேவேந்திரன்.
“பூவே பெண் பூவே இதிலென்ன ரகசியம்” என்று கூட்டுக் குரல்கள் ஒலிக்கு முன் துள்ளியோடும் இசைப் பிரவாகம் கொடுத்திருப்பார் பாருங்கள் ஆஹா 😍
இந்த மாதிரியான சோதனை முயற்சிகளில் நிரம்பிய இசைஞானமும் ஜனரஞ்சகப் படைப்புக்கான அடிப்படையும் அறிந்திருக்க வேண்டும். தேவேந்திரனின் முத்திரைப் பாட்டு என்னுமளவுக்கு இசையிலும் திறன் காட்டியிருப்பார் இதில்.
அந்தக் காலத்துக் காதலர் கைக்குட்டையைக் காதல் வாகனமாக்க ஏதுவானது.
“என்னென்ன தடை வந்த போதும் காதல் இறப்பதில்லை” என்று வரும் கணத்தில் உடைந்து அழுகை வரும். அவ்வளவு உணர்வு பூர்வமான பாட்டு “புத்தம் புது ஓலை வரும்”
https://youtu.be/gz3N2MlwqTo
காதலனைத் தேடும் அந்த எதிர்பார்ப்பு பாடலின் முகப்பு இசையிலேயே அப்பட்டமாகத் தொனிக்கும்.
இந்தப் பாட்டு வரிகளில் தொனிக்கும், எதிர்பார்ப்புடன் கூடிய அவ நம்பிக்கையை அப்படியே சித்ரா குரல் பிரதிபலிக்கும். உதாரணமாக “கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கிக் காலம் கழித்திருப்பேன்” என்று வரும் போது வரும் எதிர்பார்ப்பு “தேவனே காத்திருப்பேன் தீயிலே பூத்திருபேன்” எனும் போது தொய்ந்து விடும்.
எண்பதுகளின் இளைஞர் சமுதாயம் வாழ்க்கை வெறுத்துப் போய்க் கேட்ட பாடல்கள் எவை என்று
பழைய ரெக்கோர்டிங் பார் வைத்தவரிடம் கேட்டால் அவர் கொடுக்கும் பட்டியலில்
“மாட்டு வண்டிச் சாலையிலே”
https://youtu.be/bIQ6VayXKBc
பாடலும் இருக்கும். பாரதிராஜாவின் ராசியான பாடகர் மலேசியா வாசுதேவனின் சோக கீதம் இது. கூட்டுக் குரல்களை (chorus) வெகு அழகாகப் பயன்படுத்தும் வித்தை கற்றவர். கண்ணுக்குள் நூறு நிலவா பாடலில் எப்படிக் காதலர் கொண்டாட்டத்துக்கான கூட்டுக் குரல்களாக இயங்கினவோ அவையே இங்கு
“காட்டு மரங்களெல்லாம் கை நீட்டி அழைக்குது
மாட்டுச் சலங்கையெல்லாம் மகளோட அழுகுது”
என்றும்
“சின்னக் கிளியிரண்டும் செய்து விட்ட பாவம் என்ன
அன்பைக் கொன்று விட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன”
என்றும் உடைந்து போய் நலிந்த குரலாய் ஒலிக்கின்றன.
எல்லோரும் “கண்ணுக்குள் நூறு நிலவா” பாடலில் மையல் கொண்டிருக்க எனக்கோ “மந்திரம் சொன்னேன் வந்து விடு” https://youtu.be/1BcgCp5mAag
பாடல் மேல் மையல் கொண்ட “மனோ”பாவத்தில் இருந்தேன். இன்றும் கூட “கண்மணி உனக்கொன்று தெரியுமா” என்று குழைந்து பாடுவது தான் நெஞ்சில் மனோரஞ்சிதமாக இருக்கும்.
மனோ, எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் பாட்டு இது.
தேவேந்திரனுக்கு சுதந்தரமாக ஆசைக்கு ஒரு காதல் பாட்டை இசைக்க விட்டு விட்டுக் காத்திருந்தது போல இருக்கும்.
இந்தப் பாட்டு பாரதிராஜா படங்களுக்கே உரித்தான முத்திரைக் கைதட்டலோடு நிறைவுறும்.
அண்மைய வருடமொன்றில் “இளையராஜாவை விட தேவேந்திரன் திறமைசாலி” என்று சொன்ன பாரதிராஜாவே “வேதம் புதிது” படத்துக்குப் பின் தேவேந்திரனை நாடவில்லை.
ஆனால் இது தோல்விப் படமாக இருக்கும் உணர்ந்த சந்தர்ப்பங்களில் கூட இளையராஜா அதைக் குறிப்பிட்டு விட்டு பாரதிராஜாவுக்குக் குறை வைக்காது உயரிய பாடல்களைக் கொடுத்து வந்தவர்.
வேதம் புதிது படத்தின் பாடல்கள் அந்தப் படைப்பின் மேன்மையை இன்னும் உயர்த்த வழி கோலிய வகையில் கச்சிதமாக அமைந்தன, இன்று வரை இதற்கு இசை இளையராஜா தான் என்று கண் மூடித்தனமாகச் சொல்லும் அளவுக்கு.
வேதம் புதிது படத்தின் பாடல்களைத் துல்லிய ஒலித்தரத்தில் கேட்க
https://youtu.be/rFn9xzCTXY4

இசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் படப் பாடல்கள் 🌴🎼🍂

கடலோரக் கவிதைகள் மூலமாக மாறுபட்டதொரு நாயகனாக (அதற்கு முன் சாவி படத்தில் வில்லத்தனமான நாயகனாக அறிமுகமாகியிருந்தாலும்) சத்யராஜ் தோன்றி நடித்த போது லட்டு மாதிரி அவருக்கு இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் கிட்டின. தொடர்ந்து ஃபாசில், P.வாசு, கே.சுபாஷ் போன்றோர் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படங்களிலெல்லாம் பாடல்களும் கொண்டாட்டமாக அமைந்தன. அவற்றில தேர்ந்தெடுத்த சில பாடல்களைக் கொடுக்கலாமென்ற சிறு முயற்சி இது.
1. கொடியிலே மல்லியப்பூ – கடலோரக் கவிதைகள்
https://youtu.be/FpmF6tlh_EM
2. ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே – வாத்தியார் வீட்டுப் பிள்ளை
https://soundcloud.com/user-87798232/oru-poonjolai
3. வருது வருது இளங்காற்று – பிரம்மா
https://youtu.be/1mu7GSL28-s
4. தேவ மல்லிகைப் பூவே பூவே – நடிகன்
https://youtu.be/buIZPSquXhQ
5. வைகை நதியோரம் – ரிக்‌ஷா மாமா
https://youtu.be/DyLmOjmkdaE
6. உன்னையும் என்னையும் – ஆளப் பிறந்தவன்
https://youtu.be/xy5Q6hY22GM
7. சின்னக் கண்ணா புன்னகை மன்னா – மகுடம்
https://youtu.be/rqVG6g-aZQE
8. நான் காதலில் புதுப் பாடகன் – மந்திரப் புன்னகை
(சுரேஷ் & நதியாவுக்கான காட்சிப் பாடல்)
https://youtu.be/h_KyeF4bBPk
9. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)
https://youtu.be/FBMF84iEQRA
10. காதல் கிளியே – ஜல்லிக்கட்டு
https://youtu.be/m6ZnMo0Gukc
11. பூவும் தென்றல் காற்றும் இங்கு ஊடல் கொள்ளலாமோ – பிக் பாக்கெட்
https://youtu.be/XQMIp-JfZ2s
12. பூங்காற்றே இங்கே வந்து – வால்டர் வெற்றிவேல்
https://youtu.be/uFcjs0gMPWc
13. அம்மன் கோயில் வாசலிலே – திருமதி பழனிச்சாமி
https://youtu.be/W1s-psCIV1E
14. பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா – சின்னப்பதாஸ்
https://youtu.be/OvZAj6BZ2lQ
15. மனசுக்குள்ள நாயனச் சத்தம் நான் கேட்டேன் – மல்லுவேட்டி மைனர் 
https://youtu.be/XxTypFUSarI
16. சொல்லி விடு வெள்ளி நிலவே – அமைதிப்படை
https://youtu.be/oUubntzTsBc
17. நன்றி சொல்லவே உனக்கு – உடன் பிறப்பு
https://soundcloud.com/lanka-srithar/movie-udan-pirapu-nandri-sollave-unakku
மேலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான “தங்கமே எங்க கொங்கு நாட்டுக்குச் சிங்கமா வந்த தேனே” பாடல் இடம் பிடித்த “மதுரை வீரன் எங்க சாமி” படத்தோடு கட்டளை, பங்காளி, பொண்ணு வீட்டுக்காரன் போன்ற படங்கள் இசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் நாயகனாக நடித்த படங்கள்.

P.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️

P.B.ஶ்ரீனிவாஸ் என்ற பாடகரே இல்லாதவொரு உலகம் எப்படியிருந்திருக்கும்? தீராத் தாகம் கொண்ட ஒருவன் பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட நிலை போல என்றே அதை எடுத்துக் கொள்வேன். 
P.B.ஶ்ரீனிவாஸ் அற்புதமான பாடகர், மெல்லிசைக் குரலில் அடித்துக் கொள்ள அவரை விட்டால் ஆளே இல்லை, ஜெமினி கணேசனுக்கு இவர் பாடினால் அச்சொட்டாக அமைந்து விடும், தமிழில் மட்டுமா? கன்னடத்தில் இன்றும் கோயில் கட்டாத குறையாகக் கொண்டாடி வருகிறார்களே என்றெல்லாம் புகழ்மாலை சூட்டலாம். ஆனால் இவையெல்லாம் கடந்து ஆத்மார்த்தமாக மனசுக்குள் ஊடுருவும் குரல் அல்லது எமது மனம் பேசினால் அது எந்தவிதமான ஆற்றுப்படுத்தலை உண்டு பண்ணுமோ அப்படியொரு மகா சக்தி இந்தக் குரலில் இருக்கிறது அது தான் முன்னது எல்லாம் கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனாலும் இதையே அவரின் சாகித்தியத்துக்கான ஆகச் சிறந்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள முடியும்.
“வாடி நின்றால் ஓடுவதில்லை” என்று ஒரு அடியை எடுத்துக் கொடுக்கிறார் மனம் சொல்கிறது 
“இல்லை இதை என்னால் ஏற்க முடியவில்லை இன்னும் மனம் சஞ்சலம் கொள்கிறது தாங்கெணாத் துன்பம் மேலெடுகிறது” 
இதோ அடுத்த கணமே அதே அடியை இன்னும் கனிவாக எடுத்துக் கொடுக்கிறார் அதுவே முதுகில் வருடி ஆறுதல் சொல்லுமாற் போல 
“வாடி நின்றால் ஓடுவதில்லை” 
அழுது ஆறுதல் கொள்கிறது மனம். மயக்கமா கலக்கமா? இனி அது வருமா? ஏழை மனதை மாளிகையாக்குகிறது அந்த இரண்டு நிமிடம் 41 விநாடிகள் ஒலிக்கும் பாட்டு 
https://youtu.be/KrnntpGzTy4
தாங்கெணாத் துன்பத்தில் துவண்டு போயிருப்பவன் ஆழ்கடலில் சிக்கித் தனக்கொரு துடுப்பு கிட்டாதா என்று ஆறுதல் தேடும் போது ஆதரவாய் நாலு வார்த்தை பேசாத நண்பன், உற்றார், உறவினர் இன்ன பிறவெல்லாம் கடந்து இந்த ஶ்ரீனிவாஸ் குரல் இங்கே வா அதை நான் தருகிறேன் என்றழைக்கும்.
தூக்கமற்ற பின்னிரவுகளில் ஆறுதல் தேடி வானொலிப் பெட்டியைக் காதுக்கருகே வைத்திருந்தவர்கள் முகமறியாது அவர் உளமறிந்து அதிகாலை ஒன்று இரண்டு, மணிக்கெல்லாம் 
P.B.ஶ்ரீனிவாஸை துணைக்கழைப்பேன். அப்போது அவர் “தேவி ஶ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே ” https://youtu.be/xYOUZeTMwjM
என்று பாடி விட்டுப் போவார்.
காதலியின் கரு வளையக் கண்மணியை வைத்த கண் வாங்காது பார்ப்பது போன்ற சுகம் தர வல்லது ஏகாந்த இரவின் நிறத்தைத் தனிமையில் அனுபவிப்பது. அந்த நேரத்தில் எழும் பாட்டு இப்படியிருக்குமோவென ஒலிபரப்புவேன் இதை, 
“தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது”
https://youtu.be/o7ghy77qPNk
அதன் பின்னால் வரும் 
“மெளனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்”
https://youtu.be/-uUZo5GPhwM
அந்தரத்தில் தவிக்கும் மனசு உள்ளே புழுங்கும் ஆற்றாமையை அணை போட்டு நிலவை அவளாக உருவகப்படுத்தி நிராசையாக்கிப் பாடும் அவனின் உள் மனப் போராட்டம் இத்தனை யுகங்கள் கடந்தும் இன்றைய காதலர் நெஞ்சிலும் நிலைத்திருக்கும்
“நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை”
https://youtu.be/F0xW0-EfOrQ
“உங்கள் சனங்களின் மன உறுதியைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது” என்றார் தமிழகத்து நண்பர் ஒருவர்.
“ஏன்” என்று கேட்டேன் சிரித்துக் கொண்டு
“ஒரு தலைமுறையையே எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரேயொரு குடும்பத்தை எடுத்துப் பாருங்கள் இந்த நாற்பது ஆண்டுகளில் எத்தனை இடப் பெயர்வுகளை அந்த மனிதன் சந்தித்திருப்பான்?
அதையும் விடுங்கள், இதோ ஒரு சில நிமிடங்களுக்கு முன் தன் முன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த தகப்பனை, தாயை, உடன் பிறந்தவரை, மகனை, மகளை சட்டென்று வந்து குண்டு போட்டு விட்ட வானூர்திக்கோ, பாய்ந்து வந்த ஷெல்லடிக்கோ தின்னக் கொடுத்து விட்டு, ஒரு சொட்டுக் கண்ணீர் தானும் அந்த இடத்தில் விட முடியாது செங்குருதியை வழித்துத் துடைத்து விட்டு, தன்னைச் சுற்றி இருப்பவர் உயிர் நாடி பார்த்து அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுகிறானே அவனைப் பாருங்கள், ஒரு ஆண்டுக்குள்ளேயே தன்னைப் புதுப்பித்து விட்டு 
தன் உரிமைக்காகப் போராட வருகிறானே அவனைப் பாருங்கள்
என்னால் முடியாதய்யா உங்கள் சனங்கள் மாதிரி வாழ, அந்த இடத்தில் தற்கொலை செய்திருப்பேன்” என்றார்.
அவருக்கு நான் என்ன சொன்னாலும் அது இந்த ஒற்றைப் பாடலின் மொழி பெயர்ப்பாகத் தான் இருக்கும்.
“தோல்வி நிலையென நினைத்தால்  மனிதன் வாழ்வை நினைக்கலாமா?”
https://soundcloud.com/manimekalai-tamil/tholvi-nilyena-ninaithaal
தம் உரிமைக்காகப் போராடும் ஈழத்துச் சகோதரர்களை மனதில் நினைத்தே இதை எழுதினேன் என்றார் ஆபாவாணன் நான் கண்ட வானொலிப் பேட்டியில். ஆபாவாணனோடு P.B.ஶ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் வந்த காலத்தில் போராட்டக் களத்திலும் 
முப்பது வருடங்கள் கடந்து முள்ளி வாய்க்காலிலும் முள்வேலி முகாம்களிலும் யாரோ ஒருவரின் மன உறுதியின் முணு முணுப்பாயும் ஆகுமென்று அவர் அப்போது அறிந்திருப்பாரா? “தோல்வி நிலையென நினைத்தால்” ஐ சுவீகாரம் எடுத்துக் கொண்டது ஈழம்.
இன்று எண்பத்தேழு வயது காணும் P.B.ஶ்ரீனிவாஸ் ஐயா என்றும் நீங்கள் எங்களோடு உயிர்த்திருப்பீர்.

இசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் – மண்ணுக்குள் வைரம் 🌴🍂

மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்? அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது. 
எண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை. 
 
இன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின. 
இயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான “மண்ணுக்குள் வைரம்” படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.
வண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். “பாராமல் பார்த்த நெஞ்சம்” பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம் 
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.
“ஏ சம்பா நாத்து சாரக்காத்து” https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் “காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு” என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.
இசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது “இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்” என்று பாட ஆரம்பித்து விட்டார்.
எவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா?
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் “இதழோடு” என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது “மடி மீதூஊஊ” என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.
பாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.
“இதழில் கதை எழுதும் நேரமிது” என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே “இதழோடு இதழ் சேரும்” என்று.
திரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது “முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே
மலைத் தேனே” பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு. 
“முத்து சிரித்தது முல்லை வெடித்தது” என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக
 “ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே
புதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே” என மாறும்.
ஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..
“பொங்கியதே காதல் வெள்ளம்” ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே  குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். “சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது”
பாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.
பாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.
பாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக “கிழக்கு வெளுத்திருச்சு” பாடல் அமைந்திருக்கிறது.
இந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.
தேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்
இதழோடு இதழ் சேரும் நேரம் 
https://youtu.be/fu6Y3uqwlts
முத்து சிரித்தது
https://youtu.be/qoqC8_UNk0o
பொங்கியதே காதல் வெள்ளம்
https://youtu.be/UzLJVdNeMUQ
கிழக்கு வெளுத்திருச்சு
https://youtu.be/CyIEch5p4ys
ஜாதி மல்லிகையே
https://youtu.be/VIFF3QFAv0o
ஆத்தா மாரியாத்தா
https://youtu.be/VU83xs5wGdc
கானா பிரபா
08.09.17

#தமிழ்த்திரைஅரசர்கள் #தேவேந்திரன் 

இசைப் பயணம் – மண்ணுக்குள் வைரம் 🌴🍂
மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்? அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது. 
எண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை. 
 
இன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின. 
இயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான “மண்ணுக்குள் வைரம்” படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.
வண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். “பாராமல் பார்த்த நெஞ்சம்” பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம் 
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.
“ஏ சம்பா நாத்து சாரக்காத்து” https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் “காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு” என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.
இசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது “இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்” என்று பாட ஆரம்பித்து விட்டார்.
எவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா?
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் “இதழோடு” என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது “மடி மீதூஊஊ” என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.
பாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.
“இதழில் கதை எழுதும் நேரமிது” என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே “இதழோடு இதழ் சேரும்” என்று.
திரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது “முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே
மலைத் தேனே” பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு. 
“முத்து சிரித்தது முல்லை வெடித்தது” என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக
 “ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே
புதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே” என மாறும்.
ஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..
“பொங்கியதே காதல் வெள்ளம்” ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே  குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். “சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது”
பாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.
பாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.
பாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக “கிழக்கு வெளுத்திருச்சு” பாடல் அமைந்திருக்கிறது.
இந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.
தேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்
இதழோடு இதழ் சேரும் நேரம் 
https://youtu.be/fu6Y3uqwlts
முத்து சிரித்தது
https://youtu.be/qoqC8_UNk0o
பொங்கியதே காதல் வெள்ளம்
https://youtu.be/UzLJVdNeMUQ
கிழக்கு வெளுத்திருச்சு
https://youtu.be/CyIEch5p4ys
ஜாதி மல்லிகையே
https://youtu.be/VIFF3QFAv0o
ஆத்தா மாரியாத்தா
https://youtu.be/VU83xs5wGdc
கானா பிரபா
08.09.17
#தமிழ்த்திரைஅரசர்கள் #தேவேந்திரன்

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) – அறிமுகம் 🎸

“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க
 தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க” https://youtu.be/5TZ6afX_ZJ8
ஏதோவொரு பண்பலை வானொலியோ அல்லது என் ஊர் போகும் பஸ்வண்டியோ இந்தக் கணம் எடுத்து வரக் கூடும் இதை. தொண்ணூறுகளின் சுகந்தமாகப் பரவிய இந்தப் பாட்டு இலங்கையின் பண்பலை வானொலிகளால் இன்றும் மெச்சப்பட்டு வானலையில் தவழவிடப்படுகிறது. “புதிய தென்றல்” படத்துக்காக இடம்பெற்ற பாடல் என்ற அடையாளத்துடன் தொக்கி நின்று விடுகிறது.
சிலவேளை ஆர்வக்கோளாறு ஒலிபரப்பாளர்களால் தேனிசைத் தென்றல் தேவா என்றோ சந்திரபோஸ் என்றோ இல்லை இசைஞானி இளையராஜா என்றோ கற்பிதம் செய்து அறிவிக்கப்படுவதுமுண்டு.
ஆனால் இந்தப் பாடலைப் பிரசவித்த ரவி தேவேந்திரன் என்ற அற்புதமான இசையமைப்பாளர் அடையாளம் மறைக்கப்பட்டு விடும். இந்த மாதிரியான மழுங்கடிப்பை இந்த ரவி தேவேந்திரன் “வேதம் புதிது” காலத்தில் “தேவேந்திரன்” ஆக இருந்த காலத்திலும் அனுபவித்திருக்கிறார். அண்மையில் கூட ஒரு வானொலி “கண்ணுக்குள் நூறு நிலவா” வை இளையராஜாவுக்கு எழுதி வைத்திருந்தது. ராமர் அணைக்கு அணில் போல என்னால் இயன்ற அளவுக்கு ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனை எழுத்துச் சிறைக்குள் அடக்கி வைக்கும் பணியில் இந்தக் குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன்.
ஒரு இயக்குநர் பாசறையில் குரு பாரதிராஜா முதல் சிஷ்யர்கள் மனோஜ்குமார், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என்று ஒரே இசையமைப்பாளருடன் சம காலத்தில் அல்லது குறுகிய கால இடைவெளியில் பணியாற்றும் அபூர்வம் நிகழ்த்தப்பட்டது இளையராஜாவுக்குப் பின் தேவேந்திரனுடன் தான்.
அது மட்டுமா 1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை கார்த்திகை 27 தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் “பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே” பாடலைத் தவற விட்டிருக்குமா ஈழம் கடந்த தமிழுலகம்? அங்கேயும் தேவேந்திரன் இருக்கிறார். இவையெல்லாம் குறித்து விரித்துச் சொல்லவே இத்தொடர்.
மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்? அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது அந்த வாய்ப்பை எப்படி அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதைத் தொடரப் போகும் முதல் பாகத்தில் பார்ப்போம்.
– கானா பிரபா – 
(தொடரும்)
#தமிழ்த்திரையிசைஅரசர்கள் #தேவேந்திரன்