? 2018 தமிழ்த் திரையிசை அலசல் ? ? நிறைவுப் பகுதி ?

? 2018 தமிழ்த் திரையிசை அலசல் ?

? நிறைவுப் பகுதி ?

சமூக வலைத்தளங்களில் நம்முடையே இயங்கிய பதிவர்கள் மற்றும் கலைஞர்கள் திரைத்துறையில் சாதிப்பது சமீப ஆண்டுகளில் மகிழ்ச்சிக்குரிய விடயம். அந்த வகையில் நம்முடைய நண்பர் ஜிரா எனும் கோ.ராகவன் 15 ஆண்டுகளாக வலைப்பதிவு உலகில் செழுமையான, ஆழமான படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். அவர் தொடும் இலக்கியமாகட்டும், திரையிசையாகட்டும் அதில் ஆராய்ச்சி பூர்வமான அணுகுமுறையும், படிப்போருக்குப் புதிய பல விடயங்களைக் காட்டும் பாங்கிலும் எழுதி வருபவர்.

“நாலு வரி நோட்டு” என்ற திரையிசைப் பாடல்கள் பற்றிய தொடர் ஒன்றை சக எழுத்தாளர்கள் என்.சொக்கன், மோகன கிருஷ்ணன் உடன் இணைந்து தனித்தனியாகப் பகிர்ந்து பின்னர் மூவரின் எழுத்துகளும் நூல் வடிவில் வந்திருந்தது.

நம்ம ஜிராவுக்கு 2018 ஆம் ஆண்டு முக்கியமானதொரு ஆண்டாக அமைந்திருக்கிறது.

ஏற்கனவே ஷான் ரால்டன் இசையில் ஒரு பெட்டக நிகழ்ச்சிகான பாடலை எழுதியவர் இந்த ஆண்டு “அமுதா” என்ற திரைப்படத்துக்காக மூன்று பாடல்களை எழுதி, அருண் கோபன் இசை வழியாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் திரையிசையின் முக்கிய ஆளுமைகளான ஜெயச்சந்திரன், சித்ரா இவர்களோடு வினீத் ஶ்ரீனிவாசன் ஆகிய மூன்று பாடகர்களின் குரலும் தன்னுடைய முதல் படத்திலேயே கிட்டிய பெருமையும் ஜிராவுக்கு. தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் துறை தேர்ந்த நம்ம ஜிரா தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பது வரவேற்க வேண்டியதொரு செயற்பாடு.

தொடர்ந்து பாடலாசிரியர் மதன் கார்க்கி ஒருங்கமையில் இயங்கும் DooPaaDoo தளத்துக்காக ஹரிச்சரண் இசையில் இளம் இசையமைப்பாளர் ப்ரித்விக் இசையில் “கனவே” என்ற புதுமையான உரையாடல் பாணி பாடலையும் எழுதியிருக்கிறார் ஜிரா.

பாடலாசிரியராக அடியெடுத்து வைத்திருக்கும் ஜிராவின் அனுபவப் பகிர்வை உரையாடல் பாணியில் பேசியிருந்தோம். அதனைக் கேட்க.

அமுதா படப் பாடல்களைக் கேட்க

https://youtu.be/1Q-O_EbPDHY

சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகி 2018 இல் திரையிசைப் பாடகி என்ற அறிமுகத்தை எட்டியியிருக்கிறார் ஷாலினி JKA. தன்னுடைய கல்லூரிப் பருவத்திலும், பின்னர் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் பாடிய அனுபவம் கொண்டவர், இந்த ஆண்டு சாம் C.S இசையில் வெளியான “கரு” பின்னர் “தியா” என்று பெயர் மாற்றப்பட்ட படத்தில் “கொஞ்சாளி” https://youtu.be/gGBQUO_FBBI என்ற பாடலை சத்ய பிரகாஷ் மற்றும் நேகா வேணுகோபாலுடன் இணைந்து பாடியிருக்கிறார் ஷாலினி. ஒரு கல்யாணப் பாடலுடன் அமர்க்களமாகத் தொடங்கியிருக்கும் அவரின் திரைப் பயணம் தொடரும் ஆண்டுகளிலும் நல்ல பல படைப்புகளை வழங்க வேண்டும்.

இதில் புதுமை என்னவெனில் திரையிசைப் பாடகிக்குண்டான சிறப்பான குரல் வளம் கொண்ட ஷாலினி தன்னுடைய தாய் நாட்டில் இருக்கும் போது எட்டாத திரையுலக வாபு இன்று அவர் புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் சூழலில் எட்டியிருக்கிறது.

பாடகி ஷாலினி JKA உடன் நான் நிகழ்த்திய ஒரு குறும் பேட்டியின் ஒலி வடிவம் இதோ.

2018 ஆம் ஆண்டியின் திரையிசையில் இன்னும் சொல்ல வேண்டிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் முதலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைத் தொட வேண்டும். இந்த ஆண்டு “காலா” படம் வழியாக மீண்டும் இன்னொரு ரஜினி படம் என்ற மாபெரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. ஆனாலும் கபாலி, காலா போன்ற படங்களில் ரஜினியின் முத்திரை இல்லாது பா.இரஞ்சித் படங்களாக அமைந்திருந்ததால் பாடல்களிலும் பெரிய வேறுபாடில்லாத மீள் கலவைகளாகவே அமைந்திருந்தன.

ஆனால் “பரியேறும் பெருமாள்” படம் சந்தோஷ் நாராயணனுக்குச் சரியான தீனி கொடுத்தது. “கருப்பி கருப்பி”

https://youtu.be/5IXdCWhQG78 பாடல் மலேசியாவில் தமிழர் படைக்கும் ரெகே போன்ற வடிவில் எழுந்த அட்டகாசமான பாடல்.

“பொட்டக் காட்டில் பூவாசம்” https://youtu.be/zRnPYVDIiJY பாடலிலும் பழைய “மெட்ராஸ்” சந்தோஷ் நாராயணனைப் பார்க்க முடிகிறது.

பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த “வட சென்னை” முதன் முதலாக வெற்றி மாறன் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரிடமிருந்து வெளியேறி சந்தோஷ் நாராயணன் கூட்டில் இணைந்த படம். வட சென்னை பாடல்களிலும் வெற்றி மாறனோடு இணைந்த கூட்டுக்கு நியாயம் கற்பித்தது சந்தோஷ் நாராயணன் இசை.

பாடல்கள் முன்பே வெளியாகி விட்டாலும் 2018 இல் வெளி வந்த படம் என்ற ரீதியில் “மேற்குத் தொடர்ச்சி மலை” படத்தில் “கேட்காத வாத்தியம்”, “அந்தரத்தில் தொங்குதம்மா” பாடல்கள் படத்தோடு ஒன்றி இயங்கிய இசைப் பாடல்களாக ரசிகர் மனதை ஆட் கொண்டன.

“மகா நதி….மகா நதி” என்ற தலைப்பிசைப் பாடலிலேயே ஈர்த்தவர் இசையமைப்பாள்ர் மைக்கி ஜே. மேயர் அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் படத்தின் மையவோட்டத்தோடு இணைந்து கொடுத்திருந்தது சிறப்பு. மகா நதி படப் பாடல்கள் https://youtu.be/Oh6-QVX-CZQ 2018 இன் திரையிசைப் பாடல்களில் தவிர்க்க முடியாது குறிப்பிட வேண்டியவை.

சிவகார்த்திகேயன் வீட்டில் இருந்து இரண்டு புது வரவுகள். ஒன்று சிவகார்த்திகேயன் பாடலாசிரியராகி அனிருத் இசையில் “கோலமாவு கோகிலா” படத்துக்காக “கல்யாண வயசு” https://youtu.be/qNW9MLk4lF4 பாடலை எழுத, சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா “கனா” திரைப்படத்துக்காக “வாயாடி பெத்த புள்ள” https://youtu.be/00fWlZnZAo0 பாடலை திபு நினான் தாமஸ் இசையில் பாடிக் கலக்கி விட்டார். இரண்டு பாடல்களுமே 2018 இன் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் அமர்ந்து கொண்டன.

“நீயும் நானும் வந்தே” https://youtu.be/dImiR3Sr8Wo இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழாவை “இமைக்கா நொடிகள்” வழியாக மீட்டெடுத்தது.

இவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிட்ட வேண்டும் என்றதொரு எதிர்பார்ப்பைத் தன் பாடல்கள் வழியாகவும், பின்னணி இசை மூலமும் கிளப்புவர் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

இந்த ஆண்டு விஸ்வரூபம் 2 படம் அவருக்குக் கை கொடுக்கா விட்டாலும் ராட்சஷனில் தன்னை நிரூபித்தார். ஜிப்ரானின் இசை என்று அதிகம் அடையாளப்படாமல் போன “ஆண் தேவதை” படப் பாடல்களிலும் சிறப்பாகப் பங்களித்திருந்தார்.

2018 ஆம் ஆண்டில் வெளி வந்த படங்களின் பாடல்களில் பரவலான கவனத்தை ஈர்த்த பாடல்களை ஓரளவு தொட்டுச் சென்றிருக்கிறேன். இவற்றை விடத் தனிப்பட்ட ரீதியில் ரசிகர் மனதைக் கவர்ந்தவை என்ற தொகையில் இன்னும் பல இருக்கும். அவற்றை நீங்கள் பின்னூட்டம் வழியாகவும் அறியத் தரலாம்.

? 2018 தமிழ்த் திரையிசை அலசல் ? பாகம் ஐந்து ? D.இம்மானுக்கு 100, யுவனுக்கு பத்தோடு பதினொன்று

? 2018 தமிழ்த் திரையிசை அலசல் ?

பாகம் ஐந்து

? D.இம்மானுக்கு 100, யுவனுக்கு பத்தோடு பதினொன்று ?

பாடலையும் கேட்க வேண்டும் அதே நேரம் அந்தப் பாடல் அதிகம் மெனக்கெடாமல் சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு வகை ரசிகர் கூட்டம் உண்டு. இம்மாதிரி ரசிகர்களுக்காகவே தொண்ணூறுகளில் தேவா வரமளித்தார். ஏற்கனவே கேட்ட பாடலின் சாயலிலேயே பாடல்களைத் திரும்பத் திரும்பக் கொடுப்பதால் கேட்பவருக்கும் அந்த டியூனைப் பழகவெல்லாம் அதிக காலம் பிடிக்காது. இதே நூலைப் பிடித்து இன்றைய யுகத்தில் இசையமைப்பவர் D.இம்மான். உதாரணத்துக்கு 2018 இல் ஜனங்களைத் தியேட்டர் பக்கம்

அள்ளிய “கடைக்குட்டி சிங்கம்” பாடல்கள் உதாரணத்துக்கு

அட வெள்ளக்கார வேலாயி https://youtu.be/ay92dzwAHZc

சண்டைக்காரி வாடி வாடி https://youtu.be/XtD3KDmstzg

தண்டோரா கண்ணால

சான்று பகிரும்.

அது போலவே சிவகார்த்தியேன் படங்களுக்கு இசையமைக்கும் போதும் சிவகார்த்திகேயனின் முந்திய படங்களில் கொடுத்ததையே மறு சுழற்சி செய்து போட்டு விடுங்கள் என்று இயக்குநர் கேட்பார் போல. “வர்ரும் ஆனா வர்ராது”, “ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல”, “மச்சக்காரி” என்று சீமராஜாவுக்குக் கொடுத்ததெல்லாம் சூடாக்கிய பழைய பலகாரங்கள். இந்த நெடியே “பஞ்சு மிட்டாய்” பாடல்களிலும் அடித்தது. “My wife உ ரொம்ப beautiful லு” பாடல் பஞ்சு மிட்டாய் படம் வழியாக பண்பலை வானொலிகளுக்குக் கிட்டிய ஒரு மாமூல் பாட்டு.

இருப்பினும் D.இம்மானுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தால் விண்வெளியைத் தொடும் இசையைக் கொடுப்பார் என்பதற்கு உதாரணமாக அமைந்தது “டிக் டிக் டிக்” பாடல்கள். அவரது நூறாவது படம் என்பதால் சொல்லி அடித்திருக்கிறார். “குறும்பா” பாடல் வெளியான நாளில் இருந்தே ஹிட்டடித்தது. அது போல யுவன், சுனிதா சாரதி, யோகி B இன் டிக் டிக் டிக் முகப்பிசைப் பாடலும் சுதி ஏற்றும்.

பாடலாசிரியராக மதன் கார்க்கிக்கும், இசையமைப்பாளர் D.இம்மானுக்கும் இவர்களின் திரையிசைப் பயணத்தில் “குறும்பா” பாடல் (சித் ஶ்ரீராம் இன் குரல் வடிவம்) மிக முக்கியமானது என்பேன்.

டிக் டிக் டிக் படப் பாடல்கள்

இந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்திருக்கும் “விஸ்வாசம்” பாடல்களும் D.இமானின் மாமூல் இசையில் வந்திருப்பது ஏமாற்றம். படத்தில் சொல்லக் கூடிய ஒரே மெலடியான “கண்ணான கண்ணே” பாடல் “கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை”யைக் கொஞ்சம் தட்டி நெட்டிப் போடப்பட்டிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா காலம் என்றொன்று இருந்தது என்று சொல்லுமளவுக்கு யுவனின் நிலை. அவருக்குத் தோதான இயக்குநர்களும் இல்லாதது அல்லது தோதான இயக்கு நர்களுடன் சேர்ந்ததும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லாதது 2018 இலும் தொடர்ந்தது.

“ஏ பெண்ணே” https://youtu.be/IGI4jnKn6IU

என்ற பியார் பிரேமா காதல் தான் யுவனின் பாடல்களில் இந்த ஆண்டு அதிக வெளிச்சம் பட்டது.

பேரன்பு, பலூன், செம போதை ஆகாதே, சண்டக் கோழி 2, ராஜா ரங்குஸ்கி, இருமபுத் திரை ஆகிய படங்களில்

“வான் தூறல்” (பேரன்பு)

உயிரிலே உயிரிலே (பலூன்)

அழகே (இரும்புத் திரை)

ஆகிய பாடல்களில் யுவன் தெரிகிறார்.

தாவணி போட்ட தீபாவளி காலத்துச் “சண்டக் கோழி” யோடு ஒப்பிடும் போது சண்டக் கோழி 2 இன்னொரு ஏமாற்றமே.

Zee தமிழ் சரிகமப இசை போட்டியில் வெற்றி கண்ட ரமணியம்மாவுடன், செந்தில் தாஸ் பாடிய “செங்கரத்தான் பாறையிலே” பாடலைப் பண்பலை வானொலிகள் கடனே என்று தள்ளிக் கொண்டிருக்கின்றன.

மாரி 2 பாடல்கள் வந்த எடுப்பிலேயே “ரவுடி பேபி”

https://youtu.be/3nauk_scj9U பாட்டு “இந்தாடி கப்பக்கிழங்கே” (தூள்) படப் பாடலின் தழுவல் என்று கலாய்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இளையராஜா மீண்டும் யுவன் இசையில் பாடியிருக்கிறார் என்ற செய்தி மட்டும் மாரி 2 பாடல்களில் ஒரு செய்தி. மற்றப்படி 2019 இலும் பழைய யுவனுக்காகக் காத்திருக்க வேண்டியது தான்.

இளையராஜாவின் பாடல்களை நகல் எடுத்துத்தான் பாடல் போட்டிருக்கிறேன் என்று வெள்ளாந்தியாக வாக்கு மூலம் கொடுத்த பிரேம்ஜி அமரனின் இசையில் பார்டி படப் பாட்டு “கொடி மாங்கனி” https://youtu.be/RRaPCY7drqc

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா குரல்களில் கேட்டுப் பழகிய ராஜாவின் தொண்ணூறுகள் போலவே இனிக்கிறது.

நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் கணேஷ் நோகாமல் நொங்கு எடுத்த கதையாக “ஏ சின்னப் புள்ள” https://youtu.be/O3tnbbUvFpE என்ற செந்தில் & ராஜலட்சுமி சூப்பர் சிங்கர் (நிஜ) ஜோடியின் பாடலையே உருவி கொஞ்சம் மிளகாய்த் தூள் போட்டுக் கொடுத்த சார்லி சாப்ளின் 2 பாடலும் வானொலிகளின் சம்பிரதாய ஹிட் ஆகி விட்டது.

தொடர்ர்ர்ர்ரும்

? 2018 தமிழ்த் திரையிசை அலசல் ? பாகம் நான்கு ? ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பு ?

? 2018 தமிழ்த் திரையிசை அலசல் ?

பாகம் நான்கு

? ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பு ?

இந்த 2018 இல் தமிழ்த் திரைப்படங்களிலேயே ரஹ்மானின் பங்களிப்பு அதிகம் குவிந்திருந்தது. இதில் இன்னொரு முக்கிய விடயம் இன்றைய தமிழ் சினிமாவின் போக்கைத் தீர்மானிக்கும் முக்கியமான மூவரின் படங்களாக அவை அமைந்திருந்தது தான்.

நடிகர் விஜய் உடன் ரஹ்மானின் முதல் கூட்டணி “உதயா” படத்தின் வழியாக நிகழ்ந்தது. தொடர்ந்து “அழகிய தமிழ் மகன்”. இவையிரண்டும் வணிக ரீதியில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தாதவை. இந்த நிலையை மாற்றியது கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான “மெர்சல்”.

மெர்சல் படத்தின் இலாப நட்ட ஊகங்கள் வெவ்வேறாக இருப்பினும் படத்தினை ஒரு பரவலான வட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் ரஹ்மானின் பாடல்களுக்கு முக்கிய பங்குண்டு. “ஆளப் போறான் தமிழன்” இன்று உசுப்பேத்தும் மொழிப் பற்றுப் பாடலாக இளையோரால் கொண்டாடும் அளவுக்கு இருக்கிறது. “மெர்சல்” கொடுத்த வெற்றியோடு மீண்டும் சன் நிறுவனம் படத் தயாரிப்பில் கால் பதித்த சர்காரும் இந்த ஆண்டில் சேர்ந்து கொண்டது. ஆனால் பாடல்களைப் பொறுத்தவரை உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார் என்ற இறங்கு வரிசையிலேயே நோக்க முடியும். வசூலில் அதிக கவனத்தை ஈர்க்காத முந்திய இரண்டு படங்களின் பாடல்களில் உள்ள அழகு பிந்தியவற்றில் கொஞ்சம் குன்றியே இருக்கிறது. “சர்கார்” படத்தை விஜய் ரசிகர்கள் சுதி ஏற்றி ரசித்தாலும் “ஒரு விரல் புரட்சி” மற்றும் “சிம்டான்காரன்” பாடல்கள் தான் பரவலான கவனத்தை ஈர்த்தன. அதிலும் சிம்டான்காரன் சொல்லுக்கு அரும் பத விளக்கக் தேடிச் சமூக வலைத்தளங்களில் முட்டி மோதிக் கொண்டார்கள்.

இருப்பினும் ரஹ்மான் பாடல்கள் என்பதால் டாப்பு டக்கர் போன்ற மற்றைய பாடல்களும் எஃப் எம் வானொலிகளுக்கு நல்ல தீனி.

சர்கார் பாடல்கள்

“எந்திரன்” திரைப்படம் என்னதான் அறிவியலையும், விஞ்ஞானத்தையும் தொட்டிருந்தாலும் அந்தப் படம் ஒரு பக்கா பொழுதுபோக்கு மசாலா. இனிய பாடல்கள், நகைச்சுவை என்று எல்லாமே கலந்து கட்டியிருந்தன. எட்டு வருடங்களுக்குப் பின் அதன் மறு பாகம் “2.0” ஆக இந்த ஆண்டு வந்த போது இந்தப் பொழுது போக்கு, மசாலா வகையறாவுக்குள்ளும் அடக்க முடியாமல் சமூக சீர்திருத்தப் போதனைக்குள்ளும் திணிக்க முடியாமல் அல்லாடியது. படத்தின் பின்னணி இசையும் வெகு சுமார். இதற்குள் அல்லாடியது ரஹ்மான் போட்டுக் கொடுத்த “எந்திரலோகத்துச் சுந்தரியே”, “ராஜாளி”, “புள்ளினங்காள்” என்ற மூன்று பாடல்கள்.

பெரும் எடுப்பில் 2.0 பாடல்கள் வெளியிட்ட போது உடனடியாக ஈர்க்கா விட்டாலும் ரஹ்மான் பாடல்களுக்குண்டான பாங்கில் மெல்ல மெல்ல இசை ரசிகர்களுக்குப் பிடித்தமானவை ஆகி விட்டன.

இருப்பினும் படத்தில் கடித்துக் குதறப்பட்ட பாடல் காட்சியால் மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாகக் கொடுத்தது. இப்போது மீண்டும் எந்திரன் படப் பாடல்களைக் கேட்டால் அவை எவ்வளவு தூரம் வெகு சிரத்தையோடு பல்வேறு பரிமாணங்களில் கொடுத்த பாங்கு புரியும். புதிய மனிதா பூமிக்கு வா பாடலைக் கேட்டாலேயே இயந்திர மனிதனின் வருகைக்கான அதிர்வலைகளை ஏற்படுத்தும் இசை 2.0 இல் மங்கிப் போனது.

2.0 பாடல்கள்

ரஹ்மான் – மணிரத்னம் மந்திரக் கூட்டணியாவது வேலைக்கானதா என்றால் “செக்கச் சிவந்த வானம்” படமும் கொடுத்த பாடல்கள் ஒன்றையுமே முழுமையாகத் திரையில் பயன்படுத்தாது பாதி தின்றது. ஆனால் பாடல்கள் என்ற கணக்கில் மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்து கூட்டணி சோடை போகாது என்று மீள நிரூபித்தது “செக்கச் சிவந்த வானம்”.

நீல மலைச்சாரல் என்ற மழைக்குருவி பாட்டு, மதுர மரிக்கொழுந்தே , பூமி பூமி, நீ வந்து சென்றனை என்று பாடல்கள் இனித்தன. பாடல்களைக் கேட்டு வாங்கியதில் மணிரத்னம் வெற்றி கண்டார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக மதுர மரிக்கொழுந்தே பாடலில் அப்படியே தொண்ணூறுகளின் ரஹ்மான்.

செக்கச் சிவந்த வானம் பாடல்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு மட்டுமன்றிப் பொதுவான இசைப் பிரியர்களுக்கும் கொண்டாட்டமாக அமைந்தது “சர்வம் தாள மயம்” படத்தின் முன்னோட்டம் வந்த போது. அதை ஈடுகட்டுமாற் போல மதன் கார்க்கியின் வரிகளில் “சர்வம் தாள மயம்” https://youtu.be/d3OZVsHG9TM தலைப்பிசைப் பாடல் வந்த போது “மின்சாரக் கனவு” யுகத்தில் நுழைந்து விட்டது போலக் கொண்டாட்டத்தைக் கூட்டியது அந்தப் பாட்டு. “சர்வம் தாள மயம்” படப் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சுதி ஏத்துகின்றன. இதில் ஒரு புதுமை “வரலாமா” என்ற பாடலை இசையமைத்திருக்கிறார் இயக்குநர் ராஜீவ் மேனன்.

2018 இல் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த இன்னொரு பங்களிப்பு பாம்பா பாக்யா என்ற பாடகரைக் கை தூக்கி விட்டது. இது நாள் வரை சேர்ந்திசைக் குரலாக ஒலித்த பாடகர் பாக்யராஜ் ஐ பிரபல சூபி பாடகர் பாம்பா போலப் பாடச் செய்து அதன் தாக்கத்தில் பாம்பா பாக்யா என்று பெயரையும் சூட்டி விட்டார் ரஹ்மான்.

புள்ளினங்காள் (2.0), சிம்டான்காரன் (சர்கார்), டிங்கு டொங்கு ( சர்வம் தாள மயம்) என்று மூன்று முத்தான பாடல்கள் பாம்பா பாக்யாவுக்குக் கிட்டியிருக்கின்றன. “நெருப்புடா” புகழ் அருண்ராஜ் காமராஜ் முதன் முதலாகச் சர்வம் தாள மயம் வழி ரஹ்மானுக்குப் பாடல் எழுதியிருக்கிறார்.

2.0 இல் “புள்ளினங்காள்”, சர்வம் தாள மயம் படத்தில் “மாயா மாயா” https://youtu.be/4BueIUDPriY என்று இரு பாடல்களோடு நா.முத்துகுமார் பங்களிப்பு ரஹ்மான் இசையில்.

வைரமுத்து, மதன் கார்க்கி, விவேக், அருண்ராஜ் காமராஜ் இவர்களோடு பாடல் இழப்புக்குப் பேரிழப்பாக அமைந்த நா.முத்துக்குமாருடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த இறுதித் திரைப்படம் என்ற வரலாற்ற்றையுக் இந்த 2018 விட்டுச் சென்றிருக்கிறது.

தொடர்ர்ர்ரும்

கானா பிரபா

14.12.2018

2858

❤️ 2018 தமிழ்த் திரை இசை அலசல் ❤️

பாகம் மூன்று

?? 96 ? ?

கரை வந்த பிறகே…..

பிடிக்குது கடலை……

நரை வந்த பிறகே

புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள்

யாவும் கூடியே

இன்றை இப்போதே

அர்த்தம் ஆக்குதே

இன்றின் இப்போதின்

இன்பம் யாவுமே

நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

இப்போதெல்லாம் ஏதோவொரு பண்பலை வானொலி வழியே இந்தப் பாடல் வரும் போதெல்லாம் சிலிர்த்து விடுகிறது. இப்பேர்ப்பட்ட மன நிலையோடு வாழ்ந்து கழித்தவர்கள் இந்தப் பாடலை இதேயளவு நெருக்கமாக உணர்வர். அது விரக்தியோ, சந்தோஷமோ அன்றிக் கவலையோ இல்லாத மோன நிலை. இந்த நிலையிலேயே, இந்த உலகிலேலேயே அப்படியே தங்கி விடுபவர்கள் தான் மேதைகளாக இருக்கிறார்கள். கலைத்துறையில் உச்சம் கண்டோரை உதாரணம் காட்டலாம்.

நம் போன்ற சாதாரணர்கள் ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெட்டவெளி காணப் பறந்து திரிந்து இலக்கற்றுப் பயணிப்போம். 96 திரைப்படம் என்னை இன்றளவும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் இந்தப் பாடல் தான். இது வெறும் Life of Ram https://youtu.be/psi5C9WM3i0 உடன் மட்டுமே அடக்க முடியாத ஒன்று.

2018 ஆம் ஆண்டிலே ஒரு திரைப்படத்தின் பாடல்களும் வெற்றி கண்டு, படமும் உச்ச பட்ச வெற்றி கண்டதென்றால் அதற்கான ஒரே தகுதி 96 திரைப்படத்துக்கே சாரும்.

ஒரு தமிழ்த் திரைப்படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுத்து விடலாம். ஆனால் ஒரு காதல் சார்ந்த படைப்பைப் பாடல்கள் இன்றி எடுக்கவே முடியாது.

ஆனால் பாருங்கள் இதுவும் காதல் திரைப்படம் தான் ஆனால் கொண்டாடிக் களிக்கும் ஒரு ஜோடிப் பாடல் உண்டா? அழுது வடியும் பாடல் காட்சி தானும் உண்டா? இந்தப் படத்தில் தான் எட்டுப் பாடல்கள் இருக்கின்றன. அவற்றைத் தனியே பாடல்களாக வகைப்படுத்தலாமே ஒழிய இவை எல்லாமே படத்தோடு இழைக்கப்பட்டிருக்கின்றன. ராம் இற்கும் ஜானுவுக்கும் இடையில் எழும் மெளனங்களை மட்டும் பாடல் என்ற உணர்வோட்டத்தால் நிரப்புகின்றன.

இவற்றை வெறுமனே பாடல்கள் என்றும் சொல்ல முடியாது. எல்லாவற்றிலும் இசையைப் பிரித்து விட்டு வரிகளை மட்டும் படித்தால் அது வாழ்வியலைக் கவிதையாய்க் காட்டும்.

பால்ய சினேகிதம் குறித்துப் பேசிய அழகி, ஆட்டோகிராஃபில் கூடப் பாடல்களில் சமரசம் உண்டு. கல்லூரிக் காதலைப் பேசிய இதயம் படத்திலும் கூட நாயகனைத் தாண்டி விடலைகளுக்கான கொண்டாட்டப் பாடல்கள் இருக்கும். ஆனால் பரமாத்மா மேல் ஜீவாத்மா கொள்ளும் பற்றைக் காதல் வடிவமாக்கிய “குணா” வில் ஓரளவு தான் சமரசம் இருக்கும். இங்கே காதலன், காதலி உரையாடலே “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” என்று பாடும்.

96 படத்தின் வெற்றியில் பங்கு போட்டதில் பாடல்களின் பங்கு உச்சமானது. அதற்குக் காரணம் முன் சொன்னது போல பாடல்கள் வெறும் பாடல்களாய் ஒட்டி இராதது தான்.

எப்படி சுபாஷிணி என்ற பாத்திரம் முதிர் கன்னியாகவும் தேவதர்ஷினி ஆகவும், சின்ன வயதில் அதுவே நியாதி ஆகவும் ஒற்றுமை கண்டதோ அது போல ஜானுவின் பின்னணிக் குரலாகவும், அதுவே பாடலாக உருப் பெறும் போது பாடகியாக சின்மயியும் தோற்றம் கண்டது போலச் சின்ன வயசு ஜானுவுக்கு கெளரியின் பின்னணிக் குரலும், பாட்டுக் குரலுமாக எவ்வளவு அழகாக யோசித்து உண்டு பண்ணியிருக்கிறார்கள்.

அதுவும் “ஏன் எதும் கூறாமல் போனானோ” https://youtu.be/SYv_jRJoWiE வரும் போது ஜானுவின் அசரீரி போலல்லவா இந்தப் பாட்டு அச்சொட்டாக ஒலிக்கிறது.

தாபங்களே மற்றும் இரவிங்கு ஆகிய பாடல்களை உமா தேவி எழுத மீதி எல்லாம் கார்த்திக் நேத்தா கவி வரிகள். ஆனால் எல்லாவற்றையும் கேட்கும் போது ஒரு பொதுத் தன்மையோடே ரசிக்க முடிகிறது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அடிப்படையில் தைக்குடம் பிரிட்ஜ் இசைக் கூட்டணியின் இசைக் கலைஞராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஆனாலும் ரஹ்மான் போலவே இவருக்கும் சம்பரதாய பூர்வமான சினிமாப் பாணி இசையில் விருப்பமில்லை என்று பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பிரதிபலிப்பாக 96 படத்தின் பாடல்களைக் குறிப்பிடலாம். இனி வரப் போகும் சீதக்காதி படத்தின் பாடல்கள் இதிலிருந்து முற்றிலும் மறுபட்ட பாங்கில் இருப்பதை அவதானிக்கலாம்.

கோவிந்த வசந்தாக் சின்மயி, கெளரி இவர்களோடு ராம் இன் குரலாய் ஒலிக்கும் பிரதீப்பின் புத்துணர்வான, பழகாத பாடகக் குரல் மேலும் இனிமை சேர்க்கிறது. கரை வந்த பிறகே பாடலில் தனி ஆவர்த்தனம் காட்டும் போதும், சின்மயியோடு சேர்ந்து பாடும் போது கரைந்தும் கலக்குகிறார்.

ஒரு படைப்பின் வர்ணத்தைத் தீர்மானிப்பது வெறும் ஒளிப்பதிவாளன் அல்ல அதன் இசையமைப்பாளனும் தான் என்பதை 96 மீள நிரூபித்திருக்கிறது மிக அழுத்தமாக. இந்தப் படத்தின் காட்சிகளற்ற ஒலி வடிவைக் கேட்டாலேயே படத்தில் சொல்லப்பட்ட உணர்வுகளின் பரிபாஷையை ஊய்த்துணரலாம்.

படத்தை இயக்கிய பிரேம்குமார் கூட எதிர்பார்த்திருப்பாரோ இவ்வளவு நெருக்கமாக இசை வந்து ஒட்டிக் கொள்ளுமென்று.

காதலே காதலே

தனிப்பெரும் துணையே

கூட வா கூட வா

போதும் போதும்

காதலே காதலே

வாழ்வின் நீளம்

போகலாம் போகவா நீ …

ஆஆஆஆஆ

திகம்பரி ….

வலம்புரி….

சுயம்பு நீ….

‪பிரகாரம் நீ‬…..

‪பிரபாவகம் நீ‬…..

பிரவாகம் நீ…..

‪ஸ்ருங்காரம் நீ‬….

‪ஆங்காரம் நீ‬…….

‪ஓங்காரம் நீ‬……..

‪நீ……‬

‪அந்தாதி நீ‬….

கானா பிரபா

13.12.2018

2018 தமிழ்த் திரை இசை அலசல் ? பாகம் 2 ?A.R.ரஹ்மான் குடும்பத்தில் இருந்து

2018 தமிழ்த் திரை இசை அலசல் ?

பாகம் 2

?A.R.ரஹ்மான் குடும்பத்தில் இருந்து

இன்னொரு இசையமைப்பாளர் ?

அரும்பே அரும்பே…..

என்னைக் கடத்தி போ கரும்பே….

அழும்பே தழும்பே…..

உள்ள கெடத்திப் போ குறும்பே…..

இந்தப் பாடலை எல்லாம் 2018 ஆம் ஆண்டின் திரையிசை அலசலில் குறிப்பிட மறந்தேனானால் ஏகப்பட்டோரின் சாபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். தான் இசையமைத்து நடக்கும் படம் ஹிட் அடிக்கிறதோ இல்லையோ ஒரு பாடலையாவது அந்தந்த ஆண்டுகளின் உச்சப் பாடல்களில் ஒன்றாக வைத்து விடுவார் விஜய் ஆன்டனி. பிச்சைக்காரன் படத்துக்குப் பின் தொடர்ந்து வெற்றிகரமான மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் அவர் நடித்து வெளிவந்த படங்கள் காளி மற்றும் திமிரு புடிச்சவன் இரண்டும் சுமார் ரகத்தில் சேர்ந்து விட்டன.

இருப்பினும் காளி படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியதில் “அரும்பே கரும்பே” பாடலுக்கு முக்கிய பங்குண்டு.

காளி படப் பாடல்களில் “அரும்பே” https://youtu.be/xz5j7PyhYLw பாடல் தவிர “நூறாய் யுகம் நூறாய்” https://youtu.be/UqIIpc1jIjg பாடலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. இந்தப் பாடல் தொண்ணூறுகளின் ஹிட் பாடல்களை நினைவுபடுத்தும்.

விஜய் ஆன்டனியின் “திமிரு புடிச்சவன்” படம் போலவே பாடல்களும் திருஷ்டி பட்டது போல மாயமாகக் கடந்து விட்டன.

காளி படத்தில் இருந்து அடுத்து நிமிர் படத்துக்குத் தாவுவோம். அதாவது இயக்குநர் கிருத்திகா உதயநிதியிடமிருந்து நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு.

நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை..

தந்து வானம் கூத்தாட..

கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை..

வந்து எங்கும் பூத்தாட…

2018 இல் அனேகர் மீளவும் தம் குரலில் பாடி YouTube, Dubsmash போன்ற தளங்களில் வலையேற்றிய பாட்டு. சொல்லப் போனால் 2018 இன் ஆகச் சிறந்த மெலடிப் பாடல் என்று ஒரு விருதுப் போட்டி வந்தால் இந்தப் பாடலும் https://youtu.be/k5xRIKbW2t4 கண்டிப்பாக இடம் பெற வேண்டும். “நிமிர்” படத்தில் இந்தப் பாடலோடு மேலுமொரு பாடலான “எப்போதும் உன் மேல் ஞாபகம்” https://youtu.be/btgjtnhHWoE அஜனீஸ் லோக்நாத் இசையில் வெகு அருமையாக வந்திருக்கிறது. மீதி நான்கு பாடல்கள் தர்புகா இசையில் வந்திருக்கிறது. இந்தப் படம் மலையாளத்தில் “மகேசிண்ட பிரதிகாரம்” என்று வந்த போது அதில் பிரபலமான “இடுக்கி” பாடல் தமிழ்நாடு வரை பாய்ந்தது. “பூவுக்குத் தாழ்ப்பா எதுக்கு” https://youtu.be/Bk-4AQIaQpw பாடல் இடுக்கி பாடலுக்கான காட்சியமைப்பில் வந்தாலும் மலையாளம் அளவுக்கு எடுபடவில்லை. இயக்குநர் பிரியதர்ஷன் படங்கள் என்றால் பாடல்களுக்குச் சொல்லவா வேண்டும்? “நிமிர்” படம் வணிக ரீதியில் நிமிரா விட்டாலும் பாடல்கள் நிமிர்ந்து கேட்கும் அளவுக்கு நியாயம் செய்திருக்கின்றன.

இசையமைப்பாளர் ரஹ்மான் குடும்பத்தில் அவரின் தந்தை சேகரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், ரஹ்மானின் சகோதரி ரெஹானா, ரெஹானாவின் மகன் ஜி.வி.பிரகாஷ்குமார் என்று இசையமைப்பாளர்களாக வரிசை கட்ட 2018 இல் இந்தக் குடும்பத்திலிருந்து புது வரவு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை ஃபாத்திமாவின் மகன் A.H.காஷிஃப் “காற்றின் மொழி” திரைப்படத்தின் மூலம் இசைமைப்பாளர் ஆனார்.

இருப்பினும் ரஹ்மானுக்கு ரோஜாவோ, ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு வெயிலோ கொடுத்த அளவு இசைத் தாக்கத்தை இவர் வரவு உண்டு பண்ணவில்லை. “போ உறவே” https://youtu.be/tmTsCVM9Wj0 பாடல் மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்ப வரவை ஓரளவு நியாயம் செய்தது.

ஹிந்தியில் வந்த Tumhari Sulu படத்தைக் “காற்றின் மொழி” ஆக்கியும், கன்னடத்தில் இருந்து Godhi Banna Sadharana Mykattu படத்தை “60 வயது மாநிறம்” என்று தமிழில் எடுத்து இரண்டு படங்களை இந்த 2018 இல் வெளியிட்ட ராதா மோகன் இரண்டிலும் மூல இசையமைப்பாளர்களைப் பயன்படுத்தவில்லை.

“60 வயது மாநிறம்” படத்தின் இசை இளையராஜா. இந்தப் பாடல்கள் ராஜா ரசிகர் வட்டத்தோடு நின்று விட்டன.

விக்ரம் பிரபு நடித்து வெளிவரப் போகும் “துப்பாக்கி முனை” படத்தில் இடம் பெற்ற “பூவென்று சொன்னாலும் நீ” https://youtu.be/H8KkvR7XFYQ இனிக்கிறது. L.V.முத்து கணேஷ் இசை வழங்கியிருக்கிறார்.

2018 பொங்கலுக்கு வந்த ஸ்கெட்ச் திரைப்படம் தோல்வியைக் கண்டிருந்தாலும் தமன் இசையில் “தென்றல்” https://youtu.be/xa8tHL8PmyY பாடல் இனித்தது. குலேபகாவலி படத்தில் “குலேபா” https://youtu.be/QVgSyvzmbxw விவேக் மெர்வின் இசையில் இந்த ஆண்டுக்கான குத்தாட்டம் கொடுத்தது. சந்தோஷ் தயாநிதி “மதுர வீரன்” படத்துக்காக இசைத்த “உன் நெஞ்சுக்குள்ள் வாழணும்” https://youtu.be/06CgWrY5T7I ரசிக்கலாம்.

வானொலிகளிலும் வலைத்தளங்களிலும் இந்த ஆண்டு அதிகம் உச்சரிக்கப்பட்ட கலாய்ப்பு மொழி “ஒரு குச்சி ஒரு குல்பி” https://youtu.be/ldAcREbctWQ இதைப் பிரபலமாக்கிச் சொந்தம் கொண்டாடியது கலகலப்பு 2. இதே படத்தில் “காரைக்குடி இளவரசி” https://youtu.be/aCDKULGwsps பாடலும் வானொலிகளின் நரம்பைச் சுண்டி இழுத்த பாட்டு. இயக்குநர் சுந்தர் C இன் சமீபத்திய ஆஸ்தான இசையமைப்பாளர் Hiphop தமிழா அரைத்த மாவை அரைத்து புதுசா தோசை ஆக்கியிருக்கிறார்.

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் வழியாக அறிமுகமாகி, 2016 ஆம் ஆண்டில் ஒரு நாள் கூத்து, ராஜா மந்திரி தொடர்ந்து உள்குத்து, காலக்கூத்து என்று அருமையான இசைப் பகிர்வுகளைக் கொடுத்தவர் ஜஸ்டின் பிரபாகரன். யார் கண் பட்டதோ இந்த ஆண்டு வெளியான “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தின் தலைப்புப் போலவே 2019 இல் ஒரு நல்ல நாளுக்காகக் காத்திருக்கிறார்.

படை வீரன் பாடல்களிலும் பழைய கார்த்திக் ராஜா இல்லை.

தொடர்ர்ர்ரும்

கானா பிரபா

12.12.2018

? 2018 தமிழ்த் திரை இசை அலசல் ? ? இசையமைப்பாளர் சாம் C.S ?

? 2018 தமிழ்த் திரை இசை அலசல் ?

? இசையமைப்பாளர் சாம் C.S ?

2017 ஆம் ஆண்டில் ஹிட்டடித்த படங்களில் “விக்ரம் வேதா”வுக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அந்தப் படத்தின் பாடல்களோடு தக தக தக தா….தக தக தக தா என்று பின்னணி இசையையும் முணு முணுத்து ரசித்தனர் இசை ரசிகர்கள். இப்பேர்ப்பட்டதொரு வித்தியாசமான வரவேற்பைப் பெற்ற சாம் C.S இன் அடுத்த ஆண்டு எப்படி அமையப் போகிறது, இனிமேல் உச்ச நட்சத்திர நடிகர்களுக்குப் பிடித்தமானதொரு இசையமைப்பாளராக மாறி விடப் போகிறார் போன்ற பல்வேறு கணிப்புகளுடன் கூடிய எதிர்பார்பார்ப்பை உண்டு பண்ணியிருந்தார். அந்த வகையில் அவரின் திரையிசைப் பயணம் 2018 இல் எப்படி அமைந்தது என்று பார்ப்போம்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கான தொடர் கூட்டணி அமைத்து அழகான நல்ல பாடல்களை வாங்கியதில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இன் பங்கு சிறப்பானது. கிரீடம், மதராசப் பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம் என்று இந்த இசை வெற்றிக் கூட்டணியின் படைப்புகள் நீளும்.

இந்தக் கட்டை உடைத்துக் கொண்டு 2016 இலிருந்து பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இயங்கிய ஏ.எல்.விஜய் 2018 இல் தான் இயக்கிய இரண்டு படங்களிலுமே சாம் C.S உடன் இணைந்திருக்கிறார். இரண்டுமே வெவ்வேறு தளங்களை அடிப்படையாகக் கொண்டவை.

“கரு” என்ற பெயரில் எடுக்கப்பட்டு பாடல்களும் அதே படப் பெயரில் வெளியான பின் திரைக்கு வர முன்னர் “தியா” என்று பெயர் மாற்றம் கண்டது. இந்தப் படத்தில் இரண்டு பின்னணி இசைக் கீற்றுகள் மூன்று பாடல்கள் என அமைந்திருந்தது.

“ஆலாலிலோ” https://youtu.be/kHvw9J9eQwI என்றொரு அருமையானதொரு தாலாட்டுப் பாடல் இருக்கிறது. தன் சேய்க்கு நோகாமல் காதருகே பாடித் தாலாட்டும் பாங்கில் அமைந்த பாட்டை ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணன் பாடியிருக்கிறார். இந்தப் படம் இன்னும் பெரிய் அளவில் எடுபட்டிருந்தால் இந்தப் பாட்டு இன்னும் பரவலான ஈர்ப்பைப் பெற்றிருக்குமே என்றதொரு ஆதங்கம் எழுகிறது.

“எழுதுகிறேன் ஒரு கடிதம்

வானத்து மலரே வையத்து நிலவே” என்று கல்கி படத்தில் பாடினாற் போலத் தன் கருவோடு பேசும் பாட்டாக சித்ரா இங்கேயும் ஒரு பாடல் “கருவே….”https://youtu.be/v4QsNAeA2GU என்று பாடியிருக்கிறார்.

“கொஞ்சாளி” https://youtu.be/gGBQUO_FBBI என்ற மணப் பாடல் கூட அதிக ஆர்ப்பட்டமில்லாத அடக்கமான துள்ளிசை கலந்து அமைந்திருக்கிறது. அனைத்துப் பாடல்களும் மதன் கார்க்கியின் கை வண்ணம்.

தியா படத்தின் பாடல்களுக்கு நேர்மாறு லஷ்மி படத்தின் பாடல்கள். ஜோடி நம்பர் 1 ஐ திரையில் காண்பது போல நடனப் பின்னணியுடன் மாமூல் உணர்ச்சி வசப்படும் காட்சிகள் கொண்ட இதில் மொத்தம் ஏழு பாடல்கள் சாம் இசையில். பிரபு தேவா நடித்த படமாச்சே. அனைத்தையும் எழுதியவர் மதன் கார்க்கி.

இந்தப் பாடல்களைக் கேட்கும் போது அமித் திரிவேதியின் ஏதோ ஹிந்திப் படப் பாடல்களைக் கேட்குமாற் போலொரு உணர்வு. உத்ரா உன்னிகிருஷ்ணனின் “மொட்றாக்கா மட்றாக்கா” https://youtu.be/ielNlsacdk8 பாடல் ஹிட் ரகம்.

சாம் C.S இன் இசையில் சந்தடியில்லாமல் வந்து போன படம் “வஞ்சகர் உலகம்”. இந்தப் படப் பாடல்களில் புதுமை என்னவென்றால் மொத்தம் மூன்று பாடல்களில் இரண்டு ஆண் குரல்களுக்கானவை. இரண்டும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், மற்றும் யுவன் சங்கர் ராஜா பாடியது. முக்கியமாகச் சொல்ல வேண்டிய பாட்டென்றால் “குழலூதும் கண்ணன் எழில் காணவே” https://youtu.be/zmrQBukJea8 பாட்டு. ஒரு சாஸ்திரிய இசையோடு மேற்கத்தேய முரட்டு வாத்தியங்கள் சேர்ந்த பாட்டு. ஆனால் வாத்திய ஆதிக்கம் அதிகமாக மேலெழுந்து பாடலை அமுக்கி விடுகிறது.

வஞ்சகர் உலகம் போன்றே “கடிகார மனிதர்கள்” படப் பாடல்களும் சாம் C.S இசையில் சந்தடியில்லாமல் வந்து போன பாடல்கள்.

தியா, லஷ்மி போன்று இரண்டு மொழிகளில் அதாவது தமிழ், தெலுங்கு என இரட்டைச் சவாரி செய்த படம் நோட்டா. தெலுங்கின் இளம் முன்னணி நாயகன் விஜய் தேவரக்கொண்டா நடித்த இப் படம் கனதியான அரசியல் பின்புலத்தோடு பயணிப்பதால் பாடல்களுக்கு அதிக வேலை இல்லை. 2018 இல்

பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய படங்களில் இதுவுமொன்று என்றாலும் சாம் தான் இசையமைப்பாளர் என்று பரவலான அடையாளத்தைப் பதிக்கத் தவறி விட்டது. இந்தப் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரின் இரு முகன் படப் பாடல்கள் குறித்த படம் தோல்வி கண்டாலும் இன்னும் இனிப்பது சொல்லி வைக்க வேண்டியது.

உயிர் உருவாத

உருகுலைக்காத

என்னில் வந்து சேர

நீ யோசிக்காத

திசை அறியாத

பறவையை போல

பறக்கவும் ஆச

உன்னோடு தூர

இன்று பண்பலை வானொலிகளில் ஹிட்டடிக்கும்

இந்தப் பாடலுக்குச் சொந்தம் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படம். சாம் இன் இசையில் 2018 இல் வெளிவந்த படங்களில் அவரின் முத்திரையை முழுமையாகப் பதித்த படம் என்றால் இது தான் என்பேன். “உயிர் உருவாத” https://youtu.be/2bhPfpBumZM பாடலுக்கான பாடகர் தேர்வு (சத்ய பிரகாஷ் & சின்மயி) கூடக் கச்சிதம். இந்தப் படத்துக்கான மைய இசைப் பாட்டு (theme song) “யேப்பா யெப்பா” பாடலிலும் உழைப்பு தெரிகிறது.

“ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆசை சேர்க்கிறாய்” https://youtu.be/c8Vh5Frko9Q இதே படத்தில் இன்னொரு ரம்யமான காதல் பாட்டு.

இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்றே சாமுக்கு இன்னொரு படப் பாடல் அதிக புகழைக் கொடுத்தது இந்த ஆண்டு. அந்தப் பாட்டு “ஏதேதோ ஆனேனே” https://youtu.be/IXCejoy1M9Y

Mr.சந்திரமெளலி படத்திற்காக சின்மயியுடன் இணைந்து சாம்.C.S பாடிய பாட்டு இன்னொரு எஃப் எம் ஹிட் ரகம். என் கல்லூளியே என்ற பாடலும் இதே படத்தில் இடம்பெற்றிருக்கும் இனிய பாடல்.

கார்த்திக்கின் அக்னி நட்சத்திர காலத்தை நினைவுபடுத்த ராஜாதிராஜா பாடல் கடந்து போகிறது.

வெளி வரப் போகும் “அடங்க மறு” படத்துக்காகக் கொடுத்த “ஓ சாயாளி ஓ சாயாளி” https://youtu.be/7KJscr5TdKc பாடல் இப்படத்தின் மற்றைய பாடல்களோடு ஒப்பிடும் போது சாம் C.S ஐ நம்பிக்கையோடு 2019 இற்கு எதிர்பார்க்க வைக்கிறது. கூடவே கொரில்லா படமும் வரிசையில் நிற்கிறது.

2018 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படப் பாடல்கள் தான் சாம் C.S இன் பேர் சொல்லும் இசை.

தனிப்பட்ட ரீதியில் எனக்குப் பிடித்த பாடல் “ஏதேதோ ஆனேனே” (Mr சந்திரமெளலி).

புதுமையாக மெட்டுக் கட்டிய விதமும் பாடலின் ஏற்ற இறக்கங்களில் காட்டும் நளின இசையுமாக இந்தப் பாடல் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் மோகன்லாலின் “ஒடியன்” மலையாளத் திரைப்படம் சாம் C.S இற்கு மிகப் பெரிய படைப்பாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தின் பின்னணி இசைப் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்போடு இந்த வாரம் உலகமெங்கும் திரையிடப்படுகிறது இப்படம்.

2018 இன் திரை இசை அலசல் தொடரும்

கானா பிரபா

11.12.2018

‪#2018TamilHits‬