நடிகர் விஷ்ணுவர்த்தன் நினைவாக

சில கலைஞர்களின் தோற்றத்தைப் பார்த்ததுமே எடைபோடக் கூடிய கதாநாயகக் களை இருக்கும், கூடவே கண்ணியமும் தோன்றும் அப்படி ஒரு நடிகராகத் தெரிந்தவர் தான் இன்று அதிகாலை காலமான நடிகர் விஷ்ணுவர்த்தன். தலைசிறந்த நடிகர்கள் பலருக்கு நல்ல இயக்குனர்கள் முதலில் வாய்த்திருப்பார்கள். அந்த வகையில் விஷ்ணுவர்த்தனின் முதற்படமான “வம்சவிருக்ஷா” (1972) படத்தினை இயக்கி இவரை கன்னட சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் இந்திய அளவில் பேசப்படும் க்ரீஷ் கர்னாட்.

கல்யாண்குமாரை கன்னடத்தில் தேடிப் பிடித்து “நெஞ்சில் ஓர் ஆலயம்” படைத்த ஸ்ரீதர், விஷ்ணுவர்த்தனைத் தேடிப் பிடித்து “அலைகள்” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுலகுக்கும் அறிமுகப்படுத்தியிருந்தார். நடிகை லட்சுமி இயக்கிய (கே.பாலசந்தர் மேற்பார்வையில்) 1980 ஆம் ஆண்டு குழந்தைகள் தின ஆண்டுப் படமாக “மழலைப்பட்டாளம்’ வந்தபோது அதில் ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லற்படும் கெளரி மனோகரி என்ற எழுத்தாளராக வந்து நகைச்சுவையான நடிப்பிலும் கலக்கினார். சமீபத்தில் கூட நண்பர்களோடு சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தேன். “குர்பானி” ஹிந்தித்திரைப்படம் தமிழுக்கு பாலாஜி மூலம் “விடுதலை”யாக தயாரிக்கப்பட்ட போது அதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகியோரோடு முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் இவர். இவரின் சிறந்ததொரு கன்னடத்திரைப்படம் (பெயர் ஞாபகம் வரவில்லை) தமிழில் சிவகுமார் நடித்த “பிரேம பாசம்” என்று மீள எடுக்கப்பட்டது. விஷ்ணுவர்த்தன் தமிழில் நேரடியாகப் படங்கள் செய்தது குறைவு என்றாலும் கன்னடத்தில் இருந்து இவரின் படங்கள் சில மொழி மாற்றம் கண்டிருக்கின்றன. மசாலாப்படங்கள் மட்டுமன்றி கதையம்சமுள்ள படங்களையும் தேடி எடுத்து நடித்தது இவரின் சிறப்பு.

தமிழில் வெற்றி கண்ட சில படங்களை கன்னடம் சுவீகரிப்பது என்பது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் “வானத்தைப் போல” படம் “எஜமான” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விஷ்ணுவர்த்தன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் கொடுத்த நம்ப முடியாத வெற்றியால் படத்தினைத் தயாரித்த விஷ்ணுவர்த்தனின் உறவினர் மாரடைப்பால் இறந்ததாக அப்போது பரபரப்பான செய்தி கூட வந்திருந்தது.

“மணிச்சித்ரதாளு” மலையாளத்தில் இருந்து கன்னடத்துக்குத் தாவியபோது “ஆப்தமித்ரா”வாகி கன்னட சினிமா உலகையே புரட்டிப் போட்ட வெற்றியைக் குவித்ததில் விஷ்ணுவர்த்தனின் பங்கும் கணிசமானது. அதுவே பின்னர் “சந்திரமுகி” ஆனது பலரும் தெரிந்த செய்தி. தமிழ் தவிர மலையாளத்தில் மம்முட்டியோடு இவர் இணைந்து நடிக்க ஜோஷி இயக்கத்தில் “கெளரவர்” என்ற திரைப்படம் வெளியானது.

“எனக்கு அரசியல் பிடிக்காது, அரசியலுக்கும் என்னை பிடிக்காது” என்று சமீபத்தில் ஆனந்த விகடனில் தன் மனம் திறந்த பேட்டியை வழங்கியிருந்தார். சினிமா நடிகை பாரதியை கைப்பிடித்துக் கொண்டவர். நடிகராக மட்டுமன்றி பாடகராகத் திரைப்படங்களில் மட்டுமன்றி பக்தி ஆல்பங்களிலும் பாடியவர். தேசிய மட்டத்திலும் மாநில அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞன் “விஷ்ணுவர்த்தன்”

விஷ்ணுவர்த்தன் என்ற கலைஞனின் ஆத்மா சாந்தியடைவதாக
விஷ்ணுவர்த்தன் நடித்த சில படங்களில் இருந்து பாடல்கள்

அலைகள் படத்தில் இருந்து “பொன்னென்ன பூவென்ன கண்ணே”

மழலைப்பட்டாளம் திரைப்படம் தரும் “கெளரி மனோகரியைக் கண்டேன்”

விடுதலை படத்தில் தேன்றிய காதல் பாட்டு “நீலக்குயில்கள் ரெண்டு”

நிறைவாக விஷ்ணுவர்த்தன் குரலில் மலரும் “தூத்து அன்னா துன்னகே” “ஜிம்மி கள்ளு” படத்தில் இருந்து

விஷ்ணுவர்த்தன் படங்களில் குறிப்பிடத்த படமாக இருக்கும் Mutthina Hara படத்தில் இருந்து பாடல் ஒன்று காணொளியாக

உபகுறிப்புக்கள் உதவி: விஷ்ணுவர்த்தன் இணையம், விக்கிபீடியா

13 thoughts on “நடிகர் விஷ்ணுவர்த்தன் நினைவாக

 • நல்ல பதிவு.”பொன்னென்ன பூவென்ன”
  அருமையான பாட்டு.ஜெயசந்திரன் சூப்பர்.”அலைகள்” படம் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.

 • விஷ்ணுவர்த்தன் பேரை பார்த்ததுமே விடுதலை படத்தின் ஞாபகமே வந்தது !

  ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!

 • மம்முட்டியுடன் விஷ்ணுவர்த்தன் சேர்ந்து நடித்த ‘சத்திரிய வம்சம்' என்ற படமும் எனக்கு மிகவும் பிடித்தது. நான் பார்த்த அந்தப்படம் மலையாளப் படம் ஒன்றின் தமிழாக்கம் என்று நினைக்கிறேன். அந்தப் படத்தின் கதையில் விஷ்ணுவர்த்தனின் மூன்று பெண்பிள்ளைகளில் ஒருவர் உண்மையில் மம்முட்டியின் மகள். அதை விஷ்ணுவர்த்தன் சொல்ல மறுக்கிறார். அதை அறிவதற்காக மம்முட்டி அவர்களுடனேயே வசிக்கிறார். இறுதியில் விஷ்ணுவர்த்தன் தனது மரணப்படுக்கையில் அதைச் சொல்ல எத்தனைக்கையில் மம்முட்டி, அதை கேட்க மறுத்து, மூவரையுமே தனது மகள்களாக பார்த்துக் கொள்வதாக உறுதி அளிக்கிறார்.

 • கலை said…

  மம்முட்டியுடன் விஷ்ணுவர்த்தன் சேர்ந்து நடித்த ‘சத்திரிய வம்சம்' என்ற படமும் எனக்கு மிகவும் பிடித்தது.//

  அதுதான் கெளரவர் என்ற மலையாளப் படம் , அருமையான படமது.

 • இந்தப் பதிவில் திரு விஷ்ணுவர்தன் பற்றி நிறைய தெரிந்துக் கொண்டேன் கானா.. நன்றி. அண்ணாருக்கு கண்ணீர் அஞ்சலி.

 • உங்கள் புளக்கர் மேல் இன்னொரு புளக்கர் open ஆகிறது photo bucket. ஆகையால்
  முழுமையாக பர்கமுடியவேல்லை

  suresh

 • வணக்கம் நண்பரே,

  இந்த டெம்ப்ளேட்டில் ஏதோ கோளாறு போல, நான் இன்றிரவுக்குள் சரி செய்து விடுகிறேன். தடங்கலுக்கு வருந்துகிறேன்

 • தலை சிறந்த நடிகர் விஷ்ணுவர்த்தனன் அவர்களின் மறைவு கேட்டு மிகவும் கஷ்டமாக இருந்தது.

  அறுபுதமான நடிகர், நல்ல குணவான்.

  ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *