இசையமைப்பாளர் கங்கை அமரன் – பாகம் இரண்டு

கலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாளராகவும் விளங்கி வந்தார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் கங்கை அமரன் என்ற பதிவின் வழியாக அவரின் ஆரம்ப காலத்துப் படங்களில் இருந்து சிலவற்றைப் பகிருந்திருந்தேன் இங்கே

அந்தப் பதிவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பாடல்கள் தொடரும் என்றிருந்தேன். ஐந்து வருடங்களின் பின்னர் இந்த வாய்ப்பு மீண்டும் கிட்டியிருக்கிறது.
இந்தத் தொகுப்பில் கங்கை அமரன் அவர்களுக்குப் புகழ் சேர்த்த இன்னும் சில பாடல்களோடு சந்திக்கிறேன்.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்து மிகப் பெரிய வெற்றி கண்ட “பாட்டி சொல்லைத் தட்டாதே” திரைப்படம் அந்தப் படத்தில் நடித்த நடிகர் பாண்டியராஜனுக்கு இன்னொரு சுற்று படங்களைக் குவிக்கவும் வழிகோலியது. அந்தப் படத்தின் வசனகர்த்தா அந்தக்காலத்தில் புகழ்பூத்த நகைச்சுவை எழுத்துக்காரர் சித்ராலயா கோபு. பாட்டி சொல்லைத் தட்டாதே கொடுத்த தெம்பும் காரணமாக இருக்கக் கூடும், பாண்டியராஜனை இரட்டை நாயகராக வைத்து “டில்லி பாபு” என்ற படத்தை இயக்கினார் சித்ராலயா கோபு. பாண்டியராஜன், ரஞ்சனி, சீதா நடித்த இந்தப் படத்தின் இசையைக் கவனித்துக் கொண்டார் கங்கை அமரன். “டில்லி பாபு” படத்தில் வந்த “கூரைப் புடவை ஒண்ணு வாங்கி வா நாந்தான் உன் சொந்தமல்லவா” பாடலை எண்பதுகளின் திரையிசைக் காலத்தில் வாழ்ந்து கழித்தவர்களைக் கேட்டுப் பாருங்கள் உச் கொட்டி ரசிப்பார்கள். அந்தளவுக்கு இந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தில் ஏக பிரபலம். இரு வாரங்களுக்கு முன்னர் சிட்னியில் நான் இயங்கும் வானொலி வழியாகவும் இந்தப் பாடலைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் என் சார்பில் ஒலிபரப்பி என் கணக்கைத் தீர்த்துக் கொண்டேன். இந்தப் பாடலின் இடையிசை, குறிப்பாக இரண்டாவது சரணத்துக்கு முன்னீடு தான் கங்கை அமரன் கொடுத்த இசையில் அவர் கொடுக்கும் முத்திரை என்பது அவரின் பாடல்களை அறிந்து ரசிப்பவர்கள் உணர்வார்கள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும்  அந்த இனிய பாடல் இதோ
ஆக்க்ஷன் கிங் என்று புகழப்பட்ட பாம்பு கராத்தே நடிகர் அர்ஜீன் ஒரு கட்டத்தில் முழு நீள அடி,உதை அலுத்துவிட எண்பதுகளின் இறுதியில் கொஞ்சம் தாய், தங்கை பாசக் கணக்கை வைத்துப் படங்களில் நடித்தார். அதிலும் கூடப் பழிவாங்கல் இருக்குமே.
அப்படி ஒரு படம் தான் “எங்க அண்ணன் வரட்டும்”. அந்தக் காலகட்டத்தில் பெயரே கொஞ்சம் புதுமையாக வைத்து எடுத்த படம் அது. அர்ஜூன், ரூபிஅனி ஜோடி போட்டது.
இந்தப் படத்தில் கங்கை அமரன் அவர்கள் கொடுத்த முத்திரைப் பாடலாக நான் கருதுவது “பூவெடுத்து மாலை கட்டி”. இதை அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோவும் அடிக்கடி மெய்ப்பித்தது. ஆனால் எனக்கிருந்த பெரும் மனக் கவலை என்னவென்றால் இந்தப் பாடலை ஏதோ ஒரு காதல் ஜோடிப் பாடல் என்றே அனுபவித்துக் கேட்டிருந்தேன். பல காலத்துக்குப் பின்னர் தான் இது அண்ணன் தங்கை பாடல் என்று வரிகளை உன்னிப்பாகக் கவனித்து உணர்ந்து நொந்தேன். உண்மையில் இது காதல் ஜோடிப் பாடலுக்கே வெகு கச்சிதமாகப் பொருந்தக் கூடிய இசைவடிவம். 
சமகாலத்தில் இந்தப் பாட்டின் இசை நேர்த்தி கூட கங்கையின் இளைய அண்ணன் கொடுத்த இசையோ என்ற தடுமாற்றமும் கூட இருந்ததுண்டு.
மேலே சொன்ன “கூரைப் புடவை ஒண்ணு” பாடலோடு இங்கே தரும் “பூவெடுத்து மாலை கட்டி பொண்ணுக்கொரு சேலை கட்டிப் பாரு”
பாடலை அடிக்கடி பொருத்திக் கொள்வேன். இந்தப் பாடல் சோல வடிவிலும் உண்டு. சந்தோஷப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.
“மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன் நான் குழலிசை யாழிசை இணைந்தொரு இசை படித்தேன்” http://shakthi.fm/ta/player/play/s3db4b511# 
மறக்க முடியுமா “பிள்ளைக்காக” படத்தில் வந்த இந்தப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை. எத்தனை தடவை இலங்கை வானொலியின் வாழ்த்துப் பாடல்களில் பல நாட்கள் இது தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த அழகான பாடலைக் கூட்டுக் குரல்களோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடியது போன்று தனிப்பாடலாக இசையமைப்பாளர் கங்கை அமரனும் பாடியிருப்பார். கங்கை அமரன் இசையமைக்கும் படங்களில் இவ்வாறு இரட்டைப் பாடல்களில் அவரே ஒன்றைப் பாடுவது அரிதான காரியம். அந்த வகையிலும் இது சிறப்புச் சேர்த்தது. சந்திரபோஸ் ஆக இருக்குமோ அல்லது சங்கர் கணேஷா என்ற குழப்பத்துக்குக் கூட முடிவுகட்டியது கங்கை அமரன் பாடிய இரண்டாவது வடிவம்.
சின்னத்தம்பி என்ற பேரலை அடிக்க முன்னர் பிரபு, பி.வாசு கூட்டணியில் அமைந்த “பிள்ளைக்காக” படத்துக்கு முன்னர் இந்த இருவரும் சேர்ந்து அப்போது ஒரு வெற்றிக் கூட்டணியை “என் தங்கச்சி படிச்சவ” படத்துக்காக அமைத்திருந்தனர். “சொந்த சுமையைத் தூக்கித் தூக்கிச் சோர்ந்து போனேன்” http://youtu.be/KM5gpixtacU
பாடலைச் சொன்னால் இப்போது பலர் படத்தை அடையாளம் காண்பர். அந்தப் படத்திலும் கங்கை அமரனின் இசையும் கை கொடுத்தது என்பதை அந்தப் பாடலின் வெற்றியே மெய்ப்படுத்தும்.
“சின்னத்தம்பி பெரியதம்பி” படத்தில் வந்த “ஒரு காதல் என்பது” பாசலைத் தான் எல்லாரும் சிலாகிக்கிறீர்கள். ஆனால் அந்தப் பாடல் மட்டும் அண்ணன் இளையராஜா கொடுத்தது. ஆனால் இதே படத்தில் இன்னொரு அழகான பாட்டு இருக்கே அதை நீங்க யாரும் ஏன் அதிகம் பேசுவதில்லை என்ற தொனியில் கங்கை அமரன் கொடுத்த வாக்குமூலத்தில் முன் மொழிந்த பாடல் தான் “மழையின் துளியில் லயம் இருக்குது” ஆகா என்னவொரு இனிமையான மழைத்தூறல் போலச் சாரலடிக்கும் பாட்டு என்று என்று மனது தாளம் போட சித்ரா பாடுவதை லயிக்காமல் இருக்க முடியாதே. மணிவண்ணனின் ஆஸ்தான நாயகன் சத்யராஜ், பிரபுவோடு கூட்டணியில் நதியாவும் இணைந்த கலகலப்பான படத்தில் கங்கை அமரனின் முத்திரைப் பாட்டு இது.
“நெற்றித் திலகமும் தாலியும் நிலைத்து வாழ்கவே” என்று மேலேழும் அந்த டி.எம்.செளந்தரராஜன் என்ற மேதையின் குரலில் இருந்து சிலாகித்துக் கொண்டே முன்னோக்கி நகரவேண்டும் “பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே” பாடலுக்கு, அப்போது தெரியும் கங்கை அமரன் அவர்களின் சாகித்தியத்தின் மாண்பு.
“நீதிபதி” திரைப்படத்துக்காக கங்கை அமரன் இசையமைத்தது இந்தப் பாட்டு. கே.பாலாஜி அவர்களின் தயாரிப்பில் அண்ணன் இளையராஜாவின் ஆரம்பகாலத்துப் படங்களில் “தீபம்” ஒளியேற்றி வைத்த பாட்டுத் திறத்தில் சகோதரர் கங்கை அமரனும் பாலாஜி அவர்களின் படங்களில் பங்கேற்ற வகையில் இந்தப் படமும் சிறப்புக்குரியது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன் என்று அந்தக் காலகட்டத்தில் கே.பாலாஜியோடு இயங்கிய போது ஒன்றை நான் என் கருத்து வெளிப்பாடாகப் பார்க்கிறேன்.
கங்கை அமரனின் இசை இளையராஜாவினது ஊற்றோ என எண்ணுமளவுக்கு அமைந்த பாடல்கள் ஒருபுறமிருக்க, நீதிபதி படத்தின் பாடல்களில் குறிப்பாக இந்தப் பாடல் மெல்லிசை மன்னர் முத்திரை போன்று அமைந்திருக்கும். இரு மேதைகளையும் போற்றி விளங்கும் கங்கை அமரனுக்கு இம்மாதிரி வாய்ப்பு எதேச்சையாகவோ  அமைந்து போனது வெகு சிறப்பு.
எண்பதுகளின் கல்யாண வீடியோக்களில் இந்தப் பாடல் மணமகள் அழைப்பில் காட்சியோடு பின்னப்பட்டிருக்கும் அளவுக்கு அப்போது பிரபலமானது. இப்போதெல்லாம் உரிமையோடு நண்பர்களின் கல்யாண வீடுகளில் இதை நான் பரிந்துரைக்கும் போது “கிவ் மீ மை தாலி மை லைஃபே ஜாலி ஜாலி” போன்ற வஸ்துகளை  அவர்கள் மோகிக்கும் போது காலத்தின் கொடுமை என்றறிக.
டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா, எஸ்.பி.சைலஜா குரல்களில் வரும் “பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே” பாடலை முடிந்தால் உங்கள் கல்யாண வீட்டுப் பாடல்களில் சேருங்கள், அமோகமாக இருக்கும். கங்கை அமரனின் இசையில் விளைந்த உன்னதங்களில் இந்தப் பாட்டுக்கு மட்டும் தனிப்பத்தி எழுத வேண்டும் அவ்வளவு மகத்துவம் நிறைந்த பாட்டு. சிலவேளை என் கண் உடைப்பெடுத்துச் சாட்சியம் பறையும் அளவுக்கு இந்தப் பாட்டை நேசிக்கிறேன்.
கங்கை அமரன் கொடுத்த இசை முத்துகளும் கரையில ஆகவே இன்னொரு தொகுப்பிலும் வருவார்.

2 thoughts on “இசையமைப்பாளர் கங்கை அமரன் – பாகம் இரண்டு

  • உண்மையில் கங்கை அமரன் போல அதாவது அமீர் போல பாடல் தேர்வுக்கு கவிதை எழுதும் உத்தி கடினம் கோழிகூவுது பாடல் எல்லாம் அவரின் தனித்துவம்! இன்னும் பாசமலரே அன்பில் என்று 80 இன் ஈழத்து கலியாணவீட்டுக்கச்சேரிகள் தனிப்பதிவாகவே பலதை எழுதலாம்!பல பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *