இன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா?

“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ?

https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்தின் தலைப்பும் அப்படியே. “இளையராஜாவின் ரசிகை” என்ற பெயரில் வெளிவர இருந்து இதுவரை வெளிவராத படம் 40 வருடங்கள் கழித்தா இனிமேல் வெளிவரப் போகிறது? அன்னக்கிளி புகழ் தேவராஜ் – மோகன் இரட்டை இயக்குநர்கள் இயக்கவிருந்த படமது.

இந்த மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ பாடலை இளையராஜாவுடன் இணைந்து பாடியவர் ஸ்வர்ணலதா. என்னடா இது அப்படியென்றால் ஐந்து வயசிலேயே அவர் பாடியிருக்கிறாரா என்றால் இல்லை. இவர் இன்னொரு ஸ்வர்ணலதா. கூடவே R.S.ஸ்வர்ணலதா என்று போட்டிருந்தால் குழப்பம் வந்திருக்காது ஆனால் மூல இசைத் தட்டில் கூட ஸ்வர்ணலதா என்றே போடப்பட்டிருக்கும்.

R.S.ஸ்வர்ணலதாவின் குரல் கிட்டத்தட்ட ஜென்ஸி அலைவரிசை தான். இவர் மேடைப் பாடகியாகவே அதிகம் அறியப்படுகிறார். “வாய் மணக்க நிஜாம் பாக்கு” விளம்பரக் குரல் மன்னன் எஸ்.வி.ரமணன், அதான் அனிருத் தாத்தா அவர் தான் ஆர்.எஸ்.ஸ்வர்ணலதாவின் குரு. ஸ்வர்ணலதா பாடகியாக மட்டுமன்றி விளம்பரக் குரலிலும் அறியப்படுவர். திலீப் என்றிருந்த காலத்தில் ரஹ்மானின் விளம்பர இசைக் கோவையிலும் பங்களித்துள்ளார்.

தொண்ணூறுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் இயக்கமாக விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கிய நேரம் யாழ்ப்பாணத்தில் தேனிசை செல்லப்பாவுடன் இசை நிகழ்ச்சி படைக்க யாழ்ப்பாணம் முற்றவெளிக்கு வந்து கச்சேரி படைத்த போது யாழ்ப்பாணமே திரண்டு வந்து அந்த நிகழ்ச்சியைப் பார்த்தது. நானும் அங்கு சென்று அதுவரை காணாத கூட்டத்தைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்த ஸ்வர்ணலதா ஆரம்ப கால ஈழ எழுச்சிப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

கானா பிரபா

23.09.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *