“மெளனமேன் மெளனமே வசந்த காலமா” – நட்பொன்றைக் காட்டிய பாட்டு


ஒரு பெரும் மழை அடிப்பதற்குக் கட்டியம் கூறுமாற்போல ஒரு நீர்க்குட்டை ஒன்றில் மெல்ல மெல்ல வந்து விழுமாற்போல அந்தப் பியானோ இசை ஆரம்பிக்கிறது. அதைப் பெருப்பித்து ஊதி ஊருக்கே பறைசாற்றுமாற்போலக் கூட வரும் வயலின் கூட்டணி மேலே இழுத்துச் செல்கிறது அந்த ஆர்ப்பரிப்பைக் கொஞ்சம் அடக்கி மெல்ல அரவணைக்கும் புல்லாங்குழல் மனோவிடம் கொடுக்க
“மெளனம் ஏன் மெளனமே வசந்த காலமா….. நினைவிலே வளர்ந்தது பருவராகமா…
தனிமையில் நீ இனிமையை அழைத்து வா…… மனதில் ஆட வா”
என்று நிதானிக்க ஒரு ட்ரம்ஸ் இசைக்கீற்று இதயத்தின் படபடப்பாய் ஒலிக்க
மீண்டும்
“மெளனம் ஏன் மெளனமே வசந்த காலமே….மெளனம் ஏன் மெளனமே” என்று தொடருகிறார்.

ஐந்து வருஷங்களுக்கு முன் ஒரு இரவுப்பொழுதில் தனியனாக இருந்து இந்தப் பாட்டை ஒலிக்க விட்டு மீண்டும் பாட்டுக்குள் புகுந்த கணம் ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது.
“ஆகா, எனக்கு மிகவும் பிடித்த பாட்டாச்சே, என் ஜீவன் பாடுது படத்தில் அல்லவா” மறுமுனையில் ஒலித்த ஆண் குரல் காட்டிய உற்சாகத்திலேயே உணர்ந்து கொண்டேன் அவர் என்னைப் போலவே இந்தப் பாட்டை வெறியோடு கேட்கும் ரசிகர் என்று. தொடந்து பாடல் தன் பாட்டுக்குச் சோக ராகம் பிரிக்க, தொலைபேசியில் தனிப்பட்ட உரையாடலை என்னோடு நிகழ்த்தும் அந்த அன்பரோ இசைஞானி இளையராஜாவைச் சிலாகித்துப் பேச ஆரம்பிக்கிறார். அவரின் தொலைபேசி இலக்கம் வாங்கி வைத்து நாளை அழைக்கின்றேன் என்று சொல்லி விட்டு மீண்டும் பாட்டுப் பயணத்தில் கலக்கின்றேன். மெளனமே மெளனமே பாட்டுப் போட்ட நாள் முதல் ஐந்து வருஷங்களாக இங்கே என்னோடு இசைஞானியின் பாட்டுக்களைக் கேட்டுச் சிலாகிப்பதும், நீண்ட தூரக் கார்ப்பயணங்களைத் தானாக ஏற்படுத்தி இப்படியான சங்கதிகளுக்காக நாம் இருவரும் பயணிப்பததும் ஐந்து வருஷங்களாக நடக்கும் தொடர்கதை. அவர் இப்போது என் நெருங்கிய நண்பர்களில் முதல்வர்.

யோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மை தெரியும், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிறக்கின்றன. எல்லாமே எல்லோரையும் ஆட்கொள்ளும் அளவுக்கு ஆவதில்லை. எங்கோ, எப்போதோ இசையமைத்த பாட்டு ஒன்று அவ்வளவு பிரபலமாகாத பாட்டை நம் மனசுக்கு மட்டும் நெருக்கமாக வைத்திருக்கும் போது இன்னொருவரும் அதே அலைவரிசையில் இருக்கும் போது நம் இசைஞானம் அங்கீகரிக்கப்பட்டது போன்ற ஒரு பெருமிதம்.
“மெளனம் ஏன் மெளனமே” பாட்டை எனக்கு தொண்ணூறுகளின் ஒரு ஞாயிறு சென்னை வானொலியின் திரைகானம் தான் அறிமுகப்படுத்தியது. அந்த நேரத்து திண்டாட்டமான வயதும் மனதும் இந்தப் பாட்டுக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்ந்து கொண்டதாலோ என்னவோ மிகவும் பிடித்துப் போனது.

1988 ஆம் ஆண்டு பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “என் ஜீவன் பாடுது” படத்தில் எல்லாப்பாடல்களுமே இனிமை என்றாலும் அதிகம் புகழ் சேர்த்தது “எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற ஆண்குரல் (இளையராஜா), பெண் குரல் (லதா மங்கேஷ்கர்) தவிர படத்தில் அதே பாடல் மனோ குரலில் இருக்கிறது. ஆனால் “மெளனம் ஏன் மெளனமே” பாடல் அவ்வளவு தூரம் பிரபலமாகாத பாட்டு. மனோ பாடிய ஆரம்ப கால முத்துக்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாட்டின் சிறப்பே எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை நகல் எடுக்காத மனோ தைரியத்தோடு அவர் பாடிய விதம் தான். கூடவே கோரசாக சித்ராவின் குரலும் பாடலின் இடையிடையே.
தான் நேசித்த முறைப்பெண்ணை இழந்து விடுவோமோ என்ற அவ நம்பிக்கை தொனிக்கும் சூழ்நிலையில் வருகின்றது இந்தப் பாட்டு. படத்தின் கதாநாயகன் கார்த்திக், நாயகி சரண்யா, ஆனால் இந்தப் பாடலோ இன்னொரு பாத்திரமாக வரும் கபில்தேவ் சரண்யாவுக்காகப் பாடும் பாடலாக வருகின்றது. ஆரம்பம் முதல் பாடல் முடியும் கணம் வரை தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அவளுக்காக மெளனமாகப் பாடும் இந்தக் காதலனுக்காக அனுதாபத்தைக் கொட்டித் தீர்க்குமாற்போல இசையும் மனோவின் குரலும் சேர்ந்து அந்த ஒருதலைக்காதலின் ஆழத்தைக் காட்டி நிற்கின்றது.

10 thoughts on ““மெளனமேன் மெளனமே வசந்த காலமா” – நட்பொன்றைக் காட்டிய பாட்டு

 • இந்தப்படம் தேடிக்களைத்துப்பார்த்த படம். இன்னும் லாதாவின் குரல் என் காதோரம் ரீங்காரம் இடுகிறது.இதில் சாரன்யாவின் நடிப்பு சிறப்பானது. என்பது என்கருத்து.மறுபிறப்பை குழப்பத்துடன் செண்ணபடம்.தோல்விப்படம்.இலங்கை வானொலியில் எங்கிருந்தோ பாடல் அதிகம் ஒலித்தது ஓருகாலம்.

 • \எப்போதோ இசையமைத்த பாட்டு ஒன்று அவ்வளவு பிரபலமாகாத பாட்டை நம் மனசுக்கு மட்டும் நெருக்கமாக வைத்திருக்கும் போது இன்னொருவரும் அதே அலைவரிசையில் இருக்கும் போது நம் இசைஞானம் அங்கீகரிக்கப்பட்டது போன்ற ஒரு பெருமிதம்.\

  வழிமொழிக்கிறேன் தல 😉

 • நேசன்

  வெகு காலம் பின்னர் டிவிடியில் கிடைத்தது படம். அருமையான பாடல்கள் சொதப்பல் கதை.

  வருகைக்கு நன்றி தமிழ் உதயம் நண்பர், சுதர்சன், கீதப்பிரியன், தல கோபி, புனிதா

 • //அருமையான பாடல்கள் சொதப்பல் கதை//

  இல்லை இல்லை, கதை நல்ல கதைதான்,
  ஆர்.சுந்தர்ராஜானின் இயக்கம்தான் கோர்வையற்று இருக்கும்.
  ஒளிப்பதிவு, எடிட்டிங் கூட மோசம்தான்.

  இவை எல்லாவற்றையும் தாங்கும் வண்ணம் சாமியார் ஆர்.ஆரில் கலக்கியிருப்பார், அதிலும் கடைசி அரைமணிநேரம் ராஜாவின் ராஜாங்கம்தான்.

  கதை ஆங்கிலப்படத்தின் காப்பியா இல்லை மீரா, ஆண்டாள் காதலில் இருந்து எடுத்ததா என்று தெரியவில்லை. ஆனால் கடைசி வசனங்களில் மீரா ஆண்டாளோடு ஒப்பிட்டிருப்பார்கள்.

  ************

  கானா,

  மனோ – லதாம்மா பாடிய "எங்கிருந்தோ அழைக்கும்" பாடலின் முழுவடிவம் கேட்டிருக்கிறீர்களா? இந்த பாடல் ரெக்கார்டில்/கேசட்டில் வரவில்லை என்று கேள்விப்பட்டேன்.

  படத்தில் ஒரு சரணம்தான் இருக்கும். அநியாயத்திற்கு இன்னொரு சரணத்தை வெட்டிருப்பார்கள். உங்கள் டி.வி.டியிலும் இதே கதிதானா?

Leave a Reply to S.Sudharshan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *