பாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்

எண்பதுகளில் இறுதியில் கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் வெளிவந்த படம் “நியாயத் தராசு”. இந்தப் படத்தின் மூலக் கதை மலையாள தேசத்தின் உயரிய கதை சொல்லி M.T.வாசுதேவன் எழுதியது. 

கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் பொறுப்பைக் கவனித்துக் கொண்டார். அந்தக் காலகட்டத்தில் கலைஞரின் வசனப் பங்களிப்பென்றால் ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் அல்லது வி.எம்.சி.ஹனிபா இயக்கியதாக இருக்கும். விதிவிலக்காகவும் வேறு சில இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றிய வகையில் இந்தப் படம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
அத்தோடு கலைஞர் கருணாநிதியால் “கலையரசி” பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட ராதிகா கலைஞரின் எழுத்தின் புரட்சிகரமான பெண் பாத்திர வெளிப்பாடாக நடித்து வந்த போது மாறுதலாக நடிகை ராதா நடித்த வித்தியாசமான படம் என்ற பெருமையும் இதற்குண்டு.
“ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா” பாட்டு அலை அடித்துக் கொண்டிருந்த போது “வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா”  http://www.youtube.com/watch?v=Hh3z6YWMsbs&sns=tw என்று மனோ தன் பங்குக்குக் கொடுத்த துள்ளிசை. அதுவரை நகைச்சுவை நடிகராக வந்த சார்லிக்குக் குணச்சித்திர வேடம் கட்டி இந்தப் பாடலையும் கொடுத்து அழகு பார்த்தது “நியாயத் தராசு”
இயக்குநர் ராஜேஷ்வரின் சிறப்பம்சம் என்னவென்றால் இவர் இயக்கிய அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கும். உதாரணம் இவரின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய
இதயத் தாமரை, அமரன் ஆகியவற்றில் பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவாளராக மணிரத்னம் படங்கள் தவிர்த்து அப்போது ராஜேஷ்வர் படங்களில் இடம்பிடித்தவர்.
நியாயத்தராசு படத்தின் ஒளிப்பதிவும் முக்கியமாகச் சொல்லி வைக்கவேண்டியது. ஆனால் G.P.கிருஷ்ணா என்பவரே இந்தப் படத்தில் பங்களித்திருந்தார், ஒளிப்பதிவின் வெளிப்பாட்டில் பி.சி.ஶ்ரீராம் தரம் இந்தப் படத்தில் இருக்கும்.
ராஜேஷ்வரின் அடுத்த தனித்துவம் பாடல்கள். அது சங்கர் கணேஷ் ஆக இருந்தாலென்ன, ஆதித்யனை அறிமுகப்படுத்தித் தொடர்ந்து பயன்படுத்தினாலென்ன கலக்கலான  (இந்திர விழா விதிவிலக்காக) பாடல்களை வாங்குவதில் சமர்த்தர். 
சங்கர் கணேஷ் இரட்டையர்களுக்கு ராஜேஸ்வரின் “நியாயத் தராசு”, “இதயத் தாமரை” போன்ற படங்களோடு கே.சுபாஷின் “உத்தம புருஷன்” , “ஆயுள் கைதி” போன்ற படங்கள் மாமூலான அவர்களின் இசையில் இருந்து விலகித் தனித்துத் தெரிந்தவை.
நியாயத் தராசு படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார். அன்றைய காலத்தில் சந்திரபோஸ்,சங்கர் கணேஷ் ஆகியோர் வைரமுத்துவின் தொடர்ச்சியான பங்களிப்புக்கு உறுதுணையாக விளங்கினர்.
“வானம் அருகில் ஒரு வானம்” பாடல் அதன் வரிகளின் கட்டமைப்பாலும், கே.ஜே.ஜேசுதாஸின் சாதுவான குரலாலும் அப்போது வெகுஜன அந்தஸ்த்தைப் பிடித்தது. சென்னை வானொலி நேயர் விருப்பத்திலும் அடிக்கடி வந்து போனது.
அது மட்டுமா? சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் விருதை கே.ஜே.ஜேசுதாசுக்கு அளித்த வகையில் இன்னும் பெருமை கொண்டது.
இந்தப் பாடலின் சரணத்தில் பிரதான பாத்திரத்தின் அவலப் பக்கத்தைக் காட்டும் களத்துக்கான பாடலாக அமைந்தாலும் பொதுவாக ரசிக்க வைக்கக் காரணம், பாடல் வரி, இசை, குரல் எல்லாமே கூட்டணி அமைத்துக் கொடுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை தான்.
ஊர் உறங்கிய பொழுதில் இந்தப் பாடலை ஒலிக்க விட்டுத் தனியே ரசிக்கும் போது ஆத்ம விசாரணை செய்து ஆற்றுப் படுத்தும் ஆற்றல் கொண்டது இந்தப் பாடல்.
வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டிப் போகும்
கானம் பறவைகளின் கானம்
 http://www.youtube.com/watch?v=61zuhSxACZI&sns=tw 

One thought on “பாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்

  • அருமையான பாடல்! படம் இன்னும் பார்க்கவில்லை ஆனால் பொம்மையின் அட்டைப்படத்தில் இதன் விளமபரம் பார்த்த ஞாப்கம் இருக்கு! பாடல் இலங்கை வானொலியிலும் இரவின் மடியிலும் தாலாட்டியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *