பாடல் தந்த சுகம் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

சினிமா உலகில் அதிக வெளிச்சம் படாத இயக்குநர் சின்னத்திரையில் சாதித்துக் காட்டுவது உண்டு. இவ்வகையான இயக்குநர்களில் முன்னோடி என்று  சுந்தர் கே.விஜயனைக் குறிப்பிடலாம். இவரின் தந்தை புகழ்பெற்ற இயக்குநர் கே.விஜயன். தயாரிப்பாளர் நடிகர் கே.பாலாஜியின் திரைப்படங்கள் பெரும்பாலும் கே.விஜயனின் இயக்கத்திலேயே இருப்பதுண்டு. தந்தை வழியில் தனயன் சுந்தர் கே.விஜயனும் “ரேவதி” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். 
சுந்தர் கே.விஜயன் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படம் “என் அருகில் நீ இருந்தால்” அந்தப் படத்தின் பாடல்களைக் காட்சிகளைத் தவிர்த்து இசையை மட்டும் கேட்டுப் பாருங்கள். அருமையான இசைப் பெட்டகம் அது.
ரேவதி என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த படம் “வெளிச்சம்”. இந்தப் படத்துக்கு இசை வழங்கிய மனோஜ் கியான் இரட்டையர்கள் அப்போது ஊமை விழிகள் திரைப்படத்தின் வாயிலாகப் பரவலாக அறிமுகமாகியிருந்தார்கள். இளையராஜா காலத்தில் சந்திரபோஸ் இற்கு அடுத்து அதிகம் அறியப்பட்ட இசையமைப்பளார்களாக எண்பதுகளின் இறுதியில் மனோஜ் கியான் இரட்டையர்களின் பங்களிப்பு சிறப்பானது. குறிப்பாக இவர்கள் இசையமைத்த “வெளிச்சம்” திரைப்படம் மற்றைய படங்களைப் போலப் பரவலாக அறியப்படாத படம் என்றாலும் என் பார்வையில் இந்தப் படத்துக்கு இவர்கள் தந்த இசை மற்றைய படங்களை விடத் தனித்துவமாக நிற்கும். குறிப்பாக இரண்டு பாடல்களில் ஒன்று “ஓ மை டியர் ஐ லவ் யூ” பாடலை டாக்டர் கல்யாண், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல்களில் கேட்டுப்பாருங்கள் ஒரு பாடலில்  இரண்டு விதமான தளங்களில் பயணப்படும் முக்கோணக் காதலை அழகாகக் கொடுத்திருக்கும். http://songs.shakthi.fm/ta/Velicham_www.shakthi.fm/shakthi.FM%20%20-%20%20My%20Dear.mp3
வெளிச்சம் படத்தில் வரும் “துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே” பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். அந்தக்காலத்துச் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம் வாயிலாக எனக்கு அறிமுகமான பாடலிது. கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் இளையராஜாவுக்குக் கொடுத்தது மட்டுமன்றி ரவீந்திரன் (உதாரணம் ஏழிசை கீதமே, பாடி அழைத்தேன்), சந்திரபோஸ் (சந்தோஷம் காணாத வாழ்வுண்டா) வரிசையில் மனோஜ் கியானுக்காகப் பாடிய பாடல்களைத் தேடிக் கேட்பதே சுகம். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் இன் குரலுக்குக் கிடைத்த இன்னொரு பரிமாணம் துலங்கும்.
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாடலில் இழைத்திருக்கும் மெல்லிசையும், வைரமுத்துவின் அழகிய வரிகளும், ஜேசுதாஸ் இன் குரலும் சேர்ந்து கிட்டிய இந்த அழகிய பாடலை இரவு நேரத்தில் கேட்கும் போது அது தரும் சுகமே தனி.
பாடலை YouTube channel இல் காண 
http://www.youtube.com/watch?v=GyJlJXiS8u4&sns=em

8 thoughts on “பாடல் தந்த சுகம் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *