என்றோ கேட்ட இதமான ராகங்கள் – “கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால் நிலா”


வாழ்க்கையில் எத்தனை ஆயிரம் நொடிகளைக் கடந்திருப்போம், ஆனால் நினைவில் தங்குவது என்றோ எப்போதோ கழிந்து போன அந்தக் கணங்கள் தான். எத்தனை ஆயிரம் பாடல்களைக் கேட்டிருப்போம் ஆனால் ஏதோ ஒரு சில பாடல்களைக் கேட்கும் போது மட்டும் எங்கிருந்தோ வந்து உடலில் புகுந்து கொள்ளும் ஒரு வித கலவையான உணர்வு, அப்படியானதொரு இலக்கணம் பொருந்தியது தான்
“கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால் நிலா” என்று ஆரம்பித்து “நீதானே வான் நிலா என்னோடு வா நிலா தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா” என்று தொடரும் அந்தப் பாடல்.

இப்படியான பாடல்களைக் கேட்கும் போது இந்த உலகில் இன்னும் எவ்வளவு அழகான விஷயங்கள் இருக்கின்றன இவற்றை அனுபவிக்காமல் வாழாவிருக்கின்றோமே என்ற உணர்வு தானாக எழும்.

பல நூறு திரைப்படங்களில் அவை வந்த சுவட்டைக் காட்டும் சாட்சியமாக இருப்பவை இந்தப் பாடல் போன்ற முத்துக்கள் தான். அந்த வகையில் “மெளனம் சம்மதம்” என்ற படம் மலையாளத்தில் இருந்து இயக்குனர் மது மூலம் தமிழ் பேசியது. மம்முட்டியை வைத்து தொடர்ந்து தோல்விப்படங்களைத் தயாரித்த கோவை செழியன் தயாரித்த படங்களில் ஒன்று. இதைத் தொடந்து வந்த அழகன், புதையல் படங்களும் கோவை செழியன் மம்முட்டியை வைத்துத் தயாரித்தவை.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் களத்தில் இதமான மெட்டமைத்து ஆர்ப்பாட்டமில்லாத இசைச் சாயம் பூசி ஓவியம் தீட்டுவது இசைஞானிக்குக் கைவந்த கலை. இப்படியான படங்களுக்கு தியேட்டருக்கு ரசிகனை மீண்டும் மீண்டும் வரவைக்க வேண்டிய பொறுப்பு இசையமைப்பாளருக்கே இருக்கும். ஒரு தடவை பார்த்து விட்டு ஓய்ந்து விடும் ரசிகனை மீண்டும் அழைத்து வரவேண்டிய பொறுப்பில் இசையமைப்பாளருக்கு உண்டு என்பதை ராஜா மீண்டும் காட்டியிருக்கின்றார். முந்திய உதாரணம் “சிகப்பு ரோஜாக்கள்” அந்தப் படத்தின் பாடல்களும் இதே ரகமான இதமான இசையோடு அமையப்பெற்றவை. அந்தவகையில் மெளனம் சம்மதம் படத்திலும் அமையும் இந்தப் பாடலுக்கு வரிவடிவம் தீட்டியிருக்கின்றார் கங்கை அமரன். “வான் நிலா அல்ல அல்ல உன் வாலிபம் நிலா” இப்படியான கண்ணதாசன் ரக லா ல லா பாடல்களை இட்டுக்கட்டுவதில் கங்கை அமரன் சமர்த்தர். கல்யாணத் தேனிலா என்ற இந்தப் பாடலும் அதே அலைவரிசை தான். பாடல் முழுதுமே லா லா தான். ஆனால் வெறுமனே வரிகளின் கோர்வையாக இல்லாமல் வலிமையான வரிகளாகக் காதல் மொழி பேசுகின்றன இந்த ஜோடிகளின் குரலாய். இந்தப் பாடலைக் கேட்கும் போது கங்கை அமரன் ஒரு நல்ல பாடலாசிரியனாகவே தன்னை நிலை நிறுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை.
கே.ஜே.ஜேசுதாஸை எவ்வளவு தூரம் மலையாளிகளுக்குப் பிடிக்குமோ அவ்வளவு தூரம் இந்தப் பாட்டின் பிடித்து விட்டது போலும். அதனால் தானோ என்னவோ கூட இட்டுக்கட்டிப் பாடவந்த சித்ராவோடு பாடும் ஜேசுதாசின் குரல் தேன் நிலா தான்.

எண்பதுகளில் தொலைக்காட்சி அலைவரிசைகள் அவ்வளவாக வராத காலம். சிங்கப்பூர் ஒலி ஒளி கலையகத்தில் இருந்து பிரபலமான பாடல்களை அவ்வூர்க் கலைஞர்கள் இதமாகப் பாடிக் கூடவே பாடல்களை உறுத்தாத அபிநயத்திலும் காட்டிச் செல்வார்கள். அதே பாங்கில் தான் இந்தப் பாடலும் கூடப் படமாக்கப்பட்டிருக்கப்பட்டிருகின்றது. ஒரு காலத்தில் “என்னால் ஆடவராது பாடல்களுக்கு சும்மா வந்து போகிறேன்” என்று பகிரங்கப் பேட்டியெல்லாம் கொடுத்த மம்முட்டியை அப்படியே இருத்தி அதே வேளை இந்த அருமையான பாடலுக்கு உயிர்வடிவம் கொடுப்பது என்ன லேசுப்பட்ட வேலையா? கூடவே ஆடத்தெரிந்த அமலா வேறு. ஆனால் பாடல்முழுக்க மம்முட்டி, அமலாவின் விரசமில்லாத, நளினமாக, காதல் கவிதையாக ஒளியோவியம் தீட்டப்பட்டு உயிர்கொண்டு திளைக்கின்றது.

கண்களை மூடிக்கொண்டு காய்ச்சும் நிலவொளியைக் கண்ணுக்குள் கொண்டு வந்து தொடந்து பாடலைக் கேளுங்கள்

“கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால்நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா……..

தென்பாண்டிக் கூடலா தேவாரப்பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா
என் அன்புக்காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா நீ சீண்டும் கையிலா
பால் போலே ஆவலா வா வா நிலா….

உன் தேகம் தேக்கிலா தேன் உண்ணும் பாட்டிலா
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர்ப்பலா உன் சொல்லிலா….

“கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால்நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா……..

17 thoughts on “என்றோ கேட்ட இதமான ராகங்கள் – “கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால் நிலா”

 • தல என்ன ஸ்பெசல் இன்னிக்கு…பதிவு தூள் கிளப்புது ;))

  @ கங்கை அமரன் – தல நேரம் கிடைக்கும் போது ஜெயாடிவி பாருங்கள் அதில் வரும் திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இப்போது கங்கை அமரன் அவர்கள் தான்.

  \ஆனால் பாடல்முழுக்க மம்முட்டி, அமலாவின் விரசமில்லாத, நளினமாக, காதல் கவிதையாக ஒளியோவியம் தீட்டப்பட்டு உயிர்கொண்டு திளைக்கின்றது.\

  அட அட பாட்டு மாதிரியே பின்னிட்டிங்க ;))

 • கண்களை மூடிக்கொண்டு காய்ச்சும் நிலவொளியைக் கண்ணுக்குள் கொண்டு வந்து தொடந்து பாடலைக் கேளுங்கள்……………. பாடலைவிட இந்த வரிகளை முதலில் உள்வாங்கினால்தான் பாடலை ரசிக்க முடியும். அந்த வகையில் வரிகளுக்கு ஒரு சபாஷ். நன்றி குருநாதரே

 • வணக்கம் .

  கல்யாணத தேன் நிலா காய்ச்சாத ………….( நிலவைக் காச்ச முடியுமா) அல்லது காச்சிய பாலா? நிலா .

  நிலா காய் கிறது என்று சொல்வார்கள் காய்தல் என்றால் எறித்தல் என்று பொருள் .நிலவு எறிக்கிறது .ஒளி வீசுகிறது என்று பொருள் . அதாவது இன்னும் ஒளிர்விடாத நிலவு …இளம் நிலவு …( மூன்றாம் பிறை போல) கல்யாணத் தேன் நிலா காயாத பால் நிலா என்பதே சரியாகும். உங்கள் கருத்து என்ன முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

 • அருமையான பாட்டு. மனதிற்கு இதமான இசை. அற்புதமான காட்சி.

  வேறென்ன சொல்வதற்கு? அனைத்தும் அற்புதம்.

  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கானா பிரபா.

 • தல கோபி

  ஜெயா டிவி இங்கு வருவதில்லை, யூடிபில் யாராவது மகராசன் போட்டால் தான் உண்டு 😉

  கல்யாணத் தேனிலா கேட்டபோது எழுதணும்னு தோன்றியது ;0

 • rajah said…

  கண்களை மூடிக்கொண்டு காய்ச்சும் நிலவொளியைக் கண்ணுக்குள் கொண்டு வந்து தொடந்து பாடலைக் கேளுங்கள்……………. பாடலைவிட இந்த வரிகளை முதலில் உள்வாங்கினால்தான் பாடலை ரசிக்க முடியும். //

  சிஷ்யரே

  கண்ணை மூடிக்கொண்டு பாட்டுக் கேட்டாலும் காதில் வரிகள் விழும் தானே 😉

 • ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கங்கை அமரன பகிர்ந்து கொண்டது "அண்ணனுக்கும் எனக்கும் இசை போட்டி நெறையவே நடக்கும், அவர் ஒரு பாட்டு போட்டா நான் பதிலுக்கு வேற மாதிரி அத மாத்தி போடுவேன்.அப்படி வந்த ஒரு பாட்டுதான் 'கல்யாண தேனிலா'. அவர் மொதல்ல 'வசந்த காலக்கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்'ன்னு ஒரு பாட்டு போட்டார் நான் அத மாத்தி 'நீல வான ஓடையில் நீந்துகின்ற வெனில்லா'னூ பாட்டு போட்டேன் அதை கேட்டுட்டே நீ அப்படி போட்டியா நான் இப்படி மாத்றேன் பாருன்னு 'கல்யாண தேனிலா'ன்னு ட்யூன் போட்டார்."

 • Blogger நிலாமதி said…

  வணக்கம் .

  கல்யாணத தேன் நிலா காய்ச்சாத ………….( நிலவைக் காச்ச முடியுமா) அல்லது காச்சிய பாலா? நிலா .//

  நிலாமதி

  காய்க்காத பால் நிலா என்றே வைத்த்துக் கொள்வோம் அதன் பொருள் அமாவாசை என்றாகிவிடுமே?

  கவிஞர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். பாலைக் காய்ச்சினால் ஒரு திரை வந்து அதன் மேல் கரையாக இருக்கும். காய்ச்சாத பால் அச்சான வெள்ளையாக இருக்கும் அந்தக் காய்ச்சாத பாலுக்கு ஒப்பிடுகின்றார் நிலவை.

 • மாசிலா said…

  அருமையான பாட்டு. மனதிற்கு இதமான இசை. அற்புதமான காட்சி.//

  வருகைக்கு நன்றி மாசிலா

 • pulikesi said…

  ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கங்கை அமரன பகிர்ந்து கொண்டது //

  புலிகேசி

  உங்கள் கருத்துக்கள் சுவாரஸ்யமாக இருந்தன மிக்க நன்றி

 • பகவதிபுரம் ரெயில்வே கேட் படத்தில் வரும் செவ்வரளி தோட்டத்திலே உன்னை நினைச்சேன், இந்த பாட்டை பற்றி பதிவு போட்டுவிட்டீர்களா, போட்டிருந்தால் இணைப்பை கொடுக்கவும், இல்லை என்றால் ஒரு பதிவு போடவும், என்ன ஒரு அருமையான பாடல், பாடல் வரிகளும் அருமை யார் இயற்றியதோ. பதிவை எதிர்பார்க்கலாமா. நாகராஜ்

 • கானா,

  க‌ல்யாண‌ தேன் நிலா பாட‌ல், புல‌வ‌ர் புல‌மைப்பித்த‌ன் எழுதிய‌ பாட‌ல்.

 • வணக்கம் காத்தவராயன்

  இந்தப் படத்தில் கங்கைஅமரன், புலமைப்பித்தன் இருவருமே பாடல் எழுதியிருக்கின்றார்கள்.
  முன்பு எங்கோ கங்கை அமரனே இந்தப் பாடலை எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். மீண்டும் இதனை உறுதிப்படுத்த முனைகிறேன். மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *