“கவிஞர் வாலியும் இசைஞானி இளையராஜாவும்”

“ஒரு திரைப்பட இசையமைப்பாளர் என்கிற முறையில் இளையராஜாவோடு எனக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. ஓர் இறையருள் மிக்க இசைக்கலைஞர் என்னும் வகையில், மாற்றுக்கருத்தே என்னுள் என் இதயத்தில் முளைவிட்டதில்லை. அவர் ஒரு மகாபுருஷர் என்கின்ற மதிப்பை இப்பிறவி முழுதும் நான் என் மனத்துள் பொன்னே போல் வைத்துக் காப்பேன்” – கவிஞர் வாலி “நானும் இந்த நூற்றாண்டும் (1995)

இன்றோடு (Oct 29) கவிஞர் வாலி அவர்களுக்கு எண்பத்து ஒன்று வயதாகிவிட்டது. கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இசைஞானி இளையராஜாவோடு இணைந்து பணியாற்றும் பாடலாசிரியர் கவிஞர் வாலி என்பது ஒரு தனித்துவம் மிக்க விஷயம்.

இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் பஞ்சு அருணாசலத்தில் இருந்து கங்கை அமரன், வைரமுத்து உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் எழுதும் கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இசைஞானி இளையராஜாவோடு அவரின் ஆரம்ப காலம்தொட்டுத் தொடர்ந்து வரும் பாடலாசிரியர்களில் பஞ்சு அருணாசலத்துக்கு அடுத்து கவிஞர் வாலியைப் பார்க்கிறேன்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் கண்ணதாசனுக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுத் தொடர்ந்த கூட்டணி போலவே இசைஞானி இளையராஜா,பாடலாசிரியர் வாலி கூட்டணியையும் பார்க்கிறேன். கவிஞர் வாலி அவர்கள் இசைஞானி இளையராஜாவுக்கு முற்பட்ட காலத்தின் இசையமைப்பாளர்கள் பலரோடு பல்லாண்டுகள் முன்னரேயே பணியாற்றி ஏராளம் சிறப்பான பாடல்களைக் கொடுத்தாலும் இளையராஜாவோடு சேர்ந்து பணியாற்றியபோது கிடைத்த மக்களின் அபிமானம் தனித்துவமானது என்பது என் எண்ணம். இதைவகையான உதாரணத்தைப் பாடகி எஸ்.ஜானகிக்கும் கொடுக்கலாம்.

அதிலும் குறிப்பாக கவிஞர் வாலி அவர்கள் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் இருந்து தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை ஏராளம் படங்களுக்கு இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல் எழுதியவர் என்ற கெளரவத்தை விட, அதில் நிறையவே படங்கள் கவிஞர் வாலி மட்டுமே முழுப்பாடல்களும் எழுத வெளிவந்தவை.

குறிப்பாக அக்னி நட்சத்திரம், தளபதி, வருஷம் 16 போன்ற மாபெரும் வெற்றிப்படங்களும் உள்ளடங்குகின்றன. இந்தச் சிறப்புப் பகிர்வில் கவிஞர் வாலி அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் முழுப்படத்துக்கும் பாடல்கள் எழுதிய பத்துப் படங்களில் இருந்து பாடல்கள் அலங்கரிக்கின்றன. கவிஞர் வாலி அவர்கள் நீண்ட நாள் நோய் நொடியின்றி வாழ வாழ்த்தி வருகின்றன இந்தப் பாடல்கள்.

மீரா படத்தில் இருந்து “புது ரூட்டுல தான்” பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் இருந்து “சிவகாமி நெனப்பினிலே” பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
 

வருஷம் 16 படத்தில் இருந்து “பழமுதிர்ச்சோலை எனக்காகத் தான்” பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தில் இருந்து “ராஜா ராஜா தான்” பாடியவர்கள்: எஸ்.ஜானகி, அருண்மொழி குழுவினர்
 

மகுடம் படத்தில் இருந்து “சின்னக்கண்ணா” பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அக்னி நட்சத்திரம் படத்தில் இருந்து “ஒரு பூங்காவனம்” பாடியவர்: எஸ்.ஜானகி

ராசா மகன் படத்தில் இருந்து “வைகாசி வெள்ளிக்கிழமை தானே” பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மாமியார் வீடு படத்தில் இருந்து “என்னை தொடர்ந்தது” பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி

தளபதி படத்தில் இருந்து “சின்னத்தாயவள் தந்த ராசாவே” பாடியவர்:எஸ்.ஜானகி

தாலாட்டு கேட்குதாம்மா படத்தில் இருந்து “நேந்துக்கிட்ட நேர்த்திக்கடன் தீர்த்துப்புட்டேன்” பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்
 

5 thoughts on ““கவிஞர் வாலியும் இசைஞானி இளையராஜாவும்”

 • ராஜாவின் இசையில் பல அருமையான பாடல்களை எழுதியுள்ளார் வாலி அவர்கள்..

  அதிலே என்னை மிக கவர்ந்தது! "பூவே செம்பூவே"

  புதுப்புது அர்த்தங்கள் படத்தின் எல்லா பாடல்களையும் வாலிதான் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன் அத்தனையும் முத்துக்கள்!

 • // இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் பஞ்சு அருணாசலத்தில் இருந்து கங்கை அமரன், வைரமுத்து உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் எழுதும் கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது.//

  ஆம்.

  கண்ணதாசனும் வாலியும் ராஜாவின் ஆரம்ப காலத்தில் நிறைய முழுப்பாடல் எழுதியுள்ளார்கள்.

  பத்ரகாளி, சிட்டுக்குருவி, அச்சாணி, கடவுள் அமைத்த மேடை, இளமை ஊஞ்சலாடுகிறது,அழகே உன்னை ஆராதிக்கிறேன், நெஞ்சிலாடும் பூ ஒன்று. இவையெல்லாம் ராஜாவின் ஆரம்ப காலத்தில் வாலி எழுதியதில் குறிப்பிடத் தகுந்தவை.

 • வாலி ஐயா அவர்களின் வசீகர வரிகளில் வாரி சுருட்டி சுகமளிக்கும் பாடல்கள் நிறைய இவை சிலது மட்டும் சிலாகிக்கின்றன என் நினைவுகளில், அவரின் ஆன்மா அமைதியடைட்டும், அவரின் இனிய வரிகளில் என்றென்றும் வாழட்டும். நன்றி பிரபா சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *