இசைஞானி இளையராஜாவின் "அம்மன் கோவில் திருவிழா"

“வாசமுள்ள வெட்டி வேரு வந்து விளையாடுதடி ஒரு நேசமுள்ள மல்லியப்பு கொஞ்சி மணம் வீசுதடி” என்ற எடுவையோடு தொடங்கி “மாஞ்சோலைக் கிளியிருக்கு சிறு பூப்போலே சிரிச்சிருக்கு” https://youtu.be/ALlf2S4qYnM இசை சேர்த்துப் பாடுகிறார் இளையராஜா. பாடலாசிரியர் நா.காமராசனின் இனிமை மிகு வரிகளோடமைந்த இந்தப் பாடல் இசைஞானி இளையராஜா இசைத்துப் பாடிய பாடல்களில் தவிர்க்க முடியததொன்று. அவர் குரலில் அமைந்த பாடல்களைத் தேடி நுகரும் இசை ரசிகர்கள் கண்டிப்பாகத் தவற விடமாட்டார்கள். இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் 25 வருடங்களுக்கு முன் வெளி வந்த “அம்மன் கோவில் திருவிழா”.
எண்பதுகளின் இறுதியில் நகைச்சுவைக் குதூகலப் படங்களில் இருந்து பக்திப் படங்களுக்குத் தாவி தொண்ணூறுகளில் ஆரம்பமெல்லாம் வசூல் மழை பொழிய வெற்றிக் கொடி நாட்டியவர் இயக்குநர் இராம.நாராயணன் இதுவே அவரின் கலையுலகத்தின் இறுதிக்கால வெற்றியை நிர்ணயித்தது. 
“வண்ண விழியழகி வாசக் குழலகி மதுரை மீனாட்சி தான்” என்று சித்ரா பாட சங்கர் – கணேஷ் இசையில் தியேட்டரே சாமி ஆடிய அதிரி புதிரி வெற்றிப் படமும் “ஆடி வெள்ளி” படமும் அப்படியொன்று.
புலியைப் பார்த்துச் சூடு போட்ட கதையாக ஆடி வெள்ளி படத்தின் நகலாக, பிரபல கதாசிரியர் கலைஞானத்தின் கதையில் உருவானது “அம்மன் கோவில் திருவிழா”. தேவரின் ஆசி பெற்ற ஆடி வெள்ளி யானையும், அப்போதெல்லாம் குரங்கு, யானை போன்ற மிருகங்கள் ஹீரோ வேஷம் கட்டிய படங்களில் துணை நாயகனாக நடித்த நிழல்கள் ரவியும் தான் முதலீடு. தொண்ணூறுகளின் ஆரம்பத்த்தின் வெற்றி நாயகி கனகா, கவுண்டமணி & செந்தில் என்று பக்க பலம் சேர்க்க, இளையராஜா கொடுத்த இனிய பாடல்களுக்காக
கடந்த வாரம் ஜெயா டிவியில் காண்பித்த படத்தைப் பார்த்து நொந்தே போனேன். ஒரு பெரிய வெற்றிப்படத்துக்கான பாடல்கள், பின்னணி இசஒ எல்லாம் அட்டகாசமாக இருக்க, ஒரு நொட்டைக் கதை, இதுவரை பார்த்தே இராத கொடுமையான கவுண்டமணி & செந்தில் அறுவை நகைச்சுவை என்று படத்தைப் புரட்டிப் போட்டு விட்டது. பாவம் ஆடி வெள்ளி யானையைத் தண்ணீர் பிடிக்க, காதல் கடிதம் கொடுக்க எல்லாம் கஷ்டப்படுத்தியிருப்பார் இயக்குநர். மேனகா காந்தி கண்ணில் சிக்கியிருந்தால் மாறு கால் மாறு கை வாங்கியிருப்பார். இதே மாதிரி கிழக்குச் சீமையிலே வெற்றியை மனதில் வைத்து புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தையும் உருவாக்கி இசைஞானி இளையராஜாவின் பாடல்களை நாசம் பண்ணியிருந்தார் இயக்குநர் என்.கே.விஸ்வநாதன்.
“தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்வோம்” https://youtu.be/R3VtLO9-fiY என்று இளையராஜாவே எழுதிப் பாடிய பாடலோடு தொடங்குகிறது அம்மன் கோவில் திருவிழா. இந்தப் பாடல் கண்டிப்பாக கும்பக்கரை தங்கய்யா படத்தில் இடம் பிடித்த “என்னை ஒருவன் பாடச் சொன்னான்” பாடல் போன்றதொரு அமைதியான தெய்வீகப் பாட்டு இது.
“நான் சொன்னால் கேளம்மா என் மேல் கோபமா” பாடல் அந்தக் காலத்து சென்னை வானொலி உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் ஓயாது ஒலித்த பாட்டு. முதலில் இளையராஜா பாடிய தனிப்பாட்டு https://youtu.be/etXSDr9HC1E
இன்னொன்று மனோவும் ஜானகியும் பாடும் ஜோடிப் பாட்டு https://youtu.be/DOpWsk1mKTg
தவிர எஸ்.ஜானகி பாடும் “நான் சொன்னால் கேளய்யா” https://youtu.be/pui31o7YixY சோக மெட்டில் தனிப்பாட்டு என்று கவிஞர் வாலி வரிகளில் இருக்கிறது.
“மதுர ஒயிலாட்டம் தான்” மலேசியா வாசுதேவன் அண்ணரின் தெம்மாங்குத் துள்ளிசையோடு சித்ராவும் பாடிக் கலக்கியிருக்கிறார். இந்தப் பாடல் வரிகளைப் புனைந்தவர் பிறைசூடன்.
இதே ஜோடி பாடும் ஆக்ரோஷமான இறை பக்திப் பாடல் “தேச முத்து மாரியம்மா” பாடல் இந்தக் காலகட்டத்தில் கரகாட்டக்காரனில் வந்த “மாரியம்மா மாரியம்மா”,உத்தம ராசா வின் “நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே” போன்ற பாடல்களுக்கு ஒப்பான கனதியான இசையோடு படத்தின் இறுதிக் காட்சிக்குக் கை கொடுத்துத் தாங்குவது.
“அம்மன் கோவில் திருவிழா” படத்தை இசைஞானி இளையராஜா இசைக்காகப் பார்க்கத் தொடங்கிய போது படத்தின் ஆரம்பத்தில் “தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்வோம்” பாடலைப் படமாக்கிய விதத்தில் பெரு நம்பிக்கை விளைவித்தது. ஆனால் மெல்ல மெல்ல நீர்த்துப் போகும் திரைக்கதையோட்டத்தில் இளையராஜாவின் அட்டகாசமான பின்னணி இசையை, பாடல்களையுமே அனுபவிக்க வேண்டி படத்தை நெட்டித் தள்ள வேண்டியிருந்தது.
இந்தப் படத்துக்கான இசை இன்னோர் பயனுள்ள பயிருக்குப் போய்ச் சேர வேண்டிய பாசனம்.
இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் ராகா இசைத் தளத்தில் கேட்க
http://m.raaga.com/tamil/album/Amman-Kovil-Thiruvizha-songs-t0002636

2 thoughts on “இசைஞானி இளையராஜாவின் "அம்மன் கோவில் திருவிழா"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *