மனசை நிறைய வைத்த “உஸ்தாத் ஓட்டல்”

“வயிறு நிறையிறதுக்கு சமையல் பண்ண யாராலும் முடியும், ஆனா மனசும் நிறையணும் அதான் முக்கியம்” திலகன் (உஸ்தாத் ஓட்டல்)
மலையாள சினிமா கொஞ்ச வருஷமாகத் தன் சுயத்தை இழந்து கோலிவூட், டோலிவூட்  வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் அடுத்த தலைமுறைக் கலைஞர்கள் எங்கே போகப்போகின்றார்கள் என்றதொரு கவலை கேரளத்தின் நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களின் நிஜமான கவலையாக இருக்கும். இப்படியானதொரு சூழலில் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தும் படைப்புக்கள் ஆங்காங்கே பூக்கும் போது இனம் கொள்ளாத சந்தோஷம் தோன்றும். அப்படியானதொரு நிறைவை ஏற்படுத்தியிருந்தது உஸ்தாத் ஓட்டல் திரைப்படத்தைப் பார்த்து முடித்த பின்னர்.
கேரளத்தின் பெரும் நடிகர் மம்முட்டியின் மகன் தல்குவார் சல்மான் நடித்த இரண்டாவது படம் இது. வாரிசு நடிகரைக் களமிறக்கும் போது ஏகப்பட்ட மசாலாவை அள்ளித் தூவி பில்ட் அப் கொடுப்பது தானே இன்றைய நடைமுறையாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் தல்குவார் சல்மானின் பாத்திரம் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்தப் பங்கத்தைச் செய்யாது கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாக மட்டுமே தன் பங்களிப்பைச் செய்கின்றது. இன்னும் சொல்லப்போனால் உஸ்தாத் ஓட்டல் சொந்தக்காரராக வரும் கரீம் என்ற திலகனுக்கான இறுதி யாத்திரையின் மகத்தான அஞ்சலிகளில் ஒன்று இந்தப் படம் எனலாம்.
லண்டனில் ஒரு பெரும் நட்சத்திர ஓட்டலில் பிரதம சமையற்காரராக வேலை செய்யவேண்டும் என்ற கனவோடு  ஃபைஸி (தல்குவார் சல்மான்), அவனின் தந்தைக்கோ தம் சொந்த ஊரான கோழிக்கோடுவில் ஒரு நட்சத்திர ஓட்டலின் உரிமையாளராக ஃபைஸியை வைக்கவேண்டும் என்ற இலட்சியம்.  தந்தை, மகனுக்குள்ளிருக்கும் இந்த இலட்சிய முரண்பாடுகளால், கோழிக்கோடுவில் உஸ்தாஸ் ஓட்டல் என்றதொரு பிரியாணிக்கடை நடத்திவரும் ஃபைஸியின் தாத்தா கரீமின் கவனிப்புக்குள்ளாகும் ஃபைஸியின் வாழ்க்கை எப்படி மாறுகின்றது என்பதே இந்தப் படத்தின் அடி நாதம். சொல்லப்போனால் இந்தக் கதையை ஏகப்பட்ட துண்டுகளாக வெவ்வேறு வடிவங்களிலேயே தமிழிலேயே ஏராளம் படங்கள் வந்து குவிந்து விட்டன. ஆனால் உஸ்தாத் ஓட்டல் பார்க்கும் போது அந்தக் கழிந்த கதைகளையெல்லாம் கடந்து ஒரு சேதி வெகு இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கும். அது தான் இந்தப் படத்தின் வெற்றி. 
கரீம் என்ற முஸ்லீம் கிழவராக வாழ்ந்திருக்கும் திலகனைப் பற்றி என்ன சொல்ல? வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பான முதலாளியாகவும், கனிவான தாத்தாவாகவும் தன் பேரனோடு கொள்ளும் அந்தப் பந்தம், இவருக்குள் இருக்கும் இருவேறு குணாம்சங்களை இந்த ஒரே படத்தில் காட்டியிருக்கிறது.  மம்மூட்டி மகன் தல்குவார் சல்மான் இதுபோன்ற கதை நாயகனாக இன்னும் தேடித் தேடி நடித்தால், இது போன்ற  அடக்கமான நடிப்பில் மகன் தந்தைக்காற்றும் உதவியாக இருக்கும். 
படத்தின் கதையை எழுதியிருக்கும் அஞ்சலி மேனன், படத்தின் முடிவில் கொடுக்கும் அந்த முடிச்சு ஒன்றே அவரின் சிந்தனையில் இருந்து புதிதாய்ப் புறப்பட்டதாக இருக்கும், அதுவே போதும் அவரின் பணியை மெச்ச. அதோ போன்று ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு என்று ஒவ்வொன்றிலும் தெரியும் நேர்த்தியோடு இசையமைப்பாளர் கோபி சந்தர் கொடுக்கும் அந்த இஸ்லாமியப் பின்னணியோடு மணக்கும் இசை இன்னொரு கச்சிதம். இயக்குனர் அன்வர் ரஷித் முன்னர் எடுத்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட மோசமான கார மசாலாச் சமையலை மன்னிக்க வைத்து விடுகிறது இந்த சுலைமானி.
 “இவனுக்கு சமையலைக் கற்றுக் கொடுத்துவிட்டேன், எதுக்காக சமைக்கிறோம்னு கற்றுக் கொடு” மதுரையில் இருக்கும் தன் நண்பர் நாராயணன் கிருஷ்ணனுக்கு கரீம் எழுதிய அந்தக் கடிதம்தான் வாழ்க்கையின் இன்னொரு அர்த்தம் புரிய வைக்கிறது, அதற்காக உஸ்தாத் ஓட்டலைத் தலைமேல் ஏற்றிக் கொண்டாடலாம்.

4 thoughts on “மனசை நிறைய வைத்த “உஸ்தாத் ஓட்டல்”

 • நான் சினிமாவை அதிகம் பார்ப்பதில்லை , தாங்கள் நல்ல படம்
  என்று சொல்வதால் , மறைந்த திலகன் அவர்களின் படத்தை பார்க்கவேண்டும் . மம்முட்டியின் மகனும் நடிகர் என்று இப்பத்தான் தெரியும் …..

 • அஞ்சலியின் கடைசி முடிச்சுக்கு Inspiration : நாராயணன் கிருஷ்ணன் (one of CNN Heros of 2011)
  http://www.youtube.com/watch?v=ZiC_9RHTvsA

  ரம்யமான கோபி சந்தரின் இசையும் அஞ்சலியின் கதையும் திலகன் & தல்குவார் சல்மான் இயல்பான நடிப்பும், அன்வரின் இயக்கமும் அருமை, அதிலும் திலகனின் flashback ஒரு “தட்டயத்தின் மறயத்து 2” 🙂

 • நாசர்

  படத்தைப்பாருங்கள் கண்டிப்பாகப் பிடிக்கும்

  ரிஷி

  காணொளி இணைப்புக்கு மிக்க நன்றி, நீங்களும் நன்றாக ரசித்துப் பார்த்திருப்பது தெரிகிறது

 • தல படத்தை போலவே அளவாக முடிச்சிட்டிங்க பகிர்வையும் ;))

  \கரீம் என்ற திலகனுக்கான இறுதி யாத்திரையின் மகத்தான அஞ்சலிகளில் ஒன்று இந்தப் படம் எனலாம். \

  அதே..அதே…படத்தை பேசும் சில வசனங்களும் காட்சியும் அவரோட நடிப்பும்…வாழ்ந்திருக்கிறார் 😉

  இந்தியன் ரூப்பியும், டைமான் நெக்லஸ்சும் நல்லாயிருக்கு 😉

Leave a Reply to admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *