பி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்

ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப்படித் தான் ஆரம்பித்தது இன்றைய நாளும். பியானோ இசைக்கிறது, மெல்ல மெல்ல அந்தப் பியானோ இசை தன் ஓட்டத்தை நிறுத்த முயலும் போது ஊடறுத்து வருகின்றது “உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்” இசைக்குயிலின் குரலைக் கேட்டுப் புழகாங்கிதம் அடைந்த தோரணையில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆர்ப்பரிப்போடு பியானோ இசை சேர, இந்த முறை சாக்ஸபோனும், கூடவே மெல்லிசை மன்னரின் தனித்துவமான வாத்திய அணிகளான கொங்கோ தாள வாத்தியம் அமைக்க, மற்ற இசைக்கருவிகளும் அணி சேர்க்கின்றன.
உன்னை ஒன்று கேட்பேன் என்று சுசீலா வரிகளுக்கு இலக்கணம் அமைக்கையில் உற்றுக் கேட்டுப் பாருங்கள் கூடவே ஒரு வயலின் அதை ஆமோதிப்பதைப் போல மேலிழுத்துச் செல்லும்.
“தனிமையில் வானம்” “சபையிலே மெளனம்” என்று ஒவ்வொரு ஹைக்கூ வரிகளுக்கும் இடையில் கொங்கோ வாத்தியம் இட்டு நிரவியிருக்கும் அந்த இடைவெளியை.
இந்தப் பாடல் ஒன்றே போதும் மெல்லிசை மன்னர் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துக் காட்ட

இருள் சூழந்ததும் கொல்லையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது கூடவே அண்ணனோ, அம்மாவோ துணைக்கு வரவேண்டிய சிறு பருவம் அது. அந்த நேரத்தில் நிகழ்ந்து நினைவில் ஒட்டாத நினைவுகள் ஏராளம். ஆனால் தசாப்தங்கள் பல கழிந்தும் இன்னும் மனதில் தார் போல ஒட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளில் அடிக்கடி மீண்டும் மழைக்குப் பூக்கும் காளான் போலத் துளிர்த்துப் போவது ” அத்தா…..ன் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படி சொல்வேனடி” இலங்கை வானொலியின் இரவின் மடியில் நிகழ்ச்சியில் சுசீலா கிசுகிசுக்கிறார்.

அப்படியே வெட்கம் குழைத்த குரல் அதில் தொக்கி நிற்கும் சேதிகள் ஆயிரம் சொல்லாமல் சொல்லும். இங்கேயும் இசைக்குயில் சுசீலாவுக்கு மாற்றீடைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. “கிறுக்கா”, “லூசுப்பையா” என்றெல்லாம் ஏகபோக உரிமை எடுத்துப் பாடும் இந்த நாள் அதிரடிப்பாடலுக்கு முழு நேர்மறை இலக்கணங்களோடு நாணம் கலந்து குழைத்த மெட்டு. குறிப்பா முதல் அடிகளைச் சுசீலா பாடிய ஒரு நிமிடம் கழித்து வரும் இடையிசையைக் கேளுங்கள் அப்படியே குறும்பு கொப்பளிக்குமாற்போலச் சீண்டிப்பார்க்கும் இசை. “அத்தான் என்னத்தான்” மாலை நேரத்து வீட்டு முற்றத்தில் ஈரும் பேனும் எடுக்கையில் நம்மூர்ப்பெண்கள் முணுமுணுத்துப் பாடியதை அரைக்காற்சட்டை காலத்தில் கேட்ட நினைவுகள் மங்கலாக.

பாடல்கள் மீது நான் கொண்ட நேசத்தை மட்டும் புரிந்து கொண்டவர்கள் தமது உறவினர்களின் வீட்டுத் திருமணங்களுக்கு அணி சேர்க்க என்னிடம் திருமணப்பாடல்களைச் சேகரித்துத் தருமாறு கேட்பார்கள். அப்போது நான் ஏதோ ஒரு இயக்குனர் இசையமைப்பாளர் ஒருவரிடம் சிச்சுவேஷன் சாங் போடுங்க என்று கேட்ட தோரணையில் அதீத ஆர்வம் மேலிடப் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் கொடுப்பேன். ஆனால் “இதெல்லாம் சரிவராது, நல்ல குத்துப்பாட்டு ரெக்கார்ட் பண்ணித் தாருங்கள்” என்று என் தொகுப்பை நிராகரிக்கும் போது அங்கீகரிக்கப்படாத புது இசையமைப்பாளரின் உணர்வோடு மனதைத் தொங்கப் போடுவேன். ஆனால் சிலபாடல்கள் நான் ரசிக்க மட்டுமே என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பதுண்டு. அந்த ரகமான பாடல் தான் இது.
“வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி” என்று நிதானித்து ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பியுங்கள். அப்படியே பிரமாண்டமானதொரு மனம் ஒருமித்த கல்யாண வீட்டை உங்கள் மனம் மெல்ல மெல்லக் கட்டத் தொடங்கும். ஒவ்வொரு வரிகளும் அந்தக் காட்சிப்புலத்தை உணர்ந்து பாடும் வரிகளாக அழுத்தமாகப் பதித்திருப்பார் இசையரசி பி.சுசீலா.
இங்கும் வழக்கமான எம்.எஸ்.வியின் ஆவர்த்தனங்கள் தான், ஆனால் மணமேடையின் காட்சிப்புலத்துக்கு இயைவாக ஒலிக்கும் நாதஸ்வர மேள தாளங்கள் பொருந்திப் போகும் இசைக் கூட்டணி.

“காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி ” மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நீங்கள் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது என்பது எனக்குத் தெரியும், அதைப் போல நான் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாடலை அதிகம் கேட்டு நான் வளரக்காரணம் சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன “நேயர் விருப்பம்” நிகழ்ச்சி. ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் “காவியமா நெஞ்சின் ஓவியமா” என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் “காத்திருந்த மல்லி மல்லி” என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான்.
ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா? (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)
இந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்
“ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ” (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.

இந்த நான்கு முத்தான பாடல்களுமே போதும் என்று நினைக்கிறேன் பி.சுசீலாவின் குரல் ஏன் எனக்குப் பிடிக்கும் என்று.

இளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று பின்னணிப் பாடகி சித்ராவின் பிறந்த நாள். ட்விட்டர் மூலம் ஞாபகப்படுத்திய நண்பர் சுரேஷுக்கு நன்றி. பாடகி சித்ராவுக்கு சிறப்பான பதிவு ஒன்று தயாரிக்க அவகாசம் கிட்டவில்லை. ஆனால் அவருக்கு வரமாகக் கிடைத்த ஒரு பாடலை மீண்டும் தந்து வாழ்த்துகின்றேன் உங்களோடு.

இந்தத் தகவல் 2007 ஆம் ஆண்டில் பாடகி சித்ரா சிட்னி வந்து இசை மழை பொழிந்த போது சொன்னது.இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை. இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.

தெலுங்கில் “ஜல்லண்ட” என்றும் தமிழில் “ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்” என்றும் சித்ரா பாடும் அந்தப் பாட்டில் இசைஞானி இளையராஜாவே ஆர்மோனியம் வாசித்த பகுதி இதுதான்.

அந்த ஆர்மோனிய இசையுடன் சித்ரா பாடும் தெலுங்குப் பாடல் “ஜல்லண்ட”

அதே பாடல் தமிழில் “ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்”

சிறப்புப்பதிவில் போனஸ் பாடலாக றேடியோஸ்பதி நலன்விரும்பி (!) ஆயில்யன் விருப்பமாக, சின்னக் குயில் சித்ரா “பூவே பூச்சூடவா” திரைக்காகப் பாடும் “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா”

பாடகி சுஜாதாவின் ஆரம்ப காலம்

தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் சுஜாதாவின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டு. இந்தப் பதிவை நான் போடுவதற்குக் காரணமாக அமைந்ததே நான் இங்கே தரும் முதல் பாடல் இன்று பல நாட்களின் பின் அடிக்கடி முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது.

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது “காயத்ரி” என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று. காயத்ரி நாவலின் முடிவில் சொல்லப்பட்ட விடயங்களைச் சினிமாவுக்குப் பொருந்தாது என்று திரைக்கதை அமைத்த பஞ்சு அருணாசலம் மாற்றி விட்டார் என்று எழுத்தாளர் சுஜாதா தன் குறிப்புக்களில் சொல்லியிருக்கின்றார். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல் “காலைப்பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்” அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் அறிமுகத்துக்குத் துணை போன பெருமையோடு அவரின் ஆரம்பகாலப் படங்களுக்குப் பெருவாரியாகப் பாடல்கள் எழுதிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தவகையில் அமைந்தது தான் “காலைப்பனியில் ஆடும் மலர்கள்” என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் லலலலா, இம்ஹிம் இம்ஹிம் என்று சங்கதிகளைக் குரலிசையாக ஹம் ஐ லாவகமாகச் செருகியிருப்பது சிறப்பு. ஒரு திகில்ப்படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா

மேற்குறித்த பாடலை Airtel Top Singer ஸ்ரீவித்யா பாடும் கனிவு கூடக் கிறங்க வைக்கின்றது.

ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது “கவிக்குயில்” வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது “காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ” இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய “காதல் ஓவியம் கண்டேன்” பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன். “காதல் ஓவியம் கண்டேன் கனவோ” 33 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது.

மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் “கா” என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு.

சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி.

பி.கு: சுஜாதாவின் குரலில் வந்த “ஒரு இனிய மனது” பாடல் “ஜானி” திரைப்படப் பின்னணி இசைத்தொகுப்போடு வரவிருக்கின்றது.

சுந்தரக் குரல் சொந்தக்காரி சுனந்தா

திரையுலகை எடுத்துக் கொண்டா ல் திறமை இருந்தால் மட்டுமல்ல அதிஷ்டமும் கூடி வந்தால் தான் வாய்ப்புக்கள் கிட்டும் என்பதற்கு திரையிசைப்பாடகர்கள் கூட விதிவிலக்கல்ல. அப்படி ஒரு எடுத்துக்காட்டுத் தான் பாடகி சுனந்தா.

புதுமைப்பெண் திரைப்படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவால் காதல் மயக்கம் பாடவைத்து தன் குரலால் மயக்கியவர். தொடர்ந்து அத்தி பூத்தாற்போலத்தான் சுனந்தாவுக்கு வாய்ப்புக்கள் கிட்டியிருக்கின்றது. திரையிசையை எடுத்துக் கொண்டால் என்னதான் சிறப்பான குரல்வளம் இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப்பாடும் பாங்கும் கைவரப்பெற்றிருக்க வேண்டும். இது காதல் ரசம் கொட்டும் பாடலில் இருந்து, வீரஞ்செறிந்த மிடுக்கான பெண் குரலாக வளைந்தும் கொடுக்க வேண்டும். அந்த வகையில் எஸ்.ஜானகியின் விதவிதமான பரிமாணங்களுக்கு (சித்ரா கூட இந்த வகையில் முயற்சித்திருக்கிறார்)ஈடு கொடுக்கும் வகையில் எண்பதுகளில் பாடகிகள் இல்லையென்றே கூறிவிடலாம். சுனந்தா கூட இந்தப் பட்டியலில் சேர்த்தி. காதலின் ஆத்மார்த்த ராகமாக ஒலிக்கும் அவர் குரலை வேறு எந்த எல்லைக்கும் பயன்படுத்த முடிவதில்லை.
கேரளத்தில் இருந்து வந்த குயில்களில் சுனந்தாவும் சேர்த்தி. இவருக்கு ஈடுகொடுக்கும் அலைவரிசையில் அமைந்த பாடகர் ஜெயச்சந்திரன் அழகாகப் பொருந்தி சிறப்புச் சேர்த்த பாடல்கள் இன்றும் கேட்க இனிமையானவை.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் “செண்பகமே செண்பகமே” என்ற இனிய பாடலை என்னதான் பெரிய பாடகியாக இருந்தாலும் ஆஷா போன்ஸ்லே பாடும் போது தமிழை விட்டு விலகிய ஒரு அன்னியத்தன்மை தெரியும். அதே பாடலை சந்தோஷ மெட்டில் சுனந்தா பாடிய போது ஆஷாவையே ஓரம் கட்டிவிட்டது போன்ற பரிமாணத்தைக் காணலாம். இன்னொரு சிறப்பான உதாரணம், சொல்லத் துடிக்குது மனசு படத்தில் வரும் “பூவே செம்பூவெ” இந்தப் பாடலை ஆண்குரலில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் போது அதே அலைவரிசையில் பெண்குரலாக சுனந்தா பாடியதும் கேட்கத் திகட்டாத தேன்மழை. உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் “என்ன சமையலோ” என்ன கலகலப்பான பாடலில் சுனந்தாவின் குரல் வித்தியாசமாக வெளிப்பட் டிருக்கிறது.

தொண்ணூறுகளில் செவ்வந்தி படத்தில் வரும் “செம்மீனே செம்மீனே”, உழைப்பாளி படத்தில் வரும் “அம்மா அம்மா எந்தன் ஆருயிரே”, வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் “மன்னவா மன்னவா” பாடல்கள் சுனந்தாவுக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புக்களிலும் சிக்சர் அடித்த பாட்டுக்கள். சுனந்தாவின் குரலை பலசமயம் நினைவு படுத்தும் குரலாக பின்னாளில் அறிமுகமாகி புயல்போல் புரட்டிப் போட்ட சொர்ணலதாவின் குரல் சுனந்தாவிற்கு கிடைத்த மிச்ச சொச்ச பாடும் வாய்ப்புக்களைக் கூடப் பங்கு போட்டு விட்டது போல.

இன்றைய யுகத்து நாயகிகளுக்கும் பொருந்திப் போகக் கூடிய சுந்தரக் குரல் கொண்ட சுனந்தாவின் பாடல்பெட்டகத்தில் இருந்து ஒரு சிலபாடல்களை உங்கள் ரசனைக்கு விருந்தாகப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

முதலில் வருவது சுனந்தாவை தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய “காதல் மயக்கம்” ஜோடி கட்டி இணைந்து பாடுவது ஜெயச்சந்திரன்

சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தில் இருந்து சுனந்தா பாடும் “பூவே செம்பூவே” என்ற இதமான ராகம் இதயத்தில் ஊடுருவ

காதல் பாடல்களில் என் விலக்க முடியாத விருப்பத் தேர்வாக இருக்கும் “பூ முடிச்சு பொட்டு வச்ச வட்ட நிலா” ஜெயச்சந்திரன், சுனந்தா குரல்களில் “எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்” படத்தில் இருந்து

இசைஞானி இளையராஜா ஹீரோவாக இருந்த படங்களில் ஒன்றான “எங்க ஊரு பாட்டுக்காரன்” படத்தில் இருந்து மனோவுடன் சுந்தரக் குரல் சுனந்தா பாடும் “செண்பகமே செண்பகமே”

எஸ்.பி.பி, சித்ராவோடு சுனந்தா பாடும் வித்தியாசமான பாடல் ரகமான “என்ன சமையலோ”, உன்னால் முடியும் தம்பி திரைக்கா க

செவ்வந்தி திரையில் இருந்து கலக்கல் ஜோடி ஜெயச்சந்திரன், சுனந்தா மீண்டும் இணையும் “செம்மீனே செம்மீனே”

குழந்தையை மட்டுமா தாலாட்டியது, இல்லை இல்லை நம் எல்லோரையும் தாலாட்டும் சுனந்தாவின் “மன்னவா மன்னவா” , வால்டர் வெற்றிவேல் தருகிறது.

நிறைவாகவும் “நிறைவாகவும்” ஜெயச்சந்தி ரன், சுனந்தா ஜோடி கட்டும் “ஒரு கோலக்கிளி” பொன் விலங்கு திரைப்படத்துக்காக