நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️

ரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்றம் என்னுள் சயனைட் ஆக இறங்கி விட்டது.

சிட்டுக் குருவியின் பின்னால் தான் மனம் ஓடிக் கொண்டிருக்கிறது மழைக் குருவி பாட்டைக் கேட்டுக் கொண்டே.

ஏ.ஆர்.ரஹ்மான் தன் பாடல்களில் ஜாலம் தரும் இசைக் கோவைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அளவுக்கு மெட்டுகளில் பொதிந்த வரிகளுக்குக் கொடுப்பதில்லை என்பது என் அனுமானம். அதாவது பாடல் ஒன்றின் ஆரம்பத்திலோ அல்லது இடை வரிகளிலோ காணும் கவியாழம் மிகுந்த சொற்களை நளினப்படுத்துவது அரிது. அந்த மாதிரியான காரியத்தை குறித்த பாடகரின் பொறுப்பிலேயே விட்டு விடுவார்.

ஹரிஹரனோ, நித்யஶ்ரீயோ அல்லது வழக்கம் போல் எஸ்.பி.பியோ தமக்கான பாணியில் அவற்றை அழகுபடுத்துவதைக் காணலாம். ரஹ்மானின் தனித்துவம் என்பதே அதுதான் ஒரு குறித்த இசைக்கலைஞரோ அல்லது பாடகரோ அவரவளவில் எந்த அளவுக்குச் சிறப்பாகக் கொடுப்பாரோ அதை வாங்கி வைத்து அழகானதொரு பிரமாண்டமான கேக் ஒன்றை அமைத்து விடுவார். அதுதான் ரஹ்மான். விக்கு விநாயக் ராம் இல் இருந்து பாடகி ஹரிணி உள்ளிட்ட பல்வேறு இசைக் கலைஞர்கள் இதை முன் மொழிந்து பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டுடைப்பை ரஹ்மான் தானே பாடிய ஒரு பாடலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அதுதான் “மழைக் குருவி” என்ற “செக்கச் சிவந்த வானம்” என்ற பாடல்.

நீல மலைச் சாரல்……

இந்த ஆரம்ப வரிகளைக் கவனியுங்கள் இதில் “நீல” என்ற அந்தத் தொடக்கத்தை எவ்வளவு நளினமாகக் கீழிறக்குவார். ஒவ்வொரு சொற்களையும் பேசும் போதும் பாடும் போதும் வித்தியாசப்படுகிறது. எப்படியென்றால் இங்கே ரஹ்மான் பாடுவதைப் போலத் தான்

நீல…..

மலைச்

சாரல்

என்று கீழிறக்குவாரே அங்கே தான் ஒரு பாடகன் தன் குரலுணர்ச்சி வழியாகக் கேட்பவனுக்கு அந்த உலகத்தைக் காட்டுவது.

வீதிக்குப் பழக்கப்பட்ட காரோட்டி ஒருவன் தன் ஒரு கையை சன்னல் கரையோரம் கிடத்தி விட்டு கையால் காரின் வழி திருப்பும் சக்கரத்தை நகர்த்தி ஓடுமாற் போல வானில் எட்டப் போய்த் தன் சிறகிரண்டையும் தள்ளி விட்டுக் காற்றில் அலைந்தும், மிதந்தும், இறங்கியும், ஏறுமாற் போல இருக்கிறது

நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்

என்ற ஆரம்ப வரிகள் மலைச் சாரலை அளவெடுத்துப் பாடும் பாங்கில் இருக்கும்.

வழக்கத்துக்கு மாறாக ரஹ்மான் குரலில் வரிகளை நோக்கி ஒரு அந்நியோன்யம் மிகுந்த தொனி இருப்பதைப் பார்க்கிறேன்.

ந ந ந ந நனனன…

என்று ராஜாத்தனம் காட்டுகிறார்.

“தெரியவில்லை…..”

என்னும் போது ஒரு ஏக்கம் கவ்விக் கொள்கிறது.

“விட்டுப் பிரிந்தேன்….”எனும் போது குரல் கம்மிக் கொள்கிறது. இப்பேர்ப்பட்ட வித்தியாசமான ரஹ்மானை நான் கேட்டதில்லை.

காட்டில் அந்நேரம்

கதையே வேறு கதை

கூட்டை மறந்துவிட்டுக்

குருவி கும்மியடித்ததுகாண்

என்று ஆரம்பிக்கும் வரிகளில் இருந்து இன்னொரு குரலைச் சேர்த்திருக்கலாம் என்பது என் உணர்வு.

ஒரு சிட்டுக் குருவிக்கும் மனிதனுக்குமான இயற்கையின் பந்தம் காதலோடு பொருத்திப் பார்க்கப்படுகிறது.

வைரமுத்து அவர்கள் ஏற்கனவே எழுதிய “மழைக்குருவி” என்ற கவிதை சில மாற்றங்களோடு கவிதையின் சில பகுதிகள் மட்டும் எடுத்துக் கையாளப்பட்டிருக்கின்றன.

இந்தப் பாடல் என்னை ஆக்கிரத்ததும் பாடல் வரிகளை மூலப் பாடலோடு ஒப்பிட்டுப் பாடலைக் கேட்டபடியே எழுதினேன். இதோ

நீல மலைச்சாரல்

தென்றல் நெசவு நடத்துமிடம்

நீல மலைச்சாரல்……

வானம் குனிவதிலும்

மண்ணைத் தொடுவதிலும்

காதல் அறிந்திருந்தேன்

கானம் உறைந்து படும்

ஞானப் பெருவெளியில் ஒரு

ஞானம் வளர்த்திருந்தேன்

இதயம் விரித்திருந்தேன் நான்

இயற்கையில் திளைத்திருந்தேன்

சிட்டுக் குருவியன்று

சிநேகப் பார்வை கொண்டு

வட்டப் பாறையின்மேல்

என்னை வா வா என்றது

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

ஒற்றைச் சிறுகுருவி நடத்தும்

ஓரங்க நாடகத்தில்

சற்றே திளைத்திருந்தேன்

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

ஒரு நாள் கனவு

இது பேரற்ற பேருறவோ….

யார் வரவோ…….

நீ கண் தொட்டுக்

கடந்தேகும் காற்றோ

இல்லைக் கனவினில் நான்

கேட்கும் பாட்டோ

இது உறவோ…..

இல்லைப் பரிவோ…

நீல மலைச்சாரல்

தென்றல் நெசவு நடத்துமிடம்

ந ந ந ந நனனன…

அலகை அசைத்தபடி பறந்து

ஆகாயம் கொத்தியதே

உலகை உதறிவிட்டுச் சற்றே

உயரப் பறந்ததுவே…

கிச்சுக் கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு எதுவுமின்றிப்

பிரியமா என்றது

முகிலினம்

சர சர சரவென்று கூட

இடி வந்து

பட பட படவென்று வீழ

மழை வந்து

சட சட சடவென்று சேர

அடை மழைக் காற்றுக்குக்

குடையில்லை மூட

வான வெளி…

மண்ணில் நழுவி

விழுந்ததென்ன

திசையெல்லாம்

மழையில் கரைந்து

தொலைந்ததென்ன

சிட்டுக் குருவி பறந்த

திசையும் தெரியவில்லை

விட்டுப் பிரிந்து விட்டேன்

பிரிந்த வேதனை

சுமந்திருந்தேன்…..

விட்டுப் பிரிந்தேன் பிரிந்தேன்

உயிர் நனைந்தேன்

அந்தச் சிறுகுருவி

இப்போது அலைந்து

துயர் படுமோ…துயர் படுமோ

இந்த மழை சுமந்து

அதன் றெக்கை

வலித்திடுமோ….வலித்திடுமோ

காட்டில் அந்நேரம்

கதையே வேறு கதை

கூட்டை மறந்துவிட்டுக்

குருவி கும்மியடித்ததுகாண்

சொட்டும் மழை சிந்தும்

அந்தச் சுகத்தில் நனையாமல்

என்னை எட்டிப் போனவனை

எண்ணி எண்ணி அழுதது காண்

எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் – மணி ரத்னம் – வைரமுத்து கூட்டணி வந்தால் உள்ளூர எழும் ஆனந்தத்துக்கு முக்கிய காரணம் “தமிழ்”.

தமிழ்ப் படமென்றாலும் தமிழுக்கு அந்நியமான காட்சிக் களத்தையும், சடங்குகளையும் போட்டுக் குழப்பி இந்திய வர்த்தகச் சந்தையை இலக்கு வைத்தாலும் தன்னுடைய படங்களில் “தமிழ்” தான் தலைப்பாக இருக்கும் கறார் பேர்வழி மணிரத்னம். அது போலவே ரஹ்மான் மற்றைய படங்களில் யாருடனாவது கூட்டுச் சேரட்டும் ஆனால் என் படம் என்றால் வைரமுத்து தான் என்று விடாக்கண்டனாக இருப்பார்.

இங்கே இந்த இடத்தில் வைத்து வைரமுத்துவின் தேவை ஏன் முக்கியமாகப்படுகிறது என்று நோக்குவதற்கு இந்த மூவர் கூட்டணியில் ஏராளம் பாடல்களைக் காட்டினாலும் இந்த “மழைக்குருவி” பாடல் இன்னும் வெகு நெருக்கமான உதாரணமாக அமையும். இன்று யாரும் பாட்டெழுதலாம், எதையும் போட்டு எழுதலாம் என்ற சூழலில் வைரமுத்துவின் பங்களிப்பு முக்கியமாகப்படுகிறது.

பாடல் வழியே அந்தக் காட்சியின் பின் புலத்தைத் தொடுவதோடு அழகிய தமிழ்ச் சொற்களையும் ரம்மியமான வரிகளோடு பொருத்தி விட்டு அழகு பார்ப்பார் வைரமுத்து.

இன்றைய சூழலில் ஒரு ரஹ்மானையோ, வைரமுத்துவையோ அவர்களின் திறமையைப் பறை சாற்ற, காமராஜர் அரங்கத்தைக் கூட்டிக் கொள்ளை கொள்ளாக் கூட்டத்தோடு ஒரு விழா எடுக்கும் பாங்கில் மணிரத்னத்தின் ஒற்றைப் பாடலே செய்து முடித்து விடுகிறது.

எப்படித் தாய்த் தயாரிப்பாளர் தன் பஞ்சு அருணாசலம் படங்களில் இசைஞானி இளையராஜா கொடுத்ததெல்லாம் தனியானதொரு விசேஷம் பெறுமோ அப்படியே இந்த ரஹ்மான் மணிரத்னத்தோடு சேரும் போதெல்லாம் உணர்கிறேன்.

ஊருக்கு எவ்வளவு தான் ஆக்கிப் போட்டாலும் தன் தாய்க்குச் செய்து காட்டிப் பெருமை வாங்கும் சிட்டுக் குருவியாய் இந்தப் பாட்டு.

கானா பிரபா

09.09.2018

நா.முத்துக்குமார் ?இளையோரின் இதய ஓசை

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வெறும் பன்னிரண்டு ஆண்டுகள் தான் திரையிசை உலகத்தில் இயங்கிவர். அதிலும் அவரின் ஆரம்ப கால முயற்சிகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் ஒரு தசாப்தமே தேறக் கூடியவர் ஆனால் அவரின் திடீர் இழப்பில் மனம் துவண்ட கூட்டத்தைக் கண்டு உள்ளூரப் பிரமிப்பும் எழுந்தது.

ஒரு கண்ணதாசனையோ, ஒரு வாலியையோ. ஒரு வைரமுத்துவையோ கொண்டாடக் கூடிய எல்லை வரை முத்துக்குமாரைக் கொண்டாடினார்கள் இந்த இளையோர். அதன் பின்னணியில் ஒரு உண்மை இருக்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளைப் பார்த்தால் அவர்கள் அந்தந்தக் காலப் பகுதியில் மையம் கொண்டிருக்கும் இளையோரின் நாடித்துடிப்பைச் சரியாக அறிந்து வைத்தவர்களாகத் தான் அடையாளப்படுவார்கள்.

“வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது

உனது கிளையில் பூவாவேன்

இலையுதிர்காலம் முழுதும்

மகிழ்ந்து உனக்கு வேராவேன்”

என்று வைரமுத்துவின் வரிகள் எப்படி அந்தக் காலத்து இளையோரை ஈர்த்ததோ அது போலவே முத்துக்குமாரின் பாடல்களில் அந்நியோன்யம் இருக்கும். எப்படி எண்பதுகளில் வைரத்துவை மீறிய படைப்பிலக்கிய கர்த்தாக்கள் இருந்தார்களோ அது போலவே முத்துக்குமாரை வெல்லும் எழுத்தாளுமைகளும் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்களின் வெற்றிக்குப் பின்னால் தம்காலத்து ரசிகனின் உணர்வை மொழி பெயர்க்கும் வித்தை அவர்களுக்குக் கிட்டியது. எந்த இசையமைப்பாளர் என்றாலும் முத்துக்குமார் தன் வரிகளுக்காகவே பாடல் கேட்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கினார்.

காலா காலமாகப் பெண்ணை வர்ணித்தே பழகிப் போன கவிஞர்களில் இருந்து விலகி, முதல் அடிகளிலேயே

“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என்று கொடுத்தவர் முத்துக்குமார். பாடல் முழுக்க இல்லை இல்லை என்று எதிர்மறையோடு பயணிக்கும்.

ஆனால் அந்த “இல்லை” ஐத்தான் இருப்பின் அடையாளமாக நிறுவுவார் முத்துக்குமார்.

பொதுவாக எல்லோருமே பெற்ற தாயைக் கொண்டாடும் போது இங்கேயும் விலகி நின்று தன் தந்தை புராணத்தை முத்துக்குமார் “அணிலாடும் முன்றல்” இல் எழுதும் போது என்னைப் போலவே பலரும் இருந்திருப்பர், இதயத்தின் ஒரு கரையில் நம் தந்தையை நினைவுபடுத்திக் கொண்டே அந்தத் தொடரைப் படித்த போது.

“வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்

வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்

தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புள்ளு அடிச்சோம்

தண்டவாளம் மேல காசை வச்சு தொலைச்சோம்

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே

கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்”

இதெல்லாம் நாம் வாழ்ந்து கழித்த வாழ்க்கை, இதையெல்லாம் அப்படியே ஒளிக்கருவியில் படம் பிடித்ததைப் போலக் கொடுத்திருப்பார் முத்துக்குமார்

“வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி

வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே”

பாடலில்.

“அன்று பார்த்தது…..

அந்த பார்வை வேறடி…

இந்த பார்வை வேறடி….”

சமந்தா வயதில் பள்ளிச்சீருடையில் பள்ளிக்காதலி நினைவுக்கு வந்து போவாள்,

“வானம் மெல்ல கீழிறங்கி

மண்ணில் வந்து ஆடுதே….

தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே….”

கேட்கும் போதெல்லாம்.

“பறவையே எங்கு இருக்கிறாய்

பறக்கவே என்னை அழைக்கிறாய்

தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே”

இந்த வரிகளைக் கேட்கத் தேவையில்லை நினைத்தாலேயே அடி மனதைக் கவ்வும் ஒரு சோகம் பீடிக்கும், அங்கும் முத்துக்குமார் நிற்பார்.

நா.முத்துக்குமாரின் எழுத்து “காதல் கொண்டேன்” படத்தில் வந்த “தேவதையைக் கண்டேன்” பாடல் மூலமாகத் தான் வெகுஜன அந்தஸ்தை எட்டிப் பிடிக்க மூல காரணியாக் இருந்தது. இந்தப் பாடலுக்கான வரிகளை நா.முத்துக்குமார் எழுதித் தன் நண்பர் அஜயன் பாலாவுக்குப் பகிர்ந்த போது “இதென்ன வார்த்தை ஜாலமில்லாத வெகு இயல்பான வரிகளாக இருக்கிறதே” என்று சங்கோஜப்பட்டாராம் அஜயன் பாலா. ஆனால் இந்த வரிகள் தான் குறித்த பாத்திரப் படைப்புக்கு, அந்த எளிமை நிறைந்த வாலிபனுக்குப் பயன்படும் என்று சொன்ன முத்துக்குமாரின் வாக்குத்தான் பலித்தது. இன்றைய இளைஞரின் நாடித் துடிப்பை உணர்ந்த அந்தப் படைப்பாளி அந்தப் பாதையிலேயே வெற்றிகரமாக நடைபோட்டார்.

எழுத்தாளர் சுஜாதாவின் கவனத்தை ஈர்த்து அடையாளப்படுத்தப்பட்ட நா.முத்துக்குமார்,

இயக்குநர் சீமானின் “வீர நடை” படத்திற்காக முதன் முதலில் பாடலை எழுதியவர். திரையிசைப் பாடலாசிரியராகக் கிட்டிய அறிமுகத்தை நிரூபிக்கக் “காதல் கொண்டேன்” படத்தின் வெற்றி உறுதுணை புரிந்தது. தொடர்ந்து அதே வெற்றிக் கூட்டணி இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார்கொடுத்த “7G ரெயின்போ காலனி” பாடல்கள் மேலும் அவரின் புகழுக்கு மகுடம் வைத்தது.

ஒரு வருடத்தில் அதிக பாடல்களை எழுதும் பாடலாசிரியர், ஒரே படத்தில் எல்லாப் பாடல்களையும் அதிகம் எழுதிய பாடலாசிரியர் போன்ற சிறப்பு கண்ணதாசன், வாலி, வைரமுத்து காலத்துக்குப் பின் இவருக்கே கிட்டியது.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் போய்ச் சேர்ந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்பின்னர் பாடலாசிரியராகத் தன்னை நிலை நிறுத்திய பின்னர் அதிலேயே மிகுந்த கவனமெடுத்தார். பொது வாழ்வில் தூய இலக்கியத்தை நேசிக்கும் படைப்பாளியாகப் புத்தக விழாக்களிலும், வெகுஜனப் பத்திரிகைகளில் தன் சுய வரலாறோடு இலக்கியம் சமைத்தார்.

புதிய தலைமுறை இசையமைப்பாளர்கள் பலரின் முக்கியமான பாடல்களில் நா.முத்துக்குமார்இருக்கிறார். “உனக்கென இருப்பேன்” என்று காதல் படத்தில் ஜோஷ்வா ஶ்ரீதர் இசையிலும், “சுட்டும் விழிச் சுடரே” என்று கஜினியில் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் இசையிலும் என்று சில சோறு பதம், இன்னும் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார் போன்றோரின் எண்ணற்ற படங்களின் வெற்றிப்பாடல்களில் இவரின் பங்கைக் காணலாம். கடந்த தசாப்தத்தின் தலை சிறந்த திரையிசைப் பாடல்களைப் பட்டியலிட்டால் கை கொள்ளாத அளவுக்கு நிரம்பவும் பாடல்களைக் கொடுத்த சிறப்பைப் பெற்ற நா.முத்துக்குமார் வெறுமனே இளைய சமுதாயத்தின் காதலுணர்வின் வெளிப்பாடுகளை மட்டும் கொடுத்தாரில்லை. “கற்றது தமிழ்”, “தங்க மீன்கள்” போன்ற கருத்தாழம் மிக்க படைப்புகளையும் தன் பாடல் வரிகளால் சுமந்தார்.

“ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற “தங்க மீன்கள்” படப் பாடலுக்கும், “அழகே அழகே” என்ற “சைவம்” படப் பாடலுக்கும் தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிரிவுத் துயரை “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” (தங்க மீன்கள்), “நினைத்து நினைத்துப் பார்த்தால் (7ஜி ரெயின்போ காலனி) என்றும் அவர் எழுதிய பாடல்களை நண்பர்கள் நினைத்து துயருறும் போது எனக்கோ மனதின் ஓரத்தில் இருந்து “பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்” என்ற பாடலே ஒலித்து அவர் நினைப்பையெழுப்பிக் கொண்டிருந்தது.

அது “சத்தம் போடாதே” படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைத்து நேகா பேசின் பாடிய பாட்டு. நா.முத்துக்குமாரின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட இயக்குநர் வஸந்த்

“அண்ணா! இந்தப் பாட்டைக் கேட்ட ஒரு பெண் தன் தற்கொலை எண்ணத்தைக் கை விட்டுவிட்டாள்” என்று நா.முத்துக்குமார் மகிழ்ச்சியோடு சொன்னதைச் சொல்லி நெகிழ்ந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா இசைத்த மெல்லிசை கொண்ட பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவை சோகப் பாடல் மட்டுமன்றி சந்தோஷப் பரிமாறலாக இருந்தாலும் கூட மெல்லிய சோகம் இழையோடுவது போல உணர்வேன். இன்னும் சொல்லப் போனால் இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் இந்த மாதிரி மென் சோகம் கலந்த பாடல்களைக் கொடுப்பதில் யுவனைத் தாண்டி யாரையும் நான் சிந்தித்ததில்லை. அவருக்குக் கூடத் தனிப்பட்ட ரீதியில் இம்மாதிரிப் பாடல்கள் துள்ளிசையை விட ஆத்ம லாபம் பொருந்தியதாக உணரக் கூடும்.

ஒரு இசையமைப்பாளரின் இசைத்துடிப்பறிந்து அதற்கு ஆத்மார்த்தமான வார்த்தை அர்த்தம் கற்பிக்கும் பாடலாசிரியர் வரம். இப்படியாக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நா.முத்துக்குமாரும் வாய்த்தார்

“பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்” இந்தப் பாடலைக் குறித்த காட்சிக்கான களப்பாடலாக மட்டுமன்றி இதையே தனித்து நம் உணர்வின் பரிமாறலாகத் திரை தாண்டி உணர முடிகின்ற வரிகள். அந்த வரிகளை நோகாமல் அணைத்து வருடும் இசை ஆறுதல் மொழி சொல்கிறது. இந்த மாதிரிப் பாட்டெல்லாம் வெறும் வணிகச் சரக்கிற்கான கூட்டணி அல்ல உணர்வுகளின் சங்கமம்.

நாற்பதோடு தன் காலக் கணக்கு முடியுமென்றே நினைத்து எழுதிக் குவித்து விட்டானோ இவன் எனுமளவுக்கு கொடுத்து விட்டுப் போய் விட்டார் முத்துக்குமார்.

அமர்ந்து பேசும்

மரங்களின் நிழலும்

உன்னை கேட்கும்

எப்படிச் சொல்வேன்

உதிர்ந்து போன மலரின் மௌனமா…..?

கானா பிரபா

14.08.2018

சிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை

“ஐயா! ராஜா சார் ஐ வச்சு ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை சிட்னியில் நடத்தத் திட்டம் போட்டிருக்கிறன். சிட்னி சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா தான் இசை. எல்லாம் பேசியாச்சு. ராஜா சாரும் ஒத்துக் கொண்டுட்டார். அடுத்த வருஷம் நடக்கப் போகுது”

2008 ஆம் ஆண்டில் ஒரு நாள் நண்பர் கதிரிடமிருந்து எனக்கு வந்த தொலை பேசிச் சம்பாஷணை அது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தோடு இந்த இசை நிகழ்ச்சியும் புதைந்து போனது. தொடர்ந்த இளையராஜாவின் உலக இசைச் சுற்றுலாக்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டதோடு அப்போது அது ஓய்ந்து விட்டது.

கதிர் வானொலி நேயராகவும், இளையராஜாவின் வெறி பிடித்த ரசிகராகத் தான் எனக்கு அறிமுகமானார்.

2013 ஆம் ஆண்டு மீண்டும் பழைய பல்லவியோடு இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு மீண்டும் அச்சாரம் போட்டார். அதற்குள் தொலைக்காட்சி ஆதிக்கம் புலம்பெயர் சூழலில் வந்ததால் மக்கள் இசை நிகழ்ச்சி போய்ப் பார்க்கும் எண்ணிக்கை குறைய ஆரம்பிப்பதை எச்சரிக்கையோடு சொல்லி வைத்தேன். ஆனால் இம்முறை ராஜாவின் இசைக்குழுவை அழைப்பதாகவும் மெல்பர்னிலும் நிகழ்ச்சிக்கு ஒழுங்கமைப்பதாகவும் சொன்னார்.

“ராஜா சார் இங்கு வந்ததும் அவரை நீங்கள் தான்

கொண்டு திரியோணும்” என்பார்.

அவரின் நோய் ஒருபக்கம், நிதி நெருக்கடி இன்னொரு பக்கம் என்று ஏகப்பட்ட சவால்கள். நிகழ்ச்சி இன்னொரு தடவை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் இம்முறை மெல்பர்னில் மட்டும் என்ற நிலை வந்தது. MKS நிறுவனம் ஆபத்பாந்தவனாகக் கைகொடுத்ததை மறக்க முடியாது.

நான் தனியாக மெல்பர்ன் பயணித்து ஹோட்டலில் தங்கி ராஜாவின் இசை நிகழ்ச்சி பார்த்து முடித்து விட்டுத் திரும்பினால் நண்பர் ரோனியோடு கதிர். ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு என்னவெல்லாம் சவால்கள் வந்தனவோ அவற்றையெல்லாம் முறியடித்தும் சிட்னியில் நிகழ்ச்சி நடத்த முடியாத கவலையே அவரின் முற்றிய நோயைத் தாண்டித் தெரிந்தது. MKS உரிமையாளரின் மகன் கதிரிடம் அன்பாகப் பேசியது மன நிறைவாக இருந்தது அப்போது.

“ஐயா நான் வெளிக்கிடப் போறேன்”

என்று கதிர், ரோனியிடம் விடை பெற்ற போது

“எப்பிடி ஐயா போகப் போறீங்கள்?” – கதிர்

“Taxi ல போறன்”- நான்

“சும்மா விசர்க்கதை கதையாமல் எங்கட காரிலை வாங்கோ”

என்று சொல்லி விட்டுத் தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் எதிர்த்திசையில் இருந்த என் ஹோட்டலுக்கு அழைத்துப் போனார். கார் ஓடிக் கொண்டிருக்கும் போது வழியில் அவருக்கு மூச்சு முட்டியது. ஓரமாகக் காரை நிறுத்தினார்.

“ஐயா கும்பிட்டுக் கேக்கிறன் நீங்கள் ரெண்டு பேரும் ஹொஸ்பிட்டலுக்கு உடனை போங்கோ”

என்ற எனக்குக் கை காட்டி அமைதியாக இருக்க வைத்து விட்டு கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திவிட்டு என்னை என் ஹோட்டலில் விட்டுவிட்டுத்தான் தன் இருப்பிடம் போனார். அடுத்த நாள் அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் இருந்து தான் சிட்னி திரும்பினார். நண்பர் ரோனி உடனிருந்து உதவினார்.

2015 ஜனவரியில் நோயின் பிடியில் இருந்து தன்னைக் காப்பாற்ற முடியாமல் காலமாகிப் போனார் அன்பு நண்பர் கதிர்.

இப்படியாக இரண்டு முறை கலைந்து மூன்றாவது முறையாகத் தான் முதன்முறையாகச் சாத்தியப்பட்டிருக்கிறது இன்று நிகழ்ந்த சிட்னியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி.

“உங்க பாட்டைக் கேட்டு வளர்ந்தவங்க நாங்க,

இன்று கன்பெராவில் இருந்து இந்த நிகழ்ச்சிக்காக

சிட்னிக்குக் காரில் வருமபோது என் மகன்

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு பாடிக்கிட்டே

வந்தான். அவன் பிறக்கறதுக்கு முன்னாடி வந்த

பாட்டைக் கூட அவனைப் போல குழந்தைகளையும் ரசிக்க வைக்கிற அளவுக்கு நீங்க கொடுத்த இசை அமைஞ்சிருக்கு” என்று நேற்று இளையராஜாவோடு ரசிகர்களின் சந்திப்பில் ஒரு அன்பர் நெகிழ்ந்து பேசிய போது

“உங்க குழந்தை கருவில் இருந்தே என் பாட்டைக் கேட்டிருக்கு” என்று இசைஞானி இளையராஜா முறுவலோடு பேசினார்.

சிட்னியில் இசை நிகழ்ச்சி நடந்தாலும் அவுஸ்திரேலியாவின் மற்றைய பாகங்களில் இருந்தும் இசைஞானியின் ரசிகர்கள் வந்திருந்தார்கள். அடலெய்டில் இருந்து என் சென்னை நண்பர் பிரசன்னாவின் நண்பர் கூட ராஜா சந்திப்பில் என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திப் பேசினார்.

சிட்னியின் நவீன அரங்கு Hillsong Convention Centre இல் அரங்கம் திரண்ட கூட்டத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது.

“இசைஞானியின் வேண்டுகோளுக்கிணங்க கலைஞர் கருணாநிதிக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்துவோம், ஒரு நூற்றாண்டு வாழ்ந்தவர் நம்ம கலைஞர் இன்னும் பல நூற்றாண்டுகள் பேசப்படுவார்” என்ற உரையோடு நடிகர் பிரகாஷ்ராஜ் அறிமுகமானார்.

இந்த நிகழ்ச்சியின் பிரதம விருந்தினர் சக அறிவிப்பாளர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்

“விடுமுறைக்காக மகனுடன் வந்தேன் இன்று இந்தியா கிளம்ப இருந்தது ஆனால்

என்னுடைய வாழ்க்கையில் ஒன்று கலந்த இசைஞானி இளையராஜாவின் இசையை உங்களோடு ஒருவனாக இருந்து பார்க்கப் போகிறேன்” என்று சொன்னவர்

அந்த உரையோடு அப்படியே போய் விட்டார்.

இந்த இசை நிகழ்ச்சிக்காக வர இருந்த கார்த்திக் ராஜா மட்டுமன்றி கடந்த முறை மெல்பர்னில் 70 க்கும் மேற்பட்ட வாத்தியக்காரர்களின் அணிவகுப்போடு நடந்தது இம்முறை கால்வாசிக்கும் குறைவான வாத்தியக்கார்களோடே நிகழ்ச்சி நடந்தேறியது.

நெப்போலியன் (எ) அருண்மொழின் புல்லாங்குழல், பிரபாகரின் வயலின், தபேலா சுந்தர், இவர்களோடு செல்லோவுடன் குன்னக்குடி வைத்திய நாதனின் மகன் என்று ஒரு சில அறியப்பட்ட முகங்கள் தான்.

இசைஞானி இளையராஜா தன் முத்திரைப் பாடலான “ஜனனி ஜனனி” பாடலோடு ஆரம்பித்து வைக்க, ஓம் சிவோஹம் பாடலோடு களத்தில் இறங்கினார் மது பாலகிருஷ்ணன். விஜய் பிரகாஷுக்கு மாற்றுக் குறையாதவராக மதுவும் தன் மதுக்குரலால் கட்டி வைத்தார்.

கடந்த 2013 மெல்பர்ன் இசை நிகழ்ச்சியில் பாடிய பாடல்களைத் தவிர்த்துப் பாட வேண்டும் என்று கங்கணம் கட்டியிருப்பார்கள் போல, ஒரு சில பாடல்களைத் தவிர்த்து மீதி எல்லாம் சிட்னி மேடைக்கு மட்டுமல்ல ஆஸி மேடைக்கும் புதிதாக எடுத்து வந்திருந்தார்கள்.

மனோ, சித்ரா இருவரும் இளையராஜா மேடைகளில் தவறாது இடம்பெறும் நட்சத்திரப் பாடகர்கள். ஆனால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை மனோவுக்கு வாரி வழங்கியதால் மனோவுக்கான தனித்துவமான பாடல்கள் மட்டுமல்ல மனோ & சித்ரா இருவரும் ஜோடி கட்டிய பாடல்களில் ஒன்றிரண்டைக் கொடுத்திருந்தால் கலக்கியிருக்கும். உதாரணத்துக்கு செண்பகமே செண்பகமே, மதுர மரிக்கொழுந்து வாசம், ஒரு மைனா மைனாக் குருவி இதையெல்லாம் எதிர்பார்த்தேன்.

தமிழ் ரசிகர்களோடு தெலுங்கு, மலையாளம், கன்னட ரசிகர்களும் சேர்ந்து கொண்டதால்

தெலுங்கு வேணும் என்று கத்திய கூக்குரலளார்களுக்காக “ஓ ப்ரியா ப்ரியா” பாட்டைப் பாதியாகப் பிரித்துத் தெலுங்கு, தமிழ் என்று மனோ, சித்ரா பாடிய போது கிட்டிய அரங்கில் கெலித்த கரகோஷமே இவ்விருவர் கூட்டணிப் பாடல்களை என்னைப் போலவே பலரும் எதிர்பார்த்தது போல அசரீரியாகக் கொட்டியது.

“ஓகோ மேகம் வந்ததோ” பாடலைக் கூட்டுக் குரல்களுடன் பாடிய சித்ரா ஒரு ஜீவன் அழைத்தது, பூமாலையே தோள் சேரவா போன்ற பாடல்களை ராஜாவோடும்

மனோவோடு ராத்திரியில் பூத்திருக்கும், சுந்தரி கண்ணால் ஒரு சேதி ஆகியவற்றையும் பாடியவர் மது பாலகிருஷ்ணனோடு சேர்ந்து “கல்யாணத் தேனிலா” பாடலையும் கொடுத்திருக்கலாமே என்று வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி ஏங்கியது?

“மடை திறந்து தாவும் நதியலை நான்” என்று கூட்டுக் குரல்கள், பக்கவாத்தியத்தோடு

தனித்துப் பாடிய மனோவுக்குக் கிட்டிய இன்னொரு தனிப்பாட்டு வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள். ஏஞ்சோடி மஞ்சக்குருவி பாடல் மனோவுக்கு அச்சொட்டாகப் பொருந்தி அவரின் குரல் ஜாலத்தைக் காட்டியது.

மனோவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல் என்றால் மது பாலகிருஷ்ணனுக்கு ஜேசுதாஸ் என்று கணக்குப் போட்டு ஒலித்தது “பூவே செம்பூவே” பாட்டு. இந்தப் பாட்டை நேரே மேடையில் பார்க்கும் போது அந்த வயலின்களின் ஜாலத்தையும், அருண்மொழி அவர்கள் மாறி மாறி வெவ்வேறு ஒலியெழுப்பும் புல்லாங்குழல்களையும் பயன்படுத்துவதைப் பார்ப்பதே உன்னதமானதொரு அனுபவம்.

இதோ எஸ்.பி.பி, ஜேசுதாஸ் கணக்கில் மலேசியா வாசுதேவனுக்காகப் பாடகர் முகேஷ் ஐயும் சேர்த்தாச்சு. “நீயும் சிட்னியை விடுறதாயில்ல சிட்னியும் உன்னை விடுறதா இல்லை” என்று ராஜாவின் கிண்டலுக்கு ஆளானார் அடிக்கடி சிட்னி வந்து இசை நிகழ்வில் பங்கேற்கும் பாடகர் முகேஷ். “பூவே இளைய பூவே” உடன் தொடங்கினார். கட்டவண்டி கட்டவண்டி பாடலில் மீண்டும் மலேசியா வாசுதேவன் ஆனார் முகேஷ்.

“சுர்முகி என்றால் ஸ்வரத்தை அழகாகப் பிரதிபலிப்பவள்” என்று ராஜாவால் புகழப்பட்ட

பாடகி சுர்முகி “குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே” பாடிய போது அந்த வேகப்பாட்டு படத்தின் இன்னொரு வடிவமான மெதுவாக நகரும் பாட்டையே நினைவுபடுத்தியது.

தான் பாடிய பாடல்களை இன்னொருவர் நகலெடுத்துக் கூடப் பாட முடியாத அளவுக்குப்

பாடி விட்டுச் சென்றிருக்கிறார் ஸ்வர்ணலதா என்று மனதுக்குள் அந்தக் குயிலை நினைத்து ஏங்க வைத்தது.

குயில் பாட்டில் விட்டதைப் பிடித்து ராஜாவின் ஸ்பெஷல் பாராட்டையும் பெற்றார் “இதயம் ஒரு கோவில்” பாடலின் ஆரம்ப எஸ்.ஜானகி ஆலாபனையிலும், சின்னப்பூ சின்னப்பூ (ஜப்பானில் கல்யாணராமன்) பாட்டிலும் பாடகி சுர்முகி.

“இளம்பனி துளிர் விடும் நேரம்” (ஆராதனை) பாடலை சூப்பர் சிங்கர் ஶ்ரீஷா பாடிய போது இந்தப் பாட்டை முன்னர் கேட்டதில்லையே என்று காதில் கிசுகிசுத்தார் ராஜாவின் தீவிர இசை வெறியர் என் நண்பர். “ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது” ஶ்ரீஷா சக சூப்பர் சிங்கர் கூட்டாளி உருக வைத்தார்கள்.

சூப்பர் சிங்கர் கெளசிக், மது ஐயரோடு “ஓ வசந்த ராஜா” பாடினார்.

பாடகர் நாராயணன் கூட்டாக “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே” என்று தனித்தும், “அட மச்சமுள்ள மச்சான்” பாடலுக்கெல்லாம் சிறப்புக் குரலாகவும் கலந்து கட்டினார்.

“ஆசை அதிகம் வச்சு” பாடலின் இடையிசையில் ஒலிவாங்கி கோளறு பதிகம் பாடவே ராஜாவோ விடாப்பிடியாக மூன்று சுற்றுத் திருத்தி, திருந்திய ஒலியமைப்போடு நெப்போலியனின் வாத்தியப் பகிர்விலிருந்து தொடர வைத்தார். அதுதான் ராஜா.

“பூங்கதவே தாழ் திறவாய்” (சாய் விக்னேஷ் & மது ஐயர்) பாடலில் வரும் நாதஸ்வர ஒலியை இப்போ கீபோர்டில் வாசித்தவர் மேனுவேல் என்று அறிமுகப்படுத்திய ராஜா, இந்தப் பாடலில் வரும் கிட்டார் இசையை கீபோர்ட்டில் இப்ப வாசித்தவர் பரணி என்று இன்னொன்றிலுமாக இருவரையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் கீபோர்காரர் இருந்த பக்கம் வாஸ்து சரியில்லைப் போல ஒலி வாங்கிகள் அடிக்கடி குழம்பிப் போய் ராஜாவையும், நெப்போலியனையும், பிரபாகரையும் நகம் கடிக்காத குறையாக டென்ஷன் படுத்தியது. இசைஞானியின் பாடல்கள் வாத்தியப் பங்களிப்போடு அதிகமிருப்பதால் சென்னையில் பழக்கப்படுவது போல மற்றைய இடங்களில் இசை நிகழ்ச்சி படைக்கும் போது ஒலி அமைப்பு செய்வது பெரும் சவால். அதைச் சமாளித்து அதிக நெருடல் இல்லாமல் தொடர்ந்தது சிறப்பு.

“எதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே” பாடலுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கு சொல்லவா? என்று ராஜா கேட்க கூட்டமும் ஆமாம் வேண்டும் என்று கொட்டியது.

நான் மூன்றாவது வகுப்பில் படிக்கும் போது அண்ணன் பாஸ்கர் நாலாவது படிச்சிட்டிருந்தான். இருவரும் சேர்ந்து அப்போ “லைலா மஜ்னு” படம் பார்த்துட்டு மறுநாள் பள்ளிக்கூடம் போய்

லைலா, லைலா, லைலா என்று அண்ணன் பாஸ்கர் தன் நோட்டுப் புத்தகத்திலும், நான் என் நோட்டுப் புத்தகத்திலும் எழுதித் தள்ளி வாத்தியார்கிட்ட அடி வாங்கினோம். அப்போ நான் மஜ்னுவை விட லைலாவை அதிகம் காதலித்தேன். அதற்குக் காரணம் அந்தப் படத்துக்கு இசையமைச்ச சி.ஆர்.சுப்புராமன். தொடர்ந்து ராஜா பாடுகிறார்

“எனது உயிர் உருகும் நிலை” என்ற லைலா மஜ்னு படப் பாடலை. லைலா மஜ்னு மாதிரி எனக்கு ஒரு படம் வாய்க்காதா என்ற ஏக்கத்தில் கொடுத்த பாட்டுத்தான் “ஏதோ நினைவுகள்” பாட்டு. அதுக்காக அது காப்பி அல்ல, அந்த ஜீவனைப் பிரதிபலித்தது என் பாட்டு என்றவர் தொடர்ந்து

“ஏதோ நினைவுகள்” பாட்டை அப்போ சின்னப்பையனா இருக்கும் போது இசைமைச்சேன் இப்பவும் நான் சின்னப் பையன் தான் இளையராஜா ஆச்சே என்று குறும்பாகப் பேசியவர் இதே மாதிரி நிறைய அனுபவங்களோடு ஒரு ஆர்மோனியம், ராஜாங்கிற பையன், சிட்னி சிம்பனி, நம்ம குழுவினரோடு சிட்னி ஒபரா ஹவுசில் எதிர்காலத்தில் இன்னொரு நிகழ்ச்சியும் நடத்திட்டாப் போச்சு என்று ஆசையைத் தூண்டி விட

நாராயணன் வந்து “ராஜா கைய அது ராங்கா போனதில்லே” என்று பாட ஆரம்பித்தார்.

இதற்கு முன்னரும் இசைஞானியின் இசை நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு நேற்றைய ரசிகர் சந்திப்பிலும் இன்றைய இசை நிகழ்ச்சியிலும் அவர் வழக்கத்துக்கு மாறாகக் கிண்டல், ஜாலி, குதூகலத்தோடு மனம் விட்டுப் பேசியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சி தொடங்கும் போதே “நீங்க எங்களைப் பார்க்கிறது மாதிரி நாங்களும் ஒருவாட்டியாவது உங்களைப் பார்க்கணுமே லைட்டப் போடுங்க” என்று கட்டளை இட்டு விட்டு அரங்கத்தைப் பார்த்துக் கையசைத்தார்.

“அவதாரம் அவதாரம்” என்று கேட்ட கூக்குரல்களுக்கு

“என்னது நான் அவதாரமா ஆமா அவதாரம் தான்” என்று எள்ளல் வைத்து விட்டு

“தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ” என்று ஒரு சில வரிகளைப் பாடினார்.

கன்னடா, தெலுங்கு தெலுங்கு என்று கத்திக் கொண்டிருந்தவர்களுக்கு

“நீங்க McDonald’s போன்ற Fast food கடைகளுக்குப் போனா அங்க சமைச்சு வச்சதைத் தானே கொடுப்பாங்க அது மாதிரித் தான். நான் நீங்க கேட்கிறதைக் கொடுக்க மாட்டேன் நான் சமைச்சு வச்சிருக்கிறதைத் தான் கொடுப்பேன்” என்று கிண்டலடிக்க அரங்கம் கொல்லென்று சிரித்தது.

ஒரு மேல் (male) பாட்டை நாங்க பாடப் போறோம் என்று பாடகிகள் சொல்ல

“நான் போட்டதெல்லாம் மேல் தான்” என்று கிடுக்குப் பிடியோடு உரையாடல்,

தொடர்ந்து “பொதுவாக என் மனசு தங்கம்” பெண்கள் குரலில்.

“எத்தனை கேரட்?” மீண்டும் ராஜா ?

“பூமாலையே தோள் சேரவா” பாடலைப் படித்து விட்டுச் சிரித்தவர்

“சில பாடல்களைப் பாடும் போது சிரிப்பா இருக்கும் என்ன ஒரு அர்த்தமும் இல்லாம எழுதி வச்சிருக்காங்களேன்னு. இதிலும் கூட “கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்” அப்படின்னு வரும். எழுதினது என் தம்பி தான். இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன், “அது இசையோட பாடிப் பாருங்க அர்த்தம் வரும்” என்று மழுப்பிட்டான்.

டைரக்டர் வந்து பாடல் பதிவுக்கு மூணு நாளைக்கு முன்பே டியூன் வாங்கிடுவாங்க அப்பதான் பாடலாசிரியர் பாட்டு எழுத வசதின்னு. ஆனா இவங்க என்னடான்னா ஜீவானந்தம் பார்க்ல இருந்து ஊர்ல இருக்குற எல்லா பார்க்கும் தேயத் தேய நடந்து நடந்து யோசிச்சு, பிரசாத் ஸ்டூடியோ எல்லாம் நடந்து இப்பிடியாகப்பட்ட வரிகளைக் குடுப்பாங்க என்று சொல்லி விட்டு இதை நான் தப்பாகச் சொல்லல நான் ஓகே பண்றதுக்காக அவங்க எடுத்துக்கிற முயற்சி என்று முத்தாய்ப்பு வைத்தவர், வாலி ஒருத்தர் தான் அரை மணி நேரத்துல தன் வேலையை முடிச்சுக் குடுத்துட்டுக் கிளம்பிடுவார் என்றும் மெச்சினார்.

ஒரு ரஜினி ரசிகனோ கமல் ரசிகனோ அல்லது விஜய், அஜித் என்று தலைமுறை தாண்டி அவரவர்க்கு ஒரு ரசிகர் வட்டமிருக்கும். ஆனால் என் போன்றவர்களுக்கு இவர்கள் எல்லோருமே பொது, ராஜா என்பதே மையம். அதனால் தான் இந்த இசை நிகழ்ச்சியை என்னால் அணு அணுவாக ரசிக்க முடிந்தது.

நேற்றுக்காலை ஒன்பது மணிக்குப் பாடகர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தவர் மாலை ஏழரை தாண்டித் தான் ரசிகர்களைச் சந்தித்தார். அதுவரை ஒத்திகை தான்.

இன்றைய இசை நிகழ்ச்சியிலும் நான்கு மணி நேரங்கள் கடந்து ‪தொடர்ந்து ஒரு சொட்டு நீர் அருந்தாது நின்று கொண்டே தன் ஆர்மோனியத்தருகே கண்டிப்பான வாத்தியாராக, அரங்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு அறுசுவை படைத்தார் இந்த ‪எழுபத்தைந்தைத்‬ தொட்ட முது பெரும் ஆளுமை.

இவருக்குப் பின் இப்படியொரு கடின உழைப்பாளியை நாம் காணப் போவதில்லை என்றே நிகழ்ச்சி முடியும் வரை என் மனது சொல்லிக் கொண்டிருந்தது.

இசைஞானி இளையராஜாவை பிரமிப்போடு ‪இன்னொரு முறை‬ நேரில் கண்டு தரிசித்ததே என் வாழ்நாள் தவம்.

கானா பிரபா

11.08.2018

என்றென்றும் சின்னக்குயில் சித்ரா ? 55 ❤️❤️❤️

இன்று பின்னணிப் பாடகி, சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம். சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய், எண்ணற்ற பாடல்களால் நெருக்கமாய் இருப்பது. அதனால் தானோ என்னமோ சித்ராவின் பாடல்களைப் பட்டியல் போடும் போது “கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியே” என்று அவரே பாடும் பாடல் போல மணி மணியாய்ப் பல பாடல்கள் வந்து விழுகின்றன.

இசைஞானி இளையராஜாவின் இசையில் சித்ராவின் தனிப் பாடல் திரட்டை கடந்த பிறந்த தினத்தில் கொடுத்திருந்தேன். இங்கே

சின்னக்குயில் சித்ரா 54 🌷🌼இசைஞானி இளையராஜா இசையில் 🎸🥁🎺இன்று சின்னக் குயில் சித்ரா தனது 54 வது பிறந்த நாளைக்…

Posted by Kana Praba on Wednesday, July 26, 2017

இம்முறை கொடுப்பது சித்ரா ஜோடி கட்டிப் பாடும் காதல் பாடல்கள். ஒரே படத்தில் இரு பாடல்கள் இருக்கும் பட்சத்திலும், அல்லது பட்டியலில் 55 ஐத் தாண்டியவற்றையும் விடுபட முடியாமல் போனஸ் பாடல்களாகக் கொடுக்கிறேன்.

1. கல்யாணத் தேனிலா – மெளனம் சம்மதம்

2. பூஜைக்கேற்ற பூவிது – நீதானா அந்தக் குயில்

3. மலரே பேசு மெளன மொழி – கீதாஞ்சலி

4. வா வா அன்பே அன்பே – அக்னி நட்சத்திரம்

5. ஓ ப்ரியா ப்ரியா – இதயத்தைத் திருடாதே

6. மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ – பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

7. ஆத்தாடி ஏதோ ஆசைகள் – அன்புச் சின்னம்

8. காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ – இந்திரன் சந்திரன்

9. நீ ஒரு காதல் சங்கீதம் – நாயகன்

10. வா வா வா கண்ணா வா – வேலைக்காரன்

11. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது – பணக்காரன்

12. மீனம்மா மீனம்மா – ராஜாதி ராஜா

13. அடிச்சேன் காதல் பரிசு – பொன்மனச் செல்வன்

14. நேத்து ஒருத்தரை ஒருத்தரு பார்த்தோம் – புதுப்பாட்டு

15. பாராமல் பார்த்த நெஞ்சம் – பூந்தோட்டக் காவல்காரன்

16. மாலைகள் இடம் மாறுது – டிசெம்பர் பூக்கள்

17. செம்பூவே பூவே – சிறைச்சாலை

18. தேகம் சிறகடிக்கும் ஹோய் – நானே ராஜா நானே மந்திரி

19. இந்த மான் உந்தன் சொந்த மான் – கரகாட்டக்காரன்

20. ஒரு நாள் நினைவிது பல நாள் கனவிது – திருப்புமுனை

21. சித்திரை மாதத்து நிலவு வருது – பாடு நிலாவே

22. சங்கத்தமிழ்க் கவியே – மனதில் உறுதி வேண்டும்

23. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ – சிறையில் பூத்த சின்ன மலர்

24. பொன்னெடுத்து வாறேன் வாறேன் – சாமி போட்ட முடிச்சு

25. கண்மணி கண்மணி – சத்யவான்

26. மலையோரம் மயிலே – ஒருவர் வாழும் ஆலயம்

27. நீ போகும் பாதையில் – கிராமத்து மின்னல்

28. கம்மாக்கரை ஓரம் – ராசாவே உன்ன நம்பி

29. ஓர் பூமாலை – இனிய உறவு பூத்தது

30. திருப்பாதம் பார்த்தேன் – மனித ஜாதி

31. இரு விழியின் வழியே – சிவா

32. சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி – என்னப் பெத்த ராசா

33. பூவும் தென்றல் காற்றும் – சின்னப்பதாஸ்

34. மாலை நிலவே – பொண்ணுக்கேத்த புருஷன்

35. குருவாயூரப்பா – புதுப் புது அர்த்தங்கள்

35. சொர்க்கத்தின் வாசற்படி – உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

36. ஊருக்குள்ள உன்னையும் பத்தி – நினைவுச் சின்னம்

37. அழகிய நதியென – பாட்டுக்கொரு தலைவன்

38. வெள்ளிக் கொலுசு மணி – பொங்கி வரும் காவேரி

39. ராஜனோடு ராணி வந்து – சதி லீலாவதி

40. ஹேய் ஒரு பூஞ்சோலை ஆளானதே – வாத்தியார் வீட்டுப் பிள்ளை

41. சோலை இளங்குயிலே – அண்ணனுக்கு ஜே

42. பூங்காற்றே இது போதும் – படிச்ச புள்ள

43. நானென்பது நீயல்லவோ – சூரசம்ஹாரம்

44. வா வா வஞ்சி இளமானே – குரு சிஷ்யன்

45. கரையோரக் காத்து – பகலில் பெளர்ணமி

46. இதழில் கதை எழுதும் – உன்னால் முடியும் தம்பி

47. விழியில் புதுக் கவிதை – தீர்த்தக் கரையினிலே

48. காதலா காதலா – தாய்க்கு ஒரு தாலாட்டு

49. குயிலே குயிலே – ஆண் பாவம்

50. சோலை இளங்குயில் – காவலுக்குக் கெட்டிக்காரன்

51. தென்றல் தான் திங்கள் தான் – கேளடி கண்மணி

52. சிந்துமணி புன்னகையில் – நீ சிரித்தால் தீபாவளி

53. ஆராரோ பாட்டுப் பாட – பொண்டாட்டி தேவை

54. மழை வருது மழை வருது – ராஜா கைய வெச்சா

55. தென்றல் வரும் தெரு – சிறையில் சில ராகங்கள்

போனஸ்

1. ஒரு ஜீவன் அழைத்தது – கீதாஞ்சலி

2. நிக்கட்டுமா போகட்டுமா – பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

3. நூறு நூறு முத்தம் – இந்திரன் சந்திரன்

4. என்னுயிரே வா – பூந்தோட்டக் காவல்காரன்

5. ஆலோலங்கிளித் தோப்பிலே – சிறைச்சாலை

6. கண்ணா வருவாயா – மனதில் உறுதி வேண்டும்

7. வைகாசி மாசத்துல – நினைவுச் சின்னம்

8. நீலக்குயிலே – சூரசம்ஹாரம்

9. ஜிங்கிடி ஜிங்கிடி – குரு சிஷ்யன்

10. கை பிடித்து கை அணைத்து – சிறையில் சில ராகங்கள்

11. அன்பே நீ என்ன – பாண்டியன்

12. ஊரோரமா ஆத்துப் பக்கம் – இதயக் கோவில்

14. ஓடைக்குயில் ஒரு பாட்டு – தாலாட்டு பாடவா

15. ஒரு ஆலம்பூவு இலந்தம் பூவைப் பார்த்ததுண்டா – புண்ணியவதி

16. நான் ஒன்று கேட்டால் தருவாயா – இளைய ராகம்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சின்னக்குயில் சித்ராவுக்கு

கானா பிரபா

27.07.2018

கவிஞர் வாலியின் பாடல்களோடு சிறு பயணம் ⛳️

“நன்றி சொல்லவே உனக்கு

என் மன்னவா வார்த்தை இல்லையே

தெய்வம் என்பதே எனக்கு

நீயல்லவா வேறு இல்லையே”

இன்று அதிகாலைப் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு காரில் உட்கார்ந்த போது எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும் போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் பிறந்த நாள் அவர் எழுதிய பாடல் முக விசேடம்.

கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,

தான் ஒரு படைப்பாளி நான் என்னுடைய நிலையில் இறங்கி வரமாட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார், அதே சமயம் கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார்.

அதனால் தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டபட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும்

“நன்றி சொல்லவே உனக்கு

என் மன்னவா வார்த்தை இல்லையே”

பாடலும் பிடிக்கும்,

அதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும்

“சின்ன ராசாவே…..

சித்தெறும்பு என்னைக் கடிக்குது”

பாட்டும் பிடிக்கும் இரண்டுமே வாலி தான் இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார்.

“அந்த நாள் ஞாபகம்

நெஞ்சிலே வந்ததே வந்ததே

நண்பனே…..”

என்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்

எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கொடுத்தவர் தான்,

“நிலவிடம் வாடகை வாங்கி

விழி வீட்டினில் குடி வைக்கலாமா

நாம் வாழும் வீட்டுக்குள்

வேறாரும் வந்தாலே தகுமா…..”

என்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” இற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி சமைஞ்சது எப்படி” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.

“டாலாக்கு டோல் டப்பி மா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் ? போடுவது வாலியின் பண்பு.

ஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும்.

எப்படி ஒரு அழுத்தமான சூழலில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப்

பார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார். இயக்குநர் கதிர் – இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால் தான் நமக்கும்

“யாப்போடு சேராதோ

பாட்டு தமிழ்ப் பாட்டு

தோப்போடு சேராதோ

காற்று பனிக்காற்று….”

என்று இதயத்திலும்

“ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்

அன்பே உன் பேரைச் சிந்தித்தால்

தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்

கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்

நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்

உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..”

என்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது.

“அன்னமிடும் கைகளிலே

ஆடிவரும் பிள்ளை இது

உன்னருகில் நானிருந்தால்

ஆனந்தத்தின் எல்லையது

காயத்ரி மந்திரத்தை

உச்சரிககும் பக்தனம்மா

கேட்கும் வரம் கிடைக்கும் வரை

கண்ணுறக்கம் மறந்ததம்மா”

தாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி – இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை

“தாமரை மேலே நீர்த்துளி போல்

தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே வாழ்வதற்கு

மாலையும் மேளமும் தேவையென்ன?”

என்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில்

“நிலவினை நம்பி இரவுகள் இல்லை

விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை

ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…”

எனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது.

அபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில்

முழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம்.

கவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள்.

இன்னொரு பரிமாணமும் இருக்கிறது அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும்.

தாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத் தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி.

கானா பிரபா

18.07.2018

மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி M.L.V 90

“குயிலே உனக்கனந்த

கோடி நமஸ்காரம்

குமரன் வரக் கூவுவாய் நீ

குமரன் வரக் கூவுவாய்”

காற்றலைகளில் இந்தக் குரல் பரவும் போது கந்தவேள் கோட்டத்தில் நிற்குமாற் போலவொரு உணர்வு தெறிக்கும். அதுவும் அந்தப் பாடலை ஆரம்பிக்கும் போது தன்னுடைய சாஸ்திரிய முத்திரையோடே தொடங்குவார் எம்.எல்.வசந்தகுமாரி.

“காற்றினிலே……வரும் கீதம்….” என்று எம்.எஸ்.சுப்புலட்சுமி,

“நித்திரையில் வந்து

நெஞ்சில் இடம் கொண்ட

உத்தமனார் யார் தோழி….”

இது M.C.வசந்தகோகிலம்

இவர்களோடு,

“கொஞ்சும் புறாவே……

நெஞ்சோடு நெஞ்சம்

ஜெகமெங்கிணும் உறவாடிடும்

ஜாலம் இதேதோ….”

என்று M.L.வசந்தகுமாரியையும் சேர்த்தால் தமிழ்த் திரையிசை எவ்வளவு செழுமையோடு இயங்கியது என்பதை உதாரணம் பகிரும்.

திரைப்படங்களுக்கான இசை என்று வரும் போதே நாயகன், நாயகி பாடி நடிக்க வேண்டிய தேவை எழுந்த போது பாட்டுக்காரர்களே அரிதாரம் பூசிக் கொண்டார்கள். பின்னர் பின்னணிக் குரல் என்ற நிலை வந்த போதும் கூட சாஸ்திரிய இசைக்காரர்கள் அன்றும் இன்றும் தம் பங்களிப்பை நல்கி வருகிறார்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றே டி.கே.பட்டம்மாள், வசந்தகோகிலம் வரிசையில் எம்.எல்.வசந்தகுமாரியும் கணிசமானதொரு பங்களிப்பை நல்கியிருக்கிறார்.

தன்னுடைய தாய் லலிதாங்கியை முதற் குருவாகக் கொண்டவர் 11 வயதிலிருந்து தாயாரோடு மேடைக் கச்சேரிகளில் பங்கு கொண்டவர் தன் 13 வயதில் முதன்மைப்ப்பாடகியாக அரங்கேறினார். பிரபல பாடகர்

ஜி.என்.பாலசுப்ரமணியனின் வழிகாட்ட அவரின் இசையுலகம் பரந்து விரிந்தது.

இசைத்துறையில் சாதனைச் சரித்திரம் படைத்த வசந்தா என்ற வசந்தகுமாரிக்கு விருதுகளும் அங்கீகாரங்களும் கிட்டின. அதில் மிக முக்கியமாக “சங்கீத கலாநிதி” என்ற உயர் விருதை இளம் வயதில் பெற்ற பெண் பாடகி என்ற கெளவரம் அவரது 49 வது வயதில் வாய்த்தது.

எம்.எல்.வசந்தகுமாரி, விகடம் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை மணம் செய்து சங்கரராமன் மற்றும் ஶ்ரீவித்யா ஆகியோரைப் பெற்றெடுத்தார். ஶ்ரீவித்யா நடிகையாகவும், பாடகியாகவும் திரைத்துறையில் தன் பங்களிப்பை வழங்கினார். எம்.எல்.வசந்தகுமாரியின் வாரிசுகள் இருவருமே தற்போது உயிருடன் இல்லை.

தினமலர் பத்திரிகையில் கிடைத்த சுவாரஸ்யமான பகிர்வை இங்கே தருகிறேன்.

“மாணவப் பருவத்தினராக எம்.எல்.வசந்தகுமாரி இருந்தபோது மதுரையில் ஒரு சங்கீத விழாவில் ஒரு கச்சேரி மேடையில் அவருடன் ஒரு பெரியவரும் அமர்ந்திருந்தார். அந்நிகழ்ச்சியை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த இளைஞருக்கு இவ்வாறு மேடையில் எம்.எல்.வி.யின் அருகில் அமர்ந்திருந்த பெரியவரைக் கண்டதும் கோபம் வந்தது. கச்சேரி மேடையில் பாடகிக்குப் பக்கத்தில் இந்த மனிதருக்கு என்ன வேலை? இவ்வாறு நினைத்தவராக அவரிடம் சென்று உடனே மேடையை விட்டுக் கீழே இறங்கும்படி உத்தரவிட்டார். அப்போது அந்தப் பெரியவர் சொன்னார்; பாடிக் கொண்டு இருப்பது என் பெண்தான். அவரிடம் யாரும் விஷமம் செய்யாமல் இருக்கவே நான் இங்கே இருக்கிறேன்.

இளைஞர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டார். பிறகு இந்த இளைஞருக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது. அவர் பெயர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இந்த நட்பே பின்னால் அவர் எம்.எல்.வி.யை மணந்துகொள்ளவும் காரணமாயிற்று. நல்ல செல்வந்தராக இருந்த அவர் சினிமாப்படம் எடுக்கும் முயற்சியில் பொருளிழந்து பிறகு விகடக்கலையில் புகழ்பெற்று விகடம் கிருஷ்ணமூர்த்தி என்றழைக்கப்பட்டார். “ என்று தினமலர் செய்தி பகிர்கின்றது.

எம்.எல்.வசந்தகுமாரியின் முக்கியமான இசை வாரிசாக திருமதி சுதா ரகுநாதன் விளங்குகிறார். தன் குருவிடம் இசைக் கல்வியில் தேறி அவருடனேயே ஐந்து ஆண்டுகள் கச்சேரிகளில் பயணப்பட்ட சுதாவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதையிட்டுக் கரிசனை கொண்டு தான் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டுமென்று கூறி ரகுநாதனைச் சந்தித்து “சுதாவின் இசைப் பயணம் அவரது திருமண வாழ்வால் தடைப்படல் கூடாது” என்று வேண்டினாராம் எம்.எல்.வசந்தகுமாரி.

இதனால் தான் இவர் என் குரு மட்டுமல்ல என் அம்மாவும் கூட என்று நெகிழ்கிறார் சுதா ரகுநாதன்.

திரையிசையில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நிறையப் பாடியுள்ளார். அவற்றில் குறிப்பாக

“கோபாலனோடு நான் ஆடுவேனே” (வாழ்க்கை), “ஆகா ஆகா வாழ்விலே” (மந்திரி குமாரி), “கண்ணன் மன நிலையை” (ஏழை படும் பாடு), “அய்யா சாமி ஆவோஜி சாமி” (ஓர் இரவு), “கொஞ்சும் புறாவே” (தாய் உள்ளம்), “குயிலே உனக்கு” (மனிதன்), “கூவாமல் கூவும் கோகிலம்” (வைர மாலை), “ஆடல் காணீரோ” (மதுரை வீரன்) போன்றவை இன்றளவும் உலக வானொலிகளாலும், வானொலி ரசிகர்களாலும் பெரு விருப்போடு மனதில் வைத்திருக்கும் பாடல்கள்.

செவ்வியல் இசையில் எம்.எல்.வசந்தகுமாரி

திரையிசையில் எம்.எல்.வசந்தகுமாரி

https://www.youtube.com/playlist…

இன்று பிரபல சாஸ்திரிய இசை மற்றும் திரையிசைப் பாடகி எம்.எல்.வசந்த்ந்குமாரியின் 90 வது பிறந்த தினமாகும்.

மேலதிக தகவல் குறிப்புகள் & படங்கள் நன்றி :

திருமதி சுதா ரகுநாதன்

ஹிந்து ஆங்கில நாளேடு

தினமலர்

விக்கிப்பீடியா

கானா பிரபா

03.07.2018

 

விழியிலே மணி விழியிலே ❤️? ஜொதயலி ஜொத ஜொதயலி ?

2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிடத்தில் இருந்த யாரோ ஒருவரின் செல்போனில் இருந்து வரும் அழைப்போசை (ringtone) எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கிறதே அதுவும் தமிழில் கேட்ட மிகவும் பரிச்சயமான பாடல் போன்று தோன்றுகின்றதே என்று மனதில் குடைச்சல்.

அந்தப் பணியிடத்தில் ஒன்றிரண்டு சக தமிழ்ப் பணியாளர்கள் அதுவும் பேச்சுக் கொடுத்தால் திரையிசை பற்றி அவ்வளவு ஆர்வம் காட்டாதவர்களிடம் வாய் விட்டுக் கேட்கவும் வழியில்லாமல் அப்படியே விட்டு விட்டேன். பின்னர் நான் தங்கியிருந்த ஹோட்டலில் இரவு நித்திரை வராத பொழுதில், அறையில் இருந்த சின்னத்திரையில் உதயா டிவி வழியே நதி போல வழிந்து கொண்டு வந்தது “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டு.

ஆகா இரண்டு நாளாக மண்டையைப் பிச்சுப் போட்ட பாட்டு இதுவல்லவோ அதுவும் முதன் முறை கேட்கிறேன் கன்னட வடிவில். பின்னர் நதிமூலம் ரிஷிமூலம் தேடிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வந்து விட்டேன் நூறாவது நாள் திரைப்படத்தில் இடம் பிடித்த “விழியிலே மணி விழியிலே” பாடல் தான் அதுவென்று.

தென்னகத்தின் இசைச் சக்கரவர்த்தியாக இசைஞானி இளையராஜா ஆண்ட போது ஒவ்வொரு மொழிக்காரரும் அவர் இசையமைத்த தலா ஒரு பாடலையாவது தம் தல புராணமாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள். இந்த மாதிரியான பேறு பெற்ற இசைஞானிக்குப் பின் யாரையுமே இனிமே நினைத்துப் பார்க்க முடியாது.

“தும்பி வா தும்பக் குளத்தே” என்று மலையாளிகளும் சாகர சங்கமத்தைத் தெலுங்கர்களும் கொண்டாடுவது போலக் கன்னடர்களுக்கும் இந்த “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டும்.

“ஜொதயலி” பாடல் மீதான அபிமானம் குறித்த பாடலைத் தாண்டி இன்னும் இன்று வரை கன்னடர்களுக்கு நேசம் விளைவிக்கக் காரணம் சங்கர் நாக் என்ற தம் ஆதர்ஷ நாயகன் மீதான காலம் தாண்டிய பற்றுதலும் காரணமாக இருக்கலாம். கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரம் சங்கர் நாக் திடீரென்று கார் விபத்தில் இறந்து போனதை அவர்கள் மறந்து கடந்து விடவில்லை என்பதைப் பதினாறு வருடங்கள் கழித்து அந்த பெங்களூர்ச் சாலைகளில் என் கார் பயணப்பட்ட போது மலர் மாலை தாங்கிய அவரின் உருவப் படத்தை வைத்து அர்ச்சித்த கடைக்காரர்களையும், கடந்து போன ஆட்டோ வண்டிகளையும் கண்டுணர்ந்தேன். எமது நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட கார்ச்சாரதி பெங்களூரில் வாழும் மராத்திக்காரர் என்றாலும் அவ்வப்போது சங்கர் நாக் புகழாரம் பாடிக் கொண்டிருந்தார்.

கீதா கன்னடப்படத்தில் வந்த ஜெதயலி தமிழில் விழியிலே மணி விழியிலே ஆனது போன்று கேளதே நிமகீகா பாட்டு “தேவதை இளம் தேவி” (ஆயிரம் நிலவே வா”, “நன்ன ஜீவ” பாடல் “தேவன் தந்த வீணை” (உன்னை நான் சந்தித்தேன்) ஆகவும் தமிழில் கிடைக்கின்றன.

தமிழில் வந்த “விழியிலே மணி விழியிலே” ஐ விடப் பின்னாளில் எனக்கு அறிமுகமான, ஆனால் முன்னதாக வந்த “ஜொதயலி” இன் மேல் தான் மையல் அதிகம் எனக்கு. போதை ஊசியை ஏற்றிக் கொண்டு கண்கள் கிறங்க வானத்தில் மிதப்பது போன்றிருப்பவனை அனுபவ பூர்வமாக நான் உணரும் தருணம் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம். தமிழில் வந்ததை ரசிக்க முடியாமல் செய்ததற்குக் காரணம் பாடலில் சுமாரான ஒலித்தரம். தமிழைக் கேட்டு விட்டுக் கன்னடத்துக்குத் தாவும் போது அதை உணரலாம். ஆனாலும் தமிழில்

இந்த மெட்டுக்குப் பூண்ட வரிகள் அழகோ அழகு.

நதியொன்று ஊற்றெடுத்துக் காடு, மலை, மேடு, பள்ளம் எல்லாம் தாண்டி வந்தாலும் அதன் ஓட்டம் கெடுவதில்லை. அதன் நிதானம் தப்புவதில்லை. அது போலத் தான் இந்தப் பாட்டும். தன் மெட்டில் வெளிப்படையாக நளினத்தைக் காட்டி விட்டு, அதனை வாத்தியங்களின் நுட்பமான ஒலிச் சஞ்சாரத்தில் இறக்கி விட்டிருக்கிறார் இசைஞானி. உதாரணத்துக்கு சரணத்தில் கொட்டி முடிக்கும் வயலின் ஆர்ப்பரிப்பு

எங்கெங்கெல்லாம் போய்ப் பின் இறுதியில்

“விழியிலே மணி விழியிலே” என்று தானும் வாசித்து

ஐக்கியமாகி விழுவதைக் காணலாம்.

பாடல் ஆரம்பிக்கும் போது எந்த விதமான இசைப் பூச்சும் இல்லை. எஸ்.பி.பாலசுப்ரமணியமே குரல் கொடுத்து நுழைகிறார். பாட்டு முழுக்க ஒரு மெலிதான களிப்போடு அவர் பாடும் போது கேட்கையில் காதலியின் அருகாமை தரும் பூரிப்புப் போல இருக்கும். வார்த்தைகளை நோகாமல் அள்ளி விடுவார். கூடப் பாடும் எஸ்.ஜானகி மட்டும் என்னவாம் என்பது போல அந்தக் காதலனுக்கு நிகரான கொண்டாட்ட மன நிலையில் அந்தக் குரல் தொனிக்கும்.

இருவரும் பரிமாறும் சிரிப்பொலிகளில் கூட ரிதம் தப்புகிறதா பாருங்கள்?

இந்தப் பாட்டுக்கிடையில் வரும் சாஸ்திரீய ஆலாபனை கூட ஒரு விநாடித் துளிகளில் இன்னொரு உலகத்தை இந்த நவீனத்தோடு இணைக்கிறது.

ஒரு பாடல் புடித்து விட்டால் அது என்ன வடிவில் வந்தாலும் தேடிக் கேட்டு ரசிக்கும் நல்ல பழக்கம் இருப்பதாலோ என்னமோ இந்தப் பாடலின் பகிர்வுகளையும் தேடி ரசிப்பேன்.

ஏஷியா நெட் இற்காக சித்ரா சிவராமனுக்குக் கொடுத்த பேட்டியில் எஸ்.பி.பி பாடியதைப் பல்லாண்டுகளுக்கு முன் தேடி ரசித்திருக்கிறேன். https://youtu.be/2O4ou_JimnU

வீணை வாத்திய இசையில் கேட்டுப் பாருங்கள்

இன்னொரு பரவச அனுபவம்

“விழியிலே மணி விழியிலே” (நூறாவது நாள்)

“ஜொதயலி ஜொத ஜொதயலி” (கீதா)

“ஜானே தோ நா” (சீனி கம்)

இன்பச் சுகவரி அன்பின் முகவரி

கொஞ்சம் தினசரி என்னை அனுசரி

மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி

விடிய விடிய என் பேரை உச்சரி

? இசைமைப்பாளர் தேவேந்திரனின் இசைப்பயணம் ? ? நிறைவுப் பாகம் ?

“பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே…

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை

பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்

மன்னவன் பிறந்தான் ஈழத்திலே”

ஈழத்திலும், அதைத் தாண்டி ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளும் மேற் சொன்ன பாடல் ஒவ்வொரு கார்த்திகை 26 இலும் ஒலிக்கும் வேத மந்திரம் போலானது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் பாடலைப் பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் உட்பட்ட பாடல்களைக் “களத்தில் கேட்கும் கானங்கள்” என்ற பெயரில் முப்பது வருடங்களுக்கு முன்னர் சென்னையில் வைத்து தேவேந்திரன் இசையமைக்க ஒலிப்பதிவானது. அந்த வாய்ப்பை இன்னொரு பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனே ஏற்படுத்தியிருந்தார்.

“களத்தில் கேட்கும் கானங்கள்” பாடல் தொகுப்பில் “வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு” என்று தனித்தும் “தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்” என்று ஜோடி சேர்ந்தும் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். “நடடா ராஜா மயிலைக் காளை” பாடலை மலேசியா வாசுதேவன் பாட, “காகங்களே காகங்களே காட்டுக்குப் போனீர்களா”

சிறுவர் பாட்டு, “ஏழு கடல்களும் பாடட்டும்” , “காற்றும் ஒரு கணம் வீச மறுத்தது (தீயினில் எரியாத தீபங்களே)” ஆகிய உணர்வெழிச்சிப் பாட்டுகள், இவற்றோடு இசைக்குயில் பி.சுசீலா பாடிய “கண்மணியே கண்ணுறங்கு” தாலாட்டு, “அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி” என்ற மெல்லிசைப் பாட்டு என்று எல்லாமே காலம் தின்று விழுங்காத மறக்க முடியாத பாட்டுகள். இந்திய அமைதிப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் உச்சமடைந்த சமயத்தில் வெளிவந்த “களத்தில் கேட்கும் கானங்கள்” இன்றுவரை தமிழீழ எழுச்சிப் பாடல்களில் அதி முக்கியத்துவம் கொடுத்துப் பேணப்படுபவை. பாடல்களை மனப்பாடம் செய்யுமளவுக்குப் பலருக்கு இந்த இசைத் தொகுப்பு பதியம் போட்டது.

களத்தில் கேட்கும் கானங்கள் இசைத் தொகுப்பைக் கேட்க

https://eelamsong.blogspot.com.au/2014/11/eelam-mp3_25.html

தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே மடை திறந்தாற் போலப் புதுப் புது பாடகர்கள், இயக்குநர்கள், அறிமுக நாயக, நாயகிகளோடு படங்கள் இவற்றோடு புது வர இசையமைப்பாளர்களும் நிறையப் பேர் தமிழ்த் திரையுலகுக்கு வந்தார்கள். ஒப்பீட்டளவில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக வந்த புதுப் புதுக் கலைஞர்களுடனான தமிழ்த் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது முந்திய எண்பதுகளில் ஒரே சமயத்தில் ஒரு குறுகிய காலத்தில் இப்பேர்ப்பட்ட அலை அடித்ததில்ல்லை.

அப்போது தான் வானொலிகளும் பண்பலை வரிசைக்குத் தாவிக் கொண்டிருந்த சமயம் அது.

“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க

தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க”

https://youtu.be/tbJzW7x42Gc

என்ற பாடல் காற்றலைகளில் கலக்கிக் கொண்டிருந்தது. யாராடா இது ரவி தேவேந்திரன் என்ற புது இசையமைப்பாளர் என்ற இன்ப அதிர்ச்சியோடு அந்தப் பாடலில் மூழ்கிப் போன காலமது. கூடவே பூனைக்கண் அழகி, சின்னக் குஷ்பு என்று அழைக்கப்பட்ட சிவரஞ்சனி மேல் மையல் கொண்டு அலைந்த இளைஞர் கூட்டம் அவரின் இயற்பெயர் ஊஹா முதற்கொண்டு சாதகத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் போது இப்படி ஒரு பாட்டு தலைவியின் புதுப் படத்தில் வருகிறது என்றால் சும்மா விடுவார்களா என்ன?

அந்த ஆரம்ப இசை இதயத் துடிப்புப் போலப் படபடக்க,

இந்தப் பாட்டின் இடையிசையில் வரும் புல்லாங்குழல் இசை இளையோருக்கோ மகுடி வாசிப்பது போல மயக்கத்தைக் கொடுத்தது.

“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க” பாடலின் இசை நேர்த்தியைப் பார்த்தால் புதிதாகச் சாதிக்க வரும் இசையமைப்பாளரின் துடிப்பும், நேர்த்தியும் இருக்கும். ஆனால் எண்பதுகளில் “வேதம் புதிது” தொட்டு இன்னொரு பரிமாணத்தில் இசை கொடுத்த தேவேந்திரன் தான் ரவி தேவேந்திரன் என்று தீவிர ரசிகர்கள் கண்டுணர்ந்தார்கள்.

“முத்தம் கொடுக்கணும் முத்தம் கொடுக்கணும் முத்துமணிக் குயிலே” பாட்டைக் கேட்டால் அச்சொட்டான இளையராஜா பாணியில் எஸ்.ஜானகி பாடியிருப்பது போல இருக்கும்.

“நிலவென்ன பேசுமோ” என்று பாடிய இசையமைப்பாளர் சந்திர போஸையோ அல்லது நாகூர் ஹனீபாவின் குரலை ஒத்துப் பாடியது போல இருக்கும்

“நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்” என்ற பாட்டு.

“ஓ பறவைகளே ஓ பறவைகளே நில்லுங்கள்” எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா பாடிய பாடல் தொண்ணூறுகளின் காதலர் சோக கீதங்களில் ஒன்றானது.

“புதிய தென்றல்” திரைப்படம் ரமேஷ் அர்விந்த், சிவரஞ்சனி நடிக்க, புதுமுக இயக்குநர் பிரபாகர் இயக்கியது. அப்போது வெளிவந்து கொண்டிருந்த சினிமா சஞ்சிகை பொம்மை இதழில் இரண்டு முழுப்பக்க விளம்பரங்கள் போடுமளவுக்குப் பிரபலப்படுத்தப்பட்டது. ஆனால் முன் சொன்ன அதியற்புதமான பாடல்களைக் கொடுத்தும் பலமான இன்னொரு சுற்று ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனுக்கு வாய்க்கவில்லை.

புதிய தென்றல் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்க

https://youtu.be/AEA9bmYgJTY

கலைஞர் கருணா நிதி கதை, வசனம் எழுதி மு.க.ஸ்டாலின், கார்த்திக் நடித்த “ஒரே ரத்தம்”, இயக்குநர் விசு ஆனந்த விகடனில் கதையாக எழுதிப் பின் பி.நாகிரெட்டி தயாரித்து வந்த “மீண்டும் சாவித்திரி” (விசு இதுவரை இயக்கிய கடைசிப்படம்) போன்றவை தேவேந்திரன் இசையில் குறிப்பிட வேண்டிய படங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட “மூணார்” என்ற படத்துக்கு இசையமைத்தார். புகழேந்தி தங்கராஜ் இயக்கிய ஈழப் பின்னணியில் உருவான “கடல் குதிரைகள்” படத்துக்குக் கடந்த வருடம் இசையமைத்து வெளியிட்டார்.

இந்தத் தொடரின் முந்திய பகுதிகள்

வேதம் புதிது

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிதுமண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு…

Posted by Kana Praba on Wednesday, September 13, 2017

மண்ணுக்குள் வைரம்

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் – மண்ணுக்குள் வைரம் 🌴🍂மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள்…

Posted by Kana Praba on Thursday, September 7, 2017

காலையும் நீயே மாலையும் நீயே & உழைத்து வாழ வேண்டும்

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸🎻 காலையும் நீயே மாலையும் நீயே 🎷🥁 உழைத்து வாழ வேண்டும் 🎺எவ்வளவு தான் திறமை…

Posted by Kana Praba on Thursday, November 9, 2017

கனம் கோட்டார் அவர்களே

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼🐞 கனம் கோட்டார் அவர்களே 🔨பெங்களூருச் சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி…

Posted by Kana Praba on Wednesday, September 27, 2017

ஆண்களை நம்பாதே

🎻 இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸ஆண்களை நம்பாதே ❤️“காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களேசோக நெஞ்சங்களே நீங்கள்…

Posted by Kana Praba on Tuesday, March 6, 2018

“தென்றலுக்கு மேடை தந்த தேவராஜன் வாழ்க”

கானா பிரபா

16.03.2018

அடுத்த தொடர் வரும் வாரம் முதல் இன்னிசை இரட்டையர் மனோஜ் கியான்

? இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் ? ஆண்களை நம்பாதே ❤️

“காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே நீங்கள் மாறுங்களே”

https://youtu.be/nBO9BWloUY8

எண்பதுகளின் தேவதாஸ்களுக்குக் கிட்டிய இன்னொரு ஜேசுதாஸ் பாட்டு. மலேசியா வாசுதேவன் இணைந்து பாடிய அந்தப் பாட்டு ஒன்றே போதும் இந்தப் படத்தின் பெயரை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்க.

அந்தக் காலத்தில் இந்தப் பாடலைப் பெருங்குரலெடுத்துப் பாடிய அண்ணன்மார்களைச் சைக்கிள் சகிதம் வாசிகசாலை வெளிகளில் கண்டிருக்கிறேன்.

“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” (உழைத்து வாழ வேண்டும்), “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” (காலையும் நீயே மாலையும் நீயே) வரிசையில் இசையமைப்பாளர் தேவேந்திரன் – பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கூட்டணிக்குப் புகழ் கொடுத்தது “காதல் காயங்களே” பாடலும். எண்பதுகளில் T.ராஜேந்தருக்குப் பின் ஆபாவாணன் & மனோஜ் – கியான் அலையடித்த போது இவ் இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய வகையில்

T.M.செளந்தரராஜன் அவர்களின் இசைப் பயணமும் இடைவெளியில்லாது தொடர எதுவானது. அந்த வகையில் தேவேந்திரனும் இந்தப் படத்தில் “வாராய் என் தோழி வாராயோ” பாடலை மீள T.M.செளந்தரராஜனுடன் ஆண் குரல் கூட்டணியோடு பாட வைத்த “வாராய் என் தோழா வாராயோ”

இன்றும் கல்யாண வீடுகளில் எள்ளல் பாடலாகக் குறும்பு செய்யும்.

“ஆண்களை நம்பாதே” படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். இவற்றில் புகழ் பெற்ற காதல் காயங்களே பாடல் உட்பட வைரமுத்துவும், மற்றும் வாலி, எம்.ஜி.வல்லபன் பாடல்களை எழுதினர்.

“ஆண் பாவம்” படத்தின் பெரு வெற்றியின் பாதிப்பில் எடுத்த இந்த “ஆண்களை நம்பாதே” படத்தின் ஆரம்பம் முதல் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆண் பாவம் படத்தில் பெரிய பாண்டியாக வந்த நாயகன்

பாண்டியன் இந்தப் படத்தில் முத்துப்பாண்டி. வி.கே.ராமசாமியின் மகனாக இந்தப் படத்திலும். அங்கும் ராமசாமி இங்கும் ராமசாமி முதலியார் ஆக வி.கே.ராமசாமி. தாய்க் கிழவியாக கொல்லங்குடி கருப்பாயியே நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கிராம மக்கள் கூடி நின்று ராமசாமியின் புது முயற்சிக்கு வாழ்த்தும் கூத்து இங்கேயும்.

இந்தப் படத்தின் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியனும் பாண்டியராஜன் ஆண் பாவத்தில் நடித்தது போல உப நாயகன். பின்னாளில் நட்சத்திர இயக்குநராக விளங்கிய கே.எஸ்.ரவிகுமார் ஆண்களை நம்பாதே படத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்ததைச் சொல்லியிருக்கிறார் பேட்டி ஒன்றில்.

“வேட்டிகட்டி” என்ற எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல் தான் ஆரம்பப் பாடல். இதே பாடகியின் இன்னொரு குழுப்பாட்டு “தாளம் தட்டுங்கள்”, மேலும் “பாக்குத் தோப்பிலே” என்று ஜோடிப் பாட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடியது. மலேசியா வாசுதேவன் & சைலஜா ஜோடிக் குரல்களில் “மதுரைக் கார” மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடிய “ராஜாதி ராஜன் தானே”

என்றெல்லாம் இப்படப் பாடல்களை அடுக்கினாலும் முன் சொன்ன இரண்டு பாடல்கள் அளவுக்குக் கவரத் தவறி விட்டார் இசையமைப்பாளர் தேவேந்திரன்.

கானா பிரபா

07.03.18

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு இன்று நூறு வயசு ???

கேரளத்தில் இருந்து வந்து தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னராக எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தெலுங்கு தேசத்தில் கொடி நாட்டியவர் நாகர்கோயிலில் இருந்து புறப்பட்ட இசை விற்பன்னர் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்.

இன்றைக்குத் அறுபதுகள் எழுபதுகளில் இடம்பெற்ற பாடல்கள் வானொலிகளில் ஒலிபரப்புச் செய்யப்படும் போது பொதுவாக எம்.எஸ்.வி கணக்கிலும் சேர்க்கப்படுவதுண்டு. ஆனால் தமிழ்த் திரையிசைப் பாரம்பரியத்தில் ஊறியவர்கள் கே.வி.மகாதேவன் அவர்களின் தனித்துவமான இசைக் கோப்பை அடையாளம் கண்டு ரசிப்பர். ஒப்பீட்டளவில் தமிழ்த் திரையிசை ரசிகர்களை விட ஆந்திரா வாலாக்கள் தான் “மாமா” என்று திரையுலகத்தோர் பாசத்தோடு அழைக்கும் கே.வி.மகாதேவனின் மேல் அதீத பற்றுஒ கொண்டவர்கள்.

சென்னை வானொலியின் விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பில் நான் அடிமைப்பட்ட காலத்தில் தான்

கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்த தெலுங்குப் பாடல்களைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு முதன் முதலில் கிட்டியது.

எண்பதுகளில் இளையராஜா பாடல்களோடு வாழ்க்கைப்பட்ட என் போன்ற ரசிகர்களுக்கும் கே,வி.மகாதேவன் முத்தான பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றில் குறிப்பாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டுமென்றால்,

ஹிந்தியில் ஹிட்டடித்த ரங்கீலாவுக்கெல்லாம் பாட்டி முறையான கதை “ஏணிப்படிகள்” படத்தில். இந்தப் படத்தின் கதையை உருவிப் பின்னாளில் ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன, ஆனால் ஏணிப்படிகள் படத்தின் நேர்த்தியான திரைக்கதையும் கே.வி.மகாதேவனின் இசையும் இன்றளவும் நினைவில் இனிமை சேர்ப்பவை. இந்தப் படத்தில் பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனித்தனியே பாடிய

“பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன” , “கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்” போன்றவை ஏக பிரபலம் அப்போது.

புதுமைப்பித்தனின் கதையொன்றை எடுத்தாண்டு ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் “அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை”. தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோப்படங்களும் நம்மிடையே புழங்கிய காலத்தில் அப்போது இந்தப் படத்துக்க்கும் ஏக மவுசு. படத்தில் “சுமைதாங்கி ஏனின்று விழுங்கின்றது” என்ற சோகப் பாட்டு, “மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்” என்ற அழகிய காதல் பாட்டு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே” என்ற தனிமைத் தவிப்பின் பாடலென்று முத்தான மூன்று கிட்டியது.

நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் எண்பதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது வழக்கம் போலத் திரை ஜோசியப்படி அவரும் நாயகனாக நடித்து வெளிவந்த படம் என்ற ஒரேயொரு பெருமையைக் கொண்டது “பாய்மரக்கப்பல்”. இந்தப் படத்தில் எஸ்.பி.சைலஜா பின்னணில் கோரஸ் இசைக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்” சென்னை வானொலியில் நீங்காது இடம்பிடித்த பாடல்களில் ஒன்று

கமல்ஹாசனின் ஆரம்ப காலம் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வேடம் பூண்ட போது சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த படம் “சத்தியம்”. இந்தப் படத்தில் “கல்யாணக் கோயிலின் தெய்வீகக் கலசம்” பாடல் கே.வி.மகாதேவனின் பாடல்களில் அழகிய முத்து ஒன்று.

என் பால்ய காலத்தின் இருள் படிந்த நினைவுகளில் வின்சர் தியேட்டர் என்று நினைவு. ஏதோவொரு படம் தொடங்க முன்பு தியேட்டர்காரர் ஒலிபரப்பிய “கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே” இன்றும் பசுமரத்தாணி போல உறைந்திருக்கிறது அதுவும் சங்கீதத் திலகத்தின் கை வண்ணமாக உத்தமன் படத்தில் வந்ததாகப் பிற்காலத்தில் அறிந்து தெரிந்து கொண்டேன்.அது போல “ஞானக் குழந்தை” படத்தைப் பல்லாண்டுகளுக்குப் பின் லிடோ திரையரங்கில் திரையிட்ட போது சீனிப்புளியடி ஆரம்பப் பள்ளிக்கூடக் கூட்டத்தோடு திருஞானசம்பந்தரைப் பார்க்கப் போகிறோம் என்று சொல்லிப் போய்ப் பார்த்ததோடு இன்றும் இனிக்கும் கே.வி.மகாதேவன் அவர்களின் அந்தப் படப் பாடல்களில் ஒன்று “பாலோடு தேன் கலந்து அபிஷேகம்”.

2001 ஆம் ஆண்டு சிட்னிக்கு இசை நிகழ்வை நடத்த வந்த பாடகி சுஜாதா நான் அப்போது இயங்கிய வானொலி நிலையத்துக்கு வந்த போது அப்போது கிட்டிய கே.வி.மகாதேவனின் பிரிவுச் செய்தியை இணையம் மூலம் அறிந்து அவருக்குச் சொன்னேன். அப்போது “மாமா” என்று சொல்லியவாறே, தமது குடும்பத்தில் ஒருவரின் இழப்புப் போல வாய்பொத்தி அவர் கலங்கி நின்றார்.

கந்தன் கருணை படத்திற்காகத் தேசிய விருதைத் தமிழில் பெற்றுக் கொண்டவர், திரையிசைக்காகக் கொடுத்த முதல் தேசிய விருது கந்தன் கருணைக்குத் தானாம். தமிழோடு தெலுங்கில் சாதனை படைத்த சங்கராபரணத்துக்கும், சுவாதி க்ரணம் என்ற படத்துக்கும் என்று மூன்று தேசிய விருதுகளை எடுத்ததோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் கே.வி.மகாதேவன்.

கே.வி.மகாதேவனின் உதவியாளராகவிருந்த புகழேந்தி அவர்களின் மனைவி, மகனை 17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் வானொலிப் பேட்டி எடுத்தபோது இவரின் அறியப்படாத பரிமாணங்களை அப்போது சொல்லிச் சொல்லிச் சிறப்பித்தனர்.

மார்ச் 14, 1918 ஆம் ஆண்டில் பிறந்து ஜூன் 21, 2001 வரை வாழ்ந்திருந்து இன்று நூறாவது பிறந்த நாள் காணும் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனின் பாடல்கள் முறையாக அவர் பெயர் சொல்லி வானொலிகளில் பகிரப்பட வேண்டும். அதுவே அந்த மகா கலைஞனை இன்னும் பல ஆண்டுகள் நாம் உயிர்ப்பித்து வைத்திருக்க ஏதுவாக அமையும்.

கானா பிரபா

14.083.2018