பாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி

ஒரு மலையாளப்படம் மூன்று மலையாளத்திரையுலக இயக்குனர்களால் மூன்று வெவ்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டது என்ற பெருமையைப் பெற்ற படம் “சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்”.

மலையாளத் திரையுலகின் ஜனரஞ்சக இயக்குனராக இருக்கும் சத்யன் அந்திக்காட் இன் படங்களை விலாவரியாகப் பதிவுகள் போடுமளவுக்கு இவரின் படங்கள் மீது எனக்குக் கொள்ளைப் பிரியம். இந்த “சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்” படம் அவரின் இயக்கத்தில் மோகன்லால், காத்திகா, சிறீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வந்த படம். 
பின்னர் தமிழுக்கு இந்தப் படத்தின் கதையோடு மலையாளத்தின் இன்னொரு பெரும் இயக்குனர் ஐ.வி.சசி மூலமாக “இல்லம்” என்ற பெயரில் எடுக்கப்பட்டது. 
ஹிந்திக்கு மலையாளப் படங்களைச் சுட்டும் சுடாமலும் தூக்கிக் கொண்டு போய் டிங்கரிங் செய்து படமெடுக்கும் மலையாள நட்சத்திர இயக்குனர் பிரியதர்ஷன் கையகப்படுத்தி சுனில் ஷெட்டியை வைத்து இயக்கினர். ஆக மொத்தத்தில் மூன்று பிரபல மலையாள இயக்குனர்கள் வெவ்வேறு மொழிகளில் இயக்கிய சன்மானத்தைப் பெற்ற படம் இது.
ஐ.வி.சசி தமிழில் பகலில் ஓர் இரவு, குரு, காளி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். கமல் நடித்த குரு படம் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரில் 200 நாட்களைக் கடந்து ஓடிய படம். அப்போது சின்னப்பிள்ளையாக இருக்கும் போது வீரகேசரி பேப்பரில் குரு படம் நாட்கணக்கில் ஓடும் விளம்பரங்களைப் புதினமாகப் பார்த்ததுண்டு. அப்பேர்ப்பட்ட புகழ் கொடுத்த குரு படத்தை ஐ.வி.சசிக்கு “இல்லம்” இடம் கொடுக்கவில்லை. சிவக்குமார், அமலா, சந்திரசேகர் போன்றோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் அது.
சிவக்குமாரை அமலாவோடு சேர்த்து படம் இயக்கும் போதே பாதி சறுக்கல் தெரிந்திருக்கணும். இல்லத்தை இல்லாமல் செய்துவிட்டார்கள் ரசிகர்கள். 
ஆனால் வழக்கம் போல இந்தப் படத்தையும் தூக்கி நிறுத்தி இன்றளவும் பேச வைத்தது இசைஞானி இளையராஜாவின் இசை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார். அதிலும் குறிப்பாக “நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி வண்டு வந்து ஆடிப்பாடத்தான்” என்ற பாடல் அந்த நாளில் வானொலிப் பிரியர்களுக்கு பெரு விருந்தாக அமைந்தது. இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால், 
“அழகென்ற விருந்து வைத்தாள் இயற்கை அன்னை
அதைப்பாடப் படைத்து விட்டாள் கவிஞன் என்னை
இளகாத இளமனதை இளக வைத்து 
இன்பத்தை என்னோடு தவழ வைத்து” 
என்று ஒரு தொகையறாவைக் கொடுத்து விட்டு ” நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி வண்டு வந்து ஆடிப்பாடத்தான்” என்று ஆரம்பித்துக் குதூகலமாகப் பாடியளிப்பார் எஸ்.பி.பாலசுப்ரணியம். இளஞ்சோலை பூத்ததா போன்ற பாடல்கள் எல்லாம் இந்தப் பாடலுக்கு அண்ணன், தம்பி உறவு அவ்வளவுக்கு நெருக்கமான சங்கதிகளோடு அமைந்த பாடல்கள் இவை. இந்தப் பாடல் இசையின்றி ஆரம்பித்து பின் மேற்கத்தேய வாத்தியப் பின்னணிக்கு மாறிப் பின்னர் சரணத்தில் தாள வாத்தியக் கட்டுக்குத் தாவும் ஆனால் கேட்கும் போது எந்த நெருடலும் தெரியாத இசைப்பந்தம் இருக்கும். 

2 thoughts on “பாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி

  • //சிவக்குமாரை அமலாவோடு சேர்த்து படம் இயக்கும் போதே பாதி சறுக்கல் தெரிந்திருக்கணும். இல்லத்தை இல்லாமல் செய்துவிட்டார்கள் ரசிகர்கள். // 🙂

    amas32

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *