பாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

இந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும் அந்த அளவுக்கு போதையேற்றும் பாட்டு எனக்கு இது. இந்தப் பாடலை முணுமுணுக்கிறேன் என்றால் அந்த நேரம் ஏதோவொரு நல்ல செய்தியோடு மனம் குதூகலிக்கின்றது என்றும் அர்த்தம்.

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் என்ற இந்தப் பாடல் சின்னப் பசங்க நாங்க என்ற திரைப்படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி மதுரக் குரல்களில் அமைந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் இலேசான முறுவலுடன் பாடல் முழுவதும் தன் சங்கதிகளை வெளிப்படுத்தியிருப்பார். இந்தக் கூட்டணி என்றும் சளைக்காது என்று நிரூபிப்பது போல ஒவ்வொரு வரிகளையும் வெகு இயல்பாகக் கடத்தியிருப்பார்கள்.

சிவாஜி புரடெக்‌ஷன் என்ற மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படமான “தாலாட்டு கேக்குதம்மா” என்ற படத்தின் வழியாக அறிமுகமானவர் இயக்குனர் ராஜ்கபூர். தொடர்ந்து ராஜ்கபூருக்கு இன்னொரு குறிப்பிடத்தக்க வெற்றிப்படமாக அமைந்தது சின்னப் பசங்க நாங்க. முரளி, சாரதா ப்ரீதா இவர்களுடன் துடுக்குத்தனமான கிராமத்துப் பெண் பாத்திரம் நடிகை ரேவதிக்குக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய பாத்திரங்களில் ஒன்று. இந்தப் படத்தில் பாவலர் வரதராஜன் மன்றம் என்ற பெயரில் முரளி குழுவினர் சங்கம் வைத்திருப்பதாக அமைக்கப்பட்டிருக்கும்.

படம் வெளியான நேரம் எங்கள் பிரதேசம் மின்சாரமில்லாத ஆண்டுகளில் இருந்த வேளை அது. திருநெல்வேலிச் சந்தியில் இருந்த ஒரு வீடியோ கடையில் அடையாள அட்டையை அடகு வைத்து வீடியோ காசெட்டை வாடகைக்கு எடுத்து வந்து மண்ணெண்ணை ஜெனரேற்றர் வழியாக மின்சாரம் பிறப்பித்துப் பார்த்த படம் இது.

இந்தப் படத்தில் மொத்தம் ஆறு பாடல்களைப் பங்கு போட்டு கவிஞர் வாலியும், கங்கை அமரனும் எழுதியிருந்தார்கள். கங்கை அமரன் எழுதிய “இங்கே மானமுள்ள பொண்ணு என்று மதுரையிலே கேட்டாக” மறக்கமுடியுமா ஜானகியின் குறும்புக் குரல் பாட்டை. இதே பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் சோகப்பாடலாகக் கொடுத்திருப்பார்.

“வெல்வெட்டு கன்னம் தொட்டு வைக்கின்ற முத்தம் எல்லாம்
கல்வெட்டுப் போலே நிற்கும் கண்ணே உன் காலம் எல்லாம்”
என்று வாலிப வரிகளில் வாலி பூந்து விளையாடிய பாட்டு “மயிலாடும் தோப்பில்”
ராஜாவின் மெட்டோடு அணி சேர்ந்த வாத்தியக் கலவையில் இரண்டாவது சரணத்துக்குப் போகும் முன் வரும் புல்லாங்குழலின் தனியாவர்த்தனம் கவிதை.

“யோசித்து ஒவ்வொன்றாகக் காதல் பாடம்
வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்” இந்த அடிகளிலே தபேலா இசை வழுக்கிக் கொண்டே அடுத்த அடிகளுக்கு மேலெழும்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த ராஜாவின் பாடல்களைக் கேட்கும் போது பெரும்பாலும் வாத்தியப் பயன்பாட்டில் ஒத்திசைவைக் காணலாம். இந்தப் பாடல் போன்ற சமகாலத்தில் வந்த காதல் பாடல்களிலும் இதே வாத்தியங்களை உற்சாகமாக விளையாட வைத்து சந்தோஷப்படுத்தியிருப்பார் ராஜா.

மயிலாடும் தோப்பில் எப்போது கேட்டாலும் இனிக்கும் எனக்கு.

கேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு

இன்றைய காலைப்பொழுதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேலைகளுக்கு இடையில் எனக்கு கிடைத்த நேரம் வழக்கம் போல காரில் இசையை இயக்கிவிட்டுக் கேட்டுக் கொண்டே போகிறேன்.
“புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு” சாதாரணமாக தான் ஆரம்பிக்கிறது, ஆனால் பல்லவி முடிந்து சரணத்துக்குப் பாயும் நேரம் கண்களில் முட்டி திடீர்க் குளம் ஒன்று, ஸ்டியரிங் பிடித்திருக்கும் இரண்டு கைகளிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. இந்த மாதிரி அனுபவமெல்லாம் எனக்குப் புதிதல்ல, அதிலும் குறிப்பாக இசைஞானியின் பாடல்கள் குறிப்பாக ஸ்வர்ணலதாவின் “என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்” எல்லாம் இந்தமாதிரி என்னைக் கோழையாக்கி அழ வைக்கவே படைக்கப்பட்டது. ஆனால் ஒரு புதிய பாடல் இம்மாதிரியானதொரு சாகசத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டதுதான் எனக்கே புரிபடாத ஆச்சரியம்.

வெளியே வாகனங்களின் போட்டா போட்டியோடு அந்தப் பெருஞ்சாலையில் இறுக மூடிய கார்க்கண்ணாடிக்குள் என் இசை உலகத்தில் கார் தன் வழி பயணிக்க, நானோ இரட்டைச் சவாரி.என்னைக் கயிற்றால் இறுகக் கட்டிவிட்டு கார் சீட்டில் பயணிக்க வைத்தது போன்றதொரு பிரமையை உண்டு பண்ணுகிறது.

எனக்கு நினைவு தெரிந்து சமீப ஆண்டுகளில் கேட்டதும் உடனேயே என் வசமிழந்த புதிய பாடல்களில்  மொழி திரைப்படத்தில் வந்த “காற்றின் மொழி இசையா” பாடல் தான் இதே மாதிரியான அனுபவத்தை விளைவித்திருந்தது. அதை அப்போது நான் பதிவாக்கியும் இருந்தேன்.

காற்றின் மொழி…..! http://www.madathuvaasal.com/2007/02/blog-post_13.html

 “புதிய உலகை புதிய உலகைத் தேடிப்போகிறேன் என்னை விடு” இந்த மாதிரிப் பாடல்களெல்லாம் இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருப்பவரின் திடீர் சுகப்பிரசவம் ஆகியிருக்காது. இசையமைப்பாளர்
டி.இமானின் மனதின் மூலையில் அவருக்குத் தெரியாமலேயே எங்கே ஒளிந்து கொண்டிருந்திருக்கும். செலுலாயிட் மூலம் “காற்றே காற்றே” என்று அறிமுகமான வைக்கம் விஜயலட்சுமியின் வருகைக்காகக் காலம் காத்துக் கொண்டிருக்கும். இவர்களை இணைத்து வைத்த பாலமாய் அமைந்த மதன் கார்க்கியின் வரிகள் கூட இந்த அற்புதத்துக்காகப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கும்.
அடிக்கடி சொல்லுவேன் சில பாடல்கள் இன்னார்க்கென்றே எழுதி வைத்தது என்று அப்படியானதொன்றுதான் இது. அந்த இசையைக் கேட்டுப் பாருங்கள் எவ்வளவு அன்னியோன்யமாகப் பாடல் வரிகளைச் சீண்டாமல் அரவணைத்துப் பயணிக்கிறது. தமிழ்ப் பாடல்களை வேற்று மொழிப்பாடகர் பாடக்கூடாது என்று கொடி பிடிக்கும் வீரர்களையும் தலை குனிய வைக்கிறது விஜயலட்சுமியின் மொழியாடல். இசையமைப்பு என்பது ஒரு உயர்ந்த தவத்தின் மிகச்சிறந்த வரமாக அமையவேண்டும்.

ரசிகனின் மனதுக்கு நெருக்கமாய்ப் பாடலைக் கொண்டு சேர்ப்பதில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மூவரின் பங்கும் முழுமையாக இருக்க வேண்டும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாத எனக்கெல்லாம் இம்மாதிரிப் பாடல்கள் தான் ஆதரவுக் குரல் கொடுக்கின்றன.

டி.இமானைப் பற்றித் தனியே நிறையப் பேசவேண்டும், ஆனால் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்திருக்கும் கச்சிதமான வாய்ப்புகள் இன்னும் பெருக வேண்டும். இதே மாதிரிப் பாடல்களைக் கேட்கத் தான் நாம் இருக்கிறோம் என்று ஆதரவுக் குரலைக் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

ஊரெல்லாம் அலைந்து வீடு வந்து சற்று முன்னர் தான் இந்தப் பாடல் உருவாக்கத்தின் காணொளியைப் பார்க்கிறேன். பாடல் ஒலிப்பதிவு முடித்த தறுவாயில் டி.இமானும் தன் கண்ணாடியை மெதுவாகத் தூக்கிக் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். மீள வராது போன அவர் தாயைக் கூட இந்தப் பாடல் நினைவுபடுத்தியிருக்கக் கூடும். பாடலை அனுபவிக்க ஆரம்பித்துவிட்ட பிறகு காரணங்களைத்தேடி செல்கிறது அல்லது காரணங்களை நினைப்பூட்டி விடுகிறது.

புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!
இந்த நிமிடம் வரை தாலாட்டுத் தொடர்கிறது. இந்தப் பாடல் இன்னும் நெடு நாள் என்னிடம் தங்கிவிடும் என்று மனசு சொல்கிறது.

முழுப்பாடலையும் கேட்க

புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!

விழியின் துளியில்
நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன்
என்னை விடு!

பிரிவில் தொடங்கிப் பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்!
மீண்டும் நான் மீளப் போகிறேன்
தூர நான் வாழப்போகிறேன்

மார்பில் கீறினாய்
ரணங்களை வரங்களாக்கினாய்
தோளில் ஏறினாய்
எனை இன்னும் உயரமாக்கினாய்

உன் விழி போல மண்ணில் எங்கும் அழகு இல்லை என்றேன்
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த விலகி எங்கே சென்றேன்
மேலே நின்று உன்னை நானும் காணும் ஆசையில்

புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!

யாரும் தீண்டிடா இடங்களில்
மனதைத் தீண்டினாய்
யாரும் பார்த்திடா சிரிப்பை
என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன்
உன் மனம் இங்கு வேண்டாம் என்று பறந்து எங்கே சென்றேன்
வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா

புதிய உலகை
புதிய உலகை
தேடிப்போகிறேன்
என்னை விடு!

பாடல் தந்த சுகம்: ராத்திரியில் பாடும் பாட்டு

போகியோடு தொடங்கி பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று காணும் பொங்கல் வரை கண்டாச்சு. கூடவே ராஜாவின் பாடல்களும் இந்தத் தினங்களோடு கூடவே வருகின்றது. அந்த வகையில் இன்று “ராத்திரியில் பாடும் பாட்டு” பாடலைப் பகிர்கின்றேன்.

அருண்மொழி, மின்மினி ஜோடிக்குரல்கள் மென்மையாக ஒரே அலைவரிசையில் இயங்கும் சிறப்பம்சம் பொருந்தியவை என்பதற்கு “தென்றல் வரும் முன்னே முன்னே” (தர்மசீலன்) படத்தின் பாடலோடு இந்தப் பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம். மின்மினியைப் பொறுத்தவரை இந்தப் படத்திற்காக இசைஞானி கொடுத்த பலாச்சுளையான ஏழு பாடல்களில் மூன்றைக் கைப்பற்றியிருக்கிறார். உண்மையில் ஒன்பது பாடல்கள் பதிவாகி ஏழுதான் பயன்படுத்தப்பட்டது மீதியோடு இசைத்தட்டில் காணலாம். “அம்மன் கோயில்” பாடலை சுவர்ணலதாவோடும் “அடி பூங்குயிலே பூங்குயிலே” பாடலை மனோவுடனும் பாடிய மின்மினி “ராத்திரியில் பாடும் பாட்டு” பாடலை அருண்மொழி, மலேசியா வாசுதேவனோடு இணைந்து பாடியிருக்கிறார். தொண்ணூறுகளிலே மினி ஜோசப் ஐ மின்மினியாக்கி மீரா படத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தியிருந்தார் இசைஞானி. சமீபத்தில் ஒரு ஆய்வாளர் (!) ரஹ்மான் கண்டுபிடித்த குரல்களில் மின்மினியையும் வாரி வழங்கிச் சந்தோஷப்பட்டுக் கொண்டார். அடிக்கடி வரலாற்றை நினைவுபடுத்த வேண்டும் போல. 
அரண்மனைக்கிளி படத்தின் பின்னணி இசையை முன்னர் றேடியோஸ்பதியில் பகிர்ந்திருந்தேன். அரண்மனைக்கிளி படத்துக்காக முன்பே பாடல்களை வாங்கிக் கொண்டுதான் முழுக்கதையையும் மெருகேற்றியதாக படம் தயாரிப்பில் இருந்த வேளை ஒரு செய்தியும் வந்திருந்தது.
அந்த நிலவொளியில் குளித்து தம் நேசத்தைப் பகிர்ந்து கொள்ளும் காதலர்களாக அருண்மொழி, மின்மினி குரல்கள் இணைய, இன்னோர்புறம் தன் மண வாழ்வின் கசப்பைப் பகிரும் சோக ராகத்தை மீட்டுகிறார் மலேசியா வாசுதேவன். இவ்விதம் ஒரே பாடலில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து கட்டிக் கொடுத்த பாடல்களின் பட்டியலை வைத்து ஒரு வானொலி நிகழ்ச்சியும் செய்திருந்தேன். உதாரணத்துக்கு ஆனஸ்ட் ராஜ் படத்தில் வரும் “வானில் விடிவெள்ளி மின்னிடும் தங்கிடும் நேரம்” பாட்டில் நாயகிக்குக் குரல் கொடுத்த ஜானகிக்கு சந்தோஷம், அதே பாட்டில் மனோ தன் நண்பனின் துரோகத்தை எண்ணி மறுகும் சோக வடிவமும் பொருந்தியிருக்கும். இன்னோர் உதாரணம் அரங்கேற்ற வேளை படத்தில் “தாயறியாத தாமரையே” இதில் மனோவின் குரல் கடத்தப்பட்ட சிறுமியின் மன ஓட்டத்தின் அசரீரியாகவும், சமகாலத்தில் கோரஸ் குரல்களோடு எஸ்.பி.சைலஜாவின் களியாட்டக் குரலும் ஒலிக்கும். இப்படியாக இருவேறு மன நிலையை ஒரே பாடலில் பாடகர்களது குரல்கள், வாத்திய இசை இவற்றையெல்லாம் ஒருமிக்கப் பொருத்தி அந்த உணர்வு வெளிப்பாடுகளைக் கெடுக்காமல் கேட்கும்/பார்க்கும் ரசிகனுக்குக் கொடுக்கும் சவால் நிறைந்த பணியைக் கடப்பது எளிதன்று. அந்த விஷயத்தில் ராஜாவின் இன்னொரு வெற்றியாக இவ்வாறான உத்திகளை உதாரணப்படுத்தலாம்.
ராஜ்கிரண் நடித்த படங்களில் அவருக்கான வாயசைப்புப் பாடல்களோ பில்ட் அப் பாடல்களோ இல்லாது கவனித்துக் கொள்வார். அரண்மனைக் கிளியில் வரும் இன்னொரு ஜோடிப்பாடல் “அடி பூங்குயிலே” பாடலைக் கூட துணைப் பாத்திரங்கள் மூலம் அழகாகப் பயன்படுத்தியிருப்பார். ராத்திரியில் பாடும் பாட்டு பாடலில் ராஜ்கிரணுக்கான குரலாக மலேசியா வாசுதேவன் குரல் ஒலித்தாலும் அது காட்சிக்கு அவதூறு விளைவிக்கால் அடக்கமாக ஆள்கிறது. 
ஜோடிக்குரல்களிலிருந்து மலேசியா வாசுதேவனின் தனிக்குரலுக்கு நகரும்போது இணைப்பாக வரும் அந்தப் புல்லாங்குழல் ஒலியை நிறுத்தப் புள்ளியிலிருந்து கேட்கும் போது புல்லரிக்கும்.