கமல்ஹாசன் + இளையராஜா = 50 + 10 = 60

கமல்ஹாசன் + இளையராஜா = 50 + 10 = 60 என் விருப்பங்கள்

வழக்கமாக என் பிரியத்துக்குரிய நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளுக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு கொடுப்பது வழக்கம். இன்று ஏதேனும் பழைய இடுகையைக் கொடுக்கலாம் என்று இருந்தேன். 

காலையில் வேலைக்குப் பயணிக்கும் போது திடீரென்று கமல்ஹாசன் இளையராஜா கூட்டணிப் பதிவு போடலாமே என்று எண்ணம் தோன்றக் காரணம் “நீ ஒரு காதல் சங்கீதம்” அப்போது நினைவுக்கு வந்தது. எனவே இயன்றவரை காதல் பாடல்களாகவும், ஒரு படத்தில் இருந்து ஒரு பாடலாகவும், சோகம் தருவிக்காத பாடலாகவும், கமல்ஹாசன் பாடல் காட்சியில் தோன்றி நடித்ததாக இருக்கவேண்டும் என்றும் ஒரு விதிமுறையை மனதுக்குப் பிறப்பித்துப் பட்டியலை ஆரம்பித்தேன். 94 வீதமானவை காதல் பாடல்களாகவும் மீதி தவிர்க்க முடியாத நல்ல இனிமையான பொதுப் பாடல்களாகவும் அமைத்தேன்.
ராணி தேனி, மகளிர் மட்டும் நீங்கலாக 50 படங்கள் கமல்ஹாசன், இளையராஜா கூட்டணியில் வந்ததை இங்கே பகிர்கின்றேன். மீதமுள்ள 10 பாடல்களும் பிற இசையமைப்பாளர் இசையில் கமல்ஹாசனின் படங்களில் எனக்குப் பிடித்தவை.
இவ்வளவு பட்டியலையும் காலை ஒன்றரை மணி நேர ரயில் பயணத்தில் என் ஐபோன் வழியாகத் தட்டச்சியவை.  விடுபட்ட படங்களை உறுதிப்படுத்த கமல் படப்பட்டியலை விக்கிபீடியா வழி பார்த்து உறுதி செய்தேன்.
இப்போது ரயிலில் வீடு திரும்பும் போது பதிவாகக் கொடுக்கிறேன்.
எனவே சிட்னி ரயில்வேக்கும் ஆப்பிளுக்கும் நன்றி 🙂 
முகப்புப்படம் நன்றி : canindia.com
இவை அனைத்துமே என் விருப்பம் சார்ந்த பட்டியல், முதலாவது பாடலைத் தவிர மற்றையவை தர வரிசையில் அமைந்தவை அல்ல. 
1. நீ ஒரு காதல் சங்கீதம் – நாயகன் 
2. வாழ வைக்கும் காதலுக்கும் ஜே – அபூர்வ சகோதரர்கள்
3. வளையோசை கலகலவென – சத்யா
4. பேர் வச்சாலும்  – மைக்கேல் மதன காமராஜன்
5. மீண்டும் மீண்டும் வா – விக்ரம்
6. மனசு மயங்கும் – சிப்பிக்குள் முத்து
7. அந்தி மழை பொழிகிறது – ராஜ பார்வை
8. இந்த மின்மினிக்கு – சிகப்பு ரோஜாக்கள்
9. சின்னஞ்சிறு வயதில் – மீண்டும் கோகிலா
10. ஒரே நாள் உனை நான் – இளமை ஊஞ்சலாடுகிறது
11. பூங்காற்று புதிதானது – மூன்றாம் பிறை
12. பூங்காற்று உன் பேர் சொல்ல – வெற்றி விழா
13. காதல் தீபமொன்று – கல்யாண ராமன்
14. பேரைச் சொல்லவா – குரு
15. ஜெர்மனியின் செந்தேன் மலரே – உல்லாசப் பறவைகள்
16. இதழில் கதை எழுதும் நேரமிது – உன்னால் முடியும் தம்பி
17. விழியில் என் விழியில் – ராம் லக்ஷ்மண்
18. தாலாட்டுதே வானம் – கடல் மீன்கள்
19. பூ மலர்ந்திட – டிக் டிக் டிக்
20 பொன் மானே – ஒரு கைதியின் டைரி
21. சொல்லச் சொல்ல என்ன பெருமை – எல்லாம் இன்ப மயம்
22. வானம் கீழே வந்தாலென்ன – தூங்காதே தம்பி தூங்காதே
23. முத்தம் போதாதே – எனக்குள் ஒருவன்
24. எங்கே என் ஜீவனே – உயர்ந்த உள்ளம்
25. உன்ன விட – விருமாண்டி
26. காதல் ராகமும் – இந்திரன் சந்திரன்
27. சிறிய பறவை – அந்த ஒரு நிமிடம்
28. கண்மணியே பேசு – காக்கிச் சட்டை
29. ராதே என் ராதே – ஜப்பானில் கல்யாணராமன்
30. நான் பூவெடுத்து – நானும் ஒரு தொழிலாளி
31. கால காலமாக – புன்னகை மன்னன்
32. காதல் மஹராணி – காதல் பரிசு
33. கண்மணி அன்போடு – குணா
34. இன்னும் என்னை – சிங்கார வேலன்
35. இஞ்சி இடுப்பழகி – தேவர் மகன்
36. நீ பார்த்த பார்வைக்கொரு – ஹே ராம்
37. பூ பூத்ததை – மும்பை எக்ஸ்பிரஸ்
38. பன்னீர் புஷ்பங்களே – அவள் அப்படித்தான்
39. ஶ்ரீரங்க ரங்க நாதனின் – மகாநதி
40. எந்தன் நெஞ்சில் – கலைஞன்
41. வெளக்கேத்து வெளக்கேத்து – பேர் சொல்லும் பிள்ளை
42. ஆழக்கடலில் தேடிய முத்து – சட்டம் என் கையில்
43. செவ்வந்தி பூ முடிச்ச  – 16 வயதினிலே
44. வான் போலே வண்ணம் – சலங்கை ஒலி
45. நிலா காயுது – சகலகலா வல்லவன்
46. மாருகோ மாருகோ – சதி லீலாவதி
47. இளங்கிளியே – சங்கர்லால்
48. ராக்கோழி கூவும் – மகராசன்
49. பருவம் உருக – ஹரே ராதா ஹரே கிருஷ்ணா
50. நானென்பது நீயல்லவோ – சூரசம்ஹாரம்
51. பாரதி கண்ணம்மா (எம்.எஸ்.வி) – நினைத்தாலே இனிக்கும்
52. வசந்த கால நதிகளிலே (எம்.எஸ்.வி) –    மூன்று முடிச்சு
53. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது (எம்.எஸ்.வி) – வறுமையின் நிறம் சிகப்பு
54. இது இரவா பகலா (எம்.எஸ்.வி) – நீல மலர்கள்
55. வா வா என் வீணையே (கங்கை அமரன்) – சட்டம்
56. மழைக்கால மேகம் ஒன்று (கங்கை அமரன்) – வாழ்வே மாயம்
57.  டெலிபோன் மணி போல் (ஏ.ஆர்.ரஹ்மான்) – இந்தியன்
58 ஸ்வாசமே ஸ்வாசமே (ஏ.ஆர்.ரஹ்மான்) – தெனாலி
59. பூ வாசம் புறப்படும் பெண்ணே  (வித்யா சாகர்) – அன்பே சிவம்
60. காதலி காதலி (தேவா) – அவ்வை ஷண்முகி

பாடல் தந்த சுகம் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்

துரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இல்லையா பின்னே, நிழல்கள் திரைப்படத்துக்காக எஸ்.ஜானகி பாட இசைஞானி இளையராஜா இசையில் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல். 

பின்னர் எப்படி அதிஷ்டத்தை வரவழைத்தது? 
எண்பதுகளில் தெலுங்கில் முன்னணி இயக்குனராகக் கலக்கிக் கொண்டிருந்த வம்சி தன்னுடைய “சித்தாரா” திரைப்படத்துக்காக இந்தப் பாடலின் அதே மெட்டுடன் இசைக் கோர்வையைப் பயன்படுத்திக் கொண்டார். தெலுங்கிலும் அதே எஸ்.ஜானகி தான் பாடகி. இந்தப் பாடலைப் பாடியதற்காக எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது அதை வாங்கிக் கொடுத்தது பாடல் மீளப் பயன்படுத்தப்பட்ட  சித்தாரா திரைப்படம். இதோ அந்த மீளப் பயன்பட்ட பாடல் https://m.youtube.com/watch?v=5yiYUP7t-uw
இயக்குனர் வம்சி எண்பதுகளில் தீவிர இளையராஜா விசிறி. தமிழில் நாம் கேட்ட பல பாடல்கள் தெலுங்கிலும் இவரின் புண்ணியத்தால் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. வம்சி இயக்கிய படங்களில் மீளவும் பயன்பட்ட தமிழ் மெட்டுகள் சிலதை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் (இரண்டாவது பாடல் தவிர) http://www.radiospathy.com/2013/04/68.html
எஸ்.ஜானகியைப் பொறுத்தவரை அவருக்கு நெருக்கமான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று என்று சொல்லியிருக்கிறார். முதலில் இந்தப் பாடல் தமிழில் படமாக்கப்படாத வருத்தமும் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடிய பெரும் பாடகிக்கு இந்தப் பாடலின் மீதான ஈர்ப்பு இருப்பதில் இருந்தே இதன் மகத்துவம் புரியும்.
ஒரு பாடல் இசையமைக்கப்பட்டுப் பின்னர் படமாக்கப்படாது போவது திரையுலகின் நிரந்தர சாபக்கேடு. அதிலும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு இதில் என்ன அப்படி ராசியோ தெரியவில்லை. “மலர்களே நாதஸ்வரங்கள்” (கிழக்கே போகும் ரயில்), “புத்தம் புதுக் காலை” (அலைகள் ஓய்வதில்லை), “சந்திக்கத் துடித்தேன் பெண்மானே” (வேதம் புதிது) என்ற வரிசையில் “தூரத்தில் நான் கண்ட உன் முகம்” (நிழல்கள்) பாடலும் சேர்ந்து விட்டது. இந்தப் பாடல் மட்டும் படமாக்கப்பட்டு ஒருக்கால் தேசிய விருதை மூலப்பாடலான தமிழ் பாடலே சுவீகரித்துக் கொண்டிருந்தால் பாரதிராஜா படத்தில் பாடி இரண்டாவது தடவை தேசிய விருது பெற்ற் பாடகி எஸ்.ஜானகி என்ற பெருமை கிட்டியிருக்கும். ஏனென்றால் எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதைக் கொடுத்தது  பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் “செந்தூரப் பூவே” என்ற கங்கை அமரன் எழுதிய பாடல்.
“தூரத்தில் நான் கண்ட உன் முகம்” பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இந்தப் பாடல் படத்தில் இன்னொரு நாயகி பின்னாளில் பாலசந்தரின் ரயில் சினேகம் படத்தில் அமுதா என்ற பெயரில் நடித்தவருக்காக எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்த நாயகி வரும் காட்சிப் பின்னணியில் மீராவின் சிலை ஒன்று இருக்கும்.
இந்தப் பாடலை எல்லாம் ஒரு காலத்தில் நள்ளிரவு கடந்து வானொலி ஒலிபரப்புச் செய்யும் போது தனியே நான் மட்டும் வானொலிக்கூடத்தில் இருக்கும் சூழலில் கொடுத்த பாட்டு. அந்த ஏகாந்த இரவில் இதைக் கேட்கும் போது கிட்டும் சுகமே தனி. சோகப்பாடல்களைக் கேட்கும் போது பாடுபவர் வழியே  நம் மனக்கவலைகளுக்கு வடிகால் கிடைக்கிறது. கூட ஒருத்தர் இருக்கிறாரே என்பதை அரூபமாக வெளிப்படுத்தி நிற்கும் பாங்கில். 
எஸ்.ஜானகியிடம் இம்மாதிரிப் பாடல்களைக் கொடுக்கும் போது பங்கமில்லாது கொடுத்துவிடுவார் இதைச் சொல்லும் போது “பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது” (ராசாவே உன்னை நம்பி) பாடலை நினைப்பூட்டுகிறார் இவர். எஸ்.ஜானகியிடம் பிடிக்காத விஷயமே இதுதான். அவரின் ஏதாவது ஒரு பாடலைச் சிலாகித்துப் பேச ஆரம்பித்தால் இன்னொரு மகத்தான பாடலில் கொண்டு போய் நிறுத்திவிடுவார்.
“தூரத்தில் நான் கண்ட உன் முகம்” பாடலைக் கேட்டவுடன் அப்படியே இழுத்துப் போய் “கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்” (மனதில் உறுதி வேண்டும்) பாடலில் நிறுத்திவிடும். அவ்வளவு தூரம் நெருங்கிய சொந்தங்களாக இந்த இரு பாடல்களும் எனக்குத் தோன்றும். ஒரே ரகம் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். ஒரே ராகமா என்பதை இசை வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும்.
நிழல்கள் படத்தில் மொத்தம் நான்கு பாடலாசிரியர்கள். மடை திறந்து பாடலை வாலி எழுத, பூங்கதவே பாடல் கங்கை அமரன் கொடுக்க, பொன்மாலை பொழுது பாடலோடு வைரமுத்து அறிமுகமாக, பஞ்சு அருணாசலம் எழுதியது இந்த “தூரத்தில் நான் கண்ட உன் முகம்”. பாரதிராஜா படங்களில் அதிகளவு பாடலாசிரியர் பணியாற்றிய படங்களில் ஒன்று.
பாடலின் ஆரம்பத்தில் மெலிதான இசையோடு ஜானகி கொடுக்கும் ஆலாபனையைத் தொடர்ந்து 
“தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்”
என்று பாடும் வரிகளை மிகவும் சன்னமாகக் கொடுத்துவிட்டு அதை வரிகளை மீண்டும் பாடும் போது கவனியுங்கள் இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடியிருப்பார். தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.
பாடலின் மைய இசையில் ஒற்றை வயலின் இயலாமையின் பிரதிபலிப்பாகவும், ஒரு சேர ஒலிக்கும் வயலின்களின் கூட்டு மனதின் ஆர்ப்பரிப்பைப் பகிர்வது போல இருக்கும்.
தன் மனக்கிடக்கைக் கொட்டிக் கொண்டே போய் ஈற்றில்
“ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா”
என்று தன் மனதை ஓய்வெடுக்கச் சொல்லுமாற் போலக் களைத்து விழுகிறது ஜானகியின் குரல்.
34 வருடங்களுக்கு முன்னர் வந்த நிழல்கள் என்றதொரு ஒரு தோல்விப் படம், அந்தப் படத்திலே வராத பாடல் போன்ற துரதிஷ்டமெல்லாம் களைந்து தன்னைக் கம்பீரமாக இசை ரசிகர் மனதில் வைத்திருக்கிறது இந்தப் பாடல்.
எனக்கு ஒரு மன நிறைவு என்னவெனில் எத்தனையோ பாடல்களைப் பற்றி ரசனைக் குறிப்புகள் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு இதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அன்புக் கட்டளையிட்ட நண்பர் Karthik Natarajan இன் வேண்டுகோளை இன்று என் மனது நிறைவேற்றியிருக்கிறது.
தூரத்தில் நான் கண்ட உன் முகம் பாடலைப் படத்தில் வந்த காட்சிகளோடு மீளப் பொருத்திய காணொளி இது. இந்தக் காட்சியில் வரும் நாயகிக்காக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிராது. நான் மேலே குறிப்பிட்ட மற்ற நாயகிக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
http://www.youtube.com/watch?v=QvtwHqc1ArU&sns=em

பாடல் தந்த சுகம் : ஒரு போக்கிரி பார்க்கிற பார்வை தான்

தொண்ணூறுகளில் என் ஆஸ்தான ஒலிப்பதிவுக்கூடமாக இருந்தது ஷண் றெக்கோர்டிங் பார். அந்தக் காலத்தில் ஒலிநாடாவில் பாடல் பதிவு செய்து கேட்ட அனுபவங்களை எல்லாம் சொல்லி மாளாது.

ஷண் றெக்கோர்டிங் பார் யாழ்ப்பாண நகர பஸ் ஸ்ராண்டின் நடு நாயகமாக இருந்த நெட்டை மரப்பலகை மாடியில் இருந்து பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத்துக்கு உள்ளே இருந்த கடைத்தொகுதியில் ஒரு அறையைப் பிடித்துக் கொண்டது. ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த அந்த ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வழி காட்டுவதே அப்போது வந்த இளையராஜாவின் படப்பாடல்களே.
ஸ்பீக்கர் வழியாக அந்த இசை நவீன சந்தைக் கட்டடத்தைத் தாண்டி வழிந்தோடும். அப்படித்தான் ஒருநாள் புதுப்பாட்டு ரெக்கோர்டிங் செய்ய வேண்டும் என்று ஷண் றெக்கோர்டிங் பார் நோக்கிப் படையெடுத்த என்னை வரவேற்றது “ஒரு போக்கிரி ராத்திரி” பாடலின் முகப்பு இசை.  ஒலிப்பதிவுக்கூடத்துக்குப் போய் இறங்கிய கையோடு முதலில் பாடல் பதிவு செய்ய எழுதிக் கொடுக்கும் தாளில் இந்தப் பாடலை எழுதிக் கொடுத்தேன். அந்த அனுபவத்தை இன்னும் தாண்டமுடியவில்லை இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.
தொண்ணூறுகளில் சூப்பர் ஹிட் ஜோடிகளில் ஒன்றாக மனோ – ஸ்வர்ணலதாவையும் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். இதை முன்னுறுத்தி ஒரு தொகுப்பு வருகின்றது என்பதை இப்போதே முன்னோட்டமாகச் சொல்லிக் கொள்கின்றேன். பாடலின் ஆரம்பத்தில் ஆர்ப்பரிக்கும் இசையோடு வாலியின் வாலிப வரிகளுக்கு இசைஞானி கொடுத்த மெட்டின் நளினமே தனியழகு. சரணத்தில் ஒவ்வொரு அடிகளுக்கும் ஆமோதிக்குமாற் போல புல்லாங்குழல் வருடிவிட்டு வழி விடும் பாடகர்களைப் பாட.

 நாளை அக்டோபர் 29 ஆம் திகதி பிறந்த நாளாக அமையும் கவிஞர் வாலி அவர்கள் தனது அறுபதாவது வயதில் எழுதிய பாடல் இது என்பதைச் சொல்லித்தான் நம்ப வைக்க முடியும்.

நடிகர் ராதாரவி “கங்கைக்கரைப் பாட்டு”, “இளைஞர் அணி” போன்ற படங்களைத் தயாரித்திருக்கின்றார். “இது நம்ம பூமி” தான் சார்ந்த திரையுலக அங்கத்தவர்களுக்காக, அவர்கள் சார்பில் தயாரித்த படம். வருஷம் 16 இற்குப் பின்னர் கார்த்திக் – குஷ்பு ஜோடியை மகத்துவப்படுத்திய
இன்னொரு படம் இது, பி.வாசு இயக்கியது. ஒரு போக்கிரி ராத்திரி பாடலே வருஷம் 16 படத்தில் வரும் பூப்பூக்கும் மாசம் தை மாசம் பாடலின் காட்சியமைப்போடு நெருங்கி ஆரம்பிக்கும்.
படத்தில் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் ரகம். இதே படத்தில் கே.ஜே.ஜேசுதாசுடன் இணைந்து ஸ்வர்ணலதா பாடிய “ஆறடிச் சுவரு தான்” பாடலை மறக்கமுடியுமா?
இளமைக் காலத்து நினைவுகளை அந்தக் காலகட்டத்தில் கேட்ட பாடல்கள் தான் பின்னணி இசை போல மீட்டிப் பார்க்கும். “ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்” எனக்குத் தவிர்க்க முடியாத பின்னணி இசையாக

ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்

ஒரு இயக்குநரின் தோளின் இருபுறமும் பயணிக்க வேண்டியவர்களில் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது. கட்புலனை கைவரப்பெறாதோர் எவ்வளவு தூரம் காட்சியோட்டத்தில் இழைந்திருக்கும் வசனத்தையும் அத்தோடு நயமாகப் பொருந்தியிருக்கும் இசையமைப்பையும் உள்வாங்கி அந்தக் கலைப்படைப்பைக் கச்சிதமாக உணர முடியும் வல்லமை கிட்டும் பாங்கிலேயே ஒலியைக் கேட்டு நுகரமுடியாதோருக்கு ஒரு ஒளிப்பதிவாளரின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுகின்றது.

இவற்றுக்கும் மேலாக ஒரு இயக்குநரின் மனக்கண்ணில் ஓடுவதை உள்ளது உள்ளவாறோ அல்லது அதற்கும் மேலாகவோ கச்சிதமாகத் தன் கேமராக் கண்ணுக்குள் அடக்கும் ஒளிப்பதிவாளரே இயக்குநரின் ஜீவனாக நின்று தொழிற்படுகின்றார்.
“அழகிய கண்ணே உறவுகள் நீயே” பாடல் ஒன்றே போதும் உதிரிப்பூக்கள் படத்தில் பொதிந்திருக்கும் வலியை இயக்குநரின் சார்பில் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பங்கு போட்டுக்கொண்டு செய்த கைங்கர்யத்தை. http://www.youtube.com/watch?v=VhZrCanB9L0 
அந்தப் பாடலில் அந்தப் பாடலில் விளையாடும் குழந்தை, சோப்பு போட்ட எரிச்சலோடு துள்ளிக் கொண்டே குளிக்கும் அண்ணன்காரன், துன்பச்சுமையை அப்படியே தன் முகம் வழியே வாக்குமூலம் பகிரும் இவர்களின் தாய் என்று அந்தப் பாடலின் காட்சியோட்டத்தின் சில துளிகளே ஒரு நாவலின் பல்வேறு பக்கங்களைத் திரட்டித் தந்தது போல.
35 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இந்த “உதிரிப்பூக்கள்” படத்தின் வாயிலாகத் தம் நேர்மையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர் மகேந்திரன், இசையமைப்பாளர் இளையராஜா இவர்களோடு சில நாட்களுக்கு முன்னர் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.
இயக்குநர் மகேந்திரனைப் பொறுத்தவரையில் அசோக்குமார் கிடைத்திராவிட்டாலும் இன்னொரு ஒளிப்பதிவாளரைத் தன்னுடைய படைப்பாற்றலின் நிலைக்கண்ணாடியாகத் தான் வரித்திருப்பார். அவரின் முதற்படமான முள்ளும் மலரும் படமே இதற்குச் சாட்சி. முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா படம் எடுக்கும் போதே சில பல தயாரிப்புச் சிக்கல்கள் மற்றும் இவரும் சொந்தமாகப் படம் இயக்கும் முனைப்போடு கிளம்பியது அடுத்த படமான உதிரிப்பூக்கள் படத்தில் அசோக்குமாருடன் மகேந்திரன் இணைய அச்சாரம் வைத்தது.
தொடர்ந்து பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு என்று தொடர்ந்தது மகேந்திரன் – அசோக்குமார் கூட்டணி. இதில் நெஞ்சத்தைக் கிள்ளாதே அசோக்குமாருக்குத் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். நண்டு படம் இயக்குநர் மகேந்திரனை மீறித் தயாரிப்பாளர் கைமா பண்ணிச் சிதைத்திருந்தாலும் அந்தப் படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி, மஞ்சள் வெய்யில் பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் ஏமாற்றாமல் இன்னும் அந்தப் படத்தின் பேர் சொல்ல வைக்கும். அதே போல் ஜானி படத்தின் தொழில்நுட்பச் சிறப்பில் அசோக்குமாரும் பங்கெடுத்துக் கொண்டார். அசோக்குமாரின் ஒளிப்பதிவுத்திறனை மகேந்திரனே கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். இளையராஜாவின் பாடல்கள் தரம் குன்றாது இந்தக் கூட்டணியால் மிளிர்ந்தன.
முதல் 3D திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தது இவருக்குக் கிட்டிய இன்னொரு மகுடம் எனலாம்.
பி.வாசு இயக்கிய படங்கள் பலவற்றில் ரவீந்திரன் முக்கிய ஒளிப்பதிவாளர். ஆனால் நடிகன், கட்டுமரக்காரன், மன்னன் போன்ற படங்களில் அசோக்குமாரும் பங்கு போட்டார். பவித்திரனின் சூரியன் படமும் ஷங்கரின் ஜீன்ஸ் படமும் அசோக்குமாரின் காமெராவின் பிரம்மாண்டத்தை உணர்த்தி நிற்கின்றன. குறிப்பாக சூரியன் படத்தை தியேட்டரில் அந்தக்காலத்தில் பார்த்தபோது கிட்டிய காட்சி அனுபவம் இன்னும் மனசுக்குள் ஒட்டியிருக்கு.
ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராவது திரையுலகம் காணும் நிகழ்வு. அசோக்குமார் இயக்குநராக “காமாக்னி” என்ற படத்தை ஹிந்தியில் இயக்கியபோது இசைத் தோள் கொடுத்தவர் இளையராஜா.
தொடர்ந்து  “அன்று பெய்த மழையில்” படத்தை இயக்கினார். அந்தப்படம் அப்போது பரபரப்பான சில்க் இன் கவர்ச்சி அலையால் வெகுவாகக் கவனிக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு இசை தாயன்பன். இவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனோ ஒரு சில படங்கள் தான் தாயன்பனுக்குக் கிட்டியது.
தெலுங்குத் திரை ரசிக உலகம்  மறக்காத காதல் படங்களில் அசோக்குமார் இயக்கிய “அபிநந்தனா” படம் முக்கியமானது. இது வழக்கமான அசோக்குமாரின் கவர்ச்சி, பாலியல் ஈர்ப்பு சார்ந்த படங்களில் இருந்து மாறுபட்ட அழகான காதல் கதை. கார்த்திக், ஷோபனா போன்றோர் நடித்த இந்தப் படம் தமிழில் “காதல் கீதம்” என்ற பெயரில் மொழி மாறியது. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே அட்டகாச ரகம். இந்த மெட்டுகள் அன்பின் முகவரி, சிறைப்பறவை போன்ற படங்களின் பாடல்களாகவும் வந்திருக்கின்றன. காதல் கீதம் படத்தில் “மஞ்சள் அந்தி வேளையோ”, “வாழ்வா சாவா”, “பெண்மை கொண்ட மெளனம்” எல்லாம் அந்தக் காலத்து இளைஞரின் காதல் கீதங்கள்.
பின்னர் கங்கை அமரன் வசனம்,பாடல்கள் எழுதிய “தம்பிக்கு ஒரு பாட்டு” படம் இயக்குநராக அசோக்குமார் இளையராஜாவோடு சேர்ந்த முக்கிய படங்களில் ஒன்று என்பதற்கு இந்தக் கூட்டணியில் விளைந்த பாடல்கள் முக்கிய காரணம். “தை மாசம் கல்யாணம் அன்று காதல் ஊர்கோலம்” ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா பாடிய தெள்ளமுதல்லவா அது.
ஒளிப்பதிவாளராக, இயக்குநராக அசோக்குமார் நினைவுகூரப்படுவார் அவர் பணியாற்றிய முன் சொன்ன படங்களுக்காக.
பிற்சேர்க்கையாக ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமாரின் ஒளியோவியத்தில் இருந்து
பருவமே புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே)
அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா ( நண்டு)

காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
Manchu Kuruse Velalo  (அபிநந்தனா)

நான் பெருமைக்குரிய கிரேஸி மோகன் ரசிகன்

கமலஹாசனுக்குப் பொருத்தமான ஜோடி ஶ்ரீதேவி என்ற நினைப்பை மாற்றி கமலுக்குப் பொருத்தமான ஜோடி கிரேஸி மோகனே என்று சொல்லுமளவுக்கு அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து வெற்றிக் கூட்டணியாக இருந்து வருகிறார்கள்.

நாடக மேடைகளில் இருந்து திரைத்துறைக்கு பாலசந்தரின் “பொய்க்கால் குதிரை” திரைப்படத்தின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிஷ்யப்பிள்ளை கமலின் அபூர்வ சகோதரர்களே கிரேஸி இருக்கிறார் கொமாரு என்று அவர் பெயரைச் சொல்ல வைத்தது. அதற்குப் பின்னால் இன்னும் அழுத்தமாக கிரேஸி மோகன் யார் என்பதை மைக்கேல் மதன காம ராஜனில் ஆரம்பித்து, சதிலீலாவதி,  மகளிர் மட்டும், அவ்வை ஷண்முகி, காதலா காதலா,  பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி, பம்மல் கே சம்பந்தம் என்று தொடரும் கமல் – கிரேஸி மோகன் பந்தம்  வசனத்தில் பஞ்ச் தந்திரம் அடித்து ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்குக் கடந்த முப்பதாண்டுகளில் இம்மாதிரி தொடர்ச்சியான வெற்றிக் கூட்டணி அமைந்ததில்லை.
கமல்ஹாசன் தவிர்த்து வேறு பல இயக்குநர் படங்களிலும் கிரேஸி மோகன் பணியாற்றியிருந்தாலும் “ஆஹா” படம் தவிர்த்து  கிரேஸி மோகனின் தனித்துவத்தை மெய்ப்பிக்கக்கூடிய படங்கள் வாய்க்கவில்லை என்பேன். “கொல கொலயா முந்திரிக்கா” படத்தை கிரேஸி மோகனை ஹீரோவாக நினைத்துக்  கொண்டுதான் பார்த்து ரசித்தேன். 
என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவரிடம் தனக்குத் தேவையானதை பொருத்தமான களத்தில் முழுச்சுதந்தரம் கொடுத்து வேலை வாங்குபவர் ஜெயித்துக் காட்டுவார். இந்தச் சூத்திரம் இளையராஜாவின் பாடல்களில் கூடப் பொருத்திப் பார்க்கலாம். கமல்ஹாசன் அளவுக்கு கிரேஸி மோகனின் நுண்ணிய நகைச்சுவை உணர்வைத் தன் படைப்புகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிரேஸி மோகனை அவ்வளவு புரிந்து கொள்ளாத படைப்புலகம் இருக்கிறது என்றும் கொள்ளலாம்.
மெல்பர்னில் இருந்த போது பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் “காதலா காதலா” படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு நண்பர்களுடன் ட்ராம் வண்டியில் திரும்புகிறோம். படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது ஓயாத சிரிப்பு மழையால் அமுங்கிப் போன வசனங்கள் ஒவ்வொன்றையும் அந்த நேரம் அவதானித்த வகையில் ஒவ்வொருவராகச் சொல்லிச் சிரித்து மகிழ்கின்றோம். பின்னர் அடுத்த வாரம் ஆனந்த விகடனின் இரண்டு பக்கங்களில் “காதலா காதலா” படத்தின் குறித்த சில வசனப் பகுதிகளை மட்டும் பகிர்ந்த போது விடுபட்ட இன்னும் பல நகைச்சுவைப் பகிர்வுகளைத் தெரிந்து சிரித்துச் சிரித்துத் தேய்ந்து போனோம்.
அதுதான் கிரேஸி மோகன்.
இளையராஜாவின் பாடல்களைப் பல்லாண்டுகளாகக் கேட்டு வந்தாலும் குறித்த பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது புதிதாய் ஒரு சங்கதி இசையிலோ அல்லது மெட்டமைப்பிலோ கிட்டும். அது போலவே கிரேஸி மோகனின் வசனப் பங்களிப்பும். சோகம் துரத்தும் தருணங்களில் ராஜாவின் இசைக்கு நிகராக இன்னொரு தளத்தில் கை கொடுப்பது அவ்வை சண்முகி மாமியின் அட்டகாசங்கள்.
வெளிநாட்டுப் பயணத்தில் கண்டிப்பாக ஒரு  காட்சி “மைக்கேல் மதன காமராஜன்”ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.
கிரேஸி மோகனின் பங்களிப்பு திரைத்துறை தாண்டி மேடை நாடகத்திலும் வெற்றிகரமாக இயங்கினாலும் எனக்கு அந்த அனுபவம் கிட்டவில்லை. ஆனால் ஒலி நாடாவில் வெளிவந்த கிரேஸி மோகன் நாடகங்கள் ஓரளவு ஆறுதல். தொலைக்காட்சியில் கிரேஸி மோகன் நாடகத் தொடர்கள் வந்திருந்தாலும் ஒன்றிரண்டு அங்கங்களுக்கு மேல் என்னை ஈர்க்காதது அவர் குற்றமன்று. அவரின் வசனத்தில் இருக்கும் நவீனத்துவத்தையும் புத்திசாலித்தனத்தையும் சின்னத்திரை ஊடகத்தில் பயன்படுத்தும் போது இன்னும் பலபடிகள் தொழில் நுட்ப ரீதியிலும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
வெள்ளைக்காரனின் நகைச்சுவைத் தொடர்களுக்கு இஞ்சித்தும் குறைந்ததல்ல கிரேஸி மோகனின் பங்களிப்பு ஆனால் அதைப் பணக்காரத்தனமாகக் கொடுக்கும் போது இன்னும் பரவலான ஈர்ப்பைப் பெறும் என்பது இசைஞானியின் ஒரு அற்புத இசையை மொக்கைப் படத்தில் கைமா பண்ணும் போது ஏற்படும் ஏமாற்றத்துக்கு நிகரானது. கிரேஸி மோகன் வசனங்களுக்கென்றே பொருத்தமான கலைஞர்கள் வாழ்க்கைப்பட்டு விட்டார்கள்.
தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்போர் கிரேஸி மோகன் போன்ற ஆளுமைகளையும் அவரால் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் ரசிகர்களையும் தெரிந்திராதவராக இருப்பர்.
கிரேஸி மோகனின் சினிமாப் பதிவுகளைத் தொகுக்க எண்ணி நண்பர்களை இணைத்து கிரேஸி மோகன் சினிமாப்பக்கம் http://crazymohanincinema.wordpress.com என்ற தளத்தை ஒரு வருடம் முன்னர் உருவாக்கியிருந்தேன்.
இன்று பிறந்த நாள் காணும் கிரேஸி மோகனுக்கு கடைக்கோடி ரசிகனாக என் வாழ்த்துகளைத் தெரிவித்து மன நிறைவு கொள்கிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்

இன்று அக்டோபர் 1 ஆம் திகதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த தினமாகும். எனவே ஒரு சிறப்புத் தொகுப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் தொகுப்பை YouTube தொகுப்பாக இங்கே பகிர்கின்றேன்.

தொகுப்பில் இடம்பெறும் படங்கள்
நான் வாழ வைப்பேன்
தீபம்
பட்டாக்கத்தி பைரவன்
தியாகம்
கவரிமான்
நல்லதொரு குடும்பம்
ரிஷிமூலம்
வெள்ளை ரோஜா
எழுதாத சட்டங்கள்
ரிஷிமூலம்
வாழ்க்கை
படிக்காதவன்
சாதனை
தாய்க்கு ஒரு தாலாட்டு
ஜல்லிக்கட்டு
முதல் மரியாதை
நாங்கள்
தேவர் மகன்
ஒரு யாத்ரா மொழி (மலையாளம்)

பி.கு கிருஷ்ணன் வந்தான், படிக்காத பண்ணையார் போன்ற படங்களிலும் இளையராஜா இசை இடம்பெற்றாலும் பொருத்தமான பாடல்களைப் பகிர இயலவில்லை.

இந்தப் பகிர்வின் முகப்புப் புகைப்படம் நன்றி www.chakpak.com
இந்தப் பகிர்விற்குப் பாடல் தோடியபோது கைக்கெட்ட உதவிய YouTube இல் பகிர்ந்திட்டவர்களுக்கும் நன்றி

பாடல் தந்த சுகம் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

சினிமா உலகில் அதிக வெளிச்சம் படாத இயக்குநர் சின்னத்திரையில் சாதித்துக் காட்டுவது உண்டு. இவ்வகையான இயக்குநர்களில் முன்னோடி என்று  சுந்தர் கே.விஜயனைக் குறிப்பிடலாம். இவரின் தந்தை புகழ்பெற்ற இயக்குநர் கே.விஜயன். தயாரிப்பாளர் நடிகர் கே.பாலாஜியின் திரைப்படங்கள் பெரும்பாலும் கே.விஜயனின் இயக்கத்திலேயே இருப்பதுண்டு. தந்தை வழியில் தனயன் சுந்தர் கே.விஜயனும் “ரேவதி” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். 
சுந்தர் கே.விஜயன் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படம் “என் அருகில் நீ இருந்தால்” அந்தப் படத்தின் பாடல்களைக் காட்சிகளைத் தவிர்த்து இசையை மட்டும் கேட்டுப் பாருங்கள். அருமையான இசைப் பெட்டகம் அது.
ரேவதி என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த படம் “வெளிச்சம்”. இந்தப் படத்துக்கு இசை வழங்கிய மனோஜ் கியான் இரட்டையர்கள் அப்போது ஊமை விழிகள் திரைப்படத்தின் வாயிலாகப் பரவலாக அறிமுகமாகியிருந்தார்கள். இளையராஜா காலத்தில் சந்திரபோஸ் இற்கு அடுத்து அதிகம் அறியப்பட்ட இசையமைப்பளார்களாக எண்பதுகளின் இறுதியில் மனோஜ் கியான் இரட்டையர்களின் பங்களிப்பு சிறப்பானது. குறிப்பாக இவர்கள் இசையமைத்த “வெளிச்சம்” திரைப்படம் மற்றைய படங்களைப் போலப் பரவலாக அறியப்படாத படம் என்றாலும் என் பார்வையில் இந்தப் படத்துக்கு இவர்கள் தந்த இசை மற்றைய படங்களை விடத் தனித்துவமாக நிற்கும். குறிப்பாக இரண்டு பாடல்களில் ஒன்று “ஓ மை டியர் ஐ லவ் யூ” பாடலை டாக்டர் கல்யாண், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல்களில் கேட்டுப்பாருங்கள் ஒரு பாடலில்  இரண்டு விதமான தளங்களில் பயணப்படும் முக்கோணக் காதலை அழகாகக் கொடுத்திருக்கும். http://songs.shakthi.fm/ta/Velicham_www.shakthi.fm/shakthi.FM%20%20-%20%20My%20Dear.mp3
வெளிச்சம் படத்தில் வரும் “துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே” பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். அந்தக்காலத்துச் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம் வாயிலாக எனக்கு அறிமுகமான பாடலிது. கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் இளையராஜாவுக்குக் கொடுத்தது மட்டுமன்றி ரவீந்திரன் (உதாரணம் ஏழிசை கீதமே, பாடி அழைத்தேன்), சந்திரபோஸ் (சந்தோஷம் காணாத வாழ்வுண்டா) வரிசையில் மனோஜ் கியானுக்காகப் பாடிய பாடல்களைத் தேடிக் கேட்பதே சுகம். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் இன் குரலுக்குக் கிடைத்த இன்னொரு பரிமாணம் துலங்கும்.
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாடலில் இழைத்திருக்கும் மெல்லிசையும், வைரமுத்துவின் அழகிய வரிகளும், ஜேசுதாஸ் இன் குரலும் சேர்ந்து கிட்டிய இந்த அழகிய பாடலை இரவு நேரத்தில் கேட்கும் போது அது தரும் சுகமே தனி.
பாடலை YouTube channel இல் காண 
http://www.youtube.com/watch?v=GyJlJXiS8u4&sns=em

பாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ

“இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முன்பொரு சூப்பர் சிங்கர் மேடையில் “விழிகள் மீனோ மொழிகள் தேனோ” பாடலை ஒரு போட்டியாளர் பாடி முடித்ததும் சொல்லியிருந்தார்.

ஒரு வருடம் கழித்து மீண்டும் சூப்பர் சிங்கர் மேடை, இது சின்னஞ் சிறாருக்கானது அங்கேயும் இதே பாடல் வந்திருக்கிறது நேற்று. சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் பிரபலமான குழந்தை ஸ்பூர்த்தி பாடிய விதம் மீண்டும் சிறப்பு விருந்தினராக வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைப் பனிக்கச் செய்திருக்கின்றது. ஸ்பூர்த்தி இந்தப் பாடலை ஆரம்பத்தில் எடுத்த விதம் மாறுதலாக இருந்தாலும் பின்னர் பாடலின் ஜீவனோடு பயணித்து முக்கியமாக அந்த ஆலாபனைகளில் சிறப்பாகப் பாடியிருந்தார்.

“விழிகள் மீனோ மொழிகள் தேனோ” ராகங்கள் மாறுவதில்லை என்ற திரைப்படத்திற்காக பாடலாசிரியர் வைரமுத்து வரிகளில், இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியிருந்தார். எண்பதுகளின் முற்பகுதியில் வெளிவந்த இந்தப் படத்தின் பாடலை அப்போது என் அண்ணன் இயக்கிக் கேட்ட எல்.பி ரெக்கார்ட்  வழியாக என் காதுகளுக்குக் கடத்தியது.  அப்போதெல்லாம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை இனம் காணும் அளவுக்கு அறிவிருந்தாலும் இந்தப் பாடலை ஏனோ  பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் குரலோடு பொருத்தியே மனம் ஒப்புவித்தது.
எப்படி “உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை” என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் குரலுக்குப் பதிலாக ஜெயச்சந்திரன் குரலாகப் பலரால் நினைக்க முடிகின்றதோ அது போல
“ஒரு நாள் போதுமான நான் பாட” என்ற திருவிளையாடல் படப் பாடலை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடும் போது மனம் எஸ்.பி.பியாகவே நினைத்து வைத்திருக்கும். அதற்கு எதிர்மாறாக அமைந்திருக்கிறது இந்த “விழிகள் மீனோ மொழிகள் தேனோ” பாடல்.  ஆனால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடினார் என்பதற்கு முத்திரையாக ஒரு சங்கதி வந்து விழும் “அடடா கால்கள் அழகிய வாழை” என்று பாடுமிடத்தில் ஒரு வெட்கப் புன்னகை அதுதான் அக்மார்க் எஸ்.பி.பொ

இந்தப் பாடலின் ஆரம்பமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆலாபனையோடு தான் வாத்தியக் கருவிகளுக்குக் கடத்தும். ஒரு சாஸ்திரீய சங்கீதத்துக்குண்டான வாத்தியக் கோஷ்டியாக புல்லாங்குழல், மிருதங்கம் எல்லாம் அணி செய்தாலும் மிக முக்கியமாக வயலின் வாத்தியப் பயன்பாடு வெகு உச்சமானது இந்தப் பாடலில். குறிப்பாக 1.14 நிமிடத்தில் வயலின் தனித்து நின்று சிறப்புச் சேர்க்க விட்டேனா பார் என்பது போல புல்லாங்குழலும், மிருதங்கமும் சங்கமிக்கும் போது ஒரு மினி இசை வேள்வியே நடந்து முடிந்திருக்கும்.

இம்மாதியான  எண்பதுகளின் ஆரம்பத்தில் கொஞ்சம் சாஸ்திரீய சங்கீதப் பின்னணி கொண்ட பாடல்கள் பலவற்றுக்கு வார்த்தைகளால் அணி செய்திருக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.
இந்தப் பாடல் கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்த அழகிய பாடலை தன்னுடைய மற்றைய பாடல்கள் போல அதிகம் சிலாகித்துப் பேசவில்லை ஆனால் இந்தப் பாடலின் மகத்துவம் இன்னும் சிறப்பானது. “சலங்கை ஒலி”க்கு நிகரானது.
 பாடல் வரிகளுக்குப் பின்னான ஜதிகளை மேலதிகமாகச் சேர்த்த கைங்கர்யம் ராஜாவுடையதாக இருக்கலாம்.
இந்த மாதிரியான பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டி வாழும் என்பதற்கு 31 வருடங்கள் கழித்து ஸ்பூர்த்தி மெய்ப்பித்திருக்கிறாள்.

விழிகள் மீனோ மொழிகள் தேனோ மூலப்பாடல்

சூப்பர் சிங்கரில்  ஸ்பூர்த்தி பாடியது

முகப்புப் படம் நன்றி: http://www.tamilnow.com

மாண்டலின் ஶ்ரீநிவாஸ் நினைவில்

போன ஜூன் மாசம் தான் சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்து போனவர் இப்படித் தன் 45 வது வயதில் திடீரென்று நம்மைவிட்டு மறைவார் என்று யார்தான் நினைத்திருப்பார்கள். சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்த கலைஞர்களை வானொலிப் பேட்டி காணும் சந்தர்ப்பம் வாய்த்த போது மாண்டலின் ஶ்ரீநிவாஸ் ஐ வானொலிப் பேட்டியெடுக்கவே பெரிதும் முனைந்தேன். ஆனால் அவரின் வருகை விழாவுக்கு முந்திய நாள் என்பதாலும் வேறு சில தனிப்பட்ட காரணங்களாலும் பேட்டி தவிர்க்கப்படவே, அடுத்தமுறை வருவார் தானே என்று காத்திருந்தேன்.

மிக இளவயதிலேயே சாதித்துக் காட்டியதாலோ என்னமோ சீக்கிரமே நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டார் என்ற பேரதிர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை.
மாண்டலின் ஶ்ரீநிவாஸ் என்ற ஆளுமை 90 களின் ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட போது அப்போது சினிமா இசையைத் தவிர வேறெதையும் தொடாத என்னைக் கேட்க வைத்தது அவரின் வாத்திய இசைத் தொகுப்பு ஒன்று. கொழும்பின் பம்பலப்பிட்டி கிறீன்லாண்ட்ஸ் ஹோட்டலில் தூசு படிந்த ஒலி நாடாவை வாங்கி வந்து போட்டுக் கேட்ட நினைவுகள் இன்னும் என் மனக்கிணற்றில் தேங்கியிருக்கின்றன.
இளையராஜாவோடு சேர்ந்து  இவர் பணியாற்றிய அந்தச் சிறப்பு அனுபவங்களையும் பேட்டி வழியாகத் தேக்கி வைக்க நினைத்திருந்தேன்.
மாண்டலின் இசையை நம் வானொலி நிகழ்ச்சிகளில் மன அமைதியைத் தரும் பகிர்வுகளுக்குப் பின்னணி இசையாய் ஒலிக்கவிட்டுக் கொடுப்போம். இனிமேல் அது ஒலிக்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகமே வெளிக்கிளம்பிச் சஞ்சலப்படுத்தும். 

இசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா

இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை “தெளிவான” சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். அதற்கு முன்னரே ஈழத்தின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை

“எல்லார்க்கும் விருந்தளித்து 
ஏற்றம் பெற்ற எங்கள் இனம்
மரணதேவதையின் கோரப்பசிக்கு 
விருந்து கொடுத்த பின்
அங்கே இப்போது அகதியானது”
போன்ற புதுக்கவிதைகள் தாங்கிய “திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்” என்ற தொகுதியில் கொடுத்திருப்பார்.
மு.மேத்தாவின் கவிதைகளை அவரின் “ஊர்வலம்” என்ற கவிதைத் தொகுதியே எனக்கு அறிமுகப்படுத்தியது. பின்னர் அவளுக்கு ஒரு கடிதம், நடந்த நாடகங்கள், முகத்துக்கு முகம், அவர்கள் வருகிறார்கள், கண்ணீர்ப்பூக்கள், வெளிச்சம் வெளியே இல்லை, நந்தவன நாட்கள், மு.மேத்தா முன்னுரைகள், மு.மேத்தா திரையிசைப்பாடல்கள் என்று வாங்கிக் குவித்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் “காதலர் கீதங்கள்” என்ற வானொலித் தொகுப்பைத் தயாரித்து வழங்கியபோது வெறுமனே காதல் பாடல்களை மட்டும் சேர்த்து இட்டு நிரப்பாமல், பின்னணி இசையோடு அவரின் கவிதைத் தொகுதிகளில் இருந்து இரண்டடி வரிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு அதற்கேற்ற சூழலுக்குப் பொருந்துமாற்போலப் பாடல்களை இணைத்துக் கொடுத்தேன். அந்தப் படைப்பு நேயர்களைக் கவரவே பின்னர் தாங்களும் ஈரடிக் கவிதையோடு பாடல்களை இணைத்து வானொலிப் பிரதியாக அனுப்பி நிகழ்ச்சி தயாரிக்க வைத்தார்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இந்த நிகழ்ச்சியைச் செய்தேன்.

மு.மேத்தாவின் புதுக்கவிதைகளை நடிகர் முரளியின் ஏக்கம் கலந்த தொனியில் அந்தக் காதலன் உள்ளக்கிடக்கையாகக் கொடுத்த இதயம் படம் சிறப்பானது.அந்த ஒலிப்பகிர்வுகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.
http://www.radiospathy.com/2011/02/www-www.html
கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் உள்ளிட்ட வெற்றிகரமான திரையிசைப்பாடலாசிரியர்கள் தம் திரையிசை அனுபவங்கள், பாடல் பிறந்த கதைகளை நூலுருவில் கொடுத்தது போன்றே மு.மேத்தா அவர்களும் தனது திரையிசைப்பாடல்கள் நூலில் தன் ஆரம்பகாலப் படங்களின் பாடல்கள் உருவான சுவையான பின்னணி மற்றும் காட்சிக்குப் பொருந்திய பாடல் வரிகளின் நியாயத்தை எல்லாம் நிறுவியிருப்பார். அத்தோடு பிரபல வானொலி, தொலைக்காட்சிப் படைப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீத் அவர்கள், கலைஞர் தொலைக்காட்சியில் படைத்த இன்னிசை மழை என்ற நிகழ்ச்சியிலும் மு.மேத்தாவின் பாடல் அனுபவங்கள் சிறப்பாகப் பதிவாகியிருக்கின்றன.
“அனிச்ச மலர்” என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் அறிமுகமான மு.மேத்தாவுக்கு “ஆகாய கங்கை” என்ற இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த படத்தின் “தேனருவியில் நனைந்திடும்” http://www.youtube.com/watch?v=lrCmn2WdRSE&sns=em என்ற பாடலே அதிக புகழைக் கொடுத்தது. அந்தப் பாடல் வாய்ப்பை மு.மேத்தாவின் நண்பர் கமல்ஹாசனே பெற்றுக் கொடுக்கக் காரணமாக அமைந்தாராம்.
தொடர்ந்து இதய கோவில் படத்தில் இடம்பெற்ற “யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ”   http://www.youtube.com/watch?v=jRCh-b-a334&sns=em 
நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் இடம்பிடித்த “பெண்மானே சங்கீதம் பாடிவா”  http://www.youtube.com/watch?v=Dj-cimDzqoY&sns=em 
சொல்ல துடிக்குது மனசு படத்தில் வந்த “வாயக்கட்டி வயித்தக் கட்டி” 
http://www.youtube.com/watch?v=JVOdYtytRNk&sns=em
என் புருஷன் எனக்கு மட்டும் தான் படத்தில் வந்த “மனதில் ஒரே ஒரு பூப்பூத்தது” 
http://www.youtube.com/watch?v=Q2VC0QoqHoc&sns=em
கோடை மழை படத்தில் இடம்பெற்ற “பல பல பல பல குருவி” http://www.youtube.com/watch?v=qWyuY1UQyjU&sns=em
போன்ற இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரர் மு.மேத்தா. 
உதய கீதம் படத்தில் வந்த “பாடு நிலாவே தேன் கவிதை” http://www.youtube.com/watch?v=nrTKUhNQaWg&sns=em பாடலை நாயகி பாடுவது போல் ஆரம்பித்து நாயகனும் இணையும் வேளை நாயகனும் பாடு நிலாவே என்று பாடுவது பொருந்தாது ஏனென்றால் அவன் மூடிய சிறைக்குள் இருந்து அவளின் குரல்கேட்டுப் பாடுகிறானே எனவே “பாடும் நிலாவே” என்று மாற்றி பாடல் வரிகளில் நுணுக்கம் இருக்க வேண்டிய தேவையைச் சுட்டினாராம் இளையராஜா.
“ராஜராஜ சோழன் நான்” http://www.youtube.com/watch?v=7f1kEtA-xRM&sns=em என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலே மு.மேத்தாவைப் பரவலாகக் கொண்டு சேர்த்த இனிய பாடல். அந்தப் பாடல் ஒன்றே போதும் மு.மேத்தாவின் கவிச்சிறப்பைத் திரையில் காட்ட. 
வேலைக்காரன் படத்தின் படக்குழு இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் வட நாட்டுக்குச் சென்றுவிட, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா சார்பில் இயக்குனர் கே.பாலசந்தரே ஒவ்வொரு பாடலுக்குமான கதைக்களனைச் சொல்லி மு.மேத்தாவை அனைத்துப் பாடல்களையும் எழுத வைத்து, இசைஞானி இளையராஜா இசையில் கொண்டுவந்தது ஒரு புதுமை. “தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்” என்று சமூக சிந்தனையை “வா வா வா கண்ணா வா” காதல் பாடலில் புகுத்தியிருப்பார் மு.மேத்தா.
தன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுகின்றார்.
“தென்றல் வரும் தெரு” http://www.youtube.com/watch?v=oeN1fVS-Psg&sns=em என்று சிறையில் சில ராகங்கள் படத்துக்குப் பாடல் எழுதினேன்.
இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.
நான் தயாரித்த “தென்றல் வரும் தெரு” திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.
இரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. “தென்றல் வரும் தெரு அது நீ தானே” என்ற பாடல் வரிகளை முதல் அடியாகக் கொண்டு “சிறையில் சில ராகங்கள்” திரைப்படம் 1990 இல் வெளியானது. அது நடிகர் முரளி, பல்லவி நடிப்பில் வெளியானது.அடிகள் பயன்பட்ட மு.மேத்தாவின் தயாரிப்பில் வந்த “தென்றல் வரும் தெரு” ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடிப்பில் வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து 1994 இல் தான் படம் வந்தது.
இந்தப் படத்திலும் தென்றல் வரும் தெரு http://www.youtube.com/watch?v=ZvtCLpjMnvw&sns=em என்று இன்னொரு பாடலை எழுதியிருப்பார் மு.மேத்தா.
மு.மேத்தாவின் திரையிசைப் பயணத்தில் இப்படிக் கிட்டிய எண்ணற்ற முத்துகள் ஏராளம்.
இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணிபுரியும் பாடலாசிரியர்களில் வாலிக்குப் பின்னர் இன்னமும் தொடர்ந்து சேர்ந்திசையாகப் பயணிக்க்கும் கவிஞர் மு.மேத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.