இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம் “பாடல்களைத் தேர்ந்தெடுக்க இன்னொரு இயக்குனர்”

 றேடியோஸ்பதியின் இன்னொரு தொடராக, “இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம்” இந்தப் பதிவின் வாயிலாகத் தொடர்கின்றது. இந்தத் தொடர் வழியாக, இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்குப் பின்னால் உள்ள சுவையான துணுக்குச் செய்திகளைப் பகிரலாம் என்ற எண்ணம் வாய்த்திருக்கின்றது. இந்தத் துணுக்குச் செய்திகள், குறித்த பாடல்கள் தோன்றும் போது பணிபுரிந்த கலைஞர்களின் கருத்து வழியே பெறப்படுகின்றன. எனவே இயன்றவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே இத்தொடர் வாயிலாகப் பகிரலாம் என்றிருக்கின்றேன்.

பாடல்களைத் தேர்ந்தெடுக்க இன்னொரு இயக்குனர்

 கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த படம் வேலைக்காரன். இந்தப்படத்தின் மொத்தம் ஆறு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் மு.மேத்தா. இந்தப் படத்தின் பாடல்களுக்குப் பின்னால் ஒரு சுவையான சேதியுண்டு.

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்புக்காக இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் குழு வட இந்திய மாநிலத்துக்குப் பயணப்பட்டு விட்டார்கள். அங்கே அவர்கள் பரபரப்பாக படத்தின் வசனப்பகுதிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படத்தில் இடம்பெறவேண்டிய பாடல்களைப் இளையராஜாவிடம் பெற்றுக்கொள்ள எஸ்.பி.முத்துராமனின் குழுவில் இருந்த உதவி இயக்குனர் வரை அந்தச் சமயம் வெளியூரில் இருக்கிறார்கள். எனவே படத்தின் தயாரிப்பாளர் கே.பாலசந்தரே, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்ற இயக்குனர் பாடல்கள் எப்படி வரவேண்டும் என்று விரும்புவாரோ  அதே முறையில் ராஜாவிடம் பெற்று, கவிஞர் மு.மேத்தாவிடம் அனைத்துப் பாடல்களையும் எழுதவைத்து, பாடல்களை ஒலிப்பதிவாக்கி, ஒலிநாடாவை வட இந்திய மாநிலத்துக்கே அனுப்பும் பொறுப்பை கே.பாலசந்தரே கவனித்துக் கொண்டார். ஆக, இந்தப் படத்தின் உருவாக்கத்தில் தயாரிப்பாளர் என்ற எல்லையைக் கடந்து, படத்தின் அமைப்புக்கேற்ப பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் கே.பாலசந்தர் கவனித்துக் கொண்டார். இன்றைய நவீன இணையத் தொடர்பாடலில் வீடியோ கான்ஃபரன்ஸிங் வரை வசதியும், பாடல்களை இணைய வழி அனுப்பக்கூடிய வாய்ப்பும் வாய்த்து முன் சொன்ன நிகழ்வை எல்லாம் நீர்த்துப்போகும் அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறிவிட்டாலும், தமிழ்த்திரையிசை வரலாற்றில் ஒரு சுவையான சம்பவம் நேர்ந்து விட “வேலைக்காரன்” படப்பாடல்கள் உதவி விட்டன.


இந்தப் பதிவு ராணி மைந்தன் எழுதிய “ஏவி.எம் தந்த எஸ்பி.எம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

2 thoughts on “இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம் “பாடல்களைத் தேர்ந்தெடுக்க இன்னொரு இயக்குனர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *