சங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் பேசுகிறார்

சிட்னியில் இசை நிகழ்ச்சி படைக்க வருகை தரும் இசையுலக ஜாம்பவான், பாடகர் டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை நமது ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம் (ATBC) வானொலி சார்பில் பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்

Download பண்ணிக் கேட்க

என்னுடைய வானொலி வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத தருணம் அது. பேட்டி முடியும் போது “பிரபாங்கிற பேரைக் கேட்கும் போது சந்தோஷமா இருக்கு ஏன்னா என் மனைவி பேரும் பிரபா ஆச்சே” என்றார் சிரித்துக் கொண்டே.

வானொலிப் பேட்டிக்காக நேற்று நான் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைக்க நினைத்த போது கொஞ்சம் தயக்கத்தோடு தான் தொலைபேசியை அழைத்தேன். ஆனால் “ச்சொல்லுங்கோ ப்ரபா எப்பிடி இருக்கீங்க? பேட்டி அஞ்சு மணிக்குத் தானே நான் தயாரா உட்கார்ந்திருப்பேன்” என்ற போது என் மனதில் இன்னொரு படி உயர்ந்து நின்றார். நிறைகுடம் ஆச்சே.
சமீபகாலமாக இளம் பாடகர்கள் ஆஸி மண்ணுக்க் வரும்போது அவர்கள் செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்காக சிறப்புப் பேட்டிகளைச் செய்யும் போது சிலர் கொடுத்த அலும்பில் அசதியாகியிருந்த என் மனதுக்கு ஒத்தடமாக இருந்தது கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடனான உரையாடல்.

வானொலிப் பேட்டியில் சேர்த்துக் கொண்ட கேள்விகள் சிலவற்றை இங்கே தருகின்றேன். விரைவில் அந்தப் பேட்டியை ஒலி வடிவில் பகிர்கின்றேன்.

இசை உலகில் ஒரு நீண்ட வரலாற்றைச் சுமந்து நமக்கு முன்னால் இருக்கும் உங்களைப் பார்ப்பதே நமக்குப் பெரும் தவம், மீண்டும் ஆஸ்திரேலிய ரசிகர்களை நீங்கள் சந்திக்க வருகின்றீர்கள் என்பது எங்களுக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஜேசுதாஸ் அவர்களின் பாடல்களைக் கேட்கும் போது மனதில் அமைதி பிறக்கின்றது, சோகப்பாடல்களைக் கேட்கும் பொது எம்மை அறியாமல் அழுதுவிடுகின்றோம் இப்படியெல்லாம் ரசிகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம் இந்த மாதிரி அனுபவங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

நீங்கள் நேசிக்கின்ற சாஸ்திரீய சங்கீதத்தை மகத்துவம் செய்து வந்த படங்களில் மலையாளத்தில் பரதம் உள்ளிட்ட ஏராளம் படங்கள், தமிழில் அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி தெலுங்கில் மேக சந்தேசம் போன்ற படங்கள் கிட்டிய போது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?

சினிமாவில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற போதும் சாஸ்திரீய சங்கீதமேடையை நீங்க விட்டுக் கொடுத்ததே இல்லை இசைக்கலைஞராக இந்த இரண்டு தளங்களிலும் இயங்குவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

ஹரிவராசனம் என்ற பாடலைப் பாடும் போது நீங்க பயபக்தியோடு விரதமிருந்து பாடியதாக அறிகின்றோம். ஐயப்ப பக்தர்கள் என்ற அடையாளம் தாண்டி அந்தப் பாடல் எல்லா இசை ரசிகர்களுக்கும் ஒரு தெய்வீகச் சூழலுக்கு இழுத்துச் செல்லும், அந்தப் பாடல் பாடிய அனுபவம்?

திரையுலகில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இசைப்பயணத்தின் கெளரவ நிகழ்வில் இசைஞானி இளையராஜா வந்து கலந்து சிறப்புச் சேர்த்தார், திரையிசையில் இளையராஜாவின் பங்களிப்பு குறித்து உங்கள் பார்வை?

சாஸ்திரீய சங்கீதம் தழுவிய பாடல்களைத் தவிர நிறைய மேற்கத்தேய பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஆரம்ப காலத்தில் வச்ச பார்வை தீராதடி போன்ற பாடல்களில் ஆரம்பித்தது அந்த மாதிரிப் பாடல்கள் கிடைத்தபோது எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

வடக்கும் நாதன் படத்தில் கங்கே என்ற பாடலை நீங்கள் பாடிய அந்தக் கணத்தை திரையில் கண்ட போது கண்கள் கலங்கியது உங்க ஆத்ம நண்பர் ரவீந்திரனை நினைத்துக் கொண்டேன் அப்போது, இசையமைப்பாளராக அவர் இயங்கியபோது உங்க அனுபவம்?

ரவீந்திரன் மாஸ்டர் குறித்து நிறையப் பேசினார் ஆசை தீர. குறிப்பாக கங்கே பாடலின் உருவாக்கம் பற்றியும்.

இன்று காதலிக்க நேரமில்லை படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்வுக்கு திடீர் அழைப்பு வந்ததாக் குறிப்பிட்டு அந்தப் படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து “என்ன பார்வை உந்தன் பார்வை” போன்ற பாடல்களையும் பாடி நிறைவு செய்துகொண்டார் பெருமதிப்புக்குரிய கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள்.

9 thoughts on “சங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் பேசுகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *