நீங்கள் கேட்டவை 11

வழக்கம் போல் நீங்கள் கேட்டவை 11 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பதிவிலும் உங்களில் பலர் வித்தியாசமான ரசனைகளோடு இனிய பாடல்களைக் கேட்டிருக்கின்றார்கள்.

பெப்சி உமா பாணியில் இந்த நிகழ்ச்சியின் தாரக மந்திரமான “கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க”, இந்த வாட்டி உங்க பாட்டு கிடைக்காவிட்டாலும் அடுத்த பதிவில் உங்க விருப்பம் நிறைவேறும் எனவே தொடர்ந்து முயற்சி பண்ணுங்கன்னு சொல்லி வச்சு இன்றைய
நீங்கள் கேட்டவை பாடல்களைப் பார்ப்போம் ;-))

1. முதலாவது பாடலை சுதர்சன் கோபால் விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடல் இடம்பெற்ற படம் “நண்டு”. இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் ” அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா” என்ற அருமையான இந்தப் பாடலைப் பாடியிருக்கின்றார். இதே பாடலும் சர்வே புயல் சர்வேசனும் முன்னர் விரும்பிக் கேட்டிருக்கின்றார்.

2. அடுத்த பாடலான “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா” என்ற இனிய பாடலை மதி கந்தசாமி விரும்பிக் கேட்கின்றார். பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம், சந்தியா பாடியிருக்கின்றார்கள். இசை: கீரவாணி என்ற மரகதமணி

3. சினேகிதனின் விருப்பமாக “உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்” திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா, இளையராஜா இசையில் “என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட” என்ற பாடல் வருகின்றது.

அடுத்து ஜி.ராகவன் விரும்பிக்கேட்ட இரு பாடல்கள் இடம்பெறுகின்றன

4. “கொஞ்சம் நேரம் என்னை மறந்தேன்” என்ற பாடலை ரி.எம்.செளந்தரராஜன் , எஸ். ஜானகி பாட எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கின்றார். பாடல் இடம்பெற்ற திரைப்படம் “சிரித்து வாழ வேண்டும்”

5. ” இது மாலை நேரத்து மயக்கம்” என்ற “தரிசனம்” திரைப்பாடலை, ரி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் சூலமங்களம் ராஜலஷ்மி இசையில் பாடுகின்றார்கள்.

ஹெலன் கெல்லர் – தன்னம்பிக்கையின் பிறந்த நாள்


” இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடு தான் படைத்திருக்கின்றார். அதை என்றாவது ஒரு நாள் நான் உணர்வேன். அப்போது நான் அது குறித்து மகிழ்வேன்”
என்றார் ஹெலன் கெல்லர்.

யாரிந்த ஹெலன் கெல்லர்?

கண் பார்வையற்ற, பேச்சுத் திறன் இழந்த, காது கேளாத ஒரு பெண்மணி, ஊனமுற்ற பலரின் வாழ்வில் ஒளிவிளக்காய் மாறினார்.
ஜூன் 27, 1880 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மானிலத்தில் பிறந்து ஜீன் 1, 1968 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரைக்கும் ஊனமுற்ற மனிதர்களின் வாழ்வுக்காகப் போராடினார், இறந்த பின்னும் அவர் பெயரில் பணி தொடர்கின்றது. அவர் தான் ஹெலன் கெல்லர்.

இன்று ஜூன் 27, தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாய் விளங்கும் ஹெலன் கெல்லரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து ” கை அருகே வானம்” என்ற ஒலிச்சித்திரத்தைத் தயாரித்து வழங்குகின்றேன். கேளுங்கள்.
இந்த நிகழ்ச்சி இன்றிரவு 10 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ” நிலா முற்றம்” நிகழ்ச்சியின் முதற்பாகமாகவும் அரங்கேறுகின்றது.

ஓளிஓவியன் ஜீவா நினைவாக

2002 ஆம் ஆண்டு பெங்களூர் விமான நிலையத்தில் அடுத்த விமானம் ஏறுவதற்கான தரிப்பில் காத்திருக்கின்றேன். ஏதோ யோசனையில் இருந்த என் கவனத்தைத் திருப்பியது கடந்து போன மூன்று உருவங்கள். அவர்கள் யாரென்பதை ஜீரணிக்கு முன்பே விறுவிறுவென்று போய்க்கொண்டிருந்தார்கள். அதே இடத்தில் நின்று கொண்டு பார்க்கின்றேன். அவர்கள் யாரென இப்போது தெரிகின்றது, மலையாள இயக்குனர் பிரியதர்ஷன், நடிகர் மோகன்லால், அடுத்தது ஒளிப்பதிவாளர் ஜீவா.

புகைப்படம் பிடிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்து பின், தனது அக்காவின் கணவர் வசந்த் வீட்டில் அடைக்கலமாகி சினிமாத் தொழிற்சாலைக்குள் நுளைந்த கதையை முன்பொருமுறை ஜீவா ஆனந்த விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார். இவரது ஒளிப்பதிவில் ஷங்கரின் இயக்கத்தில் “ஜெண்டில் மேன்” படம் வந்த அந்தக்காலத்தில் ஷங்கரின் இயக்கத்தோடு ஜீவாவின் ஒளிப்பதிவையும் பாராட்டிப் பத்திரிகைகள் எழுதியிருந்தன.

ஜீவாவின் ஒளிப்பதிவில் ஒரு Richness இருக்கும், கூடவே அதிகாலைப் பனிப்புகார் கொடுக்கும் ரம்யமும் கலந்திருக்கும்.”ரன்” போன்ற படங்களில் இவரின் ஒளிப்பதிவு கொடுத்த மேலதிக தங்கமூலாம் பார்த்து அனுபவித்தவர்களுக்குப் புரியும்.

12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, ரன் (ஹிந்தி வடிவம்), என்று இன்றைய இளைஞரின் நாடித்துடிப்பைத் தன் படங்களில் கொண்டுவந்தவர்.

தவறவிடப்பட்ட பஸ் போன்று வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத மாற்றங்களை இரு கோணங்களில் 12B படத்தில் காட்டியிருப்பார்.

ஒரு பணக்காரத்தனமான கல்லூரி வாழ்க்கையையும், நண்பர் குழாமைச் சுற்றிய நிகழ்வுகளையும் “உள்ளம் கேட்குமே” படத்தில் காட்டியிருந்தாலும், அந்த இளைஞர்களின் ஏக்கங்கள், குணாதிசியங்கள் எல்லாத்தரப்பு இளைஞருக்கும் பொருந்தக்கூடியவை.

காதல் என்பது ஒரு முறை தான் பூக்க வேண்டுமா? காதலித்த குற்றத்திற்காக சதா ஊடலே வாழ்க்கையா? ஊடல் என்பது ஊறுகாய் போல இருக்கவேண்டும், அதுவே சாப்பாடாகிவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக வந்தது இவரின் சமீபத்தியதும் இறுதியானதுமான “உன்னாலே உன்னாலே” திரைப்படம்.

கவிஞரும், இசையமைப்பாளரும் கஷ்டப்பட்டுக் கோர்க்கும் பாடலைக் கண் முன் கவியழகாகத் தரும் ஒளிஓவியர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு. ஹாரிஸ் ஜெயராஜின் இனிய பாடல்களோடு, அப்பாடல் காட்சிகளாகப் போட்டி போடும் ஜீவாவின் ஒளிப்பதிவு நல்ல உதாரணம்.

தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமே ஒரு நல்ல தொழில்நுட்பக் கலைஞனை இன்று இழந்திருக்கின்றது.

மறைந்த ஜீவா நினைவாக அவரின் திரைத்துளிகள்

“12B” திரையில் பாடற் காட்சி

“உள்ளம் கேட்குமே”திரையில் கல்லூரிக் காட்சி

“உன்னாலே உன்னாலே” திரையில் சுவாரஸ்யமான காட்சி

ஜீவா ஒளிப்பதிவில் “ரன்” திரைப்பாடல்

பத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது மற்றும், தமிழிசைச் சங்கத்தின் “இசைப் பேரறிஞர்” பட்டத்தைப் பெற்றவருமாகிய இசை மேதை T.N சேஷகோபாலன் அவர்கள் இரு வாரங்களுக்கு முன் சிட்னி, அவுஸ்திரேலியா வந்த போது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் நானும், என்னோடு இணைந்து சங்கீத ரசிகர் திரு உமாசங்கர் இருவருமாகக் கண்ட ஒலிப்பேட்டியின் இரு பாகங்கள் இன்றைய பதிவில் இடம்பெறுகின்றன.

இதில் சேஷகோபாலனின் கர்நாடக சங்கீதப் பயணத்தின் ஆரம்பம் முதல் முக்கிய சில நிகழ்வுகள், தோடி ராகம் திரைப்படத்தில் நடித்த அனுபவம், கூடவே “எந்தரோ மகானு” பாடலோடு நிறைவு பெறுகின்றது இப்பேட்டி.

பாகம் 1

பாகம் 2

சேஷகோபாலன் அவர்கள், ஆத்மா திரைப்படத்திற்காக , இசைஞானி இளையராஜா இசையில் பாடிய “இன்னருள்” என்ற இனிய பாடல்.

நீங்கள் கேட்டவை 10

இன்றைய நீங்கள் கேட்டவை 10 பதிவில் பல நேயர்களின் விருப்பத்தேர்வோடு மலர்கின்றது.
பாடல்களைக் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாது உங்கள் விருப்பப்பாடல்களையும் நீங்கள் அறியத் தந்தால் அவை எதிர்வரும் காலங்களில் இடம்பெறும்.

இன்றைய நீங்கள் கேட்டவை 10 பகுதியில் பாடல்களைக் கேட்ட நேயர்களும் பாடல்களும் இதோ:

1. பொன்ஸ்ஸின் விருப்பமாக “தெய்வத்தின் தெய்வம்” திரைப்படத்தில் இருந்து பி.சுசீலா பாடிய “நீ இல்லாத உலகத்திலே என்ற பாடல். பாடலுக்கான இசை: ஜி.ராமநாதன்

2. வல்லி சிம்ஹனின் விருப்பமாக “வசந்த முல்லைப் போலே வந்து” என்ற பாடல் “சாரங்கதாரா” திரைக்காக டி.எம்.செளந்தரராஜன் பாடுகின்றார். பாடல் இசை: ஜி.ராமநாதன்

3. இந்து மகேஷின் விருப்பமாக கே.வி.மகாதேவன் இசையில் “நாலு வேலி நிலம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊரார் உறங்கையிலே” என்ற பாடல், திருச்சி லோகநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒலிக்கின்றது.

4. நக்கீரனின் விருப்பமாக “தென்றல் காற்றே” என்ற பாடல் மனோ, ஜானகி பாட, இளையராஜாவின் இசையில் “கும்பக்கரைத் தங்கையா” திரைக்காக இடம்பெறுகின்றது.

5. மழை ஷ்ரேயாவின் விருப்பத் தேர்வில் “கற்பூர முல்லை ஒன்று” என்ற பாடலை சித்ரா, இளையராஜாவின் இசையில் “கற்பூரமுல்லை” திரைப்படத்திற்காகப் பாடுகின்றார்.

ஆத்தாடி ஏதோ ஆசைகள் – மூன்று மொழிகளில்

80 களின் இறுதியில் தெலுங்கு தேசத்திலிருந்து ஏராளமான படங்கள் தமிழில் வெளியாகி நன்றாக ஓடி திருட்டு வீ.சி.டிக்கு நிகராக தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களுக்குத் தலைவலி தந்த காலமது.
விஜயசாந்தியின் “பூவொன்று புயலானது”, டாக்டர் ராஜசேகரின் “இதுதாண்டா போலீஸ்”, நாகர்ஜூனாவின் ” உதயம்”, “இதயத்தைத் திருடாதே” என்று தொடர்ந்து
“எங்கடா உங்க எம்.எல்.ஏ”, “ஆம்பள”, “சத்தியமா நான் காவல்காரன்” என்று தமிழ் ரசிகர்களின் பொறுமைக்குச் சோதனை கொடுத்தது வேறு கதை. ஒன்றில் அதி தீவிர சண்டைக் காட்சிகள், அல்லது இளையராஜாவின் இசை இவை தான் இந்த மொழிமாற்றுப் படங்களின் வெற்றியை அப்போது தீர்மானித்தன.

அந்தவகையில் தமிழ் பேசக்கூடிய தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் ரேவதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்த, வெங்கடேஷின் அப்பா ராமா நாயுடுவே முதலீடு போட்ட தெலுங்கு திரைப்படமான “பிரேமா” இளையராஜாவின் இசையில் முத்திரை பதித்தது. பின்னர் அது தமிழில் “அன்புச் சின்னம்” என்று மொழிமாற்றப்பட்டும் ஹிந்தியில் “Love” என்று மீள சல்மான் கான், ரேவதி ஜோடியோடு எடுக்கப்பட்டும் வெளியாகின. தமிழ், தெலுங்குக்கு ராஜாவின் இசையே இருந்தது. தெலுங்கியில் எஸ்.பி.பி ஐ வைத்து அழகான பாடல்கள் இருக்கும். அதில் “ஈ நாடே” என்ற பாடல் குறிப்பிடத்தக்கது. சித்ராவும் பாலுவும் பாடிய சிறந்த ஜோடிப்பாடல்களில் இதையும் அடித்துச் சொல்லலாம். பாடலைக் கேட்க

இந்தப்பாடலைத் தமிழாக்கும் போது தமிழில் மனோ பாடியிருப்பார், தெலுங்கில் பாலுவோடு ஜோடி சேர்ந்த சித்ரா தான் தமிழுக்கும். இந்தப் படத்தில் “யூ ஆர் மை ஹீரோ” என்ற இன்னொரு இனிமையான பாடலும் இருக்கும். தெலுங்கில் பாடிய எஸ்.பி.பி, சித்ரா கூட்டு, மனோ, சித்ரா கூட்டை விடச் சிறப்பானது என்பது என் கருத்து. ஆனாலும் 90 களின் ஆரம்பத்தில் சென்னை வானொலியின் “நீங்கள் கேட்டவை” நிகழ்ச்சியில் அதிக இடம் பிடித்த பாடல்களில் இதுவுமொன்று. பாடலைக் கேட்க

ஹிந்தியில் “Love” என்ற பெயரில் வெளியான போது அந்தப்படத்திற்கு இசை ஆனந்த் மிலிந்த். ஆனால் அவருக்குக் கை கொடுத்ததென்னவோ இளையராஜாவே தான். தெலுங்கில் “ஈ நாடே”, தமிழில் “ஆத்தாடி ஏதோ ஆசைகள்” இந்த இரண்டு பாட்டின் மெட்டினையும், இசையில் சில சங்கதிகளையும் எடுத்து எஸ்.பி.பி, சித்ரா கூட்டோடு ஒரு மாதிரி ஒப்பேற்றிவிட்டார். ஹிந்தித் தழுவலும் இனிமையாகத் தான் இருக்கின்றது. பாடலைக் கேட்க

நீங்கள் கேட்டவை 9 – ஆண்பாவம் படப்பாடல்கள்

வணக்கம் நண்பர்களே,

நீங்கள் கேட்டவை 9 பதிவிலே சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பதிவு சற்று வித்தியாசமாக ஒரே ஒரு நேயரின் விருப்பத்தேர்வில் அமைந்த ஒருபடப்பாடல்களாக அமைகின்றது. அந்த வகையில் குட்டிப் பிசாசு ( நல்ல பேருப்பா ;-)) என்ற நேயரின் விருப்பமாக “ஆண்பாவம்” திரைப்படத்தில் இருந்து இன்றைய பாடல்கள் இடம்பெறுகின்றன.

கே.பாக்யராஜின் உதவியாளராக இருந்து “கன்னி ராசி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜன், தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படமான “ஆண்பாவம்” மூலம் இரட்டைக் கதாநாயகர்களில் ஒருவராக வந்து தன் திருட்டு முழி நடிப்பால் வெற்றியும் பெற்றார். மிகச் சின்னப்பையனாகவே தான் இயக்குனராக வந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் அவர். ஆள் இன்னும் சின்னப்பையனாகவே இருக்கிறாருப்பா.

1985 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியான ஆண்பாவம் வெள்ளிவிழாக் கண்டது. ரேவதியின் குறும்புத்தன நடிப்பு, திருமதி முன்னாள் பார்த்திபன் சீதாவின் அறிமுகம், பாண்டியன், பா-ராஜனின் இயல்பான நடிப்பு, கூட ஒட்டிக்கொண்ட ஜனகராஜ், வி.கே.ராமசாமி தவக்களை போன்றோரின் கச்சிதமான வேடம் என்று இந்த வெற்றிக்குப் பல காரணங்களைப் பங்கு போடலாம். பெரிய பாண்டி (பாண்டியன்), சின்னப்பாண்டி (பாண்டியராஜன்), கனகராஜ் (ஜனகராஜ்), தவக்களை (தவக்களை) என்று பாத்திரங்களின் பெயரை நிஜத்தோடு ஒட்டி வைத்ததும் புதுமை. படம் வந்த காலத்தில் சேலைக்கடையில் லட்டுக் கொடுத்து ஏமாற்றும் நகைச்சுவை ஏக பிரபலமாம்.

இந்தப் படத்தில் சொல்லிக்கொள்ள வேண்டிய, விலத்த முடியாத ஒரு அம்சம், இளையராஜாவின் இசை. பாண்டியன் சீதா சந்திப்பில் வரும் சந்தோஷம் கலந்த வயலின் பின்னணி இசை, பின் அவர்களின் பிரிவுக்காட்சிகளில் அதே சந்தம் சோக இசையாக ஜொலிப்பது இப்போதும் என் காதில் கேட்கின்றது.

ராஜா Title song பாடினால் படம் வெற்றி என்பதை தெரிந்தோ தெரியாமலோ நிரூபித்திருக்கின்றது ஆரம்பப் பாடலான “வந்தனம் வந்தனம்” என்ற பாடல்.

அது போல் “காதல் கசக்குதையா” பாடல் ஒரு காலகட்டத்து இளைஞர்களின் தாரக மந்திரம். இந்த இரண்டு பாடல்களையும் இளையராஜாவே பாடியிருக்கின்றார்.

அண்மையில் குமுதம் பத்திரிகையின் அரசு கேள்வி பதிலில் ராஜாவை விட யுவன் தான் இயற்கையாக இசையமைக்கின்றார் என்றும் கூடவே “பருத்தி வீரனை” உதாரணமும் காட்டினார். அவர் ஆண்பாவம் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி பாடிய “ஊட்டி வந்த” என்ற கிராமியச் சந்தத்தைக் கேட்கவில்லைப் போலும்.

“என்னைப் பாடச் சொல்லாதே, நான் கண்டபடி பாடிப்புடுவேன்” என்று தடாலடியாகவும், “என்னைப் பாடச் சொல்லாதே, நான் ஊமையான சின்னக்குயிலு” என்று சோகமாகவும் இரண்டு பாடல்களில் இனிக்கிறார் எஸ்.ஜானகி.

இன்றைய நீங்கள் கேட்டவை பகுதியில் நான் என் விருப்பப் பாடலாகப் பிரத்தியோகமாகப் பாடல் ஒன்றைத் தராததற்குக் காரணம், இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன், சித்ரா இணைந்து பாடும் “குயிலே குயிலே, பூங்குயிலே” என்ற பாடல். இன்றைக்கு அல்ல என்றைக்குமே என் விருப்பப் பட்டியலில் விலக்கமுடியாத தெரிவு இது.
காதலர் இருவர் இணையும் காட்சியைத் தன் கிளாரினெற் கலந்து இசைஜாலத்தால் முன் நிரப்பும் இப்பாடல் தொடந்தும் அதே உணர்வோடு பயணிக்கின்றது.
சிட்டுக்கென பட்டுத்துணி கட்டித்தரவா, மொட்டுக்கென முத்துச்சரம் கொட்டித்தரவா”
என்று துள்ளிக் குதிக்கும் சந்தமாகட்டும்,
“குயிலே குயிலே பூங்குயிலே” என்று பாடும் போது அதைக் கேட்டு வரும் புல்லாங்குழல் ஆலாபனையாகட்டும்,
“ராசாதி ராசனத் தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசைப்பட்டா”
“ராசாத்தி என்ன செய்வா, அவளுக்கின்னு ராசாவா நாம்பொறந்தா என்று எசப்பாட்டுக் கலப்பதாகட்டும்,
எதைச் சொல்ல…எதை விட…., ராசா ராசாதான் போங்கள்.

எழுத்தாளர் தம்பு சிவாவுடன் ஒலிப் பேட்டி

றேடியோஸ்பதி தளம் தொடர்ந்து திரையிசை கலந்த பதிவோடு பயணித்து வந்து இந்தப் பதிவுடன் அடுத்த கட்டத்தில் நுளைகின்றது. அந்த வகையில் இன்றைய பதிவு ஈழத்து முற்றமாக அமைகின்றது.

இன்றைய ஈழத்து முற்றம் பகுதியிலே, ஈழத்து எழுத்தாளர் தம்பு சிவாவின் (த.சிவசுப்பிரமணியம்) ஒலிப்பேட்டி அலங்கரிக்கின்றது. எழுத்தாளர் தம்பு சிவா ஈழத்தின் யாழ்ப்பாணக் குக்கிராமமான 1944 இல் இணுவிலில் பிறந்தவர். 1970, 1971 இல் வெளிவந்த கற்பகம் சஞ்சிகையில் சிறப்பாசிரியராக இருந்து இலக்கியப் பணியாற்றியவர். அத்தோடு தொழிற்சங்கவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர், இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்றுடையவராக இருந்து வருகின்றார்.


“காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள்” தொகுப்பின் தொகுப்பாசிரியராவார். தற்பொழுது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவருகின்றார். இவரது “சொந்தங்கள்” என்ற முதற் சிறுகதைத் தொகுதியும், “முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்” என்ற கட்டுரைத் தொகுதியும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையால் வரும் யூன் மாதம் 17 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு பெண்கள் ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்திலே (58 தர்மராம வீதி, கொழும்பு 6) சிறப்பாக வெளியிடப்படவிருக்கின்றன. இதை வாசிக்கும் கொழும்பு வாழ் அன்பர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.

எந்தவிதமான முன்னேற்பாடுகளும், சமரசங்களும் இன்றி, எடுத்த முதல் அழைப்பிலேயே பேட்டிக்குச் சம்மதித்து அப்போதே இந்தப் பேட்டியினை அளித்து, முன் ஆயத்தம் எதுவுமின்றித் தன் இலக்கிய, சமூக சிந்தையை வெளிப்படுத்த முடியும் என்று காட்டிவிட்டார் இந்த எழுத்தாளர், என்பதே நான் பேட்டியெடுத்த பின் எனக்குள் ஏற்பட்ட அபிப்பிராயம்.

இந்த ஒலிப் பேட்டி இன்று புதன் கிழமை (13 யூன்) அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் “ஈழத்து முற்றம்” நிகழ்ச்சியில் இரவு 9.30 மணிக்கு இடம்பெறவிருக்கின்றது.
ஒலிப்பேட்டியைக் கேட்க

மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – இறுதிப் பாகம்

இன்றைய பதிவிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.பாலசந்தரோடு பணியாற்றிய போது கிடைத்த அனுபவம் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் “அதிசய ராகம்” பாடலோடும்,

இயக்குனர் கே.சங்கரோடு பணியாற்றிய போது பாடலுக்கான காட்சியை எடுத்துப் பின் மெட்டுப் போட்டு பாடலான கதை, வருவான் வடிவேலன் திரைப்படத்திற்காக “பத்துமலைத் திருமுத்துக்குமரனை” பாடலோடும் இடம்பெறுகின்றது.

தகவல் குறிப்புக்கள் உதவி: ராணி மைந்தன்

நீங்கள் கேட்டவை 8

வணக்கம் நண்பர்களே

நீங்கள் கேட்டவை 8 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இன்றைய பதிவிலே இதுவரை நீங்கள் கேட்ட பாடல்களுடன் நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.
அந்த வகையில் முதலில் இடம்பெறுவது என் விருப்பப் பாடல் ஒன்று.
இந்தப் பாடல் “செவ்வந்தி” திரைப்படத்தில் இருந்து அருண்மொழி, சொர்ணலதா ஆகியோர்
பாடுகின்றார்கள். பாடலிசை இசைஞானி இளையராஜா.

இளையராஜாவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாத்தியம் இசைக்கும் கலைஞரான அருண்மொழியின் குரலும் ராஜாவிடமிருந்து தப்பவில்லை. அருண்மொழியைப் பயன்படுத்தி நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா.
P.B.ஸ்ரீனிவாஸ் போல அருண்மொழியின் குரலும் அடக்கமானது அதே போல் இனிமையானது. அருண்மொழி பாடிய எல்லாப் பாடல்களையுமே நான் ரசித்துக்கேட்பேன். எனது உயர்தர வகுப்பு பரீட்சைக்காலத்தில் என்னைத் தயார்படுத்தும் காலத்தில் தான் செவ்வந்தி என்ற இந்தத் திரைப்படம் வந்தது. அதிமுக உறுப்பினரான, எம்.ஜி.ஆர் காலத்து அமைச்சர் அரங்கநாயகத்தின் மகன் சந்தான பாண்டியன் இதில் நடித்திருந்தார்.
கூட நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. சேரன் பாண்டியன், மெளனம் சம்மதம் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீஜா. செவ்வந்தி படம் எடுத்து முடிப்பதற்குள்ளாகவே சந்தானபாண்டியன், ஸ்ரீஜா ஜோடி திருமணம் செய்து கொண்டது. ஆனால் படத்தில் இருவரும் பிரிவதாக முடிவு என்று ஞாபகம். இந்தச் செய்திகளை அப்போது 90 களில் நம்மூர் வாசிகசாலைக்கு வந்த தினத்தந்தி வெள்ளி மலரில் வாசித்துத் தெரிந்துகொண்டேன். அமைச்சரின் மகன் திரைப்படத்திற்கு ராஜா மனம் வைத்து இசையமைத்திருக்கின்றார். “செம்மீனே செம்மீனே”, அன்பே ஆருயிரே உட்பட இனிமையான கானங்கள் இப்படத்தில் உண்டு. அப்போதய தினத்தந்தி விளம்பரங்களில் இளையராஜாவை முன்னிறுத்தி கொட்டை எழுத்தில் ராகதேவனின் கீத மழையில் என்று இப்படத்திற்கு விளம்பரப்படுத்தியது இன்றும் நினைப்பிருக்கின்றது.

இன்று நான் தெரிவு செய்திருக்கும் “புன்னைவனப் பூங்குயிலே” என்ற இந்தப் பாடல் காதலர் இருவர் பாடும் சோக ராகமாக அமைகின்ற்து. அருண்மொழி, சொர்ணலதா ஜோடி இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமான தேர்வாக இருக்கின்றது.
“என்னோடு பேசும் இளந்தென்றல் கூட
என் கேள்விக்கென்று பதில் கூறுது”
என்று காதலன் தொடங்கும் வரிகளை இடை இசை எதுவுமின்றி
“என் கண்கள் சொல்லும் மொழி காதலே”
என்று காதலி தன் ஆற்றாமையை நிரப்புவதாக இந்தக் கானத்தின் முதற்பாதி அமையும்.

அடுத்த பாதியில்
“பகலென்னும் தீபம் அணையாமல் வீசும்,
அழகாக ஆடும். அருள் தன்னைப் பேசும்,
தூணடாத விளக்கு நாம் கொண்ட காதல்,
ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்”

என்று காதலி ஆரம்பிக்க,
விடாமல் தொடர்வார் காதலன் இப்படி
“அலை ஓய்ந்து போகும் கடல்மீதிலே
நிலையான காதல் ஓயாதம்மா”

சாதாரண வரிகள் என்றாலும் காதலர்க்கு இவை அசாதாரண மொழி, அதுவும் பாடலாகப் பிறக்கும் போது அத்தனை பிரிவுத்துயரையும் கொட்டித்தீர்க்கின்றது இப்பாடல். கேட்டுப் பாருங்களேன் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

PunnaiVana-Sevvant…

இன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் பாடல்களை விரும்பிக் கேட்டவர்கள்

வெயிலானின் விருப்பமாக மோகமுள் திரைப்படத்தில் இருந்து “சொல்லாயோ” என்ற பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஸ்ரீகுமாரின் குரலில் ஒலிக்கின்றது.

வி.ஜே சந்திரன் , “என் ஜீவன் பாடுது” என்ற பாடலை நீதானா அந்தக் குயில் திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கின்றார்.

மழை ஷ்ரேயாவின் விருப்பமாக இரண்டு தெரிவுகள், ஒன்று கேளடி கண்மணி திரைக்காக இளையராஜா இசையில் “கற்பூர பொம்மை ஒன்று” என்ற பாடலை பி.சுசீலா பாடுகின்றார். அதனைத் தொடர்ந்து அன்னை திரைப்படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடும் “புத்தியுள்ள மனிதரெல்லாம் ” என்ற பாடல். இசை ஆர்.சுதர்சனம்

நண்பர்களே பாடல்களைக் கேளுங்கள் கேட்பதோடு உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.

Powered by eSnips.com