ஜெயச்சந்திரன் 75 ❤️ ஒரு தெய்வம் தந்த பூவே…… கண்ணில் என்ன தேடல் தாயே…..💕

கதைகளினூடும், செய்திகளோடும், திரைப்படைப்புகளோடும் கண்ட கனவுலகமான தமிழகத்து மண்ணை என் வாழ் நாளில் முதன் முறையாக 2002 ஆம் ஆண்டில் ஒரு நாள் முத்தமிடுகிறேன். அதுவரை கனவுலகில் சஞ்சரித்த இடங்களை நிஜத்தோடு பொருத்தும் வேலையில் ஒவ்வொரு கணப் பொழுதையும் அர்ப்பணித்துக் கொண்டே சென்னையில் என் கால் போன போக்கில் உலாத்துகிறேன். ஆட்டோக்காரிடம் தமிழகத்துப் பேச்சு வழக்கில் பேசி, “சார் கேரளாவுல எந்தப் பக்கம்?” என்று என் உடைந்த தமிழைக் கண்டு பிடித்த ஆட்டோக்காரரின் குட்டை வாங்கிக் கொண்டே வியர்வை வழிந்தோட வழி நெடுகப் பயணம்.

தேவி தியேட்டரில் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஓடிக்கொண்டிருந்தது.

சரி தியேட்டர் அனுபவத்தையும் சந்திப்போம் என்று நினைத்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். என்னைச் சுற்றி எல்லாம் தமிழ் முகங்கள் ஆனால் நானோ அந்நியன், தமிழால் உறவினன் என்று அப்போது நினைத்தது இப்போதும் நினைப்பில்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் உருக்கமான அந்தக் கடைசிக் காட்சி. எனக்கு முன்னால் சீட்டில் இருந்த நடுத்தரவயதுப் பெண்மணிகள் சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே பார்க்கின்றார்கள். பக்கத்தில் ஒரு விசும்பல் கேட்கிறது, எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது ஆண்மகனும் அந்தக் காட்சியோடு ஒன்றித்ததன் வெளிப்பாடு அது. உண்மையில் அந்தக் கணநேரம் படம் தந்த உணர்வை விட, எங்கள் நாட்டின் அவலக் கதை பேசும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கியதை நேரே கண்டு நெகிழ்ந்தேன். ஒரு சாதாரண படம் தானே என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியும் ஆனால் இந்த உணர்வின் சாட்சியாகத் தமிழகத்தவர் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்காக இயங்கிவருகிறார்கள் என்பதற்கான மிகச்சிறிய உதாரணம் அது. தமிழகத்தவர் ஈழத்தமிழர்களுக்காக உணர்வு பூர்வமாக இயங்கும் அதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து.

இந்த மாதிரியான பெரியம்மா முறையான உணர்வைத் தான் எல்லா அரசியல்வதிகளும் அரசியல் முதலீடாக்குகிறார்கள் என்றாலும் அந்த அரசியல்வாதிகள் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு என்றும் அந்நியர்தான். தமிழகமும், ஈழமும் கலையாலும், மொழியாலும் ஒன்று பட்ட நேர்கோடு. இங்கே கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் அரசியல் குறித்தோ, அதன் ஆக்கம் குறித்தோ தர்க்க வாதங்களில் போக விரும்பவில்லை. நேராக ஜெயச்சந்திரனிடம் போய் விடுவோம்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் கோலோச்சிய பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, சித்ரா போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய பாடகர்கள் தான் ஏ.ஆர்.ரஹ்மான் யுகத்தில் இன்னும் நிறைவாகத் தொடர்ந்திருக்கிறார்கள். மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு இன்னும் அதிகம் கிட்டியிருக்கலாமோ என்று ஏக்கம் கொள்ள வைக்கக் கூடிய படைப்புகள் இவ்விருவருக்கும் கிட்டியிருக்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய இன்னுஞ் சில பாடல்கள் இருக்கின்றன. ஆனால் இங்கே அவற்றை இழுத்து, இன்றைய பாடலின் தனித்துவத்தைக் குறைக்காமல் அவற்றை இன்னுமிரு பதிவுகளில் பார்ப்போம்.

“ஒரு தெய்வம் தந்த பூவே….கண்ணில் தேடல் என்ன தாயே….”

பாடல் ஆரம்பிக்கும் போதே ஒரு சூனிய வெளியில் அகப்பட்ட தனிமை தான் சூழ்ந்து விடும்.

இன்று வேர் பிடுங்கப்பட்டு அகதி வாழ்வில் ஊர் கடந்து, தேசம் கடந்து ஆண்டாண்டு காலங்கள் கடந்த நிலையிலும் அந்த வெறுமை பலரின் உள்ளக்கிடக்கையாக ஒட்டிக் கொண்டிருக்கும். புலம் கடந்தவன் மட்டுமல்ல, தான் கொண்ட வாழ்வைத் தொலைத்தவன் ஒவ்வொருவனுமே அகதி தான். அதைத்தான் அசரீரியாக இந்த ஜெயச்சந்திரன் குரல் ஒப்புவிக்கின்றது.

“விடை கொடு எங்கள் நாடே” என்று மெல்லிசை மன்னரும் மாணிக்க விநாயகமும் பாடும் போது நிலம் அழுமாற் போல இருக்கும். தன்னுடைய வாழ் நிலம் விட்டுப் போகிறார்களே என்று அவன் நிலம் பாடும் ஒப்பாரியாகவும் அதை நோக்கலாம்.

இங்கே “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலில் காட்சிப் பின்னணி வேறாக இருக்கலாம். ஆனால் அது வாழ்வைத் தொலைத்த ஒவ்வொரு மனிதனின் நாடி, நரம்புகளினூடே ஊடுருவி

இன்னோர் பரிமாணம் கொடுக்கும். அது வீடிழந்த, தன் வாழ்விழந்த மனிதனைத் தாங்கி அரவணைக்கும் நிலத்தின் பாடலாகவும் நோக்கலாம். அதனால தான் இங்கே,

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வானம் முடியுமிடம் நீதானே!

காற்றைப் போல நீ வந்தாயே!

சுவாசமாக நீ நின்றாயே!

மார்பில் ஊறும் உயிரே!

என்று வெறுமனே எடுத்து வளர்த்த தந்தையின் குரலாய் அன்றி, அடைக்கலம் கொடுத்த நிலத்தின் பாடலாகவும் உணர்வு ரீதியாக எடுத்துக் கொள்ள முடிகிறது.

எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ….

ஒரு தெய்வம் தந்த பூவே…..

கண்ணில் தேடல் என்ன தாயே…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *