தமிழ்த் திரையிசை 2016 அலசல் நிறைவுப் பாகம்

கடந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இசையமைப்பாளர் அனிருத், “நானும் ரவுடி தான்” படத்தில் கொடுத்த சிறப்பான பாடல்களால் கவரப்பட்டார். ஆனால் இந்த ஆண்டைப் பொறுத்தவரை “ரெமோ” என்ற வெற்றிப்படத்தில் அவரின் பங்களிப்பு இருந்ததோடு “செஞ்சுட்டாளே” https://www.youtube.com/shared?ci=F5hc4BXoHLo பாடலை ஹிட் பட்டியலில் சேர்த்திருந்தாலும் அந்தப் படப் பாடல்கள் ஏதோ தனித்த இசை ஆல்பங்களுக்குண்டான தகுதியோடு இருப்பதாகவே பட்டது. எனவே அடுத்த ஆண்டு அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை வைத்துத் தான் மீளத் தன்னை நிரூபிக்க வேண்டியது அவசியம்.
அனிருத் போலவே Hip Hop தமிழாவுக்கும் ஒரு பெரிய வாய்ப்பைக் கடந்த ஆண்டு “தனி ஒருவன்” பாடல்களில் சாதித்துக் காட்ட முடிந்தது. இந்த 2016 இல் கிடைத்த வாய்ப்புகளில் அதைத் தக்க வைக்க முடியவில்லை.
இசையமைப்பாளர் தர்புகா சிவாவைக் கவனிக்க வைத்தது கிடாரி பாடல்கள். குறிப்பாக “வண்டியிலே நெல்லு வரும்” https://www.youtube.com/shared?ci=qBVh2in1BJw இந்த ஆண்டின் ஹிட் பட்டியலில் அடங்கும்.
வன வாசத்துக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்த ஆண்டு “தர்மதுரை” “சென்னை 28 – பாகம் 2” படங்களின் வெற்றியோடு அவரும் கவனிக்கப்பட்டார். அவருக்கு இன்னமும் பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதை “யாக்கை” படத்தின் நீ” https://www.youtube.com/shared?ci=jtPF9ElkLP0 என்ற தனிப்பாடலை காதலர் தினத்தன்று வெளியிட்ட போது கிட்டிய கவனயீர்ப்பு நிரூபித்தது. அத்தோடு “நெஞ்சம் மறப்பதில்லை” படத்துக்காக மீண்டும் இயக்குநர் செல்வராகவனோடு இணைந்த போதும் அதேயளவு மகிழ்ச்சி உணர்வைப் பகிர்ந்து கொண்டனர் இணைய ரசிகர்கள். 
“இடம் பொருள் ஏவல்” படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து ஓராண்டைக் கடந்தும் படம் வெளிவராத நிலையில் “தர்மதரை” படத்தை சீனு ராமசாமி இயக்கவும், அந்தப் பாடல்கள் அவசரகதியில் வெளியிட்டது போன்றதொரு உணர்வு. ஆனால் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வில் “தர்ம துரை” கொடுத்த உச்ச வெற்றியோடு யுவனின் பாடல்களும் கவனிக்கப்பட்டன. “ஆண்டிப்பட்டி”  https://www.youtube.com/shared?ci=mFyVT-H2ZHs பாடல் அடிக்கடி சின்னத்திரையில் வலம் வந்தது. இதிலும் நான்கு பாடல்களை வைரமுத்து எழுதினார். 
தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு பாடல் அதிரி புதிரி வெற்றியாகும் ஆனால் அந்தப் பாடலில் அப்படி என்ன இருக்கிறதென்று தேடிக் கொண்டே இருப்போம். அப்படியொன்று தான் “மக்கா கலங்குதப்பா” https://www.youtube.com/shared?ci=sJKFe8INiFo பாடல் (பாடல் வரிகள் மதிச்சியம் பாலா). 2016 ஆம் ஆண்டில் தேநீர்க் கடைகளில் இருந்து கடைக்கோடி ரசிகன் வரை இந்தப் பாடல் சாம்ராஜ்ஜியம் நடத்துதுகிறது.
“நெஞ்சம் மறப்பதில்லை” பாடல்கள் வருவதற்கு முன் இருந்த எதிர்பார்ப்பு பாடல்கள் வந்த பின் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். கலவையான விமர்சனங்களோடு பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். படம் வந்த பின் தான் இந்தக் குழப்பம் தீரும்.
நடிக்க வந்து தன் பிழைப்பைக் கெடுத்த வகையில் மூன்றாவது வெற்றிகரமான ஆண்டில் நுளைகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். கடந்த ஆண்டு பாடல்கள் வெளியாகி 2016 இல் திரைக்கு வந்த “தெறி” பாடல்கள் அனைத்தும் கேட்கும் தரம் என்ற ஒன்றே போதும் என்று நினைத்து விட்டார் போலும். “மீண்டும் ஒரு காதல் கதை” படம் போல அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளிலாவது இன்னும் உழைத்திருந்தால் இந்த ஆண்டு திகழ்ந்திந்திருப்பார்.
நடிக்க வந்து வெற்றியைக் காட்டிய வகையில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனிக்கு “பிச்சைக்காரன்” படம் கொடுத்த பணக்கார வெற்றி அவருக்குத் திருப்தியாக இருந்திருக்கும். அந்தப் படத்திற்காக அவர் இசையில்’ “நெஞ்சோரத்தில்” https://www.youtube.com/shared?ci=veILFv0bxLA பாடல் கலக்கல் ரகம். “நூறு சாமிகள்” https://www.youtube.com/shared?ci=mEemB2K1fZA பாடலும் ரசிக்கும் தரம்.
ஆனால் தொடர்ந்து வந்த சைத்தான் படத்தின் பாடல்களில் முன்னதை விடத் தாண்டிக் கொடுக்கக் கூடிய இசை கிட்டவில்லை.
இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படம் “தாரை தப்பட்டை” இந்த 2016 ஆண்டு வெளியாகியிருந்தாலும் பாடல்கள் ஏற்கனவே முந்திய ஆண்டில் வெளியாகிக் கவனத்தை ஈர்த்தன. ஆனால் படம் வெளியாகி அதன் மோசமான படமாக்கத்தால் புதைந்து போயின.
அம்மா கணக்கு, ஒரு மெல்லிய கோடு, அப்பா, ஓய், எங்க அம்மா ராணி படங்களின் பாடல்கள் பரவலாகப் போ ய்ச் சேராது பத்தோடு பதினொன்றா கின. 
“குற்றமே தண்டனை” படத்தின் பின்னணி இசை இளையராஜாவின் பேர் சொல்லும் பிள்ளையானது இந்த ஆண்டு.
“நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்” https://www.youtube.com/shared?ci=QjtJZ-rZsWw 24 படத்துக்காக, மதன் கார்க்கியின் வரிகளில்  அமைந்த இந்தப் பாடல் தான் 2016 இல் வெளிவந்த பாடல்களில் மெட்டுக்குக் கச்சிதமாக வந்தமர்ந்த வரிகளைச் சுமந்த பாடலாகச் சொல்வேன். 
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 24 மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் இந்த 2016 இல் கிட்டி, இரண்டில் அச்சம் என்பது மடமையடா பாடல்கள் ஒப்பீட்டளவில் பரவலாகப் போ ய்ச் சேர்ந்தவை.
குறிப்பாக “தள்ளிப் போகாதே” இளசுகளின் இன்னொரு தேசிய கீதம். இது தாமரையின் வரிகளுக்காகவும் கொண்டாடப்பட்டது.
“ராசாளி”, “அவளும் நானும்” பாடல்களும் வெற்றி முகம் கொண்டவை. 
ஆனால் ஒரு விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்களுக்கு நிகராக இந்தப் பாடல்களை ஒப்பிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அச்சம் என்பது மடமையடா படம் வெளியான பின்னர் படத்தையும் அவ்வாறே ஒப்பிட்டு விண்ணைத் தாண்டி வருவாயா தான் விண்ணை முட்டியது.
ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்த இரு முகன் பாடல்கள் சிறப்பானவை. அதிலும் “கண்ணை விட்டு” https://www.youtube.com/shared?ci=kYZlWoMUOgc பாடல் 2016 இன் சிறந்த பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியது. “சிங்கம் 3” பாடல்களைக் கேட்ட போது இந்த சிங்கங்களுக்கு ஹாரிஸோ இல்லை தேவி ஶ்ரீ பிரசாத்தோ யார் இசையமைத்தாலும் ஒரே அமைப்போ என்று எண்ண வைத்தது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு 2016 இல் கிட்டிய வாய்ப்புகளால் திக்கு முக்காடிப் போயிருப்பார். அது பாடல்களிலும் தெரிகிறது.
மனிதன் படத்திற்குச் சத்தமே இல்லாமல் கொடுத்த பாடல்கள் தான் இந்த 2016 இல் அவர் கொடுத்ததில் முதல் தரம் என்பேன். அதிலும் “அவள் குழல் உதித்திடும்” https://www.youtube.com/shared?ci=1AJFcPVVaCg பாடல் வெகு பிரமாதம். “முன் செல்லடா” https://www.youtube.com/shared?ci=PSvFJ48lMpo அட்டகாசமான தன்னம்பிக்கைப் பாட்டு.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததோ என்றெண்ணணத் தோன்றும். கபாலி பாடல்கள் கடைக்கோடி வரை சென்றாலும் ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்துக்கு இது போதாது என்றே ரஜினியின் தீவிர ரசிகர்கள் இன்றும் ஆதங்கப்படுகிறார்கள்.
“மாய நதி இன்று” பாடல் பரவலாகப் போய்ச் சேர்ந்த பாடல்களில் ஒன்றாக அமைந்தது.
இறைவி பாடல்கள் அக்மார்க் சந்தோஷ் நாராயணன் தனமாக அமைந்தன. 
இறுதிச் சுற்று படத்தின் “ஏ சண்டக்காரா” கவனிக்கப்பட்டது.
“தகிட தகிட” என்ற ஒற்றைப் பாடல் “காஷ்மோரா” வின் பாடல்களில் தனித்து விளங்கினாலும் இந்தப் படப் பாடல்கள் கால நேரத்தோடு படத்தின் வெளியாக்கத்துக்குச் சில மாதங்களுக்கு முன் வந்திருந்தால் இன்னும் பரவலாகப் போ ய்ச் சேர்ந்திந்திருக்கும் முத்திரைகள் உண்டு.
‘ கொடி” பாடல்களும் சந்தோஷ் நாராயணனுக்கு ஓரளவே பெயர் கொடுத்தவை.
இந்த 2016 ஆம் ஆண்டில் தன்னுடைய தனித்துவத்தை விடாது கொடுத்த பாடல்கள், விட்டுக் கொடுத்த பாடல்கள் என்ற வகையில் இரண்டாவது நிலையில் தற்போது வந்த “பைரவா” பாடல்கள் அமைந்திதிருக்கின்றன.
தமிழ் சினிமா வில் காலத்துக் காலம் ஒரு இசையமைப்பாளர் காட்டில் மழை பொழிந்து கொண்டிருக்கும். மள மளவென்று படங்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.  அதற்கு உதாரணமாக ஒரு காலத்தில் தேவா இப்போது டி.இமான்.
“முன்னாள் காதலி’ https://www.youtube.com/shared?ci=QkfwyZ3kW8k என்று வெறி பிடித்துப் பாடும் பாடல் வகையறாவில் இருந்து , “மிருதா மிருதா’ https://www.youtube.com/shared?ci=jG6Frsf5Eu0 என்று மென் சோகப் பாடல்கள் வரை இந்த 2016 ஆண்டு டி.இமானுக்கான இன்னொரு கல்யாண மேள ஆண்டு.
“கண்ணைக் காட்டு போதும்” https://www.youtube.com/shared?ci=aX93o5hCthU (றெக்க) பாடலைக் குமுதம் அரசு கேள்வி பதிலில் வாசகர் கேள்வியாக அமை ந்ததில் இருந்தும், ஹன்சிகாவின் பேட்டியில் தனக்கு “செந்தூரா”  https://www.youtube.com/shared?ci=zy8CTiowjC4 (போகன்) பாடல் பிடிக்கும் என்று சொல்லியதில் இருந்தும் டி.இமான் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார் என்று புரியும்.
தனக்கு மறுவாழ்வு அளித்த பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவான தொடரிக்காக
“போன உசிரு வந்திருச்சு” https://www.youtube.com/shared?ci=F-7IH8sZUFE பாடல் இந்த ஆண்டின் ஹிட் ரகத்தில் சேர்ந்ததது.
பிரபு சாலமன் இயக்கினாலோ தயாரித்தாலோ ஒரே மாதிரித் தான் கொடுக்க வேண்டும் என்று டி.இமான் கங்கணம் கட்டியிருப்பார் போல. பிரபு சாலமன் தயாரிப்பில் “ரூபாய்” திரைப்படத்துக்காகக் கொடுத்த “உன் கூடப் பேசத் தானே” https://www.youtube.com/shared?ci=ynu5rJmo1lw பாடலைக் கேட்ட போது அவ்வாறே தோன்றியது.
“அடடா இது என்ன” (தொடரி), “கண்ணம்மா கண்ணம்மா” (றெக்க), “அடியே உன்னைப் பார்த்துட நான்” (வெற்றிவேல்) போன்ற பாடல்களும் 2016 இல் டி.இமான் இசையில் கவனத்தை ஈர்த்த பாடல்கள்.
2016 ஆம் ஆண்டின் திரையிசைப் பாடல்களைப் பொறுத்தவரை இந்தக் கட்டுரையில் தொட்டுச் செல்லாத பாடல்கள், இசையமைப்பாளர்கள் இன்னும் உண்டு. இங்கே கோடிட்டுக் காட்டியவை முக்கியமான சிலதுகள் தான். 
இது இளையவர்களின் காலம், வளர்ந்து வரும் இளம் இசைமைப்பபாளர்களும், பாடலாசிரியர்களுமாக இளையவர்களே அதிகளவில் வெற்றியைப் பங்கு போட்ட காலமாகவே 2016 இன் தமிழ்த் திரையிசையைப் பார்க்க முடிகிறது.
2017 ஆம் ஆண்டின் திரையிசை எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்போம். 
(நிறைந்தது)
கடந்த பதிவுகள்
பாகம் 1
http://www.radiospathy.com/2016/12/2016.html
பாகம் 2
http://www.radiospathy.com/2016/12/2016_21.html
பாகம் 3
http://www.radiospathy.com/2016/12/2016_22.html

தமிழ்த் திரையிசை 2016 அலசல் – பாகம் 3

நிவாஸ் கே பிரசன்னா ?
ஷான் ரால்டன் ?
லியோன் ஜேம்ஸ் ?
அஜீஸ் ?
“கொஞ்சிப் பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா” https://www.youtube.com/shared?ci=U2ZZRzXUiwE  இந்தப் பாடலைப் பற்றி எழுதும் போது உலகத்தின் ஏதோவொரு மூலையில் ஏதோவொரு வானொலி இந்தப் பாட்டை ஒலிபரப்பிக் கொண்டிருக்கலாம். அவ்வளவுக்கு இந்த ஆண்டு ஏகோபித்த ஜனரஞ்சக அந்தஸ்து பெற்ற பாட்டு. 
சிங்கப்பூர் ஒலி வானொலியில் 35 வாரங்களைக் கடந்து முதலிடத்தைத் தக்க வைத்த பாட்டு. ஏலவே மற்றைய வானொலிகளின் இசை அணித் தேர்வுகளிலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கும் பாட்டு. இப்படியான கெளரவமெல்லாம் எடுத்த எடுப்பில் ஒரு புதுமுக இசையமைப்பாளருக்குக் கிடைப்பது வரம். அந்த வரம் இந்த ஆண்டு “சேதுபதி” படத்தின் வாயிலாக நிவாஸ் கே பிரசன்னாவுக்குக் கிட்டியிருக்கிறது.
“உன்னால காக்கிச் சட்டை கலரு ஆச்சு” https://www.youtube.com/shared?ci=-qkeK-gryiU பாடலும் கூட சேதுபதி படத்தின் வெற்றியில் பங்கு போட்ட பாடல்களில் ஒன்றாக அடுத்து அமைந்தது. 
அனுருத் குரலில் “ஹே மாமா” https://www.youtube.com/shared?ci=tm6EA6xDOs8 ஒரு அட்டகாசத் துள்ளிசை. போலீஸ் படங்களுக்கு இம்மாதிரியான நிறம் கொண்ட துள்ளிசை கொடுத்தால் அதன் கெத்தே தனி தான். சூப்பர் போலீஸ் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் “சுந்தரா நீ யாரடா” என்ற பாடலைக் கொடுத்து இன்பக் கலவரம் ஏற்படுத்தியது நினைவுக்கு வருமளவுக்கு “ஹேய் மாமா” பாடல் சிறப்பு மிகுந்ததாக இருக்குறது.
சேதுபதி படத்தைத் தயாரித்த மெல்பர்ன் வாழ் நண்பர் ஷண் சுதர்சனுக்குப் படத்தின் வெற்றியை விட இந்தப் பாடல்களின் வெற்றி இன்னும் இனிப்பாக அமைந்திருக்கும்.
 “தெகிடி” படம் மூலமாக அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னாவுக்கு ஒரு ஆண்டு இடைவெளி கொடுத்து 
2016 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார் சேதுபதி.
“விண்மீன் விதையில்” https://www.youtube.com/shared?ci=acJj0nBKhwY (தெகிடி) பாடலின் நீட்சியோ எனப்பட்டது நிவாஸ் கே பிரசன்னா இந்த ஆண்டு கொடுத்த இன்னொரு படமான “ஜீரோ” படப் பாடல்கள். சேதுபதி படப்பாடல்கள் அளவுக்குப் பிரபலமாக இல்லாவிட்டாலும் “உயிரே உன் உயிரென நானிருப்பேன்” https://www.youtube.com/shared?ci=tKeHrDuf8nQ பாடலைக் கேட்டால் சேதுபதிக்கு சற்றும் சளைத்ததல்ல என்று சொல்ல வைக்கும். இந்தப் படத்தின் பாடல்களில் You are in my heart https://www.youtube.com/shared?ci=64vfg25cJ6g ஒரு ஆங்கிலப்பாட்டும் இருக்கிறது. பாடலைக் கேட்டுக் கொண்டே போங்கள். பாடல் முடிவில் ஒரு வயலின் ஆலாபனை இருக்கும். அப்படியே நெஞ்சைக் கிள்ளி விடும்.
ஜீரோ படத்தின் ஒட்டுமொத்தப் பாடல்களைக் கேட்ட போது இந்த இசைத் தொகுப்பு முழுவதுமே மென் மெலடியாக இருக்கவேண்டும் என்று முடிவு கட்டி இசையமைத்தது போல் இருக்கும்.
கேட்டுப் பாருங்கள் https://www.youtube.com/shared?ci=QW0nYoo04i0
இளம் இசையமைப்பாளர்கள் தமக்குள் ஒற்றுமையாக ஒருவர் இசையில் இன்னொருவர் என்று பாடகராகவும் பங்களிக்கிறார்கள். “அடியே அழகே” பாடலை ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடிய ஷான் ரால்டன் அடிப்படையில் ஒரு இசையமைப்பாளர். அவருக்கு இந்த ஆண்டு வரவாக “ஜோக்கர்” படம் இசையமைக்க வாய்த்தது. இந்தப் படத்தின் கதையோட்டத்தை வைத்துக் காட்சிச் சூழலுக்கு இவர் கொடுத்த இசையில் “செல்லம்மா” மனதில் நிற்கிறது.
நடிகர் தனுஷ் ஜோக்கர் படத்தைப் பார்த்த பின் ட்விட்டரில் வெகுவாகப் பாராட்டியிருந்தார். அதன் தொடர்ச்சியோ என்னமோ ஜோக்கர் பட இசையமைப்பாளர் ஷான் ரால்டனைத் தனது இயக்கத்தில் வரும்  “பவர் பாண்டி” படத்துக்கு இசையமைக்க வைத்திருக்கிறார். இதன் மூலம் கிட்டிய பெரிய வாய்ப்பைத் தக்க வைப்பாரா என்று அடுத்த ஆண்டு வரை காத்திருந்து அறிவோம்.
இன்றைய திரையிசைச் சூழலில் ஏகத்துக்கும் இசையமைப்பாளர்கள் இறைந்து கிடப்பதால் வாய்ப்புக் கிடைத்தால் போதும் என்ற நிலை நல்ல திறமைசாலிக்கு ஒரு சவாலை ஏற்படுத்துகிறது. அதாவது என்னதான் தன் திறமையைக் கொட்டி இசையமைத்தாலும் கிடைக்கும் படைப்பு சேதாரமாக இருந்தால் அந்த நல்லிசையும் சேர்ந்து ஒடுங்கி விடும் அபாயம் உண்டு. அந்த மாதிரியான ஒரு இடர் தான் லியோன் ஜேம்ஸ் இற்கு.
ஏ.ஆர்.ரஹ்மானின் பாட்டுக் குழுவில் இருந்த நோயல் ஜேம்ஸ் இன் மகன் லியோன் ஜேம்ஸ் “காஞ்சனா” படத்தில் “வாய்யா என் வீரா” என்ற ஒற்றைப் பாடலில் அறிமுகமாகிய இவருக்கு
 “கோ 2” படம் முழுமையான பாடல்களைக் கொடுத்த வகையில் இசையமைப்பாளராக அறிமுகமாக்கியது. கடந்த ஆண்டு இறுதியில் பாடல்கள் வெளியாகிய நிலையில் இந்த ஆண்டு தான் “கோ 2” படம் வெளியானது. இதில் “கண்ணம்மா” https://www.youtube.com/shared?ci=q42z9sLfkK8 பாடல் பரவலாக இசை ரசிகர்களைச் சென்றடைந்தது. 
அதைத் தொடர்ந்து “கவலை வேண்டாம்” பட வாய்ப்பு . “உன் காதல் இருந்தாப் போதும்” 
https://www.youtube.com/shared?ci=Rc8SqP-gN4I  என்ற பாடல் வானொலிகளால் புகழடைந்தது. லியோன் ஜேம்ஸ் தான் இசையமைக்கும் படப் பாடலில் ஒன்றை எடுத்து இரண்டு வடிவில் கொடுப்பது வழக்கம். இந்தப் பாடலையும் வந்தனா ஶ்ரீனிவாசனை வைத்து இன்னொரு அழகிய மெலடியைக் https://www.youtube.com/shared?ci=YCBV_U00Kos  கொடுத்திருக்கிறார். இருந்தும் என்ன இந்த இரண்டு படங்களும் லியோன் ஜேம்ஸ் கொடுத்த பாடல்கள் அளவுக்கு உழைக்கவில்லை.
“நீ உறவாக ஆசை” https://www.youtube.com/shared?ci=fCcfp8D7vKA இந்தப் பாட்டை முதலில் கேட்ட போது ஐஸ்கிரீம் திரளையை வாயில் போட்டது போல ஒரு குளிர்மையை மனதில் உணர்ந்தேன். யாரோ ஒரு பெரிய இசையமைப்பாளராக இருக்கும் என்று நினைத்துப் பாடலின் பின்னணியை நோண்டினால் இசையமைப்பாளர் அஜீஸ் என்று அறிந்து பிரமிப்பு. அற்புதமான மெலடிப் பாடலை ஸ்ரேயா கோசல், ஹரிச்சரண் குரலில் படவைத்தது இன்னும் வெளிவராத “பாம்புச் சட்டை” படத்துக்காக. விஜய் டிவி சூப்பர் சிங்கர் வெற்றியாளர், பின்னர் கோவா படத்தின் “இதுவரை இல்லாத” பாடல் மூலம் இதுவரை பயணப்பட்ட அஜிஸ் இற்கு பாம்புச் சட்டை படத்தில் கிட்டிய இசையமைப்பாளர் பணியைச் சிறப்பாக எடுத்திருப்பது இந்தப் பாடலில் தெரிகிறது. இதே படத்துக்காகக் கொடுத்த “நீயும் நானும்”
https://www.youtube.com/shared?ci=vF27ra8I-Oc
 பாடலும் அழகாக வந்திருக்கிறது.
நிவாஸ் கே.பிரசன்னா, லியோன் ஜேம்ஸ், அஜிஸ் போன்றோர் சின்னத்திரை இசைப் போட்டிகளில் தம்மை வெளிப்படுத்திப் பெரிய வாய்ப்பைப் பிடித்திருப்பது சிறப்பு.
(தொடரும்)
முந்திய பதிவுகள்
தமிழ்த் திரையிசை 2016 அலசல் அறிமுகம்
http://www.radiospathy.com/2016/12/2016.html
இசை இளவல் ஜஸ்டின் பிரபாகரன்
http://www.radiospathy.com/2016/12/2016_21.html

தமிழ்த் திரையிசை அலசல் 2016 – இசை இளவல் ஜஸ்டின் பிரபாகரன்

“கண்ணக் கட்டிக் காட்டில் விட்டுப் போறாளே கண்ணழகி கண்ணழகி தானே” https://www.youtube.com/shared?ci=Cld8cBAMpTc  இந்தப் பாடல் வெளி வந்து சில வாரம் தான் ஆகியிருக்கிறது. ஆனால் இப்போது அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இத்தனைக்கும் பாடல் இடம் பெற்ற “காலக் கூத்து” என்ற இந்தப் படமே இன்னும் வெளிவராத நிலையில் பாடலைத் தேடிக் கேட்க வேண்டும் என்ற தூண்டுதலை உண்டு பண்ண முக்கிய காரணம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தான். அவ்வளவு தூரம் இசை ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இடம் பிடித்திருக்கிறார்.
ஒரு திரைப் படைப்பாக்கத்துக்கு வெறும் நாலு பாடல்களை இசையமைத்துப் பிரபலப்படுத்தி விட்டுப் போய் விட்டால் சரி என்ற நிலையில் தான் சமீபகாலப் போக்கு நிலவுகிறது. ஆனால் குறித்த திரைப்படத்தின் பின்னணி இசையும் உயிர் நாடி என்பதையும் உணர்ந்து சிரத்தையோடு இசை பண்ணிக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. அந்த மிகச் சிலரில் ஜஸ்டின் பிரபாகரன் ஒரு முழுமையான இளைய தலைமுறை இசையமைப்பாளர். அதனால் தான் அவருக்கு “இசை இளவல்” என்ற பட்டம்  இட்டேன்.
“பண்ணையாரும் பத்மினி” படத்தில் தொடங்கி இன்று வரை இவர் இசையமைத்த படங்களைத் தேடி நுகர்வோர் இதை உணர்வர்.
இந்த ஆண்டைப் பொறுத்தவரை “ஒரு நாள் கூத்து” திரைப்படம் ஜஸ்டின் பிரபாகரனுக்கு அழகிய பூங்கொத்தைக் கொடுத்துக் கெளரவித்தது.
தனிப்பட்ட என் ரசனையில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில், தான் எடுத்துக் கொண்ட கருவை வெகு கச்சிதமாகக் காட்சியமைப்போடும் உணர்வு பூர்வமாகவும் கொடுத்த படமாக “ஒரு நாள் கூத்து” படத்தையே முன் வைப்பேன்.
“எப்போ வருவாரோ” https://www.youtube.com/shared?ci=iq4nXbb9ols என்ற கோபால கிருஷ்ணபாரதியாரின் பாடலை மீள் இசையில் அழகாக வடிவமைத்ததோடு ஹரிச்சரணின் பொருத்தமான குரலையும் சேர்த்ததால் ஆகத் திறமான படைப்பாக இந்தப் படத்தின் கதையோட்டத்துக்குத் துணை புரிந்திருக்கிறது.
அத்தோடு “அடியே அழகே” https://www.youtube.com/shared?ci=wF5NOayV9Ug பாடலில் தோய்த்தெடுக்கப்பட்ட காதல் பிரிவின் துயர் காட்டும் அழகியல். இது ஆறு மில்லியன் பார்வையைக் கடந்திருக்கிறது YouTube இல்.
அத்தோடு துள்ளிசை ஏரியாவிலும் கலக்குவேன் என்று காட்டிய “பாட்டைப் போடுங்க ஜி” https://www.youtube.com/shared?ci=emnxMbcqfhg என்று பண்பலை வானொலிகளுக்குச் செமத்தியான தீனியைக் கொடுத்திருக்கிறார். “ஒரு நாள் கூத்து” பாடல்கள் கடந்த ஆண்டே வெளியாகி விட்டாலும் இந்த ஆண்டு படமும் பாடல்களும் ஒரு சேரப் பரவலாகப் போய்ச் சேர்ந்தன.
ஒரு திகட்டத் திகட்ட காதல் பின்னணி கொண்ட ஒரு படம் ஜஸ்டின் பிரபாகரனுக்குக் கிட்டினால் மனுஷர் அடி பின்னி விடுவார் போல அத்தனை இசைக் குணவியல்புகளும் அவருள் இருக்கின்றன.
தொடர்ச்சியாக நல்ல படைப்புகளில் பணியாற்றக் கிடைப்பது ஒரு வரம். அத்தகு நிலை ஜஸ்டின் பிரபாகரனுக்குக் கிட்டியிருப்பதை இந்த ஆண்டில் வெளிவந்த “ராஜா மந்திரி” படமும் நிரூபித்தது.
ஏற்கனவே பண்பலை வானொலிகளின் ஆசீர்வாதம் வேறு இவருக்கு இருப்பதால் “லெகுவா வெகுவா” 
https://www.youtube.com/shared?ci=uf8sP05ABQc பாடல் தான் இந்தப் படத்தில் எனக்கு முதலில் பிடித்துப் போன பாடலாக அமைந்தது. படம் பார்க்கும் போது அப்பாவிக் கிராமத்தான் படிக்காத அண்ணன் காளி வெங்கட்டுக்கு அச்சொட்டாகப் பொருந்தக் கூடிய குரலாக ஏ.சி.எஸ்.ரவிச்சந்திரனை வைத்து “எதிர்த்த வீட்டு காலிஃபிளவரே” https://www.youtube.com/shared?ci=k_mT-UL0Xq8 பாடல் வரிகளில் கூட அந்தக் காட்சி நுட்பத்தை உணர்ந்த வகையில் கொடுத்து வசீகரித்தது. இன்னொன்று “ஸ்நேகிதியே ஸ்நேகிதியே நீ சிரித்தால் போதுமடி” https://www.youtube.com/shared?ci=1ymXr0vFOrA என்று தன் அக்மார்க் மெலடி அட்டகாசத்தையும் காட்டி விட்ட வகையில் “ராஜா மந்திரி” படப் பாடல்களும் முத்திரைப் பாடல்களாக அமைந்தன.
“காலக் கூத்து” மற்றும் “உள் குத்து” படங்கள் இன்னும் வெளி வரவில்லை. காலக் கூத்து படத்தில் ஹரிச்சரணுக்கு அழகிய பொருத்தமாக அமைந்த “கண்ணை கட்டிக் காட்டில் விட்டுப் போறாளே” பாடல் தற்போது வெளியாகியிருக்க மீதிப் பாடல்களுக்குக் காத்திருக்கிறோம்.
உள் குத்து படத்திற்காகக் கொடுத்த
“பெசையும் இசையா என் காதுக்குள்ள கேக்குறான்” https://www.youtube.com/shared?ci=-nz1qMqPdVQ வந்தனா ஶ்ரீனிவாசனுக்குக் கிடைத்த இன்னொரு பொக்கிஷப் பாட்டு. இதே படத்தில் இடம் பிடித்த “குறு குறு கண்ணால்” பாடல் உருவாக்கத்தை முதலில் பார்த்து விட்டு https://www.youtube.com/shared?ci=v3PCYnOlR6Y பின்னர் அதைத் தனியே கேட்கும் இன்பமே தனி https://www.youtube.com/shared?ci=QHeBmT55v1k
இந்தப் பாடலை லதா கிருஷ்ணாவுடன் ஜஸ்டின் பிரபாகரனும் இணைந்து பாடியிருக்கிறார்.
கொசுறுச் செய்தியாக மலையாளக் கரையோரம் போய் “குஞ்சி ராமாயணம்” 
அந்தப் படப் பாடல்களைக் கேட்க 
https://www.youtube.com/shared?ci=XF5_QavpqXo
புதுப் புது இயக்குநர்களோடு ஒவ்வொரு படம், இன்னார் மட்டும் என்றில்லாமல் எல்லாப் பாடலாசிரியர்களோடும் பணி புரியும் திறன் போன்றவை இவருக்குக் கிட்டிய மேலதிக பெறுமதிகள்.
ஜஸ்டின் பிரபாகரன் என்ற மிகச் சிறந்த இளம் படைப்பாளிக்குத் தேவை ஒரு பரவலான மக்கள் வட்டத்துக்குச் சென்று சேரக் கூடிய ஒரு நட்சத்திர வெற்றி. அதை வெளி வர இருக்கும் படங்களோடு 
சமுத்திரக்கனி இயக்கத்தில், காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் தயாரித்துக் கொடுக்கவிருக்கும் “தொண்டன்” படம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
(தொடரும்)
இந்தத் தொடரின் முந்திய பதிவு
http://www.radiospathy.com/2016/12/2016.html

தமிழ்த் திரையிசை 2016 அலசல்

ஒரு படைப்பை ஜனரஞ்சகப்படுத்துவதில் முக்கிய காரணிகளில், ஒன்று அந்தப் படைப்பு மீதான நுகர்வோரின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் விளையும் தானாக எழும் எதிர்பார்ப்பு, இன்னொன்று குறித்த படைப்பைச் சந்தைப்படுத்தும் பாங்கினால் நுகர்வோரைத் தேடிச் சென்று அவர்களை ஆட்கொள்வது என்ற ரீதியில் அமைந்திருக்கும். இது திரையிசைப் பாடல்களுக்கும் பொருந்தும்.
கடந்த பல ஆண்டுகளாக அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை வைத்துச் செய்யும் அலசலை இந்த ஆண்டிறுதியிலும் செய்ய முனைந்துள்ளேன்.
இதற்கிடையில் இருவேறு திசைகளில் இருந்து இந்த மாதிரி ஒரு பகிர்வைத் தத்தம் பத்திரிகைகளுக்குக் கொடுக்குமாறு நண்பர்கள் கேட்டிருந்தாலும் இதைக் கொடுப்பதற்கான மன ஆர்வம் பரிபூரணமாக இல்லாததால் தட்டிக் கொண்டே போனது. இப்போது கை கூடியிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் திரையுசையின் போக்கில் இன்னார் தான் என்றில்லாமல் ஒரே ஆண்டில் பல்வேறு புதுப் புது இசையமைப்பாளர்கள் தம் வல்லமையைக் காட்டி ரசிகர்களைக் கட்டியிழுக்கும் ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது. இதனால் புதுப் புது உத்திகளையும், பாய்ச்சலையும் இசையமைப்பாளர்களால் காட்ட முடிகின்றது.
2016 ஆண்டைப் பொறுத்தவரை பாடலாசிரியர் முத்துக்குமாரின் அகால மரணம் தான் தமிழ்த் திரையிசை உலகின் முதற்பெரும் தாக்கமாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பாடலாசிரியர் அண்ணாமலையின் மரணமும் பாடலாசிரியர்களைத் தேடி அறிந்து கொள்ளும் இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்தது.
ஆனால் இந்த ஆண்டின் முற்பகுதியில் காலமான பாடலாசிரியர் கவிஞர் காளிதாசனின் இறப்பைப் பரவலாக அறிந்து உணராததைக் கவலையுடன் பார்க்கிறேன். தேனிசைத் தென்றல் தேவாவின் ஆரம்பகாலத்துப் பாடல்களில் குறிப்பாகக் கிராமிய மணம் கொண்ட பாடல்களில் கவிஞர் காளிதாசன் கொடுத்த பங்களிப்பு மிகப் பெரிது. அவரை வானொலிப் பேட்டியெடுக்கப் பல்லாண்டுகளாகத் தேடியும் எனக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. இறப்புச் செய்தி தான் வந்து சேர்ந்தது பெருந்துயரம்.
பாடகர் என்ற வகையில் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இழப்பை ரசிக உலகம் கவலையோடு எதிர்கொண்டது. 
ஒரு சில பாடல்கள் பாடிச் சென்றாலும் “அம்மா என்றால் அன்பு” பாடல் வழி பிரபலமாகிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இழப்பையும் தமிழ்த் திரையிசையின் துயர் பகிரும் பக்கங்களில் பதிய வேண்டும்.
இசைத்தட்டையும், ஒலி நாடாவையும் தேடி ஓடிக் கேட்ட காலம் கடந்து இன்று தனிப் பாடல் பகிர்வு, பின்னர் கொஞ்சக் காலம் இடைவெளி விட்டு
அனைத்துப் பாடல்களும் வெளியீடு என்று YouTube ஐ நம்பிய பொறிமுறை அமைந்திருக்கிறது. குறித்த பாடலின் உருவாக்கத்துக்கு முந்தியே அவற்றை ஒலியேற்றும் போது வரிகளை ஆங்கிலத்தில்  கொடுப்பது (தமிழிலும் கொடுக்கும் இரட்டை முறைமை வர வேண்டும்) , பாடகர், படம் மட்டுமன்றி பாடலாசிரியர், இசையமைப்பாளர், இன்னும் குறித்த பாடலுக்குப் பின்னால் தொழில் நுட்ப ரீதியில் உழைத்தவர்களின் விபரங்களை அந்தந்தப் படங்களின் பாடல் உரிமம் பெற்ற நிறுவனங்களே உயர் ஒலித்தரத்தில் கொடுப்பது நல்ல விடயம்.
அத்தோடு iTunes மற்றும் Google Play வழியாகவும் கட்டண முறையில் கேட்கும் முறைமை இயங்கினாலும் அவற்றைத் தமிழ்ச் சூழல் உள்வாங்குவது மிகவும் குறைவாக இருப்பதையே அவதானிக்க முடிகிறது.
இந்த நிலையில் Doopadoo தளம் http://www.doopaadoo.com/அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 9 மாதங்களுக்குள் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. இது Raaga மற்றும் Saavn இசைத்தளங்களின் பாவனையாளரைக் கணிசமாக உள்வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரபல பாடகர்கள், பாடலாசிரியர்களால் இந்த Doopadoo தளம் பிரபலப்படுத்தப்பட்டுள்ளதுடன் படங்களின் எழுத்தோட்டத்திலும் கூட விளம்பரப்படுத்தப்படுலின்றது.
தற்போது US மற்றும் Australia வில் கிட்டும் YouTube Red எனும் முறைமை எதிர்காலத்தில் பாரிய இசை நுகர்வோர் சந்தையை உள்வாங்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. 
YouTube Red இல் என் இசை அனுபவம் இதோ
கடந்த சில மாதங்களாக கட்டற்ற இன்னிசையைப் பருக ஒரு புதிய வழித்தடத்தைக் கண்டுள்ளேன். அதுதான் YouTube Red.
பாடல் பிரியர்களுக்கு இதுவொரு அருமையான படைப்பு. பணியிடம் நோக்கிய பயணத்தின் போது YouTube இல் பாட்டுக் கேட்டுக் கொண்டே தட்டச்சு வேலைகளோ அல்லது சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவது என்பதோ சாத்தியமில்லாத ஒன்று. 
பாடல் கேட்பதற்கு முதல் தெரிவாக YouTube ஐ நாடுவதற்குக் காரணம் விரும்பிய பாடலை அந்த நேரத்தில் இருக்கும் நமது மனவோட்டத்துக்கேற்ப கேட்க முடிவது தான். அத்தோடு  எத்தனை பாடல்களைத் தான் கைப்பேசியில் நிரப்பி வைப்பது? இப்போது புதிய பாடல்களைக் அதி திறமான ஒலித்தரத்தில் YouTube இல் தான் குறித்த படப் பாடல்களின் ஒலிப்பதிப்பு உரிமம் பெற்ற நிறுவனங்களே வெளியிடுகின்றன. அத்தோடு பழைய, இடைக்காலப் பாடல்களையும் மேம்படுத்தப்பட்ட ஒலியோடு தனி நபர்கள் மற்றும் இளையராஜாவின் அதிகாரபூர்வப் பக்கம் போன்றவை கொடுக்கின்றன. கட்டற்ற இலவசமான சேவை என்பதால் இது சாத்தியம். எனக்கெல்லாம் SoundCloud காரன் செய்த சந்தா மோசடியால் இப்படியான தளங்களை விட்டு YouTube தான் கதி என்று ஆகிவிட்டது.
Smart Phone யுகம் வந்ததில் இருந்து பெருங்குறையாக இருந்தது சமகாலத்தில் YouTube இல் காணொளியை இயக்கி விட்டு இன்னொரு காரியத்தைச் செய்ய முடியாத நிலை. இந்த Multitasking முறைமைக்கு (Background Play) YouTube Red வழியேற்படுத்துகிறது. இப்போதெல்லாம் ஒரு பாடலைப் பற்றி எழுத வேண்டுமென்றால் பின்னணியில் YouTube இல் பாடலை ஒளிக்க(ஒலிக்க) விட்டு அதை ரசித்தவாறே iPhone Notes இல் எழுத ஆரம்பிப்பேன். 
YouTube இல் ஒரு பாடலைக் கேட்க ஆரம்பிக்கும் போதோ அல்லது ஒரு நிகழ்ச்சி/படத்தைப் பார்க்கும் போதோ இடையில் விளம்பரம் வந்து அறுக்கும் என்ற நிலையும் YouTube Red இனால் களையப்பட்டுள்ளது.
இன்னொரு மிக முக்கியமான அனுகூலமாக YouTube இல் விரும்பிய பாடலையோ, படத்தையோ Offline  பாவிக்க வழி செய்கிறது. இணைய இணைப்பு இருக்கும் போது வேண்டியதை Offline Video வாக இறக்கி விட்டு, இணையப் பாவனையைச் சேமிக்க வேண்டி இந்த முறைமையைப் பயன்படுத்தலாம். அத்தோடு பயணம் போகும் போது iPad இல் YouTube இலிருக்கும் தேவையான படங்களை இறக்கி விட்டுப் பார்க்கலாம்.
இந்த YouTube Red பரவலான கவனத்தை ஈர்த்து வெற்றிகரமான செயலியாக அமையும் பட்சத்தில் எதிர்காலத்தில் நேரடி ஒலி, ஒளிபரப்புகள் கூடத் தங்கு தடையின்றி அஞ்சல் செய்யும் வாய்ப்பு அதிகமாகும். அத்தோடு பாடல்களைக் கேட்பதற்கான ஒரே செயலியாக இதையே சார்ந்திருக்கும் வாய்ப்பும் பெருகும். YouTube Red மாதாந்தக் கட்டணமாக 10 அமெரிக்க டாலர் அறவிடப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு YouTube Red சென்று சேர்ந்துள்ளதா தெரியவில்லை. அப்படியாயின் அந்தந்த நாட்டுக் கணக்கு வழக்கின்படி நியாயமான கட்டணத்தை அறவிடலாம்.
சரி இனி 2016 ஆம் ஆண்டில் மூத்தவர்களும் இளையவர்களுமாகக் கொடுத்த பாடல்களில் வென்றதும், மனதில் நின்றதும், நொந்ததும் என்று அடுத்த பகிர்வுகளில் பார்ப்போம். இது என் தனி ஆவர்த்தனம் என்பதால் பகிர்வில் கொடுக்கப் போகும் பாடல்களில் பெரும்பாலானவை சுய ரசனை, என் காதுக்கெட்டிய வானலைப் பகிர்வுகளாக இருக்கும்.
முதலில் இசை இளவல் ஜஸ்டின் பிரபாகரன் கொடுத்து இன்னும் வெளிவராத படத்தில் இருந்து மனதைக் கொள்ளை கொண்ட பாடலோடு. அந்தப் பாடல் எதுவென்பதை அறிய அடுத்த பதிவு வரை காத்திருங்கள் ?

நானொன்று கேட்டால் தருவாயா

நானொன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியுமென்றால்
நிலவுக்குக் கூட்டிப் போவாயா
நடந்திடுமா அது நடந்திடுமா

அன்பே கதை அல்லவோ

அன்பின் கதை சொல்லவோ
சேர்ந்து ஒரு பாடல் ஓஓஓஓஓஓஓ
நானொன்று கேட்டால் தருவாயா
கண்கள் எழுதும் ஒரு கடிதத்திலே
கண்ணமுதக் கவிதைகள் விளங்கியதா
கற்பனைகளைச் சொல்லும் கவிதைகளில்
சொல்வதென்றும் உண்மையில்லை புரிகிறதா
என் பாடல் செல்லுமிடம் எங்கேயென 
நீயே சொல்வாய்
உன் பாடல் நான் சொல்லவோ
என் பாதை வேறெல்லவோ
இதயம் தரையில் இறங்காது
இலைக்குச் சிறகு முளைக்காது
சங்கீத மொழி தூது
நானொன்று சொல்வேன் கேட்பாயா
முடிந்ததென்றால் அது முடியுமென்றால்
நீயந்த நிலவை மறப்பாயா
நடந்திடுமா அது நடந்திடுமா
வெண்ணிலவிலே உன்னைக் குடியமர்த்த
தோளில் இரு சிறகுகள் எனக்கில்லையே
குடியிருக்கும் சின்னக் குடிசையிலும்
தேன் நிலவு தென்றலுடன் செல்வதில்லையோ
ஆதாரம் இல்லாமலே கூடாரம் நிற்காதம்மா
ஆதாமின் ஆதாரம் தான் ஏவாளெனும் பெண் தானய்யா
வானம் கையில் அடங்காது
மெளன அலைகள் உறங்காது
சங்கீத மொழிகள் தூது
நானொன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியுமென்றால்
நிலவுக்குக் கூட்டிப் போவாயா
நடந்திடுமா அது நடந்திடுமா
அன்பே கதை அல்லவோ
அன்பின் கதை சொல்லவோ
சேர்ந்து ஒரு பாடல் ஓஓஓஓ
நானொன்று கேட்டால் தருவாயா
???????????????
இசைஞானி இளையராஜா இசையில் இளைய ராகம் படத்துக்காக சித் ராவுடன் அருண்மொழி பாடிய பாட்டிது. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். இடையில் பாடல் வரிகளையும் கேட்டு எழுதி முடித்து விட்டேன்.  எழுதி முடித்த பாடல் வரிகளில் கண்கள் பதியம் வைக்க, பாடலைக் கேட்டுக் கொண்டு வருவது சொர்க்க லோகத்திலும் கிட்டாத இன்பம்.
பாடகர் அருண்மொழியின் குரல் அசாதரணமானது என்று மெய்ப்பிக்க எத்தனையெத்தனை பாடல்கள். அவற்றில் இதுவுமொன்று. அவரின் குரலே ஒரு வாத்தியம் எழுப்பும் நாதம் போலிருக்கும். 
அதிர்ந்து கொடுக்காத அந்த ஒலி அப்படியே ஊடுருவும். பாடல் கேட்டு முடித்த பின்பும் அந்த நாத இன்பத்தை மனது பொச்சடிக்கும்.
நானொன்று சொன்னால் கேட்பீர்களா?
இந்தப் பாடலை இது நாள் வரை கேட்காதவர்கள் இப்போதே ஓடிச் சென்று கேட்டு அனுபவியுங்கள்,
ஒன்றுக்குப் பல முறை 
நடந்திடும்
அது முடியும்