80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 2

கடந்த பதிவின் தொடர்ச்சியாக 80 களில் மலர்ந்த மேலும் சில அரிய பாடல்கள் இந்தப் பதிவிலும் இடம்பிடிக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் இசையமைத்து இந்தப் பாடற் தொகுப்பு மலர்கின்றது.
அந்த வகையில், முதலில் வரும் பாடலை இசையமைத்திருக்கின்றார் டி.ராஜேந்தர். இவர் தன்னுடைய படங்கள் அன்றி வெளியார் படங்கள் சிலவற்றிலும் சிறப்பாக இசையமைத்திருக்கின்றார் என்பதற்கு உதாரணமாக மலரும் இந்த இனிய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல்களில், “பூக்களைப் பறிக்காதீர்கள்” திரையில் இடம்பெறும் “காதல் ஊர்வலம் இங்கே” என்ற பாடலாகும்.

தொடர்ந்து தேவேந்திரன் இசையில் “பொங்கியதே காதல் வெள்ளம்” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாட மண்ணுக்குள் வைரம் திரைக்காக இடம்பெறுகின்றது.

அடுத்து, நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் நாயகனாக நடித்த “பாய்மரக்கப்பல்” திரையில், கே.வி.மகாதேவன் இசையில் வரும் “ஈரத்தாமரைப் பூவே” என்ற இனிய பாடல் எஸ்.பி.சைலஜா பின்னணிக்குரலிசைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.

எண்பதுகளில் இளையராஜாவுக்கு மாற்றீடாக விளங்கிய சந்திரபோஸ் இசையமைத்த படமான “விடுதலை” திரையில் இருந்து “நீலக்குயில்கள் ரெண்டு” பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.

நிறைவாக மனோஜ் கியான் இரட்டையர்கள் இசையமைப்பில் வரும் “ஒரு இனிய உதயம்” திரைப்பாடலான “ஆகாயம் ஏனடி அழுகின்றது” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகின்றார்கள்.

பாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் 😉

80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1


இந்த ஒலித்தொகுப்பில் 80 களில் வெளிவந்த அரியபாடல்கள் சில இடம்பெறுகின்றன. அந்தவகையில்,

“அம்மா பிள்ளை” திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “இனிய தென்றலே இரு கைகள் வீசி வா” என்ற பாடல் முதலில் இடம்பெறுகின்றது. பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து.

வி.குமார் இசையில் “மங்கள நாயகி” திரைப்படத்தில் இருந்து “கண்களால் நான் வரைந்தேன், அன்பெனும் ஓர் கவிதை ” என்ற இனிய பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், பி சுசீலா குரல்களில் ஒலிக்கின்றது.
இந்தப் பாடலைக் கேட்கும் போது “உன்னிடம் மயங்குகிறேன்” பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாயது.

ராம் லக்ஷ்மன் இசையமைக்க “காதல் ஒரு கவிதை” திரைப்படத்தில் இருந்து “காதல் பித்து பிடித்தது இன்று” என்ற பாடல் நிறைவாக ஒலிக்கின்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் Maine Pyar Kiya என்று வெளிவந்திருந்தது. ராம் லக்ஷ்மன் என்ற இசையமைப்பாளரின் பெயர் வந்த காரணமும் இவ்வொலித் தொகுப்பில் இடம்பெறுகின்றது.

பாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் 😉

வி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் – பாகம் 2


வி.எஸ்.நரசிம்மனின் தேனிசையில் மலர்ந்த பாடல்களின் தொகுப்பு ஒன்றை முன்னர் தந்திருந்தேன். அதனைக் கேட்க

தொடர்ந்து அடுத்த பாகமாக வி.எஸ்.நரசிம்மனின் மீதிப் பாடல்களோடு, பின்னணியில் சில துணுக்குகளுடன் மலர்கின்றது இப்பதிவு.

முதலில் வருவது, கே.பாலசந்தரின் இயக்கத்தில் “கல்யாண அகதிகள்” திரையில் இருந்து சுசீலா பாடும் “மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்”,

அடுத்து, இளையராஜாவை மூலதனமாக வைத்துப் பல இசைச் சித்திரங்களை அளித்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி தயாரிப்பில், ஈ.ராம்தாஸ் இயக்கத்தில் வந்த படம் “ஆயிரம் பூக்கள் மலரட்டும்”. இத்திரைப்படத்தில் இருந்து “ஆயிரம் பூக்கள் மலரட்டும்” என்ற பாடல் பி.சுசீலா குரலில் ஒலிக்கின்றது.

தொடர்ந்து கே.பாலசந்தரின் முதல் சின்னத்திரை விருந்தான “ரயில் சினேகம்” படைப்பில் “இந்த வீணைக்குத் தெரியாது” என்ற பாடலை கே.எஸ்.சித்ரா பாடுகின்றார்.

“தாமரை நெஞ்சம்” என்ற தமிழ்ப்படத்தினைக் கன்னடத்தில் “முகிலு மல்லிகே” என்று மொழிமாற்றம் செய்தபோது வி.எஸ்.நரசிம்மனுக்கு முதன் முதலில் கன்னடத்திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இருந்து ஒரு பாடல் பி.சுசீலா, வாணி ஜெயராம் இணைந்து பாடக் கேட்கலாம்.

அடுத்து சுரேஷ் மேனன் இயக்கத்தில் வந்த “பாச மலர்கள்” திரைப்படத்தில் இருந்து சுஜாதா, எஸ்பி.பி பாடும் இனிமையான பாடலான “செண்பகப் பூவைப் பார்த்து” என்ற பாடல் ஒலிக்கின்றது.

நிறைவாக இளையராஜாவின் தனி இசைப் படைப்புக்களுக்கு உருவம் கொடுத்தவர்களில் ஒருவரான வி.எஸ்.நரசிம்மன் இல் வழங்கும் வயலின் இசை மனதை நிறைக்க வருகின்றது.
தொடர்ந்து இந்த ஒலித்தொகுப்பைக் கேளுங்கள்

இந்தத் தொகுப்பை வெளியிடும் போது “இந்த வீணைக்குத் தெரியாது” என்ற பாடலின் ஆண்குரலைத் தருமாறு நண்பர் ரவிசங்கர் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அவரின் விருப்பை நிறைவு செய்ய, இதோ என் ஒலிக்களஞ்சியத்திலே, நான் ஊருக்குப் போனபோது ஒலிப்பதிவு செய்து பத்திரப்படுத்திய பாடலான ” இந்த வீணைக்குத் தெரியாது” என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.

“அழியாத கோலங்கள்” பாடல் பிறந்த கதை


அழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் “நான் என்னும் பொழுது…..” என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் “அழியாத கோலங்கள்”.

இந்தப் படத்தில் இடம்பெறும் “நான் என்னும் பொழுது” என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் “ஆனந்த்” என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு “அழியாத கோலங்கள்” திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும் இந்த ஒலிப்பகிர்வில் இம்மூன்று பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.
புகைப்படம் உதவி: சலீல் செளத்ரி பிரத்யோகத் தளம்

புதுப் பாட்டுக்கள் கேட்போமா….?

என்னடா இந்தாளு 80 களுக்கு முந்திய காலத்தின் பாட்டுக்களைப் போட்டுச் சாவடிக்கிறாரே என்று இளசுகள் ஏங்கும் குரல் கேட்கின்றது. எனவே இந்தப் பதிவில் சமீபத்தில் திரைக்கு வந்த, வரப் போகின்ற திரையிசைப் பாடல்களின் அணிவகுப்பு ” புத்தம் புது வாசம்” என்ற பெயரில் இடம்பெறுகின்றது. இதில் விசேசமாக, தமிழ் திரையுலகில் சமீபகாலமாகக் கூட்டணி ஆட்சி செய்து வரும் ஏழு இசையமைப்பாளர்களின் பாடல்கள் இடம்பெறுகின்றன.
இந்தத் தொகுப்பில் பாடல்கள் குறித்த சிறு அறிமுகத் துணுக்குகளைக் கொடுத்து நிகழ்ச்சியைப் படைத்திருக்கின்றேன்.

பாகம் 1 இல் இடம் பெறும் பாடல்கள்

1. பள்ளிக்கூடம் திரைப்படத்தில் இருந்து பரத்வாஜ் இசையில் ” இந்த நிமிடம்” என்ற பாடல் சிறீனிவாஸ், ஜனனி குரல்களில் ஒலிக்கின்றது.

2. அம்முவாகிய நான் திரைப்படத்தில் இருந்து சபேஷ்-முரளி இசையில் “உன்னைச் சரணடைந்தேன்” என்ற பாடல் ஹரிஸ் ராகவேந்தர், கல்யாணி குரல்களில் ஒலிக்கின்றது.

3. கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் இருந்து தீனா இசையில் ” உப்புக்கல்லு” என்ற பாடல் பாம்பே ஜெயஸ்ரீ குரலில் ஒலிக்கின்றது.

பாகம் ஒன்றைக் கேட்க

பாகம் 2 இல் இடம்பெறும் பாடல்கள்

1. கிரீடம் திரைப்படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் இசையில் “விழியில்” என்ற பாடல் சோனு நிகாம், சுவேதா குரல்களில் ஒலிக்கின்றது.

2. பீமா திரைப்படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “ரகசியக் கனவுகள்” என்ற பாடல் ஹரிஹரன், மதுஸ்ரீ மதுஸ்ரீ

3. வீராப்பு திரைப்படத்தில் இருந்து டி.இமானின் இசையில் ” புலியை கிளி ஜெயிச்சாக் காதல்” என்ற பாடல் ஹரிஸ் ராகவேந்திரா மற்றும் மதுஸ்ரீ மதுஸ்ரீ

4. தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ” முகத்தை எப்போதும்” என்ற பாடல் ஹரிசரண் மற்றும் யுவன் சங்கர் ராஜா குரல்களில் ஒலிக்கின்றது.

பாகம் இரண்டைக் கேட்க

பாடிப் பறந்த குயில்கள் – பாகம் 2


ஒரு காலகட்டத்தில் மிகவும் உச்சத்தில், அல்லது புகழேணியில் இருந்து பின் ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாட வந்த பாடகர்களின் பாடல்களின் அணிவகுப்பாக மலரும் “பாடிப் பறந்த குயில்கள்” பாகம் இரண்டு இப்பதிவில் இடம்பெறுகின்றது.

முதலில் திரைப்பாடலில் மட்டுமல்ல, நம் நிஜவாழ்விலும் ஜோடி போட்ட பாடகர் சக இசையமைப்பாளர், ஜிக்கி ஆகியோர் பாடிய “புகுந்த வீடு” பாடலான “செந்தாமரையே” என்ற பாடல் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையில் மலர்கின்றது. ஏ.எம்.ராஜாவைப் பொறுத்தவரை ஒரு உச்சத்தில் இருந்து பின் வாய்ப்புக்கள் வற்றி எழுபதுகளில் மீண்டும் வந்த வாய்ப்பு இது.

அடுத்ததாகத் தன் கணவர் ஏ.எம்.ராஜா மறைவுக்குப் பின் ஒதுங்கிக் கொண்ட பாட்டுக்குயில் ஜிக்கி நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய பாடல்களில் ஒன்றான ” வண்ண வண்ணச் சொல்லெடுத்து” என்ற பாடல், விஸ்வநாதன் இளையராஜா கூட்டுச் சேர்ந்த “செந்தமிழ்ப் பாட்டு” திரையில் இருந்து ஒலிக்கின்றது.

ஒரு காலகட்டத்தில் ஓய்வெழிச்சல் இல்லாது இசையமைத்துக் கொண்டே தானும் சிறப்பான பாடல்களை அளித்த எம்.எஸ்.விஸ்வநாதன் “காதல் மன்னன்” திரையில் தானும் நடித்துக் கொண்டே நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய பாடலான “மெட்டுத் தேடித் தவிக்குது” என்ற பாடலை பரத்வாஜ் இசையில் மலர்கின்றது.

நிறைவாகப் பழம்பெரும் பாடகிகள் இருவர் நீண்ட இடைவெளிக்குப் பின் பாடிய, அதுவும் ஜோடி போட்டுக் கொண்ட பாடல் “நாயகன்” திரையில் இருந்து வருகின்றது. அந்தப் பாடகிகள் ஜமுனா ராணி மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி, “நான் சிரித்தால் தீபாவளி” என்று இளையராஜா இசையில் பாடுகின்றார்கள்.

ஒலித் தொகுப்பைக் கேட்க

வி.எஸ்.நரசிம்மனின் தேன் மழையிலே…!

இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து அடுத்த வரிசையில் நான் நேசிக்கும் இசையமைப்பாளர்களில் முதன்மையானவர் வி.எஸ்.நரசிம்மன். கே.பாலசந்தர் தனது “அச்சமில்லை….அச்சமில்லை…!” திரைக்காக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணியாற்றியது மிகச் சொற்பப் படங்களே. ஆனால் பல பாடல்களுக்குப் பின்னால் இவரின் ஆவர்த்தனம் சேர்ந்திசையாக மிளிர்ந்திருக்கின்றது.

இன்றைய ஒலிப்பகிர்வில் வி.எஸ்.நரசிம்மன் திரையுலகிற்கு இசையமைப்பாளராக வந்த அறிமுகம் குறித்த பார்வையும் தொடர்ந்து “அச்சமில்லை அச்சமில்லை” திரைக்காக இவர் முதன் முதலில் இசையமைத்த “ஆவாரம் பூவு” பாடலும் இடம்பெறுகின்றது.


தொடர்ந்து பாலசந்தரின் உதவியாளராக இருந்த இயக்குனர் அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த “புதியவன்” திரைக்காக “நானோ கண் பார்த்தேன்” என்ற பாடல் என் பாடல் பொக்கிஷத்திலிருந்து உங்களுக்காக வெளிவருகின்றது.

வி.எஸ்.நரசிம்மன் இசையமைத்த மற்றைய அனைத்துத் திரைப்படப் பாடல்களும் அவை பற்றிய குறிப்புக்களும் அடுத்தடுத்த பகுதிகளில் வெளிவரும். இந்த நிகழ்ச்சிக்கான தகவல் குறிப்புக்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் தொடராக வெளிவந்த “திரையிசைச் சாதனையாளர்கள்” பகுதியில் இருந்து பத்திரப்படுத்தித் தேவையான பகுதிகளை மட்டும் வானொலி வடிவமாக்கியிருக்கின்றேன். இதோ தொடர்ந்து கேளுங்கள்.

பாடிப் பறந்த குயில்கள் – பாகம் 1

பாடிப் பறந்த குயில்கள் என்ற புதிய தொடர் இன்று முதல் றேடியோஸ்பதியில் ஆரம்பிக்கின்றது. இந்தத் தொடர் மூலம், ஒரு காலகட்டத்தில் தமிழ்த் திரையிசை உலகில் கொடிகட்டிப் பறந்த பாடகர்கள், ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாட வந்த போது வந்த பாடல்கள் இடம்பெறுகின்றன.

அந்த வகையில், இன்றைய பதிவில் வரும் மூன்று பாடல்களில் முதலாவதாக வருவது,
டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா ஜோடி சேர்ந்த “தாய்க்கு ஒரு தாலாட்டு” திரைப்படத்தில் இருந்து “இளமைக் காலம் எங்கே” என்ற இனிய பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்கின்றது. இந்தப் படத்தை இயக்கியிருந்தார், மலையாளத் திரையுலகப் பிரபலம் பாலச்சந்திர மேனன்.

தொடர்ந்து மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “கண்ணுக்கு மை எழுது” திரைப்படத்தில் நடிகை மற்றும் பாடகி பி.பானுமதி, பி.எஸ்.சசிரேகாவின் ஆரம்பக் குரலோடு பாடும் “வாடாமல்லியே நான் சூடா முல்லையே” பாடல் அரங்கேறுகின்றது.
இசை இளையராஜா.

இந்தப் பாகத்தின் நிறைவுப் பாடலாக P.B.சிறீநிவாஸ் சங்கீதாவோடு பாடும் “உயிரே உன்னை இதயம் மறந்து செல்லுமோ” என்ற பாடல் ஆதித்யனின் இசையில், “நாளைய செய்தி” திரைக்காக வருகின்றது.

“நெஞ்சத்தைக் கிள்ளாதே”

“நெஞ்சத்தைக் கிள்ளாதே”

ஒரு வருடம் ஓடி வெற்றி கண்ட படம்!
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான (முதல் முறை) தேசிய விருது “பிரசாத்” ராமநாதனுக்கும், சிறந்த மாநிலத்திரைப்பட விருது என்ற வகையில் இயக்குனர் மகேந்திரனுக்குமாக மூன்று தேசிய விருது கிடைத்த திரைப்படம்.

ஆனால் இப்படத்தின் கதைக்கரு சில வினாடிகளிலேயே இயக்குனர் மகேந்திரனின் சிந்தனையில் பிறந்தது என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் உண்மை.

“சினிமாவும் நானும்” என்ற தன் நூலில் “நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைக்கரு உருவான அந்த சுவாரஸ்யமான கணங்களை விபரிக்கின்றார் இயக்குனர் மகேந்திரன். அதை வானொலி வடிவமாக்கியிருந்ததை இங்கே தருகின்றேன், தொடர்ந்து அக் கதை பிறந்த கதையை நினைவுபடுத்தும்
“பருவமே புதிய பாடல் பாடு” என்ற இனிய பாடலும் ஒலிக்கின்றது. இதோ கேளுங்கள்.

M.M கீரவாணியின் கீதங்கள்

கடந்த பகுதியில் மரகதமணி என்னும் M.M. கீரவாணியின் அறிமுக காலத்துத் தமிழ்ப்பாடல்களைத் தந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக விட்டுப் போன பாடல்களோடு இந்தப் பதிவில் தொடர்கின்றேன்.

இந்த ஒலிப்பதிவில், கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த “ஜாதி மல்லி” திரைக்காக கே.எஸ்.சித்ரா பாடும் மறக்கமுடியவில்லை பாடல் இடம்பெறுகின்றது.மலையாள நடிகர்
முகேஷ், குஷ்பு ஜோடி நடித்திருந்தது இப்படத்தில்.

தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப்படமாக அமைந்த டாக்டர் ராஜசேகரின் நடிப்பில் வந்த திரைப்படமான “அல்லாரி பிரியுடு” , தமிழில் “யாருக்கு மாப்பிள்ளை யாரோ” என்று மொழிமாற்றப்பட்டபோது அருமையான பாடல்களை இவர் தமிழில் மொழிமாற்றித் தந்திருந்தார். அந்தப் பாடல்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “அன்னமா! உன் பேர் என்பது அன்னமா?” என்ற இனிய பாடல் இடம்பெறுகின்றது. மரகதமணி/M.M. கீரவாணி இசையமைத்த பாடல்களிலேயே எனக்குப் பிடித்தமான பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இதுவே.

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை ஸ்ரீதேவி , அரவிந்த் சாமியுடன் இணைந்து மலையாள இயக்குனர் பரதனின் இயக்கத்தில் “தேவராகம்” திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே காதில் தேன் வந்து பாயும் இனிமை கொண்டவை. அந்தத் திரைப்படத்தில் இருந்து ” சின்ன சின்ன மேகம் என்ன கவிதை பாடுமோ” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுஜாதா ஆகியோர் பாடுகின்றர்கள்.

எம்.எம்.கீரவாணிக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைக் கொடுத்தது “அன்னமய்யா” என்ற தெலுங்குப்படம். நாகர்ஜீனா நடிப்பில் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இருந்து “அந்தர் யாமி” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடுகின்றனர்.

நிறைவாக “வானமே எல்லை” திரையில் இருந்து “சோகம் இனியில்லை” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட நிறைவு பெறுகின்றது M.M கீரவாணியின் கீதங்கள் என்ற இந்த இசைத் தொகுப்பு.