பாடல் தந்த சுகம் : தானா வந்த சந்தனமே

‘ஊரு வந்து ஊரு வந்து’ படத்தின் பாடல்கள் வந்த நேரம் இந்திய அமைதிப்படை போய் பிரேமதாச – புலிகள் தேனிலவு காலமாக இருந்தது. மின்சாரம் இருந்தாலும் படங்கள் அவ்வளவாக தியேட்டருக்கு வராது. வீடியோ காசெட்டுகளை நம்பித்தான் சீவியம். ஆனாலும் பாட்டு மட்டும் சுடச்சுட வந்துவிடும். 

கரகாட்டக்காரன் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த சூழல் அந்தப் பாடல்கள் தந்த மயக்கம் தீர முன்பே ‘ஊரு விட்டு ஊரு வந்து’ படப் பாடல்கள் ஷண் ரெக்கோர்டிங் பார் இற்கு வந்து சேர்ந்தன. வழக்கம் போல ராஜா பாட்டென்றால் முழுப்படப் பாடலையும் ஒலிநாடாவின் ஒரு பக்கம் முழுதும் நிரப்பி அடித்துக் கேட்டுக் கேட்டுப் பழக்கமாவது என்ன விரதமோ அப்போது ?
அதே போல ‘ஊரு விட்டு ஊரு வந்து’ படப்பாடல்களையும் ஷண் ரெக்கோர்டிங் பார் துணையோடு அடித்து வைத்திருந்தாலும் உடனே கேட்கவேண்டும் என்ற ஆர்வம் அப்போது எழாததற்கு முக்கிய காரணம் தொண்ணூறுகளில் பெருவாரியாகக் குவிந்த ராஜாவின் ஏனைய படங்களின் பழக்கப்பட்ட பாடல்களைக் கேட்கவே நேரம் போதாதிருந்தது.
அந்த நேரம் சென்னை வானொலி வழியாக நேயர் விருப்பமாக அறிமுகமான பின்னர் தான் பதிவு பண்ணியிருந்த ‘ஊரு விட்டு ஊரு வந்து’ படப் பாடல்களில் “சொர்க்கமே என்றாலும்” பாடலைத் தொடர்ந்து “தானா வந்த சந்தனமே” பாடலில் மூழ்கிப் போனேன். அன்று என்னை அடிமையாக்கியது தான் இன்னும் அதே அளவில் கட்டியாள்கிறது இந்தப் பாடல். “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா” பாடல் 15 வருடங்களைக் கடந்து எனது வானொலி நிகழ்ச்சியின் முகப்புப் பாடல் என்றால் இதே படத்தில் வந்த “இக்கு சையக்கு சையக்கு” பாடலைப் புலம்பெயர்ந்த சூழலில் தான் அதிகம் கேட்டு ரசித்திருக்கிறேன். இன்னொரு பாட்டு “கற்பூர தீபத்திலே” பாடலைக் கூட சமீப காலங்களில் தான் கேட்க வாய்ப்புக்கிட்டியிருக்கிறது.
140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் ஓடும் காரை ஒரு வாளி தண்ணியை வீசியடிக்கும் போது பட்டுத் தெறிக்குமாற் போல அதிவேக இசையோடு பயணித்தாலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் போது மெல்லிசைப் பாடலுக்குச் சற்றும் குறைவில்லாத உணர்வையும் ஒருங்கே கொண்டு வந்து இன்பம் பாய்ச்சும்.
இங்கே தான் இளையராஜாவின் இசையின் தனித்துவம் நின்று விளையாடும். 
“வண்ண வண்ண வளவி போட்டு வசமாக வளைச்சுப் போட்டு என்னைக் கட்டி இழுத்துப் போகும் இளந்தேகமே” 
இந்த இடத்தில் இருந்து தான் பாட ஆரம்பிப்பேன் அந்த நேரம் கங்கை அமரன் வரிகளில் சரணாகதி அடைந்து தரை தட்டியிருக்கும் மனது.
நல்ல தமிழ்ச் சொற்களைத் தனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சந்தம் கட்டி விளையாட ஆரம்பித்து விடுவார் கங்கை அமரன்.
இந்தாங்கோ இன்னொன்று
“கொத்து மல்லி கொண்டையில் ஆட குளிர் பார்வை வண்டுகள் ஆட 
புத்தம் புது செண்டுகள் ஆட 
புது தாகம் தோன்றுமே”
ஆகா ஆகா கங்கை அமரன் இருக்கும் திசை நோக்கித் தொழுது போற்றி

One thought on “பாடல் தந்த சுகம் : தானா வந்த சந்தனமே

  • இன்னும் மறக்கமுடியாத பாடல்களில் இதுவும் ஒன்று அதிகம் ராமராஜனுக்கு இசையானி அதிகம் மினக்கெட்டு பல மொட்டுப்போட்டுக்கொடுத்தார்!சிலது சோடைபோனாலும் இது முத்துப்போல!

Leave a Reply to தனிமரம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *