இன்னொருவர் இயக்க இசை கொடுத்த டி.ராஜேந்தர்


“விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்” இப்படியான அழகான கவித்துவம் மிகுந்த வரிகளைக் கட்டிப்போட வைக்கும் இசை கலந்து கொடுத்து அந்தக் காலத்து ராஜாவின் ராஜ்ஜியத்தில் திரும்பிப்பார்க்கவைத்தவர் இந்த டி.ராஜேந்தர். தமிழ் சினிமாவில் இசையமைபாளரே பாடலாசிரியராகவும் அமர்ந்து எழுதி, அவரே எழுதி, சமயத்தில் அவரே கூடப்பாடி வருவது என்பது என்னமோ புதுமையான விஷயம் அல்லவே. இசைஞானி இளையராஜாவில் இருநது, ஆரம்ப காலத்துப் படங்களில் எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரும் அவ்வப்போது செய்து காட்டிய விஷயம். இந்தப் பாடலாசிரியர் – இசையமைப்பாளர் என்ற இரட்டைக்குதிரையை ஒரே நேரத்தில் கொண்டு சென்று இவையிரண்டையும் வெகுசிறப்பாகச் செய்து காட்டியவர்களில் டி.ராஜேந்தருக்கு நிகர் அவரே தான் என்பேன். இனிமேலும் இவரின் இடத்தை நிரப்ப இன்னொருவர் வரும் காலம் இல்லை என்று நினைக்கிறேன் இப்போதெல்லாம் பாடல்களுக்கு வரிகளா முக்கியம், முக்கி முனகத் தெரிந்தால் போதுமே.


டி.ராஜேந்தர் என்ற இசையமைப்பாளர் சக பாடலாசிரியரை எடுத்துக் கொண்டு பதிவு ஒன்று தரவேண்டும் என்ற எண்ணம் றேடியோஸ்பதியின் ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்தாலும் அவரின் ஒவ்வொரு பாடல்களிலும் உள்ள கவியாழத்தைத் தொட்டு எழுதுவது ஒரு ஆய்வாளனுக்குரிய வேலை. எனவே அந்த விஷயத்தைத் தலைமேற்கொள்ளாமல் தவிர்த்து வந்தேன். ஆனால் டி.ராஜேந்தர் தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த படங்களில் மட்டுமன்றிப் பிற இயக்குனர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்து, கூடவே பாடல்களையும் எழுதி முத்திரை பதித்திருக்கின்றார். அப்படியான படங்களில் சில முத்துக்களை எடுத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணத்தில் முக்குளித்திருக்கின்றேன்.

தமிழ் சினிமாவில் தங்க இசைத்தட்டு விருது பெற்றது “கிளிஞ்சல்கள்” படத்தின் இசை. பசி என்ற கலைப்படம் தந்த துரை இயக்கத்தில் வந்த மோகன் பூர்ணிமா ஜெயராம் இணையில் வந்த அருமையான காதற்படம். இந்தப் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய “காதல் ஒரு வழிப்பாதை பயணம்” பாடலோடு எஸ்.பி.பி பாடிய அழகினில் நனைந்தது, பி.சுசீலா பாடிய “சின்னச் சின்னக் கண்ணா” போன்ற பாடல்களோடு எஸ்.பி.பி , ஜானகி ஜோடிப்பாடலாக அமைந்த “விழிகள் மேடையாம்” என்று எல்லாப்பாடல்களுமே தங்க இசைத்தட்டுக்கான அங்கீகாரத்தை நிரூபித்தவை.
விழிகள் மேடையாம் பாடல் இந்த வேளையில்

எண்பதுகளிலே கச்சிதமான காதல் ஜோடிகள் என்றால் சுரேஷ் – நதியா ஜோடி தான் கண் முன் நிற்பார்கள். அந்தக் காலத்துக் காதலர்களுக்கு இவர்கள் தான் தேவதூதர்கள் போலவாம் ;).
அப்படி இந்த இருவரும் ஜோடி கட்டிக் கோடி குவித்த ஒரு வெற்றிப்படம் “பூக்களைப் பறிக்காதே” வி.அழகப்பன் இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் வரும் “பூக்களைத் தான் பறிக்காதீங்க காதலைத் தான் முறிக்காதீங்க” பாடல் அந்தக் காலத்துக் காதலர்களின் தேவாரம், திருவாசகம் எனலாம்.
எஸ்.பி.பி , ஜானகி குரல்களில் “மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது” இந்தப் பாடலைக் கேட்டுக் கிறங்காதவர் நிச்சயம் காதலுக்கு எதிரியாகத் தான் இருப்பார்கள். இடையிலே வரும் “விழி வாசல் தேடி” என்று வரும் அடிகளுக்கு ஒரு சங்கதி போட்டிருப்பார் டி.ஆர் அதை நான் சொல்லக்கூடாது நீங்கள் தான் கேட்டு அனுபவிக்கணும்.


“மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்” ஒரு பாட்டைத் தேடி இணையம் வராத காலத்தில் கொழும்பில் உள்ள ரெக்கோடிங் பார் எல்லாம் அலையவைத்ததென்றால் அது இந்தப் பாட்டுக்குத் தான், கடைசியில் வெள்ளவத்தையில் ஸ்ரூடியோ சாயாவுக்குப் பக்கத்தில் இருந்த Finaz Music Corner தான் அருள்பாலித்தது. ஆகாசவாணி எனக்கு அறிமுகப்படுத்திய பாடல்களில் “பூக்கள் விடும் தூது” படப்பாடல்கள் மறக்கமுடியாது. இந்தப் படத்தின் பாடல்கள் எப்பவாது இருந்துவிட்டு ஏதோ ஒரு தருணத்தில் ஆசையாகக் கேட்கவென்று வைத்திருக்கும் பட்டியலில் இருப்பவை. ஒன்றல்ல இரண்டு பாடல்களை இப்போது உங்களுக்காகத் தருகின்றேன்.
மனோ, சித்ரா பாடும் “மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்”

கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் “கதிரவனைப் பார்த்து காலை விடும் தூது வண்டுகளைப் பார்த்து பூக்கள் விடும் தூது”

சிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன் என்று அந்தக்காலத்தின் பெரும் நட்சத்திரங்கள் ஒன்று சேரும் படம். இந்தப் படத்தின் இயக்குனர் ஜகந்நாதன் ஏற்கனவே இசைஞானியோடு வெள்ளை ரோஜாவில் இணைந்து அட்டகாசமான பாட்டுக்களை அள்ளியவர். இருந்த போதும் இந்தப் பெரும் கூட்டணியில் இசைக்கு அவர் மனம் இசைந்தது டி.ராஜேந்தருக்குத் தான். இந்தப் படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் பாடும் “தேவன் கோயில் தீபமே” பாடல் சோர்ந்து போயிருக்கும் போது ஒத்தடமாகப் பலதடவை எனக்குப் பயன்பட்டிருக்கிறது, உங்களுக்கு?

பூக்களைப் பறிக்காதீர்கள் வெற்றியில் அதே இயக்குனர் வி.அழகப்பன் பூ செண்டிமெண்டோடு தலைப்பு வைத்து எடுத்த படம் “பூப்பூவாப் பூத்திருக்கு” யாழ்ப்பாணத்தின் பெருமை மிகு சினிமா நினைவுகளைக் கொடுத்த குட்டி தியேட்டர் லிடோவில் ஓடிய கடைசிப்படம் இதுதான். அதற்குப் பின்னர் லிடோவின் நிலை கடந்த இருபது வருஷங்களில் அந்த நாளில் படம் பார்த்தவர்களில் மனங்களில் தான் வீற்றிருக்கின்றது. “வாசம் சிந்தும் வண்ணச்சோலை” என்று வாணி ஜெயராம் பாடி வரும் அழகான பாட்டு ஒருபுறம், “எங்கப்பா வாங்கித் தந்த குதிர அதில நானும் போகப்போறேன் மதுர” என்று குட்டீஸ் பாடும் பாட்டு என்று இன்னொரு புறம் இசைபரவ, “பூப்பூத்த செடியைக் காணோம் வித போட்ட நானோ பாவம்” என்று ஜெயச்சந்திரன் பாடும் பாடல் படத்தின் அச்சாணி எனலாம்.

பிரமாண்டமான படங்களைக் கொடுத்து வரும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பிரபல மசாலா இயக்குனர் ராஜசேகர் இயக்கி விஜயகாந்த் ரூபிணி ஜோடி நடித்த படம் “கூலிக்காரன்”.
“குத்துவிளக்கக குலமகளாக நீ வந்த நேரம்” என்று எஸ்பிபி, ஜானகி பாடும் பாடல் எங்களூர்க் கல்யாண வீடுகளிலும், கல்யாண வீடியோ கசெட்டிலும் தவறாது இடம்பிடித்த பாட்டு. இப்போது அந்தக் கல்யாணத்தம்பதிகளின் பிள்ளைகளே கல்யாண வயதைத் தொட்டிருக்கும் வேளை பசுமையான நினைவுகளில் “குத்துவிளக்காகக் குலமகளாக நீ வந்த நேரம்”

டி.ராஜேந்தர் இசையமைப்பாளராகப் பணியாற்றிய படங்கள் பிரபு நடித்த “இவர்கள் வருங்காலத்தூண்கள்” மற்றும் பாண்டியராஜன் நடித்த ஆயுசு நூறு என்று நீளும், ஆனால் இந்தப் பதிவுக்கு இந்த முத்திரைகளே போதும் என்று நினைக்கிறேன், இன்னொரு பதிவில் கவிஞர் டி.ராஜேந்தரோடு.

நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்

26 thoughts on “இன்னொருவர் இயக்க இசை கொடுத்த டி.ராஜேந்தர்

 • ராஜேந்தர் பற்றி அருமையான பதிவு சார் .நான் வலையுலகுக்கு புதியவன் நேரம் இருந்தால் வருகை தரவும் http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html
  மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்

 • இப்போதெல்லாம் பாடல்களுக்கு வரிகளா முக்கியம், முக்கி முனகத் தெரிந்தால் போதுமே.நீங்கள் சொன்னதில் உண்மை இருந்தாலும் , இயந்திர மயமான வாழ்கைக்கு இப்பத்தைய முக்கி முனகிற பாடல்களும் தேவைதான் குருவே.

 • என்னால நம்பவே முடியல எனக்கு மிகவும் பிடித்த மாலை எனை வாட்டுதே பாடல் இதுவரை இளையராஜா என்றே நினைத்திருந்தேன் நிஜமம்ம்ம்மாகவா ?குத்து விளக்காக பாடலும் மூங்கில் காட்டோரம் பாடலும் தெரியும் அவர் என்று அதிகம் ரசித்த பாடல்களில் அவையும்
  by umakrishh

 • நல்ல பதிவு,டி ஆர் இசையில் பிடித்த சில நல்ல பாடல்களின் தொகுப்பு
  ,நன்றி அதோடு சேர்த்து இதோ இந்த பாடலும் கிட்டார் மற்றும் வயலின் பயன்பாடு மிகவே அருமை அதைவிட அருமை எஸ் பி பி பாடலுக்கு கொடுத்துள்ள உயிர்..

  http://www.youtube.com/watch?v=-c5eIXpPWdQ

  ஆனால் கூலிக்காரன் படத்திற்கு இவரா இசை வேறு யாரோ என்பது போல ஞாபகம்?!

 • வணக்கம் ஐஸ்வர்யா
  கூலிக்காரனுக்கு இசை டி.ஆர் தான். தாணு இதை தினத்தந்தி வரலாற்றுச்சுவடுகளிலும் சொல்லியிருக்கிறார்

 • செந்தில்

  பதிவில் சொன்னது மாதிரி டி.ராஜேந்தர் வெளியார் படங்களில் இசையமைத்த பாடல்கள் தான் இவை. மூங்கிலிலே பாட்டிசைத்து அவரே இயக்கிய படம் ராகம் தேடும் பல்லவி

 • பூக்களைப் பறிகாதீர்கள்” படத்தில் “பூக்களத்தான் பறிக்காதீங்க” பாடலைப் பாடுவது சங்கர் கனேஷ் தானே இல்லை வாசுவா?. அந்தப் பாடலில் ச.க. (அவராகவே) நடித்தும் இருப்பார் (வந்திருப்பார் என்றுச் சொல்லவேண்டுமோ?).

 • மிகவும் அருமை, டி ஆரை நான் மிகவும் மதிப்பவன், இன்று எவவளவோ கிண்டலுக்கு ஆளானும், டி ராஜேந்தர் ஒரு இசை சகாப்தம், அவர் பாடல் வரிகளினஂ, இசையின் அருமை இன்றைய இளைஞ்சர்களுக்கு தெரியவில்லை
  அவரை பற்றிய பதிவு இதோ http://trajendar.blogspot.com/

 • டி.ராஜேந்தரின் இடத்தை இன்னொருவர் நிரப்புவது கடினமே.எனக்குத்தெரிய தனது படங்களில்,பாடல் எழுதி,இசை அமைத்து,பாடி,இயக்கி,நடித்து,தாயாரித்து,ஒளிப்பதிவும் செய்து,இப்படி பலவேலைகளைச்செய்தவர் டி.ஆர் மட்டும்தான்

  டி.ஆர் பற்றிய நல்ல பதிவு வாழ்த்துக்கள்

 • வேங்கட ஸ்ரீனிவாசன் said…

  பூக்களைப் பறிகாதீர்கள்” படத்தில் “பூக்களத்தான் பறிக்காதீங்க” பாடலைப் பாடுவது சங்கர் கனேஷ் தானே இல்லை வாசுவா?. //
  அந்தப் பாட்டைப் பாடுவது மலேசியா தான்

 • கோபிராஜ்

  வலையுலகிற்கு வரவேற்கிறோம் 😉

  ராஜா என்ற சிஷ்யரே

  நீங்க குருவை மிஞ்சிய சிஷ்யர் 😉

 • நன்றி தோழரே. வணக்கம். என் இனிய முகம் பாரா குரு, ஏழிசை ஏந்தல், திரு.விசய தி. இராசேந்தரை பற்றிய நல்ல தொகுப்பு . இன்றும் அவரின் இசைக்காக , பாடல்களுக்காக தவமிருக்கும் இசைநேசன் இராமகிருட்டிணன். எனக்கு சில வெளி படங்கள் மட்டுமே தெரியும், இன்று மேலும் அறிந்து கொண்டேன். நன்றி.

 • THATS VERY USEFULL TO ME . THANKS GHANA PRABHA. I LOVE HIM, ADMIRE HIM, FOLLOW HIM. WHO IS PERFECT GENTLE MAN IN CINE WORLD. I KNOW SOMETHING ABT HIM. HIS OTHER PROJECTS ARE ALL VERY GOOD SONGS, & CONTRIBUTION TO CINEMA , NO ONE IN TAMIL CINEMA.
  RAMAKRITNAN.P

 • அருமையான பதிவு!
  ஒரு நல்ல கவிஞர் மற்றும்
  இனிய இசையமைப்பாளரும் ஆன
  டீ .ஆரை தமிழ் சினிமா புறக்கணித்தது பெரிய துரதிர்ஷ்ட்டம்!

 • அருமையான பதிவு.
  டி.ராஜேந்தர் ஒரு ஜீனியஸ்.
  தமிழ் திரையுலகின் லெஜண்ட்.
  அஷ்டவதானி எனப்படும் அவரது
  பாடல்களுடன் கூடிய இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

 • அருமையான பதிவு.
  டி.ராஜேந்தர் ஒரு ஜீனியஸ்.
  தமிழ் திரையுலகின் லெஜண்ட்.
  அஷ்டவதானி எனப்படும் அவரது
  பாடல்களுடன் கூடிய இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

 • அருமையான பதிவு.
  டி ராஜேந்தர் ஒரு லெஜண்ட்

  அவரது பாடல், இசை ஒவ்வொன்றும் தெவிட்டாத தேனமுது

  அமைதியான தருணங்களில் அவருடைய பாடலை கேட்பது எனக்கு பிடித்தமான வழக்கம்.

Leave a Reply to admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *