மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி M.L.V 90

“குயிலே உனக்கனந்த

கோடி நமஸ்காரம்

குமரன் வரக் கூவுவாய் நீ

குமரன் வரக் கூவுவாய்”

காற்றலைகளில் இந்தக் குரல் பரவும் போது கந்தவேள் கோட்டத்தில் நிற்குமாற் போலவொரு உணர்வு தெறிக்கும். அதுவும் அந்தப் பாடலை ஆரம்பிக்கும் போது தன்னுடைய சாஸ்திரிய முத்திரையோடே தொடங்குவார் எம்.எல்.வசந்தகுமாரி.

“காற்றினிலே……வரும் கீதம்….” என்று எம்.எஸ்.சுப்புலட்சுமி,

“நித்திரையில் வந்து

நெஞ்சில் இடம் கொண்ட

உத்தமனார் யார் தோழி….”

இது M.C.வசந்தகோகிலம்

இவர்களோடு,

“கொஞ்சும் புறாவே……

நெஞ்சோடு நெஞ்சம்

ஜெகமெங்கிணும் உறவாடிடும்

ஜாலம் இதேதோ….”

என்று M.L.வசந்தகுமாரியையும் சேர்த்தால் தமிழ்த் திரையிசை எவ்வளவு செழுமையோடு இயங்கியது என்பதை உதாரணம் பகிரும்.

திரைப்படங்களுக்கான இசை என்று வரும் போதே நாயகன், நாயகி பாடி நடிக்க வேண்டிய தேவை எழுந்த போது பாட்டுக்காரர்களே அரிதாரம் பூசிக் கொண்டார்கள். பின்னர் பின்னணிக் குரல் என்ற நிலை வந்த போதும் கூட சாஸ்திரிய இசைக்காரர்கள் அன்றும் இன்றும் தம் பங்களிப்பை நல்கி வருகிறார்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றே டி.கே.பட்டம்மாள், வசந்தகோகிலம் வரிசையில் எம்.எல்.வசந்தகுமாரியும் கணிசமானதொரு பங்களிப்பை நல்கியிருக்கிறார்.

தன்னுடைய தாய் லலிதாங்கியை முதற் குருவாகக் கொண்டவர் 11 வயதிலிருந்து தாயாரோடு மேடைக் கச்சேரிகளில் பங்கு கொண்டவர் தன் 13 வயதில் முதன்மைப்ப்பாடகியாக அரங்கேறினார். பிரபல பாடகர்

ஜி.என்.பாலசுப்ரமணியனின் வழிகாட்ட அவரின் இசையுலகம் பரந்து விரிந்தது.

இசைத்துறையில் சாதனைச் சரித்திரம் படைத்த வசந்தா என்ற வசந்தகுமாரிக்கு விருதுகளும் அங்கீகாரங்களும் கிட்டின. அதில் மிக முக்கியமாக “சங்கீத கலாநிதி” என்ற உயர் விருதை இளம் வயதில் பெற்ற பெண் பாடகி என்ற கெளவரம் அவரது 49 வது வயதில் வாய்த்தது.

எம்.எல்.வசந்தகுமாரி, விகடம் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை மணம் செய்து சங்கரராமன் மற்றும் ஶ்ரீவித்யா ஆகியோரைப் பெற்றெடுத்தார். ஶ்ரீவித்யா நடிகையாகவும், பாடகியாகவும் திரைத்துறையில் தன் பங்களிப்பை வழங்கினார். எம்.எல்.வசந்தகுமாரியின் வாரிசுகள் இருவருமே தற்போது உயிருடன் இல்லை.

தினமலர் பத்திரிகையில் கிடைத்த சுவாரஸ்யமான பகிர்வை இங்கே தருகிறேன்.

“மாணவப் பருவத்தினராக எம்.எல்.வசந்தகுமாரி இருந்தபோது மதுரையில் ஒரு சங்கீத விழாவில் ஒரு கச்சேரி மேடையில் அவருடன் ஒரு பெரியவரும் அமர்ந்திருந்தார். அந்நிகழ்ச்சியை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த இளைஞருக்கு இவ்வாறு மேடையில் எம்.எல்.வி.யின் அருகில் அமர்ந்திருந்த பெரியவரைக் கண்டதும் கோபம் வந்தது. கச்சேரி மேடையில் பாடகிக்குப் பக்கத்தில் இந்த மனிதருக்கு என்ன வேலை? இவ்வாறு நினைத்தவராக அவரிடம் சென்று உடனே மேடையை விட்டுக் கீழே இறங்கும்படி உத்தரவிட்டார். அப்போது அந்தப் பெரியவர் சொன்னார்; பாடிக் கொண்டு இருப்பது என் பெண்தான். அவரிடம் யாரும் விஷமம் செய்யாமல் இருக்கவே நான் இங்கே இருக்கிறேன்.

இளைஞர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டார். பிறகு இந்த இளைஞருக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது. அவர் பெயர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இந்த நட்பே பின்னால் அவர் எம்.எல்.வி.யை மணந்துகொள்ளவும் காரணமாயிற்று. நல்ல செல்வந்தராக இருந்த அவர் சினிமாப்படம் எடுக்கும் முயற்சியில் பொருளிழந்து பிறகு விகடக்கலையில் புகழ்பெற்று விகடம் கிருஷ்ணமூர்த்தி என்றழைக்கப்பட்டார். “ என்று தினமலர் செய்தி பகிர்கின்றது.

எம்.எல்.வசந்தகுமாரியின் முக்கியமான இசை வாரிசாக திருமதி சுதா ரகுநாதன் விளங்குகிறார். தன் குருவிடம் இசைக் கல்வியில் தேறி அவருடனேயே ஐந்து ஆண்டுகள் கச்சேரிகளில் பயணப்பட்ட சுதாவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதையிட்டுக் கரிசனை கொண்டு தான் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டுமென்று கூறி ரகுநாதனைச் சந்தித்து “சுதாவின் இசைப் பயணம் அவரது திருமண வாழ்வால் தடைப்படல் கூடாது” என்று வேண்டினாராம் எம்.எல்.வசந்தகுமாரி.

இதனால் தான் இவர் என் குரு மட்டுமல்ல என் அம்மாவும் கூட என்று நெகிழ்கிறார் சுதா ரகுநாதன்.

திரையிசையில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நிறையப் பாடியுள்ளார். அவற்றில் குறிப்பாக

“கோபாலனோடு நான் ஆடுவேனே” (வாழ்க்கை), “ஆகா ஆகா வாழ்விலே” (மந்திரி குமாரி), “கண்ணன் மன நிலையை” (ஏழை படும் பாடு), “அய்யா சாமி ஆவோஜி சாமி” (ஓர் இரவு), “கொஞ்சும் புறாவே” (தாய் உள்ளம்), “குயிலே உனக்கு” (மனிதன்), “கூவாமல் கூவும் கோகிலம்” (வைர மாலை), “ஆடல் காணீரோ” (மதுரை வீரன்) போன்றவை இன்றளவும் உலக வானொலிகளாலும், வானொலி ரசிகர்களாலும் பெரு விருப்போடு மனதில் வைத்திருக்கும் பாடல்கள்.

செவ்வியல் இசையில் எம்.எல்.வசந்தகுமாரி

திரையிசையில் எம்.எல்.வசந்தகுமாரி

https://www.youtube.com/playlist…

இன்று பிரபல சாஸ்திரிய இசை மற்றும் திரையிசைப் பாடகி எம்.எல்.வசந்த்ந்குமாரியின் 90 வது பிறந்த தினமாகும்.

மேலதிக தகவல் குறிப்புகள் & படங்கள் நன்றி :

திருமதி சுதா ரகுநாதன்

ஹிந்து ஆங்கில நாளேடு

தினமலர்

விக்கிப்பீடியா

கானா பிரபா

03.07.2018

 

விழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕

2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிடத்தில் இருந்த யாரோ ஒருவரின் செல்போனில் இருந்து வரும் அழைப்போசை (ringtone) எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கிறதே அதுவும் தமிழில் கேட்ட மிகவும் பரிச்சயமான பாடல் போன்று தோன்றுகின்றதே என்று மனதில் குடைச்சல்.

அந்தப் பணியிடத்தில் ஒன்றிரண்டு சக தமிழ்ப் பணியாளர்கள் அதுவும் பேச்சுக் கொடுத்தால் திரையிசை பற்றி அவ்வளவு ஆர்வம் காட்டாதவர்களிடம் வாய் விட்டுக் கேட்கவும் வழியில்லாமல் அப்படியே விட்டு விட்டேன். பின்னர் நான் தங்கியிருந்த ஹோட்டலில் இரவு நித்திரை வராத பொழுதில், அறையில் இருந்த சின்னத்திரையில் உதயா டிவி வழியே நதி போல வழிந்து கொண்டு வந்தது “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டு.

ஆகா இரண்டு நாளாக மண்டையைப் பிச்சுப் போட்ட பாட்டு இதுவல்லவோ அதுவும் முதன் முறை கேட்கிறேன் கன்னட வடிவில். பின்னர் நதிமூலம் ரிஷிமூலம் தேடிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வந்து விட்டேன் நூறாவது நாள் திரைப்படத்தில் இடம் பிடித்த “விழியிலே மணி விழியிலே” பாடல் தான் அதுவென்று.

தென்னகத்தின் இசைச் சக்கரவர்த்தியாக இசைஞானி இளையராஜா ஆண்ட போது ஒவ்வொரு மொழிக்காரரும் அவர் இசையமைத்த தலா ஒரு பாடலையாவது தம் தல புராணமாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள். இந்த மாதிரியான பேறு பெற்ற இசைஞானிக்குப் பின் யாரையுமே இனிமே நினைத்துப் பார்க்க முடியாது.

“தும்பி வா தும்பக் குளத்தே” என்று மலையாளிகளும் சாகர சங்கமத்தைத் தெலுங்கர்களும் கொண்டாடுவது போலக் கன்னடர்களுக்கும் இந்த “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டும்.

“ஜொதயலி” பாடல் மீதான அபிமானம் குறித்த பாடலைத் தாண்டி இன்னும் இன்று வரை கன்னடர்களுக்கு நேசம் விளைவிக்கக் காரணம் சங்கர் நாக் என்ற தம் ஆதர்ஷ நாயகன் மீதான காலம் தாண்டிய பற்றுதலும் காரணமாக இருக்கலாம். கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரம் சங்கர் நாக் திடீரென்று கார் விபத்தில் இறந்து போனதை அவர்கள் மறந்து கடந்து விடவில்லை என்பதைப் பதினாறு வருடங்கள் கழித்து அந்த பெங்களூர்ச் சாலைகளில் என் கார் பயணப்பட்ட போது மலர் மாலை தாங்கிய அவரின் உருவப் படத்தை வைத்து அர்ச்சித்த கடைக்காரர்களையும், கடந்து போன ஆட்டோ வண்டிகளையும் கண்டுணர்ந்தேன். எமது நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட கார்ச்சாரதி பெங்களூரில் வாழும் மராத்திக்காரர் என்றாலும் அவ்வப்போது சங்கர் நாக் புகழாரம் பாடிக் கொண்டிருந்தார்.

கீதா கன்னடப்படத்தில் வந்த ஜெதயலி தமிழில் விழியிலே மணி விழியிலே ஆனது போன்று கேளதே நிமகீகா பாட்டு “தேவதை இளம் தேவி” (ஆயிரம் நிலவே வா”, “நன்ன ஜீவ” பாடல் “தேவன் தந்த வீணை” (உன்னை நான் சந்தித்தேன்) ஆகவும் தமிழில் கிடைக்கின்றன.

தமிழில் வந்த “விழியிலே மணி விழியிலே” ஐ விடப் பின்னாளில் எனக்கு அறிமுகமான, ஆனால் முன்னதாக வந்த “ஜொதயலி” இன் மேல் தான் மையல் அதிகம் எனக்கு. போதை ஊசியை ஏற்றிக் கொண்டு கண்கள் கிறங்க வானத்தில் மிதப்பது போன்றிருப்பவனை அனுபவ பூர்வமாக நான் உணரும் தருணம் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம். தமிழில் வந்ததை ரசிக்க முடியாமல் செய்ததற்குக் காரணம் பாடலில் சுமாரான ஒலித்தரம். தமிழைக் கேட்டு விட்டுக் கன்னடத்துக்குத் தாவும் போது அதை உணரலாம். ஆனாலும் தமிழில்

இந்த மெட்டுக்குப் பூண்ட வரிகள் அழகோ அழகு.

நதியொன்று ஊற்றெடுத்துக் காடு, மலை, மேடு, பள்ளம் எல்லாம் தாண்டி வந்தாலும் அதன் ஓட்டம் கெடுவதில்லை. அதன் நிதானம் தப்புவதில்லை. அது போலத் தான் இந்தப் பாட்டும். தன் மெட்டில் வெளிப்படையாக நளினத்தைக் காட்டி விட்டு, அதனை வாத்தியங்களின் நுட்பமான ஒலிச் சஞ்சாரத்தில் இறக்கி விட்டிருக்கிறார் இசைஞானி. உதாரணத்துக்கு சரணத்தில் கொட்டி முடிக்கும் வயலின் ஆர்ப்பரிப்பு

எங்கெங்கெல்லாம் போய்ப் பின் இறுதியில்

“விழியிலே மணி விழியிலே” என்று தானும் வாசித்து

ஐக்கியமாகி விழுவதைக் காணலாம்.

பாடல் ஆரம்பிக்கும் போது எந்த விதமான இசைப் பூச்சும் இல்லை. எஸ்.பி.பாலசுப்ரமணியமே குரல் கொடுத்து நுழைகிறார். பாட்டு முழுக்க ஒரு மெலிதான களிப்போடு அவர் பாடும் போது கேட்கையில் காதலியின் அருகாமை தரும் பூரிப்புப் போல இருக்கும். வார்த்தைகளை நோகாமல் அள்ளி விடுவார். கூடப் பாடும் எஸ்.ஜானகி மட்டும் என்னவாம் என்பது போல அந்தக் காதலனுக்கு நிகரான கொண்டாட்ட மன நிலையில் அந்தக் குரல் தொனிக்கும்.

இருவரும் பரிமாறும் சிரிப்பொலிகளில் கூட ரிதம் தப்புகிறதா பாருங்கள்?

இந்தப் பாட்டுக்கிடையில் வரும் சாஸ்திரீய ஆலாபனை கூட ஒரு விநாடித் துளிகளில் இன்னொரு உலகத்தை இந்த நவீனத்தோடு இணைக்கிறது.

ஒரு பாடல் புடித்து விட்டால் அது என்ன வடிவில் வந்தாலும் தேடிக் கேட்டு ரசிக்கும் நல்ல பழக்கம் இருப்பதாலோ என்னமோ இந்தப் பாடலின் பகிர்வுகளையும் தேடி ரசிப்பேன்.

ஏஷியா நெட் இற்காக சித்ரா சிவராமனுக்குக் கொடுத்த பேட்டியில் எஸ்.பி.பி பாடியதைப் பல்லாண்டுகளுக்கு முன் தேடி ரசித்திருக்கிறேன். https://youtu.be/2O4ou_JimnU

வீணை வாத்திய இசையில் கேட்டுப் பாருங்கள்

இன்னொரு பரவச அனுபவம்

“விழியிலே மணி விழியிலே” (நூறாவது நாள்)

“ஜொதயலி ஜொத ஜொதயலி” (கீதா)

“ஜானே தோ நா” (சீனி கம்)

இன்பச் சுகவரி அன்பின் முகவரி

கொஞ்சம் தினசரி என்னை அனுசரி

மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி

விடிய விடிய என் பேரை உச்சரி

🥁 இசைமைப்பாளர் தேவேந்திரனின் இசைப்பயணம் 🎸 🎼 நிறைவுப் பாகம் 🎻

“பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே…

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை

பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்

மன்னவன் பிறந்தான் ஈழத்திலே”

ஈழத்திலும், அதைத் தாண்டி ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளும் மேற் சொன்ன பாடல் ஒவ்வொரு கார்த்திகை 26 இலும் ஒலிக்கும் வேத மந்திரம் போலானது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் பாடலைப் பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் உட்பட்ட பாடல்களைக் “களத்தில் கேட்கும் கானங்கள்” என்ற பெயரில் முப்பது வருடங்களுக்கு முன்னர் சென்னையில் வைத்து தேவேந்திரன் இசையமைக்க ஒலிப்பதிவானது. அந்த வாய்ப்பை இன்னொரு பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனே ஏற்படுத்தியிருந்தார்.

“களத்தில் கேட்கும் கானங்கள்” பாடல் தொகுப்பில் “வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு” என்று தனித்தும் “தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்” என்று ஜோடி சேர்ந்தும் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். “நடடா ராஜா மயிலைக் காளை” பாடலை மலேசியா வாசுதேவன் பாட, “காகங்களே காகங்களே காட்டுக்குப் போனீர்களா”

சிறுவர் பாட்டு, “ஏழு கடல்களும் பாடட்டும்” , “காற்றும் ஒரு கணம் வீச மறுத்தது (தீயினில் எரியாத தீபங்களே)” ஆகிய உணர்வெழிச்சிப் பாட்டுகள், இவற்றோடு இசைக்குயில் பி.சுசீலா பாடிய “கண்மணியே கண்ணுறங்கு” தாலாட்டு, “அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி” என்ற மெல்லிசைப் பாட்டு என்று எல்லாமே காலம் தின்று விழுங்காத மறக்க முடியாத பாட்டுகள். இந்திய அமைதிப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் உச்சமடைந்த சமயத்தில் வெளிவந்த “களத்தில் கேட்கும் கானங்கள்” இன்றுவரை தமிழீழ எழுச்சிப் பாடல்களில் அதி முக்கியத்துவம் கொடுத்துப் பேணப்படுபவை. பாடல்களை மனப்பாடம் செய்யுமளவுக்குப் பலருக்கு இந்த இசைத் தொகுப்பு பதியம் போட்டது.

களத்தில் கேட்கும் கானங்கள் இசைத் தொகுப்பைக் கேட்க

https://eelamsong.blogspot.com.au/2014/11/eelam-mp3_25.html

தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே மடை திறந்தாற் போலப் புதுப் புது பாடகர்கள், இயக்குநர்கள், அறிமுக நாயக, நாயகிகளோடு படங்கள் இவற்றோடு புது வர இசையமைப்பாளர்களும் நிறையப் பேர் தமிழ்த் திரையுலகுக்கு வந்தார்கள். ஒப்பீட்டளவில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக வந்த புதுப் புதுக் கலைஞர்களுடனான தமிழ்த் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது முந்திய எண்பதுகளில் ஒரே சமயத்தில் ஒரு குறுகிய காலத்தில் இப்பேர்ப்பட்ட அலை அடித்ததில்ல்லை.

அப்போது தான் வானொலிகளும் பண்பலை வரிசைக்குத் தாவிக் கொண்டிருந்த சமயம் அது.

“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க

தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க”

என்ற பாடல் காற்றலைகளில் கலக்கிக் கொண்டிருந்தது. யாராடா இது ரவி தேவேந்திரன் என்ற புது இசையமைப்பாளர் என்ற இன்ப அதிர்ச்சியோடு அந்தப் பாடலில் மூழ்கிப் போன காலமது. கூடவே பூனைக்கண் அழகி, சின்னக் குஷ்பு என்று அழைக்கப்பட்ட சிவரஞ்சனி மேல் மையல் கொண்டு அலைந்த இளைஞர் கூட்டம் அவரின் இயற்பெயர் ஊஹா முதற்கொண்டு சாதகத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் போது இப்படி ஒரு பாட்டு தலைவியின் புதுப் படத்தில் வருகிறது என்றால் சும்மா விடுவார்களா என்ன?

அந்த ஆரம்ப இசை இதயத் துடிப்புப் போலப் படபடக்க,

இந்தப் பாட்டின் இடையிசையில் வரும் புல்லாங்குழல் இசை இளையோருக்கோ மகுடி வாசிப்பது போல மயக்கத்தைக் கொடுத்தது.

“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க” பாடலின் இசை நேர்த்தியைப் பார்த்தால் புதிதாகச் சாதிக்க வரும் இசையமைப்பாளரின் துடிப்பும், நேர்த்தியும் இருக்கும். ஆனால் எண்பதுகளில் “வேதம் புதிது” தொட்டு இன்னொரு பரிமாணத்தில் இசை கொடுத்த தேவேந்திரன் தான் ரவி தேவேந்திரன் என்று தீவிர ரசிகர்கள் கண்டுணர்ந்தார்கள்.

“முத்தம் கொடுக்கணும் முத்தம் கொடுக்கணும் முத்துமணிக் குயிலே” பாட்டைக் கேட்டால் அச்சொட்டான இளையராஜா பாணியில் எஸ்.ஜானகி பாடியிருப்பது போல இருக்கும்.

“நிலவென்ன பேசுமோ” என்று பாடிய இசையமைப்பாளர் சந்திர போஸையோ அல்லது நாகூர் ஹனீபாவின் குரலை ஒத்துப் பாடியது போல இருக்கும்

“நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்” என்ற பாட்டு.

“ஓ பறவைகளே ஓ பறவைகளே நில்லுங்கள்” எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா பாடிய பாடல் தொண்ணூறுகளின் காதலர் சோக கீதங்களில் ஒன்றானது.

“புதிய தென்றல்” திரைப்படம் ரமேஷ் அர்விந்த், சிவரஞ்சனி நடிக்க, புதுமுக இயக்குநர் பிரபாகர் இயக்கியது. அப்போது வெளிவந்து கொண்டிருந்த சினிமா சஞ்சிகை பொம்மை இதழில் இரண்டு முழுப்பக்க விளம்பரங்கள் போடுமளவுக்குப் பிரபலப்படுத்தப்பட்டது. ஆனால் முன் சொன்ன அதியற்புதமான பாடல்களைக் கொடுத்தும் பலமான இன்னொரு சுற்று ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனுக்கு வாய்க்கவில்லை.

புதிய தென்றல் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்க

https://youtu.be/AEA9bmYgJTY

கலைஞர் கருணா நிதி கதை, வசனம் எழுதி மு.க.ஸ்டாலின், கார்த்திக் நடித்த “ஒரே ரத்தம்”, இயக்குநர் விசு ஆனந்த விகடனில் கதையாக எழுதிப் பின் பி.நாகிரெட்டி தயாரித்து வந்த “மீண்டும் சாவித்திரி” (விசு இதுவரை இயக்கிய கடைசிப்படம்) போன்றவை தேவேந்திரன் இசையில் குறிப்பிட வேண்டிய படங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட “மூணார்” என்ற படத்துக்கு இசையமைத்தார். புகழேந்தி தங்கராஜ் இயக்கிய ஈழப் பின்னணியில் உருவான “கடல் குதிரைகள்” படத்துக்குக் கடந்த வருடம் இசையமைத்து வெளியிட்டார்.

இந்தத் தொடரின் முந்திய பகுதிகள்

வேதம் புதிது

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிதுமண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு…

Posted by Kana Praba on Wednesday, September 13, 2017

மண்ணுக்குள் வைரம்

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் – மண்ணுக்குள் வைரம் 🌴🍂மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள்…

Posted by Kana Praba on Thursday, September 7, 2017

காலையும் நீயே மாலையும் நீயே & உழைத்து வாழ வேண்டும்

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸🎻 காலையும் நீயே மாலையும் நீயே 🎷🥁 உழைத்து வாழ வேண்டும் 🎺எவ்வளவு தான் திறமை…

Posted by Kana Praba on Thursday, November 9, 2017

கனம் கோட்டார் அவர்களே

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼🐞 கனம் கோட்டார் அவர்களே 🔨பெங்களூருச் சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி…

Posted by Kana Praba on Wednesday, September 27, 2017

ஆண்களை நம்பாதே

🎻 இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸ஆண்களை நம்பாதே ❤️“காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களேசோக நெஞ்சங்களே நீங்கள்…

Posted by Kana Praba on Tuesday, March 6, 2018

“தென்றலுக்கு மேடை தந்த தேவராஜன் வாழ்க”

கானா பிரபா

16.03.2018

அடுத்த தொடர் வரும் வாரம் முதல் இன்னிசை இரட்டையர் மனோஜ் கியான்

🎻 இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 ஆண்களை நம்பாதே ❤️

“காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே நீங்கள் மாறுங்களே”

எண்பதுகளின் தேவதாஸ்களுக்குக் கிட்டிய இன்னொரு ஜேசுதாஸ் பாட்டு. மலேசியா வாசுதேவன் இணைந்து பாடிய அந்தப் பாட்டு ஒன்றே போதும் இந்தப் படத்தின் பெயரை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்க.

அந்தக் காலத்தில் இந்தப் பாடலைப் பெருங்குரலெடுத்துப் பாடிய அண்ணன்மார்களைச் சைக்கிள் சகிதம் வாசிகசாலை வெளிகளில் கண்டிருக்கிறேன்.

“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” (உழைத்து வாழ வேண்டும்), “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” (காலையும் நீயே மாலையும் நீயே) வரிசையில் இசையமைப்பாளர் தேவேந்திரன் – பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கூட்டணிக்குப் புகழ் கொடுத்தது “காதல் காயங்களே” பாடலும். எண்பதுகளில் T.ராஜேந்தருக்குப் பின் ஆபாவாணன் & மனோஜ் – கியான் அலையடித்த போது இவ் இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய வகையில்

T.M.செளந்தரராஜன் அவர்களின் இசைப் பயணமும் இடைவெளியில்லாது தொடர எதுவானது. அந்த வகையில் தேவேந்திரனும் இந்தப் படத்தில் “வாராய் என் தோழி வாராயோ” பாடலை மீள T.M.செளந்தரராஜனுடன் ஆண் குரல் கூட்டணியோடு பாட வைத்த “வாராய் என் தோழா வாராயோ”

இன்றும் கல்யாண வீடுகளில் எள்ளல் பாடலாகக் குறும்பு செய்யும்.

“ஆண்களை நம்பாதே” படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். இவற்றில் புகழ் பெற்ற காதல் காயங்களே பாடல் உட்பட வைரமுத்துவும், மற்றும் வாலி, எம்.ஜி.வல்லபன் பாடல்களை எழுதினர்.

“ஆண் பாவம்” படத்தின் பெரு வெற்றியின் பாதிப்பில் எடுத்த இந்த “ஆண்களை நம்பாதே” படத்தின் ஆரம்பம் முதல் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆண் பாவம் படத்தில் பெரிய பாண்டியாக வந்த நாயகன்

பாண்டியன் இந்தப் படத்தில் முத்துப்பாண்டி. வி.கே.ராமசாமியின் மகனாக இந்தப் படத்திலும். அங்கும் ராமசாமி இங்கும் ராமசாமி முதலியார் ஆக வி.கே.ராமசாமி. தாய்க் கிழவியாக கொல்லங்குடி கருப்பாயியே நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கிராம மக்கள் கூடி நின்று ராமசாமியின் புது முயற்சிக்கு வாழ்த்தும் கூத்து இங்கேயும்.

இந்தப் படத்தின் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியனும் பாண்டியராஜன் ஆண் பாவத்தில் நடித்தது போல உப நாயகன். பின்னாளில் நட்சத்திர இயக்குநராக விளங்கிய கே.எஸ்.ரவிகுமார் ஆண்களை நம்பாதே படத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்ததைச் சொல்லியிருக்கிறார் பேட்டி ஒன்றில்.

“வேட்டிகட்டி” என்ற எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல் தான் ஆரம்பப் பாடல். இதே பாடகியின் இன்னொரு குழுப்பாட்டு “தாளம் தட்டுங்கள்”, மேலும் “பாக்குத் தோப்பிலே” என்று ஜோடிப் பாட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடியது. மலேசியா வாசுதேவன் & சைலஜா ஜோடிக் குரல்களில் “மதுரைக் கார” மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடிய “ராஜாதி ராஜன் தானே”

என்றெல்லாம் இப்படப் பாடல்களை அடுக்கினாலும் முன் சொன்ன இரண்டு பாடல்கள் அளவுக்குக் கவரத் தவறி விட்டார் இசையமைப்பாளர் தேவேந்திரன்.

கானா பிரபா

07.03.18

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு இன்று நூறு வயசு 🥁💐🎻

கேரளத்தில் இருந்து வந்து தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னராக எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தெலுங்கு தேசத்தில் கொடி நாட்டியவர் நாகர்கோயிலில் இருந்து புறப்பட்ட இசை விற்பன்னர் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்.

இன்றைக்குத் அறுபதுகள் எழுபதுகளில் இடம்பெற்ற பாடல்கள் வானொலிகளில் ஒலிபரப்புச் செய்யப்படும் போது பொதுவாக எம்.எஸ்.வி கணக்கிலும் சேர்க்கப்படுவதுண்டு. ஆனால் தமிழ்த் திரையிசைப் பாரம்பரியத்தில் ஊறியவர்கள் கே.வி.மகாதேவன் அவர்களின் தனித்துவமான இசைக் கோப்பை அடையாளம் கண்டு ரசிப்பர். ஒப்பீட்டளவில் தமிழ்த் திரையிசை ரசிகர்களை விட ஆந்திரா வாலாக்கள் தான் “மாமா” என்று திரையுலகத்தோர் பாசத்தோடு அழைக்கும் கே.வி.மகாதேவனின் மேல் அதீத பற்றுஒ கொண்டவர்கள்.

சென்னை வானொலியின் விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் நான் அடிமைப்பட்ட காலத்தில் தான்

கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்த தெலுங்குப் பாடல்களைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு முதன் முதலில் கிட்டியது.

எண்பதுகளில் இளையராஜா பாடல்களோடு வாழ்க்கைப்பட்ட என் போன்ற ரசிகர்களுக்கும் கே,வி.மகாதேவன் முத்தான பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றில் குறிப்பாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டுமென்றால்,

ஹிந்தியில் ஹிட்டடித்த ரங்கீலாவுக்கெல்லாம் பாட்டி முறையான கதை “ஏணிப்படிகள்” படத்தில். இந்தப் படத்தின் கதையை உருவிப் பின்னாளில் ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன, ஆனால் ஏணிப்படிகள் படத்தின் நேர்த்தியான திரைக்கதையும் கே.வி.மகாதேவனின் இசையும் இன்றளவும் நினைவில் இனிமை சேர்ப்பவை. இந்தப் படத்தில் பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனித்தனியே பாடிய

“பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன” , “கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்” போன்றவை ஏக பிரபலம் அப்போது.

புதுமைப்பித்தனின் கதையொன்றை எடுத்தாண்டு ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் “அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை”. தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோப்படங்களும் நம்மிடையே புழங்கிய காலத்தில் அப்போது இந்தப் படத்துக்க்கும் ஏக மவுசு. படத்தில் “சுமைதாங்கி ஏனின்று விழுங்கின்றது” என்ற சோகப் பாட்டு, “மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்” என்ற அழகிய காதல் பாட்டு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே” என்ற தனிமைத் தவிப்பின் பாடலென்று முத்தான மூன்று கிட்டியது.

நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் எண்பதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது வழக்கம் போலத் திரை ஜோசியப்படி அவரும் நாயகனாக நடித்து வெளிவந்த படம் என்ற ஒரேயொரு பெருமையைக் கொண்டது “பாய்மரக்கப்பல்”. இந்தப் படத்தில் எஸ்.பி.சைலஜா பின்னணில் கோரஸ் இசைக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்” சென்னை வானொலியில் நீங்காது இடம்பிடித்த பாடல்களில் ஒன்று

கமல்ஹாசனின் ஆரம்ப காலம் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வேடம் பூண்ட போது சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த படம் “சத்தியம்”. இந்தப் படத்தில் “கல்யாணக் கோயிலின் தெய்வீகக் கலசம்” பாடல் கே.வி.மகாதேவனின் பாடல்களில் அழகிய முத்து ஒன்று.

என் பால்ய காலத்தின் இருள் படிந்த நினைவுகளில் வின்சர் தியேட்டர் என்று நினைவு. ஏதோவொரு படம் தொடங்க முன்பு தியேட்டர்காரர் ஒலிபரப்பிய “கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே” இன்றும் பசுமரத்தாணி போல உறைந்திருக்கிறது அதுவும் சங்கீதத் திலகத்தின் கை வண்ணமாக உத்தமன் படத்தில் வந்ததாகப் பிற்காலத்தில் அறிந்து தெரிந்து கொண்டேன்.அது போல “ஞானக் குழந்தை” படத்தைப் பல்லாண்டுகளுக்குப் பின் லிடோ திரையரங்கில் திரையிட்ட போது சீனிப்புளியடி ஆரம்பப் பள்ளிக்கூடக் கூட்டத்தோடு திருஞானசம்பந்தரைப் பார்க்கப் போகிறோம் என்று சொல்லிப் போய்ப் பார்த்ததோடு இன்றும் இனிக்கும் கே.வி.மகாதேவன் அவர்களின் அந்தப் படப் பாடல்களில் ஒன்று “பாலோடு தேன் கலந்து அபிஷேகம்”.

2001 ஆம் ஆண்டு சிட்னிக்கு இசை நிகழ்வை நடத்த வந்த பாடகி சுஜாதா நான் அப்போது இயங்கிய வானொலி நிலையத்துக்கு வந்த போது அப்போது கிட்டிய கே.வி.மகாதேவனின் பிரிவுச் செய்தியை இணையம் மூலம் அறிந்து அவருக்குச் சொன்னேன். அப்போது “மாமா” என்று சொல்லியவாறே, தமது குடும்பத்தில் ஒருவரின் இழப்புப் போல வாய்பொத்தி அவர் கலங்கி நின்றார்.

கந்தன் கருணை படத்திற்காகத் தேசிய விருதைத் தமிழில் பெற்றுக் கொண்டவர், திரையிசைக்காகக் கொடுத்த முதல் தேசிய விருது கந்தன் கருணைக்குத் தானாம். தமிழோடு தெலுங்கில் சாதனை படைத்த சங்கராபரணத்துக்கும், சுவாதி க்ரணம் என்ற படத்துக்கும் என்று மூன்று தேசிய விருதுகளை எடுத்ததோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் கே.வி.மகாதேவன்.

கே.வி.மகாதேவனின் உதவியாளராகவிருந்த புகழேந்தி அவர்களின் மனைவி, மகனை 17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் வானொலிப் பேட்டி எடுத்தபோது இவரின் அறியப்படாத பரிமாணங்களை அப்போது சொல்லிச் சொல்லிச் சிறப்பித்தனர்.

மார்ச் 14, 1918 ஆம் ஆண்டில் பிறந்து ஜூன் 21, 2001 வரை வாழ்ந்திருந்து இன்று நூறாவது பிறந்த நாள் காணும் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனின் பாடல்கள் முறையாக அவர் பெயர் சொல்லி வானொலிகளில் பகிரப்பட வேண்டும். அதுவே அந்த மகா கலைஞனை இன்னும் பல ஆண்டுகள் நாம் உயிர்ப்பித்து வைத்திருக்க ஏதுவாக அமையும்.

கானா பிரபா

14.083.2018

தீர்த்தக்கரை தனிலே…..செண்பகப் புஷ்பங்களே

தீர்த்தக்கரை தனிலே…..செண்பகப் புஷ்பங்களே

நான் போடும் தாளங்கள் விழி நீரின் கோலங்கள்

பாடுங்கள் ஜீவ ராகங்களே…..❤️

சோகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் மட்டும் தேவையில்லை அந்த உணர்வாக மாறி விட்டாலே போதும் அதனை மொழி பெயர்த்துச் சொல்லி விடும். அதனால் தானோ என்னவோ பறவைகளும், மிருகங்களும் ஏன் மனிதர்களும் கூடத் தங்களின் ஏக்கத்தைத், துயரை வெளிப்படுத்தும் பாங்கு வேறுபட்டிருக்கும்.

இங்கே இந்தப் பாடலில் நாயகனுக்கு ஏதுவாக இயங்கும் வாத்தியங்கள் இசை மொழியில் பகிரும் அந்தந்த வெளிப்பாடுகள் கூட அப்படித்தான். தான் கொடுக்கும் இசையில் மாறுபட்டாலும் சோகம் என்ற பொதுச் சொல்லின் கீழ் ஓசையெழுப்புகின்றன.

பாடலின் ஆரம்பத்தில் வந்து போகும் பெண்ணின் குரலொலியை இசைக்கோவையொன்று ஒற்றியெடுத்து நாயகன் காதில் போட்டு விட அவன் தொடர்ந்து பாட ஆரம்பிக்குமாற் போபத் தொடங்குகிறது இந்தப் பாட்டு.

சோகப் பாடல்கள் ஏன் விரும்பி ரசிக்கப்படுகின்றன என்று கேட்டால் அவை வெறுமனே சோக உணர்வை மட்டும் கடத்துவதோடில்லாமல் துவண்டு போயிருப்பவன் முதுகைத் தடவி ஆறுதல்படுத்தும் பண்பு கொண்டவை.

உன் சோகத்தை நான் பங்கு போட்டுக் கொள்கிறேன் உன்னை நான் ஆற்றுப்படுத்துவேன் என்று இந்தப் பாடல்கள் மறை பொருளில் அவனுக்குச் சொல்லி வைக்கின்றன. அந்த மாதிரியானதொரு உணர்வோட்டம் மிகுந்த பாட்டு இது.

“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடல் வெளிப்படையாக ஒரு ஜனரஞ்சகம் பொதிந்ததாகத் தோன்றினாலும் அந்தப் பாட்டின் பயணத்தில் ஒரு சாஸ்திரிய சங்கீதத்தின் சாயம் ஒட்டியிருக்கும். பாடலை உன்னிப்பாகக் கேட்கும் போது ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவி பாடும் பாங்கில் அதைக் கோடிட்டுக் காட்டுவார் ஜேசுதாஸ். ஒடுங்கிப் போய்த் தன் குரலைத் தணித்துக் காட்டும் போதே மெலிதான சோக ராகத்துக்கான இலக்கணம் அமைந்து விடும்.

ஆனால் அந்த சாஸ்திரிய சங்கீதத்தனம் வெளிப்படையாகத் தெரியாத அளவுக்கு ஜாலம் கொண்டு படைக்கப்பட்டிருக்கும். அந்த வரிகளை இன்னொரு சிட்டிகை அதிகப்படியாகப் போட்டு இன்னும் நீட்டினால் அந்தப் பாட்டின் ஜீவனே தொலைந்து விடுமளவுக்குக் கையாளப்பட்டிருக்கும் பாட்டு இது.

ஒரு பாடலைக் கேட்டு முடித்த பின்னர் அதையே திரும்பக் கேட்பதோ அல்லது அதே சாயல் கொண்ட இன்னொன்றைக் கேட்பதோ இயல்பு.

“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடலின் ஆண் குரலின் முதல் ஓசை வடிவத்தை மட்டும் கொடுத்த பாடகி ஜென்ஸி அதே பாடலை முழுமையாகவும் தனியாகப் பாடியிருக்கிறார். இவ்விரண்டையும் தவிர எனக்கு இன்னொரு பாடல் இந்தச் சூழலில் நினைவுக்கு வரும். அந்தப் பாடல் கூட கே.ஜே.ஜேசுதாஸுக்குத் தனியாகவும் ஜென்ஸிக்குத் தனியாகவும் என்று கொடுக்கப்பட்ட பாடல். அதுதான் “மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்”.

“தீர்த்தக்கரை தனிலே செண்பகப் புஷ்பங்களே” பாடலுக்கு முரணான ரிதத்தில் அமைந்தது

“மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்”. முன்னையது ஒரு வட்டம் போட்டு அங்கேயே சுற்றி மெது வேகத்தோடு பாடும் பாட்டென்றால் பின்னது துள்ளிசை போட்டுக் குதித்துக் கொண்டு போகும் தாளக் கட்டு.

மெல்லிசை தழுவிய பாடல் ஒன்று நம் உள்ளுணர்வுகளை மட்டுமன்றி, உடலையும் கூட ஆட்டிப் பார்க்கும் சக்தி கொண்டதென்றால் இந்த “மீன் கொடித் தேரில்” பாடலும் அத்தகையதே. பாடலின் தொடக்கம் முதல் முடிவிடம் வரை கொல்லம் போகும் நீர் வழித்தடத்தில் ஆலப்புழாவின் படகு வீடொன்றில் அமர்ந்து செல்லும் சுகமான நகர்வு கிட்டும். பாடல் முடியும் போது எழும் ஓசையென்னவோ கடலலையொன்று வந்து முத்தமிட்டுப் போவது போல.

இந்த இரு பாடல்களின் பொதுத்தன்மை “பிரிவுத்துயர் பேசும் இசை”. ஆனால் இரண்டினதும் இசை கோப்பு மாறுபட்டு நம்மை ஆட் கொள்ளும்.

நாண மேக வானிலே…

நானும் நீயும் கூடியே…

மோக ராகம் பாடியே…

போடும் சோக நாடகம்

காவிரி ஓரமாய்…கோவலன் காதலி..

பூவிழி மாதவி…காதலில் பாடிய

கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே..

கொஞ்சவா…….

தீர்த்தக்கரை தனிலே செண்பகப் பூஷ்பங்களே (ஜேசுதாஸ் குரலில்)

தீர்த்தக்கரை தனிலே செண்பகப் பூஷ்பங்களே (ஜென்ஸி குரலில்)

மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் (ஜேசுதாஸ் குரலில்)

மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் (ஜென்ஸி குரலில்)

ஶ்ரீதேவி 💐💐💐

“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம் பேட்டியில் உச்சரிப்பதை முப்பது ஆண்டுகள் கழித்து இன்றும் காண முடிகின்றதொன்று.

பாலிவூட் எனும் ஹிந்தித் திரையுலகில் வைஜெயந்திமாலா, ஹேமமாலினி காலத்துக்குப் பின் அவர்களைத் தாண்டிய பெரியதொரு அலை ஶ்ரீதேவியினால் தான் நிகழ்ந்தது. இன்று வட நாட்டில் இசைத்துறையை எடுத்துக் கொண்டால் ஏ.ஆர்.ரஹ்மானை மையப்படுத்திய உச்சபட்ச அங்கீகாரம் போன்றதொரு நிலையைத் தமிழுலகில் இருந்து சென்று எண்பதுகளில் நடிப்புத்துறையில் நிறுவினார் ஶ்ரீதேவி.

“ஶ்ரீதேவி செத்துப் போனார்” என்ற செய்தி மனசு முரசறிவித்த போது, தன் முகத்தை ஒருக்களித்துச் சாய்த்து வாய் விட்டுக் கொடுக்கும் அவரின் அந்த டைப்ரைட்டர் முத்திரைச் சிரிப்புத் தான் ஞாபகத்தில் வந்து போனது. குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகிற்கு அறிமுகமாகிப் பின்னர் மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் தன் இளவயதிலேயே கனமானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்த வகையில் அவரின் அடுத்த சுற்று ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் முத்திரை இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோரின் திரை வாழ்வில் மறக்கமுடியாத உயர் படைப்புகளில் ஶ்ரீதேவியின் பங்களிப்பு வெகு சிறப்பாக அமைந்து விட்டது.

தன் காதலனைக் கொன்றவன் வீட்டில் அவனின் சித்தியாகச் சென்று வில்லனுக்கே வில்லத்தனம் காட்டும் மூன்று முடிச்சிலும், பட்டுக்காட்டுப் பூமியில் ஏட்டறவு கிட்டிய அளவுக்குப் பட்டறவு இல்லாத வெள்ளாந்தி மயிலு ஆகப் 16 வயதினிலே என்றும், சேலையை வாரி மூடிக் கட்டிய தோற்றத்தில் பாடகி அர்ச்சனாவாக ஜானியிலும் பயணித்தவருக்குக் காத்திருந்து வந்து சேர்ந்தது போலக் கிட்டியது விஜி என்ற வெகுளிப் பாத்திரம். விஜி தன் பிரியமுள்ள நாய்க்குட்டி சுப்பிரமணியோடும் தன் காவலன் சீனுவோடு ஒட்டி உறவாடிப் பாசமழை பொழியும் காட்சிகள் எங்கள் வாழ்வோடு ஒன்றிப் போய்விட்ட ஒருத்தரின் வாழ்வில் நடந்தது போலவிருக்கும்.

சீனு விஜிக்கு நரிக்கதை சொல்லும் காட்சியில் https://youtu.be/vPsHZYU1lVo விஜி அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து விட்டுப் போனதன் சிறுதுளி அது. பின்னர் பாலிவூட் திரையுலகை “சத்மா” வழியாகத் தட்ட இப்படமே அவருக்குப் பாலமாக அமைந்தது.

ஒரு காலத்து இளைஞர்களின் கனவுக்கன்னி ஶ்ரீதேவி. ஆனால் பாருங்கள் இந்த மாதிரியானதொரு ஈர்ப்பை ஏற்படுத்த அவர் கவர்ச்சி என்னும் அஸ்திரத்தை அப்போது பயன்படுத்தவில்லை. ஶ்ரீதேவி வெளிப்படுத்தியது பாந்தமானதொரு அழகு. அதுவே இந்த ஈர்ப்பின் மைய விசை. சுரேஷ் – நதியா காலத்துக்கு முன்பே கமல்ஹாசன் – ஶ்ரீதேவி என்ற ஜோடி தமிழ்த் திரையுலகின் ஏக பிரபலம்.

தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஶ்ரீதேவி படங்கள் என்றால் “தனிக்காட்டு ராஜா”, “வறுமையின் நிறம் சிகப்பு” ஶ்ரீதேவிகள் தான் அதிகம் பிடிக்கும். அதிலும் வேலை ஒன்றும் கிட்டாத விரக்தியிலிருக்கும் காதலனிடமிருந்து விலகி மீண்டும் சேரும் கணங்களில் தன்னை நிரூபிப்பார். தனிக்காட்டு ராஜாவிலும் காதல் முறிவோடு நிற்கும் தனிமரமாகக் குடும்ப வாழ்வை எதிர்கொள்வார்.

மலையாளத்து முன்னணி இயக்குநர் ஐ.வி.சசி கொடுத்த பகலில் ஓர் இரவு ஶ்ரீதேவிக்கு மிகவும் வித்தியாசமானதொரு பாத்திரத்தைக் கொடுத்திருந்தது. இன்னும் மூன்றாம் பிறை, கல்யாணராமன், வாழ்வே மாயம் எல்லாம் நினைப்பில் வரும் போது மீண்டும் கோகிலா மடிசார் பொண்ணை எப்படி மறக்க முடியும்? பெண் பார்க்கும் போது நாணிக் குறுகி முறுவலோடு பாடும் அந்தக் கன்னி மணம் முடித்த பின் தன் கணவனை முந்தானையில் முடிந்து வைக்கத் துடிக்கும் குடும்பப் பெண்ணாக மாறுவாரே அங்கே தெறிக்கும் அவரின் நடிப்பின் முதிர்ச்சி.

கவரிமான் படத்தில் தப்பார்த்தம் கற்பித்துத் தன் தந்தையோடு முரண்படும் மகளாவும் பின்னர் தன்னைக் காக்க வந்த பின் உண்மை தெரிந்து குமுறும் கட்டம் எல்லாம் உச்சம்.

“செந்தூரப் பூவே செந்தூரப் பூவே” (16 வயதினிலே), “”மலர்களில் ஆடும் இளமை புதுமையே” (கல்யாணராமன்), “காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே” (ஜானி) என்று பாடல்களில் எல்லாம் வியாபித்து நிற்பார் அவர். எண்பதுகளில் ஜெய்சங்கர்த்தனமான படங்களில் நடித்துத் தள்ளினாலும் ஶ்ரீதேவிக்கேன்றே அமைந்த படங்களில் தன் இருப்பை அவர் காட்டத் தவறியதில்லை.

சத்மாவுக்கு முன்பே அவர் ஹிந்தியில் நுழைந்திருந்தாலும், தெலுங்கின் மசாலா மன்னன் இயக்குநர் கே.ராகவேந்திரராவ் மீள எடுத்த ஹிந்திப்படம் ஹிம்மத்வாலா அதிரி புதிரி வெற்றியோடு நாகினா, சாந்தினி, மிஸ்டர் இந்தியா என்று ஶ்ரீதேவிக்கான வட நாட்டு, தெலுங்கு திரைப்பயணம் நீண்ட விரிவான கட்டுரையாக எழுதப்பட வேண்டியது.

ஹிந்திக்குப் போன ஶ்ரீதேவிக்குத் தமிழ்ப் பட வரவுகள் கதவைத் தட்டினாலும் அவர் தேர்ந்தெடுத்து நடித்த காரணத்தால் மெல்ல அவரின் இடத்தைப் பலர் நிரப்பினார்கள். “நான் அடிமையில்லை” படம் கூட ஒரு சிறு இடைவேளைக்குப் பின் நடித்து வந்ததது.

மீண்டும் சில வருடங்களுக்குப் பின் தமிழுக்கு வந்தார். ஆனால் “காதல் தேவதை” என்ற மொழி மாற்றப் படம் மூலமாக.

“ஜெகதீக வீருடு அதி லோக சுந்தரி” என்ற தெலுங்குப் படம், தெலுங்கு தேசத்தின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியோடு ஶ்ரீதேவி நடிக்க வெளியானது. அந்த ஊர் எஸ்.பி.முத்துராமன் என்று சொல்லக் கூடிய மசாலா மன்னர், வசூல் சக்கரவர்த்தி கே.ராகவேந்திரராவ் இயக்கிய படம் அவரின் ராசியை மெய்ப்பிக்கும் விதமாக ஓட்டம் ஓடி வசூல் மழை பொழிந்தது. தமிழுக்கும் “காதல் தேவதை” என்ற பெயரில் 1990 இல் மொழி மாற்றப்பட்டு வந்தது.

“எங்களையெல்லாம் ஞாபகம் இருக்குதாம்மா?” என்று

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஒரு விழாவில் வைத்து ஶ்ரீதேவியிடம் கேட்டதே செய்தி ஆகுமளவுக்கு இடைவெளியிருந்தது. மலையாள மூலம் தமிழுக்கு வந்த தேவராகம் படத்தில் அப்போதைய முன்னணி நாயகன் அர்விந்த்சாமியுடன் ஜோடி கட்டியும் படம் எடுபடாமல் போனது.

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய அடுத்த சுற்றை ஒரு பெரிய இடைவேளை எடுத்து விட்டு வந்தாலும் நாங்கள் மறக்கவில்லை என்று ஶ்ரீதேவியை அங்கீகரித்தார்கள். அதற்குப் பின் அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் முக்கிய செய்தி ஆனது இறுதி வரை.

நடிகைகள் மீதான மோகம் எல்லை கடந்து, இவர் என் மனைவி என்று வழக்குப் போடும் மோகம் ஶ்ரீதேவி காலத்தில் ஶ்ரீதேவிக்கும் நிகழ்ந்தது. அது பொய்ச் செய்தியாக இருந்தும் பரபரப்பாகப் பேசப்பட்டது ஊடகங்களின் வாயில். இந்த ஶ்ரீதேவி மோகம் இன்று தெலுங்கு, ஹிந்தி முன்னணி இயக்குநராக இருக்கும் ராம் கோபால் வர்மாவுக்குப் பித்து தலைக்கேறும் அளவுக்கு இருக்கிறது.

தன் தாய் அல்லது பாதுகாவலர் கண்காணிப்போடு நடிக்க வரும் நடிகைகள் ஒரு கட்டத்தில் அந்தப் பாதுகாப்பை இழக்கும் போது நிர்க்கதியாகும் நிலையை நடிகை காஞ்சனா காலத்தில் இருந்து கனகா வரை கண்டிருக்கிறோம். நடிகை ஶ்ரீதேவியின் தாயார் மரணத்தைத் தொடர்ந்து துரத்திய சொத்துப் பிரச்சனையால் உடன் பிறந்தோரால் வழக்கு, நீதிமன்றம் என்று அலைக்கழிக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் பிரபல தயாரிப்பாளரும், நடிகர் அனில் கபூரின் சகோதரருமான போனி கபூரை இரண்டாம் தாரமாக மணம் முடிக்க வேண்டிய நிலைக்குக் காரணமே இந்தப் பாதுகாப்பு உணர்வைத் தேடிய ஶ்ரீதேவியின் இறுதி அடைக்கலம் எனலாம்.

“நினைவலைகள் தொடர்ந்து வந்தால்

நேரமெல்லாம் கனவலைகள்”

ஶ்ரீதேவி என்ற நம் காலத்து நாயகி இனி ஞாபகங்களில் மட்டும்.

கானா பிரபா

25.02.18

கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி 💚

சங்கீதம் எனும் கடலில் அங்கே பழக்கப்பட்டு அங்கேயே வாழ்க்கைப்பட்ட ஒருவர் எவ்வளவு தூரம் அங்கே ஆகச்சிறந்ததொரு வித்தகனாக இருப்பார் என்பதற்கு கே.ஜே.ஜேசுதாஸ் ஒரு வாழும் உதாரணம். இன்று காலை வானொலி ஒலிபரப்பின் போது “கங்கைக்கரை மன்னனடி” என்ற வருஷம் 16 பாடலை ஒலிபரப்பிக் கொண்டே அதில் மூழ்கியிருந்த அந்தக் கணங்களில் இந்த இசை மேதையிலிருந்து புறப்பட்ட சாதகப் பரிமாறல்களில் வியப்பு, நெகிழ்வு, மெய்சிலிர்ப்பு என்று கலவையான உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.

தமிழ்த் திரையிசையில் முழுமையான சாஸ்திரிய இசை நெறிகளோடு அமைந்த ஏராளம் பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவற்றின் பொதுத்தன்மை, காட்சிச் சூழல் மட்டுமன்றி படத்தின் முழுமையான ஓட்டமே அந்த இசை மரபு சார்ந்ததாகவே இருக்கும். அதிலும் இசைஞானி இளையராஜாவுக்கு முந்திய திரையுலகம் இந்தப் பாணியில் இன்னும் வெகு இறுக்கமாகவே இருந்து வந்தது.

ஆனால் ஒரு பொழுதுபோக்கு சார்ந்த திரைப்படத்திலும் சாஸ்திரிய இசையை முழுமையாக மையப்படுத்திய பாடலைக் கொடுத்து என் போன்ற கடைக்கோடி ரசிகனையும் கவர முடியும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களோடு ஒரு முழு நீளக் கட்டுரையே எழுத முடியும். முந்திரிக் கொட்டையாக “தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி” என்ற எனக்குள் ஒருவன் பாடல் இந்த நேரத்தில் நினைவில் வந்து நிற்கிறது. அந்த வகையில் “கங்கைக்கரை மன்னடி” பாடலையும் எடுத்து நோக்க முடியும். ஒப்பீட்டு நோக்கில் இவ்விரு பாடல்களுமே தலைவன் துதியாக அதைத் தலைவியின் பார்வையிலும், தலைவன் பார்வையிலுமாக அமையும் பொதுத்தன்மையும் கொண்டு விளங்கி நிற்கின்றன.

“கங்கைக் கரை மன்னனடி கண்ணன் மலர்க்கண்ணனடி” இந்தப் பாடலை எடுத்து நோக்கினால்

“கண்மணியே ராதை என்னும் – காதலியே

நான் விரும்பும் பெண்மணியே….

ஆடை கட்டும் பைங்கிளியே!

கண்ணன் வந்தான் பாட்டிசைக்க –

கவலைகளை விட்டு விடு

காற் சலங்கை சத்தமிட – மேடையிலே வட்டமிடு”

என்றொரு தொகையறாவை நிதானமாகக் கொடுத்து விட்டு கடல் நீரைச் சுழித்து ஓடும் படகை நேர்த்தியாகவும், நிதானமாகவும் அதே நேரம் வேகம் தப்பாமலும் எடுத்துச் சென்று பயணிக்கும் ஒரு கடலோடியாக மாறுகிறார் ஜேசுதாஸ்.

முதல் சரணமும் இரண்டாவது சரணமும் இன்னும் இவ்விரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றை வெளிப்படுத்தும் போது

“உள்ளத்தை எடுத்தேன்” தொடங்கி “மீனைப் போல் துடித்தேன்” வரை நெகிழ்வான ஓட்டமும் பின்னர்

“தத்தும் சிறு தாமரைப் பாதங்கள்” தொடங்கி “இமை தான் விரிய” என்று முடியும் போது ஜதிகளில் காட்டும் துள்ளிசையும், பின்னர் மீண்டும் பழைய பல்லவிக்கு மாறும் நெகிழ்வான ஓட்டமுமாக இருக்கும்.

மீனொன்று உள்ளிருந்து எட்டி வெளியே கடற்பரப்புத் தாண்டி வந்து மீண்டும் உள்ளே போகுமாற் போலொரு பிரவாகம் அது.

இந்தப் பாட்டைக் கூர்ந்து நோக்கினால் அல்லது இந்தப் பாட்டுக்குள்ளேயே போய்க் குடியிருந்து பார்த்தால் தெரியும் இங்கே கே.ஜே.ஜேசுதாசின் நாவில் அற்புதமான பரத நாட்டியம் ஒன்று அரங்கேறியிருப்பதை.

“முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழின் சந்தம் நிறைந்த இந்தப் பாட்டு ஒன்றும் வெகு சாதாரணமாகக் கடந்து விடக்கூடியதொன்றல்ல. அசுர சாதகம் என்பார்களே அது மாதிரி. ஒரு அற்புதமான சிலையை உருவாக்கி விட்டு அதே மாதிரி இன்னொன்றை எப்படி உருவாக்க முடியாதோ அது போலவே இந்தப் பாடல் எப்படி உருவானதோ அதை எப்பேர்ப்பட்டும் எந்தவொரு உச்ச பாடகராலும்இதே உணர்வோடு கொடுக்கவே முடியாது என்பேன்.

“தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் – நடை தான் பழக

கத்தும் கடல் நீரலை போல் – இங்கு குழல் தான் நெளிய” என்று தொடங்கும் பகுதியில் துள்ளும் ஒலி எப்படி இசையாக மொழி பெயர்க்கப்படுமோ அதுவே தொடர்ந்து வரும் இடையிசையில் புல்லாங்குழலின் வெளிப்பாடு.

தன் காதலியின் அரங்கேற்றம், வேட்டையாட வரும் விரோதியிடமிருந்து காத்து நிற்க வேண்டிய பொறுப்பில் அந்தக் காதலன். இந்தத் திருவிழா மட்டும் குறையின்றி நடந்தால் அதுவே போதும் தெய்வக் குற்றத்தில் இருந்து தப்பி வாழலாம் என்றொரு சூழல் இதெல்லாம் அமைந்த அந்தப் படத்தின் முடிவிடத்தில் இந்த மாதிரிப் பாடலைக் கொடுக்கும் போது அந்த “அவதி” ஐப் பிரதிபலிக்கப் பிரயத்தனப்படும் இசையில் தான் எவ்வளவு போராட்டம்…. அதையே வயலின் குழாமும் தபேலா கூட்டணி சேரக் கண் முன்னே காட்டுகின்றது. பாடலின் வரிகளில் கூட வாலியார் அந்த நெருக்கடி மிகு அழகியலைக் காட்டுகிறார். வருஷம் 16 படம் வந்த போது அதைப் பார்த்து எவ்வளவு தூரம் இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருந்தேனோ அதை இன்றும் அந்தப் படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் எழுப்பி விடும். “கரையாத மனமும் உண்டோ” https://youtu.be/37eraRW1xGU என்று இந்தப்

படத்துக்காகப் பதிவாகி வெளிவராத பாடலைக் கேட்கும் போதும் அதே தான்.

சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்

சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்

அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்

அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்

காத்திருப்பான் கை அணைக்க

காதலியாள் மெய் அணைக்க

மலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐

திரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத்திரை படைத்தவர். இவ்வளவுக்கும் அவர் அதிகபட்சம் பதினைந்து ஆண்டுகள் தான் (1977 – 1993) திரையிசைத் துறையில் உச்ச புகழோடு விளங்கியவர். ஆனால் அவருக்குக் கிடைத்த ஏராளமான வாய்ப்புகள் அதிலும் குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் கிட்டிய பாடல்களில் இந்தத் தெம்மாங்கு முத்திரையில் துலங்கி நிற்பார்.

“முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே

நீர் கொடுத்த நீரையெல்லாம்

நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்

சீராக ஏரோட்டி பார் முழுக்க

சோர் கொடுத்து காக்க போறேன்

ஆதரிக்க வேனும்மையா”

என்றொரு தொகையறாவைப் போட்டு விட்டு “ஏத்தமையா ஏத்தம் ஏலேலங்கடி ஏத்தமய்யா ஏத்தம்” என்று பாடும் போது அச்சொட்டாகக் களத்து மேட்டில் சேற்று மண்ணால் ஊத்தை படிந்த கமக்காரன் தான் நினைவுக்கு வருவான். அதிலும் அந்தப் பாட்டில் நாயகியின் எள்ளலுக்கு முகம் கொடுத்து “கோவணமும் இல்லை கையில் காசுமில்ல பாட்டு வருதே என்ன புள்ள” என்று வெள்ளாந்தியாகப் பாடும் போது வயல்காட்டில் வழிந்தோடும் தண்ணீரில் கால் அலம்பும் போது குளிர்விக்கும் இன்பம்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரின் படங்களில் இந்தப் பாடகர் கண்டிப்பாக இருப்பார் எனும் நம்பிக்கை பெரும்பாலும் பொய்ப்பதில்லை. பாலுமகேந்திரா, ஃபாசில் போன்ற இயக்குநர் படங்களில் எப்படியொரு கே.ஜே.ஜேசுதாஸ் இருப்பாரோ அதுபோலவே பாரதிராஜாவுக்கு எங்கள் அண்ணன் மலேசியா வாசுதேவனும். பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம். “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”, “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” என்று பதினாறு வயதினிலேயில் தொடங்கிய பந்தம் ஒரு சில விதிவிலக்குகளோடு

“பெரும்பாலும்” ஒவ்வொரு படங்களிலும் அதை நிறுவித் தொடர்ந்தது. அது கிராமியம் சார்ந்தது மட்டுமன்றி “நிறம் மாறாத பூக்கள்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற நகரத்தை மையப்படுத்திய படங்களிலும் தொடர்ந்தது.

“கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ”, “மலர்களே நாதஸ்வரங்கள்” என்று கிழக்கே போகும் ரயிலிலும், “வான் மேகங்களே” என்று புதிய வார்ப்புகளிலும், “கொத்தமல்லிப் பூவே” என்று கல்லுக்குள் ஈரத்திலும், “ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்” என்று மண் வாசனையிலும் தொடர்ந்தது. “அரிசி குத்தும் அக்கா மகளே” அன்றைய காலத்து உள்ளூர்த் தொலைக்காட்சிகளின் மாவு அரைக்கும் சிறுகடை விளம்பரப் பாடலாக அமைந்தது உச்சம்.

“தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா

தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே” என்ற வரிகள் தொடும் போது மெய்சிலிர்க்கும் காதல் பரவசம் கொண்டு வரும் “வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்” பாடலில்.

இந்த வரிசையில் உச்சம் கண்டது முதல் மரியாதை பாடல்கள். “வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்” என்றொரு கனிவாக அக மகிழும் பாட்டுக்கு நிகராக “பூங்காற்றுத் திரும்புமா” என்னும் வலி மிகு பாடல், முப்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் அதே உணர்வினைக் கடத்திக் கொண்டே இருக்கிறது. இளையராஜா பாடல்களில் ஒரேயொரு பாடலை மட்டும் வைத்து ஆராய்ச்சி செய்ய முனைவோருக்கு இந்த “பூங்காற்றுத் திரும்புமா” போதும். “தாலாட்ட….மடியில் வைத்துத் தாலாட்ட” என்ற வரிகளில் மலேசியா அண்ணர் காட்டும் வலியின் தொனியை அதே பாங்கில் காட்ட யாரால் முடியும்?

இளையராஜாவோடு இடைக்காலப் பிரிவினை வந்து வேதம் புதிதுவில் தேவேந்திரனோடு பாரதிராஜா கை கோர்த்த போதும் “மாட்டு வண்டிச் சாலையிலே” பாடிக் கை கொடுத்தார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இவரை வைத்து அதிகம் பயன்படுத்தும் அதிஷ்டத்தை ஏனோ ஏற்படுத்த விட்டாலும்

“தென் கிழக்குச் சீமையிலே செங்காத்துப் பூமியிலே

ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு”

பாட்டு கிழக்குச் சீமையிலே படத்தின் நிறத்தைக் காட்டியதே?

“குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரமானதென்ன” அன்றைய விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் “என்னுயிர் தோழன்” பட முன்னோட்டத்தைத் தொடக்கி வைக்கும் பாட்டு மீண்டும் இளையராஜா பாரதிராஜா கூட்டணி கட்டியதன் ஆர்ப்பரிப்புக் கொண்டாட்டம் போல ரசிகர் மனதில் எழும். ஒரு நவீன மயப்பட்டுத்தப்பட்ட இசையில் கிராமியத் தனமான குரலைக் கலக்க வைத்து அந்தக் கிராமிய உணர்வைப் பிரதிபலிக்கும் இளையராஜா முத்திரையில் மலேசியா வாசுதேவன் பங்களிப்பு அதிகம். அதிலும் என்னுயிர்த் தோழனில் “ஏ ராசாத்தி ராசாத்தி” என்ற குழுப்பாடல் போல இன்னொன்று இருக்கிறது. ஆர்.சுந்தரராஜன் இயக்கிய சாமி போட்ட முடிச்சு படத்தில் வரும் “நீலவேணி அம்மா நீலவேணி” பாடல் தான் அது.

“கூந்தல் என்ன ஆலம்விழுதோ

குங்குமம்தான் காலைப்பொழுதோ

தேர்ந்த ரெண்டு சேரன் வில்லு புருவமாகிப்போனதோ…

கண்கள் ரெண்டு மீனோ மானோ…..

கன்னம் என்ன பூவோ பொன்னோ….

சின்ன வாயில் என்ன சாயல் பவழமாக ஆனதோ…”

என்று நீலவேணி பாடலின் இடைக்குரலாக அள்ளுவார் மலேசியா வாசுதேவன். அங்கே காதல் ரசம் வழிந்தோடும் உச்சம்.

“ஏல மலக் காட்டுக்குள்ள” என்று ஒற்றைக் குரலில்

சோக ஒலியெழுப்பும் நாடோடித் தென்றல் மலேசியா வாசுதேவன்.

“இளம் வயசு பொண்ண வசியம் பன்னும் வளவிக்காரன் நல்ல மனசத்தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன்”

அந்தத் தொடக்கமே மலேசியா வாசுதேவனுக்கு ஒப்பார் யாரும் நிகருண்டோ இப்பாட்டில் என்று அட போட வைக்கும். இந்தப் பாட்டில் அறுத்து உறுத்துத் தமிழை வளைத்துப் போட்டுப் பாடும் அழகே தனி. பாண்டி நாட்டுத் தங்கம் படத்தில் இந்தப் பாடல் தனித்து நிற்பது போலவே பெரிய வீட்டுப் பண்ணக்காரன் படத்தில் “பட்டிக்காட்டுப் பாட்டு” பாடலில் காட்டுவார் வித்தை.

மோகன் போன்ற நாயகர்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமே அச்சொட்டாக அமைந்தது போன்ற வளையம் ராமராஜனுக்கு அமையவில்லை. ராமராஜனுக்கு ராஜா பாடினாலென்ன அன்றி இன்னும் மற்றோர் பாடினாலென்ன எல்லாமே சூடு பிடித்து மக்கள் மனதில் ஒட்டிய பாடல்கள். இங்கேயும்

“கம்மாக் கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்” (ராசாவே உன்ன நம்பி), “நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே” (கிராமத்து மின்னல்), காதல் கீதங்கலிலும் “மாரியம்மா மாரியம்மா” (கரகாட்டக்காரன்) தெய்வீகத் தேடலிலும் கிராமத்து ராஜனாக அடையாளப்பட்டார் மலேசியா வாசுதேவன்.

“நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்” குழுப் பாடலில் நாயக அந்தஸ்தோடு வெளிப்படுவார் மலேசியா வாசுதேவர் அதுவே பின்னாளில் கேப்டனுக்கான மகுடப் பாடலாக அரசியல் மேடை வரை எழுந்து நின்றது.

“தண்ணி கருத்திருச்சு” இப்படியொரு தலைப்போடு மலேசியா வாசுதேவன் இசை நிகழ்ச்சி படைக்க வருகிறார் என்ற விளம்பரத்தோடு யாழ்ப்பாணத்தில் கச்சேரி படைக்க வந்தாராம். நெல்லியடியில் நடந்தது அந்த நிகழ்வு. சமீபத்தில் தான் இந்தத் தகவலை அறிந்து கொண்டேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் எல்லாப் பாடல்களும் ஶ்ரீதர் இளையராஜாவின் முதல் கூட்டணி அதுவும் வெற்றிக் கூட்டணி என்று நிரூபித்தன. “ஏ முத்து முத்தா” என்று இன்னொரு அந்தத்த்தில் இழுத்து விட்டு “தண்ணி கருத்திருச்சு” என்று துள்ளிசைக் குரலுக்குள் புகுந்த விதத்தை ரசித்துக் கொண்டே அந்தப் பாடலை முழுமையாக அனுபவிக்கும் போது அவரின் குரலின் பன்முகப்பட்ட

பரிமாணம் துலங்கும்.

“ஆத்து மேட்டுல ஒரு பாட்டுக் கேக்குது” பாடலில் எஸ்.ஜானகியின் கிறங்கடிக்கும் குரலுக்கு ஈடு கொடுத்துத் தானும் பாடும் போது ஒவ்வொரு முதலடிகளையும் தத்தளித்துப் பாடுமாற் போலக் குரலில் மாறுபாட்டைக் காட்டியிருப்பார். உதாரணமாக “ஆஆஆத்த்து மேட்டுல” என்ற ரீதியில் அமைந்திருக்கும். கிராமத்து அத்தியாயம் படத்தில் அண்ணன் இவ்விதம் இசையமைத்துக் கொடுக்கத் தம்பி கங்கை அமரனோ “பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன் நான் வந்த நேரம் அந்த மானங்கு இல்லே” என்று தெம்மாங்கில் ஒரு சோக மெட்டுப் போட்டுக் கொடுக்க மலேசியாவும், எஸ்.பி.சைலஜாவும் பாடியது இலங்கை வானொலியின் பாட்டுப் பெட்டகத்தின் மறக்க முடியாத பொக்கிஷப் பாடல் ஆனது.

அதிசயப் பிறவி படத்தில் மலேசியா வாசுதேவனுக்காக பாடல்களை ராஜா அள்ளிக் கொடுத்த போது சிங்காரி பியாரி பாடலில் மேற்கத்தேயத்தில் ஒரு புறம் கலக்கிக் கொண்டு ” ஒன்ன பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்துப் பாடத் தோணும்” அந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே “இதப்பார்ரா” என்று தரும் எள்ளலோடு பாடல் முழுக்க மலேசியா ராஜ்ஜியம் தான்.

“அத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல்லாட்டம்

அட கூத்தாடும் வைகை ஆறு பாடுற என் பாட்டும்” எனும் போது ஜாலியாகவும்,

“உனை ஆள்வதே பெரும் பாடம்மா, ஊர் ஆள்வதே

எனக்கேனம்மா” எனும் போது வெகு சீரியசாகவும் ஒரே பாட்டில் வித விதமான உணர்ச்சியோட்டம் அதுவும் “தானந்தன கும்மி கொட்டி” என்ற

ஒரு தெம்மாங்குத் துள்ளிசையில் கொடுத்திருப்பார்.

அது போலவே அன்றைய சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பும் அதே படத்தில் வரும் “அன்னக்கிளியே” பாட்டு இதே படத்திலிருந்து.

“அட வஞ்சிரம் வவ்வாலு மீனு தானா” என்று எடுத்த எடுப்பிலேயே பீறிட்டு கடல் தண்ணியிலிருந்து எழுந்து துள்ளிக் குதிக்கும் மீனாக இவர் குரல் செம்பருத்தி படப் பாடலில் ஒரு குறும் உற்சாகத்தைக் காட்டி விட்டு மறைவார்.

பட்டியலாகக் கொடுக்க இன்னும் நிறையக் கொடுக்கலாம் என்று இதோ அள்ளிக் கொடுக்குது மனசு. மேலே சொல்லப்படாத மலேசியா வாசுதேவனின் தெம்மாங்கு மெட்டுகள் அந்த வரிசையில்

கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா – கும்பக்கரை தங்கைய்யா

கூடலூரு குண்டுமல்லி – கும்பக்கரை தங்கய்யா

குத்தாலக் குயிலே – திருமதி பழனிச்சாமி

அடி படகோட்டும் – சின்னவர்

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி – சக்கரைத் தேவன்

தண்ணீர்குடம் கொண்டு – சக்கரைத் தேவன்

தாலாட்ட நான் பொறந்தேன் – தூறல் நின்னு போச்சு

நான் அப்போது – பகல் நிலவு

மலையோரம் மயிலே – ஒருவர் வாழும் ஆலயம்

ஏறாத மலைமேலே – முதல் மரியாதை

ஆடுதடி – மலையூர் மம்பட்டியான்

அடி மத்தாளம் தான் – மல்லுவேட்டி மைனர்

அண்ணனுக்கு – தாலாட்டு கேட்குதம்மா

எந்த வேலு வந்தாலும் – மகராசன்

என் ஆசை வாழைக்குருத்தே – கட்டளை

இன்னும் என்ன பேச்சு – ராஜா ராஜா தான்

குயிலுக்கொரு நிறமிருக்கு – சொல்லத் துடிக்குது மனசு

குத்தாலக்காத்துக்கு மத்தாளம் ஏதுக்கு – சின்னதேவன்

நன்றி உனக்குச் சொல்ல – உத்தம ராசா

கற்பூர தீபத்திலே – ஊரு விட்டு ஊரு வந்து

ஊருக்குள்ள என்னப்பத்தி உன்னப்பத்தி – நினைவுச் சின்னம்

ஊரெல்லாம் திரு நாளு – என்னை விட்டுப் போகாதே

பூவே பூவே பொன்னம்மா – பாட்டுக்கு நான் அடிமை

தந்தேன் தந்தேன் – வில்லுப்பாட்டுக்காரன்

உட்டாலங்கிரி கிரி மாமா – சின்னவர்

விளக்கேத்து விளக்கேத்து – பேர் சொல்லும் பிள்ளை

வெளக்கு வச்சா – சின்னப் பசங்க நாங்க

(இன்னும் இன்னும் வளரும்)

ராஜா & மலேசியா வாசுதேவன் புகைப்படம் : நன்றி ஸ்டில்ஸ் ரவி

கானா பிரபா

20.02.2018

அதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸

பள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருத்தி ஏதோவொரு தன்மையால் கவனத்தை ஈர்ப்பாள். அப்படித்தான் இந்தத் திரையிசைப் பாடல்களும். இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது பிரபல்யமாக்கப்பட்ட பாடல்களையே அதிகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றையும் தாண்டி எத்தனையோ பாடல்கள் இந்தத் திரையிசைச் சுரங்கத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் அல்லது கொண்டாடப்படாமல் இருந்து வருகின்றன.
இந்த விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூட விதி விலக்கு அல்ல. 
இன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் அலை பாயுதே பாடல்களுக்கு முன் வந்த பாடல்கள் பலதும், வந்த போது கொண்டாடித் தீர்த்த அளவு, பின்னர் வானொலிகள் கூட அதிகம் சீண்டுவதில்லை. ஏனோ “பிரபல்யம்” ஒட்டிய பாடல்களை என் மனம் அதிகம் நாடுவதில்லை. ஒரு படத்தில் அதிகம் கவனிக்கப்படாத பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பேன். அப்படியான பாடல்களில் ஏனோ இன்னும் நெருக்கமாக இசையமைப்பாளர் என்னோடு உரையாடுவது போல இருக்கும். அப்படியானதொரு பட்டியலோடு ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளில் அவரின் அரிய பாடல்களோடு வந்திருக்கிறேன்.
🎷 நெஞ்சே நெஞ்சே மறந்து விடு (ரட்சகன்)
https://youtu.be/f00Jc2mlywY
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே என்று புலம்ப வைக்கும் அளவுக்கு மிக நெருக்கமான காதல் பாட்டு இது. பாடலின் வரிகளை மெட்டோடு மட்டும் இசை கலக்காது பாடிப் பாருங்கள். ஒரு இசையமைப்பாளனின் அசாத்தியத் திறமை இங்கே தான் இருக்கிறது. அது என்னவெனில் ஒரு பாடலை ரசிகன் தான் நினைத்த எந்த வடிவிலும் தன் எண்ணவோட்டத்துக்கேற்ப 
ஓட்டிப் பார்த்து வித விதமான ரசிக்க முடியும்.
கே.ஜே.ஜேசுதாஸுக்கு ரஹ்மானால் கொடுக்கப்பட்ட ஆகச் சிறந்த பாட்டாக இதையே எடுத்துக் கொள்வேன்.
வட இந்தியப் பாடகி சாதனா சர்க்கத்தின் பால் மணம் மாறாத் தமிழ்க் குரல் இந்தப் பாடலுக்கு ஒரு பலம்.
“காதல் பிச்சை கேட்கிறேன் ஹாஆஆ…” என்று அவர் உருகும் போது கல் நெஞ்சமும் இளகி விடும் அக்கணம்.
காதலனும் காதலியும் போட்டி போட்டுக் கொண்டு 
சம விகிதத்தில் உருகித் தள்ளும் அபூர்வமான பாடல்களில் இதுவுமொன்று.
முதல் சரணத்துக்கு முந்திய இடையிசையில்
 “தீம்தர தீம்தர தீம்தர தீம்தரா 
    தீம்தர தீம்தர தீம்தர தீம்தரா” என்ற சங்கதிக்கு அமைவாக முணுமுணுக்கும் இசையும் கூட வரும் கோரஸ் கூட்டணி “அஹஹாஹா” என்று இணையும் அந்தக் கணம் நேரமெடுத்து நேர்த்தியாக இசை பண்ணும் ரஹ்மானை அனுபவத்தை நேரடியாக உணரலாம்.
🎷 நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம் (டூயட்)
https://youtu.be/49IgoOITI-A
இசை சார்ந்த ஒரு படத்தின் சாரத்தை ஒரு பாடலுக்குள் அடக்க முடிந்தால் இம்மாதிரியானதொரு பாடலாகத் தான் அது வடிவெடுக்கும். சாக்சபோன் வாத்தியம் ஆரம்பித்து வைக்கப் பின் அதனோடு மொழி பேசும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் மீண்டும் அதுவும் அவரோடு இசையால் பேசும் அழகியலுமாகப் புதைந்திருக்கிறது இந்தப் பாடலில்.
“சிங்கார வேலனே தேவா” பாடலில் எப்படி குரலும் நாதஸ்வரமும் அந்நியோன்யமாகப் பேசிப் பழகினவோ அவை மறு பிறவி எடுத்துப் புத்திசையாகப் பேசுமாற் போல இந்தப் பாடல்.
🎷 உன்னைக் கேளாய் ( தேசம்)
https://youtu.be/DSJzrIGOzM0
தேசம் என்ற ஒரு படம் ரஹ்மான் இசையில் வெளிவந்ததே புலம் பெயர் தமிழ் வானொலிகள் மூலமே அதிகம் அறியப்பட்டது. காரணம் தாய் நாட்டை இழந்து பிரிந்து வாடுதலின் சோகத்தைப் புனைந்து பாடிய “உந்தன் தேசத்தின் குரல்” https://youtu.be/Z5cjyAjRiCQ பாட்டு.
ஸ்வதேஷ் திரைப்படம் தமிழில் “தேசம்” ஆனது. 
பாடல்கள் முழுதும் எழுதியது கவிஞர் வாலி
ஹிந்தியில் ஹரிஹரன், உதித் நாராயணன், கைலாஷ் கர்  பாடிய Yun Hi  Chala Chal” தமிழுக்கு வந்த போது அதே ஹரிஹரனுடன் T.L.மகராஜனுடன் இணைந்து கொடுத்த அட்டகாஷ் துள்ளிசைப் பாடல் இது.
தத்துவப் பாடலொன்றைக் கேட்கும் போது இருக்கும் சோக மன நிலையை இன்னும் கீழிறக்கும் பாங்கு கொண்ட பாடல்கள் ஒரு பக்கமிருக்க, இம்மாதிரித் துள்ளிசை கலந்து கொடுக்கும் தத்துவப் பாடல்களைக் கேட்கும் போது அலாதி இன்பமும் உற்சாகமும் பிறக்கும்.
“ரும்தும் தானன ரும்தும் தானன ரததும் தானன” என்று 
நாட்டுப்புறத்தானும் நகரத்தானும் நட்போடு கை கோர்க்கும் அந்த அழகியல் அற்புதமான பாடலாக விரிகிறது. 
“எத்தனை கால்கள் சென்றனவோ 
எத்தனை கதைகள் வென்றனவோ”
சாலை வழியே வாழ்க்கைப் பயணத்தைப் பாடலில் ஓட்டிப் பார்ப்பது எவ்வளவு சுகானுபவம்.
🎷 செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ (பவித்ரா) 
https://youtu.be/7SjAaavQVpw
அப்போது வரிசையாக ஒவ்வொரு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியவிதத்தில் பவித்ரா படத்தில் கே.சுபாஷ் உடன் கை கோர்த்திருந்தார் ரஹ்மான். 
படத்தில் “உயிரும் நீயே” , “அழகு நிலவே” பாடல்களோடு “கோயம்முத்தூர் கோயம்முத்தூர் தாண்டி” என்ற எள்ளல் பாடல் அளவுக்குக் கூட செவ்வானம் பாடல் அப்போது பிரபலமாக இருக்கவில்லை. இந்தப் பாடல் வந்த நேரம் நான் கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த நேரம் எப்போதாவது அரிதாக இலங்கை வானொலி இந்தப் பாட்டைக் கொடுக்கும் போது நின்று கேட்டுவிட்டுப் போவேன்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சகோதரி எஸ்.பி சைலஜாவிற்கு இளையராஜாவால் ஆரம்பத்திலிருந்து பாடும் வாய்ப்புகள் அதிகம் கிட்டியது போல, எஸ்.பி.பி மகள் பல்லவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாய்த்திருக்கிறார். காதலிக்கும் பெண்ணின் கைகள் (காதலன்) படப்பாட்டில் தந்தையுடன் சேர்ந்து பாட வாய்ப்புக்கிட்டியது இவருக்கு. ஜீன்ஸ் படத்தில் உன்னிகிருஷ்ணனுடன் “ஹைர ஹைர ஐரோப்பா” வரிசையில் பவித்ராவில் இந்தப் பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் முன்னுறுத்தியும் தொடர்ந்தும் நிறையப் பாடவில்லை இவர். ஶ்ரீராம் சிட்ஸ் அதிபரின் மகனைக் காதலித்துத் திருமணம் முடித்து அமெரிக்கா சென்றதாக ஞாபகம். 
நீல மலர்கள் படத்தில் வந்த இது இரவா பகலா நீ நிலவா கதிரா பாடலைப்போலவே இந்தப் பாடலின் வரிகளும் அமைக்கப்பட்டிருக்கும்.
எஸ்.பி.பல்லவியை திரையிசையில் தனித்துவமான பாடகி என்றெல்லாம் உயர்த்த முடியவில்லை என்றாலும்,  அப்பாவித்தனம் ஒட்டிய அந்தக்குரலில் ஏனோ ஈர்ப்பு இருக்கிறது. குறிப்பாக “செவ்வானம் சின்னப்பெண் சூடும்” பாடல் அவருக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு. மனோவை முந்திக் கொண்டு இவர் பாடும் போது கொடுக்கும் நுணுக்கமான சங்கதிகளைக் கவனித்தால் நீங்களும் என் கட்சியில் சேர்ந்துகொள்வீர்கள்.
🎷 சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே (வண்டிச்சோலை சின்ராசு) 
https://youtu.be/aNEcfbaI66g
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்ப காலத்து மெது நடைப் பாடல்களில் இதையெல்லாம் ஒதுக்கி விட்டுக் கடக்க முடியாது என்னுமளவுக்கு வசீகரம் நிறைந்த இசை கொண்ட பாட்டு. 
ஜெயச்சந்திரன், மின்மினி பாடும் போது இந்த ஜோடிக் குரல்களை மனதில் வைத்துக் கொண்டே மெட்டுக் கட்டியிருப்பாரோ என்னுமளவுக்கு அச்சொட்டான ஜோடிக் குரல் பொருத்தம் இசையோடு இழைந்திருக்கும். ஒரு பாடலுக்குத் தேர்ந்த குரல்களும் எவ்வளவு தூரம் அணி செய்கின்றன என்பதை இம்மாதிரியான உதாரணங்களின் மூலமே நிறுவ முடியும்.
இதையே தெலுங்கில் கொடுத்த போது எப்பேர்ப்பட்ட ஜாம்பவானான எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா கூட்டணி இருந்தும் மனதில் ஜெயச்சத்திரன் & மின்மினி குரல்கள் மாற்றீடைத் தேடாது பதியம் போட்டிருக்கு
இந்தப் படத்தை ஒரு மாறுபட்ட முயற்சியாக, அப்போது தொடர்ந்து கிடைத்த நகரப் பின்னணி சார்ந்த படங்களில் இருந்து விலகியதாகரஹ்மான் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.
பண்பலை வானொலிகள் மெல்ல முளைத்துக் கொண்டிருந்த சமயம் “செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே” என்ற சாகுல் ஹமீத் பாட்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம். 
“பரோட்டா பரோட்டா” கவிஞர் நா.காமராசன் ரஹ்மானுக்காக இதுவரை எழுதிய ஒரே பாடல் (நேரடிப் படத்தில்) என நினைக்கிறேன்.
“இது சுகம் சுகம்” வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜோடி சேர்ந்த இன்னொரு மென் காதல் மெட்டு.
“சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே” பாடலைக் கேட்கையில் “ஆத்தங்கரை மரமே” (கிழக்குச் சீமையிலே) பாடலின் மெது நடையாகப் படும் எனக்கு. 
🎷 ஒண்ணு ரெண்டு மூணடா (புதிய மன்னர்கள்) 
https://youtu.be/e-06nR9tc_E
“நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கிப் போனேன்டி” பாடலை வாங்குவதற்குள் இயக்குநர் விக்ரமன் ஏ.ஆர்.ரஹ்மானைக் கசக்கிப் பிழிந்து விட்டாராம். தெம்மாங்குப் பாட்டொன்று இருந்தால் நல்லா இருக்கும் என்று ரஹ்மானிடம் விக்ரமன் எதிர்பார்க்க, ரஹ்மான் கொடுத்த ஒவ்வொரு மெட்டும் அவருக்குத் திருப்தியில்லாமல் அமைந்து விடுகிறது. கடைசியில் பழநி பாரதி அவர்களைக் கொண்டு பாடலை எழுதி வாங்கி அதற்கு மெட்டுப் போடச் சொன்னாராம். 
அந்தப் பாட்டுக்கு மெட்டுக் கட்டி ரஹ்மான் கொடுத்த அட்டகாசமான பாடல் தான் இந்த “நீ கட்டும் சேலை மடிப்புல”.
புதிய மன்னர்கள் படத்தின் பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் வழக்கமான நிறம் இருக்காது. பின் நாட்களில் ஹிந்தி உலகில் லகான், ரங் தே பாசந்தி என்று தேசிய எழுச்சி சார்ந்த அடையாளப் படங்களுக்கு முன்னோடி இது. 
ஆண்களா பெண்களா உசத்தி என்பது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் இருந்து பட்டி மன்ற மேடைகளில் இருந்து திரையிசைப் பாடல்கள் வரை ஏட்டிக்குப் போட்டியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அப்படியானதொரு பாங்கில் அமைந்த பாட்டுத் தான் “ஒண்ணு ரெண்டு மூணடா”.
இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் சக மாணவியர் கூட்டத்தைக் கலாய்த்துப் பார்த்த காலம் என்பதால் பள்ளிக் காலத்துப் பசுமை நினைவுகளைக் கிளறி விடும் என்பதால் மீன் பொரியலை வெறுஞ் சோறுடன் அள்ளிச் சாப்பிடும் சுவை போல ரசிப்பேன். 
“இசையமைப்பாளரே! எனக்கு ஒரு போட்டிப் பாட்டு வேணும் அந்தப் பாட்டில் பாடும் ஆணோ பெண்ணோ தங்கள் பாலினத்தை விட்டுக் கொடுக்காத தில் பாட்டு முடியும் வரை இருக்கணும்” இப்படியொரு எதிர்பார்ப்போடு இயக்குநர் விக்ரமன் ரஹ்மானிடம் யாசித்திருப்பாரோ என்று அந்த இசையமைப்புச் சூழலைக் கற்பனை பண்ணிப் பார்ப்பேன். விடுவாரா ரஹ்மான்? பாட்டு முழுக்க அந்த சக்தியை (energy) வீரியம் மிகுந்த இசையால் பின்னிக் காட்டியிருக்கிறார்.
தொம்த தொம்த தொம் தொம் என்று அந்தப் பாடலில் வரும் ரிதத்தின் உதைப்பைப் பாடலைக் கேட்டு முடித்த பின்னரும் அசை போட்டுக் கொண்டிருப்பேன்.
இசையை விலத்தி வரிகளை மட்டும் பிரித்துப் பார்த்தால் அந்த மெட்டில் ஆங்காங்கே ஒரு சாஸ்திரிய சங்கீதத்தனம் ஒட்டியிருக்கும். மனோ சித்ரா காதல் ஜோடிப் பாட்டுக்காரர்களை இப்படிப் போட்டியாளர்களாகப் பாட வைக்கும் புதுமையும் இனிக்கிறது. 
தேனிசைத் தென்றல் தேவாவால் களம் இறக்கப்பட்ட பாடலாசிரியர் கவிஞர்  காளிதாசன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எழுதிய ஒரே பாடல் இதுவாகத் தானிருக்கும். இந்தப் படத்தின் மற்றைய பாடல்கள் அனைத்தையும் எழுதி, ரஹ்மானுடன் முதன் முதலில் கை கோர்த்தார் பழநி பாரதி.
(தொடரும்)