இளையராஜாவை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு திரையுலகில் சிறந்த ஒரு உதாரணம் விநியோகஸ்தராக இருந்து, தயாரிப்பாளராகி, நடிகராகி, இயக்குனரும் ஆகிய ராஜ்கிரண்.
ராசாவே உன்னை நம்பி என்னப் பெத்த ராசா என்று படங்கள் தயாரித்து, என் ராசாவின் மனசிலே என்று நாயகனாகி, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான் என்று இயக்குனராகி தொண்ணூறுகளில் பணம் காய்க்கும் சினிமாக் குதிரையாக இருந்தவர் ராஜ்கிரண். படம் வெளி வந்து தாறுமாறாக வசூலைக் குவிக்கும் திரைப்படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் பெரும்பாலும் உரசல் வருவது சினிமாவின் எழுதப்படாத ஜோதிடங்களில் ஒன்று. அது தான் “என் ராசாவின் மனசிலே” திரைப்படத்தின் இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கும், அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் ராஜ்கிரணுக்கும் வந்தது. சமீபத்தில் கூட கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில் “என் ராசாவின் மனசிலே” படம் இப்போது வெளிவந்தால் அதிக நாள் தாக்குப்பிடிக்காது என்று சீண்டியிருந்தார். எனவே அடுத்த படமான “அரண்மனைக் கிளி” படத்திற்கு தானே நாயகனாக அரிதாரம் பூசிக்கொண்டு இயக்குனராகவும் ரிஸ்க் எடுத்தார் ராஜ்கிரண். அப்போது அவர் மலை போல நம்பியிருந்தது இளையராஜாவின் இசையை. இப்படத்தின் நாயகன் பெயரைக் கூட இளையராஜாவின் இயற்பெயரான ராசய்யா என்றே வைத்திருப்பார்.
ஆரம்பத்தில் குஷ்புவை ஒப்பந்தம் செய்து பின்னர் ஒதுக்கிவிட்டு அஹானாவை பிடித்தார். கூடவேஆன்றைய காலகட்டத்தில் குஷ்புவுக்கு குரல் கொடுத்த அனுராதா தான் அஹானாவுக்கு பின்னணிக் குரல். கூடவே காயத்ரி என்னும் இன்னொரு புதுமுகமும், முன்னர் என் ராசாவின் மனசிலே படத்தில் சிறுவேடத்தில் நடித்த வடிவேலுவும், விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள்.
இப்பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன், ராஜாவை நம்பினோர் கைவிடப்படார். அதையே தான் ராஜா தன் பாடல்களில் நிரூபித்திருந்தார். “அம்மன் கோயில் வாசலிலே” என்று மின்மினி குழு பாடும் பாடல், “நட்டு வச்ச ரோசாச்செடி” என்று பி.சுசீலா, ” வான்மதியே” என்று எஸ்.ஜானகி, “ராசாவே உன்னை விட மாட்டேன்” என்று எஸ்.ஜானகி, “அடி பூங்கொடியே” என்று மனோ, மின்மினி குழுவினர், “ராத்திரியில் பாடும் பாட்டு” என்று மலேசியா வாசுதேவன், அருண்மொழி, மின்மினி குழுவினர், ” என் தாயென்னும் கோயிலை” என்று இளையராஜா என்று மொத்தம் ஏழு முத்தான முழுப்பாடல்களையும் “துணிமேலே காதல்” மற்றும் “ராமர நினைக்கும் அனுமாரு” என்று படத்தில் வராத ஆனால் இசைத்தட்டில் மட்டும் வரும் பாடல்கள் என்று மொத்தம் ஒன்பது பாடல்களைக் கொடுத்து ராஜ்கிரணைக் காப்பாற்றி விட்டார் ராஜா. பாடல்களை வாலி மற்றும் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்கள்.அந்தப் பாடல்களை இணைத்து செண்டிமெண்டாக ஒரு கதையும் பின்னி “அரண்மனை கிளி” யையும் வசூல் கிளியாக மாற்றி விட்டார் ராஜ்கிரண்.
இப்படத்தின் பின்னணி இசையைப் பொறுத்தவரை கிராமியப் படங்களுக்கு குறிப்பாக பாரதிராஜாவின் படைப்புக்களின் காட்சிகளின் அழகுணர்ச்சிக்கு மெருகூட்டுமாற்போலக் கொடுக்கும் பின்னணி இசை இப்படத்தில் இல்லை. அதற்கு காட்சி அமைப்புக்களின் தன்மையே காரணம் எனலாம். ஆனால் கிடைத்த வாய்ப்புக்களை வைத்துக்கொண்டு இப்படத்திலும் தன் பின்னணி இசைக் கைவரிசையைக் காட்டி விட்டார் இளையராஜா.
இதோ அந்த இசைத் தொகுப்பு
அரண்மனை கிளி பூங்கொடி அறிமுகம், வீணை இசை கலக்க
ஏழைப் பெண் செல்லம்மா மனதில் ராசய்யா மீது காதல் பூக்கின்றது, “ராசாவே உன்னை விட மாட்டேன்” பாடலின் இசை புல்லாங்குழலில் கலக்க
செல்லம்மாவை சீண்டி அவளின் தோழிமார் பாடும் “அடி பூங்குயிலே பூங்குயிலே”
ராசய்யாவை நினைத்து பூங்கொடி காதல் கனவில் மிதத்தல் “வான்மதியே” பாடல் மெட்டோடு கலக்கிறது
பூங்கொடியை பெண் பார்க்க வருவோர்களை “அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்” பாடி கலாய்த்தல் (பாடல்: மின்மினி)
செல்லம்மா, ராசய்யாவை நினைத்து காதல் வானில் சிறகடிக்கிறாள், “ராசாவே உன்னை விட மாட்டேன்” பாடல் கூட வருகின்றது
பூங்கொடி தன் காதல் கைகூடாதோ என்று கவலையில் இருத்தல்
செல்லம்மா காதல் தோல்வியில் துயர் அடைதல்
பூங்கொடி, ராசய்யா திருமண நாள்
ராசய்யா கவலையில் பாடும் “ராத்திரியில் பாடும் பாட்டு”
செல்லம்மா ஆபத்தான நிலையில்
மனம் பேதலித்த செல்லம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வரும் பூங்கொடி, நிறைவுக்காட்சி