உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?


இந்த ஆண்டு முதல் றேடியோஸ்பதி மூலம் என் இசைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கும் அதே வேளை ஆண்டு முடிவதற்குள் ஒரு இசைத் தேர்வுப் போட்டியை நடத்த நினைத்தேன்.
2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் இசையமைப்பாளர்களில் இருந்து முதல் மூன்று இசையமைப்பாளர்களை வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் முறையில் இந்தப் போட்டி அமைகின்றது. காரணம் இசை ரசிகர்கள் தான் விருதுகளைத் தேர்தெடுக்கும் உண்மையான நடுவர்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் இசையமைப்பாளருக்காக நீங்கள் பின்னூட்டம் மூலம் பிரச்சாரம் கூட வழங்கலாம். அதாவது, குறித்த அந்த இசையமைப்பாளர் எந்த வகையில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு முதலிடத்தில் இருக்கின்றார் என்று.

இங்கே நான் ஒவ்வொரு இசையமைப்பாளர்களுக்குப் புகழ் கொடுத்த திரையிசைப் பாடலில் ஒன்றையும் தரவிருக்கின்றேன். அதற்குக் காரணம் இப்போதுள்ள ஏராளமான இசையமைப்பாளர்களில் குறித்த பாடலை இசையமைத்தவர் யார் என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். இதோ இந்தப் போட்டியில் வரும் இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கேளுங்கள், கேட்டுக் கொண்டே உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.

யுவன் சங்கர் ராஜா

பருத்தி வீரன் படத்தில் கிராமிய இசையாகட்டும், சத்தம் போடாதே, சென்னை 28 போன்ற படங்களில் நகரத்தின் நவீனத்தைக் காட்டும் இசையாகட்டும், கற்றது தமிழ் போன்ற உருக்கமான கதைக்களமாகட்டும் யுவனுக்கு இந்த ஆண்டு நிறைய வாய்ப்பைக் கொடுத்து உயர வைத்தது.

வித்யாசாகர்

இடைக்கிடை தமிழில் வந்து தலை காட்டுவார், பின்னர் தெலுங்கோ மலையாளத்திலோ இசையமைத்துக் கொண்டிருப்பார். பின்னர் அர்ஜீனோ, தரணியோ இவரை தமிழுக்கு இழுத்து வருவார்கள். இம்முறை பிரகாஷ்ராஜ் புண்ணியத்தில் மொழி திரைப்படம் மூலம் “காற்றிற்கும் மொழி” கொடுத்தவர்.

ஏ.ஆர்.ரஹ்மான்

வித்யாசாகருக்கு பிற மாநிலம் போல ரஹ்மானுக்கு பிற நாடுகள். அடிக்கடி வெளிநாடுகளுக்குத் தாவி மேடை நாடகங்களுக்கோ சீனப் படங்களுக்கோ இசையமைத்துக் கொண்டிருந்த இவரை, இயக்குனர் ஷங்கர் விடமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று “சிவாஜி” படத்துக்கு மெட்டுப் போட வைத்தார்.
விஜய்யின் அழகிய தமிழ்மகனைப் பற்றிப் இப்போதைக்குப் பேசுவதாக இல்லை. ஏனென்றால் கொஞ்சம் காலம் கழித்து தான் ரஹ்மானின் டியூன் சூடு பிடிக்கும்.

ஜி.வி.பிரகாஷ்குமார்

சிக்கு புக்கு ரயிலே பாடிய பையனா இவன்? என்று கேட்கும் அளவுக்கு வெயில் படமூலம் தன் தடம் பதித்தவர். இந்த ஆண்டு கிரீடம் படத்தில் சாதனா சர்க்கம் மூலம் அக்கம் பக்கம் பாடவைத்து ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தவர்.

மணிசர்மா

சென்னைக்கார இசையமைப்பாளர், ஆந்திராக்காரம் தான் இவருக்கு பிடிக்கும் போல. ஆனாலும் போக்கிரி மூலம் ஒரு சில தெலுங்கு டியூனை குழைத்து ஒப்பேத்தி விட்டார். இருந்தாலும் போக்கிரி கேட்கப் பிடிக்கும்.

விஜய் ஆண்டனி

நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் பாட்டில் அடையாளப்படுத்தப்பட்ட இவர், நான் அவனில்லை மூலம்
ஏன் எனக்கு மயக்கம் என்ற பாட்டில் கிறங்க வைத்தவர் இந்த ரீமிக்ஸ் புலி.

தினா

“மன்மத ராசா கன்னி மனச கொல்லாதே” மறக்க முடியுமா? தொலைக்காட்சி நாடகங்களின் இசைராஜா தீனா இப்போதெல்லாம் தான் இசையமைக்கும் நாடகங்களுக்கு போடும் பாட்டுக்கு தன் மகன் பெயரை போட்டு விட்டு திரையுலகத்தில் நிரந்தர இடம் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் உப்பு கல்லு பாட்டு இந்த ஆண்டு இவர் பெயரைச் சொல்ல வைத்திருக்கிறது.

இளையராஜா

இப்போதெல்லாம் ராஜா சார் பாட்டுக் கேட்க ஹிந்தியோ, மலையாளமோ தான் போகவேண்டியிருக்கு. ஆனாலும் சேரனின் மாயக் கண்ணாடி மூலம் மாயம் காட்டிப் போனார். ராஜா ஆடிய ஆட்டம் என்ன, இந்த ஆட்டத்துக்கெல்லாம் அவரை இழுக்கலாமா? இரு தசாப்தங்களாக அவர் தானே முதலில் இருந்தார் என்ற ராஜா வெறியர்கள் சலித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இந்த ஆண்டு வந்த இசைப் பட்டியல் அடிப்படையில் இளையராஜாவையும் சேர்த்துக் கொள்கின்றேன்.

பரத்வாஜ்

பழைய நினைவுகளை வைத்துப் படம் பண்ண வேண்டுமென்றால் கூப்பிடுங்கள் பரத்வாஜை என்று சொல்லலாம் போலிருக்கிறது. பள்ளிக்கூடம் பாட்டுக்கள் படத்தோடு பேசப்படுகின்றன.

டி.இமான்

நடிகர் அர்ஜீனின் தற்போதய ஆஸ்தான இசையமைப்பாளர், சுந்தர் சி இன் படங்களுக்கும் தொடர்ந்து கைவண்ணம் காட்டுகிறார். வீராப்பு பாடல்கள் மனசில் நிற்கின்றன.

சபேஷ் முரளி

சபேஷுக்கு குத்துப் பாட்டு பாடத் தெரியும், ஆனால் மெலடியாக இசையமைக்க வரும் என்பதை தன் சகோதரர் முரளியோடு இணைந்து நிரூபித்து வருகின்றார். இந்த ஆண்டு அதற்கு உதாரணமாக வந்தது “அம்முவாகிய நான்”.

ஸ்ரீகாந்த் தேவா

“நாளைய பொழுதும் உன்னோடு” திரைப்படத்தில் பேசப் பேராசை என்ற பாடலை இவர் இசையமைப்பில் கேட்டிருந்தீர்களானால் இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் தேவாவை விலக்கி வைக்கமாட்டீர்கள். அருமையான மெலடி கொடுத்திருக்கின்றார்.

ஹாரிஸ் ஜெயராஜ்

ரஹ்மானின் ஜெராக்ஸ் என்று வந்த வேகத்திலேயே இவர் மீது புகார் கொடுத்தார்கள். ஆனாலும் என்ன இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிற்கின்றார். ஒரே மாதிரிப் பாடல்கள் கொடுக்கின்றார் என்பது இவர் மீது கொடுக்கப்படும் சமீபத்திய புகார். “உன்னாலே உன்னாலே”, “பச்சைக்கிளி முத்துச்சரம்” மூலம் பரவசப்படுத்தியவர்.

சரி, இசையமைப்பாளர்களையும், அவர் தம் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள், இனி உங்கள் வாக்கை வழங்குங்கள். முடிவுகள் இரு வாரத்தின் பின் வெளியாகும்.
document.write(dispSurvey(/*survey title*/’2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?’, /*option values*/ ‘யுவன் சங்கர் ராஜா {வித்யாசாகர்{ஏ.ஆர்.ரஹ்மான் {ஜி.வி.பிரகாஷ்குமார் {மணிசர்மா {விஜய் ஆண்டனி {தினா {இளையராஜா{பரத்வாஜ்{டி.இமான்{சபேஷ் முரளி{ஸ்ரீகாந்த் தேவா{ஹாரிஸ் ஜெயராஜ்

ஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்

இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேட்டன்களுக்கும், குறிப்பா சேச்சிகளுக்கும் இனிய பண்டிகை வாழ்த்துக்கள்.

இதோ உங்களுக்காக ஷ்பெஷல் பாட்டுப் படையல்

முதலில் வருவது சலீல் செளத்ரி இசையில் பி.லீலா குழுவினர் பாடிய “செம்மீன்” திரைப்பாடலான “பெண்ணாளே பெண்ணாலே” என்ற பாடல்.

அடுத்து ரவீந்திரன் இசையில் “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா” திரைக்காக மலையாளப் பாட்டுக்கடவுள் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய “ப்ரமதவனம் வீண்டும்” என்னும் பாடல் வருகின்றது.

தொடர்ந்து “மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா” என்ற பாடலை “மனசினக்கரே” திரையில் இருந்து நம்ம குலதெய்வம் இளையராஜா போட்ட டியூனைப் பாடுகிறார்கள் எம்.ஜி.சிறீகுமார் குழுவினர்.

மலையாளத் திரையுலகில் ஒரு சகாப்தம் படைத்துக் காலமான ரவீந்திரன் இசையில் வந்த இறுதித் திரைப்படமான “வடக்கும் நாதன்”படத்தில் இருந்து “பாகி பரம்பொருளே” என்ற இறைமணம் கமிழும் பாடலைப் பாடுகின்றார்கள் மஞ்சரி மற்றும், சிந்து பிரேம்குமார் குழுவினர்.

நம்ம தல கோபி ஓணம் பண்டிகைக்கு ஒரு பாட்டு வேணும்னு அடம்பிடிச்சார். அவருக்காக நோட்டம் திரையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் “பச்ச பானம்” என்ற பாடல் ஜெயச்சந்திரன் இசையில் வருகின்றது.

எந்தா இது? ஓணம் டோயில் ஒரே மெலடி பாட்டு?
என்று அலுக்கும் சேட்டன்களுக்காக ஒரு துள்ளிசைப் பாடல் நிறைவாக “காழ்ச்சா” திரையில் இருந்து கலாபவன் மணி குழு மோகன் சித்தார்த்தா இசையில் பாடும் “குத்தநாடன் காயலிலே” வருகின்றது.

வரட்டே…..;-)

Powered by eSnips.com

ஹெலன் கெல்லர் – தன்னம்பிக்கையின் பிறந்த நாள்


” இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடு தான் படைத்திருக்கின்றார். அதை என்றாவது ஒரு நாள் நான் உணர்வேன். அப்போது நான் அது குறித்து மகிழ்வேன்”
என்றார் ஹெலன் கெல்லர்.

யாரிந்த ஹெலன் கெல்லர்?

கண் பார்வையற்ற, பேச்சுத் திறன் இழந்த, காது கேளாத ஒரு பெண்மணி, ஊனமுற்ற பலரின் வாழ்வில் ஒளிவிளக்காய் மாறினார்.
ஜூன் 27, 1880 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மானிலத்தில் பிறந்து ஜீன் 1, 1968 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரைக்கும் ஊனமுற்ற மனிதர்களின் வாழ்வுக்காகப் போராடினார், இறந்த பின்னும் அவர் பெயரில் பணி தொடர்கின்றது. அவர் தான் ஹெலன் கெல்லர்.

இன்று ஜூன் 27, தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாய் விளங்கும் ஹெலன் கெல்லரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து ” கை அருகே வானம்” என்ற ஒலிச்சித்திரத்தைத் தயாரித்து வழங்குகின்றேன். கேளுங்கள்.
இந்த நிகழ்ச்சி இன்றிரவு 10 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ” நிலா முற்றம்” நிகழ்ச்சியின் முதற்பாகமாகவும் அரங்கேறுகின்றது.

“அழகு” ராணிகள் Rated MA 18+

வலைப்பதிவுலகில் காலத்துக்குக் காலம் பரவும் வைரஸ் காச்சல்களாக, சங்கிலிப் பதிவு, நன்றியுள்ள நாலு பேர், சங்கிலிப் பதிவு, வியேட் பதிவு வரிசையில் அழகுப் பதிவுகளும் வந்து ஓய்ந்துவிட்ட வேளை நானும் என் பங்கிற்கு அழகு குறித்த என் பார்வையைத் தரலாம் என்றிருக்கின்றேன். ஆளாளுக்கு வானத்தை வெறிச்சுப் பார்த்தும், கடல் அலையைக் கால்கள் தொட்டுப் பார்த்தும் அழகுக் கவிதைகள் எழுதிவிட்டார்கள். நமக்கெல்லாம் கவிதைகள் சரிப்பட்டு வராது. “செய்யும் தொழிலே தெய்வம்” ( பாட்டுப் போடுறது) என்று மனசைத் திடப்படுத்திக் கொண்டு எனக்குப் பிடித்த அழகு ராணிகளைப் பற்றிச் சொல்லப் போகிறேன். முதலில் இந்த அழகுப் பதிவுக்கு என்னை இழுத்து வந்த பாலைவனத்துச் சிங்கம் கோபிநாத்துக்கு ஒரு சலாம்.

தமிழ் சினிமா நாயகிகளைக் கவர்ச்சியின் உருவமாகப் பார்த்து ஏங்கும் பதிவல்ல இது. என்னுடைய காலத்தில் கடந்து போகும் சினிமா ரசனைகளில் வழித்துணையாக வந்து போன நாயகிகளுக்கான கெளரவமாக வேண்டுமென்றால் சொல்லலாம். இந்த ராணிகள் நடித்துப் போன படங்களில், என்னைக் கவர்ந்த பாடல் ஒன்றும், றேடியோஸ்பதியின் விதிமுறைகளைச் சற்றே விலக்கி வைத்து ஓளிக்காட்சியையும் இப்பதிவில் தருகின்றேன்.

அந்த வரிசையில் எனக்குப் பிடித்த ஆறு அழகு ராணிகள் இதோ.
அழகு ராணி ஒன்று: அர்ச்சனா


நடராஜா மாமா வீட்டு திண்ணையில் ஒரு கூட்டம் அயற் சனம் கூடி இருக்க, சின்னப்பிள்ளைகளோடு ஒருவனாக, ஆவென்று புதினமாகப் பார்த்த படம் “நீங்கள் கேட்டவை”. அந்த வயசிலும் அர்ச்சனா என்ற அந்த நாயகியை ஏதோ பக்கத்துவிட்டு அக்காவின் நடையுடை போல ஒரு உணர்வு தோன்றிய காலம் அது. கண்களும் சிரிக்க ஒரு மிரளல் பார்வையோடு நடித்த அர்ச்சனாவின் பிள்ளையார் சுழி அது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி சொன்னது போல, தமிழ் சினிமா நாயகியின் பொருத்தமான அடையாளமாக அர்ச்சனாவைச் சொல்லலாம்.

நல்ல சினிமாவைத் தேடி ரசித்துப் பார்த்த காலத்தில் அர்ச்சனாவின் இயல்பான நடிப்பை அவர் நடித்த “வீடு” படத்தின் மூலம் உள்வாங்கிக்கொண்டேன்.

அழகி படத்தில் நடிக்கவைக்க இயக்குனர் தங்கர்பச்சன் நந்திதா தாசைத் தேடி வட நாட்டுக்கு போயிருக்கத் தேவையேயில்லை. உள்ளூரில் அகப்படும் அர்ச்சனாவே மிகப்பொருத்தமாக இருந்திருப்பார்.
தேசிய விருதுக் குழுவிற்கு மட்டுமே தெரிந்த அர்ச்சனாவின் நடிப்பின் பெருமையை சினிமா உலகம் பயன்படுத்தத் தவறிவிட்டது. இப்போது பரட்டைக்கு அம்மாவாக நடிக்க வேண்டிய தரத்தில் அர்ச்சனாவின் நிலை.

அர்ச்சனாவின் நடிப்பைக் காட்ட முடியவில்லை. அவர் நடித்த நீங்கள் கேட்டவை படத்தின் அருமையான பாடலைக் கேளுங்கள். காட்சியையும் பார்த்து அனுபவியுங்கள். இந்த “ஓ வசந்த ராஜா” பாடலைப் பார்க்கும் போது ஒரு புதுமையையும் காண்பீர்கள். அது, பாடலின் முன் பாதி இந்திய சங்கீதப் பாணியிலும் பாடலின் மறு பாதி மேற்கத்தேயப் பாணியிலும் இருக்கும். அதை அப்படியே உள்வாங்கிப் பாடல்காட்சியும் இரண்டு கலப்பிலும் இருக்கும்.

பாடலைப் பார்க்க

அழகு ராணி இரண்டு: ரேவதி

பாரதிராஜாவின் “மண்வாசனை”யில் தோன்றிய “ரா” வரிசை நாயகி இவர், புதிதாக நடிக்க வரும் நடிகைகள் பயன்படுத்தும் கெளரவமான நடிப்பின் அடையாள அட்டை இவர் எனலாம். “நான் நடிச்சா ரேவதி மாதிரி பாத்திரங்களில் நடிக்கணும்” என்று போனவாரம் திரையுலகிற்கு வரும் நாயகி கூட சொல்லும் அளவிற்குக் கெளரவமான நடிப்பின் சொந்தக்காரி.
என் ரசனையில் ரேவதியின் நடிப்பின் பரிமாணத்தை மண்வாசனை தொடங்கி மெளன ராகம் , மறுபடியும், தேவர்மகன் என்று முக்கியமான அவர் நடிப்பின் மைல்கள் பிடிக்கும். மெளன ராகத்தில் என்னமாய் நடித்திருப்பார். தேவர் மகனில் என்னமாய் வாழ்ந்திருப்பார்.
மறுபடியும் படத்தில் மாற்று வீடு தேடும் கணவனிடம் அடங்கி அடங்கி வாழ்ந்து, மனதுக்குள் குமுறிக்குமுறி ஒலமிட்டு இறுதியில் வெடிப்பாரே அதைச் சொல்லாமல் விடமுடியுமா?
ஆஷா கேளுண்ணிக்குக் ( அதாங்க ரேவதி) கிடைத்த இன்னொரு வரம் அவரின் குரல். நடுத்தரக்குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண் போன்ற தோற்றத்திற்கு அவரின் குரல் அளவெடுத்த சட்டை. மெளன ராகம் படத்தில் வந்த, நான் அடிக்கடி பார்த்து ரசிக்கும் “சின்னச் சின்ன வண்ணக்குயில் இதோ”.

பாடலைப் பார்க்க

அழகு ராணி மூன்று: நதியா

“நதியா நதியா நைல் நதியா” என்று சினிமாக்கவிஞனைப் பாட்டு எழுதத் தூண்டிய நடிப்புக்குச் சொந்தக்காரி. இவரும் அடுத்த வீட்டுப் பெண் போல இனம் புரியாத நேசத்தைத் தன் நடிப்பின் மூலம் தந்தவர். “பூவே பூச்சூடவா” இவருக்கு நல்லதொரு ஆரம்பத்தை கொடுத்தது. எத்தனை பெரிய நாயகர்களோடு நடித்தாலும் கவர்ச்சி முலாம் பூசாமல் நடித்துக் காட்டியவர். கிராமியப் படங்களை விட நகரத்தில் வாழும் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோற்றமும், குறும்புத்தனமான நடிப்பும் இவரின் பலங்கள். நதியா போல பெண் வேண்டும் என்று ஒரு காலகட்டத்து ஆண்கள் மட்டுமா ஆசைப்பட்டார்கள்? நதியா ஸ்டைல் தோடு, காப்பு, அட்டிகை என்று எண்பதுகளில் பெண்களின் நவநாகரீகத்தின் அடையாளம் இந்த நதியா.

சுரேஷ் நதியா ஜோடி தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகளில் ஒன்று, இதோ அவர்கள் ஆடிப்பாடும் ” நதியா நதியா நைல் நதியா”, பூ மழை பொழியுது திரைப்படத்தில் இருந்து.

அழகு ராணி நாலு: அமலா

டி.ராஜேந்தர் கண்டுபிடித்த (மைதிலி என்னைக் காதலி) உருப்படியான கண்டு பிடிப்புக்களில் தலையாயது அமலா என்னும் அழகு பொம்மை. இந்திய சீன பார்டலில் இருந்து வந்து தென்னக சினிமாவையே ஒரு காலகட்டத்தில் கைக்குள் வைத்திருந்தவர். நவநாகரீகத்தின் அடையாளம் அமலா. இன்றைய ஐஸ்வர்யா ராயை விட அமலா தான் சிறந்த இந்திய அழகி என்பேன். ஒரெலி, ரெண்டெலி, மூணெலி என்று ஆரம்பித்து அஞ்சலி என்று தன் பெயரைச் சொல்வதாகட்டும் சிகரட் புகைத்துப் பார்த்து ரசிப்பதாகட்டும் அமலாவின் குறும்புத்தனமான நடிப்புக்கு அக்னி நட்சத்திரமே நல்ல உதாரணம். ஆனால் இவரால் நடிக்கவும் முடியும் என்று காட்டி இன்றளவும் நான் நேசிக்கும் படம் பாசிலின் இயக்கத்தில் வந்த ” கற்பூர முல்லை” மலையாளத்தில் ” எண்டே சூர்ய புத்ரிக்கு ” என்று வந்திருந்தது.
கே.பாலசந்தரின் “புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில் ஒனிடா டீ.வி விளம்பர பேனரில் அமலாவின் போஸைப் பார்த்து கிழவர் பூர்ணம் விஸ்வநாதன் ஜொள்ளு விடுவாரே, அதுவே அன்றைய காலகட்டத்தில் அமலா என்ற மாய பிம்பம் ஏற்படுத்திய தாக்கத்துக்கு ஒரு உதாரணம்.
இதோ அக்னி நட்சத்திரத்தில் இருந்து அமலா நடித்த “நின்னுக்கோரி” என்ற அட்டகாசமான பாடல்.

பாடலைப் பார்க்க

அழகு ராணி ஐந்து: குஷ்பு

கோயில் கட்டுமளவுக்கு இவர் நடிப்பை நான் தொடர்ந்து ரசிக்கவில்லை (மற்றைய நாயகிகளோடு ஒப்பிடும் போது) . ஆனால் இவர் நடித்த ஒரேயொரு படமே போதும். அதுவே நான் திரும்பத் திரும்பப் பார்த்து ரசிக்கும் வருஷம் 16. கண்ணத்தானைக் காதலிக்கும் சைனீஸ் பட்லர் முறைப்பெண்ணாக வருஷம் 16 படத்தில் இவர் நடித்த காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். அதுவே போதும்.
இதோ வருஷம் 16 இல் இருந்து வரும் இனிமையான பாடல் “பூப்பூக்கும் மாசம்”

அழகு ராணி ஆறு: மீரா ஜாஸ்மின்
கேரளத்துப் பைங்கிளி மீரா ஜாஸ்மினின் அடக்கமான நடிப்பை தமிழ்ப்படமான “ரன்”னில் தான் முதலில் பார்த்தேன். பின்னர் அவர் நடித்த படங்களைத் தேடித் தேடி மலையாளப்படவுலகத்தையும் என்னை நாடிச்செல்ல வைத்தது அவர் நடிப்பு. பெருமழாக்காலம், அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம், கஸ்தூரிமான் என்று ஒவ்வொரு மலையாளப் படங்களுமே மீரா ஜாஸ்மினுக்கு முத்திரைகள். தமிழில் தான் ஏதாவது லூசுப் பாத்திரம் இருந்தால் கூப்பிடுங்கள் மீரா ஜாஸ்மினை என்று சொல்லி அவர் நடிப்பைச் சீரழிக்கின்றார்கள். ரச தந்திரத்தில் அவர் தோன்றும் அனுதாபத்துக்குரிய தமிழ்ப்பெண் பாத்திரத்தையும், அச்சுவிண்டே அம்மாவில் வரும் அங்கலாய்ப்பான மகளாக அவர் நடிக்கும் பாத்திரத்தையும் தேடியெடுத்துப் பாருங்கள், அவரின் நடிப்பின் பரிமாணம் விளங்கும்.
இதோ அச்சுவிண்ட அம்மா திரையிலிருந்து இசைஞானியின் இசையில் ” எந்து பறஞ்சாலும்”.

பாடலைப் பார்க்க

சரி கோபிநாத் இவ்ளோ தான் என் அழகுப் பதிவு சமாச்சாரங்கள்,
ஸாரி நிறைய ஜொள்ளீட்டேன் 😉

காற்றின் மொழி


காற்றின் மொழி ஒலியா…..இசையா……?
பூவின் மொழி நிறமா….மணமா….?
கடலின் மொழி அலையா…நுரையா….?
காதல் மொழி விழியா….இதழா……?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மெளனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சிமீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு வித்யாசாகரின் இசை கலந்து, சுஜாதா மற்றும் பால்ராம் இரு தனித்தனிப்பாடல்களாகப் பாடியிருக்கின்றார்கள்.அழகிய தீயே, பொன்னியின் செல்வன் போன்ற ரசனை மிகு திரைப்படங்களைத் தந்த இயக்குனர் ராதாமோகனின் படமிது. தன் நண்பன் மற்றும் இப்படத்தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜுக்கு கொடுக்கப்போகும் ஓப்பற்ற பரிசு என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். வாய்பேசமுடியாப் பெண்ணாக ஜோதிகா நடித்த இறுதிப்படம் கூட.
மொழி படம் பற்றிய காட்சித்தளம்: http://www.mozhithefilm.com/

முதல் வணக்கம்

என் மனங்கவர்ந்த பாடல்கள், நான் கண்ட ஒலிப்பேட்டிகள், வானொலிப் படையல்களின் அணிவகுப்புக்கான இல்லம் இது.

நேசம் கலந்த நட்புடன்
-கானா.பிரபா-