கத்ரி கோபால்நாத்

நான் பாடும் சந்தம்

வார்த்தை உன் சொந்தம்

குரல் வேறு ஆனாலும்

பொருள் ஒன்று அல்லவா

எல்லாமே நம் வாழ்வில்

இரண்டாக உள்ளது

காலம் ஒரு டூயட்

அதிலே இரவு பகல்

இரண்டும் உண்டு……

எஸ்.பி.பி பாடி முடித்து அப்படியே அதை ஏந்தும் சாக்ஸபோன் குழலிசை வாசிப்பு ஒரு நிமிடம் 30 விநாடிகளைத் தொடும் நிறைவு வரை கண் மூடி மோன நிலையில் இருப்பேன். அது வானொலி நிலையத்தில் இருந்தவாறே ஒலிபரப்பினாலோ அன்றித் தனியே இந்தப் பாடலை எனக்கு மட்டுமே கேட்கும் தொலைவில் வைத்திருந்தாலோ இத்தகு தியான நிலைக்கு இட்டுச் சென்று விடும் இந்த வாத்தியக் கட்டின் வாசிப்பு.

டூயட் படம் சாக்ஸபோன் வாத்தியத்தை முன்னுறுத்திய படைப்பு. இதற்கு முன்னரும் பின்னரும் கூடத் திரைப் படைப்புகள் குறித்தவொரு இந்தியப் பாரம்பரிய இசை தழுவிய செவ்வியல் வாத்தியத்தையோ அன்றி மேற்கத்தேய வாத்தியத்தையோ முக்கியத்துவப்படுத்தி வந்திருந்தாலும் இங்கே இது நாள் வரை நமக்குப் புதுமையாக இருந்த வெள்ளைக்கார வாத்தியம் சாஸ்திரிய சங்கீதத்தையும் பாடுகிறதே என்ற ஆச்சரியம் தான் டூயட் படப் பாடல்கள் வெளி வந்த காலத்தில் எழுந்தது. வேடிக்கை என்னவென்றால் இது மாதிரி புதுசு புதுசாகக் கேட்க வேண்டும் என்று மாண்டலின் ஶ்ரீனிவாசின் வாத்திய இசை ஒலிநாடாவை எல்லாம் வாங்கி வைத்துக் கேட்டது என் சக நண்பர்கள் அனுபவத்தில் இதுவே தொடக்கம் எனலாம்.

“டூயட் படத்துக்கு சாக்ஸபோன் வாசிச்சத்து ஒருத்தர் அல்ல, இருவர். ஒருத்தர் நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான கத்ரி கோபால்நாத், இன்னொருவர் இதோ இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ராஜூ” என்று அறிமுகப்படுத்தினார் பல்லாண்டுகளுக்கு முன் ஜெயா டிவியில் “என்னோடு பாட்டுப் பாடுங்கள்” நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். ஆனால் டூயட் பாடல்கள் வந்த நாள் முதல் இன்று வரைக்கும் கத்ரி கோபால்நாத் அவர்களுக்குக் கிடைத்த வெகுஜன அங்கீகாரம் சொல்லி மாளாது. ஒரு தீவிர இலக்கியக்காரன் வணிக சஞ்சிகை வழியாகக் கடைக்கோடி வாசகனை அடைவது மாதிரியானதொரு புகழ் இது. கத்ரி கோபால்நாத் என்ன மகோன்னதம் பொருந்த கலைஞருக்கும் அப்படியே.

வாத்தியக்காரரை அவரின் போக்கில் வாசிக்க விடடு அதில் தனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வார் ரஹ்மான் என்று கடம் வித்துவான் விக்கு விநாயக்ராம் சொன்னதையே புல்லாங்குழல் நவீனும் சொல்லியிருக்கிறார். இதே மாதிரி ஒரு அனுபவத்தோடே ரஹ்மானுடன் கத்ரி கோபால்நாத் கூட இணைய முடிந்தது.

ஒரு வாத்தியத்தை நினைக்கும் போது அதில் சாகித்தியம் பண்ணியவரே முன்னுக்கு நினைவில் வருமளவுக்கு ஒருவர் தன்னைத் தக்க வைப்பது எப்பேர்ப்பட்ட வெற்றி. விருதுகள் எல்லாம் அப்புறம் தான்.

என்னய்யா இது 69 எல்லாம் சாகிற வயசா என்று இன்று எத்தனை பேர் மனதில் கவலையோடு கேள்வி எழுந்திருக்கும். ஆனால் வழக்கமான எழுத்துச் சம்பிரதாயத்தைத் தாண்டி கத்ரி கோபால்நாத்

அந்த ஊது குழலின் காற்றாய் இருப்பார்.

வாழ்க்கை ஒரு டூயட்

அதிலே இன்ப துன்பம்

இரண்டும் உண்டு……

மரகதமணி என்ற கீரவாணி ?

கே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்டில்.

ஒரு பக்கம் கே.பாலசந்தர் இயக்க “வானமே எல்லை” திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகிறார் இசையமைப்பாளர் மரகதமணி. இன்னொரு பக்கம் தன்னுடைய சிஷ்யர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் “அண்ணாமலை” அதற்கு இசை தேவா, இவற்றௌத் தாண்டி புது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கிய ரோஜா என்று மூன்றும் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் சார்பில் தயாரித்து வெளியாகி, மூன்றுமே அதிரி புதிரி வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுக்கின்றன.
இதுவே கே.பாலசந்தரின் திரைப்பயணத்தில் கிடைத்த இறுதி வெற்றி கூட. அதற்குப் பின் அப்படியொரு வெற்றியை அவரால் ஈட்ட முடியாவிட்டாலும் இந்த மூன்று படங்களில் இயங்கிய இசையமைப்பாளர்கள் தொடர்ந்து தமித் திரையிசையின் போக்கைத் தீர்மானிக்க முக்கிய காரணிகளாக அமைந்தார்கள். இவர்களில் எம்.எம்.கீரவாணி என்று தெலுங்கிலும், மரகதமணி என்று தமிழிலும், எம்.எம்.கரீம் என்று ஹிந்தியிலுமாக இன்றுவரை வெற்றிகரமான இசையமைப்பாளராக விளங்கி வருபவரின் அடையாளம் தனித்துவமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

கவிதாலயா நிறுவனத்தின் சார்பில் புதுப்புது அர்த்தங்கள் படத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தைக் கவனித்த கே.பாலசந்தர், படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவை விடுத்துத் தன்னிச்சையாக மரகதமணியை வைத்தே படத்தின் பின்னணி இசையை அப்படத்தின் பாடல்களின் இசைத் துணுக்குகளை வைத்தே ஒப்பேற்றி விடுகிறார். அதில் எழுந்த விரிசலால் தொடர்ந்து இருவரும் இயங்க முடியாத சூழலில் கவிதாலயா தயாரிப்பில் இதுவரை வெளியான இறுதிப்படமாக அமீர்ஜான் இயக்கிய “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை” விளங்குகிறது.

தொடர்ந்து கே.பாலசந்தர் “அழகன்” படத்தை இயக்கிய போது மம்முட்டியும் மூன்று நாயகிகளுமாக அமைந்த அழகிய காதல் சித்திரம் “அழகன்” படத்தின் பாடல்கள் அனைத்துமே தேன் சுவை. அதுவும் “தத்தித்தோம்” என்ற சித்ரா பாடும் பாட்டு தமிழ்த்திரையிசைப் பாடல்களில் மேற்கத்தேய வாத்தியம் ஒன்றோடு போட்டி போட்டுப் பாடும் மிகச் சில பாடல்களில் இதுவும் ஒன்று. இன்றுவரை காதலர் கீதமாக விழங்கும் “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா” வைத் தனியே சொல்லவும் வேண்டுமா?

அதே சம காலத்தில் கேளடி கண்மணி பட வெற்றியைத் தொடர்ந்து பாலசந்தரின் சிஷ்யர் வஸந்த் கவிதாலயாவுக்காக இயக்கிய படம் “நீ பாதி நான் பாதி” இங்கும் மரகதமணி தான் இசை. இந்தத் திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “நிவேதா” என்ற பாடல் வெறும் ஸ்வரங்களோடு மட்டும் இசைக்கப்பட்ட பாடலாகப் புதுமை படைத்தது.

தொடர்ந்து “வானமே எல்லை” தமிழ்த்திரையுலகப் பிரபலங்களின் வாரிசுக்களை நாயகர்களாக்கி வந்த அந்தத் திரைப்படத்தில் நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, கண்ணதாசன் மகள் விசாலி, மேஜர் சுந்தரராஜன் மகன் கெளதம் போன்றோர் நடித்திருந்தனர். அண்ணாமலை படப் பாடல்கள் ஒரு பக்கம், மறு பக்கம் வானமே எல்லை பாடல்கள் என்று அப்போது ஒலிநாடாக்கள் விற்ற போது அண்ணாமலை வழியாகப் பரந்து பட்ட விளம்பரம் வானமே எல்லை இசையமைப்பாளர் மரகதமணிக்கும் கிட்டுகிறது.
‪நீ ஆண்டவனா, சிறகில்லை, நாடோடி மன்னர்களே என்று எதை எடுக்க எதை விட?‬

கம்பங்காடு பாட்டு வழியாக மரகதமணியின் குரலும் சேர, தமிழில் கம்பியூட்டரைக் காட்சிப்படுத்தி எடுத்த முதல் காதல் பாட்டு என்ற பெருமை வேறு. இந்தக் காட்சி தான் இன்றைய யுகத்தின் Video chat இன் முன்னோடி.

இந்து முஸ்லீம் கலவரப் பின்னணியில் இம்முறை பாலசந்தர் மலையாள நடிகர் முகேஷ் மற்றும் குஷ்புவை வைத்து ஜாதி மல்லி படத்தை இயக்கும் தருணம் அங்கேயும் மரகதமணியின் இசையில் குறை வைக்காத பாடல்களாக இனிக்கின்றன. கம்பன் எங்கு போனான் ஹிட்டடித்தது.

அப்போது ஏவிஎம் ‪நிறுவனமும் தன் பங்குக்கு பாட்டொன்று கேட்டேன் படத்தில் மரகதமணியை ஒப்பந்தம் செய்து தம் ஆஸ்தான இயக்குநர் வி.சி.குக நாதனைக் கொண்டு இயக்கினார்கள். ரகுமான் – சித்தாரா என்ற அப்போதைய புகழ்பூத்த ஜோடி இருந்தும் எடுபடாமல் போன அந்தப் படத்தில் பாட்டொன்று கேட்டேன் பாட்டு அப்போதைய சென்னை வானொலியின் உங்கள் விருப்பம் ஆனது.‬

‪இன்னொரு பக்கம் மரகதமணியின் தெகுங்குப் படங்கள் வரிசை கட்டி வந்தன. ஓட்ட வீராங்கனை அஸ்வினி நாச்சப்பாவின் நடிப்பில் “அஸ்வினி” மெளலி இயக்கி ஹிட் அடித்த படம், ஶ்ரீதேவியின் மொழி மாற்றுப் படமான ராம்கோபால்வர்மா இயக்கிய “என்னமோ நடக்குது” என்று வரிசையாகத் தமிழுக்கு வந்தன.‬

தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப்படமாக அமைந்த டாக்டர் ராஜசேகரின் நடிப்பில் வந்த திரைப்படமான “அல்லாரி பிரியுடு” , தமிழில் “யாருக்கு மாப்பிள்ளை யாரோ” என்று மொழிமாற்றப்பட்டபோது அருமையான பாடல்களை இவர் தமிழில் மொழிமாற்றித் தந்திருந்தார். 
இலங்கையில் பண்பலை வானொலிகளின் ஆரம்ப காலத்தில் அவற்றுக்குத் தீனி கொடுத்த பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து தான். பின்னாளில் என் வானொலி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி நான் ஒலிபரப்பினேன். அந்த வகையில்
“அன்னமா உன் பேர் என்பது அன்னமா” 
https://youtu.be/92Ry6OZkaT8 
அட்டகாஷ் காதல் பாட்டு எஸ்.பி.பி அதைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகத் தனித்தனி வடிவத்தில் கொடுத்திருப்பார்.
“ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே” 
https://youtu.be/edyDaJtnaO8 
தமிழிலும் தெலுங்கிலும் காதலர்கள் நெஞ்சில் ஹிட் அடிச்ச எஸ்.பி.பி & சித்ரா ஜோடிப் பாட்டு.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “அன்னமா! உன் பேர் என்பது அன்னமா?” மரகதமணி/M.M. கீரவாணி இசையமைத்த பாடல்களிலேயே எனக்குப் பிடித்தமான பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இதுவே.

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை ஸ்ரீதேவி , அரவிந்த் சாமியுடன் இணைந்து மலையாள இயக்குனர் பரதனின் இயக்கத்தில் “தேவராகம்” திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே காதில் தேன் வந்து பாயும் இனிமை கொண்டவை. அந்தத் திரைப்படத்தில் இருந்து ” சின்ன சின்ன மேகம் என்ன கவிதை பாடுமோ”, “யா யா யா யாதவா உன்னை அறிவேன்”ஆகிய ஜோடிப் பாடல்கள் இன்றும் இனிக்கும்.

எம்.எம்.கீரவாணிக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைக் கொடுத்தது “அன்னமய்யா” என்ற தெலுங்குப்படம். நாகர்ஜீனா நடிப்பில் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது இத்திரைப்படம்.

நடிகர் அர்ஜூன் ஐ ஆக்‌ஷன் கிங் என்ற எல்லைக்குள் மட்டும் அடக்கி விட முடியாது. அவர் காலத்துக்குக் காலம் பல இசையமைப்பாளர்களைக் கை தூக்கி விட்டிருக்கிறார். அந்தப் பாரம்பரியம் மரகதமணி, வித்யாசாகர், டி.இமான் என்று தொடரும்.
நடிகர் அர்ஜூனுக்கு வாழ்வு கொடுத்த படம் அவரே ரிஸ்க் எடுத்து இயக்கிய சேவகன். இதற்கு மரகதமணி தான் இசை. “நன்றி சொல்லிப் பாடுவேன்” பாடல் வெகு ஜன அந்தஸ்த்தைப் பெற்றதோடு சேவகன் வெற்றியிலும் பங்கு போட்டது. 
தொடர்ந்து அர்ஜூன் இயக்கிய பிரதாப் படத்திலும் ஜோடி கட்டினார் மரகதமணி. “மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா” அப்போது A ரகப் பாட்டு ரசிகர்களுக்குத் தீனி போட்டது. ஆனாலும் “என் கண்ணனுக்கு காதல் வந்தனம்” பாடலில் தன் இசையில் மரகதம் பொருந்தியிருப்பதை நிரூபித்தார்.
அர்ஜூன் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 
கொண்டாட்டம் படத்தில் நடித்த போதும் மரகதமணி இசை ஜோடி சேர்ந்தார். கொண்டாட்டத்தில் “உன்னோடு தான் கனாவிலே” மரகதமணியின் பேர் சொல்லும் பாட்டு.

இன்று பாகுபலி வரை உச்சம் கண்ட மரகதமணியின் பாடல்கள் குறித்து ஆழ அகலமாக நீண்ட தொடர் எழுத வேண்டும். இன்று அவரின் பிறந்த நாளில் ஒரு பொழிப்புரை போல அந்த இனிய தொண்ணூறுகளில் இசை வசந்தம் படைத்த அவர் பாடல்களோடு வாழ்த்துகிறேன்.

? இசையமைப்பாளர் செளந்தர்யன் ?

“ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்கே பச்ச நரம்பு” 
இன்று சமூக வலைத்தளங்களைத் தெறிக்க விடும் பாட்டு. 
விஜய் தொலைக்காட்சி நகைச்சுவை நட்சத்திரம் ராமர் 25 வருடங்களுக்குப் பின்பு தன்னுடைய நையாண்டிக்குப் பயன்படுத்திய பின்னர் தான் இப்படியொரு பாட்டை அறிந்து மூலப் பாட்டைத் தேடிப் போய் YouTube இல் பார்க்கும் மக்களும் இருக்கிறார்கள். அதற்கு YouTube இல் குறித்த பாடலுக்கு வரும் பின்னூட்டங்களே சாட்சி. இந்த மாதிரி ஒரு மீள் அறிமுகம் கிட்டியதும் ஹிப் ஹாப் தமிழா தன்னுடைய நட்பே துணை படத்துக்காக மீள் கலவை ஆக்கி அறுவடை செய்து விட்டார். இதற்கெல்லாம் ஆதியும் அந்தமுமான இசையமைப்பாளர் செளந்தர்யன் தான் பாடலின் ஆக்க கர்த்தா என்பதைச் சொல்லி வைத்துக் கொண்டே இந்தப் பகிர்வையும் கொடுக்க வேண்டியிருக்கிறது.

“காதல்…..கடிதம்….வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா…..” ஞாயிறு தோறும் சென்னை வானொலியில் வலம் வந்த உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் அசரீரி போல் தொடங்கும் இந்தப் பாடலின் ஆரம்ப அடிகளைக் கேட்ட பரவசம் இன்னமும் மனதில் இருக்கிறது. யாரடா இது இளையராஜா மாதிரி ஒரு நேர்த்தியானதொரு பாட்டை கேட்ட மாத்திரத்தில் எடுத்த எடுப்பிலேயே கவர வைத்தது என்ற ஆச்சரியத்துடன் தான் அப்போது செளந்தர்யன் எங்களுக்கெல்லாம் அறிமுகமானார்.

இசையமைப்பாளர் செளந்தர்யன் இசைத்துறைக்கு வந்ததே இன்பமானதொரு விபத்துத்த்தான். இயக்குநராக எண்ணிக் கதை சொல்ல சூப்பர் குட்ஸ் ஆர்.பி.செளத்ரியிடம் போனவர், கூடவே கே.எஸ்.ரவிகுமாரையும் சந்திக்க வேண்டி வருகிறது. தான் கொண்டு போன கதையைச் சொல்லிக் கொண்டே இடையிடையே காட்சிகளுக்கேற்ப தானே மெட்டுக் கட்டித் தாளம் போட்டுப் பாடியவரைப் பார்த்ததும் “பேசாம என் படத்துக்கு இசையமைப்பாளர் ஆகிடுங்க” என்று கே.எஸ்.ரவிகுமார் சொல்லவும் அப்படியே ஆனவர் தான் இந்த செளந்தர்யன்.

“தன்னேனானே தானேனானே அம்மா….
தன்னேனனே தானே தன்னே தன்னன்னானே…..

ஏ சம்பா நாத்து சரக்காத்து…
மச்சான் சல்லுன்னுதான் வீசுதுங்க அங்கம் பூரா…”

எடுத்த எடுப்பிலேயே தன் அறிமுகப் படத்தை ஒரு ரம்மியமான தெம்மாங்குப் பாடலோடு தொடக்கி வைப்பது எப்பேர்ப்பட்ட வரம். அன்னக்கிளியில் இளையராஜாவுக்கு வாய்த்தது சேரன் பாண்டியனில் செளந்தர்யனுக்குக் கிட்டியது. ஸ்வர்ணலதாவுக்குப் பேர் சொல்லும் ஒரு கிராமியத் தெம்மாங்கு கிட்டியதோடல்லாமல் இன்றும் செளந்தர்யனைச் சிலாகிக்க வைக்கும் பாடலாகவும் அமைந்து விட்டது. வயற்காட்டியில் தோழிமார் பாடும் பாடல் 
தனனானே தனனானே எனும் போது நுணுக்கமாக வரும் நறுக்காக வரும் இசைத் துணுக்கு ஒன்று வருடி விட்டுப் போகும். அது செளந்தர்யன் எவ்வளவு தூரம் நேர்த்தியாகத் தன் இசைப் பணியைக் கவனித்திருக்கிறார் என்பதைக் காட்டும்.

வாய்ப்புக் கிடைத்து விட்டதே என்று வாத்தியங்களை உருட்டி விளையாடாமல் ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கேற்ப தார்ப்பரியம் உணர்ந்து இசை கோத்திருப்பார். பொதுவாகவே இளையராஜாவின் ஆரம்ப காலப் படங்களாகட்டும், தேவாவின் இசையில் வந்த அண்ணாமலை உள்ளிட்ட காலத்து அவரின் தொடக்க காலப் படங்களாகட்டும் ஒலித்தரத்தில் சிறப்பை உணர முடியாது. ஆனால் சேரன் பாண்டியன் படத்தின் ஒலியமைப்பு வெகு நேர்த்தியாக இருக்கும். 
சூப்பர் குட்ஸ் ஆடியோ என்று தமது கம்பெனி பெயரிலேயே ஆர்.பி.செளத்ரி வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதொரு விடயம்.

பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுக காலம் தொட்டே இயங்கிய வகையில் T.ராஜேந்தர், S.A.ராஜ்குமார் வரிசையில் செளந்தனுக்கும் அந்தப் பேறு கிட்டியது. அதை அவர் வெகு சிறப்பாகப் பயன்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.

சேரன் பாண்டியனைப் பொறுத்த வரை பலருக்கு வாழ்வளித்த படம். புது வசந்தம் மூலம் தமிழில் ஒரு திருப்புமுனை வெற்றிப் படத்தைக் கொடுத்த ஆர்.பி.செளத்ரி தொடர்ந்து விக்ரமனையே இயக்க வைத்த பெரும் புள்ளி படம் பெருந்தோல்வி. தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய புரியாத புதிர் படமும் சுமார் ஓட்டம். இன்னொரு பக்கம் சரத்குமார் வில்லத்தனமான பாத்திரங்களில் இருந்து படிப்படியாக உயர்ந்து கொண்டு போக ஒரு கொழு கொம்பு தேவை. இந்த நிலையில் அண்ணன் – தங்கை பாசப் பிணைப்பு, குடும்ப உறவுகளுக்குள் விரிசல் என்ற இன்னொரு பரிமாணத்தில் ஈரோடு செளந்தர் பண்ணிய கதை தான் இவர்கள் எல்லோரையும் உயர்த்த வேண்டிய நிலை.
அதையே சேரன் பாண்டியன் செய்து காட்டியது.
நாட்டாமை படத்துக்கு முன்பே கே.எஸ்.ரவிகுமாரை முதலுக்குப் பாதகமில்லாத இயக்குநர் என்று சேரன் பாண்டியன் அடையாளப்படுத்தியதால் தான் அடுத்த இருபது ஆண்டுகள் கே.எஸ்.ரவிகுமாரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர வழி கோலியது.

அந்த வகையில் செளந்தர்யனுக்குத் திறமை ஒரு பக்கம், அவல் மாதிரி ஒரு குடும்பச் சித்திரம் இன்னொரு பக்கம் அவரின் திறமைக்குத் தீனி போட வாய்த்தது. “தோல உரிச்சுப் போடுவன்” என்ற கொங்குத் தமிழ் கோவக்காரச் சரத்குமாரின் கல் மனசுக்குள்ளும் ஈரம் காட்ட “சின்னத் தங்கம் எந்தன் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது”. இந்தப் பாட்டை இன்னமும் கிராமங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

“காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா” பாடலின் எளிமையான வரிகளே காதலர்களின் கடிதப் பரிமாற்றம் போல இருக்கும். https://youtu.be/GaZDYdiWSCU
லாப்சன் ராஜ்குமார் – ஸ்வர்ணலதா ஜோடி எப்படி அமைந்ததோ தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடலுக்கேற்ற கச்சிதமான காதல் மொழிக் குரல்கள் அவை. 
“உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்”
என்று லாப்சன் பாடும் கணத்தில் காதலில் தோய்ந்து அந்த அறிமுகக் குரல் அந்நியமில்லாது அந்நியோன்யமாக நெஞ்சில் தங்கி இனிக்கும்.

“பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு”
அப்பப்பா பள்ளிக்கால இரட்டை ஜடைக் காதலியின் குரலோ இந்த ஸ்வர்ணக் குரல்.

ஒரு தேர்ந்த ஆட்டக்காரர் ஆனந்த்பாபுக்குக் காதல் சோகத்திலும் ஒரு வேக இசையைப் போட்டு “வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே”. 
https://youtu.be/y-PfZVnR-Tc
இந்தப் பாடலை அந்தக் காலத்து ரெக்கார்டிங் பார்களில் கேட்ட போது ஒலி அதிர்வில் ஸ்பீக்கர்களே துள்ளியதை ரசித்திருக்கிறோம். எஸ்.பி.பி தன் பங்குக்கு காதல் சோகத்தைக் குரலின் வழியே உணர்வைக் கடத்துவார்.

“கண்கள் ஒன்றாகக் கலந்ததா” 
https://youtu.be/plvaJV14PMg
எஸ்.ஏ.ராஜ்குமார்த்தனமான இசையில் மனோ – சித்ரா குழுவினர் பாடியதும் ஹிட்டடித்தது.
ஏழு பாடல் கணக்குக்கு “ஊரு விட்டு ஊரு வந்து ஒத்தையில மாட்டிக்கிட்ட”என்ற எஸ்.பி.சைலஜா குழுவின் குரலும் சேர்ந்து கொண்டது.
மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் “கொடியும் தோரணமும் குங்குமமும் தோரணமும்” மலேசிய வாசுதேவனும், சுனந்தாவும் அரிதாக ஜோடி சேர்ந்த இனிமையானதொரு குழுப்பாடல் என்று செளந்தர்யனுக்கு முதல் படத்திலேயே கிராமியம், குடும்ப செண்டிமெண்ட், இளம் காதலர் கீதம் என்று வித விதமாகக் கொடுக்கக் களம் அமைத்தது சேதஜ் பாண்டியன்.

“காகித ஓடம் கடலலை மீது ஓடமும் போலே போய் வருவோமே” கலைஞர் கருணாநிதி எழுதிய பாடல். கலைஞரின் இலக்கியம் மீது தீவிர வேட்கை கொண்டவர் செளந்தர்யன். அதன் பிரபலிப்பிலேயே அவரின் கவித்துவம் இசையோடு மிளிர்ந்தது. “சின்னத்தங்கம் எந்தன் செல்லத்தங்கம்” 
https://youtu.be/wwGP_Dbx1Q0
பாடலில் காகித ஓடம் பாடலின் தொனி இருக்கும்.

பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு

வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்

உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்…

“முதல் சீதனம்” ஈரோடு செளந்தர் முதன் முதலாக கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளோடு இயக்குநராகவும் அறிமுகமான படம். ஆம்னி ஆக முன்னர் மீனாட்சி, ஈரமான ரோஜாவே சிவாவுடன் இணைந்த படம்.

சேரன் பாண்டியன் படத்தின் வெற்றிக்குப் பின் சூப்பர் குட் பிலிம்ஸ் இன் ராசியான கதாசிரியாக ஈரோடு செளந்தர் ஆகி விட, தொடர்ந்து கதாசிரியராக இயங்கியவர், 
நாட்டாமை படத்துக்கு அவர் பண்ணிய கதை ஒரே இரவில் இன்னும் பன் மடங்கு உச்சத்துக்குக் கொண்டு போய் விட்டது. அதனால் நாட்டாமை படத்தின் வெற்றிக்கு நானே காரணம் என்று அப்போது அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் ஊடல் கொண்டு பத்திரிகைகளுக்குப் பேட்டி எல்லாம் வைத்தார் ஈரோடு செளந்தர்.

“இசைக் கவிஞன்” என்ற சிறப்புப் பட்டம் செளந்தர்யனுக்குக் கிட்டியது. அந்தப் பட்டத்தோடே முதல் சீதனம் படத்துக்கு அவர் இசையமைத்தாலும் தேவாவின் ஆஸ்தான பாடலாசிரியர் காளிதாசனையும் இப்படத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார். கூடவே படத்தில் இடம் பெற்ற நாட்டுப்புறப் பாடல்களை ஈரோடு செளந்தர் எழுதினார். கருணா பாடகராக அறிமுகமானது இந்தப் படத்தில் தான். கூடவே எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன், மனோ, ஸ்வர்ணலதா, மின்மினி, சித்ரா, உமா மகேஸ்வரி என்று பாடக நட்சத்திரக் கூட்டம்.

செளந்தர்யனின் பேர் சொன்ன படங்களில் முதல் சீதனம் படத்துக்குத் தனியிடம் உண்டு. தொண்ணூறுகளின் காதல் சோகப் பாடல்களில் “எட்டு மடிப்புச் சேலை இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை
https://youtu.be/aGxJeJssNE8
பாடல் தவறாது இடம் பெறும். எஸ்.பி.பியின் உருக்கமான குரலும் செளந்தர்ய இசையும் வெகு அற்புதம்.

கிராமத்துப் பேருந்துகளின் மாறாத பெயிண்ட் போல ஒட்டியிருக்கும் பாடல்களில் ஒன்றாக
“ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே” 
https://youtu.be/Iyf976axywM பாடலும் ஒட்டிக் கொண்டு முதல் சீனத்தை மறவாது வைத்திருக்கிறது.

“ஏய்! பாக்குறதுக்கு என்னமோ 
பக்கா வில்லனாட்டம் தான் இருப்பேன்
நான் சொல்றபடி கேட்டு நடந்துகிறேன்னு வச்சுக்கோ
“நாந்தாண்டா கண்ணு கதாநாயகன்” இந்த முத்திரை வசனத்தோடு முக்கிய வில்லனாக மொட்டையடிச்சு, அதிக காட்சிகளோடு கே.எஸ்.ரவிகுமார் தோன்றிய படம்
“புத்தம் புதுப் பயணம்”. பின்னாளில் குஷ்புவோடு முத்துக் குளிக்க வாரீகளா படத்தில் ஜோடி போட முன்னோட்டமாய் அமைந்தது இந்தப் படம்.

சேரன் பாண்டியன் வெற்றியைத் தொடர்ந்து வந்த படம் இது. கதை, வசனம் பொறுப்பை ஈரோடு செளந்தர் கவனிக்க திரைக்கதையோடு இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார்.

புது வசந்தம் காலத்து நான்கு நண்பர் சூத்திரத்தை (formula) வைத்துக் கதை பண்ணிய படம் இந்த புத்தம் புதுப் பயணம். நோயின் பிடியுல் இருக்கும் நண்பர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பி எஞ்சிய நாட்களையாவது சந்தோஷமாகக் கழிக்கலாமே என்று கிராமத்துக்கு வருகிறார்கள். அங்கோ வில்லன் பிடியில் இருக்கும் காதலர்களுக்கு ரட்சகர்களாகி உயிரை விடுகிறார்கள். ஆனந்த் பாபு, விவேக், கண்ணன், சின்னி ஜெயந்த் என்று நண்பர் கூட்டு. இதே கூட்டணி சம காலத்தில் வெளியான சூப்பர் குட்ஸ் இன் எம்.ஜி.ஆர் நகரில் (ஹரிஹரன் நகரில் மலையாளத்தின் தமிழ்ப் பதிப்பு) படத்தில் சின்னி ஜெயந்த் இற்குப் பதில் சார்லி நடிக்க இணைந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதுப் பயணம் படக் கதை அடுத்த ஆண்டே வந்த வானமே எல்லை படத்தின் கதைக்கு நெருக்கமானது. அங்கேயும் ஆனந்த் பாபு. ஆனால் வானமே எல்லை போன்று வசூலை வாராத படமாக புத்தம் புதுப் பயணல் அமைந்து விட்டது.

நகரம், கிராமம் இரண்டும் சரி பாதி இருக்கும் கதையமைப்பு என்பதால் செளந்தர்யனுக்கு இங்கேயும் நல்ல தீனி. ஆனால் இந்தப் படத்துக்கு அவர் கொடுத்த உழைப்பு சேரன் பாண்டியன் அளவுக்குப் பெரிய அளவுக்குப் போகாதது இசை ரசிகராக எனக்குப் பெரும் ஆதங்கம். உதாரணத்துக்கு 
ஏ காலைப் பனி நேரத்திலே வந்த கன்னிப் பொண்ணு
https://youtu.be/1eMHXWT-nzw
கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் எவ்வளவு அற்புதமான பாட்டு. 
மலேசியா வாசுதேவன் & மனோ குழுவினர் பாடும் “பாடுங்க்ளே” https://youtu.be/3delQPJkvwM
“மல்லிகைப் பூவு வாசம் மணக்குது மச்சான் மனசு சுண்டி இழுக்குது
https://youtu.be/hVbHIRhWpYo
போன்ற தெம்மாங்குப் பாடல்களோடு 
ஏ பெண்ணே https://youtu.be/ty4wzMXLyjc
என்ற ராப் பாடலுமாக இங்கேயும் எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், மனோ, சித்ரா என்று நட்சத்திரப் பாடகர்கள். கொடுமை என்னவென்றால் Jio மற்றும் Saavin போன்ற பேர் போன தளங்களில் கூட பாடல்கள் வைரமுத்து என்றும் இசை வித்யாசாகர் என்றும் போட்டு வைத்திருக்கிறார்கள்.
பாடல்கள் அனைத்தையும் எழுதி இசையமைத்த செளந்தர்யன் “இசைக் கவிஞன்” என்ற பட்டத்துக்கு நியாயம் கற்பித்த படம் இந்தப் “புத்தம் புதுப் பயணம்”.

இசையமைப்பாளர் செளந்தர்யன் ?

சிந்துநதி பூ ? முத்துக் குளிக்க வாரியளா

பாகம் 3

அடியே அடி சின்னப் புள்ள….:
ஆவி துடிக்குது நெஞ்சுக்குள்ள…..

கிராமத்தாளுகளிடம் பொதுவானதொரு ஒரு பழக்கம் உண்டு. முகமறியா யாரும் வந்தாலும் அவர்களை வரவேற்று இருத்தி, ஒரு வாய் சாப்புட்டுப் போறீங்களா என்று உபசரித்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள்.
இந்தப் பழக்கம் கலைத் துறையிலிருந்து சினிமாப் பட ரசனை வரை நீண்டிருக்கிறது. அதனால் தான் நகரத்தில் ஒரு வாரமோ இரு வாரமோ ஓடி முடித்த அறிமுகங்களின் படங்கள் கிராமங்களில் அடி தூள் என்று ஓட்டம் ஓடியிருக்கின்றன. 
இந்த ரசனை பாட்டுக் கேட்பதிலும் யார் இசையமைப்பாளர் என்ற பேதமில்லாது சமரசமின்றி 
உள்ளடங்கியிருக்கிறது. அதனால் தான் “அடியே அடி சின்னப்புள்ள” பாடல் இன்னும் அங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது, செளந்தர்யன் என்ற இசையமைப்பாளரின் அறிமுகம் இல்லாத இடத்தில் கூட.

சிந்து நதி பூ படம் வந்த போது குஞ்சுமோன் வருமான வரியை நஷ்டக் கணக்குக் காட்டவே இப்படி ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார் என்று அவர் காது படவே (?) பேசினோம். இல்லையா பின்னே ஜென்டில் மேன் என்ற உச்ச பட்ச பிரமாண்டத்தை எடுத்து விட்டு, அறிமுகங்களோடு ஒரு சாதா படத்தை எடுக்கிறாரே என்ற துணுக்குத் தான் காரணம். ரஞ்சித் முக்கிய நாயகனாக நடிக்க, மொட்டை மனோரமா, வடிவேலு, ஜெய்சங்கர் என்று தெரிந்த முகங்கள் சிலதோடு ராஜகுமாரியின் அறிமுகமும் அமைந்தது. செந்தமிழன் படத்தை இயக்கியிருந்தார். சிந்துநதி பூ என்ற தலைப்பே வித்தியாசமாக இருக்க, குஞ்சுமோன் 
ஜென்டில் மேன் என்று தனக்குத் தானே பட்டம் சூட்ட ஆரம்பித்ததும் இங்கிருந்து தான்.

சிந்துநதி பூ படத்தை இன்றளவும் நினைவில் வைத்திருக்க உதவுவது படத்தின் இசை தான். செளந்தர்யன் தன் தாய் வீடான சூப்பர் குட்ஸ் இலிருந்து வெளியே வந்து பண்ணிய படம். அப்போது தயாரிப்பாளர் குஞ்சுமோன் படங்களுக்குத் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்ததால் இந்த சிந்துநதி பூ படத்தின் பாடகர் தெரிவிலும் ரஹ்மான் தனம் இருக்கும். அப்போது ரஹ்மானின் பாசறையில் வளர்க்கப்பட்ட சாகுல் ஹமீது, சுஜாதா (மறு சுற்று), உன்னி மேனன் என்று அமைந்திருந்தார்கள். ரஹ்மான் இசையமைத்த உழவன் படத்தின் பாடல்களோடு நெருக்கம் போல இவை இருக்கும். இப்பேர்ப்பட்ட தன்மை பின்னாளில் மணிரத்னம் தயாரிப்பில் தேவா இசை கொடுத்த ஆசை, கார்த்திக் ராஜாவின் டும் டும் டும் படங்களிலும் மணிரத்னம் படங்களுக்கான பகட்டும், நிறமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிந்து நதி பூ படத்தினை அடுத்த சுற்று விஜய் தொலைக்காட்சி ராமர் பிரபலமாக்கிய “ஆத்தாடி என்ன உடம்பு” பாடலை சாகுல் ஹமீது பாடும் போது இடையில் பொடிப் பயல் குரல் வருவது கூட சிக்கு புக்கு ரயிலே பாடலில் ஜி.வி.பிரகாஷ்குமார் குரலை ரஹ்மான் பாவித்த ஒற்றுமை இருக்கும். 
“அடியே அடி சின்னப் புள்ள” பாடலை மனோ & ஜானகி பாடியது போல, “மத்தாளம் கொட்டிதடி மனசு” பாடிய ஸ்வர்ணலதா & எஸ்.பி.பியும் சரி சமமாகக் கவர்ந்திருப்பார்கள். “குப்பையில நெல் வெளஞ்ச” என்ற மென் சோகப் பாடல் சாகுல் ஹமீது குரலிலும், “ஆலமரம் பெயர்த்தெடுக்கும் ஆடிக் காத்து” என்ற சுஜாதா குழுவினரும் பாட, “கடவுளும் நீயும்” என்ற பாடலை எஸ்.ஜானகி & உன்னிமேனன் பாடியிருப்பார்கள்.

சிந்துநதி பூ படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றால் அது ஜேசுதாசும், ஆஷா லதாவும் பாடிய “ஆத்தி….வாடையில பட்ட மரம் கோடையில கொழுந்து விடாதா”
இந்தப் பாடலின் இசைக் கோப்பும் சரி, ஜேசுதாஸின் உச்ச ஸ்தாயியையும், நீள் சாதகத்தையும் கன கச்சிதமாகப் பயன்படுத்திய அதி அற்புதமான பாடலிது.

இதற்கு முன் சேரன் பாண்டியன் படத்தில் செளந்தர்யனே பாடலாசிரியராக இயங்கியிருந்தாலும் சிந்துநதி பூ படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து.

சிந்துநதி பூ பாடல்களைக் கேட்க
https://youtu.be/ybBJebIUF1A

கே.எஸ்.ரவிகுமார் சூப்பர் குட்ஸ் மூவிசும் இல்லாமல் 
கதாசிரியர் ஈரோடு செளந்தரும் இல்லாமல் வெளியே வந்து இயக்கிய படம் “முத்து குளிக்க வாரீயளா”
சந்திரகுமார் கதை, வசனம் எழுதிய படம்.
விக்னேஷ், சங்கவி இளம் ஜோடியுடன் குஷ்புவும், பட்டாளத்தான் கே.எஸ்.ரவிகுமாருமாக நடித்த படமிது. 
நாட்டாமை படத்தின் பெரு வெற்றிக்குப் பின் கே.எஸ்.ரவிகுமார் ரிஸ்க் எடுத்து ரஸ்கு சாப்பிட்டார் இதில்.

கே.எஸ்.ரவிகுமாருடன் செளந்தயன் இணைந்த மூன்றாவது படம் முத்துக் குளிக்க வாரீயளா.
பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவிஞர் காளிதாசன்.

“ஓஹோ ஹோ ஹோ தங்கமே தங்கம்
உனது முகம் பூவனம்……”

இன்றும் இலங்கையில் உள்ள பண்பலை வானொலிகளில் வாரம் தப்பாமல் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இசைஞானி இளையராஜா காலத்தில் அவரின் இசை சாம்ராஜ்ஜியத்தில் இசையமைப்பாளர்கள் பலர் ரசிகர் மனதில் பரவலான ஈர்ப்பைத் தக்க வைக்க முடியாமைக்கு ஒரு காரணம் என்ன தான் அற்புதமான மெட்டாக இருந்தாலும் இசைக் கோப்பில் கோட்டை விட்டு விடுவார்கள். ஒரு சீரான வாத்திய ஒழுங்கும், நேர்த்தியும் இருக்காது. ஆனால் இளையராஜாவுக்கு நிகரான அற்புதமான மெட்டுகளைக் கட்டி விடுவார்கள். அப்படி ஒன்று தான் இந்தப் பாட்டும்.

பொதுவாக இசையமைப்பாளர்களிடம் நீங்க இசையமைச்சதில் பிடிச்ச பாட்டு எது என்று கேட்டால் என்னோட எல்லாப் பாட்டுமே என் குழந்தைகள் தானே என்று மாமூலான பதில் வரும். ஆனால் 
ஓஹோஹோ தங்கமே தங்கம் பாடல் தான் என் இசையமைப்பில் எனக்கு மன நிறைவைக் கொடுத்த் பாட்டு என்று செளந்தர்யன் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பாடல் முத்துக் குளிக்க வாரீயளா படத்தில் மனோ & சித்ரா குரல்களில் ஒலிக்கும். இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் வழக்கமாக முதலடியில் மட்டுமே வரும் ஆலாபனை இடை வரிகளிலும் வருமாறு இசையமைத்திருப்பார் உதாரணமாக “ஓஹோஹோ ஹோ அருகே வரணும்”.

மனோ, சித்ரா, அருண்மொழி, சுபா, சுஜாதா என்று நட்சத்திரப் பாடகர் கூட்டம் இருந்தாலும் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்பதைப் போல “ஓஹோஹோஹோ தங்கமே” தங்கம் பாட்டு மட்டுமே வெகுஜன அந்தஸ்த்தைப் பெற்றது.

எப்படி கல்லுக்குள் ஈரம் பாரதிராஜாவுக்கு ஒரு கதாநாயக ஆசையை மூட்டியதோ அது போலவே நாட்டாமை வெற்றி தந்த பலத்தால் கே.எஸ்.ரவிகுமார் குஷ்புவுடன் ஆட்டம், பாட்டம் என்று முத்துக் குளிக்க வாரீயளா படம் எடுத்து சிப்பி கூட மிஞ்சவில்லை.
தொடர்ந்து இசையமைப்பாளர் செளந்தர்யன் & கே.எஸ்.ரவிகுமார் கூட்டணிக்கும் மண்ணை அள்ளிப் போட வாரீகளா என்று அமைந்து விட்டது.

நடிகர் ராமராஜன் நாயகனாக அரிதாரம் பூசத் தொடங்கியதிலிருந்து இசைஞானி இளையராஜா மட்டுமன்றி கங்கை அமரன், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி என்று பிற இசையமைப்பாளர் இசையிலும் நடித்துள்ளார். இவர்கள் எல்லோரும் ராமராஜனுக்குக் கொடுத்த பாடல்கள் சிறப்பாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் செளந்தர்யனும் தேர்வானது ஆச்சரியமானதொரு அதிஷ்டத்தையும் அவருக்குக் கொடுத்தது. ஏனெனில் கோபுர தீபம் படத்தின் பாடல்கள் அனைத்துமே வெளிவந்த காலத்தில் கேட்டு ரசிக்கப்பட்டன. அத்தோடு சுகன்யாவோடு ஜோடி சேர்ந்ததோடு இயக்கத்தையும் கவனித்துக் ராமராஜனுக்கு ஒரு கவனிப்பைக் கொடுத்தது இப்படம். அப்போது சரிந்து போய்க் கொண்டிருந்த ராமராஜன் மார்க்கெட்டுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்த படம் “கோபுர தீபம்” எனலாம்.

“உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே”

எஸ்.பி.பி & அனுராதா ஶ்ரீராம் பாடிய இந்தப் பாடல் கோபுர தீபத்தில் உச்சம் எனலாம். ஸ்வர்ணலதாவுக்கு முத்தாக மூன்று பாடல்கள். 
“கங்கை காயும் காய்ந்து போக மாட்டேன்” சோகப் பாடலை எஸ்.பி.பி பாட, ஹம்மிங் ஆக ஸ்வர்ணலதா பயன்பட்டிருப்பது புதுமை.
“சாய்ஞ்சா சாயிற பக்கம்” என்ற நையாண்டிப் பாட்டில் மனோ குழுவினருடன், ஸ்வர்ணலதாவின் குறும்புக் குரல், “மாமா ஏ மாமாவே” மீண்டும் மனோவுடன் ஒரு காதல் பாட்டு, 
“என்னுடைய பொண்டாட்டி எங்கேயோ பொறந்திருக்கா” வும் இந்தக் கூட்டத்தில் பிரபலமானது.

“என் வாழ்க்கை மன்னவனே” பாடலை செளந்தர்யம் எழுத, மீதிப் பாடல்களை வைரமுத்து கவனித்துக் கொண்டார்.

அப்போது மின்சாரக் கனவு படத்தின் பாடல்கள் வெளிவந்த போது கோபுர தீபம் படப் பாடல்களும் வெளிவந்ததால் இன்னும் பலரைச் சென்றடைய அது உதவியது.

இடைப்பட்ட காலங்களில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார். அதில் குறிப்பிடத்தக்கது சிந்துநதி பூ இயக்குநர் செந்தமிழன் தன் நாயகன் ரஞ்சித் மற்றும் ஆனந்த் பாபுவை வைத்து இயக்கிய சேரன் சோழன் பாண்டியன்.

பாடகி ஸ்வர்ணலதாவுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தவர்களில் செளந்தர்யன் குறிப்பிடத்தக்கவர்.

மேலும் செளந்தர்யன் இடை கொடுத்த 
“கண்ணிமைக்கும் நேரத்துல..” என்ற கலாட்டா கணபதி திரைப்படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய பாடலும்

“ஆனந்தம் தான்… “ என்ற நெருப்பூ படப்பாடல் (உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதா…”

தங்கள் ஊர்ப்பகுதிகளில் பிரபலமென சகோதரன் Hardinge Baskar K குறிப்பிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் செளந்தர்யன் அப்போது அடித்த தேவா, சிற்பி அலையால் காணாமல் போனார். இப்போதும் அவ்வப்போது இசையமைத்து வருகிறார்.

குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்கள் கிட்டியிருந்தால் அவரின் இன்னிசையைத் தொடர்ந்து பல்வேறு பரிமாணங்களில் கேட்க வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனாலும் தொண்ணூறுகளில் தமிழ் இசை ரசிகர்களை ஆட்கொண்டவர் என்ற வகையில் மறக்கமுடியாதவொரு இசையமைப்பாளர் செளந்தர்யன்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே ❤️

“உடல் ஆரோக்கியத்துக்காக மன மகிழ்ச்சியோடு இன்று இவள் மாதிரி ஓடும் பெண் நாளை தன் திருமணத்துக்குப் பிறகு எதற்கெல்லாம் ஓட வேண்டியிருக்கும்?”

ஒரு வருடம் ஓடி வெற்றி கண்ட படம்!

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான (முதல் முறை) தேசிய விருது “பிரசாத்” ராமநாதனுக்கும், சிறந்த மாநிலத்திரைப்பட விருது என்ற வகையில் இயக்குநர் மகேந்திரனுக்குமாக மூன்று தேசிய விருது கிடைத்த திரைப்படம்.

ஆனால் இப்படத்தின் கதைக்கரு சில வினாடிகளிலேயே இயக்குனர் மகேந்திரனின் சிந்தனையில் பிறந்தது என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் உண்மை.

“சினிமாவும் நானும்” என்ற தன் நூலில் “நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைக்கரு உருவான அந்த சுவாரஸ்யமான கணங்களை விபரிக்கின்றார் இயக்குநர் மகேந்திரன். அதைத்தான் முதல் பந்தியில் தந்திருந்தேன். மும்பையில் ஒரு ஹோட்டலில் தங்கித் தன்னுடைய இன்னொரு படத்துக்காகப் புதுமுகங்களைத் தேடிய இயக்குநர் மகேந்திரன் ஒரு நாள் அதிகாலைப் பொழுது ஹோட்டலை அண்டிய கடற்கரையில் tracksuit உடன் உடற்பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்துத் தான் இந்தக் கதையை உருவாக்கினார். மகேந்திரன் சொந்தமாகக் கதை எழுதிய படங்களில் மூத்தது “நெஞ்சத்தைக் கிள்ளாதே” அடுத்தது “மெட்டி”.

நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை நீண்ட நாட்களாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நேற்றுத்தான் முழுதாகப் பார்க்கக் கிட்டியது. அன்றைய இலங்கை வானொலியில் திரை விருந்தில் இந்தப் படத்தின் சில காட்சிகள் ஒலிப்பகிர்வாக கே.எஸ்.ராஜாவின் விளம்பரக் குரலோடு வந்தது மட்டுமே நினைவில் தங்கியிருந்தது.

இந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததும் முழு மூச்சாக உட்கார வைத்து முடியும் வரை ஒரே இடத்தில் வைத்து விட்டது. படத்தின் முக்கியமான களமாக அமையும் கார் திருத்தும் நிலையத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி குழுவினரின் சேஷ்டை நகைச்சுவையைச் சகிக்கக் கடவது.

ஆத்மார்த்தமாகக் காதலித்தவர்கள் பின்னர் பிரிந்து போய் வெவ்வேறு வாழ்வில் புகும் கதையெல்லாம் நெஞ்சில் ஓர் ஆலயம் காலத்துக்கு முந்தியும், அந்த ஏழு நாட்கள், மெளனராகம், காப்பி மெளன ராகம் (ராஜா ராணி) என்று வந்திருந்தாலும் ஒரு பெண்ணின் கோணத்தில் அவளின் நுணுக்கமான உணர்வலைகளோடு பயணப்படும் திரைக்கதை அதிகம் வந்ததில்லை. அதில் மிக முக்கியமானது இந்த நெஞ்சத்தைக் கிள்ளாதே. இந்தப் படத்துக்குப் பின்னர் கூட இவ்வளவு ஆழமான பார்வையோடு எதுவும் வந்ததில்லை.

ஒரு துறு துறு வெகுளிப் பெண் அவளின் பின்னணியில் சதா சண்டை போடும் அண்ணன், அண்ணி உலகம், அதைக் கடந்து இன்னோர் உலகத்தைக் கட்டியெழுப்பி அதில் நிம்மதியைத் தேட முனைந்தவள் வாழ்க்கை எப்படியெல்லாம் ஓடுகிறது, அவளும் எப்படியெல்லாம் ஓடிக் கொண்டே இருக்கிறாள் என்பதைத் தொடக்கத்தில் இருந்து முடிவுப்புள்ளி வரை ஓடும் குறியீடோடே ஓடுகிறது இந்தப் படம்.

கதையை எழுதி விட்டுத் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல இளையராஜாவுக்கும் உடனேயே சொல்லி விடப் பிறந்தது தான் அந்தக் காலடி ஓசையோடு பருவமே புதிய பாடல் பாடு. காலடி ஓசை வர வாத்தியக்காரர் ஒருவரின் தொடையைத் தட்டித்தான் ஓலிப்பதிவு செய்தார்கள் என்று ராஜா தன் இசை நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார்.

தட் தட் தட் என்று தரை தட்டி ஒலி எழுப்பும் பாதணிகளின் ஓசை நயத்தோடு இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் இதயத் துடிப்பு.

“பருவமே புதிய பாடல் பாடு” பாடல் கொடுக்கும் சுகத்தோடு இந்தப் படத்தை ரசிக்க ஆரம்பித்தால், படம் பார்த்து முடித்து அடுத்த நாள் வரை “உறவெனும் புதிய ராகம்” தான் காதில் ஓடுகிறது. அவ்வளவு அற்புதமான பாட்டு. ஓ தென்றலே எனும் பி.சுசீலாவின் ஒற்றை இராகம் சோகமெழுப்பும் கானம். எஸ்.ஜானகி கிழவியாக, குமரியாகக், குழந்தையாகப் பாடியவர் இதில் விடலைப் பையனாக “மமே பேரு மாரி” என்று வித்தியாசக் குரல் கொடுத்து ஆச்சரியம் கூட்டுகிறார். எஸ்.ஜானகியைத் தாண்டி இவ்வளவு பரிமாணங்களில் யாரும் பாடித்தான் காட்டட்டுமே?

தான் விரும்பும் ஒருவர் தன்னுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற possessiveness பாங்கிலேயே படத்தின் மையம் பயணப்படுகிற்து.

தன்னுடைய கணவன் இன்னொருத்தியுடன் பேசிப் பழகுகிறான் என்ற கறார்த்தனத்தில் சுகாசினியின் அண்ணி, அண்ணன் சரத்பாபுவுடன் காட்டும் கோபம், அது போலத் தன்னோடு பேசிப் பழகும் சுகாசினி இன்னொருத்தருடன் அந்த சினேகத்தைப் பங்கு போடக் கூடாது என்ற காழ்ப்புணர்வில் மோகன்.

இந்தப் படத்துக்காகப் புதுமுகம் ஒன்றைத் தேடியலைந்து பின் பக்கத்திலேயே ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த உதவியாளினியைக் கண்டு இவளே தன் கதையின் நாயகி என்று மகேந்திரன் கண்ணில் அகப்பட்டவர் தான் சுகாசினி. சுஹாசினியின் அறிமுகம் போலவே கன்னட கோகிலா படத்தில் கண்டு பிடித்துத் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டவர் மோகன்.

மோகனின் ஆஸ்தான குரலாக விளங்கிய சுரேந்தர் இந்தப் படத்தில் பிரதாப்புக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.

நாற்பது ஆண்டுகள் கடந்தும் இன்றும் பசுமையான நினைவுகளைக் கிளப்புகிறது படத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர் Ravi Varma V ஒளியோவியத்தில்.

விஜி ஒரு விளையாட்டுத்தனமான பெண், ஆண்களிடம் பேசிச் சிரிப்பதைக் கூடக் குழந்தைத்தனத்தோடு அணுகுபவள். அப்படியாகப்பட்டவளின் துணையாக வர விரும்பும் ராம் இன் காதலை அவள் ஏற்றிருந்தாலும் மனதளவில் அதற்குத் தயார்படுத்தாத வெகுளி என்பதை “உறவெனும் புதிய வானில்” பாட்டின் இடையே காட்டியிருப்பார் இயக்குநர்.

உண்மையில் சுஹாசினிக்கு இந்தப் படம் கிடைத்தது ஒரு பெரிய அதிஷ்ட லாபச் சீட்டின் பரிசுக்கு நிகரானது. ஒப்பனையில்லாத, ஓடிக் களைத்த இயல்பான அந்த இள முகம்,

அது மெல்ல மெல்லத் தான் எதிர் நோக்கும் அனுபவங்களுக்கேற்ப மாறிக் கொண்டே போவதை வெகு யதார்த்தமாகக் கொண்டு வந்திருக்கிறார் தன் நடிப்பில்.

மெளன ராகம் முன்பே எழுதி வைத்த கதை என்று மணிரத்னம் சொன்னாலும் ஒரு சில காட்சிகளில் இரண்டு படங்களிலும் ஒற்றுமை ஆரத்தழுவுகின்றது.

தன்னை விரும்பிய ஒருத்தியைத் தூய அன்போடு மட்டும் நட்பைத் தொடரலாம் என்று சரத்பாபுவின் கதாபத்திர வடிவமைப்பும் புதுமை. வழக்கம் போல பிரதாப் போத்தன் ஒரு விநோதமான குணாம்சம் பொருந்திய பாத்திரம்.

“மும்பை கடற்கரையில் அதிகாலையில் ஓடிய பெண்ணே!

இன்று நீ ஒரு தாயாக, மாமியாராக, பாட்டியாகக் கூட இருக்கலாம், உன் திருமண வாழ்வில் நீ எந்த மாதிரியெல்லாம் வாழ்வின் நெருக்கடிகளால்

அங்கும் இங்கும் ஓடியிருக்கலாம்…..”

இப்படியே தொடர்ந்து “என் நெஞ்சத்தைக் கிள்ளாதே” கதை உருவாகக் கருப்பொருள் தந்தவளே நீதான். என்று ஒரு நீண்டதொரு பத்தியில் அந்தப் பெண்ணுக்கு நன்றி கூறி முடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.

#மகேந்திரன்_எனும்_நிரந்தரம்

பாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் ?

சிலர் எவ்வளவு கோபப்பட்டு வார்த்தையைக் கக்கினாலும் அவர்களின் குரலில் ஒரு ஓசை நயமும், தண்மையான ஒலியாகவே வெளிப்படும். அப்படியொரு குரல் ஜெயச்சந்திரனுக்கு. இதே பாங்கில் வாணி ஜெயராமின் குரலையும் கவனிக்கலாம். இந்தக் குரல்களுக்குள் சங்கீதம் தடவியிருக்கும். பேசும் போதும் ஏதோ சுரம் பிரித்துப் பாடும் ஒரு ஜீவன் இருக்கும்.

ஜெயச்சந்திரனை ரயிலேற்றிப் பாடவைத்த மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம், சுப்ரபாதம், அந்தி நேரத் தென்றல் காற்று போலவே படகுப் பயணத்தின் பாடலாகத் தாலாட்டுதே வானத்துக்கு மூத்தவள் இந்த “வசந்தகால நதிகளிலே” பாட்டு.

மூன்று முடிச்சு படத்தில் இரண்டு ஜோடிப் பாடல்கள் அவை இரண்டுமே ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடியவை. ஒன்று “வசந்தகால நதிகளிலே” இன்னொன்று “ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்”. இந்த இரண்டு பாடல்களுக்கும் ஒற்றுமை ஒன்றிருக்கிறது. இரண்டுமே அந்தாதிப் பாடல் வடிவமைப்பில் எழுதப்பட்ட புதுமை கொண்டவை. தமிழ்த் திரையிசையில் இம்மாதிரியான புதுமை அதிகம் வாய்த்ததில்லை. கவியரசர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இந்த மாதிரி ஏராளம் நுணுக்கங்களைத் தம் பாடல்களில் புதைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி அந்தாதி எல்லாம் நம் கண்ணுக்குச் சட்டென்று அகப்பட்டு விடும்.

இறுதியாகக் கேட்ட அந்தாதிப் பாட்டு என்றால் பிரிவோம் சந்திப்போம் படத்தில் யுகபாரதி எழுதிய “நெஞ்சத்திலே நெஞ்சத்திலே” பாட்டு தான். ஒரு பாடலடியின் அந்தம் இன்னொன்றின் ஆதியாக அதாவது தொடக்கமாக இருக்கும் அந்தாதி ரகப் பாடல்கள் இவை.

இன்னும் சொல்லலாம். வசந்தகால நதிகளிலே பாடல் பின்னாளில் தமிழை மட்டுமல்ல இந்தியத் திரையுலகின் அடையாளமாகக் கருதப்படும் முக்கியமான மூன்று ஆளுமைகள் கமல்ஹாசன், ஶ்ரீதேவி, ரஜினிகாந்த் மூவரும் இணைந்து காட்சியில் பாடிய பாட்டு. அது மட்டுமா? ரஜினிகாந்துக்கு முதல் தமிழ்ப் பாட்டு அதுவும் மெல்லிசை மன்னர் குரலிலேயே “‘மணவினைகள் யாருடனோ மாயவனின் விதியலைகள்” என்று இறுகிப் போய்ப் பாடுவாரே.

“வசந்தகால நதிகளிலே” பாடலில் இன்னொன்றையும் பார்க்கலாம். “நதிகளிலே” தொடங்கிச் சொற்கள் எல்லாமே “கள்” என்றே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

இன்னொரு புறம் “ஆடி வெள்ளி தேடி உன்னை” பாடலில் ஒரு சொல்லில் தானும் “கள்” என்ற பிரயோகம் இருக்காது ஒற்றையாகவே நகரும்.

காலம் இது காலம் என்று

காதல் தெய்வம் பாடும்

கங்கை நதி பொங்கும் – கடல்

சங்கமத்தில் கூடும்

சங்கமத்தில் கூடும்…..

வசந்தகால நதிகளிலே சிறு கீற்று கிட்டார் ஒலியைத் தழுவி மெளத் ஆர்கனின் ஒலியோடு (காட்சியிலும் அழகாகப் பொருந்தும்) தொடங்குமாற் போல “ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்” பாடலில் கிட்டார் இசை தொடக்கி வைக்கும்.

இந்த இரண்டு பாடல்களும் ஜெயச்சந்திரனுக்கும், வாணி ஜெயராமுக்கும் இன்னொரு வாழ்நாள் கொடுப்பினைகள்.

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்

நேரமெல்லாம் கனவலைகள்

கனவலைகள் வளர்வதற்கு

காமனவன் மலர்க்கணைகள்

ஆடிவெள்ளி தேடி உன்னை – பாடலைக் கேட்க

https://youtu.be/1egBBp8-1IQ

வசந்தகால நதிகளிலே – பாடலைக் கேட்க

https://youtu.be/xpyOa8UMmaE

பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் ?

ஒரு கடுகதி ரயில் வண்டியொன்றில் வாத்தியங்களையும், வாத்தியக்காரர்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு கூடவே காதலனும், காதலியுமாகிய தோரணையில் பாடகர்கள் இணைந்து பாடிக் கொண்டே போக, அவர்களின் வேகத்துக்கு இசைவாக வாத்திய அணியும் சேர்ந்தால் எப்படியொரு அனுபவத்தைக் கொடுக்குமோ அவ்வாறானதொரு சுகானுபத்தை கண்களை மூடிக் கொண்டு இந்தப் பாட்டு ரயிலில் ஏறினால் கிட்டும்.

ஆனால் ஒரு எச்சரிக்கை இந்தப் பாடலை நீங்கள் காதலிக்குமளவுக்குப் படமாக்கப்பட்ட காட்சியும் இருக்குமென்று எண்ணித் தவறி தவறியேனும் அதைக் கண் கொண்டும் பார்த்து விடாதீர்கள். 41 வருடங்களுக்கு முன் வந்த இந்தப் பாட்டு மட்டும் மணிரத்ன யுகத்தில் வந்திருந்தால் அழகிய காட்சித் திறனும் படைத்திருக்கும் என்பதைக் காட்சியைக் கண்ட பின் பாடலைக் கேட்கும் தோறும் உணர்வீர்கள்.

ஒரு ரயில் பயணப்பாட்டு எப்படி அமைய வேண்டும் என்று இசைஞானியின் கனவில் வந்துதித்து அது இசையாகப் பயணப்பட்ட போது எவ்வளவு நுணுக்கமாக அந்த இசையோட்டத்தை ரயில் பயணத்தின் சந்தத்தோடு இணைக்கிறார். அங்கே ரயிலோசையை விடவும் வாத்தியங்களின் தாள லயம் தான் அந்த உணர்வை எழுப்புகிறது. தாள வாத்தியங்கள் ரயிலின் அலுங்கல் குலுங்கலுக்கு ஏதுவாக எப்படியெல்லாம் அசைந்தாடுகின்றன பாருங்கள்.

“ஊஊ….ஊஊஊஊஊ…” என்று ஓசை நயம் காட்டும் இசைக்குயில் P.சுசீலாம்மாவின் ரயில் குரலும், விசிலோசையும் போலே பாடலின் முடிவிலும் ரயில் ஓசை ஒன்றை எழுப்பி முன்னே பயணிக்கிறது.

முதல் சரணத்துக்கு முன்னே வரும் இசையில் ஆர்ப்பரிக்கும் வயலின்களின் கூட்டு ரயிலின் சன்னலோரத்தில் அமர்ந்து பார்க்க, நீ முந்தவோ இல்லை நான் முந்தவோ என்று கடந்து போகும் மரங்களின் அசைவோ?

“மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்…..” என்று இந்தக் கடுகதிக் காதல் பயணத்தில் ஏறும் ஜெயச்சந்திரன் அந்த சுகானுபவத்தை “மஞ்சள்” என்ற முதல் சொல்லில் காட்டும் கிறக்கத்திலேயே தொட்டு விடுகிறார்.

இந்தப் பாடலுக்கெல்லாம் காட்சி இன்பம் எவ்வளவு தேவை என்பதற்கு உதாரணமாக ஜெயச்சந்திரனின் பாடலையே அள்ளிக் கொடுக்கலாம்.

பாடகர் ஜெயச்சந்திரனுக்கான ரயில் பாட்டு என்றால் “அந்தி நேரத் தென்றல் காற்று என்னை வந்து தாலாட்ட” வரணுமே என்று முந்திக் கொள்ளாமல் அந்தப் பாடலுக்கான தனி கெளரவம் செய்யப் போகும் மனோஜ் – கியான் இரட்டையர் இசையில் ஜெயச்சந்திரன் என்ற அங்கத்தில் பார்ப்போம்.

ஆனால் இங்கே நான் எடுத்து வருவது இன்னொன்றை, அது தமிழுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத இசை முத்து.

சுப்ரபாதம்…….சுப்ரபாதம்…….சுப்ரபாதம்…….

நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே….

https://youtu.be/jAaVrFd8GZk

இந்தப் பாடலும் ஜெயேட்டன் பாடியது தான்.

பணி தீராத வீடு படத்துக்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடிய அந்தப் பாடலுக்காக 1972 ஆம் ஆண்டின் கேரள அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருது ஜெயச்சந்திரனுக்குக் கிட்டியது. இன்று Smule யுகத்திலும் இந்தப் பாடல் எவ்வளவு தூரம் போற்றப்படுகிறது என்பதைக் கேட்டுரலாம். அந்தப் பாடலில் மலைகளினூடே

ஊடறுத்துப் பயணிக்கும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் நிதானத்தைப் பாடலின் இசையும், ஜெயச்சந்திரனின் குரலும் ஓப்புவிக்கும். அது மட்டுமல்ல இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதத்தைப் பாருங்கள். காட்சியின் ஆரம்பமே நம் கற்பனை உலகை நிஜத்தில் வடிக்கும். இதுதான் இந்த மாதிரிப் பாடல்களுக்குக் கொடுக்கும் மகத்துவம்.

இந்த ரயில் பாட்டில் சக பயணியாகச் சங்கமம் ஆவோம் வாருங்கள்.

மேடை அமைத்து

மேளம் இசைத்தால்

ஆடும் நடனம் கோடி…..

காலம் முழுதும் காவியம்

ஆனந்தம் ராகம்

இனி எந்த தடையும் இல்லை

என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை

ஊ ஊ …..ஊஊஊ…

மஞ்சள் நிலாவுக்கு

இன்று ஒரே சுகம்

இது முதல் உறவு

இது முதல் கனவு

இந்த திருநாள்

தொடரும்

தொடரும்…

https://youtu.be/1Xyl9wIYWUA

#Jeyachandran_Songs

பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ இசைஞானியின் இசைத் தாலாட்டில் ஜெயச்சந்திரன் & சுனந்தாவின் “காதல் மயக்கம்” ?

ந்

Made for each other என்பார்கன் இதைத் திரையிசைப் பாடல்களைக் கேட்கும் தோறும் சில பாடக ஜோடிக் கூட்டணியின் சங்கமத்தில் நினைப்பூட்டுவதுண்டு. “தென்றல் வரும் முன்னே முன்னே” என்று தர்மசீலனுக்காக அருண்மொழியும், மின்மினியும் ஜோடி சேர்ந்த போதும், “பூங்கதவே தாழ் திறவாய்” எனும் போது தீபன் சக்ரவர்த்தியையும், உமா ரமணனையும் அவர் தம் குரலில் எழும் ஒத்த அலைவரிசையின் போதும் இவ்விதம் சொல்லத் தோன்றும். அது போலவே அரிதாகப் பாடினாலும் இம்மாதிரிப் பத்துப் பொருத்தமும் வாய்த்த பாட்டு ஜோடி ஜெயச்சந்திரன் – சுனந்தா.

எப்படி ஜேசுதாஸ் வழியாக சுஜாதா இசைஞானி இளையராஜாவிடம் அறிமுகமாகினாரோ அது போலவே சுனந்தாவின் அறிமுகமும் ஜெயச்சந்திரன் வழி பிறக்கிறது. புதுமைப் பெண் படத்தில் ஜேசுதாஸ் & உமா ரமணனுக்கு “கஸ்தூரி மானே” பாடலை எழுதி வைத்தது போல, இங்கே சுனந்தாவுக்கும் ஜெயசந்திரனுக்குமாக அழகிய காதல் மயக்கம் தரும் பாட்டு. சுனந்தாவுக்குத் தமிழில் கிட்டிய அறிமுகம் வழிகாட்டியவருக்கே ஜோடியாக அமைகிறது.

காதல்…மயக்கம் அழகிய கண்கள்…துடிக்கும்

இது ஒரு காதல்..மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்

ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்

தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்ணில் அபிநயம்

https://youtu.be/4sYXPKpLwTM

கஸ்தூரி மானைப் போலத் தான் இங்கேயும் கோரஸ் குரல்களின் தாண்டவம் இருக்கும். ஆனால் இந்த இரண்டு பாடல்களும் எவ்வளவு அற்புதமாக வேறுபட்ட இசைக்கோப்பில் மிளிர்ந்திருக்கின்றன என்பதைக் கேட்கும் போதெல்லாம் அனுபவித்து ரசிக்கலாம்.

ஜெயச்சந்திரனும் சுனந்தாவும் பாடும் போது ஒன்று கலக்கும் தொம்தொம் தனம்ததொம்தொம் தனம்த போடும் கோரஸ் குரல்களுக்காக ஒருமுறை கேட்டு விடுங்களேன்.

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை

நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை

மெய்யா பொய்யா… மெய் தான் ஐயா

எடுத்த எடுப்பிலேயே வெறும் சங்கதிகளோடமைந்த பாடல் இல்லாது ஒரு நளினமான பாட்டு. அதற்காகத் த்க் இந்த “மெய்யா பொய்யா… மெய் தான்” ஐயா வரிகளை இழுத்து வந்தேன்.

சரணத்தில் இருவருக்காகக் கொடுக்கப்பட்ட வரிகளுமே காதலன் காதலியின் பரிபாஷையாக ஒரு கேள்வி பதில் போல உறுதிப்படுத்திக் கொண்டே நகரும், அன்பின் வெளிப்பாடு அது.

காதல் மயக்கம் ஒரு காதலன் & காதலிப் பாட்டென்றால் அடுத்து ஒரு கல்யாணப் பாட்டு. இந்தப் பாட்டையெல்லாம் திருமண மண்டபத்தில் சத்தமாக ஒலிக்க விட்டாலே போதும் கல்யாணக் களை அந்த அரங்கம் முழுதும் வியாபித்து விடும். அதுதான் ?

பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா ??

https://youtu.be/zWAbchm9Fww

இந்தப் பாட்டை எவ்வளவு தூரம் எனக்குப் பிடிக்கும் என்பதற்கு ஒரு ஆதாரம் பல்லவி தொடங்குவதற்கு முன்னால் நெய்திருக்கும் அந்தப் புல்லாங்குழல் இசையோடு வயலின் ஆவர்த்தனத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பது.

பாடலின் அந்த ஆரம்ப இசை ஒரு வண்டியில் பொருத்தி இழுக்கப்படும் Camera வின் அசைவியக்கத்தோடு பயணப்படும்.

கூட்டுக் குரல்களை சரணத்துக்கு முன்பாக “மாங்கல்யம் தந்துனா” பாட வைத்து விட்டு பின்னர் அதே ரிதத்தை இரண்டாவது சரணத்தில் வாத்திய ஆலிங்கனம் செய்ய வைத்து அதே கூட்டுக் குரல்களை ஒலிக்க மட்டும் விடும் நுட்பம் இருக்கிறதே அதுதான் ராஜ முத்திரை.

முதல் சரணத்துக்கு இரண்டாவது சரணத்துக்கு குழந்தைப் பேறு என்ற விதத்தில் அமையும் காட்சியமைப்புக்கு நியாயம் கற்பிப்பது போல அந்த இரண்டாவது சரண கூட்டுப் பாடகிகளின் ஓசை இன்பத் தாலாட்டாக விளங்கும்.

“மாங்கல்யம் தந்துனா” பாடி முடித்ததும் தபேலாவால் “தடு திடுதிடு தடு திடு” என்று ஓசையால் வழித்து அப்படியே ஜெயச்சந்திரனிடம் கொடுக்க “மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்” என்று அவர் ஆரம்பிக்க அந்தக் கணத்தை உச் கொட்டி ரசிக்கலாம்.

“தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள்

தீரும் வரையினில் புது வசந்த விழா”

எனும் போது அந்த தீர்த்த என்ற சொல்லையே எவ்வளவு அழகாக நறுக்கிக் கொடுக்க முடியும் என்பதை ஜெயேட்டன் காட்டுவார். ஒரு மணப்பெண்ணுக்குண்டான வெட்கப் பூரிப்பு சுனந்தா குரலில் இருக்கும்.

“செம்மீனே செம்மீனே

உங்கிட்ட சொன்னேனே

செவ்வந்திப் பெண்ணுக்கு

சிங்காரக் கண்ணுக்கு

கல்யாண மாலை கொண்டு வாரேன்

மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்”

https://youtu.be/GV7yqNTu9Wg

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போகும் ஏதாவது பஸ் ஒன்றில் ஏதாவதொன்றாக இன்னும் ஒலிக்கும் பாடலென்றால் இந்தச் செம்மீனும் அடங்கும் இன்று வரை. இதை என் தாயகப் பயணங்களில் அனுபவித்திருக்கிறேன். முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மகன் சந்தனபாண்டியன் & ஶ்ரீஜா ஜோடி நடித்த “செவ்வந்தி” படத்தின் பாடல்கள் எல்லாமே மணி மணி. திரையில் ஒன்று கலந்தவர்கள் நிஜத்திலும் கரம் பிடித்தார்கள். செவ்வந்தி படத்தின் ஒவ்வொரு பாடல்களையும் தனித்தனியாக அலசி ஒரு பதிவையே எழுதியிருக்கிறேன். இங்கே ஜெயச்சந்திரன் ஸ்பெஷலுக்காக “செம்மீனே செம்மீனே” பாடலை அழைத்து வந்திருக்கிறேன். ஜெயச்சந்திரன் – சுனந்தா ஜோடிக்குக் கிட்டிய இந்தப் பாடலில் கூட கோரஸ் குரல்கள் இன்னொரு பரிமாணத்தில் மின்னும். “ஆனந்தம் பொங்கிடப் பொங்கிட” என்று சிறைப் பறவையில் சுனந்தாவோடு இணைந்து பாடிய ஜேசுதாஸுக்குப் பதில் ஜெயச்சந்திரன் பாடினாலும் பாதகம் வந்திருக்காது.

“செம்மீனே செம்மீனே” கொஞ்சம் வேகமான பாட்டு. வாத்திய இசை, கோரஸ் இவற்றைத் தாண்டி பாடகர் இருவரும் தம் சங்கதிகளை நிறுத்தி நிதானிக்காமல் கடகடவென்று மழை கொட்டுமாற் போலப் பாடிக் கொண்டே ஓட வேண்டும்.

“நான் திரும்பி வரும் வரைக்கும்

நீரின்றி வாடும் இள நாத்து

ஓடை நீரின்றி வாடும் இள நாத்து”

என்று இரண்டாவது சரணம் வரை தம் கட்டி அற்புதமானதொரு பாடலைக் கொண்டு வருகிறார்கள். சுனந்தாவுக்குப் பெயர் கொடுத்த பாடல்களில் பாதி ஜெயச்சந்திரனோடு அமைந்தவை. அதில் இந்த செம்மீனே பாடல் எண்பதுகளின் நீட்சியாகத் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கொட்டிய இசைப் பிராவகம்.

ஒரு கோலக் கிளி சொன்னதே……

உண்மையா..உண்மையா..

அது பேசும் பிள்ளை மொழியே

நன்மையா.. நன்மையா….

எவ்வளவு நிதானமாக நடை பழகும் பாட்டு இது. அதுவும்

“ரோஜாவிலே

முள்ளில்லாத பூவில்லையே

ராசாத்தியே முல்லை பூவில்

முள்ளில்லையே..”

என்று ஜெயச்சந்திரன் சுனந்தவோடு இணைந்து கொள்ளும் இசைச் சங்கமம் அனுபவித்துக் கொண்டாட வேண்டியது. ஒவ்வொரு சங்கதியிலும் “ஏகாரமும்” “ஓகாரமும்” ஆக வரிகளை உயிர்ப்பித்து உணர்வோட்டம் கற்பிக்கிறார்கள்.

இந்த மூன்று பாடல்களிலும் சிருங்கார ரசம் கொண்ட அழகியலை இவ்விருவர் குரல் சேர்ந்ததன் மகிமையால் உணரலாம். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இசைஞானியின் இசையின் பரிமாணத்தின் மாறுதல்களையும் ஒப்பு நோக்கிப் பார்க்க நல்லுதாரணங்கள் இவை.

சிதம்பரம் பத்மினி மீதான பாலியல் வல்லுறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பொன் விலங்கு படத்தை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணியின் சகோதரர் ஆர். ராஜரத்தினம்.

இந்தப் பச்சைக் கிளி இன்பமே

பொய்மையா…பொய்மையா…

https://youtu.be/t9V5P2H4eLw

சோகத்தைத் தேக்கிய ஜெயச்சந்திரன் குரலில் வரும் இந்தப் பாட்டு “ஒரு கோலக்கிளி சொன்னதே” பாடலின் pathos வடிவம் அதாவது அவலச் சுவை காட்டும் பண்பில் அமைந்திருக்கும்.

ஜெயச்சந்திரன் இன்னும் வருவார்

கானா பிரபா

#Jeyachandran_Songs

ஜெயச்சந்திரன் 75 ❤️ ஒரு தெய்வம் தந்த பூவே…… கண்ணில் என்ன தேடல் தாயே…..?

கதைகளினூடும், செய்திகளோடும், திரைப்படைப்புகளோடும் கண்ட கனவுலகமான தமிழகத்து மண்ணை என் வாழ் நாளில் முதன் முறையாக 2002 ஆம் ஆண்டில் ஒரு நாள் முத்தமிடுகிறேன். அதுவரை கனவுலகில் சஞ்சரித்த இடங்களை நிஜத்தோடு பொருத்தும் வேலையில் ஒவ்வொரு கணப் பொழுதையும் அர்ப்பணித்துக் கொண்டே சென்னையில் என் கால் போன போக்கில் உலாத்துகிறேன். ஆட்டோக்காரிடம் தமிழகத்துப் பேச்சு வழக்கில் பேசி, “சார் கேரளாவுல எந்தப் பக்கம்?” என்று என் உடைந்த தமிழைக் கண்டு பிடித்த ஆட்டோக்காரரின் குட்டை வாங்கிக் கொண்டே வியர்வை வழிந்தோட வழி நெடுகப் பயணம்.

தேவி தியேட்டரில் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஓடிக்கொண்டிருந்தது.

சரி தியேட்டர் அனுபவத்தையும் சந்திப்போம் என்று நினைத்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். என்னைச் சுற்றி எல்லாம் தமிழ் முகங்கள் ஆனால் நானோ அந்நியன், தமிழால் உறவினன் என்று அப்போது நினைத்தது இப்போதும் நினைப்பில்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் உருக்கமான அந்தக் கடைசிக் காட்சி. எனக்கு முன்னால் சீட்டில் இருந்த நடுத்தரவயதுப் பெண்மணிகள் சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே பார்க்கின்றார்கள். பக்கத்தில் ஒரு விசும்பல் கேட்கிறது, எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது ஆண்மகனும் அந்தக் காட்சியோடு ஒன்றித்ததன் வெளிப்பாடு அது. உண்மையில் அந்தக் கணநேரம் படம் தந்த உணர்வை விட, எங்கள் நாட்டின் அவலக் கதை பேசும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கியதை நேரே கண்டு நெகிழ்ந்தேன். ஒரு சாதாரண படம் தானே என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியும் ஆனால் இந்த உணர்வின் சாட்சியாகத் தமிழகத்தவர் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்காக இயங்கிவருகிறார்கள் என்பதற்கான மிகச்சிறிய உதாரணம் அது. தமிழகத்தவர் ஈழத்தமிழர்களுக்காக உணர்வு பூர்வமாக இயங்கும் அதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து.

இந்த மாதிரியான பெரியம்மா முறையான உணர்வைத் தான் எல்லா அரசியல்வதிகளும் அரசியல் முதலீடாக்குகிறார்கள் என்றாலும் அந்த அரசியல்வாதிகள் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு என்றும் அந்நியர்தான். தமிழகமும், ஈழமும் கலையாலும், மொழியாலும் ஒன்று பட்ட நேர்கோடு. இங்கே கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் அரசியல் குறித்தோ, அதன் ஆக்கம் குறித்தோ தர்க்க வாதங்களில் போக விரும்பவில்லை. நேராக ஜெயச்சந்திரனிடம் போய் விடுவோம்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் கோலோச்சிய பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, சித்ரா போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய பாடகர்கள் தான் ஏ.ஆர்.ரஹ்மான் யுகத்தில் இன்னும் நிறைவாகத் தொடர்ந்திருக்கிறார்கள். மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு இன்னும் அதிகம் கிட்டியிருக்கலாமோ என்று ஏக்கம் கொள்ள வைக்கக் கூடிய படைப்புகள் இவ்விருவருக்கும் கிட்டியிருக்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய இன்னுஞ் சில பாடல்கள் இருக்கின்றன. ஆனால் இங்கே அவற்றை இழுத்து, இன்றைய பாடலின் தனித்துவத்தைக் குறைக்காமல் அவற்றை இன்னுமிரு பதிவுகளில் பார்ப்போம்.

“ஒரு தெய்வம் தந்த பூவே….கண்ணில் தேடல் என்ன தாயே….”

பாடல் ஆரம்பிக்கும் போதே ஒரு சூனிய வெளியில் அகப்பட்ட தனிமை தான் சூழ்ந்து விடும்.

இன்று வேர் பிடுங்கப்பட்டு அகதி வாழ்வில் ஊர் கடந்து, தேசம் கடந்து ஆண்டாண்டு காலங்கள் கடந்த நிலையிலும் அந்த வெறுமை பலரின் உள்ளக்கிடக்கையாக ஒட்டிக் கொண்டிருக்கும். புலம் கடந்தவன் மட்டுமல்ல, தான் கொண்ட வாழ்வைத் தொலைத்தவன் ஒவ்வொருவனுமே அகதி தான். அதைத்தான் அசரீரியாக இந்த ஜெயச்சந்திரன் குரல் ஒப்புவிக்கின்றது.

“விடை கொடு எங்கள் நாடே” என்று மெல்லிசை மன்னரும் மாணிக்க விநாயகமும் பாடும் போது நிலம் அழுமாற் போல இருக்கும். தன்னுடைய வாழ் நிலம் விட்டுப் போகிறார்களே என்று அவன் நிலம் பாடும் ஒப்பாரியாகவும் அதை நோக்கலாம்.

இங்கே “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலில் காட்சிப் பின்னணி வேறாக இருக்கலாம். ஆனால் அது வாழ்வைத் தொலைத்த ஒவ்வொரு மனிதனின் நாடி, நரம்புகளினூடே ஊடுருவி

இன்னோர் பரிமாணம் கொடுக்கும். அது வீடிழந்த, தன் வாழ்விழந்த மனிதனைத் தாங்கி அரவணைக்கும் நிலத்தின் பாடலாகவும் நோக்கலாம். அதனால தான் இங்கே,

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வானம் முடியுமிடம் நீதானே!

காற்றைப் போல நீ வந்தாயே!

சுவாசமாக நீ நின்றாயே!

மார்பில் ஊறும் உயிரே!

என்று வெறுமனே எடுத்து வளர்த்த தந்தையின் குரலாய் அன்றி, அடைக்கலம் கொடுத்த நிலத்தின் பாடலாகவும் உணர்வு ரீதியாக எடுத்துக் கொள்ள முடிகிறது.

எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ….

ஒரு தெய்வம் தந்த பூவே…..

கண்ணில் தேடல் என்ன தாயே…..

பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ தாலாட்டுதே வானம்….தள்ளாடுதே மேகம் ?

“தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்” கேட்கும் போதே தள்ளாடும் படகில் சுகமாகப் பயணிக்கும் உணர்வு, இரு கண்கள் மூடிச் செல்லும் போதே ஒரே எண்ணம். பின்னணியில் ஒலிக்கும் இசை கூட துடுப்பை வலித்து முன்னோக்கியும் பின்னோக்கியும் இழுக்குமாற் போலவொரு இசைவாக்கம் எழும்.

ஒரு பாடல் தொகுப்பில் எத்தனை பாடல்கள் இருந்தாலும் இந்தப் பாடல் வருமிடத்தில் இரண்டு மூன்று தடவைகள் கேட்டு விட்டுத்தான் மெல்ல நகரும் மனது.

அலைகள் வருடிச் செல்லும் கடலில் பயணிக்க

யாருக்குத் தான் பிடிக்காது. இங்கோ

“மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்

கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்”

ஆகக் காதலியோடு ஒரு கடற் பயணம்.

எஸ்.ஜானகியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், சொற்கட்டினை மிகவும் நெகிழ்வாக்கித் தானும் கரைந்து நம்மையும் கரைய வைப்பவர். வழக்கமான எஸ்.பி.பி தனமான பாடல்களில் அவரோடு குறும்பு கட்டிப் பாடுபவர் இங்கே ஜெயச்சந்திரனோடு இணையும் போதும் போது குரலில் வெட்கப் புன்னகையை அள்ளி வீசிக் கொண்டே போகிறார் பாருங்கள். இந்தப் பாட்டு முழுக்க அதே தோரணையில் கேட்கும் போது காதலோடு படகுச் சவாரி கொள்ளும் போது நேரே வெட்கம் கொப்பளிக்கும் அந்தக் காதலியின் உருவம் தான் கற்பனையில் மிதக்கும்.

இரு கண்கள் மோதி

செல்லும் போதும்

ஒரே எண்ணம்…..

இந்தப் பாடல் எப்படிப் படமாக்கப்படப் போகிறது என்று எப்படி ராஜாவிடம் இயக்குநர் விபரித்திருப்பார் என்று

நம்மில் யாருக்கும் தெரியாது. கடல் பயணம் மீதேறி எத்தனை எத்தனை காதல் பாட்டுகள் கரை சேர்ந்திருக்கும்? ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒப்பிட முடியாதவொரு இனிய கானம் இசைஞானியார் சிந்தனையில் எப்படிப் பிறந்திருக்கும் என்றதொரு ஆச்சரியம் எழுந்து நிற்கும். இங்கே பயன்பட்டிருக்கும் ஒவ்வொரு வாத்தியத்திலும் கடலின் ஓசை தான் தேங்கி நின்று பிரவாகிக்குமாற் போலொரு உணர்வு.

இங்கே தன் உதவியாளர் சுந்தரராஜன் குரலை மீனவ சமூகத்தின் குரலாய் ஒரு காதல் பாடலில் நுழைத்திருக்கும் நேர்த்தியை என்னவென்பது?

அலை மீது ஆடும்

உள்ளம் எங்கும்

ஒரே ராகம்

நிலை நீரில் ஆடும்

மீன்கள் ரெண்டும்

ஒரே கோலம்

ஜெயச்சந்திரனின் வாழ்நாள் பாடல்களில் இந்தப் பாடலையும் தவிர்த்து எழுத முடியாது. மூன்று முடிச்சு காலத்தில் கமல்ஹாசனுக்காக “வசந்த கால நதிகளிலே” என்று மெல்லிசை மன்னரால் படகில் ஏற்றப்பட்டவர் இங்கே கடல் மீன்களில் அதே கமல்ஹாசனுக்காக இசைஞானியாரால் ஏற்றம் கண்டிருக்கிறார்.

“தாலாட்டுதே” எனும் போது ஒரு பரவசத்தை உள் நுழைத்து தள்ளாடுதே மேகம் வரிகளை எட்டும் போது அந்த மேகத்தில் மிதந்து செல்லுமாற் போலவும்,

“தாளாமல்” எனும் போது நீர்ப்பரிப்பில் நின்றாடுமாற் போலவும் ஒரு வரிக்குள்ளேயே எத்தனை பாவங்களை நிகழ்த்திக் காட்டி விடுகிறார். அந்தத் தாலாட்டின் நீட்சியை சரணத்தைக் கடந்து மீண்டும் பாடும் போது இன்னொரு விதமாகக் காட்டி நிற்பார் ஜெயச்சந்திரன்.

மலையாளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடகர் மடை திறந்தாற் போலப் பாடும் அழகுக்காகவே இன்னொரு முறை இதைக் கேட்கலாம்.

கமல்ஹாசனை எண்பதுகளில் இலங்கை வானொலி பேட்டி கண்ட போது அவருக்குப் பிடித்த பாடலாக அவர் இனம் காட்டியது இதைத்தான்.

தாலாட்டுதே வானம்

தள்ளாடுதே மேகம்

தாளாமல் மடி மீது

தார்மீகக் கல்யாணம்

இது கார்கால சங்கீதம்

பாடலைத் துல்லிய ஒலித்தரத்தில் அனுபவிக்க

https://youtu.be/KDimSjTlO

பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மெல்லிசை மன்னரால் ஜெயச்சந்திரனுக்குக் கிட்டிய உயர் விருது இந்த அந்த 7 நாட்கள் ?

நடனக் கலையையே தன் வாழ்வியல் தவமாகக் கொண்டிருக்கும் ஒரு கலைஞன் அவன், ஆனால் தான் கற்ற கலையைப் போற்றி அரங்கேற்ற ஒரு மேடை வாய்ப்பு அவன் சாவின் நிமிடம் வரை கிடைக்காது இம்மாதிரியானதொரு அவலச் சுவை நிரம்பிய ஒரு காவியம் சலங்கை ஒலி.

ஆர்மோனியப் பெட்டியும் தபேலா அளவில் இருக்கும் ஒரு உதவியாளனையும் நம்பி தன்னுடைய இசை வாய்ப்புக்காக அலையும் பாலக்காட்டு மாதவன் தான் கொண்ட இலட்சியமும் இழந்து, காதலையும் தொலைத்து நடை போடும் காவியம் என்றால் அந்த 7 நாட்கள். முன்னதில் கே.விஸ்வநாத் (சலங்கை ஒலி) , பின்னதில் கே.பாக்யராஜ் (அந்த 7 நாட்கள்) என்று இந்த இரண்டு திரையுலக மேதைகளும் எவ்வளவு அழகாகக் காதலையும், கலையையும் பொருத்தி அதை இன்னொரு முரண் கோணத்தில் சிந்தித்திருக்கிறார்கள் பாருங்கள்.

இந்த இடத்தில் பாக்யராஜ் ஐப் பற்றி இன்னுமொன்று சொல்லி வைக்க வேண்டும். எண்பதுகளில் இளையராஜாவின் முதுகில் சவாரி செய்யாமல் தன்னுடைய தனித் திறனோடு மெல்லிசை மன்னர் போன்ற முன்னோர்களையும் அரவணைத்து அவர்களுக்குச் சிறப்பானதொரு கெளரவத்தைக் கொடுத்தவர். ஆகச் சிறந்த உதாரணம்

அந்த 7 நாட்கள்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உயிரோடிருந்தால் அவரிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இன்னமும் மிச்சமிருந்தாலும் பாடகர் ஜெயச்சந்திரனை முன்னுறுத்தி முதலில் கேட்க விரும்பும் கேள்வியாக இதைத் தான் கேட்பேன். அது என்னவென்றால் “பாடகர் ஜெயச்சந்திரனை முன்னிலைப்படுத்தி இந்த அந்த 7 நாட்கள் பாடல்களை நீங்கள் கொடுத்ததன் அடிப்படை என்ன?” என்று.

பார்த்தீர்களானால் கே.பாக்யராஜின் முன்னைய படங்களான பாமா ருக்மணி, ஒரு கை ஓசை ஆகிய படங்களுக்கும் எம்.எஸ்.வி தான் இசை. ஆனால் அங்கே ஜெயச்சந்திரன் இல்லை. இங்கே அந்த 7 நாட்களில் (பலாச்) சுளையாக நான்கு பாடல்கள் ஜெயச்சந்திரனுக்கு. ஒரு டப்பாங்குத்து ரகப் பாட்டு அதுவும் கதா நாயகி கோணத்தில் இருந்து வருவதால் அதை மலேசியா வாசுதேவனுக்குக் கொடுத்து விட்டு, மீதியெல்லாம் கதாநாயகன் மன ஓசையாக வரும் பாட்டெல்லாம் ஜெயச்சந்திரனுக்கு. இம்மாதிரியான சின்னச் சின்ன நுணுக்கங்களில் கூடப் பெரிதாகச் சாதித்துக் காட்டி விட்டுப் போயிருக்கிறார்கள் மெல்லிசை மன்னர் போன்ற இசை மகான்கள்.

அந்த 7 நாட்கள் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய அனைத்தையும் கே.ஜே.ஜேசுதாசுக்குத் தாரை வார்த்திருக்கலாம். ஆனால் அப்படியேதும் நிகழ்ந்திருந்தால் கதையோட்டத்தின் சம நிலை குழம்பி இன்னொரு “சிந்து பைரவி”த்தனமான சாஸ்திரிய இசைச் சாயம் கொண்ட படமாகத் தாக் இது அறியப்பட்டிருக்கும். இங்கே ஜெயச்சந்திரன் பாலக்காட்டு மாதவனின் அப்பாவித்தனம் ஒட்டிய, அதே நேரம் சங்கீத விற்பன்னம் கொண்டவராக அவதாரம் எடுக்கிறார். இப்போது மீண்டும் அந்த 7 நாட்கள் படப் பாடல்களைக் கேட்டால் ஜெயச்சந்திரன் குரல் துருத்தி நிற்காத ஒரு கதாபாத்திரத்தின் குரலாய்த் தான் தெரியும். இங்கே தான் பாடகனும், இசையமைப்பாளனும், இயக்குநரும் நடிகனுமாக வெற்றி பெறுகிறார்கள்.

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த

சேதி என்னவோ

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ

அந்த 7 நாட்கள் படத்தில் மிக மிகப் பிடித்த பாட்டு அல்லது முதலாவதாகப் பிடித்ததென்றால் இதைத் தான் கையைக் காட்டுவேன். சினிமா வாய்ப்புத் தேடி டாக்டர் ஆனந்த் (ராஜேஷ்) இடம் வரும் பாலக்காட்டு மாதவன்

“ஸ க ம ப…க ம க ஸ…நி ஸ நி ப…க ம நி ப…ஸா…ஸா” என்று ஸ்வரம் பாடி மெட்டமைக்கும் போது அழகிய பாடல் பிறக்கிறது. எஸ்.ஜானகி கூடச் சேரும் போது அது கனவுப் பாடலாகிறது.

“உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை

இன்று தங்கரதம் ஏறியது” இந்த இடத்தில் ஜெயச்சந்திரன் பிரசவிக்கும் குரலின் நளினம் எம்.எஸ்.வி இவரைத் தேர்ந்தெடுத்ததை நியாயம் கற்பிக்கும்.

“கவிதை அரங்கேறும் நேரம்

மலர்க் கணைகள் பரிமாறும் தேகம்”

அந்த 7 நாட்கள் படத்தில் இன்று வரை சூப்பர் ஹிட் என்ற அடையாளத்தில் வானொலிகள் கொண்டாடும் பாட்டு இது. மெல்லிசை மன்னரின் முத்திரைத் தபேலா ஒலி பாடலின் பின்னணியில் வழித்து வழித்து ஓலிப்பதைக் காது கொடுத்து ரசிப்பேன்.

“சப்த ஸ்வரதேவி உணரு

இனி என்னில் வர தானமருளு”

https://youtu.be/sb65lkOAHA8

என்று மலையாளத்தில் ஆரம்பித்துத் தமிழுக்குக் கவிதை அரங்கேறும் நேரம் என்று தாவும் முன்பே பாடலின் ஆரம்பத்தில் இங்கேயும் ஒரு ஸ்வர ஆலாபனை, தென்றலது உன்னிடத்தில் பாடல் போலவே. ஆனால் இந்த இரண்டு பாடல்களையும் முற்றிலும் மாறுபட்ட பாங்கில் ஜெயச்சந்திரனும் எஸ்.ஜானகியும் இசையணியோடு எடுத்துச் செல்வார்கள். கவிதை அரங்கேறும் நேரம் பாட்டை எழுதியது குருவிக்கரம்பை சண்முகம்.

இன்னொரு மலையாளப் பாட்டு ஆனால் முழுமையாக

“ஸ்வரராக”

https://youtu.be/bsqUx0Mh7SI.

என்று தொடங்கும் இந்தப் பாட்டு வாணி ஜெயராமை இணை சேர்த்துக் கொடுக்கும் அக்மார்க் சாஸ்திரிய இசை மெட்டு.

இவ்வாறு ஒரு ஜனரஞ்சகம் மிக்கதொரு குடும்பச் சித்திரத்தில் ஜெயச்சந்திரனுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அந்த 7 நாட்கள் பாடல்களைக் கேட்க

https://youtu.be/PxbVFpfDiug

#Jeyachandran_Songs