நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்

இன்று அக்டோபர் 1 ஆம் திகதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த தினமாகும். எனவே ஒரு சிறப்புத் தொகுப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் தொகுப்பை YouTube தொகுப்பாக இங்கே பகிர்கின்றேன்.

தொகுப்பில் இடம்பெறும் படங்கள்
நான் வாழ வைப்பேன்
தீபம்
பட்டாக்கத்தி பைரவன்
தியாகம்
கவரிமான்
நல்லதொரு குடும்பம்
ரிஷிமூலம்
வெள்ளை ரோஜா
எழுதாத சட்டங்கள்
ரிஷிமூலம்
வாழ்க்கை
படிக்காதவன்
சாதனை
தாய்க்கு ஒரு தாலாட்டு
ஜல்லிக்கட்டு
முதல் மரியாதை
நாங்கள்
தேவர் மகன்
ஒரு யாத்ரா மொழி (மலையாளம்)

பி.கு கிருஷ்ணன் வந்தான், படிக்காத பண்ணையார் போன்ற படங்களிலும் இளையராஜா இசை இடம்பெற்றாலும் பொருத்தமான பாடல்களைப் பகிர இயலவில்லை.

இந்தப் பகிர்வின் முகப்புப் புகைப்படம் நன்றி www.chakpak.com
இந்தப் பகிர்விற்குப் பாடல் தோடியபோது கைக்கெட்ட உதவிய YouTube இல் பகிர்ந்திட்டவர்களுக்கும் நன்றி

பாடல் தந்த சுகம் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

சினிமா உலகில் அதிக வெளிச்சம் படாத இயக்குநர் சின்னத்திரையில் சாதித்துக் காட்டுவது உண்டு. இவ்வகையான இயக்குநர்களில் முன்னோடி என்று  சுந்தர் கே.விஜயனைக் குறிப்பிடலாம். இவரின் தந்தை புகழ்பெற்ற இயக்குநர் கே.விஜயன். தயாரிப்பாளர் நடிகர் கே.பாலாஜியின் திரைப்படங்கள் பெரும்பாலும் கே.விஜயனின் இயக்கத்திலேயே இருப்பதுண்டு. தந்தை வழியில் தனயன் சுந்தர் கே.விஜயனும் “ரேவதி” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். 
சுந்தர் கே.விஜயன் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படம் “என் அருகில் நீ இருந்தால்” அந்தப் படத்தின் பாடல்களைக் காட்சிகளைத் தவிர்த்து இசையை மட்டும் கேட்டுப் பாருங்கள். அருமையான இசைப் பெட்டகம் அது.
ரேவதி என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த படம் “வெளிச்சம்”. இந்தப் படத்துக்கு இசை வழங்கிய மனோஜ் கியான் இரட்டையர்கள் அப்போது ஊமை விழிகள் திரைப்படத்தின் வாயிலாகப் பரவலாக அறிமுகமாகியிருந்தார்கள். இளையராஜா காலத்தில் சந்திரபோஸ் இற்கு அடுத்து அதிகம் அறியப்பட்ட இசையமைப்பளார்களாக எண்பதுகளின் இறுதியில் மனோஜ் கியான் இரட்டையர்களின் பங்களிப்பு சிறப்பானது. குறிப்பாக இவர்கள் இசையமைத்த “வெளிச்சம்” திரைப்படம் மற்றைய படங்களைப் போலப் பரவலாக அறியப்படாத படம் என்றாலும் என் பார்வையில் இந்தப் படத்துக்கு இவர்கள் தந்த இசை மற்றைய படங்களை விடத் தனித்துவமாக நிற்கும். குறிப்பாக இரண்டு பாடல்களில் ஒன்று “ஓ மை டியர் ஐ லவ் யூ” பாடலை டாக்டர் கல்யாண், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல்களில் கேட்டுப்பாருங்கள் ஒரு பாடலில்  இரண்டு விதமான தளங்களில் பயணப்படும் முக்கோணக் காதலை அழகாகக் கொடுத்திருக்கும். http://songs.shakthi.fm/ta/Velicham_www.shakthi.fm/shakthi.FM%20%20-%20%20My%20Dear.mp3
வெளிச்சம் படத்தில் வரும் “துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே” பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். அந்தக்காலத்துச் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம் வாயிலாக எனக்கு அறிமுகமான பாடலிது. கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் இளையராஜாவுக்குக் கொடுத்தது மட்டுமன்றி ரவீந்திரன் (உதாரணம் ஏழிசை கீதமே, பாடி அழைத்தேன்), சந்திரபோஸ் (சந்தோஷம் காணாத வாழ்வுண்டா) வரிசையில் மனோஜ் கியானுக்காகப் பாடிய பாடல்களைத் தேடிக் கேட்பதே சுகம். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் இன் குரலுக்குக் கிடைத்த இன்னொரு பரிமாணம் துலங்கும்.
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாடலில் இழைத்திருக்கும் மெல்லிசையும், வைரமுத்துவின் அழகிய வரிகளும், ஜேசுதாஸ் இன் குரலும் சேர்ந்து கிட்டிய இந்த அழகிய பாடலை இரவு நேரத்தில் கேட்கும் போது அது தரும் சுகமே தனி.
பாடலை YouTube channel இல் காண 
http://www.youtube.com/watch?v=GyJlJXiS8u4&sns=em

பாடல் தந்த சுகம் : அல்லி சுந்தரவல்லி லாலி

ஒலி நாடாக்களின் யுகம் வழக்கொழிந்து போகும் நேரத்தில் இந்தப் பாடலை அடிக்கடி நினைவுபடுத்தும் என்னிடமிருக்கும் இந்தப் படத்தின்     ஒலியிழைப் பேழை.

சிட்னியில் இருக்கும் நம்மூர் மளிகைக்கடையில் 15 வருஷங்களுக்கு முன்னர் இதைக் கண்டபோது முதலில் வாங்க வைத்ததே “நீ வருவாய் என” பாடல்கள் இருப்பதால் தான். வாங்கிய பின்னர் தான் தெரிந்தது கூடவே இருக்கும் சக படங்களான அந்தப்புரம், கண்களின் வார்த்தைகள் இவற்றின் இசை இளையராஜா என்று. அப்போது தான் எனக்கு அறிமுகமானது “அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி”
இப்படி ஒவ்வொரு பாடல்களும் என்னை வந்தடையும் போது ஏதோவொரு பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துடன் வந்துவிடுகின்றன 🙂
நேற்று #RajaChorusQuiz இல் இந்தப் பாடலை நான் போட்டிப் பாடலாகக் கொடுத்த போது பலருக்கு அதுவே முதல் அனுபவம் என்றும், பாடலை மிகவும் ரசித்துக் கேட்டதாகவும் சொன்னபோது ஏதோ நானே இந்தப் பாடலை இசையமைத்த திருப்தியடைந்தேன்.
“கண்களின் வார்த்தைகள்” திரைப்படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் முக்தா பிலிம்ஸ் சார்பில் முக்தா.V.சுந்தர் இயக்கத்தில் வெளிவந்தது. இந்தப் படம் முக்தா பிலிம்ஸ் இன் நூறாவது தயாரிப்பு என நினைக்கிறேன் சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஏதோவொரு சிறப்பு அடையாளத்துடனேயே நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இவர்கள் இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். விக்ரம், கரண், 
பிரேமா நடித்திருக்கிறார்கள். சேதுவுக்கு முந்திய விக்ரம் என்பதால் வழக்கமான அவரது ஆரம்பகாலத் தோல்வியோடு சேர்ந்துவிட்டது இந்தப் படமும்.
Nammoora mandara hoove என்று கன்னடத்தில் வெளிவந்த படம். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் ஷிவ்ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க ரமேஷ் அர்விந்த், பிரேமா ஆகியோர் இணைந்து நடித்த வெற்றிப் படமாக அமைந்தது. இசைஞானி இளையராஜா இசையில் மொத்தம் ஏழு பாடல்கள்.
இளையராஜாவை ஒவ்வொரு மொழிக்காரரும் ஒரு குறிப்பிட்ட படப்பட்டியலோடு வெகுவாகக் கொண்டாடும் போது அந்தப் பட்டியலில் கன்னடம் என்று வரும் போது கண்டிப்பாக இந்தப் பாடல்களும் இருக்கும் அளவுக்கு கன்னடர்களுக்கு இந்தப் படப்பாடல்கள் மேல் கொள்ளைப் பிரியம்.
நான் சொன்னதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினால் YouTube இல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் படப்பாடல்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் பின்னூட்டங்களில் உச்சி மோந்து பாராட்டிக் கொண்டிருப்பதை ஒரு எட்டு பார்த்து விடுங்கள். 
குறிப்பாக இங்கே நான் பகிர்ந்திருக்கும் “அல்லி சுந்தரவல்லி லாலி” பாடலைத் தமிழில் பாடகர் அருண்மொழியும், மூலப் பாடலான “ஹள்ளி லாவணியல்லி லாலி சுபலாலி” பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் குழுவினரோடு பாடியிருக்கிறார்கள். 
இந்தப் பாடலை ஏற்கனவே தெரிந்த பலருக்கு கன்னடம் வழியாகவே தமிழ் அறிமுகமாகியிருக்கிறது. எனக்கே தலைகீழ். எஸ்.பி.பாலசுப்ரமணியம், அருண்மொழி ஆகிய இரு வேறுபட்ட பரிமாணம் கொண்ட பாடகர்களின் பாடல்களைத் தனித்துக் கேட்கும் போது இரண்டுமே உறுத்தலில்லாமல் ரசிக்க வைத்திருப்பதே சிறப்பு.
சேர்ந்திசைக்கும் குரல்களை பாடல் முழுதும் தூவி, அவர்களையும் சிறு சிறு ஆலாபனை இசைக்க வைத்திருப்பது சிறப்பு. 
சந்தோஷம் கொட்டும் இந்தக் காதல் பாடலில் ஆண்குரல் மட்டும் தனியே இசைக்க, கூட ஜோடி போட்டுப் போட காதலிப்பெண் குரல் இல்லாது அந்தப் பெண்ணின் தோழியர் அவளின் மன நிலையைப் பிரதிபலிக்குமாற்போல வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும். பாடலின் ஆரம்பம் முதல் இறுதிவரை அதே சீர் பின்பற்றப்பட்டிருக்கும்.
கற்பனை பண்ணிப்பாருங்கள் பாடலில் வரும் தோழிமார் பாடும் பகுதி இல்லாமல் கூட இந்தப் பாடலைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் ஒரு பாடலை எவ்வளவு தூரம் தனித்துவமாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற உழைப்பின் வெளிப்பாடே அந்தச் சேர்க்கை என்பது புலனாகும்.
பாடலின் இசைக்கோர்ப்பைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பில் பாடலாசிரியர் பழனிபாரதியின் பங்கும் சிறப்பானது.
இப்படியான பாடல்கள் இன்னும் வெகுவாகக் கொண்டாடப்படவில்லையே என்ற ஆதங்கம் இசை ரசிகனுக்கு என்றும் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் அதையெல்லாம் இசைஞானி கடந்து போய் வெகுகாலமாயிருக்கும்.
“ஹள்ளி லாவணியல்லி லாலி சுபலாலி” கன்னடப் பாடலைக் கேட்க
http://soundcloud.com/kanapraba/hallilavaniyalli 
“அல்லி சுந்தரவல்லி லாலி சுபலாலி” தமிழ்ப்பாடலைக் கேட்க
http://soundcloud.com/kanapraba/alli-suntharavalli 

இயக்குனர் இராம நாராயணன் திரைப்பாடல் திரட்டு

இயக்குனர் இராம நாராயணன் குறித்த சிறப்பு வானொலிப்பகிர்வொன்றை நமது ATBC வானொலிக்காகத் தயாரித்து வழங்கியிருந்தேன். இந்தத் தொகுப்பில் இராம நாராயணனின் முக்கியமான சில படங்களில் இருந்து பாடல் தொகுப்போடு 1 மணி நேரம் 18 நிமிடங்கள் வரை அமைகின்றது. இப்பாடல்களை நீங்களும் கேட்டு மகிழ இதோ அந்த ஒலிப்பதிவைப் பகிர்கின்றேன்.

Download பண்ணிக் கேட்க

Download பண்ணிக் கேட்க

தொகுப்பில் இடம்பெற்ற பாடல்கள்
1. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
படம்: சிவப்பு மல்லி
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்

2. காளிதாசன் கண்ணதாசன்
படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி
பாடியவர்கள்: பி.சுசீலா,ஜெயச்சந்திரன்
இசை: இளையராஜா

3. வாலைப் பருவத்திலே
படம்: கண்ணே ராதா
பாடியவர்கள்: பி.சுசீலா,எஸ்.பி.சைலஜா
இசை: இளையராஜா

4. காட்டுக்குள்ளே காதல் கிளியைக் கண்டேன்
படம்: கரிமேடு கருவாயான்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

5. வெண்ணிலா முகம் பாடுது
படம்: ஜோதி மலர்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

6.அழகிய பொன்வீணையே என்னோடு வா
படம்: காகித ஓடம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்

7. அழகான புள்ளிமானே
படம்: மேகம் கறுத்திருக்கு
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: மனோஜ்-கியான்

8. செந்தூரக் கண்கள் சிரிக்க
படம்: மணந்தால் மகாதேவன்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

9. வண்ண விழியழகி வாசக் குழலழகி
படம்: ஆடி வெள்ளி
பாடியவர்கள்: சித்ரா குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்

10.பாப்பா பாடும் பாட்டு
படம்: துர்கா
பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்

11.யக்கா யக்கா யக்கா
படம்: செந்தூரதேவி
பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்

12.விடுகதை ஒன்று
படம்: ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (இராம நாராயணன் தயாரிப்பு, அவரின் நண்பர் எம்.ஏ.காஜா இயக்கம்)
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்