நெஞ்சத்தைக் கிள்ளாதே ❤️

“உடல் ஆரோக்கியத்துக்காக மன மகிழ்ச்சியோடு இன்று இவள் மாதிரி ஓடும் பெண் நாளை தன் திருமணத்துக்குப் பிறகு எதற்கெல்லாம் ஓட வேண்டியிருக்கும்?”

ஒரு வருடம் ஓடி வெற்றி கண்ட படம்!

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான (முதல் முறை) தேசிய விருது “பிரசாத்” ராமநாதனுக்கும், சிறந்த மாநிலத்திரைப்பட விருது என்ற வகையில் இயக்குநர் மகேந்திரனுக்குமாக மூன்று தேசிய விருது கிடைத்த திரைப்படம்.

ஆனால் இப்படத்தின் கதைக்கரு சில வினாடிகளிலேயே இயக்குனர் மகேந்திரனின் சிந்தனையில் பிறந்தது என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் உண்மை.

“சினிமாவும் நானும்” என்ற தன் நூலில் “நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைக்கரு உருவான அந்த சுவாரஸ்யமான கணங்களை விபரிக்கின்றார் இயக்குநர் மகேந்திரன். அதைத்தான் முதல் பந்தியில் தந்திருந்தேன். மும்பையில் ஒரு ஹோட்டலில் தங்கித் தன்னுடைய இன்னொரு படத்துக்காகப் புதுமுகங்களைத் தேடிய இயக்குநர் மகேந்திரன் ஒரு நாள் அதிகாலைப் பொழுது ஹோட்டலை அண்டிய கடற்கரையில் tracksuit உடன் உடற்பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்துத் தான் இந்தக் கதையை உருவாக்கினார். மகேந்திரன் சொந்தமாகக் கதை எழுதிய படங்களில் மூத்தது “நெஞ்சத்தைக் கிள்ளாதே” அடுத்தது “மெட்டி”.

நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை நீண்ட நாட்களாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நேற்றுத்தான் முழுதாகப் பார்க்கக் கிட்டியது. அன்றைய இலங்கை வானொலியில் திரை விருந்தில் இந்தப் படத்தின் சில காட்சிகள் ஒலிப்பகிர்வாக கே.எஸ்.ராஜாவின் விளம்பரக் குரலோடு வந்தது மட்டுமே நினைவில் தங்கியிருந்தது.

இந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததும் முழு மூச்சாக உட்கார வைத்து முடியும் வரை ஒரே இடத்தில் வைத்து விட்டது. படத்தின் முக்கியமான களமாக அமையும் கார் திருத்தும் நிலையத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி குழுவினரின் சேஷ்டை நகைச்சுவையைச் சகிக்கக் கடவது.

ஆத்மார்த்தமாகக் காதலித்தவர்கள் பின்னர் பிரிந்து போய் வெவ்வேறு வாழ்வில் புகும் கதையெல்லாம் நெஞ்சில் ஓர் ஆலயம் காலத்துக்கு முந்தியும், அந்த ஏழு நாட்கள், மெளனராகம், காப்பி மெளன ராகம் (ராஜா ராணி) என்று வந்திருந்தாலும் ஒரு பெண்ணின் கோணத்தில் அவளின் நுணுக்கமான உணர்வலைகளோடு பயணப்படும் திரைக்கதை அதிகம் வந்ததில்லை. அதில் மிக முக்கியமானது இந்த நெஞ்சத்தைக் கிள்ளாதே. இந்தப் படத்துக்குப் பின்னர் கூட இவ்வளவு ஆழமான பார்வையோடு எதுவும் வந்ததில்லை.

ஒரு துறு துறு வெகுளிப் பெண் அவளின் பின்னணியில் சதா சண்டை போடும் அண்ணன், அண்ணி உலகம், அதைக் கடந்து இன்னோர் உலகத்தைக் கட்டியெழுப்பி அதில் நிம்மதியைத் தேட முனைந்தவள் வாழ்க்கை எப்படியெல்லாம் ஓடுகிறது, அவளும் எப்படியெல்லாம் ஓடிக் கொண்டே இருக்கிறாள் என்பதைத் தொடக்கத்தில் இருந்து முடிவுப்புள்ளி வரை ஓடும் குறியீடோடே ஓடுகிறது இந்தப் படம்.

கதையை எழுதி விட்டுத் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல இளையராஜாவுக்கும் உடனேயே சொல்லி விடப் பிறந்தது தான் அந்தக் காலடி ஓசையோடு பருவமே புதிய பாடல் பாடு. காலடி ஓசை வர வாத்தியக்காரர் ஒருவரின் தொடையைத் தட்டித்தான் ஓலிப்பதிவு செய்தார்கள் என்று ராஜா தன் இசை நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார்.

தட் தட் தட் என்று தரை தட்டி ஒலி எழுப்பும் பாதணிகளின் ஓசை நயத்தோடு இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் இதயத் துடிப்பு.

“பருவமே புதிய பாடல் பாடு” பாடல் கொடுக்கும் சுகத்தோடு இந்தப் படத்தை ரசிக்க ஆரம்பித்தால், படம் பார்த்து முடித்து அடுத்த நாள் வரை “உறவெனும் புதிய ராகம்” தான் காதில் ஓடுகிறது. அவ்வளவு அற்புதமான பாட்டு. ஓ தென்றலே எனும் பி.சுசீலாவின் ஒற்றை இராகம் சோகமெழுப்பும் கானம். எஸ்.ஜானகி கிழவியாக, குமரியாகக், குழந்தையாகப் பாடியவர் இதில் விடலைப் பையனாக “மமே பேரு மாரி” என்று வித்தியாசக் குரல் கொடுத்து ஆச்சரியம் கூட்டுகிறார். எஸ்.ஜானகியைத் தாண்டி இவ்வளவு பரிமாணங்களில் யாரும் பாடித்தான் காட்டட்டுமே?

தான் விரும்பும் ஒருவர் தன்னுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற possessiveness பாங்கிலேயே படத்தின் மையம் பயணப்படுகிற்து.

தன்னுடைய கணவன் இன்னொருத்தியுடன் பேசிப் பழகுகிறான் என்ற கறார்த்தனத்தில் சுகாசினியின் அண்ணி, அண்ணன் சரத்பாபுவுடன் காட்டும் கோபம், அது போலத் தன்னோடு பேசிப் பழகும் சுகாசினி இன்னொருத்தருடன் அந்த சினேகத்தைப் பங்கு போடக் கூடாது என்ற காழ்ப்புணர்வில் மோகன்.

இந்தப் படத்துக்காகப் புதுமுகம் ஒன்றைத் தேடியலைந்து பின் பக்கத்திலேயே ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த உதவியாளினியைக் கண்டு இவளே தன் கதையின் நாயகி என்று மகேந்திரன் கண்ணில் அகப்பட்டவர் தான் சுகாசினி. சுஹாசினியின் அறிமுகம் போலவே கன்னட கோகிலா படத்தில் கண்டு பிடித்துத் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டவர் மோகன்.

மோகனின் ஆஸ்தான குரலாக விளங்கிய சுரேந்தர் இந்தப் படத்தில் பிரதாப்புக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.

நாற்பது ஆண்டுகள் கடந்தும் இன்றும் பசுமையான நினைவுகளைக் கிளப்புகிறது படத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர் Ravi Varma V ஒளியோவியத்தில்.

விஜி ஒரு விளையாட்டுத்தனமான பெண், ஆண்களிடம் பேசிச் சிரிப்பதைக் கூடக் குழந்தைத்தனத்தோடு அணுகுபவள். அப்படியாகப்பட்டவளின் துணையாக வர விரும்பும் ராம் இன் காதலை அவள் ஏற்றிருந்தாலும் மனதளவில் அதற்குத் தயார்படுத்தாத வெகுளி என்பதை “உறவெனும் புதிய வானில்” பாட்டின் இடையே காட்டியிருப்பார் இயக்குநர்.

உண்மையில் சுஹாசினிக்கு இந்தப் படம் கிடைத்தது ஒரு பெரிய அதிஷ்ட லாபச் சீட்டின் பரிசுக்கு நிகரானது. ஒப்பனையில்லாத, ஓடிக் களைத்த இயல்பான அந்த இள முகம்,

அது மெல்ல மெல்லத் தான் எதிர் நோக்கும் அனுபவங்களுக்கேற்ப மாறிக் கொண்டே போவதை வெகு யதார்த்தமாகக் கொண்டு வந்திருக்கிறார் தன் நடிப்பில்.

மெளன ராகம் முன்பே எழுதி வைத்த கதை என்று மணிரத்னம் சொன்னாலும் ஒரு சில காட்சிகளில் இரண்டு படங்களிலும் ஒற்றுமை ஆரத்தழுவுகின்றது.

தன்னை விரும்பிய ஒருத்தியைத் தூய அன்போடு மட்டும் நட்பைத் தொடரலாம் என்று சரத்பாபுவின் கதாபத்திர வடிவமைப்பும் புதுமை. வழக்கம் போல பிரதாப் போத்தன் ஒரு விநோதமான குணாம்சம் பொருந்திய பாத்திரம்.

“மும்பை கடற்கரையில் அதிகாலையில் ஓடிய பெண்ணே!

இன்று நீ ஒரு தாயாக, மாமியாராக, பாட்டியாகக் கூட இருக்கலாம், உன் திருமண வாழ்வில் நீ எந்த மாதிரியெல்லாம் வாழ்வின் நெருக்கடிகளால்

அங்கும் இங்கும் ஓடியிருக்கலாம்…..”

இப்படியே தொடர்ந்து “என் நெஞ்சத்தைக் கிள்ளாதே” கதை உருவாகக் கருப்பொருள் தந்தவளே நீதான். என்று ஒரு நீண்டதொரு பத்தியில் அந்தப் பெண்ணுக்கு நன்றி கூறி முடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.

#மகேந்திரன்_எனும்_நிரந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *