ஷமிதாப் பாடல்கள் – கொண்டாடித் தீரா இசை வெள்ளம்

ஷமிதாப் (Shamitabh) பாடல்கள்
கொண்டாடித் தீரா இசை வெள்ளம்

சிட்னியில் வாரத்துக்கு இரண்டு ஹிந்திப் படங்களாவது தியேட்டரில் வந்து விடும் என்றாலும் ஒரு சில படங்களை மட்டுமே பார்ப்பதற்காக தியேட்டர் வாசலை மிதித்திருக்கிறேன். 

ஆனால் இளையராஜாவின் இசையை அகன்ற திரையரங்கில் காட்சிவடிவத்தோடு பார்த்தும், கேட்டும் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டுப் பார்த்த ஹிந்திப் படங்கள் 
சீனி கம் (2007)
http://www.radiospathy.com/2007/05/cheeni-kum.html
பா (2009)
http://www.radiospathy.com/2009/12/paa.html
இப்போது ஷமிதாப் படமும் சேர்ந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை தான் படம் வரும் என்றார்கள் ஆனால் தியேட்டரின் வலைபக்க வாசலிலேயே காத்துக் கிடந்த எனக்கு வியாழனே சிறப்புக் காட்சி இருப்பதாகக் காண்பித்தது. இன்றிரவு படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டினால் சிறப்புப் பதிவு வரும்.
ஷமிதாப் பாடல்கள் iTunes இல் வெளியாகியிருந்தாலும் இசைத்தட்டில் வாங்கிக் கேட்டு இன்புறுவோம் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தது தான் மிச்சம். படம் வருவதற்கு ஒரு வார இடைவெளி தான் இருந்தது. இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது iTunes வழியாகவே தரவிறக்கிக் கேட்க ஆரம்பித்தேன்.
ஒவ்வொன்றாகப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்த போதும் புதுமை புதுமை புதுமை 
என்று காட்டிக் கொண்டே போனது ஆறு பாடல்களின் இசைக் கோவையும்.
அன்னக்கிளி காலத்தில் இருந்து நான்கு தசாப்தங்களாக இளையராஜாவின் இசையைப் பிரித்துப் பார்த்தால் ஒவ்வொரு காலகட்டமும் புதுப் புது இசையமைப்பாளரை அவரிடமிருந்து காட்டுகின்றதே. ராஜாவின் 90 களிலும் 2000 களிலும் கொண்டாட மறந்த பாடல்களை இப்போது கேட்டால் காலம் தவறிக் கொண்டாடுது மனம்.
“ஷமிதாப்” பாடல்களைக் கேட்டால் 71 வயசுக்காரர் கொடுத்தது என்று நம்ப முடியவில்லை.
“சத்தியமா சொல்றேன் ஷமிதாப் பாடல்களை ஒவ்வொரு நாளும் கேட்க உடம்பெல்லாம் உருக் கொள்ளுது”
என்று ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன்.
ஷமிதாப் பாடல்களில் எது நன்றாக இருக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் கேட்கும் போதும் மாற்றம் கண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு “ஷா ஷா ஷா” என்றிருந்தது. அடுத்த நாளோ “ஸ்டீரியோஃபோனிக் சன்னாட்டா” என்று முன்னுக்குத் தள்ளுகிறது.
“ஸ்டீரியோஃபோனிக்” பாடல் வரிகள் தான் வணிக விளம்பரம் போல முரண்டு பிடிக்கின்றது. இந்தப் பாடலின் நதி மூலப் பாட்டு “ஆசையைக் காத்துல தூது விட்டு” சமீப ஆண்டுகளில் தெலுங்கில் “குண்டல்லோ கோதாரி” (தமிழில் மறந்தேன் மன்னித்தேன்) படத்திற்காக மீள் இசையாக வந்தது. இப்போது ஹிந்திக்குப் போயிருக்கிறது. ஹிந்தி வடிவத்தில் மெட்டு மட்டுமே அவ்வப்போது காட்டிக் கொடுக்கிறது. ஆனால் பாட்டு வடிவமே முழுமையான பிரிட்டிஷ் மகாராணி விருந்து. ஆயிரம் படங்களின் பாடல்களையும் திரும்ப இசையமைக்கக் கொடுத்தால் இன்னும் ஆயிரம் இசைத் தொகுப்புகளைப் புது வடிவில் கொடுக்க நம்ம ஆளால் முடியும். ராஜாவின் இசையை சீரழிக்கும் ரீமிக்ஸ் வெறியர்களுக்குப் பாடமெடுக்கும்.
“லைப்ஃபோய்” பாடலின் இடையிசை கலக்கல் துள்ளிசை.
“ப்ரியா” படத்தின் பாடல்களை வாக்மேனில் கேட்ட போது ஒரு காதில் ஒரு 
வித இசை இன்னொரு காதில் இந்தா இன்னொரு இசை என்று ஸ்டீரியோவைக் காட்டிய சுகத்தை “தப்பட்” பாடல் இப்போது கொடுக்கின்றது. எழுதிக் கொண்டிருக்கும் போது “தப்பட்” பாடல் தான் முன்னுக்கு நிற்கிறது.
“பா” படத்தைத் தொடந்து இந்தப் படத்திலும் “பிட்லி” பாடல் மூலம் அமிதாப் குரல் கொடுத்திருக்கிறார். இப்போதைக்கு இசையை மட்டும் அனுபவிக்கிறேன். காட்சி வடிவத்தோடு காணும் போது இன்னும் நெருக்கமாகும் போல.
சில்சிலா படத்தில் அமிதாப் பாடிய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று http://youtu.be/Jf92MOkrbEw
இந்த இசைத் தொகுப்பில் பாடகர்களின் தேர்வு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அளவு சிறப்பு வாய்ந்தது.
ஆயிரம் படங்களைத் தொட்ட இளையராஜாவுக்கு “ஷமிதாப்” மேற்கத்தேய இசைக்கும், “தாரை தப்பட்டை” நமது கிராமிய இசைக்குமாக இரு வேறுபட்ட இசைப் படையல்களைக் கொடுக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறது.
 “ஷமிதாப்” இல் சாதித்து விட்டார்.
“தாரை தப்பட்டை” தரும் அடுத்த கொண்டாட்டத்துக்குக் காத்திருப்போம்.

பாடல் தந்த சுகம் : ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு

முன்பெல்லாம் சினிமா விவசாயியே தன் பயிரை அறுவடை செய்து சந்தைப்படுத்தக்கூடிய சூழல் இருந்தது.  இன்று அந்த நிலை இல்லை என்ற கசப்பான நிதர்சனத்தை அண்மையில் கமல்ஹாசன் தன் குமுதம் கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருந்தார்.

அப்படியானதொரு காலகட்டம் எண்பதுகளின் தமிழ் சினிமா. எந்தவொரு துறையின் சரிவோ அல்லது அழிவோ அதன் உச்சத்தை நீண்ட வருடங்கள் எட்டிவிட்டுத் தான் சராலென்று விழுந்து விடும். அப்படியானதொரு காலகட்டம் தமிழ்சினிமாவின் எண்பதுகள்.
குரு சிஷ்யன் படத்தை ரஜினிகாந்த் இன் கால்ஷீட் நெருக்கடியில் அவரிடம் கொடுத்த உறுதிமொழியின் பிரகாரம் வெறும் 28 நாட்களே எடுத்து இயக்கி முடித்த படம் என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். நினைத்துப் பார்க்க முடியுமா இப்படியொரு சாதனையை? 
அதுவும் ரஜினிகாந்த், பிரபு ஆகிய உச்ச நட்சத்திரங்களை வைத்து அவரவர் ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது என்பது இலேசுப்பட்ட காரியமல்ல.
இவ்வாறான தன் சுவாரஸ்யமான பட அனுபவங்களை ஏவிஎம் தந்த எஸ்பிஎம் என்ற நூலில் பதிந்து வைத்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். இந்த நூலாசிரியர் ராணி மைந்தனுடன் நான் எடுத்த பேட்டியை இங்கு கேட்கலாம்.
28 நாட்களில் எடுத்த படம் 175 நாட்கள் ஓடிய வெற்றிச் சித்திரமானது.
குரு சிஷ்யன் படத்தின் வரவால் இன்னும் சில கவனிக்கத்தக்க நிகழ்வுகளும் தமிழ் சினிமாவில் அமைந்தன.
தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு “கெளதமி” என்ற நவ நாகரிக மங்கை கிட்டினார். மேற்கத்தேய நடை உடையிலும் கிராமியத்தனமான பாவாடைத் தாவணியிலும் கலக்கிய மிகச்சில நாயகிகளில் கெளதமி தவிர்க்க முடியாதவர். உதாரணமாக இதே படத்தில் சீதாவின் நாகரிகத் தோற்றம் எடுபடாமல் இருக்கும். குரு சிஷ்யன் படத்தில் கெளதமியின் நடிப்பு தமிழுக்கு அந்நியமில்லாத பாங்கில் இருக்கும்.
ஒரு பக்கம் ரஜினி, கமல் என்று ஜோடி கட்டி ஸ்டைலான பாத்திரப் படைப்புகளும் இன்னொரு பக்கம் ராமராஜனுடன் கிராமியத் தனமான பாத்திரங்களிலும் கலக்கியவர். ஆனாலும் கெளதமியை முதலில் அதிகம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவை 
ராமராஜனுடன் அவர் நடித்த படங்களே.
பாடகி ஸ்வர்ணலதா முந்திய ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் “சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா” என்ற பாரதியார் பாடலை கே.ஜே.ஜேசுதாசுடன் பாடித் தமிழுக்கு முதல் வரவு வைத்தார்.
தொடர்ந்து 1988 இல் குரு சிஷ்யன் படத்தில் இடம்பிடித்த “உத்தம புத்திரி நானு” என்ற பாடல் மூலம் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் அவர் கொடுத்த வெற்றி முத்திரைகளைச் சொல்லவா வேண்டும்?  
குரு சிஷ்யன் படத்தின் ஏனைய பாடல்களை வாலி எழுத “ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு” பாடலை மட்டும் இளையராஜா எழுதியிருந்தார். தயாரிப்பாளர் பிரபல பாடலாசிரியர் பஞ்சு அருணாசலமாக இருந்தும் அவர் பாட்டெழுதாதது புதுமை.
இரண்டு ஜோடிப்பாடல்களில் ஒன்றான
“வா வா வஞ்சி இள மானே”
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா 
குரல்களில் இன்னொரு “இரு விழியின் வழியே நீயா வந்து போனது” ரக துள்ளிசைக் காதல் பாடல்.
இந்தப் படத்தின் பாடல்களில் வந்த புதுசில் பள்ளிக்காலத்துக் காதல்களைச் சீண்டிப் பார்க்க “கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்” பாடல் கை கொடுத்ததைப் பலர் இப்போது ஞாபகப்படுத்த முடியும் 🙂
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தனித்துவமான சிரிப்புடன் கூடிய பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏதோ பழக்கப்பட்ட பாடலைப் பாடிக் கொள்வது போல இவரின் பாணி இருக்கும்.

“”ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்கு என்னடி உன் மனக்கணக்கு”  பாடலை 
வாலியோ அல்லது கங்கை அமரனோ இல்லாது போனால் பஞ்சு அருணாசலமோ கூட எழுதியிருக்கலாம் என்று தான் பலர் நினைக்குமளவுக்கு பாடலின் மெட்டுடன் போட்டி போடும் ஜாலியான ஊடல் பொருந்திய வரிகள். ஆச்சரியமாக இந்தப் பாடலை இளையராஜா தேர்ந்தெடுத்து ஏன் எழுதினார் என்பது கண்டுபிடித்துத் திருப்தி காண வேண்டிய இசை ரகசியம்.
எண்பதுகளில் கலக்கிய மனோ, சித்ரா ஜோடிக் குரல்களின் இன்னொரு சூப்பர் ஹிட் பாடல். 
இந்தப் பாடலின் இரண்டாம் சரணத்துக்கு முந்திய இடையிசையில் 2.44 நிமிடத்தில் தொடங்கும் வயலினும் தொடர்ந்து வாசிக்கும் புல்லாங்குழலும் கூட இந்தக் காதலர்களின் ஊடலின் பிரதிபலிப்பாக இருக்குமாற் போலத் தென்படும் அற்புதமான இசைக் கோவை.
“கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்” பாடலும் “ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு” பாடலும் கிட்டத்தட்ட ஒரே தொனியில் இருக்குமாற் போல வரும் உணர்வு எனக்கு மட்டும் தானா?
“இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்ல(து) அவர் அளிக்கு மாறு” –  திருக்குறள் 1321
அதாவது காதலரிடத்துத் தவறெதுவும் இல்லையெனினும் ஊடல் மூலமாக அவர் மீதான காதல் இன்னும் பெருக வல்லது என்ற விளக்கத்தைக் கொண்டது மேற்சொன்ன குறள்.
இனி இந்தப் பாடல் காட்சியைக் குறித்த குறளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். கச்சிதமான பொருள் விளக்கம் மனக்கண்ணில் விரியும்.
http://www.youtube.com/watch?v=wpTK2RLR9cM&sns=em

பாடல் தந்த சுகம் : சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறு தானடி

சில இயக்குநர்களின் ராசி அவர்கள் எந்த இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்தாலும் அந்தக் கூட்ட்டணி வெற்றிகரமான பாடல்களைக் கொடுத்துவிடும். இயக்குநர் ஶ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் இவ்வகையினர். இவர்களுக்குள் இருக்கும் இசை ஞானமும் காட்சிகளுக்கேற்ப எப்படியான பாடலை இசையமைப்பாளரிடமிருந்து தருவிக்க முடியும் என்ற சாமர்த்தியமும் கைவரப் பெற்றவர்கள் இவர்கள்.

இன்னோர் வகையினர் என்னதான் உச்ச இசையமைப்பாளருடன் இணைந்து பணி புரிந்தாலும் அவர்களின் ராசியோ என்னமோ பாடல்கள் அதிகம் கவனிக்கப்படாது கடந்து விடும். அந்த வகையில் இயக்குநர் விசுவின் படங்களில் பெரும்பாலானவை சங்கர் – கணேஷ் இரட்டையர்களின் இசையில் கவனிக்கத்தக்க பாடல்களோடு அமைந்திருந்தாலும், இளையராஜாவோடு இயக்குநர் விசு இணைந்த கெட்டி மேளம் படம் வந்த சுவடே பலருக்குத் தெரிந்திருக்காது. 
அதே வரிசையில் இயக்குநர் வி.சேகர் அவர்களையும் சேர்த்து விடலாம். கிட்டத்தட்ட விசுவின் அடுத்த சுற்றாக இவருடைய படங்களைப் பொருத்திப் பார்க்கும் அளவுக்கு ஏராளமான குடும்பச் சித்திரங்களை உருவாக்கியவர் வி.சேகர்.
“நீங்களும் ஹீரோ தான்” என்ற மாறுபட்ட கதையோடு களம் இறங்கியவருக்கு அடுத்து இயக்கிய “நான் புடிச்ச மாப்பிள்ளை” படத்தின் வெற்றி கை கொடுத்தது. சந்திரபோஸ் இசையில் அந்தப் படத்தில் வந்த “தீபாவளி தீபாவளி தான்” கவனிக்கத்தக்க பாடலாக அனைந்திருந்தது.
இயக்குநர் வி.சேகருக்கு பாடல்களை விட நகைச்சுவை தான் பட ஓட்டத்துக்குக் கை கொடுத்தது. ஆரம்பத்தில் ஜனகராஜ் பின்னர் கவுண்டமணி என்று தொடர்ந்து வடிவேலு, விவேக் என்று நகைச்சுவை நாயகர்களை குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற்றார். “பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்” வி.சேகரின் இயக்குநர் வாழ்க்கையில் பெரு வெற்றியைக் கொடுத்த படம்.
இயக்குநர் வி.சேகர் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த மூன்று படங்களில் “ஒண்ணா இருக்க கத்துக்கணும்”, “பொறந்த வீடா புகுந்த வீடா” இரண்டும் இவரின் தனித்துவமான குடும்பப்படங்கள். இவற்றிலிருந்து மாறுபட்டு முழுமையான காதல் கதையாக இவர் இயக்கிய “பார்வதி என்னைப் பாரடி” தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கவனிக்கத்தக்க நாயகனாக வலம் வந்த சரவணன் நடிப்பில் வெளிவந்தது.
“பார்வதி என்னைப் பாரடி” படத்தில் அனைத்துப் பாடல்களும் அட்டகாசம் ரகம். அப்போது சென்னை வானொலியின் வழியாக எனக்கு அறிமுகமான பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் பாடல்களும் சேர்ந்து கொண்டன. 
குறிப்பாக “சின்னப் பூங்கொடி சிந்தும் பைங்கிளி” பாடல்
அப்போது வயசுக்கோளாறுக்கு உரு ஏத்திய பாடல். அப்போது மின்சாரம் இல்லாத காலத்தில் நண்பர்களோடு பங்கு போட்டு 300 ரூபாவுக்கு மண்ணெண்ணை வாங்கி தண்ணீர் இறைக்கும் ஊசிலி மெஷினை ஜெனரேட்டர் ஆக்கிப் பார்த்த படங்களில் இந்தப் படத்தைப் பார்த்து நொந்த நினைவு மறக்க முடியாது.
“மச்சான் அருமையான காதல் கதையடா”என்று கதையளந்து படத்தைப் போட மற்றவர்களையும் சம்மதிக்க வைத்து, பின்னர் படம் ஓடும் போது ஒவ்வொருத்தர் கண்ணும் விஜயகாந்தின் கொவ்வைப் பழக் கண் ஆகாதது தான் மிச்சம் 🙂
எங்களுக்கே இப்படியென்றால் படம் எடுத்த வி.சேகருக்கு எப்படியிருக்கும்? அதன் பிறகு அவர் முழு நீளக் காதல் கதைகளைத் தொடவே இல்லை.
பார்வதி என்னைப் பாரடி படத்துக்கு முன்னர் வி.சேகர் & இளையராஜா கூட்டணியில் வெளிவந்த படம் தான் “பொறந்த வீடா புகுந்த வீடா”.
அப்போதைய தனது ஆஸ்தான நாயகி பானுப்பிரியா மற்றும் சிவக்குமார் நடித்திருந்தனர்.
அந்தப் படத்தின் பாடல்களில் எனக்குப் பெரு விருப்பமான பாடலாக அமைந்தது “சந்திரிகையும் சந்திரனும் வேறு வேறு தானடி”. அப்போது கொழும்பில் இயங்கிய எஃப் எம் 99 என்ற பண்பலை வானொலி தான் இந்தப் பாடலை ஊரெல்லாம் கேட்க வைத்துப் பிரபல்யம் அடைய வைத்தது.
கவிஞர் வாலியின் வரிகளுக்கு மனோ மூன்று விதமாகத் தன் குரல்களை மாற்றிச் சேஷ்டை பண்ணினாலும் (!) கூட இணைந்த சித்ரா, குழுவினரும் பாடலின் இசையும் மெய்மறக்கச் செய்து இசையில் கலக்க வைக்கும்.

பாடல் தந்த சுகம் : மகராஜனோடு ராணி வந்து சேரும்

இன்று காலை வேலைக்குப் பயணித்துக் கொண்டிருக்கும் போது என் காதில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தது இந்தப் பாடல். 

யாழ்ப்பாணத்தில் இருந்து நிரந்தரமாகப் பிரிகின்றோம் என்று தெரியாமல் அப்போது கொழும்புக்கு மேற்படிப்பின் நிமித்தம் வந்தவேளை இந்தப் பாடலும் அப்போது வெளிவந்த காரணத்தால், எப்போது இதைக் கேட்கும்போதெல்லாம் வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகை மாளிகையின் மேல் அடுக்கு மாடியில் நண்பர்களோடு குடியிருந்ததை நினைப்பூட்டும். 
ராஜாவின் பாடல்கள் ஏதோதோ சினிமாவின் காட்சிக்களனுக்குப் பயன்படும் நோக்கில் இசையமைத்திருந்தாலும் குறித்த பாடல்களுக்கு நம் பசுமையான நினைவுகளைத் தட்டியெழுப்பும் வல்லமை உண்டு.
சதிலீலாவதி திரைப்படம் கமல்ஹாசனும் பாலுமகேந்திராவும் நீண்ட வருஷங்களுக்குப் பின் இணையக் காரணமான படம். ராஜ்கமல் என்ற கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமே தயாரித்திருந்தது. வசனத்தை கிரேஸி மோகன் எழுதியிருந்தார். அப்போது ஒரு சஞ்சிகை பேட்டியில் கிரேஸி மோகனின் துணுக்குத் தோரணம் என்ற விமர்சனத்தை  பாலுமகேந்திரா மிகவும் எரிச்சலோடு எதிர்கொண்டார்.
இந்தப் படம் கன்னடத்தில் மீளவும் நாயகன் ரமேஷ் அர்விந்த் இயக்க, கமல்ஹாசன் தமிழில் கோவை வட்டார வழக்கில் பேசி நடித்தது போலவே கன்னடத்தின் ஹூப்ளி வட்டார வழக்கில் பேசி நடித்தார். ராமா பாமா ஷியாமா என்பது கன்னட வடிவத்தின் தலைப்பு.
சதிலீலாவதி படத்தின் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். 
“மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜயோகம் காலம் தோறும் வாழும்” இந்தப் பாடல் வந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசை அதுவரை பயணித்த இசை வடிவத்திலிருந்து மாற்றம் கண்டது. இளையராஜாவின் ஆரம்பகாலம், எண்பதுகள், தொண்ணூறுகள் என்று பிரிக்கும் போது அவரின் இசை வடிவம் ஒவ்வொரு தளங்களிலும் மாறியிருப்பதை அவரின் தீவிர ரசிகர்கள் உன்னிப்பாக அவதானித்திருப்பர். என்னைப் பொறுத்தவரை இந்த “ராஜனோடு ராணி வந்து சேரும்” பாடல் இருபது வருடங்களுக்கு முன்பே தன்னுடைய அடுத்த தலைமுறையான யுவன் ஷங்கர் ராஜா காலத்துக்கு முன்னோடியாக அமைந்ததாகவே எண்ணிக் கொள்வேன்.
தான் கொண்ட கலையைத் தீவிரமாக நேசிக்கும் கலைஞன் என்பவன் தான் வெற்றி பெற்ற அம்சத்தில் இருந்து விலகி, காலத்துக்குக் காலம் புதுமையான படைப்புகளைக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்போடு இருப்பான். ஜனரஞ்சக ரீதியான வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம் தான்.
“எப்படி ஹிட் பாடல்களை அமைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு
“பாடல்களை ஹிட் ஆக்கிவது நீங்க தானே” என்று சொன்ன ராஜாவின் பதில் தான் இதை முன்மொழியும்.
இந்தப் பாடலின் உருவாக்கம் குறித்து அப்போது உதவி இயக்குநராக இருந்த சுகா ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் வாத்தியக்கலைஞர் விஜி இம்மானுவேல் இந்தப் பாடலுக்குக் கையாண்ட சாகித்தியத்தையும் சிலாகித்திருப்பார்.
பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கும் இதுதான் 
இளையராஜாவின் இசையில் முதல் பாடல் என்று நினைவு.
“கங்கைக்கொரு வங்கக் கடல் போல் வந்தான் அவன் வந்தான்” சித்ரா பாடும் போது வங்கக் கடலாய் நெஞ்சில்  கிளர்ந்து எழும் அந்த நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டே பயணிக்கிறது பாட்டு.

"மங்கியதோர் நிலவினிலே" நான்கு விதம்

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளாகும். 

தமிழன்னை ஈன்றெடுத்த எங்கள் ஒப்பற்ற கவி பாரதியின் இந்த நாளில் அவர் எழுதிய “மங்கியதோர் நிலவினிலே” பாடலின் நான்கு வடிவங்கள், நான்கு வித மெட்டுகளில், நான்கு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டிருப்பதை இங்கே பகிர்கின்றேன்.
எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய “ஒரு மனிதனின் கதை” மதுப்பழக்கத்தினால் எழும் சீரழிவை மையப்படுத்திய நாவல். இது நடிகர் ரகுவரன் முக்கிய பாத்திரமேற்று நடிக்க “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரிலேயே தொலைக்காட்சித் தொடராக ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பின்னர் இதை “தியாகு” என்ற பெயரிலேயே ஏவிஎம் நிறுவனம் திரைப்படமாகவும் மாற்றியது. இதிகாசம் தவிர்ந்த சமூக நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் சினிமாவாகவும் மாற்றம் கண்டது தமிழில் இதுவே முதன்முறையாகும்.
“ஒரு மனிதனின் கதை” தொலைக்காட்சித் தொடரில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின் பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன. இசை வழங்கியவர்கள் சங்கர் – கணேஷ் இரட்டையர்கள். இதில் மிகவும் அழகாகப் பயன்பட்டிருக்கிறது பாரதியார் எழுதிய “மங்கியதோர் நிலவினிலே” பாடல். 
இந்தப் பாடலைப் பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இசைக் களஞ்சியத்தில் திரட்டி வைத்திருந்தது இப்போது பயனை அளிக்கின்றது. இன்று இணையத்தில் காணக்கிடைக்காத இப்பாடலை என் பிரத்தியோக ஒலித்தொகுப்பில் இருந்து பகிர்கின்றேன்.
பாரதியாரின் பாடல்களைத் திரையில் பயன்படுத்தும் உரிமம் பெற்ற ஏவிஎம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் பின்னர் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை நாட்டுடமை ஆக்கினார். இதனால் பல்வேறு தயாரிப்பாளர்களும் பாரதி பாடல்களைப் பயன்படுத்த முடிந்தது. ஏழாவது மனிதன் படத்தில் எல்.வைத்தியநாதன் இசையிலும், பாரதி படத்தில் இளையராஜா இசையிலும் பாரதி பாடல்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இதுதவிர வறுமையின் நிறம் சிகப்பு, சிந்து பைரவி போன்ற படங்களிலும் பாரதியின் ஒன்றிரண்டு பாடல்கள் பயன்பட்டன. சினிமா உலகில் பாரதியின் காதலனாக கே.பாலசந்தரைச் சொல்லுமளவுக்கு அவரின் பெரும்பாலான படங்களில் பாரதியின் அடையாளம் எங்கேனும் நேரடியான பாத்திரம், பாடல், கதைக்கரு என்று ஒட்டிக் கொண்டிருக்கும். 
“மங்கியதோர் நிலவினிலே” பாடலின் மேலும் மூன்று வடிவங்கள் இதோ. இங்கே சிறப்பு என்னவென்றால் சிவசங்கரி (ஒரு மனிதனின் கதை), அகிலன் (பாவை விளக்கு) ஆகிய இரு பெரும் எழுத்தாளரது படைப்புகளில் ஒரே பாடல் பயன்பட்டிருக்கும் தன்மை தான்.
திருமணம் படத்தில்
ஜி.ராமநாதன் இசையில் T.M.செளந்தரராஜன்

பாவை விளக்கு படத்தில்  சி.எஸ்.ஜெயராமன் பாடியது. இசை : கே.வி.மகாதேவன்
தேவநாராயணன் குரலில்

https://www.youtube.com/watch?v=6CZMVN9MLpo&sns=em

யார் பாரதி – நெல்லை கண்ணன்  பகிர்ந்த சிறப்பு மிகு உரை

பாவலரு பாட்டு

வழக்கமாக நடத்தும் ராஜா இசையில் கோரஸ் பாடல்கள் போட்டிக்காக இரு மாதங்களுக்கு முன்னர் எடுத்து வைத்த பாட்டு “பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு”. ஆனால் ஒவ்வொரு வாரமும் வேறு பாடல்களை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது இந்தப் பாடல் ஒலித்துணுக்கு மட்டும் அமைதியாக இருந்தது. ஏனோ திடீரென்று நேற்றைய போட்டிக்காக இந்தப் பாடலைப் பகிர வேண்டும் என்று நினைத்துப் போட்டியிலும் பகிர்ந்து கொண்டேன்.

சில மணி நேரங்கள் கழித்து பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் பாவலர் சிவாவின் ஃபேஸ்புக்கில் இன்று டிசெம்பர் 2 ஆம் திகதி பாவலர் வரதராஜனின் நினைவு தினம் என்று பகிர்ந்தபோது எனது எண்ண அலையின் ஒற்றுமையை நினைத்துக் கொண்டேன். இது போலவே ஏதாவது ஒரு பாடலை நினைக்கும் போது அதைப் பற்றி யாராவது பேசுவதோ அல்லது வானொலி வழியாக எதேச்சையாக அதே பாடல் அந்த நேரம் ஒலிபரப்பப்படும் அதிசயமும் நிகழ்வதுண்டு. இம்மாதிரி ஒத்த உணர்வு உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் சகோதரர் கங்கை அமரனில் இருந்து இன்றைய தலைமுறை வரை ஏதோவொரு வகையில் சினிமாவோடு சம்பந்தப்பட்ட துறையில் இயங்குகிறார்கள். விதிவிலக்காக இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் இந்தத் துறையில் நேரடியாக இயங்காத குறையைப் பல வடிவங்களில் தீர்த்து அவரை நினைப்பூட்டுமாற் போலச் சில காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.
அவற்ற்றில் ஒன்று “பாவலர் கிரியேஷன்ஸ்” இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக இளையராஜாவின் இன்னொரு சகோதரர் மறைந்த ஆர்.டி பாஸ்கர் அவர்களே பெரும்பாலும் தயாரிப்பாளராக இயங்கிய படங்கள் வந்திருக்கின்றன. 
பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் இன்னும் ஒரு படி சுவை கூடிய பாடல்கள் இருப்பது போலத் தோன்றும். குறிப்பாக அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 
பாவலர் வரதராஜன் அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். பிரச்சார மேடைகளே இசைஞானியின் ஊற்றுக் கண்ணாய் அமைந்தவை. பாவலர் வரதராசன் கவிதைகள் கவிதா வெளியீடாக வந்திருக்கிறது. அதைவிட இன்னொரு சுவாரஸ்யம் ஒன்றுள்ளது.
“இதயக் கோவில்” திரைப்படத்தில் வெளிவந்த “வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்” என்ற பாடல் அவரின் கவிதை ஒன்றை அடியொற்றியே படத்துக்காகச் சிற்சில மாற்றங்களோடு திரைப்பாடல் ஆனது. இந்த மூலக் கவிதையை இளையராஜாவின் நூலொன்றில் (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது?) வாசித்த ஞாபகமுண்டு.
கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பிடித்த “மண்ணில் இந்தக் காதலன்றி” பாடல் பாவலர் வரதராஜன் பெயரிலேயே வெளியானது. அந்தக் குறிப்பு எல்.பி ரெக்கார்ட்டிலும் பதிவாகியுள்ளது. ஒருமுறை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியின் போது கங்கை அமரன் முன்னிலையில், இந்தப் பாடலை எழுதியது கங்கை அமரன் என்றும் பாவலர் வரதராஜன் அவர்களைப் பெருமைப்படுத்தவே அவர் பெயர் உபயோகிக்கப்பட்டது என்றும் சொன்னார்.
பாவலர் வரதராஜனின் மகன்களில் எனக்கு பல்லாண்டுகளுக்கு முன்பே தன் இசையால் ஆட்கொண்ட இளையகங்கையைத் தான் முதலில் தெரியவந்தது. “ஆகாயம் கொண்டாடும் பூபாளமே” என்ற அற்புதமான பாடலை “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” படத்துக்காக இசையமைத்தவர். இளைய கங்கை குறித்துப் பிறிதொரு சமயம் தனிப்பதிவாகத் தரவுள்ளேன். இன்னொரு புதல்வர் பாவலர் சிவா இசைக்கலைஞராகவும், முக நூல் நட்பிலும் இருக்கிறார்.
பாவலர் வரதராசன் அவர்களின் பாடல்கள் இன்னும் பல திரைப்படப் பாடல்களாகியிருக்கலாம் என்றெண்ணுகிறேன். குறிப்பாக அவரின் எழுச்சிக் கவிதைகள்.
“எலே படிக்கிறதெல்லாம் பாட்டாயிருமாய்யா பாவலர் வரதராசன் பாட்டைக் கேட்டாக் காட்டுப் புள்ளைக்குக் கூடப் புத்தி வந்திரும்” என்ற பிரபலமான வசனம் “என் ராசாவின் மனசிலே” படத்துக்காக ராஜ்கிரண் குரலில் வந்தது ஞாபகமிருக்கும்.
“சின்னப் பசங்க நாங்க” படத்தில் பாவலர் வரதராசன் மன்றம் என்ற ஒன்றை நாயகன் முரளி சக நண்பர்களோடு நடத்துவதுபோலக் காட்சி இருக்கும்.
 பாவலர் வரதராஜன் என்ற பெயரை 90 களில் வெளிவந்த கோஷ்டி கானங்களில் இளையராஜா பயன்படுத்தியிருக்கிறார். அதில் முத்தாய்ப்பாக அமைவது தான் இந்த “பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு”
அடடா ஒரு பாட்டு என்னை எங்கே எல்லாம் கூட்டிக் கொண்டு போய் விட்டது 🙂 சரி மறக்காம இந்தப் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்.
http://www.youtube.com/watch?v=iFqDmdwjmxE&sns=em
புகைப்படம் நன்றி : மாலை மலர்

கமல் 60 குமுதம் சிறப்பு மலர் – என் பார்வையில்

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ராஜாதி ராஜா வந்த நேரம் என்று நினைக்கிறேன். அதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்களை ஒன்று திரட்டி அபூர்வமான புகைப்படங்கள், செய்திகளோடு ஒரு பெரிய புத்தகம் கிட்டியது. ஆசையாக அதைப் பள்ளி நண்பர்களுக்குக் காட்ட எடுத்துச் சென்றது தான் அது பின்னர் வீடு திரும்பவில்லை. யாரோ ஒரு நண்பன் அதைச் சுட்டுட்டான் என்ற வருத்தம் இன்றளவும் உண்டு 🙂
விகடன் தீபாவளி மலரில் இருந்து சிறப்பிதழ்கள் வரும்போது இயன்றவரை வாங்கிப் பத்திரப்படுத்திவிடுவேன். பின்னர் கட்டுரை எழுதும் போது சும்மா எறியாமல் ஆதாரங்களோடு துணை நிற்கும் என்பது முக்கிய காரணம். அந்த வகையில் குமுதம் சஞ்சிகை சமீபகாலமாக வெளியிட்டு வரும் சிறப்பு மலர் வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் சிறப்பு மலரை முன்னர் வாங்கிப் படித்த போது பெரும் ஏமாற்றமே கிட்டியது. கட்டுரைகளில் கருத்துச் செறிவை விட ஏகப்பட்ட பொன்னாடைகளும், மாலை மரியாதைகளும் குவிந்திருந்தன. நான் எதிர்பார்த்திருந்த அபூர்வமான தகவல் குறிப்புகள் கிட்டாது ஏமாற்றமளித்த மகர் அது.
நடிகர் கமல்ஹாசனின் 60 வது பிறந்த நாள்  சிறப்பு மலரை குமுதம் வெளியிடப் போவதாக அறிவிப்பு வந்ததும் பாதி நம்பிக்கையோடு தான் சிட்னிக் கடைகள்ல் அதைத் தேடினேன். அப்படி ஒரு வஸ்து இல்லை என்று எல்லா இடமும் கை விரித்தார்கள். கடைசி முயற்சியாக ஒரு கடைக்குத் தொலைபேசினேன். 
“ஓம் புத்தகம் இருக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்” என்ற கடைக்காரரின் உறுதிமொழியை அடுத்து ஒரு மணி நேரப் பிரயாணத்தில் “கமல் 60 சிறப்பு மலர்” என் கையில் கிட்டியது. இரண்டு நாட்கள் என் காலை ரயில் பயணம் இந்த நூலை வாசிக்க அர்ப்பணமாயிற்று.
பத்திரிகை உலகில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட “மணா” அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வந்திருக்கும் இந்தச் சிறப்பு மலர் படித்து முடித்ததுமே கமல்ஹாசன் குறித்து ஒரு நிறைவான விவரணப்படம் பார்த்த திருப்தி தான் மனதில் எழுந்தது. அவ்வளவு சிறப்பாக ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக அமையாத தனித்துவமான அம்சங்களைக் கொண்ட கட்டுரைகளின் கோர்வையாக வெகு சிறப்பாக வந்திருக்கிறது இந்த மலர். 
இந்த மலரில் என்னுடைய வாசிப்பில்  மதிப்புக்குரிய இரா.முருகன் சார் பகிர்ந்த “கமல்: மூன்று அழைப்புகள்” என்ற கட்டுரை எழுதிய உத்தி முதன்மையாகக் கவர்ந்தது. இரா.முருகன் சார், கமலோடு திருவனந்தபுரம் போய் நீல.பத்மநாபனைக் கண்டு பின்னர் அமரர் ரா.கி.ரங்கராஜனின் நினைவுகளோடு இறுதியில் கமலின் மூன்றாவது அழைப்பின் மூலம் கமல்ஹாசனின் தேடலை மிகவும் சிறப்பான உத்தியில் வடிவமைத்திருந்தார்.
“நடிப்பின் வேறுபாட்டைக் கோடிட்டுக் காட்டியவர்” என்ற சுகுமாரனின் படைப்பே இந்த மலர் எவ்வளவு சுயாதீனமாக இயங்கியிருக்கிறது என்பதற்கான மிகச் சிறப்பான சான்று. கமலின் மலையாள சினிமா உலகத்தில் இருந்து இன்று வரை நடிப்பின் பரிமாணத்தை வெறும் புகழ் மாலையாக அல்லாமல் தர்க்க ரீதியாகவும் ஆங்காங்கே குட்டு வைத்தும் எழுதுகிறார் சுகுமாரன். இம்மாதிரிக் கட்டுரையை ஒரு சிறப்பு மலரில் எதிர்பார்க்க முடியாது. கட்டுரை இறுதில் சுகுமாரன் கேட்ட அந்தக் கேள்விக்கு கமல் தன் பாபநாசம் படம் மூலம் நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி நிற்கின்றது.
சுகுமாரனின் எழுத்தை இதுகாறும் நான் வாசித்ததில்லை இப்போது இவரின் எழுத்தில் ஈர்ப்பு வருமளவுக்கு இந்த ஒரு கட்டுரையிலேயே ஆட்கொண்டு விட்டார்.
டிஸ்கோ காலத்து இளைஞனில் இருந்து பரிணாமம் பெற்ற இந்திய இளைஞர் வாழ்வியலோடு ஒப்பிட்டு ஜெயமோகன் எழுதிய கட்டுரை வழியாக தென்னிந்தியச் சமூகத்தின் பிரதிபலிப்பாக கமல்ஹாசனை நிறுவி முடிக்கின்றார்.
நடிகை கெளதமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, பாடகர் கார்த்திக், கன்னட ராஜ்குமார், ரமேஷ் அர்விந்த் போன்றோரின் பகிர்வுகளில் ஒரு சில தகவல் கிட்டினாலும் மாமூல் வாழ்த்து மடல்களாகவே மேலோங்கி நிற்கின்றன.
ஆச்சரியமாக எதிர்பார்த்திராத சிறப்புப் பகிர்வுகளாக ரமேஷ் கண்ணா, சார்லி போன்றோரிடமிருந்தும், கமலின் உடற்பயிற்சியாளர் ஜெய்குமாரிடமிருந்தும் வந்தவை சுவாரஸ்யம் மிக்கவையாக உள்ளன.
இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் வழியாக வந்த செய்திகளில் கமலோடு இணைந்த காலகட்டத்து அனுபவ வெளிப்பாடுகளையே பெரிதும் எதிர்பார்த்திருந்தேன்.
நண்பர் ராசி அழகப்பன் அவர்கள் கமல்ஹாசனின் உதவி இயக்குனராகவும், கமலின் பிரத்தியோக சஞ்சிகை “மய்யம்” இதழின் துணை ஆசிரியராகவும் இருந்தார் என்ற செய்தியை மட்டுமே அறிந்திருந்த எமக்கு அவரின்  “மருதநாயகத்துக்குப் போட்ட விதை” என்ற கட்டுரை வழியாக “மய்யம்” காலத்தை அடக்கிய கட்டுரையும் சிறப்பானது.
கமல் 60 என்ற செய்தித் துளிகளும் கமல்ஹாசன் குறித்த பல சுவையான செய்திகளைத் தாங்கி நிற்கின்றது.
கமலின் பல்வேறு பரிமாணங்களையும் காட்டிய இந்தத் தொகுப்பில் அவரின் ஆரம்ப கால நண்பர் சந்தானபாரதி, இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் போன்றோருக்கும் இடம் ஒதுக்கியிருக்கலாம். 
நடிகராகவும், நடனத்திலும் சிறப்பு மிகு கமல் பாடகராகவும் தன்னை நிரூபித்தவர். அதற்கும் இந்த மலரில் இடமில்லாதது ஓரவஞ்சனை. சிங்காரவேலன் பாடல் ஒலி நாடாவில் இளையராஜா கமலின் தனித்துவமான குரலைச் சிலாகித்திருப்பார். அதைப் போன்றதொரு கட்டுரை அமையவில்லை இங்கு.
எழுத்தாளர் வண்ண நிலவன்,தொ.பரமசிவம் போன்றோரின் பகிர்வுகளும் நிறைவானவை, கமலின் குணம்சத்தின் இன்னொரு சாட்சியங்கள்.
வசூல் ராஜா பட அனுபவம் வழியாக இயக்குநர் சரண் கொடுத்த கட்டுரையும் நன்று. 
எஸ்.பி.முத்துராமன், கிரேஸி மோகன் போன்றோர் கமலுக்காகவே நேர்ந்துவிடப்பட்டவர்கள். அவர்களின் கட்டுரைகள் எதிர்பார்த்தது போலவே.
தாயம்மா, சுதந்திரமான கவிதை ஆகிய கமல் எழுதிய கவிதைகள் சிறப்புச் சேர்க்கின்றன.
ஓவியர் ஶ்ரீதரின் கட்டுரையோடு வித விதமான கமல் ஓவியங்கள் அட்டகாச இரட்டை விருந்து.
நடிகர் சிவகுமார் பேஸ்புக்கில் எழுதுவது போல இன்னும் சிறப்பாகக் கொடுத்திருக்கலாம். சிகப்பு ரோஜாக்கள் அனுபவத்தோடு முடித்துக் கொண்டுவிட்டார்.
மனோ பாலாவின் கட்டுரையைத் தாண்டி தான் நேசித்த பத்து கமல் பாத்திரங்களை வைத்து இயக்குநர் ஆர்.சி.சக்தி தந்த கட்டுரை கமல் ரசிகனின் நுட்பமான வெளிப்பாடாக அமைகின்றது. அந்தப் பத்துப் படங்களின் மீதான பார்வையில் கமல் மீதான இவரின் ஆழமான நேசிப்பு முலாம் பூசப்பட்டிருக்கிறது.

இன்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குநர் கே.விஸ்வ நாத் போன்ற தவிர்க்க முடியாத ஆளுமைகளும் கமல் குறித்த இந்தப் பெட்டகத்தில் வந்திருந்தால் இன்னும் சிறப்புச் சேர்ந்திருக்கும்.

தேசாபிமானி என்ற மலையாள இதழுக்கு கமல் கொடுத்த பேட்டியை அச்சொட்டாகத் தமிழ் வடிவமாக்கிப் புண்ணியம் சேர்த்துவிட்டார்கள். மாமூல் கேள்விகளாக இல்லாது கமலின் ஆரம்ப கால வாழ்க்கை, மலையாள சினிமா உலகம் என்று விரியும் கேள்வி பதில்களில் மலையாள நடிகர் சத்யனுடனான ஆத்ம பந்தத்தைப் படிக்கும் போது கமலின் இடத்தில் இருந்தேன், நெகிழ்ந்தேன்.
“எழுத்தாளன் அவனது படைப்புகளில் வாழ்வது போல ஒரு நடிகன் எல்லாத் தலைமுறையினரின் மனதில் இடம்பெற்றிருப்பதாகச் சொல்ல முடியாது” என்று தன் பேட்டி வழியாகச் சொன்ன இந்தக் கூற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றது இந்த “கமல் 60 சிறப்பு மலர்”.
சினிமா ஊடகத்தில் சவாரி செய்து நிதமும் தேடிக்கொண்டே “தேடலும் பதித்தலும்” ஆக வாழும் ஒரு மகா கலைஞனுக்கான சாந்துப் பொட்டு இந்த மலர்.

கமல்ஹாசன் + இளையராஜா = 50 + 10 = 60

கமல்ஹாசன் + இளையராஜா = 50 + 10 = 60 என் விருப்பங்கள்

வழக்கமாக என் பிரியத்துக்குரிய நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளுக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு கொடுப்பது வழக்கம். இன்று ஏதேனும் பழைய இடுகையைக் கொடுக்கலாம் என்று இருந்தேன். 

காலையில் வேலைக்குப் பயணிக்கும் போது திடீரென்று கமல்ஹாசன் இளையராஜா கூட்டணிப் பதிவு போடலாமே என்று எண்ணம் தோன்றக் காரணம் “நீ ஒரு காதல் சங்கீதம்” அப்போது நினைவுக்கு வந்தது. எனவே இயன்றவரை காதல் பாடல்களாகவும், ஒரு படத்தில் இருந்து ஒரு பாடலாகவும், சோகம் தருவிக்காத பாடலாகவும், கமல்ஹாசன் பாடல் காட்சியில் தோன்றி நடித்ததாக இருக்கவேண்டும் என்றும் ஒரு விதிமுறையை மனதுக்குப் பிறப்பித்துப் பட்டியலை ஆரம்பித்தேன். 94 வீதமானவை காதல் பாடல்களாகவும் மீதி தவிர்க்க முடியாத நல்ல இனிமையான பொதுப் பாடல்களாகவும் அமைத்தேன்.
ராணி தேனி, மகளிர் மட்டும் நீங்கலாக 50 படங்கள் கமல்ஹாசன், இளையராஜா கூட்டணியில் வந்ததை இங்கே பகிர்கின்றேன். மீதமுள்ள 10 பாடல்களும் பிற இசையமைப்பாளர் இசையில் கமல்ஹாசனின் படங்களில் எனக்குப் பிடித்தவை.
இவ்வளவு பட்டியலையும் காலை ஒன்றரை மணி நேர ரயில் பயணத்தில் என் ஐபோன் வழியாகத் தட்டச்சியவை.  விடுபட்ட படங்களை உறுதிப்படுத்த கமல் படப்பட்டியலை விக்கிபீடியா வழி பார்த்து உறுதி செய்தேன்.
இப்போது ரயிலில் வீடு திரும்பும் போது பதிவாகக் கொடுக்கிறேன்.
எனவே சிட்னி ரயில்வேக்கும் ஆப்பிளுக்கும் நன்றி 🙂 
முகப்புப்படம் நன்றி : canindia.com
இவை அனைத்துமே என் விருப்பம் சார்ந்த பட்டியல், முதலாவது பாடலைத் தவிர மற்றையவை தர வரிசையில் அமைந்தவை அல்ல. 
1. நீ ஒரு காதல் சங்கீதம் – நாயகன் 
2. வாழ வைக்கும் காதலுக்கும் ஜே – அபூர்வ சகோதரர்கள்
3. வளையோசை கலகலவென – சத்யா
4. பேர் வச்சாலும்  – மைக்கேல் மதன காமராஜன்
5. மீண்டும் மீண்டும் வா – விக்ரம்
6. மனசு மயங்கும் – சிப்பிக்குள் முத்து
7. அந்தி மழை பொழிகிறது – ராஜ பார்வை
8. இந்த மின்மினிக்கு – சிகப்பு ரோஜாக்கள்
9. சின்னஞ்சிறு வயதில் – மீண்டும் கோகிலா
10. ஒரே நாள் உனை நான் – இளமை ஊஞ்சலாடுகிறது
11. பூங்காற்று புதிதானது – மூன்றாம் பிறை
12. பூங்காற்று உன் பேர் சொல்ல – வெற்றி விழா
13. காதல் தீபமொன்று – கல்யாண ராமன்
14. பேரைச் சொல்லவா – குரு
15. ஜெர்மனியின் செந்தேன் மலரே – உல்லாசப் பறவைகள்
16. இதழில் கதை எழுதும் நேரமிது – உன்னால் முடியும் தம்பி
17. விழியில் என் விழியில் – ராம் லக்ஷ்மண்
18. தாலாட்டுதே வானம் – கடல் மீன்கள்
19. பூ மலர்ந்திட – டிக் டிக் டிக்
20 பொன் மானே – ஒரு கைதியின் டைரி
21. சொல்லச் சொல்ல என்ன பெருமை – எல்லாம் இன்ப மயம்
22. வானம் கீழே வந்தாலென்ன – தூங்காதே தம்பி தூங்காதே
23. முத்தம் போதாதே – எனக்குள் ஒருவன்
24. எங்கே என் ஜீவனே – உயர்ந்த உள்ளம்
25. உன்ன விட – விருமாண்டி
26. காதல் ராகமும் – இந்திரன் சந்திரன்
27. சிறிய பறவை – அந்த ஒரு நிமிடம்
28. கண்மணியே பேசு – காக்கிச் சட்டை
29. ராதே என் ராதே – ஜப்பானில் கல்யாணராமன்
30. நான் பூவெடுத்து – நானும் ஒரு தொழிலாளி
31. கால காலமாக – புன்னகை மன்னன்
32. காதல் மஹராணி – காதல் பரிசு
33. கண்மணி அன்போடு – குணா
34. இன்னும் என்னை – சிங்கார வேலன்
35. இஞ்சி இடுப்பழகி – தேவர் மகன்
36. நீ பார்த்த பார்வைக்கொரு – ஹே ராம்
37. பூ பூத்ததை – மும்பை எக்ஸ்பிரஸ்
38. பன்னீர் புஷ்பங்களே – அவள் அப்படித்தான்
39. ஶ்ரீரங்க ரங்க நாதனின் – மகாநதி
40. எந்தன் நெஞ்சில் – கலைஞன்
41. வெளக்கேத்து வெளக்கேத்து – பேர் சொல்லும் பிள்ளை
42. ஆழக்கடலில் தேடிய முத்து – சட்டம் என் கையில்
43. செவ்வந்தி பூ முடிச்ச  – 16 வயதினிலே
44. வான் போலே வண்ணம் – சலங்கை ஒலி
45. நிலா காயுது – சகலகலா வல்லவன்
46. மாருகோ மாருகோ – சதி லீலாவதி
47. இளங்கிளியே – சங்கர்லால்
48. ராக்கோழி கூவும் – மகராசன்
49. பருவம் உருக – ஹரே ராதா ஹரே கிருஷ்ணா
50. நானென்பது நீயல்லவோ – சூரசம்ஹாரம்
51. பாரதி கண்ணம்மா (எம்.எஸ்.வி) – நினைத்தாலே இனிக்கும்
52. வசந்த கால நதிகளிலே (எம்.எஸ்.வி) –    மூன்று முடிச்சு
53. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது (எம்.எஸ்.வி) – வறுமையின் நிறம் சிகப்பு
54. இது இரவா பகலா (எம்.எஸ்.வி) – நீல மலர்கள்
55. வா வா என் வீணையே (கங்கை அமரன்) – சட்டம்
56. மழைக்கால மேகம் ஒன்று (கங்கை அமரன்) – வாழ்வே மாயம்
57.  டெலிபோன் மணி போல் (ஏ.ஆர்.ரஹ்மான்) – இந்தியன்
58 ஸ்வாசமே ஸ்வாசமே (ஏ.ஆர்.ரஹ்மான்) – தெனாலி
59. பூ வாசம் புறப்படும் பெண்ணே  (வித்யா சாகர்) – அன்பே சிவம்
60. காதலி காதலி (தேவா) – அவ்வை ஷண்முகி

பாடல் தந்த சுகம் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்

துரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இல்லையா பின்னே, நிழல்கள் திரைப்படத்துக்காக எஸ்.ஜானகி பாட இசைஞானி இளையராஜா இசையில் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல். 

பின்னர் எப்படி அதிஷ்டத்தை வரவழைத்தது? 
எண்பதுகளில் தெலுங்கில் முன்னணி இயக்குனராகக் கலக்கிக் கொண்டிருந்த வம்சி தன்னுடைய “சித்தாரா” திரைப்படத்துக்காக இந்தப் பாடலின் அதே மெட்டுடன் இசைக் கோர்வையைப் பயன்படுத்திக் கொண்டார். தெலுங்கிலும் அதே எஸ்.ஜானகி தான் பாடகி. இந்தப் பாடலைப் பாடியதற்காக எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது அதை வாங்கிக் கொடுத்தது பாடல் மீளப் பயன்படுத்தப்பட்ட  சித்தாரா திரைப்படம். இதோ அந்த மீளப் பயன்பட்ட பாடல் https://m.youtube.com/watch?v=5yiYUP7t-uw
இயக்குனர் வம்சி எண்பதுகளில் தீவிர இளையராஜா விசிறி. தமிழில் நாம் கேட்ட பல பாடல்கள் தெலுங்கிலும் இவரின் புண்ணியத்தால் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. வம்சி இயக்கிய படங்களில் மீளவும் பயன்பட்ட தமிழ் மெட்டுகள் சிலதை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் (இரண்டாவது பாடல் தவிர) http://www.radiospathy.com/2013/04/68.html
எஸ்.ஜானகியைப் பொறுத்தவரை அவருக்கு நெருக்கமான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று என்று சொல்லியிருக்கிறார். முதலில் இந்தப் பாடல் தமிழில் படமாக்கப்படாத வருத்தமும் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடிய பெரும் பாடகிக்கு இந்தப் பாடலின் மீதான ஈர்ப்பு இருப்பதில் இருந்தே இதன் மகத்துவம் புரியும்.
ஒரு பாடல் இசையமைக்கப்பட்டுப் பின்னர் படமாக்கப்படாது போவது திரையுலகின் நிரந்தர சாபக்கேடு. அதிலும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு இதில் என்ன அப்படி ராசியோ தெரியவில்லை. “மலர்களே நாதஸ்வரங்கள்” (கிழக்கே போகும் ரயில்), “புத்தம் புதுக் காலை” (அலைகள் ஓய்வதில்லை), “சந்திக்கத் துடித்தேன் பெண்மானே” (வேதம் புதிது) என்ற வரிசையில் “தூரத்தில் நான் கண்ட உன் முகம்” (நிழல்கள்) பாடலும் சேர்ந்து விட்டது. இந்தப் பாடல் மட்டும் படமாக்கப்பட்டு ஒருக்கால் தேசிய விருதை மூலப்பாடலான தமிழ் பாடலே சுவீகரித்துக் கொண்டிருந்தால் பாரதிராஜா படத்தில் பாடி இரண்டாவது தடவை தேசிய விருது பெற்ற் பாடகி எஸ்.ஜானகி என்ற பெருமை கிட்டியிருக்கும். ஏனென்றால் எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதைக் கொடுத்தது  பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் “செந்தூரப் பூவே” என்ற கங்கை அமரன் எழுதிய பாடல்.
“தூரத்தில் நான் கண்ட உன் முகம்” பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இந்தப் பாடல் படத்தில் இன்னொரு நாயகி பின்னாளில் பாலசந்தரின் ரயில் சினேகம் படத்தில் அமுதா என்ற பெயரில் நடித்தவருக்காக எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்த நாயகி வரும் காட்சிப் பின்னணியில் மீராவின் சிலை ஒன்று இருக்கும்.
இந்தப் பாடலை எல்லாம் ஒரு காலத்தில் நள்ளிரவு கடந்து வானொலி ஒலிபரப்புச் செய்யும் போது தனியே நான் மட்டும் வானொலிக்கூடத்தில் இருக்கும் சூழலில் கொடுத்த பாட்டு. அந்த ஏகாந்த இரவில் இதைக் கேட்கும் போது கிட்டும் சுகமே தனி. சோகப்பாடல்களைக் கேட்கும் போது பாடுபவர் வழியே  நம் மனக்கவலைகளுக்கு வடிகால் கிடைக்கிறது. கூட ஒருத்தர் இருக்கிறாரே என்பதை அரூபமாக வெளிப்படுத்தி நிற்கும் பாங்கில். 
எஸ்.ஜானகியிடம் இம்மாதிரிப் பாடல்களைக் கொடுக்கும் போது பங்கமில்லாது கொடுத்துவிடுவார் இதைச் சொல்லும் போது “பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது” (ராசாவே உன்னை நம்பி) பாடலை நினைப்பூட்டுகிறார் இவர். எஸ்.ஜானகியிடம் பிடிக்காத விஷயமே இதுதான். அவரின் ஏதாவது ஒரு பாடலைச் சிலாகித்துப் பேச ஆரம்பித்தால் இன்னொரு மகத்தான பாடலில் கொண்டு போய் நிறுத்திவிடுவார்.
“தூரத்தில் நான் கண்ட உன் முகம்” பாடலைக் கேட்டவுடன் அப்படியே இழுத்துப் போய் “கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்” (மனதில் உறுதி வேண்டும்) பாடலில் நிறுத்திவிடும். அவ்வளவு தூரம் நெருங்கிய சொந்தங்களாக இந்த இரு பாடல்களும் எனக்குத் தோன்றும். ஒரே ரகம் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். ஒரே ராகமா என்பதை இசை வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும்.
நிழல்கள் படத்தில் மொத்தம் நான்கு பாடலாசிரியர்கள். மடை திறந்து பாடலை வாலி எழுத, பூங்கதவே பாடல் கங்கை அமரன் கொடுக்க, பொன்மாலை பொழுது பாடலோடு வைரமுத்து அறிமுகமாக, பஞ்சு அருணாசலம் எழுதியது இந்த “தூரத்தில் நான் கண்ட உன் முகம்”. பாரதிராஜா படங்களில் அதிகளவு பாடலாசிரியர் பணியாற்றிய படங்களில் ஒன்று.
பாடலின் ஆரம்பத்தில் மெலிதான இசையோடு ஜானகி கொடுக்கும் ஆலாபனையைத் தொடர்ந்து 
“தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்”
என்று பாடும் வரிகளை மிகவும் சன்னமாகக் கொடுத்துவிட்டு அதை வரிகளை மீண்டும் பாடும் போது கவனியுங்கள் இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடியிருப்பார். தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.
பாடலின் மைய இசையில் ஒற்றை வயலின் இயலாமையின் பிரதிபலிப்பாகவும், ஒரு சேர ஒலிக்கும் வயலின்களின் கூட்டு மனதின் ஆர்ப்பரிப்பைப் பகிர்வது போல இருக்கும்.
தன் மனக்கிடக்கைக் கொட்டிக் கொண்டே போய் ஈற்றில்
“ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா”
என்று தன் மனதை ஓய்வெடுக்கச் சொல்லுமாற் போலக் களைத்து விழுகிறது ஜானகியின் குரல்.
34 வருடங்களுக்கு முன்னர் வந்த நிழல்கள் என்றதொரு ஒரு தோல்விப் படம், அந்தப் படத்திலே வராத பாடல் போன்ற துரதிஷ்டமெல்லாம் களைந்து தன்னைக் கம்பீரமாக இசை ரசிகர் மனதில் வைத்திருக்கிறது இந்தப் பாடல்.
எனக்கு ஒரு மன நிறைவு என்னவெனில் எத்தனையோ பாடல்களைப் பற்றி ரசனைக் குறிப்புகள் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு இதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அன்புக் கட்டளையிட்ட நண்பர் Karthik Natarajan இன் வேண்டுகோளை இன்று என் மனது நிறைவேற்றியிருக்கிறது.
தூரத்தில் நான் கண்ட உன் முகம் பாடலைப் படத்தில் வந்த காட்சிகளோடு மீளப் பொருத்திய காணொளி இது. இந்தக் காட்சியில் வரும் நாயகிக்காக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிராது. நான் மேலே குறிப்பிட்ட மற்ற நாயகிக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
http://www.youtube.com/watch?v=QvtwHqc1ArU&sns=em

நான் பெருமைக்குரிய கிரேஸி மோகன் ரசிகன்

கமலஹாசனுக்குப் பொருத்தமான ஜோடி ஶ்ரீதேவி என்ற நினைப்பை மாற்றி கமலுக்குப் பொருத்தமான ஜோடி கிரேஸி மோகனே என்று சொல்லுமளவுக்கு அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து வெற்றிக் கூட்டணியாக இருந்து வருகிறார்கள்.

நாடக மேடைகளில் இருந்து திரைத்துறைக்கு பாலசந்தரின் “பொய்க்கால் குதிரை” திரைப்படத்தின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிஷ்யப்பிள்ளை கமலின் அபூர்வ சகோதரர்களே கிரேஸி இருக்கிறார் கொமாரு என்று அவர் பெயரைச் சொல்ல வைத்தது. அதற்குப் பின்னால் இன்னும் அழுத்தமாக கிரேஸி மோகன் யார் என்பதை மைக்கேல் மதன காம ராஜனில் ஆரம்பித்து, சதிலீலாவதி,  மகளிர் மட்டும், அவ்வை ஷண்முகி, காதலா காதலா,  பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி, பம்மல் கே சம்பந்தம் என்று தொடரும் கமல் – கிரேஸி மோகன் பந்தம்  வசனத்தில் பஞ்ச் தந்திரம் அடித்து ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்குக் கடந்த முப்பதாண்டுகளில் இம்மாதிரி தொடர்ச்சியான வெற்றிக் கூட்டணி அமைந்ததில்லை.
கமல்ஹாசன் தவிர்த்து வேறு பல இயக்குநர் படங்களிலும் கிரேஸி மோகன் பணியாற்றியிருந்தாலும் “ஆஹா” படம் தவிர்த்து  கிரேஸி மோகனின் தனித்துவத்தை மெய்ப்பிக்கக்கூடிய படங்கள் வாய்க்கவில்லை என்பேன். “கொல கொலயா முந்திரிக்கா” படத்தை கிரேஸி மோகனை ஹீரோவாக நினைத்துக்  கொண்டுதான் பார்த்து ரசித்தேன். 
என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவரிடம் தனக்குத் தேவையானதை பொருத்தமான களத்தில் முழுச்சுதந்தரம் கொடுத்து வேலை வாங்குபவர் ஜெயித்துக் காட்டுவார். இந்தச் சூத்திரம் இளையராஜாவின் பாடல்களில் கூடப் பொருத்திப் பார்க்கலாம். கமல்ஹாசன் அளவுக்கு கிரேஸி மோகனின் நுண்ணிய நகைச்சுவை உணர்வைத் தன் படைப்புகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிரேஸி மோகனை அவ்வளவு புரிந்து கொள்ளாத படைப்புலகம் இருக்கிறது என்றும் கொள்ளலாம்.
மெல்பர்னில் இருந்த போது பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் “காதலா காதலா” படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு நண்பர்களுடன் ட்ராம் வண்டியில் திரும்புகிறோம். படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது ஓயாத சிரிப்பு மழையால் அமுங்கிப் போன வசனங்கள் ஒவ்வொன்றையும் அந்த நேரம் அவதானித்த வகையில் ஒவ்வொருவராகச் சொல்லிச் சிரித்து மகிழ்கின்றோம். பின்னர் அடுத்த வாரம் ஆனந்த விகடனின் இரண்டு பக்கங்களில் “காதலா காதலா” படத்தின் குறித்த சில வசனப் பகுதிகளை மட்டும் பகிர்ந்த போது விடுபட்ட இன்னும் பல நகைச்சுவைப் பகிர்வுகளைத் தெரிந்து சிரித்துச் சிரித்துத் தேய்ந்து போனோம்.
அதுதான் கிரேஸி மோகன்.
இளையராஜாவின் பாடல்களைப் பல்லாண்டுகளாகக் கேட்டு வந்தாலும் குறித்த பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது புதிதாய் ஒரு சங்கதி இசையிலோ அல்லது மெட்டமைப்பிலோ கிட்டும். அது போலவே கிரேஸி மோகனின் வசனப் பங்களிப்பும். சோகம் துரத்தும் தருணங்களில் ராஜாவின் இசைக்கு நிகராக இன்னொரு தளத்தில் கை கொடுப்பது அவ்வை சண்முகி மாமியின் அட்டகாசங்கள்.
வெளிநாட்டுப் பயணத்தில் கண்டிப்பாக ஒரு  காட்சி “மைக்கேல் மதன காமராஜன்”ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.
கிரேஸி மோகனின் பங்களிப்பு திரைத்துறை தாண்டி மேடை நாடகத்திலும் வெற்றிகரமாக இயங்கினாலும் எனக்கு அந்த அனுபவம் கிட்டவில்லை. ஆனால் ஒலி நாடாவில் வெளிவந்த கிரேஸி மோகன் நாடகங்கள் ஓரளவு ஆறுதல். தொலைக்காட்சியில் கிரேஸி மோகன் நாடகத் தொடர்கள் வந்திருந்தாலும் ஒன்றிரண்டு அங்கங்களுக்கு மேல் என்னை ஈர்க்காதது அவர் குற்றமன்று. அவரின் வசனத்தில் இருக்கும் நவீனத்துவத்தையும் புத்திசாலித்தனத்தையும் சின்னத்திரை ஊடகத்தில் பயன்படுத்தும் போது இன்னும் பலபடிகள் தொழில் நுட்ப ரீதியிலும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
வெள்ளைக்காரனின் நகைச்சுவைத் தொடர்களுக்கு இஞ்சித்தும் குறைந்ததல்ல கிரேஸி மோகனின் பங்களிப்பு ஆனால் அதைப் பணக்காரத்தனமாகக் கொடுக்கும் போது இன்னும் பரவலான ஈர்ப்பைப் பெறும் என்பது இசைஞானியின் ஒரு அற்புத இசையை மொக்கைப் படத்தில் கைமா பண்ணும் போது ஏற்படும் ஏமாற்றத்துக்கு நிகரானது. கிரேஸி மோகன் வசனங்களுக்கென்றே பொருத்தமான கலைஞர்கள் வாழ்க்கைப்பட்டு விட்டார்கள்.
தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்போர் கிரேஸி மோகன் போன்ற ஆளுமைகளையும் அவரால் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் ரசிகர்களையும் தெரிந்திராதவராக இருப்பர்.
கிரேஸி மோகனின் சினிமாப் பதிவுகளைத் தொகுக்க எண்ணி நண்பர்களை இணைத்து கிரேஸி மோகன் சினிமாப்பக்கம் http://crazymohanincinema.wordpress.com என்ற தளத்தை ஒரு வருடம் முன்னர் உருவாக்கியிருந்தேன்.
இன்று பிறந்த நாள் காணும் கிரேஸி மோகனுக்கு கடைக்கோடி ரசிகனாக என் வாழ்த்துகளைத் தெரிவித்து மன நிறைவு கொள்கிறேன்.