ரஜினி 60 – சிறப்பு “பா”மாலை


ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.

மலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.

சினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் இருந்திருக்கின்றன. அதில் ரஜினி என்ற தனி மனிதனும் விதி விலக்கல்ல. ஆனால் தான் சினிமாவில் வகுத்துக் கொண்ட பாதையை சீராக வைத்துக் கொண்டு அதிலிருந்து இம்மியும் பிசகாமல்
பயணிக்கின்றான் இந்தக் கலைஞன். எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.

ஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் நானும்.
மன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வில் இருந்து எழுப்பி நின்று நிமிரவும் இவர் படங்கள் டாக்டர் கொடுக்காத மருந்து வகைகள்.

எஸ்.பி முத்துராமன் போன்ற இயக்குனர்களின் நடிகனாக இருந்த ரஜினி பின்னாளில் தனக்கான கதை, பாத்திரம் என்பதை வடிவமைக்கும் அளவுக்கு உரிமை எடுக்கக் காரணம் தன்னை நேசிக்கும் ரசிகனைப் பூரண திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.

இன்று இந்தியாவின் குமரி முதல் இமயம் வரை தெரிந்த பிரபலம் என்ற அந்தஸ்து இருந்தாலும், தன் தலையில் கர்வத்தை இமயம் வரை ஏற்றாத கலைஞர் இவர்.

ஆண்டுகள் அறுபதைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு நான் தருகிறேன் “பா”மாலை. இவை ரஜினியோடு இது நாள் வரை பணியாற்றிய ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் இசையில் இருந்தும் கோர்த்த முத்துக்கள்.

முதலில் வருவது இசைஞானி இளையராஜா இசையில் முரட்டுக் காளை படத்தில் இருந்து “பொதுவாக என் மனசு தங்கம்”

அடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “போக்கிரி ராஜா” திரையில் இருந்து “போக்கிரிக்கு போக்கிரி ராஜா”

சந்திர போஸ் இசையில் வரும் இந்தப் பாடல் “ராஜா சின்ன ரோஜா” திரையில் இருந்து “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா”

இசைப்புயல் ரஹ்மானோடு “முத்து”வாக் கைகோர்த்து “ஒருவன் ஒருவன் முதலாளி

இந்த பால்காரனுக்கு பால் கறக்கவும் தெரியும் பாசம் கலந்து கொடுக்கவும் தெரியும், அண்ணாமலைக்கு இசை கொடுக்கிறார் தேவா. வந்தேண்டா பால்காரன்

“ஹலோ ரஜினி மாமா, உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா” , நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று தமிழ் மாறிய அம்சலோகா இசையில்

தேவுடா தேவுடா என்று இடைவேளைக்குக்குப் பின் வந்து ஒரு வருஷம் ஓட வைத்தார் சந்திரமுகியில். இசை வித்யாசாகர்.

“தேவாமிர்த”மாய் ஒலிக்கும் இந்தப் பாடல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அலெக்ஸ் பாண்டியனைக் காட்டிய மூன்று முகம் திரையில் இருந்து

பாடும் நிலா பாலு சூப்பர் ஸ்டாருக்கு மெட்டுக் கட்டிய “துடிக்கும் கரங்கள்” படத்தில் இருந்து “சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்”

“தப்புத் தாளங்கள்” பாணியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த அந்தப் படத்தில் இருந்து விஜயபாஸ்கர் பாட்டுக் கட்டிய “என்னடா பொல்லாத வாழ்க்கை”

விஜய் ஆனந்த் என்ற இசையமைப்பாளருக்கு முகவரி ரஜினியின் “நான் அடிமை இல்லை” படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் ஒலிக்கின்றது”

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜவை அறிமுகப்படுத்திய பாடல் “பாண்டியனின் ராஜ்ஜியத்தில்

ஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் குசேலன் மூலம் ஒரு வாய்ப்பு “போக்கிரி ராஜா நீயும் பொல்லாதவன்”

ரஜினி ரசிகர்களின் பெரு விருப்பத்துக்குரிய பாடல் “ஆசை நூறு வகை” அடுத்த வாரிசில் இருந்து போனஸ் பாடலாக.

“தேவர் மகனில்” சிவாஜியையும், எத்தனையோ படங்களில் கமலையும், ஏன் சமீபத்தில் “பா”வில் அமிதாப்பையும் பாட வைத்த இசைஞானி இளையராஜா, ரஜினியை மட்டும் விட்டு விடுவாரா என்ன.
“அடிக்குது குளிரு” அது சரி சரி 😉

நிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கை பாடங்களை
நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலேஎல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலை இடு
இல்லை என்றால் ஆளை விடு

2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்

வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.
2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக றேடியோஸ்பதி ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை மையமாக வைத்துப் போட்டிகளை நடாத்தியதை நீங்கள் அறிவீர்கள். தெரியாதவர்களுக்காக

2007 இல்
உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?

2008 இல்
2008 இன் சிறந்த இசைக்கூட்டணி?

ஆகிய போட்டிகளை உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்த வகையில்
இந்த 2009 ஆம் ஆண்டு மூன்றாவது ஆண்டாக வரும் றேடியோஸ்பதி போட்டியை சற்று வித்தியாசமாகத் தரலாம் என்று வந்திருக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைசைப்பாடல்கள், மற்றும் 2008 இல் பாடல்கள் வெளியாக 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள், மற்றும் தமிழ்த் திரையிசைமைப்பாளர்களை மையப்படுத்தி இந்தப் போட்டி அமைகின்றது.

போட்டி இதுதான், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புக்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் கட்டுரை அல்லது பதிவு எழுத வேண்டும். பதிவர்கள் தமது சொந்த வலைப்பதிவில் எழுதிய பின்னர் கட்டுரைக்கான தொடுப்பை இங்கே பின்னூட்டமாகத் தர வேண்டும்.

பதிவர்களாக இல்லாதவர்கள் தமது கட்டுரைகளை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் தற்காலிகமாக ஒரு இடத்தில் அது வலைப்பதிவாகத்
தரப்படும்.

போட்டிக்கான ஆக்கங்கள்

1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்
ஏன் கவனிக்கப்பட்டிருந்தார், அந்தத் தகுதியை எட்ட அவர் உழைத்த உழைப்பு என்ற விரிவான அலசல் எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கே ஒரு விஷயம் குறித்த இசையமைப்பாளர் தமிழ்த் திரையில் தான் 2009 இல் பங்களித்திருக்க வேண்டியதில்லை. தமிழ் இசையமைப்பாளரின் பொதுவான இசைச் சாதனை. அங்கீகாரம் குறித்த கோணத்தில் எழுதலாம்

2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்
பாடல்கள் திரைப்படங்களுக்குத் தேவை இல்லை என்ற சூழலில் 2009 இல் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் பொருத்தமாகப் பாடல்களைப் பயன்படுத்திய படங்கள்

3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது?

ஏற்றம் மிகுந்ததாக இருந்தது அல்லது ஒப்பீட்டளவில் 2009 ஆம் ஆண்டு இசைவரவுகள் முன்னைய ஆண்டுகள் மாதிரி இல்லை என்ற கோணத்தில் விளக்கமான ஒப்பீடுகள் வேண்டப்படுகின்றன.

2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியலைக் காண

போட்டி விதிமுறைகள்

1. போட்டிக்கான ஆக்கங்களை ஜனவரி 1, 2010 ஆண்டுக்கு முன்னதாக எழுதிப் பதிவாக்க வேண்டும். பதிவுத்தொடுப்பை அறியத் தரவேண்டியது அவசியம்.

2. ஒருவர் மூன்று தலைப்புக்களிலும் தனித்தனி ஆக்கமாக எழுதலாம்.

3. போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவை தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களால் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு விடப்படும். இறுதிச் சுற்றில் உங்களின் தீர்ப்பே முடிவானது. ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற மூன்று ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களாகப் பங்கேற்போர் போட்டியில் பங்கு பெறத் தடை உண்டு

4. உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.

முத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.
தமிழ் சினிமா இசை சம்பந்தப்பட மூன்று நூல்கள் வென்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட இருக்கின்றன.

225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி

நேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து.

எனக்குள் இருக்கும் இசை குறித்த தீராத வேட்கையை நான் பணிபுரியும் வானொலி நிலையத்தில் ஒரு எல்லை வரை மட்டுமே கடந்த 10 ஆண்டுகள் கொண்டு வர முடிந்தது. ஆனால் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்தவுடன் கட்டற்ற எல்லை வரை என்னால் பயணிக்க முடிந்தது. அதற்குக் காரணம் நான் விரும்பியதை மட்டுமே கொடுப்பது என்பதை விட என்னைச் சுற்றியுள்ள நீங்கள் இசை மீது அளவு கடந்த நேசிப்போடு இருப்பது பெருங்காரணம்.

தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல எத்தனையோ பதிவுகளில் பின்னூட்டங்கள் வாயிலாக மேலதிகமான செய்திகளோடும், தகவல்களோடும் வந்து இந்தத் தளத்தை முற்றுகையிட்டுப் பிரமிக்க வைத்தீர்கள். இன்று இந்த இரண்டு ஆண்டுகளில் கடந்து விட்ட நிலையில் றேடியோஸ்பதியில் ஆரம்பித்த தொடர்களும் அதற்கு நீங்கள் தந்த வரவேற்பினையும் இரை மீட்க ஒரு வாய்ப்பு. அந்த வகையில் இந்தச் சிறப்புத் தொகுப்பு தொடந்து உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகின்றேன்.

றேடியோஸ்பதியின் முதல் தொடராக வந்து சிறப்பித்தது “நீங்கள் கேட்டவை”
இந்தத் தொடர் பல்வேறு ரசனை கொண்ட் பாடல்களை வலைப்பதிவு வாசகர்கள் கேட்க அதைப் பூர்த்தி செய்யும் வகையில் 29 தொடர் பதிவுகளாக வந்து சிறப்பித்தது.
இந்தத் நீங்கள் கேட்டவை தொடரின் மாதிரிக்கு ஒன்று:
நீங்கள் கேட்டவை – பாகம் 2

நீங்கள் கேட்டவையின் இன்னொரு பரிமாணமாக குறித்த ஒரு நேயரின் ரசனைகளை மட்டுமே தொகுத்து அமைந்த சிறப்பு நேயர் தொடரும் உங்களில் பலரை ஈர்த்தது. இந்தத் தொடர் 21 அங்கங்களாக 21 நேயர்களைகளின் தனித்துவமான ரசனைகளை அவர்களின் விளக்கங்களோடு கலந்து பரிமாறியது.
அதில் மாதிரிக்கு ஒன்று
சிறப்பு நேயர் “எம்.ரிஷான் ஷெரிப்

பாடல்கள் மட்டுமன்றி இசைத்துறையில் சாதனை படைத்தவர்களின் ஒலிப்பேட்டிகளையும் கொடுக்க எண்ணி மலர்ந்த ஒலிப்பேட்டிகள் கூட அவ்வப்போது இடம்பெற்று வந்தன. அந்த வகையில் ஒன்பது பேட்டிகள் இந்தப் பதிவில் நிரப்பின.
அந்த ஒலிப்பேட்டிகளில் மாதிரிக்கு ஒன்று
பத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி

தமிழ்த்திரையிசையில் பழம் தின்று கொட்டை போட்ட மேதைகள் மட்டுமன்றி புதியவர்களையும் கெளரவப்பத்தும் வரிசையில் “சுப்ரமணியபுரம்” திரைப்படம் வெளிவந்த சமயம் அந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனைப் வானொலிப் பேட்டி கண்டு சமகாலத்தில் றேடியோஸ்பதி நேயர்களுக்கும் பகிர்ந்தளித்தேன்.

“சுப்ரமணியபுரம்” இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப்பேட்டி

றேடியோஸ்பதி இளையராஜா புகழ் மட்டும் தான் பாடும் என்ற ஒரு சிலரின் கூற்றை மறுதலிக்கும் வண்ணம் 36 பதிவுகள் வரை ராஜா தவிந்த ஏனைய இசையமைப்பாளர்களை மட்டுமே முன்னுறுத்திய பதிவுகள் வந்திருந்தன. அதில் நான் விரும்பி ரசித்து எழுதிய பதிவுகள் இவை.

இசையமைப்பாளர் சந்திரபோஸின் முத்தான பத்து மெட்டு

இசையமைப்பாளர் கே.பாக்யராஜ்

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலம்

இந்தப் வலைப்பதிவில் அவ்வப்போது இசைவிமர்சனங்களோடும் பதிவுகளைப் பகிர்ந்திருக்கின்றேன். அந்த வகையில் நான்கு திரைப்படம் சார்ந்த பதிவுகளும் வந்திருக்கின்றன.
அவற்றில் மாதிரிக்கு ஒன்று

Cheeni Kum – ராஜாவுக்காகப் பார்த்த படம்

தமிழ்த் திரையுலகம் சார்ந்தவர்களின் மறைவின் போது அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் நினைவுப்பதிவுகள் பலவும் வந்திருக்கின்றன, இதுவரை 13 நினைவுப்பதிவுகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. எழுத்தாளர் சுஜாதாவின் ஒலிப்பேட்டி என்பது இதுவரை எங்கும் வெளிவராதது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவப் பேட்டிகளில் மாதிரிக்கு ஒன்று

நாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி

றேடியோஸ்பதியின் நேயர்களுக்கு ஜாலியான போட்டி வைக்கலாம் என்ற எண்ணத்தோடு ஆரம்பித்த றேடியோஸ்புதிர் இந்த வாரத்தோடு 42 புதிர்களை அவிழ்த்து இருக்கின்றது. இந்தப் புதிரை நீங்கள் மிகவும் விருப்போடு ரசித்து விளையாடுவது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இந்தப் புதிர்களில் மாதிரிக்கு ஒன்று
றேடியோஸ்புதிர் 1 – பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு என்ன?

நிறைவாக, என் நேரத்தை நிறையவே எடுப்பதும் என் மனதை நிறைவடையச் செய்வதும் ஆன ஒரு அம்சம் பின்னணி இசைத் தொகுப்பு. சராசரியாக 4 – 5 மணி நேரம் வரை ஒரு படத்தைப் பார்த்து தகுந்த இடத்தில் நிறுத்தி இசை பிரித்து பின்னர் எடிட் பண்ணிச் செய்யும் பின்னணி இசைத் தொகுப்பு என்பது றேடியோஸ்பதியின் மகுடமாகத் தொடரும் தொடர் இதுவரை 22 படைப்புக்களைத் தந்து இன்னும் தொடர்கின்றது.
அந்த வகையில் நான் ரசித்துச் செய்த சில பின்னணி இசைத் தொகுப்புக்கள் சில

“குணா” பின்னணி இசைத்தொகுப்பு

முதல் மரியாதை” பின்னணி இசைத் தொகுப்பு

“கடலோரக் கவிதைகள்” – பின்னணி இசைத்தொகுப்பு


“ஆண்பாவம்” பின்னணி இசைத்தொகுப்பு

புதுவருஷ வாழ்த்துக்களுடன் சிறந்த இசைக்கூட்டணி வாக்கெடுப்பு முடிவுகள்

2008 ஆம் ஆண்டின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டைப் பொறுத்தவரை எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சாதனைகளை விடை வேதனைகளையும், சோதனைகளையும் சம்பாதித்த ஆண்டு. உலகெங்கும் ரத்த வெறி பிடித்து அலையும் போர் அரக்கனின் கோரத்தாண்டம் இந்த ஆண்டிலும் தன் ஈடு இணையற்ற கொடுமையைக் காட்டியது. பிறக்கப் போகும் 2009 ஆம் ஆண்டு ஒரு சுபீட்சமான ஆண்டாக அமைய வேண்டும். வீட்டுக்கும், நாட்டுக்கும் நிரந்தர நிம்மதியை ஒரு இனிய இசை கொடுக்கும் திருப்தியை வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து என்னோடு கூடப் பயணித்தவர்களுக்கும், பயணிக்க இருப்பவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன். உங்கள் அனைவருக்காகவும் சிறப்புப் பாடலாக “எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே” என்ற கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் மறுபடியும் திரைப்பாடலை அர்ப்பணிக்கின்றேன்.

Ellorukkum – Jesudas

கடந்த ஒருவாரமாக றேடியோஸ்பதியின் சிறந்த இசைக்கூட்டணிப் போட்டியை வைத்திருந்தேன். இதன் மூலம் வலைப்பதிவு வாசகர்களின் நாடித்துடிப்பை அறிய 2008 இல் சிறந்த இயக்குனர் – இசையமைப்பாளர் என்று இசைக்கூட்டணியாக அமைந்த ஒரு பட்டியலையும் கொடுத்திருந்தேன்.

இன்றோடு அதன் வாக்கெடுப்பு ஒரு முடிவுக்கு வந்து, இதுவரை கிடைத்த முடிவுகளின் படி வாக்கெடுப்பில் பங்கேற்ற 114 பேரில் 41 பேர் ஹாரிஸ் ஜெயராஜ் – கெளதம் வாசுதேவ மேனன் இணைந்த வாரணம் ஆயிரம் கூட்டணிக்குத் தம் வாக்குகளை அளித்து முதல் இடத்தில் அமையும் இசைக் கூட்டணியாக அமைத்திருக்கின்றார்கள்.

அடுத்ததாக 30 வாக்குகள் அளித்து ஜேம்ஸ் வசந்தன் – சசிகுமார் கூட்டணிக்கு இரண்டாவது இடத்தையும், 9 வாக்குகளைப் பெற்று சரோஜாவில் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா – வெங்கட் பிரபு கூட்டணிக்கு மூன்றாவது இடத்தையும் அளித்திருக்கின்றார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 😉

முழுமையான வாக்கெடுப்பின் முடிவுகளைக் காண

2008 இன் சிறந்த இசைக்கூட்டணி?

இந்த ஆண்டின் நிறைவை எட்டிப் பிடிக்க சில நாட்களே எஞ்சிய நிலையில், 2008 இல் இதுவரை திரைப்படமாக வெளிவந்து பிரபலமான பாடல்களை முன்வைத்து ஒரு இசை குறித்த வாக்கெடுப்பு இடம்பெறுகின்றது. எந்த ஒரு நல்ல இசையமைப்பாளருக்குமே அவரோடு இணையும் இயக்குனரின் வேலை வாங்கும் திறன் தான் பல சந்தர்ப்பங்களில் நல்ல பல பாடல்களுக்கு வழி வகுத்திருக்கின்றது. அந்த வகையில் 2008 இல் சிறந்த இசைக்கூட்டணி யார் என்பதே இந்த ஜாலியான வாக்கெடுப்பின் நோக்கம். உங்கள் ரசனையில் பிடித்த இசைக்கூட்டணி யார் என்பதைத் தேர்ந்தெடுங்களேன்.

பி.கு
1. 2008 இல் இசைத்தட்டு வெளியாகி இதுவரை வெளிவராத படங்கள் இங்கே சேர்த்தியில்லை.
2. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் பாடல்கள் ஏற்கனவே தெலுங்கில் வெளியானாலும் அதை அப்படியே பயன்படுத்திய ராஜாவின் பெருந்தன்மை(?) கருதி அவரும் ஆட்டத்தில் இருக்கிறார்.
3. ஒருவர் தலா ஒரு ஓட்டே வழங்கலாம் (குடும்ப உறுப்பினர்கள் சார்பில் வாக்களிக்க முடியாது 😉
4. வாக்களிப்பு முடிவுத்திகதி 31 டிசம்பர் 2008

இதுவரை வெளியான வாக்கு நிலவரம்

றேடியோஸ்பதியின் புதுத் தொடர்கள் – அறிமுகம்ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் றேடியோஸ்பதியில் தொடர்கள் ஆரம்பிக்கின்றன. அந்த வகையில் இந்தப் பதிவு ஆரம்பிக்க இருக்கும் புதுத் தொடர்களுக்கான அறிமுகமாக இருக்கின்றது. சரி இனி வரப்போகும் தொடர்கள் குறித்த அறிமுகத்தைத் தருகின்றேன்.வண்ண வண்ண சொல்லெடுத்து

வாராந்தம் ஒரு குறிப்பிட்ட சொல் வழங்கப்படும். அந்தச் சொல்லியில் வரும் ஏதாவது ஒன்று உங்களைக் கவர்ந்திருந்தால் அந்தப் பாடல் குறித்த சிறு விளக்கத்தோடு நீங்கள் பின்னூட்டப் பெட்டியிலோ அல்லது kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாம். உதாரணமாக தென்றல் என்ற சொல் வழங்கப்பட்டால் அந்த சொல்லை பாடலின் முதல் வரிகளாகக் கொண்ட பாட்டைத் தேர்ந்தெடுத்து, பாடல் குறித்த உங்கள் சிலாகிப்புடன் அனுப்பவேண்டும். இது இரு வாரத்துக்கு ஒருமுறை இடம்பெற இருக்கின்றது. எனவே முதலில் தென்றல் என்ற அடியில் வரும் பாடலையும் உங்கள் விளக்கத்தையும் வரும் யூலை 14 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்.இசையும் கதையும்

ஒரு சிறுகதை ஒன்றை நீங்களே எழுதி, அந்தச் சிறுகதைக்குப் பொருத்தமான பாடல்கள் நான்கிற்கு மேற்படாமல் பொருத்தமான இடங்களில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். மாதாந்தம் ஒவ்வொரு படைப்பாளியின் இசையும் கதையும் வானொலிப்படைப்பாக அமையவிருக்கின்றது. இந்தப் படைப்புக்கு சிறப்பான குரல் வடிவம் கொடுத்துத் தயாரிக்க இருப்பவர் நமது சக வலைப்பதிவர் கதிர் சயந்தன் அவர்கள். ஆக்கங்களை என்ற kanapraba@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.

சிறப்பு நேயர் தொடர் – பாகம் 2

ஏற்கனவே ஆரம்பித்து இருபது பதிவர்கள் வரை பங்களித்த இந்த வாராந்தத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கின்றது. ஏற்கனவே பங்கு கொண்டவர்களை விடுத்து புதிய பதிவர்கள் மட்டுமல்ல பதிவுகளை வாசிக்கும் வாசகர்களும் இந்தத் தொடரில் பங்கேற்கலாம். உங்கள் மனம் கவர்ந்த ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவை குறித்த விளக்கங்களோடு kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்களேன்.

ஸ்யப்பா தொடர்களை அறிவித்து மூச்சு முட்டுகிறது. தொடர்ந்து இசை மழையில் உங்களை நனைவிக்கின்றேன். இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய புதிய தலைமுறைப்பாடகர்கள் சிலரின் பாடல்கள் இதோ.ஹரிஷ் ராகவேந்திரா

வித்யாசாகரின் இசையில் “அரசியல்” திரைக்காக “வாசகி வாசகி” என்ற பாடலை முதலில் பாடியவர். ஆனால் ராஜாவின் இசையில் பாரதி படத்திற்காக “நிற்பதுவே நடப்பதுவே” பாடலைப் பாடிப் பெரும் புகழ் பெற்றார். ஹரிஷ் ராகவேந்திராவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இங்கே நான் தரும் “சொல்ல மறந்த கதை” திரையில் இருந்து ” குண்டு மல்லி குண்டு மல்லி” என்ற இனியதோர் பாடல். அவருடன் இணைந்து பாடுகின்றார் ஷ்ரேயா கோசல்.

பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா – ஒலி அஞ்சல்

நேற்று ஈழத்தின் யாழ்மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதன் நேர்முக வர்ணனையை யாழ்மண்ணில் இருந்து தொலைபேசி வாயிலாக எடுத்து சிறப்பான ஒரு ஒலி அஞ்சலைக் கொடுத்திருந்தார்கள் எமது 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திரு பிறின்ஸ் இமானுவேல் மற்றும் அவர் துணைவி திருமதி சோனா பிறின்ஸ் ஆகியோர்.

நேற்று காலையில் யாழ்.பாஷையூர் அந்தோனியார் ஆலயத்தின் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வினையும், நேற்றிரவு அவ்வாலயத்தின் திருச்சொரூப பவனி நிகழ்வையும் ஒலி அஞ்சல் செய்ததோடு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நிகழ்வினையும் வானலைக்கு எடுத்து வந்திருந்தோம். அத்தோடு சிட்னியில் இருந்து அருட்தந்தை வின்சன்ட் சவரிமுத்து அவர்களின் நற்செய்தியும், நேயர்களின் கலந்துரையாடல் நிகழ்வுமாக சிறப்பானதொரு நாளாக அமைந்திருந்தது.

நேற்றுக் காலை நடைபெற்ற யாழ்.பாஷையூர் அந்தோனியார் ஆலயத்தின் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வின் பகிர்வு இதோ:

திருப்பலி நிகழ்வு ஒலித்தொகுப்பு

வரவிருக்கும் வாரங்களின் சிறப்பு நேயர்கள்

றேடியோஸ்பதியின் புதுத் தொடராக வலம் வந்து கொண்டிரும் இவ்வார சிறப்பு நேயர் தொடர் ஆரம்பித்ததே ஒரு சுவாரஸ்யமான எதிர்பாராத சந்தர்ப்பத்தில். நண்பர் ஜீவ்ஸ் நீங்கள் கேட்டவை பகுதியில் கேட்க வேண்டும் என்று தொடர்ச்சியாக நான்கு பாடல்களைக் கேட்டிருந்தார்.

சரி இவ்வளவு நல்ல பாடல்களைக் கேட்கின்றீர்களே, ஒரு தொடரை ஆரம்பித்து அதில் நீங்களே உங்களுக்குப் பிடிச்ச ஐந்து பாட்டுக்களைச் சிலாகித்து எழுதி அனுப்புங்களேன் என்றேன். சொன்னதும் தான் தாமதம், சில மணி நேரத்திலேயே பதிவோடு மனுஷன் வந்து விட்டார். ஜீவ்ஸ் தொடக்கி வச்ச முகூர்த்தமோ என்னமோ இந்த பிசினஸ் நல்லாவே போகுது ;-).

பல நண்பர்கள்/பதிவர்கள் தம் பதிவுகளை எழுதி அனுப்பி வைத்து விட்டுக் காத்திருக்கின்றார்கள். அவை எப்போது வரும் என்பதை, தம் பதிவை அனுப்பிய ஒழுங்கிலேயே காட்டுகின்றேன். ஒரேயொரு மாற்றம், ஒரு ஆண் நேயர், அடுத்து ஒரு பெண் நேயர் என்ற ஒழுங்கில் மட்டும் இது அமைகின்றது. இதோ அந்த வரவிருக்கும் வெள்ளி வாரங்களின் சிறப்பு நேயர்கள்.

1. பெப்ரவரி 29 – ஜிரா என்னும் கோ.ராகவன்
2. மார்ச் 7 – பாசமலர்
3. மார்ச் 14 – ரிஷான் ஷெரிப்
4. மார்ச் 21 – சினேகிதி
5. மார்ச் 28 – ஸ்ரீராம்
6. ஏப்ரல் 4 – துளசி கோபால்
7. ஏபரல் 11- கண்ணபிரான் ரவிசங்கர்
8. ஏபரல் 18 – நித்யா பாலாஜி
9. ஏப்ரல் 25- சர்வேசன்
10.மே 2 – கயல்விழி முத்துலெட்சுமி
11. மே 9 – அய்யனார்

தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
KANAPRABA@GMAIL.COM

சரி இந்த அறிவித்தலோடு, என்னைக் கவர்ந்தவை 2 பகுதியையும் தருகின்றேன்.
முதலில் “மெட்டி” திரைப்படத்தில் இருந்து ப்ரம்மானந்தம் பாடும் “சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்” என்ற பாடலை இளையராஜா இசையில் கேட்கலாம். அதிகம் கேட்காத பாடகர், கர்னாடக இசைக்கலைஞருக்கே உரித்தான குரலில் பாடும் இனிமையான தனியாவர்த்தனம் இது.

Get this widget | Track details | eSnips Social DNA

அடுத்து இளையராஜாவின் இசையில் “ஒரு ஓடை நதியாகிறது” திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ராஜேஸ்வரி பாடும் “தலையை குனியும் தாமரையே”. பாடலைக் கேட்கும் போதே மனதுக்குள் கல்யாணக் கச்சேரி களை கட்டும்.

Get this widget | Track details | eSnips Social DNA

நிறைவாக “உனக்காகவே வாழ்கிறேன்” திரையில் இருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா இசையில் பாடும் “இளஞ்சோலை பூத்ததா” என்னும் இனிமையான பாடல். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் கேரளாவில் விடுமுறையில் இருந்த நாளொன்றில் ஏஷியா நெட்டின் இசை நிகழ்ச்சிக்காக ஒரு மலையாள இளைஞன் இப்பாடலை வெகு சிறப்பாக பாடியதை தொலைக்காட்சியில் பார்த்த அந்த ஞாபகம் நினைவில் வரும்.

Get this widget | Track details | eSnips Social DNA

துபாயில் பாடிய நிலா பாலு

ஆறு தேசிய விருதுகள் வாங்கியிருக்கின்றார்,
23 மாநில விருதுகள் வாங்கியிருக்கின்றார்,
ஒரே நாளில் தமிழில் 18 பாட்டு பாடியிருக்கின்றார்,
ஒரே நாளில் ஹிந்தியில் 19 பாட்டு பாடியிருக்கின்றார்,
ஒரே நாளில் உபேந்திராவின் கன்னடப்படத்துக்காக கம்போஸ் பண்ணி
17 பாட்டு பாடியிருக்கின்றார்,

The Legend,
one and only
பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் துபாயில் நடந்த இளையராஜாவின் இசைப்படையெடுப்பில் பாட வந்தபோது நடிகர் ஜெயராம், மற்றும் நடிகை குஷ்பு வழங்கும் அறிமுகத்தோடு மேடையில் பாடிய பாடல்களான “இளையநிலா பொழிகிறது”, மற்றும் “பொத்தி வச்ச மல்லிக மொட்டு” பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.
இவ் ஒலிப்பதிவைத் தந்துதவிய நண்பர் கோவை ரவிக்கும் இனிய நன்றிகள்.

Get this widget Track details eSnips Social DNA

றேடியோஸ்பதி வாக்குப் பெட்டியில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்பதியில் வந்து போகும் இசைப்பிரியர்களுக்காக ஒரு வாக்கெடுப்புப் பதிவைக் கொடுத்திருந்தேன். உங்கள் தெரிவில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர் என்ற அந்த வாக்கெடுப்பில் கலைந்து சிறப்பித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். இதோ இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை இந்த வருடம் முடிகின்ற தறுவாயில் அறிவித்து விடுகின்றேன்.

நவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பித்து கடந்த ஏழு வார வாக்கெடுப்பின் பிரகாரம் 93 வாக்குகளைப் பெற்று இளையராஜா முன்னணியின் நிற்கின்றார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 72 வாக்குகளைப் பெற்று ஏ.ஆர்.ரஹ்மானும், 68 வாக்குகளோடு மூன்றாவது இடத்தில் யுவன் ஷங்கர் ராஜாவும் இருக்கின்றார்கள்.

இந்தப் போட்டி என்பதே இந்த ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படங்களில் சிறந்த இசையமைப்பை வழங்கிய இசையமைப்பாளர் என்பதே. ஆனால் இசைஞானியின் கொலை வெறி ரசிகர்களின் ஓட்டுக்களோ இளையராஜாவையே அதிக ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்திருக்கின்றார்கள்.

ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த யுவன் பருத்தி வீரனுக்காகவும் , ரஹ்மான் சிவாஜிக்காகவும் அதிக ஓட்டுக்களைப் பெற்றிருந்தார்கள்.

இளையராஜாவுக்கு மாயக்கண்ணாடி உட்பட பேர் சொல்லும் திரைப்படங்கள் இந்த ஆண்டு தமிழில் அமையவில்லை. ஆனால் சீனி கம் என்ற ஹிந்தித் திரையில் பழைய பல்லவியோடு புது மொந்தையில் கலக்கியிருந்தார்.

ரஹ்மானுக்கு சிவாஜி படம் உச்ச பட்ச வரவேற்பைக் கொடுத்து ஏறக்குறைய எல்லாப் பாடலையும் ரசிக்க வைத்தது. பாதி புண்ணியம் ரஜினிக்குத் தான். ராஜா என்றைக்குமே இசை ராஜா தான், ஆனால் அவர் மனசு வைக்கணுமே.

வித்யாசாகருக்கு மொழி படம் ஒன்றே அவரின் திறமையின் அடையாளம். வழக்கமான தன் பாணியில் இருந்து புது மாதிரிக் கொடுத்திருந்தார்.

யுவன் காட்டில் இந்த ஆண்டு அடை மழை. பருத்தி வீரன், சென்னை 28, பில்லா போன்ற படங்கள் வெற்றி பெற்றதும் இவரின் இசைக்கு மேலதிக அங்கீகாரமாக அமைந்து விட்டது. கற்றது தமிழ் இவருக்கு பின்னணி இசையில் ஒரு மேலதிக வாக்கைக் கொடுத்து விட்டது.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை தமிழ் திரையிசையின் சாபக்கேடாக ரீமிக்ஸ் காப்பிகள் வைரஸ் போலப் பரவி புதிய சிந்தைகளைத் தடுத்து விட்டன. ரீமிக்ஸ் குறித்த தன் விசனத்தை முன்பு விகடனிலும், கடந்த வாரக் குமுதத்திலும் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

“நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்ப இருக்குற ரசிகர்கள், இளைய தலைமுறையினர் இதைத் தான் விரும்புறாங்கன்னு சொல்றது தப்பு. ‘‘தொட்டால் பூ மலரும்..’’ பாட்டை ரஹ்மான் ரீ_மிக்ஸ் செய்திருந்த சமயம், ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம். என்னைப் பார்த்துட்டு நான் எதுவும் சொல்வேனோன்னு பயந்தார் ரஹ்மான். ஆனா, நான் பாராட்டினேன். காரணம் ரஹ்மான் செய்தது ரீ_மிக்ஸ் மாதிரி இல்ல. முழு பாடல் வரிகளையும் அப்படியே வெச்சுக்கிட்டு டியூன் போட்டார். பாட்டு கேட்கவும் நல்லா இருந்தது. அதுதான் சரி. அப்படித்தான் பண்ணணும். ஆனா பழைய ட்யூனை வெச்சுக்கிட்டு இடையில் ‘காச் மூச்’னு கத்தறதும், சத்தமான மியூசிக்கும் கேட்கவே பரிதாபமாயிருக்கு. ஏன் இப்படிப் பண்ணணும். செய்தா ‘பழமை மாறாமல்’ செய்யணும். இப்ப கூட ‘பில்லா’ படத்துல ‘மை நேம் இஸ் பில்லா’ பாட்டை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறதுக்காக வர்றேன்னு சொன்னாங்க. நான் தவிர்த்துட்டேன். என்னோட வாழ்த்து எப்பவும் எல்லார்க்கும் இருக்கும். ஒரு ரசிகனா நான் இதை ரசிக்கவில்லை. இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமா? இது தப்பு. சரியில்ல…

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்காக கம்போஸ் செய்தபோது, ஒரு கிராமத்துப் பாடலை நான் பாடிக் காண்பித்தேன். ‘கத்தாழங் காட்டுக்குள்ள… விறகொடிக்கப் போனபுள்ள’ இதுதான் அந்தப் பாட்டு. அதையே கண்ணதாசன், ‘எங்கேயும் எப்போதும்’னு உடனே பாடலை எழுதிக் கொடுத்திட்டார். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று வந்தால் தப்பில்லை. எதையும் கெடுத்திடக் கூடாது”

அடுத்த ஆண்டாவது இந்த நிலை நீங்கி இன்னும் பல புது இள ரத்தங்களின் இசைப் பாய்ச்சலோடு இனியதொரு இசைவருடமாக மலரட்டும்.

இசையமைப்பாளர்கள் கவனத்துக்கு: இப்படியெல்லாம் போட்டி வைக்காதீங்க, எங்களை விட்ருங்க என்று இங்கே வந்து மொக்கை போடாதீங்கப்பா)

முழு வாக்கு வங்கி இதோ: