நந்தனா….வானத்துமலரே…எழுதுகிறேன் ஒரு கடிதம்


எத்தனை செல்வங்கள் கிடைத்தாலும் செல்வத்துள் பெருஞ்செல்வம் பிள்ளைச்செல்வம் என்பார்கள். அப்படியானதொரு செல்வத்துக்காகப் பல்லாண்டுகள் காத்திருந்தவர் எல்லாச் செல்வங்களையும் கொண்டிருந்த பாடகி சித்ரா. நீண்ட நாட்களாக அவருக்குப் பிள்ளை இல்லை,அந்த ஏழ்மையை மனதுள் புதைத்துக் கொண்டிருந்த அவருக்கு தேவா இசையில் புதியவர் இளந்தேவன் வரிகளில் கல்கி படத்துக்காகப் பாடும் வய்ப்புக் கிடைக்கின்றது.
“முத்து முத்து மகளே முகங்காணா நிலவே
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து –
கற்பனையில் பெற்ற கண்மணியே நானுனக்கு
கவிதையில் எழுதும் கடிதம்”

இப்படியாகக் கருவுறாத் தாய் ஒருத்தியின் ஏக்கம் சுமந்த பாடலாக வருகின்றது. பாடலைப் பாடி முடித்து விட்டு பாடல் ஒலிப்பதிவுக் கூடத்திலேயே தன் மனதில் அதுநாள் வரை கொண்டிருந்த சுமையை இறக்குமாற்போல வெடித்து அழுகிறார் சித்ரா. இது நடந்தது 1996 ஆம் ஆண்டு.

2006 ஆம் ஆண்டு மலையாளத் திரையுலக இசை மேதை ரவீந்திரன் இசையில் “நந்தனம்” திரைப்படத்துக்காக சித்ராவுக்கு அவரின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத பாடலாக “கார்முகில் வந்த” என்ற பாடல் கிட்டுகிறது. கேரள அரசின் சிறந்த பாடகிக்கான விருதை மட்டுமல்ல இது நாள் வரை அவர் ஏங்கிக் கொண்டிருந்த பிள்ளைச் செல்வமும் கிடைக்கிறது.

அந்தப் பாடல் ஒலிப்பதிவு வேளையில் இதுநாள் வரை கிட்டாத கரு உருக்கொண்டிருக்கும் வேளை அந்தப் பாடல் வாய்ப்பைச் சித்ரா தட்டிக்கழிக்க, ரவீந்திரனோ இல்லை நீ தான் பாடணும் என்று வற்புறுத்திப் பாடவைக்கிறார். பாடலும் பிரசவிக்க, பிள்ளைச் செல்வமும் கிட்ட, ஆசையோடு பேர் வைக்கிறார் அந்தப் பிள்ளைக்கு “நந்தனா” என்று

தன்னைப் பற்றிப் பேசும் வாய்ப்புக்களில் நந்தனாவை அதிகம் சேர்த்துக் கொள்ள சித்ரா தவறுவதில்லை. சிட்னியில் இசை நிகழ்ச்சி செய்ய வந்த போது கூட ஒரே நந்தனா புராணம் தான். நந்தனாவுக்கு இசை பிடிக்கும் என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லிவைத்த அந்தச் சித்ராவின் மனதில் நிறைந்து இருந்த தாய்மையின் பூரிப்புத் தெரிந்தது.

ஏப்ரல் 14, துபாயில் உள்ள எமிரேட்ஸ் ஹில்ஸ் இல் இருக்கும் நீச்சல் குளத்தில் காத்திருந்த காலன் “நந்தனா”வை சித்ராவிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்தெடுத்துவிட்டான் 🙁

முத்து முத்து மகளே முகங்காணா நிலவே
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து –
கற்பனையில் பெற்ற கண்மணியே நானுனக்கு
கவிதையில் எழுதும் கடிதம்

எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்தின் நிலவே வாழ்க்கையின் பொருளே வா
எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்

பாறையில் மலர்ந்த தாமரையே இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே

நந்தனாவுக்கு என் ஆத்மார்த்தமான அஞ்சலிகள்

26 thoughts on “நந்தனா….வானத்துமலரே…எழுதுகிறேன் ஒரு கடிதம்

 • மிக வேதனையாக இருக்கின்றது.பிள்ளை ஏக்கத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியை படித்திருக்கிறேன்.இந்த செய்தி பொய்யாக இருக்க கூடாதா என மனம் ஏங்குகிறது.சித்ரா அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை

 • மிக வேதனை!
  குழந்தையின் ஆத்ம சாந்தியும்; பெற்றோரின் மன ஆறுதலுக்கும் இறைஞ்சுகிறேன்.
  சித்ராவின் சிரித்த முகம் இனிக் காணமுடியாது.
  விடுதி நீச்சல் குளத்தில் காவலர்களின் அவதானமில்லாமலா? விதி!

 • புத்திர சோகம் எவ்வளவு கொடுமையானது…..சித்ராவை இதிலிருந்து மீண்டுவர சக்தியை கடவுள தான் கொடுக்க வேண்டாம்…

 • வருத்தமாக இருக்கிறது.

  10 வருடங்களுக்கு முன் கோடம்பாக்கத்தில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு நிறைமாத கர்ப்பிணியாக பெருமை மிகு முகத்துடன் தரிசிக்க வருவதைப் பார்த்திருக்கிறேன். இறைவன் மன அமைதியைத் தர பிரார்த்திக்கிறேன்.

 • .
  ஆழ்ந்த அனுதாபங்கள்
  .சித்ரா அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை
  அன்புடன்
  பிரபா

 • வேதனையாக இருந்தது செய்தியை படித்த போது…எப்படி தேற்றிக் கொள்வார் ?இறைவன் அவருக்கு துணை இருக்கட்டும்

 • தவமாய் தவமிருந்து பிறந்த நந்தனா வாய் பேச் முடியாத குழந்தையாம்!!! இன்றைய செய்தித்தாளில் படித்தேன். என்ன ஒரு கொடுமை. இறைவனுக்கு சில சமயங்களில் கருணை என்பது மறந்து போய்விடுகிறது போல இருக்கு.

  :(((

 • நான் தாயென்று ஆகும் முன்னமே என் தாய்பால் வழிகிறதே

  பூமகள் ஊர்வலம் படத்தில் சித்ரா பாடிய இந்தபாடலை கேட்டு ரொம்பவும் உணர்சிவசப்பட்டிருகிறேன்…இந்தப்பாடல் வந்த சமயத்தில் நந்தனா மலர்ந்திருக்கவில்லை

 • முருகா….

  கண் இழந்தான்
  பெற்றிழந்தான்
  பின் உழந்தான்

  இல்லாத கண் பார்வையைப் பெற்று, மீண்டும் இழப்பது என்பது…

  பலருக்கும் பாட்டால் ஆறுதல் தந்த சித்ரா அவர்களுக்கு, எம்பெருமான் பாடி ஆறுதலைத் தர வேண்டுமாய் வேண்டுகிறேன்! நந்தனா என்னும் அன்பு வாழி!

 • வேதனையாக இருந்தது செய்தியை படித்த போது…எப்படி தேற்றிக் கொள்வார் ?இறைவன் அவருக்கு துணை இருக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *