மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2

பிரபல பத்திரிகையாளர் ராணி மைந்தன் தொகுத்த “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்” என்ற நூலை இரண்டு வருஷம் முன் சென்னை போனபோது வாங்கியிருந்தேன். அப்புத்தகத்தில் இடம்பெற்ற அம்சங்களில் தேர்ந்தெடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்களும், அவர்களின் படங்களில் பாடல்கள் பிறந்தபோது இடம்பெற்ற சுவையான தகவல்களையும் கோர்த்து பாடல்களோடு இணைத்து வானொலி வடிவமாக்கியிருந்தேன். அதில் முதற்பாகத்தை இங்கு தந்திருந்தேன்.
இதோ இரண்டாம் பாகம்.

இன்றைய பகுதியில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனோடு மெல்லிசை மன்னர் பணியாற்றிய படமான “கை கொடுத்த தெய்வம்” படத்தில் இடம் பெற்ற “சிந்து நதியின் மிசை” என்ற பாடல் பிறந்த கதை நகைச்சுவையான ஒரு சேதியோடு இடம்பெறுகின்றது. என்னவென்பதை அறிய ஒலிப்பதிவைக் கேளுங்கள்.

அதனைத் தொடர்ந்து பி.மாதவனின் இயக்கத்தில் வெளிவந்த “ராஜபார்ட் ரங்கதுரை” திரைப்படத்தில் இடம்பெற்ற “மதன மாளிகையில்” என்ற பாடல் உருவான போது எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பல்வேறு ரியூன்களில் ஒன்று எப்படித் தேர்வானது என்ற விசித்திரமான சம்பவத்தையும் தொட்டுச் செல்கின்றது.
இவ்விரண்டு படப்பாடல்களும் அந்தச் சுவையான சேதிகளோடு வருகின்றன.

சம்பவக் குறிப்புக்கள் நன்றி: ராணி மைந்தன்

“அழகு” ராணிகள் Rated MA 18+

வலைப்பதிவுலகில் காலத்துக்குக் காலம் பரவும் வைரஸ் காச்சல்களாக, சங்கிலிப் பதிவு, நன்றியுள்ள நாலு பேர், சங்கிலிப் பதிவு, வியேட் பதிவு வரிசையில் அழகுப் பதிவுகளும் வந்து ஓய்ந்துவிட்ட வேளை நானும் என் பங்கிற்கு அழகு குறித்த என் பார்வையைத் தரலாம் என்றிருக்கின்றேன். ஆளாளுக்கு வானத்தை வெறிச்சுப் பார்த்தும், கடல் அலையைக் கால்கள் தொட்டுப் பார்த்தும் அழகுக் கவிதைகள் எழுதிவிட்டார்கள். நமக்கெல்லாம் கவிதைகள் சரிப்பட்டு வராது. “செய்யும் தொழிலே தெய்வம்” ( பாட்டுப் போடுறது) என்று மனசைத் திடப்படுத்திக் கொண்டு எனக்குப் பிடித்த அழகு ராணிகளைப் பற்றிச் சொல்லப் போகிறேன். முதலில் இந்த அழகுப் பதிவுக்கு என்னை இழுத்து வந்த பாலைவனத்துச் சிங்கம் கோபிநாத்துக்கு ஒரு சலாம்.

தமிழ் சினிமா நாயகிகளைக் கவர்ச்சியின் உருவமாகப் பார்த்து ஏங்கும் பதிவல்ல இது. என்னுடைய காலத்தில் கடந்து போகும் சினிமா ரசனைகளில் வழித்துணையாக வந்து போன நாயகிகளுக்கான கெளரவமாக வேண்டுமென்றால் சொல்லலாம். இந்த ராணிகள் நடித்துப் போன படங்களில், என்னைக் கவர்ந்த பாடல் ஒன்றும், றேடியோஸ்பதியின் விதிமுறைகளைச் சற்றே விலக்கி வைத்து ஓளிக்காட்சியையும் இப்பதிவில் தருகின்றேன்.

அந்த வரிசையில் எனக்குப் பிடித்த ஆறு அழகு ராணிகள் இதோ.
அழகு ராணி ஒன்று: அர்ச்சனா


நடராஜா மாமா வீட்டு திண்ணையில் ஒரு கூட்டம் அயற் சனம் கூடி இருக்க, சின்னப்பிள்ளைகளோடு ஒருவனாக, ஆவென்று புதினமாகப் பார்த்த படம் “நீங்கள் கேட்டவை”. அந்த வயசிலும் அர்ச்சனா என்ற அந்த நாயகியை ஏதோ பக்கத்துவிட்டு அக்காவின் நடையுடை போல ஒரு உணர்வு தோன்றிய காலம் அது. கண்களும் சிரிக்க ஒரு மிரளல் பார்வையோடு நடித்த அர்ச்சனாவின் பிள்ளையார் சுழி அது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி சொன்னது போல, தமிழ் சினிமா நாயகியின் பொருத்தமான அடையாளமாக அர்ச்சனாவைச் சொல்லலாம்.

நல்ல சினிமாவைத் தேடி ரசித்துப் பார்த்த காலத்தில் அர்ச்சனாவின் இயல்பான நடிப்பை அவர் நடித்த “வீடு” படத்தின் மூலம் உள்வாங்கிக்கொண்டேன்.

அழகி படத்தில் நடிக்கவைக்க இயக்குனர் தங்கர்பச்சன் நந்திதா தாசைத் தேடி வட நாட்டுக்கு போயிருக்கத் தேவையேயில்லை. உள்ளூரில் அகப்படும் அர்ச்சனாவே மிகப்பொருத்தமாக இருந்திருப்பார்.
தேசிய விருதுக் குழுவிற்கு மட்டுமே தெரிந்த அர்ச்சனாவின் நடிப்பின் பெருமையை சினிமா உலகம் பயன்படுத்தத் தவறிவிட்டது. இப்போது பரட்டைக்கு அம்மாவாக நடிக்க வேண்டிய தரத்தில் அர்ச்சனாவின் நிலை.

அர்ச்சனாவின் நடிப்பைக் காட்ட முடியவில்லை. அவர் நடித்த நீங்கள் கேட்டவை படத்தின் அருமையான பாடலைக் கேளுங்கள். காட்சியையும் பார்த்து அனுபவியுங்கள். இந்த “ஓ வசந்த ராஜா” பாடலைப் பார்க்கும் போது ஒரு புதுமையையும் காண்பீர்கள். அது, பாடலின் முன் பாதி இந்திய சங்கீதப் பாணியிலும் பாடலின் மறு பாதி மேற்கத்தேயப் பாணியிலும் இருக்கும். அதை அப்படியே உள்வாங்கிப் பாடல்காட்சியும் இரண்டு கலப்பிலும் இருக்கும்.

பாடலைப் பார்க்க

அழகு ராணி இரண்டு: ரேவதி

பாரதிராஜாவின் “மண்வாசனை”யில் தோன்றிய “ரா” வரிசை நாயகி இவர், புதிதாக நடிக்க வரும் நடிகைகள் பயன்படுத்தும் கெளரவமான நடிப்பின் அடையாள அட்டை இவர் எனலாம். “நான் நடிச்சா ரேவதி மாதிரி பாத்திரங்களில் நடிக்கணும்” என்று போனவாரம் திரையுலகிற்கு வரும் நாயகி கூட சொல்லும் அளவிற்குக் கெளரவமான நடிப்பின் சொந்தக்காரி.
என் ரசனையில் ரேவதியின் நடிப்பின் பரிமாணத்தை மண்வாசனை தொடங்கி மெளன ராகம் , மறுபடியும், தேவர்மகன் என்று முக்கியமான அவர் நடிப்பின் மைல்கள் பிடிக்கும். மெளன ராகத்தில் என்னமாய் நடித்திருப்பார். தேவர் மகனில் என்னமாய் வாழ்ந்திருப்பார்.
மறுபடியும் படத்தில் மாற்று வீடு தேடும் கணவனிடம் அடங்கி அடங்கி வாழ்ந்து, மனதுக்குள் குமுறிக்குமுறி ஒலமிட்டு இறுதியில் வெடிப்பாரே அதைச் சொல்லாமல் விடமுடியுமா?
ஆஷா கேளுண்ணிக்குக் ( அதாங்க ரேவதி) கிடைத்த இன்னொரு வரம் அவரின் குரல். நடுத்தரக்குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண் போன்ற தோற்றத்திற்கு அவரின் குரல் அளவெடுத்த சட்டை. மெளன ராகம் படத்தில் வந்த, நான் அடிக்கடி பார்த்து ரசிக்கும் “சின்னச் சின்ன வண்ணக்குயில் இதோ”.

பாடலைப் பார்க்க

அழகு ராணி மூன்று: நதியா

“நதியா நதியா நைல் நதியா” என்று சினிமாக்கவிஞனைப் பாட்டு எழுதத் தூண்டிய நடிப்புக்குச் சொந்தக்காரி. இவரும் அடுத்த வீட்டுப் பெண் போல இனம் புரியாத நேசத்தைத் தன் நடிப்பின் மூலம் தந்தவர். “பூவே பூச்சூடவா” இவருக்கு நல்லதொரு ஆரம்பத்தை கொடுத்தது. எத்தனை பெரிய நாயகர்களோடு நடித்தாலும் கவர்ச்சி முலாம் பூசாமல் நடித்துக் காட்டியவர். கிராமியப் படங்களை விட நகரத்தில் வாழும் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோற்றமும், குறும்புத்தனமான நடிப்பும் இவரின் பலங்கள். நதியா போல பெண் வேண்டும் என்று ஒரு காலகட்டத்து ஆண்கள் மட்டுமா ஆசைப்பட்டார்கள்? நதியா ஸ்டைல் தோடு, காப்பு, அட்டிகை என்று எண்பதுகளில் பெண்களின் நவநாகரீகத்தின் அடையாளம் இந்த நதியா.

சுரேஷ் நதியா ஜோடி தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகளில் ஒன்று, இதோ அவர்கள் ஆடிப்பாடும் ” நதியா நதியா நைல் நதியா”, பூ மழை பொழியுது திரைப்படத்தில் இருந்து.

அழகு ராணி நாலு: அமலா

டி.ராஜேந்தர் கண்டுபிடித்த (மைதிலி என்னைக் காதலி) உருப்படியான கண்டு பிடிப்புக்களில் தலையாயது அமலா என்னும் அழகு பொம்மை. இந்திய சீன பார்டலில் இருந்து வந்து தென்னக சினிமாவையே ஒரு காலகட்டத்தில் கைக்குள் வைத்திருந்தவர். நவநாகரீகத்தின் அடையாளம் அமலா. இன்றைய ஐஸ்வர்யா ராயை விட அமலா தான் சிறந்த இந்திய அழகி என்பேன். ஒரெலி, ரெண்டெலி, மூணெலி என்று ஆரம்பித்து அஞ்சலி என்று தன் பெயரைச் சொல்வதாகட்டும் சிகரட் புகைத்துப் பார்த்து ரசிப்பதாகட்டும் அமலாவின் குறும்புத்தனமான நடிப்புக்கு அக்னி நட்சத்திரமே நல்ல உதாரணம். ஆனால் இவரால் நடிக்கவும் முடியும் என்று காட்டி இன்றளவும் நான் நேசிக்கும் படம் பாசிலின் இயக்கத்தில் வந்த ” கற்பூர முல்லை” மலையாளத்தில் ” எண்டே சூர்ய புத்ரிக்கு ” என்று வந்திருந்தது.
கே.பாலசந்தரின் “புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில் ஒனிடா டீ.வி விளம்பர பேனரில் அமலாவின் போஸைப் பார்த்து கிழவர் பூர்ணம் விஸ்வநாதன் ஜொள்ளு விடுவாரே, அதுவே அன்றைய காலகட்டத்தில் அமலா என்ற மாய பிம்பம் ஏற்படுத்திய தாக்கத்துக்கு ஒரு உதாரணம்.
இதோ அக்னி நட்சத்திரத்தில் இருந்து அமலா நடித்த “நின்னுக்கோரி” என்ற அட்டகாசமான பாடல்.

பாடலைப் பார்க்க

அழகு ராணி ஐந்து: குஷ்பு

கோயில் கட்டுமளவுக்கு இவர் நடிப்பை நான் தொடர்ந்து ரசிக்கவில்லை (மற்றைய நாயகிகளோடு ஒப்பிடும் போது) . ஆனால் இவர் நடித்த ஒரேயொரு படமே போதும். அதுவே நான் திரும்பத் திரும்பப் பார்த்து ரசிக்கும் வருஷம் 16. கண்ணத்தானைக் காதலிக்கும் சைனீஸ் பட்லர் முறைப்பெண்ணாக வருஷம் 16 படத்தில் இவர் நடித்த காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். அதுவே போதும்.
இதோ வருஷம் 16 இல் இருந்து வரும் இனிமையான பாடல் “பூப்பூக்கும் மாசம்”

அழகு ராணி ஆறு: மீரா ஜாஸ்மின்
கேரளத்துப் பைங்கிளி மீரா ஜாஸ்மினின் அடக்கமான நடிப்பை தமிழ்ப்படமான “ரன்”னில் தான் முதலில் பார்த்தேன். பின்னர் அவர் நடித்த படங்களைத் தேடித் தேடி மலையாளப்படவுலகத்தையும் என்னை நாடிச்செல்ல வைத்தது அவர் நடிப்பு. பெருமழாக்காலம், அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம், கஸ்தூரிமான் என்று ஒவ்வொரு மலையாளப் படங்களுமே மீரா ஜாஸ்மினுக்கு முத்திரைகள். தமிழில் தான் ஏதாவது லூசுப் பாத்திரம் இருந்தால் கூப்பிடுங்கள் மீரா ஜாஸ்மினை என்று சொல்லி அவர் நடிப்பைச் சீரழிக்கின்றார்கள். ரச தந்திரத்தில் அவர் தோன்றும் அனுதாபத்துக்குரிய தமிழ்ப்பெண் பாத்திரத்தையும், அச்சுவிண்டே அம்மாவில் வரும் அங்கலாய்ப்பான மகளாக அவர் நடிக்கும் பாத்திரத்தையும் தேடியெடுத்துப் பாருங்கள், அவரின் நடிப்பின் பரிமாணம் விளங்கும்.
இதோ அச்சுவிண்ட அம்மா திரையிலிருந்து இசைஞானியின் இசையில் ” எந்து பறஞ்சாலும்”.

பாடலைப் பார்க்க

சரி கோபிநாத் இவ்ளோ தான் என் அழகுப் பதிவு சமாச்சாரங்கள்,
ஸாரி நிறைய ஜொள்ளீட்டேன் 😉

நீங்கள் கேட்டவை 5


வணக்கம் நண்பர்களே

ஒரு வார கால ஓய்விற்குப் பின் மீண்டும் நீங்கள் கேட்டவை தொடர்கின்றது. இன்றைய நிகழ்ச்சியில் இருந்து என் விருப்பப் பாடலோடு இந்தத் தொகுப்பை வழங்கவிருக்கின்றேன்.

அந்த வகையில் என் விருப்பப்பாடலாக முதலில், பகல் நிலவு திரைப்படத்திற்காக ஜெயச்சந்திரன், பி.சுசீலா குரல்களில் “பூவிலே மேடை நான் போடவா” என்ற பாடல் வருகின்றது. இந்தப்பாடல் என் மனதைக் கவர்வதற்கான காரணம், மனதை வருடிச்செல்லும் மென்மையான கிற்றார் இசை, புல்லாங்குழல் ஆலாபனையோடு சேர்ந்து பயணிக்க, வாத்தியம் விழுங்காத அந்த இசையோடு கலக்கின்றது ஜெயச்சந்திரன் குரல். இவருக்குக் கிடைத்த முத்தான பாடல்களில் இந்தப் பாடலும் விலக்கமுடியாதது. இரண்டே இரண்டு அடிகளை மட்டும் பாடி வசீகரிக்கின்றார் பி.சுசிலா. 2.35 நிமிடமே ஒலிக்கும் இந்தப் பாடல் படத்தில் இன்னும் வெட்டுப்பட்டு வந்ததாக ஞாபகம். பாடல் இசை இளையராஜா என்று சொல்லவும் வேண்டுமா?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சன் டி.வி சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியை பாடகர் உன்னிமேனன் தொகுத்து வழங்கியபோது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு பாடலைப் பாடிச் செல்வார். அந்தப் பாடல்களில் ஒன்றாக இந்தப் பாடலும் வந்து உன்னிமேனனின் குரலில் இன்னும் நேசம் கொள்ள வைத்தது. இப்போது சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி தொலைந்து போய் புதிய ராகங்கள் என்ற உப்புமா நிகழ்ச்சி வருவது வேறு கதை.

சரி நண்பர்களே என் விருப்பத்தைப் பற்றிச் சொல்லிவிட்டேன். இதோ இன்றைய நிகழ்ச்சியில் நீங்கள் கேட்ட பாடல்கள்.

உங்கள் தேர்வுப் பாடல் வரிசை:
1. சந்திரவதனா அக்காவின் விருப்பத் தேர்வில் “என்னைத் தாலாட்ட வருவாளா” திரைப்படத்தில் ஹரிஹரன், சுஜாதா பாடிய ” என் நெஞ்சில் தூங்கவா”

2. வாசனின் விருப்பப் பாடலாக “கார்த்திகை தீபம்” திரைப்படத்தில் ரி.எம்.செளந்தரராஜன் பாடும் “எண்ணப்பறவை சிறகடித்து”, பாடல் இசை ஆர்.சுதர்சனம்

3. சர்வேசன் “மச்சானைப் பார்த்தீங்களா” திரைப்படத்தில் இருந்து சந்திரபோஸ் இசையில் “மாம்பூவே சிறு மைனாவே” என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா குரலில் கேட்டிருக்கின்றார்

4. பொன்ஸ், “சொல்லத்தான் நினைக்கிறேன்” திரைப்படத்தில் இருந்து அதே ஆரம்ப வரிகளில் பாடலைக் கேட்டிருக்கின்றார். பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி

5. ஜி.ராகவன் “நிலவே மலரே” திரைப்படத்தில் பி.சுசீலா பாடும் “மண்ணில் வந்த நிலவே” என்ற இனிமையான பாடலை நிறைவாகக் கேட்டிருக்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்பதோடு மட்டும் நின்றுவிடாது உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.

நீங்கள் கேட்டவை 4


வணக்கம் நண்பர்களே

இன்றைய நீங்கள் கேட்டவை பகுதியில்

1. சினேகிதி விரும்பிக்கேட்ட “சங்கர் குரு” திரைப்படப்பாடலான “சின்னச் சின்னப்பூவே” கே.ஜே.ஜேசுதாஸ், ஜானகி குரல்களில் ஒலிக்கின்றது. சினேகிதி கேட்ட பெண்குரல் பாடல் பின்னர் வரும். இப்பாடலின் இசை சந்திரபோஸ்

2.வெங்கடேஷ் வரதராஜன் விரும்பிக்கேட்ட “கல்யாண ராமன்” திரைப்பாடலான “மலர்களில் ஆடும்” பாடல் இளையராஜா இசையில் எஸ்.பி.சைலஜா பாடுகின்றார்.

3. ராதா சிறீராம் விரும்பிக்கேட்ட “பிராப்தம்” திரைப்பாடலான ” சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து” பாடல் ரி.எம்.செளந்தரராஜன், பி,.சுசீலா குரல்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை வழங்கியிருக்கிறார்

4. சிந்தாநதியின் விருப்பமாக ஜி.கே.வெங்கடேஷ் இசையில் “மல்லிகை மோகினி” திரைப்படத்திலிருந்து “மேகங்களே பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் ஒலிக்கின்றது.

5. வல்லி சிம்ஹனின் விருப்பமாக சீர்காழி கோவிந்தராஜன் பாடிய
“இன்பம் எங்கே” பாடல் “மணமுள்ள மறுதாரம்” திரைப்படத்திற்காக கே.வி மகாதேவன் இசையில் மலர்கின்றது.

பணி நிமித்தம் காரணமாக நீங்கள் கேட்டவை பகுதி 4 குரற்பதிவாக வழங்கமுடியவில்லை. அடுத்த வாரம் சிறிது ஓய்வோடு மீண்டும் மறுவாரம் நீங்கள் கேட்டவை 5 இடம்பெறும்.

Powered by eSnips.com

காதலர் கீதங்கள் – ஓ நெஞ்சே நீதான்


காதலர் கீதங்கள் சென்ற பதிவின் தொடராக மு.மேத்தாவின் கவிதைகளோடு பல்வேறு கவிஞர்களின் பாடல்கள் இந்தப் பதிவிலும் அணி செய்கின்றன. அந்தவகையில்
“டார்லிங் டார்லிங் டார்லிங்’ திரைப்படத்திலிருந்து சங்கர் கணேஷ் இசையில், குருவிக்கரை சண்முகம் இயற்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் ஓ நெஞ்சே நீதான்

“அச்சமில்லை அச்சமில்லை” திரைப்படத்திலிருந்து வி.எஸ்.நரசிம்மன் இசையில், வைரமுத்து இயற்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா இணைந்து பாடும் “ஆவாரம் பூவு”

“ஜானி” திரைப்படத்திலிருந்து இளையராஜா இசையில், கங்கை அமரன் இயற்றி எஸ்.ஜானகி பாடும் “காற்றில் எந்தன் கீதம்”
ஆகிய பாடல்கள் இடம்பெறுகின்றன.

காதலர்களுக்கு ஏதோ என்னால முடிஞ்ச பங்களிப்பு;-)

நீங்கள் கேட்டவை – 3

வணக்கம் நண்பர்களே

வாராந்த நீங்கள் கேட்டவை பகுதியின் மூன்றாவது பதிவு இதுவாகும். ஏற்கனவே மின்னஞ்சல் மற்றும் பின்னூட்டம் மூலமாகப் பாடல்களைக் கேட்ட அன்பர்களின் விருப்பங்கள் இன்றைய பதிவில் இடம்பெறுகின்றன. பாடல் கேட்ட ஒழுங்கில் சில பாடல்கள் இல்லாமைக்குக் காரணம், குறிப்பிட்ட சில பாடல்கள் இன்னும் கைவசம் வந்து சேரவில்லை. நிச்சயமாக இடம்பெறாத மற்றைய பாடல்கள் அடுத்தடுத்த நீங்கள் கேட்டவை பதிவுகளில் இடம்பெறும். அந்த வகையில் இன்றைய விருப்பத்தேர்வுகள் இதோ

1. ஜெய்சங்கர் என்ற நேயரின் விருப்பத் தேர்வாக ” தர்மபத்தினி” திரைப்படத்தில் இருந்து இளையராஜா இசையில், இளையராஜா, ஜானகி குரல்களில் ” நான் தேடும் செவ்வந்திப் பூவிது” என்ற பாடல்

2. மாசிலா என்ற நேயரின் விருப்பத் தேர்வாக ” மதனமாளிகை” திரைப்படத்தில் இருந்து எம்.பி.சிறீனிவாசன் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் ” ஒரு சின்னப்பறவை” என்ற பாடல்

3. இந்துமகேஷ் என்ற நேயரின் மின்னஞ்சல் விருப்பத் தேர்வாக ” இரவும் பகலும்” திரைப்படத்தில் இருந்து கே.வி.மகாதேவன் இசையில், நடிகர் அசோகன் பாடிய ” இறந்தவனை” என்ற பாடல்

4. திலகன் என்ற நேயரின் விருப்பத் தேர்வாக ” செம்மீன்” திரைப்படத்தில் இருந்து சலீல் செளத்ரி இசையில், கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் ” கடலினக்கரை போனேரே” என்ற பாடல்

5. கோபிநாத் என்ற நேயரின் விருப்பத் தேர்வாக ” நீங்கள் கேட்டவை” திரைப்படத்தில் இருந்து இளையராஜா இசையில் ஜானகி குரலில் “பிள்ளை நிலா இரண்டும்” என்ற பாடல்

6. சிவா என்ற நேயரின் மின்னஞ்சல் விருப்பத் தேர்வாக ” ஒரு விடுகதை ஒரு தொடர்கதை” திரைப்படத்தில் இருந்து கங்கை அமரன் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் ஜானகி குரல்களில் “நாயகன் அவன் ஒரு புறம்” என்ற பாடல்

பாடல்களைக் கேளுங்கள், உங்கள் விருப்பங்களையும் தொடர்ந்தும் அறியத் தாருங்கள்.
நீங்கள் கேட்டவை 3 என் குரற்பதிவில் அறிமுகம்

பாடல்களைக் கேட்க

Powered by eSnips.com

காதலர் கீதங்கள் – மெளனமான நேரம்


காதலர் கீதங்களாக மெளனமான நேரம் என்ற தலைப்பில் முத்தான மூன்று காதல் ரசம் சொட்டும் பாடல்கள் இன்றைய சிறப்புப் படையலாக இடம்பெறுகின்றன.
இதில் மு.மேத்தாவின் காதற் கவிதைகளோடு, வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களான “மெளனமான நேரம்” (சலங்கை ஒலி), “ஊரு சனம் தூங்கிடிச்சு” (மெல்லத் திறந்தது கதவு), காதல் மயக்கம் ( புதுமைப்பெண்) ஆகிய பாடல்கள் வலம் வருகின்றன.

இசைக்கோலம்: யாழ் சீலனின் கிற்றார் இசை


இசைக்கோலம் என்ற புதிய பகுதியில் முதன்முதலாக அரங்கேறுகிறது, யாழ் சீலனின் கிற்றார் இசை. 80 களின் ஆரம்பத்தில் தொழில்நுட்ப வசதி சொற்பமாக இருந்த வேளையில் யாழ்ப்பாணம் நியூ விக்டேர்ஸ் என்ற ஒலிப்பதிவுக் கலையகத்தில் வைத்து யாழ் சீலனால் தமிழ் சினிமாப்பாடல்களைக் கிற்றார் இசையில் மீள் இசையமைத்ததை இங்கே கேட்கப்போகிறீர்கள். இந்த அரிய ஒலிப்பதிவைத் தந்த, இசையில் தணியாத தாகம் கொண்ட என் சகோதரர் ஜேர்மனியில் வாழும் துளசி அண்ணாவுக்கும் (அவரும் ஒரு கிற்றார் வாத்தியக்காரர்), இந்த முனைப்பை ஞாபகப்படுத்திய சாதாரணன் என்ற வலையொலி நேயருக்கும் என் நன்றிகள்.

இந்தப் பகுதியில்
1. இசைஞானி இளையராஜா இசையில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்பாடலான “உச்சி வகுந்தெடுத்து”
2. இசைஞானி இளையராஜா இசையில் காற்றினிலே வரும் கீதம் திரைப்பாடலான “ஒரு வானவில் போலே”
3. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாலும் பழமும் திரைப்பாடலான “ஆலய மணியின் ஓசையை”

ஆகிய பாடல்கள் இடம்பெறுகின்றன. மற்றைய பாடல்கள் தொடர்ந்த இசைக்கோலம் பகுதிகளில் இடம்பெறும்.

நீங்கள் கேட்டவை – பாகம் 2


வணக்கம் நண்பர்களே

பரீட்சார்த்த முறைப்படி அறிமுகப்படுத்திய நீங்கள் கேட்டவை பகுதிக்குப் பின்னூட்டலிலும் தனிமடலிலும் தொடர்ந்து உங்கள் விருப்பப்பாடல்களை அளித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இயன்றவரை தேடற்கரிய, தேடிக்கொண்டிருக்கும் பாடல்களுக்கு முன்னுரிமை கொடுத்து உங்கள் தெரிவுகளைத் தொடர்ந்தும் அனுப்புங்கள்.

இந்த வாரப்பகுதியில் தேர்ந்தெடுத்த ஆறுபாடல்களும், தொடர்ந்த பகுதிகளில் ஏற்கனவே பாடல்களைக் கேட்ட நேயர்களின் விருப்பத்தேர்வும் அணிசெய்ய இருக்கின்றன.

நீங்கள் கேட்டவை 2 பகுதியில் இடம்பெறும் பாடல்கள்

1. தமிழ்ப்பித்தனின் விருப்பத்தேர்வில் காயல் ஷேக் முகமட் பாடிய “ஈச்சை மரத்து” என்ற இஸ்லாமிய கீதம் முதற்பாடலாக வருகின்றது.

2. வசந்தனின் விருப்பத்தேர்வில் பி.சுசீலா பாடிய ” அன்பில் மலர்ந்த” என்ற பாடல்”கணவனே கண்கண்ட தெய்வம்” திரைப்படத்திற்காக ஆதி நாராயணராவ் இசையில் மலர்கின்றது.

3. வெற்றியின் விருப்பத்தேர்வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ” அவள் ஒரு மேனகை” என்ற பாடல் “நட்சத்திரம்” திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையமைப்பில் கலக்குகின்றது.

4. சர்வேசனின் விருப்பத்தேர்வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் குரல்களில் “என் காதலி” என்ற பாடல் “தங்கத்திலே வைரம்” திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் மலர்கின்றது.

5. தெய்வாவின் விருப்பத்தேர்வில் எஸ்.ஜானகி் பாடிய ” காற்றுக்கென்ன வேலி” என்ற பாடல் அவர்கள் திரைப்படத்திற்காக கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலர்கின்றது.

6. மங்கையின் விருப்பத்தேர்வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ” அங்குமிங்கும் பாதை உண்டு” என்ற பாடல் அவர்கள் திரைப்படத்திற்காக கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வருகின்றது.

என் குரற்பதிவில் நீங்கள் கேட்டவை 2 அறிமுகம்

நீங்கள் கேட்டவை 2 பாடற்தொகுப்பு

Powered by eSnips.com

ஒரு படப்பாடல் – மூன்று முடிச்சு


இன்றைய ஒரு படப்பாடல் பகுதியிலே வடுவூர் குமார் என்ற நேயர், நீங்கள் கேட்டவை பகுதியில் கேட்டிருந்த மூன்று முடிச்சு திரைப்படப்பாடல்கள், அப்பாடல்களின் அறிமுகத்தோடு இடம்பெறுகின்றன.

இத்திரைப்படத்தில் இருந்து ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் ஜோடிக்குரலில் வசந்தகால நதிகளிலே, ஆடிவெள்ளி தேடியுன்னை ஆகிய பாடல்களும், எல்.ஆர்.ஈஸ்வரி பி.சுசீலா குரல்களில் நானொரு கதாநாயகி என்ற பாடலும் அணிசெய்கின்றன.

என் குரற்பதிவில் மூன்று முடிச்சு பாடல்கள் குறித்த அறிமுகம்

பாடல்களைக் கேட்க