இசையமைப்பாளர் பாலபாரதி ? கானா பாடல்களைக் கொண்டாடித் தீர்த்த தலைவாசல் ?

எங்களுக்கெல்லாம் கானா பாடல்கள் அறிமுகமானதே தேவாவால் தான் என்று 90s Kids சொல்லுவார்கள். ஆனால் எங்களுக்கெல்லாம் கானா பாடல்கள் அறிமுகமானதே இசையமைப்பாளர் பாலபாரதியால் தான். அதுவும் “தலைவாசல்”
திரைப்படத்தின் வழியாக என்போம் நாம்.
உண்மையில் தலைவாசல் அளவுக்கு கானா பாடல்களைப் போற்றிப் பொருத்தமாகவும் வைத்த படங்கள் இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பும் இன்று அந்தப் படம் வெளிவந்து 27 வருடங்களுக்குப் பின்பு கூட ஏதும் உண்டா என்று தேடுமளவுக்கு கானா பாடல்களுக்கு மகத்துவம் கொடுத்தது அந்தப் படம்.

தலைவாசல் படத்தில் கானா பாட்டு பாடும் கல்லூரி மாணவராக தலைவாசல் விஜய் நடித்திருப்பார். ஆனால் உண்மையில் கானா விஜய் என்று அடையாளம் கொடுத்தாலும் தப்பில்லை என்னுமளவுக்குப் படத்தில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் அதகளம் பண்ணியிருக்கும். வேடிக்கை என்னவென்றால் பின்னாளில் அதிரி புதிரி ஹிட் அடித்த “கவலைப்படாதே சகோதரா” பாடலில் தோன்றி நடித்தவரும் இந்தத் தலைவாசல் விஜய் தான். காதல் கோட்டை பட வாய்ப்பு இவ்விதமே அவரை எட்டியிருக்கக் கூடும்.

தலைவாசல் படத்தை இயக்கிய இயக்குநர் செல்வா பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர். இந்தப் படத்திலும் அதன் பாதிப்பில் நாச்சியப்பன் கல்லூரி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும். யாழ்ப்பாணத்தில் எங்களுரில் இருந்து எண்பதுகளில் பச்சையப்பன் கல்லூரிக்குப் படிக்கச் சென்ற அண்ணன் ஒருத்தர் கல்லூரி மாணவர்கள் ஜாலியாகப் பாடும் கானா பாடல்களைப் பற்றிப் பேசியதும் நினைவுக்கு வருகிறது.

இயல்பான போக்கில் மெட்டமைத்துத் தொடையில் தாளம் போட்டு அந்தந்த நேரம் என்ன வார்த்தை உதிக்கிறதோ அதை இட்டுக்கட்டிப் பாடும் வகை ஒன்று என்றால்,
புகழ்பெற்ற சினிமாப் பாடலின் மெட்டை வைத்து தாமே இட்டுக் கட்டிப் பாடுவதும் இந்தக் கானா பாடல்களின் இன்னொரு பரிமாணமாக இருந்திருக்கிறது.
தலைவாசல் படத்தில் இந்த இரண்டாவது பரிமாணத்தைப் பார்க்க முடிகிறது.
“சோளம் சோறு பொங்கட்டுமா”

என்ற ஈழத்தின் புகழ்பூத்த பொப்பிசைக் கலைஞர் நித்தி கனரத்தினம் அவர்களின் பாடலின் மெட்டைக் கவர்ந்து “சோடா பாட்டில உடைக்கட்டுமா”

https://youtu.be/urGl0QtuyL8

என்றொரு பாடல் தலைவாசல் படத்தில் அமைக்கப்பட்டிருக்கும். கல்லூரி மாணவர் தலைமைப் போட்டியில் ஆனந்த் வெற்றி பெற்றதும் எதிர் முகாமில் இருக்கும் தலைவாசல் விஜய் தான் தோற்றால் ஆனந்தை வாழ்த்தி கானா பாட்டு பாடுவேன் என்ற சவாலில் அவர் தோல்வி கண்டு பாடும் பாட்டு அது. அந்தக் காலத்தில் கல்லூரி மாணவரிடையே ஈழத்துப் பொப்பிசைப் பாடல்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. களியாட்ட நிகழ்வுகளிலும் சுற்றுலா பயணிக்கும் போதும் மாணவர்கள் “சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே”, “சுராங்கனி சுராங்கனி” பாடல்களைப் பாடி மகிழ்வது வழக்கம். அவற்றை அக்காலத்துத் திரைப்படங்களும் காட்சிப்படுத்தியிருக்கின்றன.

அது போலவே சூரியன் படத்தில் வரும் “டாலாக்கு டோல் டப்பி மா” பாடலின் முன் வரிகளான “ஏ அடப் படக் டுமுலடிக்கிற” வை அடியொற்றி “ஏ அடி உடி உட்டான் பாரு”

https://youtu.be/L1np8WPT-V0

என்றொரு பாட்டு இருக்கும். சூரியன் படம் வெளிவந்து ஒரே மாதத்தில் தலைவாசல் படமும் வெளிவந்திருக்கிறது. எனவே இந்த மெட்டு கானா பாடல்களில் ஏற்கனவே கையாளப்பட்டிருக்கக் கூடும். அதையே தேவாவும், பாலபாரதியும் மீண்டும் கையாண்டிருக்கவும் வாய்ப்புண்டு.

தேனிசைத் தென்றல் தேவாவுக்குத் திருப்புமுனை கொடுத்த “வைகாசி பொறந்தாச்சு” படத்திலும் குறும் பாடல்களைக் கையாண்டிருப்பார். ஆனால் கானா பாடல்களுகளுக்கான ஒரு நிறத்தைப் பலமாகவே பதிவு பண்ணியதில் தலைவாசல் முதன்மை பெறுகிறது.

தலைவாசல் படத்தின் பாடல்களைப் பொத்தம் பொதுவாக வைரமுத்து என்றே விக்கிப்பீடியா ஈறாகப் பதிவு பண்ணியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் வசனப் பங்களிப்பை வழங்கிய மூர்த்தி ரமேஷ் மற்றும் சந்தானம் ஆகியோரும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். கானா பாடல்களில் வைரமுத்துவின் பங்களிப்பு இல்லை. அது போல பாடகர்களை எடுத்துக் கொண்டால் எஸ்.பி.பி, ஜானகி, சித்ரா ஆகியோரை கானா பாடல்களுக்குப் பயன்படுத்தாதது அவற்றின் இயல்பை இன்னும் வெகு சிறப்பாக அடையாளப்படுத்தி நிற்கின்றன. இசையமைப்பாளர் பாலபாரதியோடு, இசையமைப்பாளர் சந்திரபோஸ், அசோக் ஆகியோர் பயன்படுத்தப்பட்டிருப்பது வெகு சிறப்பு.

இவ்வாறாக கானா பாடல்களுக்கு ஒரு பக்கமும் இன்னோர் பக்கம் வழக்கமான தமிழ்த் திரையிசைக்கும் தீனி போடத் தவறவில்லை இந்த தலைவாசல். “வாசல் இது வாசல் தலைவாசல்” என்ற முகப்புப் பாடல், “அதிகாலைக் காற்றே நில்லு” https://youtu.be/EAigyk4IaWo என்ற நாயகி அறிமுகப் பாடல், “வாழ்க்கை என்பது”, “நாளைக்கு நம் காலம் வெல்லும்” இவற்றோடு

“உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி”
https://youtu.be/u_Q-FyLV4o8
அந்தக் காலத்தில் பட்டையைக் கிளப்பிய பாட்டு. உன்னைத் தொட்ட தென்றல் பாடல் தொடங்கும் நொடியில் இருந்து ஓயும் வரை செம வேகத்த்தில் வாத்திய ஆர்ப்பரிப்புகளுக்குத் தீனி போட்ட பாட்டு. இசையமைப்பாளர் பாலபாரதியின் அசுரத்தனமான இசைத் திறனுக்கு இந்தப் பாடல் ஒன்றே போதும். எஸ்.பி.பி & சித்ரா பாடும் அந்தப் பாடலைக் கேட்கும் போது லஷ்மிகாந்த் பியாரிலால் கூட்டணியின் “I Love You” https://youtu.be/KQxrtcwW9Hw என்ற Mr India படப் பாட்டும் நினைவுக்கு வரும்.

புகழ் பூத்த நாவலாசிரியர் அகிலனின் “சித்திரப் பாவை” நாவலைத் தொலைக்காட்சியில் இயக்கியவர், தொடர்ந்து நீலா மாலா சின்னத் திரை தொடரோடு அதே தயாரிப்பு நிறுவனம் சோழா பொன்னுரங்கத்தின் சோழா கிரியேஷன்ஸ் வழியாக திரையுலகத்தின் தலைவாசல் கண்டவர் இயக்குநர் செல்வா.

வழக்கமான கல்லூரிக் கதை தானே என்றில்லாமல் கல்லூரியில் புழங்கும் போதைப் பாவனை, சுய ஒழுக்கம் மீறிய மாணவர்கள் என்று இந்தப் படத்தின் திரைக்கதை வித்தியாசமான பாதையில் பயணப்படும். வெளிவந்த காலத்தில் இந்தப் படம் அப்போது புதுமையாகக் கவனிக்கப்பட்டது. இன்னார் தான் நாயகன் என்றில்லாமல் கதை தான் நகர்த்தியாக இயங்கும். அந்த வகையில் இயக்குநர் செல்வாவுக்கு தலைவாசல் வெகு சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்தது.

கானா பாபு என்ற பெயரில் கல்லூரி மாணவர்களோடு ஊதாரித்தனமாகத் திரியும் பாட்டுக்காரன் வேடம் தலைவாசல் விஜய்க்கு. அவரின் தலையெழுத்தையே மாற்றித் தமிழின் குணச்சித்திரங்களில் ஒன்றாக இருத்தி அழகு பர்க்க வைத்தது. நாசர் நடிக்க வந்து பல்லாண்டுகள் ஆனாலும் தலைவாசல் அவருக்கு அழுத்தமானதொரு வில்லன் பாத்திரத்தில் அடுத்த படியில் ஏற உதவியது. கொடூரமான சேட்டாக நடிப்பில் பின்னிருப்பார். தொண்ணூறுகளில் “சிகரம்” தொட்டு ஏராளம் படங்களில் மானாவாரியாக நடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தலைவாசல் நூறு நாள் படம் என்ற விருந்தைக் கொடுத்தது.
விசித்திரா என்ற பெயரே மறந்து மடிப்பு அம்சாவாக மாறிய பாத்திரத்தைக் கூடத் தவிர்க்க முடியாது. இளம் நாயகனாக ஆனந்த், நெப்போலியன், வைஷ்ணவி என்று நடிகர் பட்டாளத்தோடு தலைவாசல் நினைவில் நிறைந்தது.

அதெல்லாம் சரி ஹிஹி என்று முணுமுணுப்பது கேக்குது.
சிவரஞ்சனியைச் சொல்லாமல் விட்டு விட முடியுமா? சின்ன குஷ்பு என்ற அடையாளத்தோடு தொண்ணூறுகளின் இளசுகளின் அபிமானப்பட்ட பூனைக் கண் நடிகை. சிவரஞ்சனி நடித்த படங்களிலே பொருத்தமான பாத்திரம் கொடுத்து பேரழகியாகக் காட்டியதில் தலைவாசலே தலையாயது.

தலைவாசல் படத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம்.
இசையமைப்பாளர் பாலபாரதியின் இசைப் பயணத்தில் இன்னும் எழுத நிறைய உண்டு என்பதால் அடுத்த பாகத்தில் தொடர்வோம் ?

கானா பிரபா

இசையமைப்பாளர் பாலபாரதி பிரத்தியோகப் படங்கள் நன்றி அவரின் ஃபேஸ்புக் பக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *