பாடகர் அருண்மொழி பாடல்களோடு பேசுகின்றார்


எண்பதுகளின் இறுதிக் காற்பகுதியில் இருந்து தொண்ணூறுகளின் ஆரம்ப காலங்கள் வரை தமிழ்த்திரையிசைப்பாடல்களில் பாடகர் அருண்மொழியை விலக்கி விட்டுப் பட்டியல் இடமுடியாத அளவுக்கு நிறைய அருமையான மெலடிப் பாடல்களைத் தந்தவர். அதுவும் இசைஞானியின் செல்லப்பிள்ளை போல அவருக்குக் கிடைத்த மெட்டுக்கள் எல்லாமே அதியற்புதம். அருண்மொழி வேறு இசையமைப்பாளர்களிடம் பாடிப் புகழ் பெற்றிருந்தாலும், இசைஞானி அவருக்குக் கொடுத்த முகவரி தான் இன்று வரை அவரின் பேர் சொல்ல வைத்திருக்கின்றது.

பாடகர் அருண்மொழியை வானொலிப் பேட்டி காணச் சில வாரங்கள் முன்னர் எண்ணிய போது, அவரின் தொடர்பிலக்கத்தைப் பெற்றுத் தருவதில் பெரிதும் துணை நின்றவர் வழக்கம் போல ரேகா ராகவன் சார். அவர் நண்பர் ஆர்.வி.எஸ். மூலமாகப் பெற்றுத் தர உதவினார். ஆர்.வி.எஸ் அவர்களும் றேடியோஸ்பதியோடு இணைந்த இசைரசிகர் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

பாடகர் அருண்மொழியைத் தொடர்பு கொண்டபோது எந்தவிதச் சாக்குமின்றி உடனேயே வானொலிப்பேட்டிக்குச் சம்மதித்தார். என் ஆதர்ஷப் பாடகர்களில் ஒருவர், இசைஞானியின் இசைப்பண்ணையில் இருப்பவரோடு பேசும் போது கனவுலகத்தில் மிதந்தவண்ணம் உரையாடினேன். தெரியாத பல சுவையான தகவல்களோடு அருண்மொழி அவர்கள் கொடுத்த அந்தப் பேட்டியை “முத்துமணி மாலை” என்னும் என் வானொலி நிகழ்ச்சியில் அவருடைய முத்தான பல பாடல்களோடு ஒலிபரப்பினேன்.

அந்தப் பேட்டியைக் கேட்க

Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்

இந்தப் பேட்டியை நான் வானொலியில் ஒலிபரப்பும் போது, பேட்டியைக் கேட்டவண்ணம் ட்விட்டர் வழியாக அறிமுகமான நண்பர் நாமக்கல் ராஜா வேகவேகமாக பேட்டியில் அருண்மொழி சொன்ன சுவையான குறிப்புக்களைத் தட்டச்சுச் செய்து தன் நண்பர் ஒருவருக்குப் பகிர்ந்ததாகக்ச் சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார். என் வானொலிப்பேட்டியில் அவர் சேர்த்த துளிகள் இவைதான்.

-இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் தான் என்னை அறிமுகம் செய்தார்கள்.

– மலையாளப் படத்திற்கு பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதுதான் இளையராஜா என் வாசிப்பை கேட்டு என்னை சேர்த்துக் கொண்டார். அவருடன் சேர்வதற்கு முன்னால் பெரும்பாலான எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி இருந்தேன்.

– ‘ஒரே முறை உன் தரிசனம்’ இளையராஜாவுடன் என் முதல் பாடல். அதில் வரும் புல்லாங்குழல் இசை என்னுடையது.

– பாடகரானதும் சுவையான அனுபவம் தான். ராஜா பாடகர்களுக்கு ரிட்டர்ன் நோட்ஸ் தான் எழுதுவார். அது வெஸ்டர்ன் நோட்ஸில் இருக்கும். ஆரம்பத்தில் புரியவில்லை. பின்னர் அதை நானே கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு விளக்கும் அளவுக்கு தேறினேன். நான் அப்படி வாய்ஸ் ரூமில் பாடிக்காட்டுவதை ஹெட்போனில் ராஜா சார் கேட்டார். அப்படித்தான் ஒருமுறை கங்கை அமரன் பாடிய ஒரு பாடலை என்னை பாட வைத்து வாய்ஸ் தேர்வு செய்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் ரிலீஸாகவில்லை.

அடுத்த நாளே சூரசம்ஹாரம் பட பூஜை. அதில் பாடினேன். அவராகவே அருண்மொழி எனப் பெயரிட்டார். வாலியும் ராஜாவும் சேர்ந்து இட்டப் பெயர். அன்று நான் பாடிய பாடல் தான் ‘நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி’. அதில் எல்லாப் பாடல்களும் நான் தான் பாடினேன். அது பெரிய ஹிட் ஆனது. அதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள்.

– பார்த்திபனுக்காக என் குரலை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. அது தானாக அமைந்தது. எதேச்சையாக அவருக்கு பாடப்போய், என் குரல் அவருக்கு மாட்ச் ஆனதும், பார்த்திபனே என்னை மற்ற இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று பாட வைத்தார்.

– பிற இசையமைப்பாளர்களிடம்: ‘சலக்கு சலக்கு சரிகை சேலை’ எஸ்.ஏ.ராஜ்குமாரிடம் பாடிய பிறகு அதேபோல் குத்துப் பாடல்களாக தொடர்ந்து வர ஆரம்பித்தன. அதனால்தான் பாடுவதை நிறுத்தினேன்.

– பாடல்கள் கூட எழுதியிருக்கிறேன். ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ படத்தில் எல்லா பாடல்களும் நான் தான் எழுதினேன். போலவே, அரசியல் படத்திலும், வித்யாசகர் இசையில் ‘வாசுகி வா சகி’ பாடலும் நான் எழுதியது.

– பாடகர் அருண்மொழியை விட இசைக் கலைஞர் அருண்மொழிதான் எனக்குப் பிடிக்கும்.

– நான் பணியாற்றிய பாடல்களில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘இள நெஞ்சே வா’, ‘தாலாட்டும் பூங்காற்று நீ அல்லவா’ ஆகிய பாடல்களிலும், சின்னத்தம்பி படத்தின் பாடல்களிலும் புல்லாங்குழலுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அப்படி இன்னும் பலப்பாடல்கள் உள்ளன.

– ராஜாவின் பாரவையிலேயில் நான் விஜய்க்கு பாடிய சோகப் பாடல் ‘அம்மன் கோவில் எல்லாமே’ நான் ட்ராக் பாடியது. அதை அப்படியே படத்தில் பயன்படுத்திக்கொண்டு விட்டார்கள்.

– அஞ்சலி, மௌனராகம் இப்படி கிட்டத்தட்ட எல்லா படங்களையுமே பின்னணி இசையில் வேலை வாங்கிய படங்களாகச் சொல்லலாம். அவற்றுள் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின் ரீ ரெகார்டிங்கை ராஜா சார் என்னை செய்ய சொல்லிக்கொடுத்து விட்டார். நாட்டுப்புறப் பாட்டு படத்தையும் நானே செய்தேன். இப்படி சில படங்களில் என்னுடைய ரீ ரெகார்டிங் பங்களிப்பு இருந்தது.

– ராஜா சாரிடம் பணியாற்றி வருவது பெருமைக்குரிய விஷயம். இதுவரை நான் அவரிடம் ஒரு கோபச்சொல் கூட வாங்காதது என் அதிர்ஷ்டம்.

– இன்றைய இசையை மிகவும் மாறிவிட்டது. என்னால் அதன் வித்தியாசத்தை உணர முடிகிறது. அன்று 20 முறை ரிகர்சல் செய்து வாசித்த காலம் மாறிவிட்டது. இப்போது சில சமயம் வீட்டில் வாசித்து ஈமெயில் நான் அனுப்பிவிட்டால், அதையே கூட பயன்படுத்திக்கொண்டு விடுகிறார்கள். தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது.

19 thoughts on “பாடகர் அருண்மொழி பாடல்களோடு பேசுகின்றார்

 • இசையாலே இணைவோம்!! இசையாவோம்…

  ஒ.ஹோஹோ.. கீச்சுக்கிளியே..

  :-)))

 • வித்யாசமான குரல் கொண்ட அருமையான பாடகர் அருண்மொழி..
  "ராத்திரியில் பாடும் பாட்டு", "திருமகள் உன் முகம் காண வேண்டும்" , "என் வீட்டு ஜன்னல் எட்டி" என்று அவரது பல பாடல்கள் எனக்கு பிடிக்கும்..
  அருண்மொழி ஹிட்ஸ் என்று ஒரு தொகுப்பே போடலாம் உங்க வானொலியில். 🙂

 • RVS said…

  இசையாலே இணைவோம்!! இசையாவோம்…//

  நிச்சயமாக, நன்றி உங்கள் அன்புக்கு 🙂

 • பிரசன்னா கண்ணன்

  கடந்தவாரம் அருண்மொழி ஹிட்ஸ் 100 என்ற எம்பி3 வாங்கியிருக்கிறேன் அதில் இருக்கும் பாடல்களைக் கொடுக்கவே பல தொகுப்புத் தேவைப்படும் 🙂

 • வேங்கட ஸ்ரீனிவாசன் said…

  அருமையான தொகுப்பு பிரபா.
  நன்றிகள்.//

  மிக்க நன்றி நண்பரே

 • அருண்மொழி அதிகம் கம கம்கள், சங்கதிகள் போடமாட்டார். ஆனால் குரல் ஸ்ருதியை கம்பி மாதிரி பற்றிக்கொண்டு இருக்கும். எந்த சாரீரத்திலும் ஒரு பிசிறும் வராது. ராஜாவில் செல்லப்பிள்ளை ஆனது ஆச்சரியம் இல்லை.

  வராது வந்த நாயகன், வெள்ளிகொலுசு மணி, உன்னைக்காணாத நாள் ஏது, சூர சம்காரம் பாடல்கள், அரும்பு மலரே … சொல்லிக்கொண்டே போகலாம்!

 • அதிக பாடல்கள் இல்லை என்றாலும் அருண்மொழி பாடிய அனைத்து பாடல்களுமே அருமையான பாடல்கள் !

  அந்த பதிவும் மிக அதியற்புதமான ஒன்று ;-))

  இசை தெய்வம் எப்படி எல்லாம் கண்டுபிடிச்சிக்காரு பாருங்க அவரோட திறமைகளை எல்லாம் ;-))

  இவர் பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று இப்போ தான் தெரிகிறது !;-)

  சமீபத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் கூட அருண்மொழி அவர்களின் உழைப்பு மிக அற்புதம் 😉

  அவருக்கு வாழ்த்துக்களும் உங்களுக்கு நன்றியும் 😉

 • உண்மையில் அருண்மொழி அவர்கள் சொல்லியிருப்பது போல இசை தெய்வத்தின் செல்லபிள்ளைன்னு கூட சொல்லாம் ;-))

 • எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் இவரும் ஒருவர் அருண்மொழி பாடல் என்றால் எனக்கு உயிர்.அவருடைய பாடல்களை பட்டியலிட்டால் நன்றாக இருக்கும்.

 • அனேகமாக “நீராடி வா தென்றலே” என்ற அந்த லக்ஸ்மி காந்த் பியேரேலால் இசையமைத்த சூப்பர் பாடலை பாடியவர் இவர்தானே பிரபா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *