இசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓர் இன்னிசைக்கூட்டு

ஒரு தேர்ந்த இயக்குனரின் பணி வெறுமனே ஒளிப்பதிவு, கதை, இசை உள்ளிட்ட சமாச்சாரங்களில் வல்லமை கொண்ட திறமைசாலிகளிடம் இருந்து அப்படியே எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, ரசிகனின் மனநிலையில் இருந்துகொண்டு தன்னால் எப்படியெல்லாம் அந்த ஆளுமைகளிடமிருந்து தனக்கான படைப்புக்கு உரமூட்டக்கூடிய அளவு உழைப்பை வேண்டிய அளவு வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படியானதொரு வெற்றிகரமான இயக்குனராக எண்பதுகளில் விளங்கியவர் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். எண்பதுகளில் இசைஞானி இளையராஜா, ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் வெளிவந்த படங்களுக்குக்கும் இளையராஜா – கே.ரங்கராஜ் (உதயகீதம், நினைவோ ஒரு சங்கீதம், பாடு நிலாவே உள்ளிட்டவை)கூட்டணியில் வெளிவந்த படங்களுக்கும் நூலிழை அளவுக்குத் தான் வித்தியாசம் இருக்கும். பலர் இருவரின் படங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுமளவுக்கு. இதற்குக் காரணம், பாடல்களை மையப்படுத்திய பாங்கில் கதையம்சம் கொண்ட படங்களாக இவை இருப்பதே. ஆனால் ஆர்.சுந்தரராஜனின் பலம், இளையராஜா மட்டுமன்றி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் (சரணாலயம் உள்ளிட்ட பல படங்கள்), கே.வி.மகாதேவன் (அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று), தேவேந்திரன் (காலையும் நீயே மாலையும் நீயே), தேவா (என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல படங்கள்) என்று இவர் சேர்ந்து பணியாற்றிய ஒவ்வொரு படங்களிலும் அட்டகாசமான பாடல்களைத் தருவித்திருப்பார். எண்பதுகளிலே இளையராஜா கோலோச்சிக்கொண்டிருந்த வேளை, “எதிர்பார்த்தேன் இளங்கிளியை காணலையே”, “சுமைதாங்கி ஏன் இன்று”(அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை), “எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை” (சரணாலயம்) , “ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்”(காலையும் நீயே மாலையும் நீயே) போன்ற பாடல்களை அன்றைய இலங்கை வானொலி ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். கூடவே தேவாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய என் ஆசை மச்சான் திரைப்படத்தில் வந்த பாடல்களையும் கூட.

 
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இசைஞானி இளையராஜாவோடு, இயக்குனர் ஆர்.சுந்தராஜன் இணைந்து பணியாற்றும் “நிலாச்சோறு” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கும் இந்தவேளை, இந்த இருவரின் கூட்டணியில் வந்த திரைப்படங்களின் தொகுப்பாக இந்தப் பகிர்வு அமைகின்றது.

ஒரு வருஷம் ஓடிச் சாதனை புரிந்த படம், தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்கு ஒரு நல்ல முகவரி கொடுத்த திரைப்படம் என்ற பெருமையோடு ஆர்.சுந்தரராஜனுக்கு திரையுலகில் வெற்றிப்பயணத்தை ஆரம்பிக்க ஏதுவாக அமைந்த படம் பயணங்கள் முடிவதில்லை. நடிகர் மோகனுக்கு இந்தப் படத்தின் பின்னர் கற்றை கற்றையாகப் படங்கள் கிடைத்ததும் மைக் மோகன் என்றே பட்டம் ஒட்டிக்கொண்டதும் உப பாண்டவம். படத்தின் எல்லாப் பாடல்களுமே இன்றும் மீண்டும் மீண்டும் ஏதோவொரு வானொலியில் ஒவ்வொரு நாளும் காற்றை அளந்து போகுமளவுக்குப் பிரபலம். அதிலும் இளைய நிலா பொழிகிறதே பாடல் மொழி கடந்து எங்கும் புகழ் பரப்பியது. வைரமுத்துவின் வரிகளுக்கு “இளைய நிலா பொழிகிறதே”, “தோகை இளமயில்”, “சாலையோரம்” பாடல்களும், கங்கை அமரன் “ஏ ஆத்தா ஆத்தோரமா”, “வைகறையில்” பாடல்களை எழுத, முத்துலிங்கமும் சேர்ந்து “மணி ஓசை கேட்டு”, “ராக தீபம் ஏற்றும் நேரம்” ஆகிய பாடல்களையும் எழுதி வைத்தார் மெட்டுக்கு அணியாக.
 

 “தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ”

இளையராஜாவின் இசையில் நடிகர் சிவகுமாரின் படங்கள் விசேஷமானவை, அதிலும் மோகன், பாண்டியன் உள்ளிட்ட நட்சத்திரங்களையும் வைத்துப் படைத்த இன்னொரு இசைக்காவியம் “நான் பாடும் பாடல்”. இதுவும் கோவைத்தம்பியின் தயாரிப்பு. பாடகியை நாயகியாக வைத்துப் பண்ணிய கதையில் பாட்டுக்களுக்கா பஞ்சம்?
வைரமுத்து “பாடவா உன் பாடலை (சோகம், சந்தோஷம் இரண்டும்), கங்கை அமரன் “சீர் கொண்டு வா”, முத்துலிங்கம் “தேவன் கோயில் (ஆண், பெண் குரல் இரண்டும்), காமராசன் “பாடும் வானம்பாடி”, வாலி “மச்சானை வச்சுக்கடி” ஆகிய பாடல்களுமாக ஏறக்குறைய எண்பதுகளின் முன்னணிப் பாடலாசிரியர்களின் கூட்டில் வந்த பாட்டுப் பெட்டகம் இது.
 

“பாடும் வானம்பாடி”
 

இசைஞானி இளையராஜா ஏற்கனவே இசையமைத்த பாடல்களை வைத்துக் கொண்டு, ஒரு அழகான கதையையும் அதற்கேற்றாற்போலத் தயார் செய்து மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது “வைதேகி காத்திருந்தாள்”. அண்மையில் நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டிலும் இதைக் குறிப்பிட்டார் ஆர்.சுந்தரராஜன். ஆனால் அவர் சொல்லாதது, ராஜா இசையமைத்து, பி.சுசீலா பாடிய “ராசாவே உன்னை காணாத நெஞ்சு” பாடலைப் படமாக்காமலேயே அடுத்த படத்தின் வேலைக்குப் போய் விட்டார். அதை இங்கே சொல்லியிருக்கிறேன். படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா வசனகர்த்தா தூயவன். வாலியின் வரிகளுக்கு ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே”, “ராசாத்தி உன்னை”, “ராசாவே உன்னை”, “அழகு மலராட” “காத்திருந்து காத்திருந்து” பாடல்களும், கங்கை அமரன் “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே” பாடலையும், பஞ்சு அருணாசலம் “மேகம் கருக்கையிலே” பாடலையும் எழுதினார்கள்.
  “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே”
 

ஏவி.எம் நிறுவனத்தின் தயாரிப்பு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா இணைந்த இசைக்கூட்டணியில் ஆர்.சுந்தரராஜனுக்குக் கிடைத்த ஜாக்பாட் “மெல்லத் திறந்தது கதவு” ஆனால் இந்தப் படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த பெருவெற்றி படத்தைப் பெரிதும் தூக்கி நிறுத்தவில்லை. இந்தப் படத்தின் பின்னணி இசையை முன்னர் கொடுத்திருக்கிறேன்.
“மெல்லத் திறந்தது கதவு” பின்னணிஇசைத்தொகுப்பு இதே படத்தில் இளையராஜா முன்னர் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷும் நடித்திருக்கிறார். படத்தின் பாடல்களை கங்கை அமரனும் வாலியும் எழுதியிருக்கிறார்கள்.
 

“ஊரு சனம் தூங்கிருச்சு”
 

ஆர்.சுந்தராஜன், இளையராஜா, விஜய்காந்த் சேர்ந்த அடுத்த படைப்பு “தழுவாத கைகள்” முந்திய படங்கள் அளவுக்குப் பேர் கிட்டாத படம். ஆனால் இந்தப் படத்தில் வரும் “ஒண்ணா ரெண்டா”, “விழியே விளக்கொன்று ஏற்று” பாடல்களை இன்றும் கேட்டாலும் சொக்க வைக்கும். படத்தின் பாடல்களை வாலியும், கங்கை அமரனும் பங்கு போட்டுக்கொண்டார்கள். படத்தில் வந்த பிரபல பாடல்களான “ஒண்ணா ரெண்டா” பாடலை வாலியும், “விழியே விளக்கொன்று எற்று” பாடலை கங்கை அமரனும் எழுதினார்கள். மேலும் நான்கு பாடல்கள் உண்டு  
விழியே விளக்கொன்று ஏற்று
 

 
மீண்டும் அதே ஆர்.சுந்தரராஜன், இளையராஜா, விஜய்காந்த் கூட்டணி ஆனால் இம்முறை இன்னொரு வெற்றிப்படமாக அமைந்தது “அம்மன் கோயில் கிழக்காலே”. இந்தப்படமும் மசாலா கலந்த, ஆர்மோனியப்பெட்டியை தன்னுள் அடக்கிய கதை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் தம்பி கங்கை அமரனுக்குக் கொடுத்து அழகு பார்த்தார் ராஜா. மொத்தம் ஆறு முத்துக்கள். எல்லாமே கேட்கக் கேட்கத் திகட்டாதவை. 
“காலை நேரப்பூங்குயில்”
 

பஞ்சு அருணாசலம் என்ற வெற்றிகரமான தயாரிப்பாளர் கைகொடுத்தும் அதிகம் எடுபடாமல் போன படங்களில் ஒன்று “என் ஜீவன் பாடுது”. அந்தக்காலத்துக் காதலர்களின் தேசியகீதங்களில் ஒன்று “எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்” உள்ளிட்ட எல்லாப்பாடல்களுமே அருமையாக அமைந்தவை.இளையராஜாவின் வரிகளில் இந்தப்பாடல் மட்டும் இளையராஜா, லதா மங்கேஷ்கர் குரல்களோடு படத்தில் மட்டும் மனோ பாடவும் இடம்பெற்றிருக்கிறது. மற்றைய அனைத்துப் பாடல்களையும் (கட்டி வச்சுக்கோ, மெளனமேன், ஆண்பிள்ளை என்றால், காதல் வானிலே, ஒரே முறை உன் தரிசனம்) பஞ்சு அருணாசலம் எழுதியிருக்கிறார். “மெளனமேன் மெளனமே” பாடலைச் சிலாகித்து முன்னர் இடுகை ஒன்றும் இட்டிருக்கிறேன் இங்கே
“கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச”
 
இசைஞானி இளையாராஜாவின் குடும்ப நிறுவனம் “பாவலர் கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐ அழகாகக் காட்டிய படங்களில் ஒன்று ராஜாதி ராஜா. படத்தின் பேருக்கேற்றாற்போல ராஜபாட்டை போட்டது பாடல்கள். கங்கை அமரன் (மாமா உன் பொண்ணக் கொடு),பிறைசூடன் (மீனம்மா), இளையராஜா (வா வா மஞ்சள் மலரே, (அடி ஆத்துக்குள்ள, உலகவாழ்க்கையே சிறுபாடல்கள்)), வாலி (மலையாளக்கரையோரம்), பொன்னடியான் (எங்கிட்ட மோதாதே), இவற்றோடு படத்தில் இடம்பெறாத “உன் நெஞ்சத்தொட்டு சொல்லு” என்ற பாடலை கங்கை அமரனும் எழுதியிருக்கிறார்கள்.

 “வா வா மஞ்சள் மலரே”
 

ஆர்.சுந்தரராஜனுக்கு ஒரே ஆண்டு கிடைத்த இரண்டு தோல்விப்படங்களில் ஒன்று எங்கிட்ட மோதாதே. படத்தின் பெயரைப் போலவே எங்கும் மோதாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்ட படம். விஜய்காந்த்துடன் இணைந்த படங்களில் மோசமான தோல்வியும் இந்தப்படத்துக்குக் கிட்டியது. இளையராஜா, ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் அதிகம் எடுபடாமல் போன படம் என்றால் இதுதான் எனலாம். பாடல்களை வாலியும் புலமைப்பித்தனும் எழுதியிருக்கிறார்கள். வாலி எழுதிய “சரியோ சரியோ” பாடல் மட்டும் கேட்கும் ரகம்

 
“சரியோ சரியோ”
 

அட்டகாசமான பாடல்கள், ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள் (ரூபிணி, குஷ்பு) இவற்றோடு அப்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாயகன் பார்த்திபன் இவர்கள் இருந்தும் என்ன பயன், மோசமான கதை, திரைக்கதை இருந்தால் தாலாட்டு பாடினால் முகாரியில் வந்து விழுந்தது படத்தின் வெற்றிப்பலன். பார்த்திபனோடு நீண்ட பகையை ஆர்.சுந்தரராஜன் பெற்றுக்கொண்டதுதான் இந்தப் படத்தின் பலாபலன். பாடகர் அருண்மொழிக்கு இந்தப் படத்தில் கிட்டிய பாடல்கள் எல்லாமே பெரும் பேறு. சொந்தம் என்று வந்தவளே ஆத்தா பாடலை எழுதிப்பாடியவர் இளையராஜா, வராது வந்த நாயகன் பாடலை வாலி எழுத, கங்கை அமரன் “நீதானா”, “வெண்ணிலவுக்கு”, “ஓடைக்குயில்” ஆகிய மூன்று பாடல்களையும் எழுதி வைத்தார். இன்றும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்கள்

 “வராது வந்த நாயகன்”

“நீலவேணி அம்மா நீலவேணி” சென்னை வானொலியை நான் காதலித்த காலங்களில் கேட்டுக் கேட்டுக்கிறங்கிய பாடலுக்குச் சொந்தமான படம் “சாமி போட்ட முடிச்சு”. முரளியோடு முக்கிய பாத்திரத்தில் ஆர்.சுந்தரராஜனும் நடித்த படம். பெரும் வெற்றி பெறாவிட்டாலும் “பொன்னெடுத்து வாரேன் வாரேன்”, “மாதுளங்கனியே” போன்ற பாடல்கள் இன்றும் இன்றும் இனிக்கும். மங்கலத்து குங்குமப்பொட்டு பாடலை வாலி எழுத மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்.

“நீலவேணி அம்மா நீலவேணி”
 

1992 ஆம் ஆண்டு இருபது வருஷங்களுக்கு முன்னர் ஆர்.சுந்தராஜனும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய இறுதிப்படம் “திருமதி பழனிச்சாமி”. கல்வியின் முக்கியத்துவத்தை வைத்து எடுத்த படம், வரிவிலக்கு கொடுக்கவேண்டும் என்றெல்லாம் விளம்பரம் தேடிய படம் கூட. குத்தாலக்குயிலே பாடலை கங்கை அமரன் எழுத மற்றைய பாடல்களை வாலி கவனித்துக் கொண்டார். அம்மன் கோயில் வாசலிலே பாடலோடு நடு சாமத்துல, பாதக்கொலுசு பாட்டு பாடலும் இந்தப் படத்தின் இனிய இசைக்கு அணி சேர்ப்பவை
“பாதக்கொலுசு பாட்டு”
 

 

15 thoughts on “இசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓர் இன்னிசைக்கூட்டு

 • அருமை..அருமை..அருமை..பல பாடல்களின் பாடலாசிரியர்கள் முதற்கொண்டு நிறைய தகவல்கள்..

  அல்மோஸ்ட் கடைசியாய் செய்த ‘சீதனம்’ படத்தில் கூட “வந்தாளப்பா வந்தாளப்பா” என அருமையான பாட்டு வாங்கியிருப்பார் தேவாவிடம்..

 • யப்பா போயிக்கிட்டே இருக்குமே இந்த கூட்டணி பாடல்கள்.;))

  அருமையான நல்ல தொகுப்பு தல..நன்றி 😉

 • 'தோகை இளமயிலில்' மயில் தோகை விரித்து சிலிர்ப்பதைப் போன்ற இசை உணர்வை பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழலில் கொண்டுவருவது அருமை! எதை வியப்பது எதை விடுவது!!

 • அழகாக எழுதியுள்ளீர்கள்,எத்தனை அருமையான பாடல்கள். ஒரு மாலையில் பொன்மாலை பொழுதை கேட்டுக்கொண்டே காலார நடந்தது போல் இருக்கிறது உங்கள் வர்ணித்தல்.

  வாழ்த்துகள்.

 • இளய தளபதி கூட சேர்ந்து கொடுத்த படத்தில "மணிமேகலையே மணி ஆகலையே"ன்னு ஒரு பாட்டு கூட நல்லா இருக்கும்..இப்போ முழுவீச்சில கேட்டரிங் தொழில்ல ஐக்கியம் ஆயிட்டர்னு கேள்விப்பட்டேன்..

 • //நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இசைஞானி இளையராஜாவோடு, இயக்குனர் ஆர்.சுந்தராஜன் இணைந்து பணியாற்றும் "நிலாச்சோறு" திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கும் இந்தவேளை,//

  அப்படியா???? எப்போது தகவல் வெளியாச்சு?

  +++++++++++

  கானா "குங்குமச்சிமிழ்" விட்டுட்டீங்களே……..

  தழுவாத கைகள் – ஒன்றா ரெண்டா – மோகன ராகத்தின் உச்சம். முதல் சரணத்தில் கேள்விக்கு பதில் கேளவியாய் போகும் நடையில் பாடலை எழுதியிருப்பார் வாலி.

  எங்கிட்ட மோதாதே – "ஒன்னோட ஒன்னு" பாடலும் நன்றாக இருக்கும், இவன் வீரன் சூரன் ஓ.கேதான்.

  சாமி போட்ட முடிச்சு – "மங்கலத்து" என்ற ஒரு பாடலை வாலி எழுதியுள்ளார்.

  திருமதி பழனிச்சாமி – டைட்டில் கார்டில் வாலி பெயர் மட்டும் இருக்கும். எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும்.

  காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தில் அவரே முழுப்பாடலும் எழுதினார், மணிமேகலையே மணி ஆகலையே – ஆஹா அற்புதம்.

  btw
  சம்மந்தப்பட்ட ஒருவர் கூறிய தகவல்:
  அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் இடம் பெற்ற "உன் பார்வையில்" பாடல் மெல்லத் திறந்தது கதவு படத்துக்காக (instead of வா வெண்ணிலா) ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
  "உன் பார்வையில் ஓராயிரம் கடிதம் நான் எழுதுவேன்"
  "மறைத்த முகத்திரை திறப்பாயோ, திறந்து அகச்சிறை இருப்பாயோ"

 • காத்தவராயன்

  அறிவிப்பு போன வாரம் வந்திருக்கு

  திருமதி பழனிச்சாமியில் கங்கை அமரனும் எழுதியிருக்கிறார் இதோ டைட்டில் கார்ட்
  https://www.youtube.com/watch?v=Ae8LRDOBVOs

  குங்குமச்சிமிழ் ஐ விட்டுவிட்டேன், சேர்க்கிறேன்,
  அத்தோடு சாமி போட்ட முடிச்சு படத்தில் மங்கலத்து பாடலை வாலி எழுதியிருக்கிறார் அதையும் சேர்க்கிறேன்

  சுவையான தகவல்களை ரசித்தேன் மிக்க நன்றி 😉

 • அப்படியே 82 இலிருந்து 93 வரையான பயணத்தை கொண்டு வந்திட்டீங்கள் நண்பா… இப்போ பார்க்கும் போது சுந்தரராஜனின் வெற்றி மலைக்க வைக்கிறது. அந்த வேளையில் தமிழ் சினிமாவில் புதுமையையும் தரத்தையும் புகுத்திய மகேந்திரன், பாலுமகேந்திரா,ஆபாவாணனின் அறிவு ஜீவித்தனம் இல்லாத ஆனால் எப்படியான படம், எவருடன் சேர்ந்தெடுத்தால் ஓடும் என்ற பட்டுணர்வைக் கொண்டு ஜெயித்தவர். . சாமி போட்ட முடிச்சு படத்தின் மாதுளங்கனியே பாட்டைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும் ஏதொவொரு இனம் புரியாத உணர்வு வந்து என்னை வதம் செய்யும். சோகமுமில்லாத மகிழ்ச்சியுமில்லாத உணர்வது.
  இவரின் வெற்றிக்கு இசைஞானி எவ்வளவு உறுதுணையாக இருந்தாரோ அவ்வளவுக்கு கவுண்டமணியும் இருந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. உங்களின் இந்தப் பதிவைப் படித்த போது யாழ்ப்பாணத்தில்,முற்றத்து வேப்ப மர நிழலில், பொழுது சாயும் மாலை வேளையில் சாய்மனைக் கட்டிலில் படுத்திருந்து இலங்கை வானொலி தமிழ்சேவை 2 கேட்ட போது அந்தக் காலத்தில் ஏற்படுத்திய உணர்வை இப்போ பெற்றேன். நன்றி தல.

 • ஒரேமூச்சில் படித்துமுடித்தேன் தல.

  மிகவருமையாகச்சொல்லிவிட்டீர்கள்.

  கூடவே, இப்போதெல்லாம் இப்படிப்பட்டபாடல்கள் வருவதில்லையேயென்ற சோகமும் உங்களது வார்த்தைகளில் இழையோடுகிறது.

  R.S+ Raja…. ஒரு மெகாகூட்டணி.
  இசைசாம்ராஜ்யம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *