விஜய் | இளையராஜா | பழநி பாரதி

‘இரவு பகலைத் தேட 

இதயம் ஒன்றைத் தேட 
அலைகள் அமைதி தேட 
விழிகள் வழியைத் தேட 
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ’
வானொலி ஒலிபரப்புக் கூடத்துள் வந்த வேகத்தில் அப்போது இந்தப் பாடலைத் தான் அன்றைய நாளின் முதல் பாடலாக வானலையில் தவழ விடுகிறேன்.
மெல்பர்னில் அதுவரை காலமும் படிப்பில்
செலவழித்து விட்டு சிட்னியில் வேலையில்லாப் பட்டதாரியாக வந்து ஆத்ம திருப்திக்காக ஊதியமற்ற வானொலி வாகனத்தில் ஏறிச் சவாரி செய்த Y2K கால கட்டம் அது. இந்தப் பாடல் ஏனோ என் மனநிலையைப் பாடுமாற் போல இருந்தது. இத்தனைக்கும் இந்தப் பாடலுக்கும் எனக்கும் அன்று தான் முதல் சந்திப்பு. தனியான இருந்த என்னை அரவணித்து ஆறுதல் சொல்லுமாற் போல என்னவொரு திடீர் பந்தம் இந்தப் பாட்டுக்கும் எனக்கும்?
‘சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் கனவைக் கொஞ்சம் சுமக்குமோ’
“கண்ணுக்குள் நிலவு’ திரைப்படத்தின் பாடல்கள் அப்போது தான் மலேசியாவின் அலையோசை இசைத்தட்டு நிறுவனத்தின் வெளியீடாகப் பாலித்தீன் பொதி செய்யப்பட்டு சிட்னிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. வானொலி நிலையத்துக்கு வரும் வழியில் அந்தக் கடையை எட்டிப் பார்த்தபோது இதைக் கண்ட போது கண்ணுக்குள் நிலவே தான். சுடச் சுட அந்தப் பாடலை ஒலிபரப்பிய நிகழ்வை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது என் பிரத்தியோக இசைக் களஞ்சியத்தில் இருக்கும் இந்த இசைத்தட்டு.
‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் “நிலவு பாட்டு நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்” அதுவும் மறக்கக் கூடியதா என்ன? 
இந்தப் படம் வந்த போது உடனடிப் பிரபலமானது என்னவோ “ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது” பொதுவாகவே அதிக ஜனரஞ்சக அந்தஸ்துப் பெறும் பாடல்களைக் கொஞ்சம் நிதானமாகவே அனுபவிக்கலாமே என்ற என் கொள்கையில் இந்தப் பாட்டும் விதிவிலக்காக அமையவில்லை.
“தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
விழியோரம் வழி வைக்கிறேன்,
என்னைத் தாலாட்ட வருவாளா”
“கிறுகிறுவெண்டு படித்து முடித்து விட்டு உடனேயே நாட்டுக்குப் போகவேண்டும்” என்று என் மனச்சாட்சியை உறுக்கிக் கொண்டிருந்த காலமது. மெல்பர்ன் வந்து இரண்டு ஆண்டுகள் தான் கடந்திருக்கிறது ஆனால் இரண்டு யுகங்கள் போலத் துன்புறுத்திய தனிமையும், இரவைப் பகலாக்கித் தொழில் சுமந்து,  பகலில் பாடப்புத்தகம் சுமந்து கொண்டிருந்த நாட்கள். இதுவே ஒரு யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகமாகவோ, பேராதனை வளாகமாகவோ இருந்தால் பச்சைக் குடை அசோக மரங்களில் கீழ் காதல் மொழி பேசிக் கொண்டிருக்கும். இங்கோ கற்பனைக் கோட்டை எழுப்பி
“விழியோரம் வழி வைக்கிறேன்”
‘காதலுக்கு மரியாதை” காலத்தில் இருந்து இன்று வரை ஒவ்வொரு பாடலாக அதே படத்தின் ஒவ்வொரு பாடல்களும் மாறி மாறி என் விருப்பத் தேர்வில் முன் நிற்கும். இப்போது அது 
“ஏ இந்தா இந்தா இந்தா 
ஐயா வூடு 
தெறந்து தான் இருக்கு”
கேட்கும் போதே இடம் பாராமல் துள்ள வைக்கும் மொத்திசை.
“நீயா அட நானா நெஞ்சை முதன் முதல் இழந்தது யார் ந ந ந ந ந
காதல் எனும் ஆற்றில் இங்கு முதன் முதல் குதித்தது யார்,
தென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா”
பாடல் ஆரம்பிக்கும் போது ஒரு வாத்தியம் கீச்சிட ஆரம்பிக்குமே அந்த நேரமே கண்களை மூடி இசை வாகனமேறி கனவுலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் சீடி பொருத்திய வாக்மேன் மடியில் கிடக்க, மேசையில் ஒருக்களித்துப் படுத்துக் கண் மூடியபடி பாடலோடு ஐக்கியமாகியிருப்பேன். ஃப்ரெண்ட்ஸ் படம் வந்து பதினைந்து ஆண்டுகளைத் தொடப் போகிற பாட்டு ஆனால் இன்னும் பதினைந்து ஆண்டுகள் போனாலும் பருவக் குமரியாகத் தான் இருக்கும் போல இந்தப் பாட்டு, “அள்ளிக் கொடுத்தேன் மனதை”
இசைஞானி இளையராஜாவின் ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் இளங்கவி பழநி பாரதியின் பாடல்கள் என்று எழுத்தோட்டத்தில் காட்டி வெற்றிக் கூட்டணி அமைக்கிறார்கள். நாயகன் விஜய் இன் திரையுலக ஆரம்ப வாழ்வின் திருப்புமுனைப் படங்களில் ஒன்று. சங்கிலி முருகன் தயாரிப்பு, அப்படியே விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு அடுத்த தசாப்தம் வரை வெற்றியை அள்ளிக் கொட்டப் பிள்ளையார் சுழி போட்ட படம்.
“கண்ணுக்குள் நிலவு” படத்திலும் அதே பாசில், இளையராஜா, விஜய், கூட்டணி 
இங்கேயும் முழுப் பாடல்களும் பழநிபாரதிக்குச் சீர் செய்ய, அவரும் இன்றளவும் இந்தப் பாடல்களைப் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்கு வரிகளை அணிகலனாக்கியிருக்கிறார் ராஜாவின் முத்தான மெட்டுகளை வைத்து.
இயக்குநர் பாசிலின் அந்த இரண்டு படங்களோடு அவரின் சீடர் சித்திக் இன் “ப்ரெண்ட்ஸ்”. அதிலும் விஜய், இசைஞானி இளையராஜாவோடு, இளங்கவி பழநி பாரதியே முழுப்பாடல்களையும் ஆக்கித் தந்தார்.
“இரவு பகலைத் தேட”
 http://www.youtube.com/watch?v=4soLRlhOfPc&sns=tw 
“என்னைத் தாலாட்ட வருவாளோ”
 http://www.youtube.com/watch?v=8SnPN4-NF9I&sns=tw 
“தென்றல் வரும் வழியை”
 http://www.youtube.com/watch?v=tOPjl71yoaQ&sns=tw 

சஹானா சாரல் தூவுதோ – மழைப்பூக்களின் பாட்டு

“சஹானா சாரல் தூவுதோ” மழைப்பூக்களின் பாட்டு

கண்ணாடிச் சன்னலின் உருண்டைப் புள்ளியாகப் பட்டுத் தெறிந்து அப்படியே இழுபட்டுக் கீழிறங்குகின்றன மழைத் துளியின் கோடுகள், சிட்னி ரயிலில் கூட்டமில்லாத காலை ஏழுமணிப் பயணத்தில். மழைப்புள்ளிகள் ஜன்னலில் திட்டுத் திட்டாகப் பரவி மறு முனையில் இருந்து சினேக விசாரிப்பாய்.

“சஹானா சாரல் தூவுதோ” காதுக்குள் கண்கூடாகத் தொனித்த அந்த மழைத் துளியின் தெறிப்புகளுக்கு இசை வடிவம் கொடுக்குமாற் போல மலருகின்றது இன்றைய காலை.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் A380 என்ற காண்டாமிருகப் பயணி வண்டி சிங்கையில் இருந்து சிட்னி நோக்கிப் பயணிக்கிறது. நெருக்கம் காட்டாத அகன்ற இருக்கை, ஹெட்ஃபோனால் காதுகள் நத்தை தன் கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டது போல இசைக்குள் அடைக்கலம். 
சாக்ஸ் ஆலாபனை எழுப்ப 
2.27 நிமிடத்தில் வந்து சறுக்கிக் கொண்டே மெல்ல எழும்புமே ஒரு இசை அந்தக் கணம் விமானப் பயணத்திலும் சன்னலின் முத்தம் பதித்தன மழைத் துளிகள்.
“தீம் தரனன தீம் தரனன திரனன திரனன” என்று அந்த இசையை வாரியணைக்கும் ரஹ்மானுடன் சேர்ந்த கூட்டுக் குரல்களைக் கேட்கும் போது மழையின் நர்த்தனம் தான் அதைக் காட்சிப்படுத்த முடியும்.
எட்டு வருடங்களுக்கு முன்னான அந்த விமானப் பயணம் அது. விமானத்தின் பிரத்தியோக இசைப்பெட்டியில் சேமித்து வைத்திருந்த பாடலில் ஒன்றாக இதுவும் இருந்தது.
அன்று வானத்தில் மிதக்கும் போது தந்த மழைச் சுகம் இன்று தண்டவாளத்தில் வழுக்கிப் பயணிக்கும் வண்டியில்.
உதித் நாராயணனின் தேங்காய் உரிக்கும் தமிழோடு சின்மயி மெல்லிசைக் குரல் ஜோடி போடும். பாடலில் தனக்கான ஒவ்வொரு சொல்லையும் நோகாமல் வளைத்தும் நெளித்தும் கொடுத்த வகையில் சின்மயி வெகு சிறப்பாக உழைத்திருக்கிறார்.
“தலை முதல் கால் வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்து விடு” என்று கிசுகிசுக்கும் போது பின்னால் தாள வாத்தியம் டுடுடுடும்ம்ம்மென்று  ஆரவாரமின்றி இழுபட்டு அப்படியே மிருதங்கத்திடம் போகும் போது இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அந்தத் தாளத்தைப் பின்னணியில் கொடுத்துக் கொண்டே போகுமே, ஹெட்போனில் மிக நெருக்கமாக இந்தப் பாடலோடு உட்கார்ந்து கொள்ளும் போது அந்த நொடிகள் தரும் பரவசமே தனி.
ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இதுவரை வந்த பாடல்களில் ஆகச் சிறந்த பாடலாக இதையே என் பட்டியலில் முதலில் சேர்ப்பேன்.
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை (மழைப்) பூக்களில் நிரப்பட்டுமா 
பிஞ்சுக் கால்களைத் தொப்பென்று பதித்துக் குதித்து விளையாடும் குழந்தை போல
சன்னல் கண்ணாடியில் குதிக்கும் மழைத் துளிகள்
 http://www.youtube.com/watch?v=MSCBx07ENGQ&sns=tw 

இசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா

இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை “தெளிவான” சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். அதற்கு முன்னரே ஈழத்தின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை

“எல்லார்க்கும் விருந்தளித்து 
ஏற்றம் பெற்ற எங்கள் இனம்
மரணதேவதையின் கோரப்பசிக்கு 
விருந்து கொடுத்த பின்
அங்கே இப்போது அகதியானது”
போன்ற புதுக்கவிதைகள் தாங்கிய “திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்” என்ற தொகுதியில் கொடுத்திருப்பார்.
மு.மேத்தாவின் கவிதைகளை அவரின் “ஊர்வலம்” என்ற கவிதைத் தொகுதியே எனக்கு அறிமுகப்படுத்தியது. பின்னர் அவளுக்கு ஒரு கடிதம், நடந்த நாடகங்கள், முகத்துக்கு முகம், அவர்கள் வருகிறார்கள், கண்ணீர்ப்பூக்கள், வெளிச்சம் வெளியே இல்லை, நந்தவன நாட்கள், மு.மேத்தா முன்னுரைகள், மு.மேத்தா திரையிசைப்பாடல்கள் என்று வாங்கிக் குவித்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் “காதலர் கீதங்கள்” என்ற வானொலித் தொகுப்பைத் தயாரித்து வழங்கியபோது வெறுமனே காதல் பாடல்களை மட்டும் சேர்த்து இட்டு நிரப்பாமல், பின்னணி இசையோடு அவரின் கவிதைத் தொகுதிகளில் இருந்து இரண்டடி வரிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு அதற்கேற்ற சூழலுக்குப் பொருந்துமாற்போலப் பாடல்களை இணைத்துக் கொடுத்தேன். அந்தப் படைப்பு நேயர்களைக் கவரவே பின்னர் தாங்களும் ஈரடிக் கவிதையோடு பாடல்களை இணைத்து வானொலிப் பிரதியாக அனுப்பி நிகழ்ச்சி தயாரிக்க வைத்தார்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இந்த நிகழ்ச்சியைச் செய்தேன்.

மு.மேத்தாவின் புதுக்கவிதைகளை நடிகர் முரளியின் ஏக்கம் கலந்த தொனியில் அந்தக் காதலன் உள்ளக்கிடக்கையாகக் கொடுத்த இதயம் படம் சிறப்பானது.அந்த ஒலிப்பகிர்வுகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.
http://www.radiospathy.com/2011/02/www-www.html
கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் உள்ளிட்ட வெற்றிகரமான திரையிசைப்பாடலாசிரியர்கள் தம் திரையிசை அனுபவங்கள், பாடல் பிறந்த கதைகளை நூலுருவில் கொடுத்தது போன்றே மு.மேத்தா அவர்களும் தனது திரையிசைப்பாடல்கள் நூலில் தன் ஆரம்பகாலப் படங்களின் பாடல்கள் உருவான சுவையான பின்னணி மற்றும் காட்சிக்குப் பொருந்திய பாடல் வரிகளின் நியாயத்தை எல்லாம் நிறுவியிருப்பார். அத்தோடு பிரபல வானொலி, தொலைக்காட்சிப் படைப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீத் அவர்கள், கலைஞர் தொலைக்காட்சியில் படைத்த இன்னிசை மழை என்ற நிகழ்ச்சியிலும் மு.மேத்தாவின் பாடல் அனுபவங்கள் சிறப்பாகப் பதிவாகியிருக்கின்றன.
“அனிச்ச மலர்” என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் அறிமுகமான மு.மேத்தாவுக்கு “ஆகாய கங்கை” என்ற இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த படத்தின் “தேனருவியில் நனைந்திடும்” http://www.youtube.com/watch?v=lrCmn2WdRSE&sns=em என்ற பாடலே அதிக புகழைக் கொடுத்தது. அந்தப் பாடல் வாய்ப்பை மு.மேத்தாவின் நண்பர் கமல்ஹாசனே பெற்றுக் கொடுக்கக் காரணமாக அமைந்தாராம்.
தொடர்ந்து இதய கோவில் படத்தில் இடம்பெற்ற “யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ”   http://www.youtube.com/watch?v=jRCh-b-a334&sns=em 
நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் இடம்பிடித்த “பெண்மானே சங்கீதம் பாடிவா”  http://www.youtube.com/watch?v=Dj-cimDzqoY&sns=em 
சொல்ல துடிக்குது மனசு படத்தில் வந்த “வாயக்கட்டி வயித்தக் கட்டி” 
http://www.youtube.com/watch?v=JVOdYtytRNk&sns=em
என் புருஷன் எனக்கு மட்டும் தான் படத்தில் வந்த “மனதில் ஒரே ஒரு பூப்பூத்தது” 
http://www.youtube.com/watch?v=Q2VC0QoqHoc&sns=em
கோடை மழை படத்தில் இடம்பெற்ற “பல பல பல பல குருவி” http://www.youtube.com/watch?v=qWyuY1UQyjU&sns=em
போன்ற இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரர் மு.மேத்தா. 
உதய கீதம் படத்தில் வந்த “பாடு நிலாவே தேன் கவிதை” http://www.youtube.com/watch?v=nrTKUhNQaWg&sns=em பாடலை நாயகி பாடுவது போல் ஆரம்பித்து நாயகனும் இணையும் வேளை நாயகனும் பாடு நிலாவே என்று பாடுவது பொருந்தாது ஏனென்றால் அவன் மூடிய சிறைக்குள் இருந்து அவளின் குரல்கேட்டுப் பாடுகிறானே எனவே “பாடும் நிலாவே” என்று மாற்றி பாடல் வரிகளில் நுணுக்கம் இருக்க வேண்டிய தேவையைச் சுட்டினாராம் இளையராஜா.
“ராஜராஜ சோழன் நான்” http://www.youtube.com/watch?v=7f1kEtA-xRM&sns=em என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலே மு.மேத்தாவைப் பரவலாகக் கொண்டு சேர்த்த இனிய பாடல். அந்தப் பாடல் ஒன்றே போதும் மு.மேத்தாவின் கவிச்சிறப்பைத் திரையில் காட்ட. 
வேலைக்காரன் படத்தின் படக்குழு இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் வட நாட்டுக்குச் சென்றுவிட, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா சார்பில் இயக்குனர் கே.பாலசந்தரே ஒவ்வொரு பாடலுக்குமான கதைக்களனைச் சொல்லி மு.மேத்தாவை அனைத்துப் பாடல்களையும் எழுத வைத்து, இசைஞானி இளையராஜா இசையில் கொண்டுவந்தது ஒரு புதுமை. “தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்” என்று சமூக சிந்தனையை “வா வா வா கண்ணா வா” காதல் பாடலில் புகுத்தியிருப்பார் மு.மேத்தா.
தன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுகின்றார்.
“தென்றல் வரும் தெரு” http://www.youtube.com/watch?v=oeN1fVS-Psg&sns=em என்று சிறையில் சில ராகங்கள் படத்துக்குப் பாடல் எழுதினேன்.
இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.
நான் தயாரித்த “தென்றல் வரும் தெரு” திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.
இரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. “தென்றல் வரும் தெரு அது நீ தானே” என்ற பாடல் வரிகளை முதல் அடியாகக் கொண்டு “சிறையில் சில ராகங்கள்” திரைப்படம் 1990 இல் வெளியானது. அது நடிகர் முரளி, பல்லவி நடிப்பில் வெளியானது.அடிகள் பயன்பட்ட மு.மேத்தாவின் தயாரிப்பில் வந்த “தென்றல் வரும் தெரு” ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடிப்பில் வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து 1994 இல் தான் படம் வந்தது.
இந்தப் படத்திலும் தென்றல் வரும் தெரு http://www.youtube.com/watch?v=ZvtCLpjMnvw&sns=em என்று இன்னொரு பாடலை எழுதியிருப்பார் மு.மேத்தா.
மு.மேத்தாவின் திரையிசைப் பயணத்தில் இப்படிக் கிட்டிய எண்ணற்ற முத்துகள் ஏராளம்.
இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணிபுரியும் பாடலாசிரியர்களில் வாலிக்குப் பின்னர் இன்னமும் தொடர்ந்து சேர்ந்திசையாகப் பயணிக்க்கும் கவிஞர் மு.மேத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பாடலாசிரியர் மதன் கார்க்கியை வானலையில் நான் சந்தித்த போது


தமிழ்த்திரையிசையில் கண்ணதாசனுக்குப் பின் சகாப்தமாக விளக்கிவரும்  பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, தந்தை வழியில் தனயன் மதன் கார்க்கி அவர்களும் இன்று தமிழ்த்திரையிசையின் இன்றைய தலைமுறைப் பாடலாசிரியராகவிளங்கிவருகின்றார்.  பாடலாசிரியர் மதன் கார்க்கியை கடந்த 25 டிசெம்பர் 2011 ஆம் ஆண்டு நமது  அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வானலையில் சந்தித்திருந்தேன்.
 
நான் பேட்டி கண்ட போது குறுகிய காலத்திலேயே திரையிசையில் ஐம்பது பாடல்களை எழுதியதோடு கோ படத்தின் “என்னமோ ஏதோ” பாடல் மூலமாக மிகவும் பரவலாக அறியப்பட்டதொரு திரைக்கவிஞராக விளங்கியிருந்தார். இன்று சமீபத்தில் வெளிவந்த “புதிய உலகைத் தேடிப்போகிறேன்” பாடல் மூலம் இன்னும் தன்னை மெய்ப்பித்து வருகின்றார்.

ஆஸி நாட்டில் இவர் படித்துக் கொண்டிருக்கும் போதே வைரமுத்து அவர்களின் மகன் இங்கிருக்கின்றார் என்ற சேதியோடு மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழகம் சென்று தனக்கான கச்சிதமான பாடலாசிரியர் பணியோடு , தொழில் நுட்பத்தையும் ஒருங்கே அரவணைத்துத் தமிழோடு உறவாடி வருவதில் மகிழ்வு கொண்டு அவரைப் பேட்டி காணத் தருணம் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கும் வாய்த்தது.

2012 ஆம் ஆண்டு நான் சென்னை போகின்றேன், எதிர்பாராத அழைப்பின் வழியாக மதன் கார்க்கியைச் சந்திக்க வேண்டியிருந்தது. நேரில் நானும் நண்பர் கேயாரெஸ் உடன் மதன் கார்க்கியைச் சந்தித்த அந்தக் கணங்கள் மறக்க முடியாதவை. இன்று மார்ச் 10 ஆம் திகதி மதன் கார்க்கியின் பிறந்த தினத்தில் அவரின் இந்தப் பேட்டியைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.

இதோ அவரிடம் நான் கண்ட பேட்டியின் முக்கியமான கேள்விகளும்
மிக முக்கியமாக

“இசைஞானி இளையராஜா – கவிப்பேரரசு வைரமுத்து இந்த இரண்டு இமயங்களும் இணைந்து காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்திருக்கின்றார்கள். ஒரு ரசிகராக இவர்களின் பிரிவை எப்படிப்
பார்க்கின்றீர்கள்?” என்ற கேள்விக்கு அவர் கொடுத்த சிறப்பான பதிலையும் கேளுங்கள்.

Download பண்ணிக் கேட்க

மேலும் இந்தப் பேட்டியில் முன் வைத்த கேள்விகளில்,

தமிழ்த்திரையுலகில்  நடிப்பு, தொழில் நுட்பம், இசை என்று வாரிசுகள் தம் திறமையைக் காட்டிவருவது புதிதல்ல, ஆனால் என் அறிவுக்கு எட்டியவரை முதல் கவிஞராக தங்கள் தந்தை வழியில்
பாடலாசிரியராக வந்திருக்கின்றீர்கள் இந்த வாய்ப்பு எப்படி உங்களுக்கு அமைந்து கொண்டது?

2011 உங்களைப் பொறுத்தவரை மறக்க முடியாத ஆண்டு கோ என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்த “என்னமோ ஏதோ” உங்களுக்கு ரசிகர்களையும் விருதுகளையும்
அள்ளித்தந்தது அதைப் பற்றி?

2011 ஆம் ஆண்டில் இன்னொரு மைல்கல்லையும் நீங்கள் தொட்டிருக்கின்றீர்கள் அதாவது 50 பாடல்களை குறுகிய காலத்தில் எழுதிக் குவித்திருக்கின்றீர்கள், அதற்கு எமது வாழ்த்துக்களைப்
பகிர்வதோடு இந்த வெற்றிப்பயணத்தில் நீங்கள் கூடப்பயணித்த இசையமைப்பாளர்களையும் அவர்களின் வேலை வாங்கும் திறனையும் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

பாடல்களில் விஞ்ஞானக் கருத்துக்களைத் தம் உவமையில் கொண்டுவந்து சிறப்புச் சேர்த்தவர் உங்கள் தந்தை வைரமுத்து அவர்கள், உங்கள் அனுபவத்தில் உங்களை நீங்கள் வித்தியாசப்படுத்திக்
காட்ட எந்தெந்த வகையில் முனைந்திருக்கின்றீர்கள்?

பாடல்களுக்கு மெட்டமைக்கும் போது டம்மி வரிகளைப் போட்டு நிரப்புவது வழக்கம் இன்றோ அதுவே நிலைத்து முழுப்பாடலும் வரும்போது பாடலின் இலக்கியத் தரம் குறித்த கரிசனை எழுகின்றது
இதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

மதன் கார்க்கி முகப்புப் படங்கள் நன்றி
 http://kobirajkobi.blogspot.com.au

 http://www.myoor.com/tamil

இன்னபிற பாடலாசிரியர்கள் 3 : குருவிக்கரம்பை சண்முகம் “இங்கே இறைவன் என்னும் கலைஞன்”

இன்னபிற பாடலாசிரியர்கள் வாயிலாக, தமிழ்த்திரையுலகின் நன்முத்துக்களாய் அமைந்த பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களின் பாடல்களை இனம்காட்டும் வகையில் இந்தப் பதிவின் வாயிலாக,பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் அவர்களின் பாடலோடு சந்திக்கின்றேன்.
என் மனசுக்கு நெருக்கமான இன்னொரு பாடல் இது, சென்னை வானொலி வழியாக எனக்கு அறிமுகம் கண்ட இந்தப் பாடலைக் கேட்கும் கணங்களில் பிரிந்த நண்பனை மீண்டும் சந்திக்கும் ஏக்கம் கலந்த சந்தோஷம் ஒட்டிக் கொள்ளும்.

 ஒரு சில வருடங்களுக்கு முன்னர், வானொலியிலே நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருக்கிறேன் ஒரு நாள். அந்த நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்குக் கலந்துரையாடல் நிகழ்ச்சி என்பதால் நேயர்கள் கலந்து கொண்டு கலகலப்பாகப் பேசி மகிழ்கின்றார்கள், இடைக்கிடை நானும் இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கின்றேன். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது, அழைத்தவர் எமது வானொலியின் சக அறிவிப்பாளர் செலஸ், “பிரபா நீங்கள் போடும் பாடல்கள் எல்லாமே அற்புதம், இந்த இரவு நேரத்தில் படுக்கையில் இருந்து கேட்கும் போது இதமாக இருக்கின்றது” என்று அவர் சொல்ல, நானும் சும்மா இருக்காமல் “சரி நல்ல பாடல்களை ரசிக்கின்றீர்கள் கண்டிப்பாக நல்ல பாடகர் உங்களுக்குள் ஒளிந்திருப்பார், உங்கள் மனதுக்கு நெருக்கமான பாடலை இப்போது எடுத்து விடுங்கள்” என்று அவருக்குத் தூண்டில் போட்டேன். கொஞ்சம் தயங்கியவரை விடாப்பிடியாகப் பாட நானும் சொல்ல “ஓகே என் குழந்தைகள் இருவரையும் நித்திரையாக்குவதற்காக நான் பாடும் பாடலைப் பாடுகிறேன், உங்களுக்குப் பிடிக்குமோ தெரியாது” கனத்த தன்னடக்கதோடு பாடுகின்றார், இப்படி
 “இங்கே இறைவன் என்னும் கலைஞன்
நன்றாய் உலகை என்றோ படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட
வார்த்தைகள்
இல்லை நான் கவிபாட
என்னென்ன அழகே ஹோ”
எனக்கோ உடம்பில் மின்சாரம் பாய்ச்சியது போன்ற ஒரு உணர்வு. ஏனென்றால் எவ்வளவு அருமையான இந்தப் பாடல், பலரால் நேசிக்கப்படாமலேயே போய்விட்டதே என்று ஏங்கிக்கொண்டிருக்கும் அதே பாடலை இன்னொரு ரசிகர் எதிர்பாராத தருணத்தில் பாடுவதோடு மட்டுமல்லாமல், தன் குழந்தைகளுக்கான தாலாட்டாகவும் பாடிப்போற்றுகின்றாரே என்று பேரானந்தம் கொண்டு அவரை வாயார வாழ்த்தினேன்.
அடுத்த நாள் முதல்வேலையாக உள்ளூர் ரெக்கார்டிங் சென்டருக்குச் சென்று அந்தப் பாடல் இடம்பெற்ற “சார்…ஐ லவ் யூ” படத்தின் ஒரிஜினல் இசைத்தட்டை வாங்கி என் மனதுக்குள் ஒரு கொண்டாட்டத்தை நிகழ்த்திக் கொண்டேன். அன்று முழுக்கக் காரிலும், வீட்டிலும் அதே பாடலைக் கேட்டுக் கேட்டுக் கொண்டாடினேன்.

 இன்று வேலையில் இருந்து வீடு திரும்பும் போது ஏதாவது ஒரு ராஜா இசையமைத்த பாடலைக் கேட்கவேண்டும் என்று நினைத்தபோது என் ஞாபகக்குதிரை பாய்ந்து வந்து இதே பாடலை எடுத்துக் கொடுத்தது.
“சார்…ஐ..லவ் யூ” படத்துக்காக இடம்பெற்ற இங்கே இறைவைன் என்னும் கலைஞன்” பாடலை இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையரசி பி.சுசீலா மற்றும் மனோ ஆகியோர் பாடுகின்றார்கள்.  பாடலில் மனோ பாடும் பாடும் அதை அடிகளை பி.சுசீலா சற்று மாறுபட்டுப் பாடி நுணுக்கம் காட்டியிருப்பார், கூடவே உறுத்தாத புல்லாங்குழல் முன்னணியில் வர பின்னே வாத்தியங்களின் அடக்கமான ஆர்ப்பரிப்பு.
எண்பதுகளில் வலம் வந்த பாடலாசிரியர்களில் குருவிக்கரம்பை சண்முகம் அவர்களும் நல்ல சில பாடல்களின் கருவாக விளங்கிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார். அந்தவகையில் இங்கே நான் பகிரும் பாடலும் அவரின் கவிச்சிறப்பைச் சான்று பகிரும் இதோ,

இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட
வார்த்தைகள் இல்லை நான் கவிபாட
என்னென்ன அழகே ஓ

இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்

பனியின் துளி சூடியே கொடியில் மலர் ஆடுதே
நதியின் அலை நாளுமே கரையில் இடும் தாளமே
காலமே நீயும் நீர் போல் வேகமாய் ஓடலாம்
வருவார் போவார் நிலையாய் இங்கே நீதான் உண்டு
அழகே ஹோய்

இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட
வார்த்தைகள் இல்லை நான் கவிபாட
என்னென்ன அழகே ஹோ

எழில் நிறைந்த கோலங்கள் எண்ணிறைந்த ஞாலங்கள்
இதை மறந்து வாழ்ந்திடும் மனிதர் என்ன ஜென்மங்கள்
விழித்திருந்தும் தூங்குவோர்க்கு விழியிரண்டு ஏனடா
வருவார் போவார் நிலையாய் இங்கே நீதான் உண்டு
அழகே ஹா

இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
உண்மைகள் வந்து என் மனத்தாட
வார்த்தைகள் இல்லை நான் கவிபாட
என்னென்ன அழகே ஓ
இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்

இன்னபிற பாடலாசிரியர்கள் 2 – புலவர் சிதம்பரநாதன் ” ஏரிக்கரைப் பூங்காத்தே”

 கடந்த பதிவில் குறிப்பிட்டது போன்று தமிழ்த்திரையிசைப்பாடல்களில் பல்லாயிரம் நம் மனதில் இடம்பிடித்திருந்தாலும் அவற்றை ஆக்கிய பாடலாசிரியர் யார் போன்ற விபரங்கள் பலரை எட்டாதிருக்கும். அப்படியானதொரு அருமையான பாடல் தான் “ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போறவழி தென்கிழக்கோ”. தூறல் நின்னு போச்சு படத்தில் வந்த இந்த இனிமையான பாடல் இசைஞானி இளையராஜா இசையில் புலவர் சிதம்பரநாதன் எழுதியது.
புலவர் சிதம்பரநாதனோடு கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம். வைரமுத்து, இயக்குனர் கங்கை அமரன் என்றே டைட்டில் கார்டில் போட்டு அவருமாக  பாடல்கள் எழுதிய இந்தப் படத்தில் எல்லாப்பாடல்களுமே முத்துக்கள்.

 புலவர் சிதம்பரநாதன் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்குப் பாடல்கள் எழுதியவர். கே.ஜே.ஜேசுதாஸ் பாக்யராஜுக்காகப் பாடி நிறைவில் முப்பது நொடிகள் முதியவருக்கான குரலாக ஜேசுதாஸ் மாறி எம்.என். நம்பியாருக்காகப் பாடியிருப்பார்.

ஏரிக்கரைப் பூங்காத்தே! நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே! நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே….

பாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்
மயிலே
பாதமலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விரிச்சேன்
மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்தப் பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது

ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே….

ஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி
அடியே
ஓடிச் செல்லும் வான்மேகம் நெலவை மூடிக்கொள்ளப் பார்க்குதடி
அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே  காத்திரு

ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
 ஏரிக்கரைப் பூங்காத்தே…….நீ போற வழி….தென்கிழக்கோ
அட தென்கிழக்கு வாசமல்லி என்னைத் தேடிவரத் தூது சொல்லு
ஏரிக்கரைப் பூங்காத்தே

இன்னபிற பாடலாசிரியர்கள் 1 “காமராசன்” – கண்ணன் வந்து பாடுகின்றான்

 தமிழ்த்திரையிசையின் ஆரம்பகாலம் தொட்டு இன்று இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் தம்மைப் பதிவு செய்திருக்கின்றார்கள். ஆனால் பரவலான வட்டத்தில் கண்ணதாசனையும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும், வைரமுத்துவையும், வாலியையும் தாண்டி எல்லாக் கவிஞர்களது பாடல்களையும் இன்ன இன்னார் தான் எழுதினார்கள் என்று யாரும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அதற்குப் பல காரணங்கள், கண்ணதாசனும், வைரமுத்துவும், வாலியும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தங்களின் பாடல்கள் பிறந்த கதையை எழுத்திலோ, பேச்சிலோ தொட்டுச் சென்றுவிடுவார்கள்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரையிசைக்காலம் குறுகியது என்றாலும் அவரின் செழுமையான பங்களிப்பை இன்றைய சமுதாயமும் தெரிந்து கொள்ள ஓரளவேனும் உதவியது திண்டுக்கல் லியோனி போன்றோரின் ஜனரஞ்சகமான பாட்டு மன்றம் போன்றவையே என்றால் மிகையில்லை. ஒருமுறை வாலி எழுதிய பாடலை மனோரமா, கண்ணதாசன் எழுதியது என்று சிலாகிக்க வாலியே நொந்து போய் “அதை எழுதியது நாந்தானம்மா” என்றுமளவுக்கு நிலமை இருந்தது, பின்னாளில் வாலியின் ஆயிரம் பாடல்களில் கூட வாலி எழுதாததும் தவறுதலாக வந்தது காலம் செய்த கோலமடி. அந்தக்காலம் போல இந்தக்காலத்து இசைவட்டுக்களிலும் பெரும்பாலும் பாடலாசிரியர்கள் பெயர் போடாமை, தனித்துவமான பாடலாசிரியர்கள் இல்லாமல் எல்லாருமே கோரஸ் வரிக்காரர்களாக இயக்கும் சூழல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.

இவர்களைத் தாண்டி, கங்கை அமரன், நா.காமராசன், பொன்னடியான், பிறைசூடன், முத்துலிங்கம் என்று எண்பதுகளிலும் பல பாடலாசிரியர்கள் இயங்கியிருக்கிறார்கள். இவர்களின் பாடல்களை அவ்வப்போது நினைவில் நிறுத்த ஒரு வாய்ப்பாக இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறேன்.
றேடியோஸ்பதியில் முன்னர் இவ்வாறு
கவிஞர் பொன்னடியானும் இசைஞானி இளையராஜாவும் என்றெல்லாம் கொடுத்திருந்தாலும் இந்தத் தொடரை நீட்டித்து வாழ்நாள் பூரா எழுதி வைக்கலாமே எனத் தோன்றியது, அதாவது 3665 நாட்களாவது 😉

இணையத்தளங்களிலும் எழுந்தமானமாக வாலி, வைரமுத்து என்று பாடல்களுக்கு உரிமையை மணல் கொள்ளை ரேஞ்சில் அள்ளிக் கொடுத்துவிடுவார்கள், இந்த அவலத்தைக் கொஞ்சமேனும் குறைக்கவெண்ணியபோது எழுந்த சிந்தனையே இது.

இதற்குக் கால்கோளாக அமைந்தது நண்பர் என்.சொக்கன் நேற்று ட்விட்டரில் ஆயர்கள் மத்துச் சத்தம்போலவே, ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே! #NowPlaying முத்தச் சத்தத்துக்கு மத்து கடைகிற சத்தம் உவமை, வாவ்!யார் எழுதியது?
என்று எழுதியதையே கண்ணன் சுழியாக எடுத்துக் கொண்டு காமராசனில் இருந்து தொடங்குகின்றேன்.

“கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்” இந்தப் பாடல் ரெட்டைவால் குருவி படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் நா.காமராசனால் எழுதப்பட்டது. படத்தின் இயக்கம், பாலுமகேந்திரா. படத்தில் நாயகி ராதிகா ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. படப்பிடிப்பின் போது நடன இயக்குனர் இல்லாத சூழலில் நடிகை ராதிகாவே சமாளித்து பாடலின் இசைக்கேற்ப ஆட, படம் பிடிக்கப்பட்டதாம். ஆர்ப்பாட்டமின்றி இசைக்கருவிகள் அடக்கமாக ஒலிக்க, அதற்கு இசைவாக ராதிகா கொடுக்கும் நளினங்களே போதுமே.
இதோ பாடலாசிரியர் நா.காமராசனின் வரிகளில் “கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்” எஸ்.ஜானகி குரலில் உயிர்பெறுகிறது.


பாடல் வரிகள் இசையமுதம் தளம் வழியாக,

 கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே
காதலென்னும்.. ஓ ஓ..
காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணங் கோடி.. சின்னந் தேடி
மின்னும் தோளில் கன்னங் கூட
சந்தம் பாடி.. சொந்தம் தேடி.. சொர்க்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்

வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
மாலை நிலா.. ஆ ஆ..
மாலை நிலா பூத்ததம்மா.. மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும்.. தென்றல் வீசும்
கண்ணன் பாட.. கண்கள் மூட.. கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்