கோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்

கோப்பி தோட்ட முதலாளிக்கு 
கொழும்பில தானே கல்யாணம்
கண்டியில வாங்கி வந்த 
சண்டிக்குதிரை ஊர்க்கோலம் ??
எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்கள் இந்தப் பாட்டின் முதல் அடிகளைக் கேட்டாலேயே இப்போதும் உடம்புக்குள் ஸ்பிரிங் போட்டது போலத் துள்ளத் தொடங்கி விடுவார்கள்.
இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் எழுபதுகளில் இறுதியில் வெளிவந்த படங்களில் உச்சம் இந்த “பைலட் பிரேம்நாத்”.
ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். முழுப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. ஆனால் “கோப்பித் தோட்ட முதலாளிக்கு” பாடலில் கண்டிப்பாக பாடலைப் பாடிய ஏ.ஈ.மனோகர் அல்லது பெயர் குறிப்பிடாத இலங்கைக் கவிஞர் ஒருவர் பங்களிப்பு முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும்.
இந்திய இலங்கைக் கலைஞர்களோடு இணைந்து தயாரித்த இந்தப் படத்தில் சிலோன் மனோகர் என்ற பொப்பிசைச் சக்ரவர்த்தி ஏ.ஈ.மனோகர் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் பாடிய துள்ளிசைப் பாடல் “கோப்பித் தோட்ட முதலாளிக்கு” பாடலோடு இன்றைய துள்ளிசைப் பாடல்கள் ஒன்றுமே போட்டி போட முடியாது. அந்தளவுக்குத் தாளக் கட்டும், இசையும் அதகளம் பண்ணியிருக்கும்.
உதாரணமாக
“ஜிஞ்சினாக்குடு ஜாக்குடு ஜிக்கு ஜிங்குடு ஜிக்கா ஜிக்காச்சா”
“தா தகஜுனு ததீம்தக ததீம்தாதா”
“குங்குருக்கு குங்குருக்கு குங்குருக்கு காமாட்சி”
இந்த அடிகளைக் கேட்டுப் பாருங்கள் மெல்லிசை மன்னர் துள்ளிசை மன்னராகக் கலக்கியிருப்பார்.
எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் ஏ.ஈ.மனோகரனைத் தவிர்த்து வேறு யாரையும் இந்தப் பொப் இசைப் பாட்டில் இவ்வளவு அட்டகாசமாக ஒட்டியிருக்க முடியாது.
ஈழத்தின் முக்கியமான தமிழர் பிரதேசங்களையும் தொட்டுச் செல்கிறது இந்தப் பாட்டு. உதாரணமாக
“மட்டக்களப்பில மாமங்கத்துல 
மச்சானுக்கு விருந்து 
ஆகா படைச்சாங்க 
இடியப்பம் சொதியோட கலந்து”
“திருகோணமலையில தானே 
திருமணத்தைப் பார்க்க ஆகா 
யாழ்ப்பாண மக்களெல்லாம்
வந்திருந்து வாழ்த்த”
இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது காட்சியில் ஶ்ரீதேவி சொல்வார் “எங்க வீட்ல எல்லாரும் பாடகர்கள்” என்று. அதற்கு தேங்காய் சீனிவாசன் சொல்வர் “எங்க வீட்ல சிங்கர் மெஷினே இருக்கு” என்பார். இலங்கையில் ஒரு காலத்தில் சிங்கர் தையல் மெஷின் இல்லாத வசதியானோர் வீடுகளை விரல்விட்டு எண்ணலாம். இன்று காலை வானொலி நிகழ்ச்சியில் ஐசாக் சிங்கர் இன்று தான் தன் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமை பெற்ற நாள் என்ற சிறப்பு நிகழ்ச்சி செய்தேன். என்னவொரு ஒற்றுமை ?
நண்பர் ஜி.ரா இந்த ஆண்டு முற்பகுதியில் முதல் தடவையாக ஈழத்தைச் சுற்றிப் பார்க்க வந்த போது என் மனசுக்குள் பைலட் பிரேம்நாத் தான் ஓடியது. அவ்வளவுக்கு அவருக்கு இலங்கையும் பிடிக்கும் எம்.எஸ்.வியும் பிடிக்கும்.
பாடலைக் கேட்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்
‪ https://www.youtube.com/watch?v=YoBji9RLqn8&sns=tw ‬
https://soundcloud.com/kanapraba/kopi-thotta-mudhalalikku

2 thoughts on “கோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *