“வண்ணத்துப்பூச்சி” இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி

“பெற்றோர்கள் குழந்தைகளுக்காகத் தான் தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றார்கள் என்று சொல்லிக் கொண்டு நாள் முழுவதும் ஓடி ஓடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் அந்த சம்பாதித்த பணம் எல்லாம் வாழ்க்கைக்கு பயன்படுகிறதா என்று சொன்னால் பெற்றோர்களின் பார்வையில் ஆமாம், குழந்தைகளின் பார்வையில் இல்லை என்று தான் எனக்குக் கிடைத்த பதில். ஒரு தோல்வியான வாழ்க்கையை வாழும் பெற்றோரை கண்டேன். குழந்தைகளின் பார்வையில் ஏன் இந்த உலகத்தைச் சொல்லக்கூடாது என்று நினைத்தேன். இதைக் கதையாக எடுத்துச் சொன்னபோது பிரபல தயாரிப்பாளர்கள் தாணு, தேனப்பன் போன்ற நண்பர்கள் கோடிக்கணக்கில் போட்டு எடுக்கும் சினிமாவில் இதையெல்லாம் வைத்து எடுக்கிறாயே என்று என்மேல் கொண்ட ஆதங்கத்தில் சொன்னார்கள். நான் யோசித்தேன் ஒரு நல்லவிஷயம் என்று தெரிகிறபோது இன்னொருவர் பணத்தின் மூலமாக பரிசோதனை செய்வதை விட நாமே செய்வோம் என்று நான் கட்டிய வீட்டை அடமானம் வைத்து தயாரிப்பாளராக ஆரம்பித்தேன்.”

இப்படியாக “வண்ணத்துப்பூச்சி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தடம் பதித்திருக்கும் படைப்பாளி திரு.ராசி அழகப்பனை நேற்று அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சார்பில் வானலையில் சந்தித்தேன். அவரின் மனப்பதிவுகள் 28 நிமிட ஒலிப்பகிர்வாகத் தொடர்கின்றது.

பேட்டியில் இருந்து சில துளிகள் எழுத்து வடிவில்

வலம்புரி ஜான் ஆசிரியராக இருந்த “தாய்” பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது வாய்ப்புத் தேடிப் போன போது “உனக்கு என்ன தெரியும்” என்று கேட்ட போது “தெரிந்து கொண்டு வாழ்க்கை தொடங்குவதில்லை, தெரிந்து கொள்வது தான் வாழ்க்கை” அவருக்கு நான் சொன்ன ஒரு வார்த்தையைக் நம்பி என்னைத் கணத்தில் துணை ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டார். அங்கே தான் என் பத்திரிகை வாழ்க்கை தொடங்கியது.

கதவைத் திற காற்று வரட்டும், நிழல் தேடும் மலர் (கவிதை நூல்), புல்வெளிப்பாதை, மழைத் தேன், கும் இருட்டு, உயிர்க்காற்று, தாய் நிலம் உட்பட 15 கவிதை நூல்கள் எழுதியிருக்கிறேன்.

சாவி இதழில் “ஆகஸ்ட் 15” என்ற கவிதையை எழுதினேன், அந்த காலகட்டத்தில் “வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் என்று சுவற்றிலும் , பேரூந்துகளிலும் எழுதி வைத்திருப்பார்கள். அப்போது வீடு எங்கே இருக்கிறது மரம் நடுவதற்கு என்று என்னுள் எழுந்த வேகமான சிந்தனையில் அந்தக் கவிதையை எழுதினேன்.
“வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் என்கிறீர்களே
ஆமாம் நடுகிறோம்
ஒரு மரம் நடுவதற்கு ஒரு வீடு தாருங்கள்”
என்று நான் எழுதினேன். அந்தக் கவிதை தான் எல்லோரும் என்னை திரும்பிப்பார்க்க வைத்தது. அந்தக் காலகட்டத்தில் திரு கமல்ஹாசன் அவர்கள் ஒரு வேகமான இளைஞனை என் திரைப்படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தார். அப்போது நான் அவரை முதன்முதலாக சந்திக்கிறேன்.

“நீங்கள் ஒரு மேற்கத்தேய சிந்தனையுள்ள மனிதராக இருக்கிறீர்கள், நானோ 80 வீடுகள் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ராயப்பேட்டை என்ற நெசவாளர் கிராமத்திலே பிறந்திருக்கிற நான் மக்களுடைய அடித்தட்டு எண்ணங்களைச் சொல்வது தான் திரைவாழ்க்கை என்று கருதிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் உங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று ஆரம்பத்திலேயே நான் சொன்னபோது அவர் சிரித்து விட்டார்.
“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நான் வாழ்ந்த வாழ்க்கை அவ்வாறு, நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை அவ்வாறு, இருவரும் புரிந்து கொள்வோம், திரைப்படத்தில் நாம் கால் ஊன்றுவோம்” என்று சொல்லி மய்யம் என்ற அவர் பத்திரிகை நடத்தி வந்தார், அதில் 60 சதவிகிதம் சினிமா சம்பந்தமாகவும் 40 சதவிகிதம் இலக்கியம் சம்பந்தமாகவும் வரவேண்டும் என்று சொன்னேன். அதை ஏற்றுக்கொண்டார். இரண்டாண்டு காலம் அதை நடத்தினோம்.

அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்திலே என்னைத் துணை இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அது ஒரு சுவையான அனுபவம். முப்பது நாட்கள் குள்ளமான அப்புவாக எப்படி நடிப்பது என்று பயிற்சி செய்து கொண்டிருந்தோம். அதில் தான் நான் எல்லா தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டேன்.பொதுவாக பத்தாண்டுகள் கழித்துத்தான் வசனம் சொல்லிக் கொடுக்கிற வாய்ப்புக்கிடைக்கும் துணை இயக்குனர் என்று சொல்வார்கள். ஆனால் துவக்கத்திலேயே எனக்கு அந்தப்பதவி கிடைத்தது. அது எல்லாவற்றுக்கும் காரணம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் என்மேல் வைத்திருந்த நம்பிக்கை. நான் ஒளிவுமறைவின்றிப் பேசுவது அவருக்கு பிடித்திருந்தது. பெரியார் சிந்தனைகள், சினிமாவில் இலக்கியம் சார்ந்த விடயங்கள் வரவேண்டும் என்பது இவையெல்லாம் இவரிடம் நான் கற்றுக் கொண்டது.

மைக்கேல் மதன காமராஜன், குணா, மகளிர் மட்டும், தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களின் திரைக்கதைக் குழுவில் நான் இருந்தேன். நான் இப்போது வாழ்கிறேன் என்று சொன்னால் திரைப்பட உலகத்தில் அது முழுக்க முழுக்க பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம், தைரியம், புதிதாக எதையாவது செய்யவேண்டும் என்று சொன்ன வார்த்தை தான் என்னை வாழ வைக்கிறது.

ருத்ரைய்யா, குடிசை படம் எடுத்த ஜெயபாரதி, ஏழாவது மனிதன் எடுத்த ஹரிஹரன் இவர்கள் எல்லாம் புதிய செய்திகளைச் சொல்லி அதை மேற்கொண்டு சொல்லமுடியாமல் போய்விட்டார்கள். அருமையான சிந்தனையாளர்கள். ஆனால் நான் யாருக்கு சொல்லவேண்டும், ஏன் சொல்ல வேண்டும், கண்டிப்பாக சொல்லவேண்டும் என்ற வரையறையோடு ஒரு திரைப்படத்தை வரைந்தேன்.

மலையாளத்திரைப்பட உலகத்தில் பரதன் என்ற ஒரு இயக்குனரிடம் நான் சில காலம் பணியாறிய போது அவர் ஒரு முறை சொன்னார். நான் ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று நினைத்தேன். யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் என் ஸ்கூட்டரை ஐயாயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து லாரி என்ற படத்தை உருவாக்கினேன். எப்பொழுதெல்லாம் பணம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அந்தப் படத்தை தொடர்ந்து இயக்கி முடித்தேன் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள் என்றார். என் கதையின் களம் இவர்கள் தான் இதில் சமரசம் செய்து கொண்டு வெற்றி பெறவேண்டிய அவசியம் இல்லை என்று இதுவரையில் சினிமாவை சந்திக்காத நபர்கள், வீட்டுக்கே லாயக்கில்லாதவர்கள் என்று விரட்டிய பிள்ளைகள் இப்படியாக தேர்வு செய்து தேடி எடுத்தேன் “வண்ணத்துப்பூச்சி” நடிகர்களை. மிகப்பிரமாதமாக அவர்கள் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள்.


வண்ணத்துப்பூச்சி திரைக்கதை வசனத்தை கிழக்கு பதிப்பகம் நூலாக வெளியிட்டது.
எத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியொரு படம் என்று இயக்குனர் மகேந்திரன் சொன்னது இந்தப்படத்தின் கருவுக்கு கிடைத்த வெற்றி.
குழந்தைகள் படம் பார்த்து எவ்வளவு காலமாயிற்று என்று பாலுமகேந்திரா வியந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.
பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஓடி ஓடி சம்பாதிக்கும் பெற்றோர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் பணம் சம்பாதிப்பது போல் அன்பு செலுத்த நேரம் ஒதுக்குவதும் சம்பாத்தியமே என்பதை உணர்வார்கள்
படங்கள் நன்றி: ராசி அழகப்பனின் பிரத்தியோக தொகுப்பு

அமரர் சுஜாதா ஒலிப்பேட்டி ‍ மீள் நினைவில்


என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா மறைந்து இன்னும் ஒரு நாள் எச்சத்தில் இருக்கும் ஓராண்டில் அவர் நினைவாக, சுஜாதா குறித்த மீள் பதிவுடன் அவர் தந்த ஒலிப்பேட்டியையும் தருகின்றேன். நாளை வானொலியில் சிறப்பு அஞ்சலிப் பகிர்வையும் கொடுக்கவிருக்கின்றேன்.

எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது “பிரிவோம் சந்திப்போம்” பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவமாக இருக்கிறதே என்று என்ற் வியந்தவாறே, பிரிவோம் சந்திப்போம் இரண்டிலிருந்து, விடாமல் சுஜாதாவை தொடர்ந்தேன். கரையெல்லாம் செண்பகப்பூ, அனிதா இளம் மனைவி, காகிதச் சங்கிலிகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கனவுத் தொழிற்சாலை, “ஆ” என்று கிட்டத்தட்ட முக்கால்வாசி நாவல்களை ஏப்பம் விட்டும் அடங்கவில்லை. இவரின் எழுத்துக்கள் வரும் சஞ்சிகைகளில், சினிமாப் பகுதிக்கு முன்னர் படிக்கும் பக்கங்கள் இவருடையதாக மாறி விட்டது.

சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்”, எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் போன்றவை தான் நனவிடை தோய்த்தலில் என்னை அதிகம் ஈடுபடுத்தி என் ஊர் நினைவுகளை எழுத வைத்தவை.

2002 ஆம் ஆண்டு “கன்னத்தில் முத்தமிட்டால்” படம் வந்த கையோடு நான் அப்போது பணிபுரிந்த வானொலிக்காக என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பேட்டி காணத் தொடர்பு கொள்ள விழைத்தேன். எழுத்துலகில் உச்சத்தில் இருக்கும் இவர் நமக்கெல்லாம் பேட்டி கொடுப்பாரா என்ற அவநம்பிக்கை வேறு மனசின் ஓரத்தில் இருந்தது. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத மனிதரைத் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் உணர்ந்தேன். வானொலிப் பேட்டிக்கு வந்து கலந்துகொண்டு கொட்டமடிக்கும் சில வித்துவச் செருக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஆனால் சுஜாதாவின் உரையாடல் என்னை அவர்பால் இன்னும் நேசிக்க வைத்தது.

தான் எழுத்துலகில் நிறைவேற்ற நினைக்கும் கனவு குறித்தும் சொல்கின்றார் இந்த ஒலிப்பதிவில்.ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது ” நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்” என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

இயன்றவரை சாதாரணமான கேள்விகள் கொடுத்து வானொலி கேட்கும் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்த முயன்றிருக்கின்றேன். காரணம் சுஜாதாவே ஒருமுறை சொன்னது போல் ” நீங்க அவள் ஒரு தொடர்கதையில் நல்லா நடிச்சிருக்கீங்க” என்று அவரைப் பார்த்து யாரோ கேட்டது போல் கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

போய் வாருங்கள் சுஜாதா!
மீண்டும் வானலையில் சந்திபோம்
உங்களோடு நேருக்கு நேராக…….

நாகேஷ் என்றதோர் நகைச்சுவைத்திலகம் ஒலிப்பேட்டி


“நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you” நடிகர் நாகேஷ் சிட்னி தமிழ் முழக்கம் வானொலிப் பேட்டிக்காக

தற்போது நிலவும் அசாதாரண நிலையும், அவலச் செய்திகளும் வரும் இவ்வேளை நம் வாழ்வில் இது நாள் வரை திரையில் பிம்பமாக வந்து சந்தோஷங்களை மனதில் நிரப்பிய இன்னொரு கலைஞன் மறைந்திருக்கின்றான். நாகேஷ் என்ற அந்த மாபெரும் கலைஞனைப் பற்றிய பதிவை இறக்கி வைக்காமல் இருக்க முடியாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நான் தங்கியிருந்த கன்னிமாரா ஓட்டலில் ஒரு நாள் மாலைப் பொழுது எனது அறையை விட்டு வரவேற்பு இடம் நோக்கி இறங்கி வருகின்றேன். அந்த இடம் அந்த சமயம் பரபரப்பாகின்றது. விடுப்புப் பார்க்கும் நோக்கில் எட்டிப் பார்க்கின்றேன். அது அவரே தான். நாகேஷுக்கு சென்னை ரோட்டரி கிளப் ஒரு கெளரவ விருதை அந்த மாலைப் பொழுதில் கன்னிமாராவில் வழங்கி கெளரவித்த நிகழ்வு முடிந்து வரவேற்பு இடத்தில் இருந்த சோபாவில் ஆற அமர இருந்து கொண்டிருந்தார். ஆவலோடு போய் பேச்சுக் கொடுத்தேன். என்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் கேட்டவாறே அவர் கை மட்டும் என் கையை இறுகப் பற்றியிருந்தது. ஆசையோடு புகைப்படம் எடுத்த போது தோழில் கையால் அணைத்தவாறே போஸ் கொடுத்து விடைபெறும் போதும் அன்பாக வழியனுப்பி வைத்தார்.

திருவிளையாடல் போன்ற படங்களில் நாகேஷ் என்ற கலைஞனின் நகைச்சுவைப் பரிமாணம் தொட்டது போல, அவரது அடுத்த சுற்றில் கமலஹாசனின் பல படங்களில் வெறும் நகைச்சுவைப் பாத்திரமென்றில்லாது விதவிதமாக வித்தியாசம் காட்டிச் சென்றவர். அதற்குத் தலை சிறந்த உதாரணம் நம்மவர் படத்தில் அவர் நடிப்பு.

நகைச்சுவைத் திலகம் நாகேஷ் நினைவாக எமது சகோதர வானொலி தமிழ் முழக்கம் என்ற வானொலியில் கலாநிதி் ஆ.சி.கந்தராசா அவர்கள் நடிகர் நாகேஷ் உடன் பத்தாண்டுகளுக்கு முன்னர் கண்ட பேட்டியின் எழுத்து வடிவையும், ஒலி வடிவையும் இங்கே தருகின்றேன். வானொலியில் இருந்து கேட்ட கேள்விகளுக்கு நாகேஷிற்கே உரித்தான நகைச்சுவை மட்டுமன்றி சிந்திக்கவும் விட்டிருக்கின்றார்.

வானொலி: வணக்கம் நாகேஷ் சார்
நாகேஷ்: வணக்கம் சார்

வானொலி: உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன?
நாகேஷ்: எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்… இதுமாதிரி நிறையப் படங்கள் இருக்கு

வானொலி: நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களைக் கேட்டேன்
நாகேஷ்: இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க? ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க

வானொலி: இல்லை, எத்தனை படங்கள்னு கேட்டேன்.
நாகேஷ்: ரசிக்கும் படங்கள் ரொம்ப…..கம்மி. ரசிக்க முடியாத படங்கள் நிறைய

வானொலி: உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்?
நாகேஷ்: இன்னிக்கே சொல்லணும்; இல்லையா? நான் உங்களைக் கேட்கிறேன், சார்.
உங்கலுக்கு மொத்தம் எத்தனை பல்லு? அப்படின்னு நான் கேட்டா, 32ன்னு சொல்லுவீங்க. சொல்லிக் கேட்டீங்களே தவிர என்னிக்காவது என்ணிப் பார்த்திருக்கீங்களா?

வானொலி: உங்கள் திருமணத்துக்குப் பிறகுதான் நீங்கள் பெரிய நிலையை அடைந்தீர்களென்று கேள்விப்பட்டேன், உண்மைதானா அது?
நாகேஷ்: நீங்க கேள்விப்பட்டது அப்படி, நான் கேள்விப்பட்டது என்ன தெரியுமா? Marriage is a romance in which the hero dies in the first chapter.

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.

வானொலி: நீங்கள் நடித்த முதல் படம்?
நாகேஷ்: இரண்டாவது படத்துக்கு முந்திய படம்

வானொலி: உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி?
நாகேஷ்: நினைவில் வச்சுக்கிற அளவுக்கு எந்த நிகழ்ச்சியுமே இல்லை, என்னைப் பொறுத்தவரையிலும். ஆனா ஒண்ணு. மறக்க முடியாம இருக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. ஒலிம்பிக்கிலே நடக்குதே அந்த ஓட்டப்பந்தயத்துல இந்தியா வர்ரது ரொம்பக் கஷ்டமாயிருக்கு. தமிழன் வர்ரது ரொம்பக் கஷ்டம். லிஸ்டிலேயே வரமாட்டேங்கிறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரையிலும் அது 100 மீட்டராயிருந்தாலும் சரி, 400 மீட்டர்ஸ் தடையோட்டமா இருந்தாலும் சரி ஒரு தமிழனுக்குப் பின்னால ஒரு வெறி நாயை விட்டாப் போதும், world best record அவன் தான். உயிருக்குப் பயந்து அப்படி ஓடுவான்னா அப்படி ஓடுவன் சார்.

இந்த ஒரு சான்ஸ் இருக்கு, ஒரு வேளை அவங்க ஒரு வெறி நாயும் கூட ஓடலாம்னு பர்மிஷன் குடுத்தாங்கன்னா.

வானொலி: முந்திய நகைச்சுவைக்கும் இன்றைய நகைச்சுவைக்கும் ஏனிந்த தேய்மானம்?
நாகேஷ்: நிலவு அதாவது நிலா….I mean moon….என்னிக்குமே ஒரே மாதிரித்தான் இருக்கும், ஆனா, நாம பார்க்கும் போது தேய்பிறையா வந்து ஒருநாள் இருட்டடிச்சுப் போய் அமாவாசை ஆகி, அதுக்கப்புறம் வளர்பிறை வரத்தான் செய்யும். அந்த வளர்பிறை வருவதற்கு அதிக நாட்கள் ஆகாதுங்குற நம்பிக்கை எனக்கு நிச்சயமா இருக்கிறது சார்.

வானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
நாகேஷ்: பலபேர் பலவிதமான காரணக்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு ஐயர்ப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.

எங்கள் குடும்பத்தில் எதுவிதமான குழப்பமும் இல்லை. காரணம் எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்தது தான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத்தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.

ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இது நெம்பர் 1.

நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.

நெம்பர் 3, உனக்கு ஒன்று பிடித்தது அதுவே எனக்கும் பிடித்தது. அதனால் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.

வானொலி: அடுத்ததாக, உங்களிடம் ஒரு அரசியல் கேள்வி, பிற்கால இந்தியா எப்படி இருக்கும்?
நாகேஷ்: அது ஒரு டைப்பாத்தான் இருக்கும். இப்ப உங்க ஆஸ்த்திரேலியா இருக்கே, அங்க வந்து கிரிக்கெட், விஞ்ஞானம், கங்காரு, புல்வெளிகள், பால், விவசாயம், இதெல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. அங்கிருக்கும் தமிழர்கள்….நீங்க தயவு செய்து எனக்காக இல்லை மைக்கு….ஒண்ணு கண்டுபிடியுங்க. அந்த மைக் முன்னால் நின்னு யாராவது பேசுறாங்கன்னா….அவங்க பேசும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாக் கூட அந்த மைக் டைம் பாம் மாதிரி வெடிச்சு பேசுறவனுடைய தலை சுக்கு நூறாலகி….செத்துடணும்…on the spot.

ஏன்னு கேட்டா…..இவன் எடுக்கும் போதே….அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களேன்னுதான் ஆரம்பிக்கிறான். இதில அன்பு இருக்கா? சகோதரி மாதிரிப் பார்க்கிறானா? அப்படின்னு ஆரம்பிக்கும் போதே….டமால் அப்படின்னு வெடி வெடிக்கும். இவன் இருக்க மாட்டான். அனேகமாக மைக் முன்னால பேசுறதுக்கு எவனுமே வரமாட்டான்.
மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த countryயும் முன்னுக்கு வரும் சார்.

வானொலி: உங்க குறிக்கோள் என்ன?
நாகேஷ்: குறிக்கோள்னு கேட்டா… ஒருத்தொருக்கொருத்தர் பேசாம…..யார் வம்புக்கும் போகாம….சும்மா உட்கார்ந்திடம்னு சொன்னாக்கா…ஏதோ சவ வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.

அதாவது ஒரு இழவு வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.

அதனால, கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கணும்னா சண்டை வரணும் சார். ஆனா, சமாதானமா முடியணும். அப்புரம் வந்து….சழக்கு வழக்கெல்லாம் இருக்கணும். அது வந்து….சுவாரஸ்யமா முடியணும். பணக்காரன் ஏழையெல்லாம் இருக்கணும். ஆனா ஏழைதான் பணக்காரனுக்கே ஐடியா குடுக்கணும். இதெல்லாம் இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப சப்ணு போயிடும்.

இப்ப… ஏறி ஏறி இறங்கினாத்தான்….அதுக்குப் பேரே ட்ரெயின், கைகழுவி கைகழுவி சாப்பிட்டு முடிஞ்சவுடன் பந்திக்குப் பந்தி மாத்தி மாத்தி வேற பந்தி போட்டாத்தான் அது கல்யாண வீடே.
அது மாதிரி செத்துச் செத்துப் பிழைச்சாத்தான் உலகமே.
எதையுமே லேட் பண்ணுற தைரியம் வேணும் சார். அதான் சார் தமிழனுடைய குறிக்கோளா இருக்கணும்.

வானொலி: வாழ்க்கை சவுக்கியமா, சங்கீதமா இருக்கணும்னா என்ன பண்ணணும் சார்?
நாகேஷ்: நான் ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன் சார். சிமிண்டுத் தரை போட்ட அற்புதமான ஆடிட்டோரியம். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் தோடி ராகத்தில் மிகச் சிறப்பான வித்துவான். அப்பேர்ப்பட்ட மேதை தோடிராகத்தை வாசிச்சிட்டிருக்கும் போது உச்சக்கட்டத்தைத் தொடப் போறாரு. எல்லோரும் சீட் நுனிக்கு வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க. கை தட்டுறதுக்கு இரண்டு கையையும் விரிச்சு வைச்சிட்டிருக்காங்க. ஒண்ணு சேரணும். அந்த நேரத்தில் பின் வரிசையில் யாரோ ஒருத்தரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து டங்… என்ற சத்தத்தோட கீழ போட்டாரு. தன்னுடையதில்லைன்னு தெரிஞ்ச முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவன் கூட எல்லோரும் யார்ரது காசுன்னு பார்க்கிறான். இப்போ எந்த நாதம் பெரிசுங்கிறீங்க? காசுடைய நாதமா? இல்லே சங்கீதத்தினுடைய நாதமா?

We all people especially வெளிநாட்டுல இருக்கிறவங்களா நான் பார்த்திருக்கிறேன். They live only on dollars.

வானொலி: சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே?
நாகேஷ்: அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.

ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க…. நான் இருக்கிற இடமே தெரியல…அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது…”ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு” ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.

மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் “ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல” அப்படின்னவுடன்…எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்…இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு foot கூட – ஒரு அடி கூட – நீ கட் பண்ணாம அப்படியே வாஇகக்ணு; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு” சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.

அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ; அவர் சீன்னு வரும்போது அது யாராராயிருந்தாலும் சரி, அவர் மிதிச்சுத் தள்ளுவாரு. அதே சமயத்தில் அவரை விட நல்லா யாராவது பண்ணினாங்கன்னா அதை மதிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள், என்னைப் பொறுத்தவரைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள்தான்.

வானொலி: இறுதியான கேள்வி சார், ஆஸ்திரேலியா தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?
நாகேஷ்: நண்பரே! ஆஸ்திரேலியத் தமிழர்களுக்காக நீங்கள் கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொன்னேன் தவிர எனக்கு இதெல்லாம் தெரியும், இதெல்லாம் என்னுடைய அனுபவம், இதெல்லாம் என்னுடைய சாதனையென்று சத்தியமாக தற்பெருமையிலயோ, இல்லை, மற்ற விதத்திலயோ நான் சொல்லவில்லை.

“நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you

“சுப்ரமணியபுரம்” இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப்பேட்டி

கடந்த றேடியோஸ்புதிர் 16 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு எது என்று கேட்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் “கண்கள் இரண்டால்” என்ற பாடலைக் கண்டுபிடித்துச் சொல்லியிருந்தீர்கள்.

இன்றைய பதிவில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ஒலிப்பேட்டி இடம்பெறுகின்றது. இந்தப் பேட்டியை கடந்த ஆகஸ்ட் 8, 2008 இல் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் வழங்கியிருந்த நிகழ்ச்சியின் போது எடுத்திருந்தேன்.

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை காலத்துக்கு காலம் இளைய தலைமுறையினர் புதுப் புது சிந்தனைகளோடு தம் திறமையை நிலை நாட்டி தமக்கென்று தனியிடத்தைப் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் திறமைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அதுவே எந்தக் காலத்திலும் ஒரு திறமைசாலியை அடையாளப்
படுத்தி விடும். அதற்கு உதாரணம் தான் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சுப்ரமணிய புரம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள்.

கிட்டத்தட்ட 14 வருஷங்கள் செய்த தவம், இந்த திரைப்பட இசையமைப்பாளர் என்ற கனவு அது நிறைவேறியிருக்கு, அத்தோடு எடுத்த எடுப்பிலேயே உங்களின் முதல் படத்தின் பாடல்கள் வேறு பெரும் பிரபலம் பெற்று விட்டன.

ஒரு சம்பிரதாயபூர்வமான கேள்வியோடே ஆரம்பிக்கின்றேன், இசைஞானத்தை நீங்கள் தேடிப் பெற்றது எப்படி அதாவது உங்கள் ஆரம்ப கால வாழ்வியலை சொல்லுங்களேன்.

சென்னைக்கு வந்தீர்கள் கிட்டத்தட்ட 14 வருஷங்கள் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படைப்பாளியாக இருந்தீர்கள். அவையெல்லாம் எவ்வளவு தூரம் உங்களுக்கு திருப்தியைக் கொடுத்தன?

இடைப்பட்ட இந்த 14 வருஷங்களில் நீங்கள் இசையமைப்பாளராக வரவேண்டும் என்று முயற்சி செய்யவில்லையா?

சுப்ரமணியபுரம் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

நீண்ட நாள் இசைக்கனவோடு வாழ்ந்து வந்த நீங்க இந்தப் படத்துக்காக போட்ட மெட்டுக்கள் ஏற்கனவே உங்கள் மனதில் கருக்கட்டி இருந்தவையா அல்லது இயக்குனர் கதைச் சூழலைச் சொன்னபோது உருவானவையா?

இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு சில நடிகர்களைத் தவிர மற்ற எல்லோரும் புதுமுகங்கள், அதைப் போல உங்கள் பாடல்களிலும் சங்கர் மகாதேவன் தவிர்ந்த அனைவருமே இப்போது தான் வந்த பாடகர்கள், இது எதிர்பாராமல் அமைந்த விடயமா?

முதல் படம் பெருத்த வெற்றியையும் ஒரு எதிர்பார்ப்பையும் உங்களுக்கு கொடுத்திருக்கு இதை எப்படி உணர்கின்றீர்கள்

ரீதிகெளளா ராகத்தில் அமைந்த கண்கள் இரண்டால் பாடல் மிகவும் சிறப்பா அமைஞ்சிருக்கு, இந்த ராகத்தில் பாடல் போடவேண்டும் என்ற ஆசை இருந்ததால் தான் இது அமைந்ததா?

இப்படியான கேள்விகளுக்கு சுப்ரமணிய புரம் திரைப்படத்தின் பாடல்கள் பிறந்த கதையோடு திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் கொடுத்திருந்த 28 நிமிட ஒலிப்பேட்டி இது

தரவிறக்கிக் கேட்க

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் பின்னணி இசை ஒன்று

திரையுலகின் போராட்டம் குறித்து இராம நாராயணன் ஒலிப்பேட்டி


கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தாக்குதல்களையும், திரையரங்கங்களை அடித்து நொருக்குவதையும் கண்டித்து தமிழ் திரைப்பட நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தொழில்நுட்ப உதவியாளர் சங்கம் உட்பட்ட அமைப்புக்கள் இன்று நடத்திய உண்ணா நோன்பு குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சற்று முன்னர் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு.இராம நாராயணன் அவர்களை சற்று முன்னர் குறுகிய நேரடிப்பேட்டி ஒன்று கண்டிருந்தேன். அதன் ஒலி வடிவம் இதோ:

சுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது….!

எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது “பிரிவோம் சந்திப்போம்” பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவமாக இருக்கிறதே என்று என்ற் வியந்தவாறே, பிரிவோம் சந்திப்போம் இரண்டிலிருந்து, விடாமல் சுஜாதாவை தொடர்ந்தேன். கரையெல்லாம் செண்பகப்பூ, அனிதா இளம் மனைவி, காகிதச் சங்கிலிகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கனவுத் தொழிற்சாலை, “ஆ” என்று கிட்டத்தட்ட முக்கால்வாசி நாவல்களை ஏப்பம் விட்டும் அடங்கவில்லை. இவரின் எழுத்துக்கள் வரும் சஞ்சிகைகளில், சினிமாப் பகுதிக்கு முன்னர் படிக்கும் பக்கங்கள் இவருடையதாக மாறி விட்டது.

சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்”, எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் போன்றவை தான் நனவிடை தோய்த்தலில் என்னை அதிகம் ஈடுபடுத்தி என் ஊர் நினைவுகளை எழுத வைத்தவை.

2002 ஆம் ஆண்டு “கன்னத்தில் முத்தமிட்டால்” படம் வந்த கையோடு நான் அப்போது பணிபுரிந்த வானொலிக்காக என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பேட்டி காணத் தொடர்பு கொள்ள விழைத்தேன். எழுத்துலகில் உச்சத்தில் இருக்கும் இவர் நமக்கெல்லாம் பேட்டி கொடுப்பாரா என்ற அவநம்பிக்கை வேறு மனசின் ஓரத்தில் இருந்தது. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத மனிதரைத் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் உணர்ந்தேன். வானொலிப் பேட்டிக்கு வந்து கலந்துகொண்டு கொட்டமடிக்கும் சில வித்துவச் செருக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஆனால் சுஜாதாவின் உரையாடல் என்னை அவர்பால் இன்னும் நேசிக்க வைத்தது.

தான் எழுத்துலகில் நிறைவேற்ற நினைக்கும் கனவு குறித்தும் சொல்கின்றார் இந்த ஒலிப்பதிவில்.ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது ” நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்” என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

இயன்றவரை சாதாரணமான கேள்விகள் கொடுத்து வானொலி கேட்கும் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்த முயன்றிருக்கின்றேன். காரணம் சுஜாதாவே ஒருமுறை சொன்னது போல் ” நீங்க அவள் ஒரு தொடர்கதையில் நல்லா நடிச்சிருக்கீங்க” என்று அவரைப் பார்த்து யாரோ கேட்டது போல் கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

போய் வாருங்கள் சுஜாதா!
மீண்டும் வானலையில் சந்திபோம்
உங்களோடு நேருக்கு நேராக…….

Heart Beats இசை ஆல்பம் – ஒலிப்பேட்டி


ஆராதனா என்னும் இசைக்கல்லூரியைக் கொழும்பில் நடாத்தி வரும் வி.கே.ஜே மதி அவர்களின் முதல் அரங்கேற்றமாக Heart Beat என்ற இசை ஆல்பம் நாளை டிசம்பர் 15 ஆம் திகதி, உருத்திரா மாவத்தையில் உள்ள “கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது. இந்த ஆல்பத்தை அவரே எழுதி இசையமைத்திருக்கின்றார்.

மதி அவர்களையும், அவரின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டு வரும் நோக்கில் அவருடன் ஒரு ஒலிப்பேட்டியைத் தயாரித்து கடந்த புதன் கிழமை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பியிருந்தேன். அதன் பகிர்வை இங்கே தருகின்றேன்.

மதியின் கைவண்ணத்தில் வந்த “யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்” என்ற பாடலைக் கேட்டிருந்தேன். அந்தப் பாடலே இவருடைய திறமைக்கு ஒரு சான்று. இப்பேட்டியின் ஆரம்பத்தில் அப்பாடலின் சில துளிகளையும் உங்கள் செவிக்கு விருந்தாக இட்டிருக்கின்றேன். இசைத் துறையில் வி.கே.ஜே.மதியின் புகழ் வியாபியிருக்க வேண்டும் என்று இவ்வேளை வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

பத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது மற்றும், தமிழிசைச் சங்கத்தின் “இசைப் பேரறிஞர்” பட்டத்தைப் பெற்றவருமாகிய இசை மேதை T.N சேஷகோபாலன் அவர்கள் இரு வாரங்களுக்கு முன் சிட்னி, அவுஸ்திரேலியா வந்த போது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் நானும், என்னோடு இணைந்து சங்கீத ரசிகர் திரு உமாசங்கர் இருவருமாகக் கண்ட ஒலிப்பேட்டியின் இரு பாகங்கள் இன்றைய பதிவில் இடம்பெறுகின்றன.

இதில் சேஷகோபாலனின் கர்நாடக சங்கீதப் பயணத்தின் ஆரம்பம் முதல் முக்கிய சில நிகழ்வுகள், தோடி ராகம் திரைப்படத்தில் நடித்த அனுபவம், கூடவே “எந்தரோ மகானு” பாடலோடு நிறைவு பெறுகின்றது இப்பேட்டி.

பாகம் 1

பாகம் 2

சேஷகோபாலன் அவர்கள், ஆத்மா திரைப்படத்திற்காக , இசைஞானி இளையராஜா இசையில் பாடிய “இன்னருள்” என்ற இனிய பாடல்.

எழுத்தாளர் தம்பு சிவாவுடன் ஒலிப் பேட்டி

றேடியோஸ்பதி தளம் தொடர்ந்து திரையிசை கலந்த பதிவோடு பயணித்து வந்து இந்தப் பதிவுடன் அடுத்த கட்டத்தில் நுளைகின்றது. அந்த வகையில் இன்றைய பதிவு ஈழத்து முற்றமாக அமைகின்றது.

இன்றைய ஈழத்து முற்றம் பகுதியிலே, ஈழத்து எழுத்தாளர் தம்பு சிவாவின் (த.சிவசுப்பிரமணியம்) ஒலிப்பேட்டி அலங்கரிக்கின்றது. எழுத்தாளர் தம்பு சிவா ஈழத்தின் யாழ்ப்பாணக் குக்கிராமமான 1944 இல் இணுவிலில் பிறந்தவர். 1970, 1971 இல் வெளிவந்த கற்பகம் சஞ்சிகையில் சிறப்பாசிரியராக இருந்து இலக்கியப் பணியாற்றியவர். அத்தோடு தொழிற்சங்கவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர், இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்றுடையவராக இருந்து வருகின்றார்.


“காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள்” தொகுப்பின் தொகுப்பாசிரியராவார். தற்பொழுது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவருகின்றார். இவரது “சொந்தங்கள்” என்ற முதற் சிறுகதைத் தொகுதியும், “முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்” என்ற கட்டுரைத் தொகுதியும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையால் வரும் யூன் மாதம் 17 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு பெண்கள் ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்திலே (58 தர்மராம வீதி, கொழும்பு 6) சிறப்பாக வெளியிடப்படவிருக்கின்றன. இதை வாசிக்கும் கொழும்பு வாழ் அன்பர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.

எந்தவிதமான முன்னேற்பாடுகளும், சமரசங்களும் இன்றி, எடுத்த முதல் அழைப்பிலேயே பேட்டிக்குச் சம்மதித்து அப்போதே இந்தப் பேட்டியினை அளித்து, முன் ஆயத்தம் எதுவுமின்றித் தன் இலக்கிய, சமூக சிந்தையை வெளிப்படுத்த முடியும் என்று காட்டிவிட்டார் இந்த எழுத்தாளர், என்பதே நான் பேட்டியெடுத்த பின் எனக்குள் ஏற்பட்ட அபிப்பிராயம்.

இந்த ஒலிப் பேட்டி இன்று புதன் கிழமை (13 யூன்) அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் “ஈழத்து முற்றம்” நிகழ்ச்சியில் இரவு 9.30 மணிக்கு இடம்பெறவிருக்கின்றது.
ஒலிப்பேட்டியைக் கேட்க

கவிஞர் அறிவுமதி பேசுகிறார்

தன் கவித்தமிழில் ஆங்கிலம் ஆக்கிரமிக்காது கவி படைத்த கவிஞர் அறிவுமதி, தன் வாழ்வியல் அனுபவங்களைத் தருகின்றார். தன் இலக்கியப் பிரவேசம், சினிமா உலக அனுபவம், ஈற்றில் சினிமா உலகில் தன் வனவாசம் மேற்கொள்ள ஏதுவாய் அமைந்த சம்பவம் போன்றவற்றைத் தொட்டுப் போகின்றது இப்பேட்டி.

கேட்க, கீழே உள்ள பெட்டியை அழுத்தவும்.

Arivu.wma