இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம் "காரோட்டிப் பாட்டுப் பெற்றார்"


1997 ஆம் வருஷம், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய நேரம் அது. ஒரு நாள் எஸ்.பி.பி பாடல் பதிவுக்காக இளையராஜாவின் ஒலிப்பதிவு கூடம் செல்ல வேண்டும் ஆனால் ஆஸ்தான கார்ச்சாரதி வரவில்லை. எஸ்.பி.பி.சரணே காரை ஓட்ட பிரசாத் ஸ்டூடியோ செல்கிறார்கள்.

அங்கே எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காகக் காத்திருந்த இளையராஜா, நீண்ட நாட்களுக்குப் பின் சரணைக் கண்டதும் குசலம் விசாரிக்கிறார். திடீரென வந்த யோசனையில் “இந்தப்பாட்டில் பாலுவுடன் நானும் பாடுறேன், நீயும் சேர்ந்து நம்ம கூடப் பாடிடு” என்று ராஜா, எஸ்.பி.பி.சரணை அழைக்கிறார். கரும்பு தின்னக் கூலியா? சரணும் மகிழ்வோடு தன் தந்தை மற்றும் ராஜாவுடன் சேர்ந்து தன் முதற்பாடலான “உனக்கொருத்தி பொறந்திருக்கா” என்ற பாடலை புண்ணியவதி திரைப்படத்துக்காக, காமகோடியன் பாடல் வரிகளைப் பாடுகின்றார். “மின்னாம மின்னுறா மீனாட்சி அம்மனா” என எஸ்.பி.பி சரண் பாட, “சபாஷ்” என்பார் ராஜா, அவரை வாழ்த்துமாற்போலப் பாடலில். இதுதான் எஸ்.பி.பி.சரண் பாடகராக வந்த கதை.

இவர் பின்னாளில் ஏதோவொரு வகையில் பாடகராக வந்திருக்க முடியும் என்றாலும் இந்த மாதிரி சுளையான திடீர் வாய்ப்பு கிட்டியிருக்குமா தெரியவில்லை. புண்ணியவதி படத்தில் மேலும் அற்புதமான பாடல்கள் இருந்தாலும், துரதிஷ்டவசமாக இதன் தயாரிப்பாளர் கொலையால் படம் வெளிவராமலேயே முடங்கிப்போனது.

1998 ஆம் வருஷம் நான் அப்போது மெல்பனில் படித்துக்கொண்டிருந்தேன். முதன்முறையாக சரண் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகிறார். வானொலிப்பேட்டி ஒன்றில் அறிவிப்பாளர் சரணைப் பார்த்து ” நீங்க பாடிய முதல் பாட்டு பற்றி சொல்லுங்களேன்” என்று கேட்டபோது மேற்சொன்ன சம்பவத்தைச் சொன்ன சரண், அந்தப் பாடலை மட்டும் மறந்தே போய்விட்டார், மெட்டை மட்டும் முணுமுணுக்கிறார். அப்போது வானொலி நேயராக மட்டும் இருந்த நான், தொலைபேசியில் அழைத்துப் பாடல் பற்றிய விபரத்தைச் சொல்கிறேன். அடுத்த நாள் இசைக்கச்சேரி மேடையில் “பிரபா தான் என் முதல்பாட்டை ஞாபகம் வெச்சிருந்து சொன்னார் அவருக்கு என்னோட நன்றி” என மறக்காமல் நன்றி பாராட்டினார் 🙂

3 thoughts on “இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம் "காரோட்டிப் பாட்டுப் பெற்றார்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *