பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிரிவுத் துயரை “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” (தங்க மீன்கள்), “நினைத்து நினைத்துப் பார்த்தால் (7ஜி ரெயின்போ காலனி) என்றும் அவர் எழுதிய பாடல்களை நண்பர்கள் நினைத்து துயருறும் போது எனக்கோ கடந்த இரண்டு நாட்களாக மனதின் ஓரத்தில் இருந்து “பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்” என்ற பாடலே ஒலித்து அவர் நினைப்பையெழுப்பிக் கொண்டிருக்கிறது.

அது “சத்தம் போடாதே” படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைத்து நேகா பேசின் பாடிய பாட்டு.
யுவன் ஷங்கர் ராஜா இசைத்த மெல்லிசை கொண்ட பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவை சோகப் பாடல் மட்டுமன்றி சந்தோஷப் பரிமாறலாக இருந்தாலும் கூட மெல்லிய சோகம் இழையோடுவது போல உணர்வேன். இன்னும் சொல்லப் போனால் இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் இந்த மாதிரி மென் சோகம் கலந்த பாடல்களைக் கொடுப்பதில் யுவனைத் தாண்டி யாரையும் நான் சிந்தித்ததில்லை. அவருக்குக் கூடத் தனிப்பட்ட ரீதியில் இம்மாதிரிப் பாடல்கள் துள்ளிசையை விட ஆத்ம லாபம் பொருந்தியதாக உணரக் கூடும்.
ஒரு இசையமைப்பாளரின் இசைத்துடிப்பறிந்து அதற்கு ஆத்மார்த்தமான வார்த்தை அர்த்தம் கற்பிக்கும் பாடலாசிரியர் வரம். யுவனுக்கு நா.முத்துக்குமாரும் வாய்த்தார். 
பாடலாசிரியர் வைரமுத்துவுக்குப் பின்னர் தனிப்படத்தில் அதிக பாடல் அல்லது முழுப்பாடல்களும் எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையும் முத்துக்குமாருக்கே வாய்த்தது.
“பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்” இந்தப் பாடலைக் குறித்த காட்சிக்கான களப்பாடலாக மட்டுமன்றி இதையே தனித்து நம் உணர்வின் பரிமாறலாகத் திரை தாண்டி உணர முடிகின்ற வரிகள். அந்த வரிகளை நோகாமல் அணைத்து வருடும் இசை ஆறுதல் மொழி சொல்கிறது. இந்த மாதிரிப் பாட்டெல்லாம் வெறும் வணிகச் சரக்கிற்கான கூட்டணி அல்ல உணர்வுகளின் சங்கமம்.
“எதை நீ தொலைத்தாலும் 
மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா….”
https://www.youtube.com/shared?ci=pdH6KmWdudg
மேற்கண்ட பதிவை நான் பகிர்ந்த போது ட்விட்டர் நண்பர் புதியதொரு தகவலைப் பகிர்ந்து கொண்டார். 
தற்கொலை செய்யும் முடிவில் இருந்த பெண்ணொருத்தி இந்தப் பாடலைக் கேட்டு விட்டுத் தன் எண்ணத்தைக் கை விட்டதாக சத்தம் போடாதே படத்தின் இயக்குநர் வஸந்த் அவர்கள், நா.முத்துக்குமார் அவர்களின் ,மரணச் சடங்கில் சொன்னதாக அந்தக் காணொளியையும் பகிர்ந்து கொண்டார். 
இதோ அந்தக் காணொளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *