நெஞ்சத்தைக் கிள்ளாதே ❤️

“உடல் ஆரோக்கியத்துக்காக மன மகிழ்ச்சியோடு இன்று இவள் மாதிரி ஓடும் பெண் நாளை தன் திருமணத்துக்குப் பிறகு எதற்கெல்லாம் ஓட வேண்டியிருக்கும்?”

ஒரு வருடம் ஓடி வெற்றி கண்ட படம்!

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான (முதல் முறை) தேசிய விருது “பிரசாத்” ராமநாதனுக்கும், சிறந்த மாநிலத்திரைப்பட விருது என்ற வகையில் இயக்குநர் மகேந்திரனுக்குமாக மூன்று தேசிய விருது கிடைத்த திரைப்படம்.

ஆனால் இப்படத்தின் கதைக்கரு சில வினாடிகளிலேயே இயக்குனர் மகேந்திரனின் சிந்தனையில் பிறந்தது என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் உண்மை.

“சினிமாவும் நானும்” என்ற தன் நூலில் “நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைக்கரு உருவான அந்த சுவாரஸ்யமான கணங்களை விபரிக்கின்றார் இயக்குநர் மகேந்திரன். அதைத்தான் முதல் பந்தியில் தந்திருந்தேன். மும்பையில் ஒரு ஹோட்டலில் தங்கித் தன்னுடைய இன்னொரு படத்துக்காகப் புதுமுகங்களைத் தேடிய இயக்குநர் மகேந்திரன் ஒரு நாள் அதிகாலைப் பொழுது ஹோட்டலை அண்டிய கடற்கரையில் tracksuit உடன் உடற்பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்துத் தான் இந்தக் கதையை உருவாக்கினார். மகேந்திரன் சொந்தமாகக் கதை எழுதிய படங்களில் மூத்தது “நெஞ்சத்தைக் கிள்ளாதே” அடுத்தது “மெட்டி”.

நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை நீண்ட நாட்களாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நேற்றுத்தான் முழுதாகப் பார்க்கக் கிட்டியது. அன்றைய இலங்கை வானொலியில் திரை விருந்தில் இந்தப் படத்தின் சில காட்சிகள் ஒலிப்பகிர்வாக கே.எஸ்.ராஜாவின் விளம்பரக் குரலோடு வந்தது மட்டுமே நினைவில் தங்கியிருந்தது.

இந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததும் முழு மூச்சாக உட்கார வைத்து முடியும் வரை ஒரே இடத்தில் வைத்து விட்டது. படத்தின் முக்கியமான களமாக அமையும் கார் திருத்தும் நிலையத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி குழுவினரின் சேஷ்டை நகைச்சுவையைச் சகிக்கக் கடவது.

ஆத்மார்த்தமாகக் காதலித்தவர்கள் பின்னர் பிரிந்து போய் வெவ்வேறு வாழ்வில் புகும் கதையெல்லாம் நெஞ்சில் ஓர் ஆலயம் காலத்துக்கு முந்தியும், அந்த ஏழு நாட்கள், மெளனராகம், காப்பி மெளன ராகம் (ராஜா ராணி) என்று வந்திருந்தாலும் ஒரு பெண்ணின் கோணத்தில் அவளின் நுணுக்கமான உணர்வலைகளோடு பயணப்படும் திரைக்கதை அதிகம் வந்ததில்லை. அதில் மிக முக்கியமானது இந்த நெஞ்சத்தைக் கிள்ளாதே. இந்தப் படத்துக்குப் பின்னர் கூட இவ்வளவு ஆழமான பார்வையோடு எதுவும் வந்ததில்லை.

ஒரு துறு துறு வெகுளிப் பெண் அவளின் பின்னணியில் சதா சண்டை போடும் அண்ணன், அண்ணி உலகம், அதைக் கடந்து இன்னோர் உலகத்தைக் கட்டியெழுப்பி அதில் நிம்மதியைத் தேட முனைந்தவள் வாழ்க்கை எப்படியெல்லாம் ஓடுகிறது, அவளும் எப்படியெல்லாம் ஓடிக் கொண்டே இருக்கிறாள் என்பதைத் தொடக்கத்தில் இருந்து முடிவுப்புள்ளி வரை ஓடும் குறியீடோடே ஓடுகிறது இந்தப் படம்.

கதையை எழுதி விட்டுத் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல இளையராஜாவுக்கும் உடனேயே சொல்லி விடப் பிறந்தது தான் அந்தக் காலடி ஓசையோடு பருவமே புதிய பாடல் பாடு. காலடி ஓசை வர வாத்தியக்காரர் ஒருவரின் தொடையைத் தட்டித்தான் ஓலிப்பதிவு செய்தார்கள் என்று ராஜா தன் இசை நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார்.

தட் தட் தட் என்று தரை தட்டி ஒலி எழுப்பும் பாதணிகளின் ஓசை நயத்தோடு இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் இதயத் துடிப்பு.

“பருவமே புதிய பாடல் பாடு” பாடல் கொடுக்கும் சுகத்தோடு இந்தப் படத்தை ரசிக்க ஆரம்பித்தால், படம் பார்த்து முடித்து அடுத்த நாள் வரை “உறவெனும் புதிய ராகம்” தான் காதில் ஓடுகிறது. அவ்வளவு அற்புதமான பாட்டு. ஓ தென்றலே எனும் பி.சுசீலாவின் ஒற்றை இராகம் சோகமெழுப்பும் கானம். எஸ்.ஜானகி கிழவியாக, குமரியாகக், குழந்தையாகப் பாடியவர் இதில் விடலைப் பையனாக “மமே பேரு மாரி” என்று வித்தியாசக் குரல் கொடுத்து ஆச்சரியம் கூட்டுகிறார். எஸ்.ஜானகியைத் தாண்டி இவ்வளவு பரிமாணங்களில் யாரும் பாடித்தான் காட்டட்டுமே?

தான் விரும்பும் ஒருவர் தன்னுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற possessiveness பாங்கிலேயே படத்தின் மையம் பயணப்படுகிற்து.

தன்னுடைய கணவன் இன்னொருத்தியுடன் பேசிப் பழகுகிறான் என்ற கறார்த்தனத்தில் சுகாசினியின் அண்ணி, அண்ணன் சரத்பாபுவுடன் காட்டும் கோபம், அது போலத் தன்னோடு பேசிப் பழகும் சுகாசினி இன்னொருத்தருடன் அந்த சினேகத்தைப் பங்கு போடக் கூடாது என்ற காழ்ப்புணர்வில் மோகன்.

இந்தப் படத்துக்காகப் புதுமுகம் ஒன்றைத் தேடியலைந்து பின் பக்கத்திலேயே ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த உதவியாளினியைக் கண்டு இவளே தன் கதையின் நாயகி என்று மகேந்திரன் கண்ணில் அகப்பட்டவர் தான் சுகாசினி. சுஹாசினியின் அறிமுகம் போலவே கன்னட கோகிலா படத்தில் கண்டு பிடித்துத் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டவர் மோகன்.

மோகனின் ஆஸ்தான குரலாக விளங்கிய சுரேந்தர் இந்தப் படத்தில் பிரதாப்புக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.

நாற்பது ஆண்டுகள் கடந்தும் இன்றும் பசுமையான நினைவுகளைக் கிளப்புகிறது படத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர் Ravi Varma V ஒளியோவியத்தில்.

விஜி ஒரு விளையாட்டுத்தனமான பெண், ஆண்களிடம் பேசிச் சிரிப்பதைக் கூடக் குழந்தைத்தனத்தோடு அணுகுபவள். அப்படியாகப்பட்டவளின் துணையாக வர விரும்பும் ராம் இன் காதலை அவள் ஏற்றிருந்தாலும் மனதளவில் அதற்குத் தயார்படுத்தாத வெகுளி என்பதை “உறவெனும் புதிய வானில்” பாட்டின் இடையே காட்டியிருப்பார் இயக்குநர்.

உண்மையில் சுஹாசினிக்கு இந்தப் படம் கிடைத்தது ஒரு பெரிய அதிஷ்ட லாபச் சீட்டின் பரிசுக்கு நிகரானது. ஒப்பனையில்லாத, ஓடிக் களைத்த இயல்பான அந்த இள முகம்,

அது மெல்ல மெல்லத் தான் எதிர் நோக்கும் அனுபவங்களுக்கேற்ப மாறிக் கொண்டே போவதை வெகு யதார்த்தமாகக் கொண்டு வந்திருக்கிறார் தன் நடிப்பில்.

மெளன ராகம் முன்பே எழுதி வைத்த கதை என்று மணிரத்னம் சொன்னாலும் ஒரு சில காட்சிகளில் இரண்டு படங்களிலும் ஒற்றுமை ஆரத்தழுவுகின்றது.

தன்னை விரும்பிய ஒருத்தியைத் தூய அன்போடு மட்டும் நட்பைத் தொடரலாம் என்று சரத்பாபுவின் கதாபத்திர வடிவமைப்பும் புதுமை. வழக்கம் போல பிரதாப் போத்தன் ஒரு விநோதமான குணாம்சம் பொருந்திய பாத்திரம்.

“மும்பை கடற்கரையில் அதிகாலையில் ஓடிய பெண்ணே!

இன்று நீ ஒரு தாயாக, மாமியாராக, பாட்டியாகக் கூட இருக்கலாம், உன் திருமண வாழ்வில் நீ எந்த மாதிரியெல்லாம் வாழ்வின் நெருக்கடிகளால்

அங்கும் இங்கும் ஓடியிருக்கலாம்…..”

இப்படியே தொடர்ந்து “என் நெஞ்சத்தைக் கிள்ளாதே” கதை உருவாகக் கருப்பொருள் தந்தவளே நீதான். என்று ஒரு நீண்டதொரு பத்தியில் அந்தப் பெண்ணுக்கு நன்றி கூறி முடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.

#மகேந்திரன்_எனும்_நிரந்தரம்

பாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் ?

சிலர் எவ்வளவு கோபப்பட்டு வார்த்தையைக் கக்கினாலும் அவர்களின் குரலில் ஒரு ஓசை நயமும், தண்மையான ஒலியாகவே வெளிப்படும். அப்படியொரு குரல் ஜெயச்சந்திரனுக்கு. இதே பாங்கில் வாணி ஜெயராமின் குரலையும் கவனிக்கலாம். இந்தக் குரல்களுக்குள் சங்கீதம் தடவியிருக்கும். பேசும் போதும் ஏதோ சுரம் பிரித்துப் பாடும் ஒரு ஜீவன் இருக்கும்.

ஜெயச்சந்திரனை ரயிலேற்றிப் பாடவைத்த மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம், சுப்ரபாதம், அந்தி நேரத் தென்றல் காற்று போலவே படகுப் பயணத்தின் பாடலாகத் தாலாட்டுதே வானத்துக்கு மூத்தவள் இந்த “வசந்தகால நதிகளிலே” பாட்டு.

மூன்று முடிச்சு படத்தில் இரண்டு ஜோடிப் பாடல்கள் அவை இரண்டுமே ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடியவை. ஒன்று “வசந்தகால நதிகளிலே” இன்னொன்று “ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்”. இந்த இரண்டு பாடல்களுக்கும் ஒற்றுமை ஒன்றிருக்கிறது. இரண்டுமே அந்தாதிப் பாடல் வடிவமைப்பில் எழுதப்பட்ட புதுமை கொண்டவை. தமிழ்த் திரையிசையில் இம்மாதிரியான புதுமை அதிகம் வாய்த்ததில்லை. கவியரசர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இந்த மாதிரி ஏராளம் நுணுக்கங்களைத் தம் பாடல்களில் புதைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி அந்தாதி எல்லாம் நம் கண்ணுக்குச் சட்டென்று அகப்பட்டு விடும்.

இறுதியாகக் கேட்ட அந்தாதிப் பாட்டு என்றால் பிரிவோம் சந்திப்போம் படத்தில் யுகபாரதி எழுதிய “நெஞ்சத்திலே நெஞ்சத்திலே” பாட்டு தான். ஒரு பாடலடியின் அந்தம் இன்னொன்றின் ஆதியாக அதாவது தொடக்கமாக இருக்கும் அந்தாதி ரகப் பாடல்கள் இவை.

இன்னும் சொல்லலாம். வசந்தகால நதிகளிலே பாடல் பின்னாளில் தமிழை மட்டுமல்ல இந்தியத் திரையுலகின் அடையாளமாகக் கருதப்படும் முக்கியமான மூன்று ஆளுமைகள் கமல்ஹாசன், ஶ்ரீதேவி, ரஜினிகாந்த் மூவரும் இணைந்து காட்சியில் பாடிய பாட்டு. அது மட்டுமா? ரஜினிகாந்துக்கு முதல் தமிழ்ப் பாட்டு அதுவும் மெல்லிசை மன்னர் குரலிலேயே “‘மணவினைகள் யாருடனோ மாயவனின் விதியலைகள்” என்று இறுகிப் போய்ப் பாடுவாரே.

“வசந்தகால நதிகளிலே” பாடலில் இன்னொன்றையும் பார்க்கலாம். “நதிகளிலே” தொடங்கிச் சொற்கள் எல்லாமே “கள்” என்றே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

இன்னொரு புறம் “ஆடி வெள்ளி தேடி உன்னை” பாடலில் ஒரு சொல்லில் தானும் “கள்” என்ற பிரயோகம் இருக்காது ஒற்றையாகவே நகரும்.

காலம் இது காலம் என்று

காதல் தெய்வம் பாடும்

கங்கை நதி பொங்கும் – கடல்

சங்கமத்தில் கூடும்

சங்கமத்தில் கூடும்…..

வசந்தகால நதிகளிலே சிறு கீற்று கிட்டார் ஒலியைத் தழுவி மெளத் ஆர்கனின் ஒலியோடு (காட்சியிலும் அழகாகப் பொருந்தும்) தொடங்குமாற் போல “ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்” பாடலில் கிட்டார் இசை தொடக்கி வைக்கும்.

இந்த இரண்டு பாடல்களும் ஜெயச்சந்திரனுக்கும், வாணி ஜெயராமுக்கும் இன்னொரு வாழ்நாள் கொடுப்பினைகள்.

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்

நேரமெல்லாம் கனவலைகள்

கனவலைகள் வளர்வதற்கு

காமனவன் மலர்க்கணைகள்

ஆடிவெள்ளி தேடி உன்னை – பாடலைக் கேட்க

https://youtu.be/1egBBp8-1IQ

வசந்தகால நதிகளிலே – பாடலைக் கேட்க

https://youtu.be/xpyOa8UMmaE

பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் ?

ஒரு கடுகதி ரயில் வண்டியொன்றில் வாத்தியங்களையும், வாத்தியக்காரர்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு கூடவே காதலனும், காதலியுமாகிய தோரணையில் பாடகர்கள் இணைந்து பாடிக் கொண்டே போக, அவர்களின் வேகத்துக்கு இசைவாக வாத்திய அணியும் சேர்ந்தால் எப்படியொரு அனுபவத்தைக் கொடுக்குமோ அவ்வாறானதொரு சுகானுபத்தை கண்களை மூடிக் கொண்டு இந்தப் பாட்டு ரயிலில் ஏறினால் கிட்டும்.

ஆனால் ஒரு எச்சரிக்கை இந்தப் பாடலை நீங்கள் காதலிக்குமளவுக்குப் படமாக்கப்பட்ட காட்சியும் இருக்குமென்று எண்ணித் தவறி தவறியேனும் அதைக் கண் கொண்டும் பார்த்து விடாதீர்கள். 41 வருடங்களுக்கு முன் வந்த இந்தப் பாட்டு மட்டும் மணிரத்ன யுகத்தில் வந்திருந்தால் அழகிய காட்சித் திறனும் படைத்திருக்கும் என்பதைக் காட்சியைக் கண்ட பின் பாடலைக் கேட்கும் தோறும் உணர்வீர்கள்.

ஒரு ரயில் பயணப்பாட்டு எப்படி அமைய வேண்டும் என்று இசைஞானியின் கனவில் வந்துதித்து அது இசையாகப் பயணப்பட்ட போது எவ்வளவு நுணுக்கமாக அந்த இசையோட்டத்தை ரயில் பயணத்தின் சந்தத்தோடு இணைக்கிறார். அங்கே ரயிலோசையை விடவும் வாத்தியங்களின் தாள லயம் தான் அந்த உணர்வை எழுப்புகிறது. தாள வாத்தியங்கள் ரயிலின் அலுங்கல் குலுங்கலுக்கு ஏதுவாக எப்படியெல்லாம் அசைந்தாடுகின்றன பாருங்கள்.

“ஊஊ….ஊஊஊஊஊ…” என்று ஓசை நயம் காட்டும் இசைக்குயில் P.சுசீலாம்மாவின் ரயில் குரலும், விசிலோசையும் போலே பாடலின் முடிவிலும் ரயில் ஓசை ஒன்றை எழுப்பி முன்னே பயணிக்கிறது.

முதல் சரணத்துக்கு முன்னே வரும் இசையில் ஆர்ப்பரிக்கும் வயலின்களின் கூட்டு ரயிலின் சன்னலோரத்தில் அமர்ந்து பார்க்க, நீ முந்தவோ இல்லை நான் முந்தவோ என்று கடந்து போகும் மரங்களின் அசைவோ?

“மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்…..” என்று இந்தக் கடுகதிக் காதல் பயணத்தில் ஏறும் ஜெயச்சந்திரன் அந்த சுகானுபவத்தை “மஞ்சள்” என்ற முதல் சொல்லில் காட்டும் கிறக்கத்திலேயே தொட்டு விடுகிறார்.

இந்தப் பாடலுக்கெல்லாம் காட்சி இன்பம் எவ்வளவு தேவை என்பதற்கு உதாரணமாக ஜெயச்சந்திரனின் பாடலையே அள்ளிக் கொடுக்கலாம்.

பாடகர் ஜெயச்சந்திரனுக்கான ரயில் பாட்டு என்றால் “அந்தி நேரத் தென்றல் காற்று என்னை வந்து தாலாட்ட” வரணுமே என்று முந்திக் கொள்ளாமல் அந்தப் பாடலுக்கான தனி கெளரவம் செய்யப் போகும் மனோஜ் – கியான் இரட்டையர் இசையில் ஜெயச்சந்திரன் என்ற அங்கத்தில் பார்ப்போம்.

ஆனால் இங்கே நான் எடுத்து வருவது இன்னொன்றை, அது தமிழுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத இசை முத்து.

சுப்ரபாதம்…….சுப்ரபாதம்…….சுப்ரபாதம்…….

நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே….

https://youtu.be/jAaVrFd8GZk

இந்தப் பாடலும் ஜெயேட்டன் பாடியது தான்.

பணி தீராத வீடு படத்துக்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடிய அந்தப் பாடலுக்காக 1972 ஆம் ஆண்டின் கேரள அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருது ஜெயச்சந்திரனுக்குக் கிட்டியது. இன்று Smule யுகத்திலும் இந்தப் பாடல் எவ்வளவு தூரம் போற்றப்படுகிறது என்பதைக் கேட்டுரலாம். அந்தப் பாடலில் மலைகளினூடே

ஊடறுத்துப் பயணிக்கும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் நிதானத்தைப் பாடலின் இசையும், ஜெயச்சந்திரனின் குரலும் ஓப்புவிக்கும். அது மட்டுமல்ல இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதத்தைப் பாருங்கள். காட்சியின் ஆரம்பமே நம் கற்பனை உலகை நிஜத்தில் வடிக்கும். இதுதான் இந்த மாதிரிப் பாடல்களுக்குக் கொடுக்கும் மகத்துவம்.

இந்த ரயில் பாட்டில் சக பயணியாகச் சங்கமம் ஆவோம் வாருங்கள்.

மேடை அமைத்து

மேளம் இசைத்தால்

ஆடும் நடனம் கோடி…..

காலம் முழுதும் காவியம்

ஆனந்தம் ராகம்

இனி எந்த தடையும் இல்லை

என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை

ஊ ஊ …..ஊஊஊ…

மஞ்சள் நிலாவுக்கு

இன்று ஒரே சுகம்

இது முதல் உறவு

இது முதல் கனவு

இந்த திருநாள்

தொடரும்

தொடரும்…

https://youtu.be/1Xyl9wIYWUA

#Jeyachandran_Songs