#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு

இன்றோடு இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டி நிகழ்ச்சி https://radiospathy.wordpress.com

தனது 500 வது போட்டியோடு இனிதே நிறைவை நாடுகின்றது.

இசைஞானி இளையராஜாவின் அள்ள அள்ளக் குறையாத இசைக் கடலில் எத்தனையோ முத்துகளைத் தேடியெடுக்கும் நல் வாய்ப்பு இந்தப் போட்டி வழியாக அமைந்தது.
இந்தப் போட்டிக்கு முன்னோடியாக அமைந்தது 2007 ஆம் ஆண்டில் எனது றேடியோஸ்பதி தளத்தின் வாயிலாகக் கொண்டு நடத்திய றேடியோஸ்புதிர் http://www.radiospathy.com/2007/10/blog-post.html
அந்தப் போட்டி அறுபது போட்டிகளைக் கடந்து, இளையராஜா மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களது போட்டிகளோடும் தொடர்ந்த நிலையில் இந்தப் போட்டியைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடத்துவதற்கான உந்துதலாக நண்பர் ரெக்ஸ் அருள் நடத்திய போட்டி அமைந்தது.
இசைஞானியின் பாடல்களை வைத்துப் புதுமையானதொரு போட்டி வைக்க வேண்டும் என்று நினைத்த போது அவரின் பாடல்களில் தனித்துவமாக அமைந்த கோரஸ் குரல் ஓசையை வைத்துப் பண்ணலாமே என மனதில் திடீரென்று எண்ணம் உதித்தது.
“இரு விழியின் வழியே நீயா வந்து போனது”  (சிவா) பாடலோடு பெப்ரவரி 25 இந்தப் போட்டி ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் இருந்தே இந்தப் போட்டியில் தமிழில் இடம்பெறும் பாடல்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது தேர்வு இன்னும் மட்டுப்படுத்தப்பட்டது.
நிதமும் சராசரியாக 50 பேர் அல்லது அதற்கும் மேலாகப் போட்டியில் பங்கெடுத்த சுற்றுகளும் இருந்தது இந்தப் போட்டியின் வெற்றி எனலாம்.
ஒவ்வொரு படத்திலும் கோரஸ் பாடல்கள் அமைவது அபூர்வம், சில சமயம் ஒரே படத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட கோரஸ் பாடல்களும் இருந்ததுண்டு. ஆரம்பத்தில் எனது மனதில் சட்டென்று தோன்றிய பாடல்களைக் கொடுத்து வந்தேன். பின்னர் கையிருப்பு வற்றிய போது தேடல் மிகவும் சவாலாக அமைந்தது.
குறிப்பாக பாடகர்/கவிஞர் சிறப்பு வாரம் அமையும் போது ஒவ்வொரு நாளும் குறித்த ஆளுமையின் வெவ்வேறு தன்மை பொருந்திய பாடலைத் தர வேண்டும் என்று தேடிய போது பெரும் சவாலாக அமைந்தது.
குறிப்பாக கவிஞர் வைரமுத்து வாரத்தில் ஒரேயொரு பாடலைத் தேர்ந்தெடுக்க 6 மணி நே வரை பிடித்தது.
ஒவ்வொரு வாரமும் சராசரியாக இரண்டு மணி நேர உழைப்பு இந்தப் போட்டிக்குத் தேவைப்படுகிறது.
வார இறுதியில் ஒரே தொனியில் அமையும் பாடல்களுக்கும் சிறப்புக் கவனம் தேவைப்பட்டது.
இலக்கியா பிறக்க முன்பும், பிறந்த அந்த நாளில் வைத்தியசாலையில் வைத்தே இந்தப் போட்டியை வெளியிட்ட நாட்களும் மறக்க முடியாது. வார இறுதியில் சில சமயம் இலக்கியாவை மடியில் வைத்துக் கொண்டு தான் பாடலைத் தேர்ந்தெடுப்பேன்.
இந்தப் போட்டிகளில் பங்கெடுத்த உங்களைக் கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு நூறு போட்டிகளிலும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்ததோடு முதலில் தமிழில் பதிலளிக்கும் போட்டியாளருக்கு முதல்வர் என்ற சிறப்புப் பிரிவிலும் கெளரவம் வழங்கப்பட்டது.
கடந்த 400 வது போட்டியின் சுற்று மற்றும் இந்த 500 வது போட்டியின் சுற்று ஆகியவற்றுக்கான வெற்றியாளர் விபரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.
இத்தனை நாட்களும் தொடர்ந்து இந்தப் போட்டியில் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அடுத்த போட்டி எப்போது, எப்படி அமையும்
என்ற தீர்க்கமான முடிவை எடுத்த பின்னர் இன்னொரு வெற்றிகரமான பயணத்தில் சந்திப்போம்.
அதுவரை நன்றி வணக்கம் ?

பாடல் தந்த சுகம் : அல்லி சுந்தரவல்லி லாலி

ஒலி நாடாக்களின் யுகம் வழக்கொழிந்து போகும் நேரத்தில் இந்தப் பாடலை அடிக்கடி நினைவுபடுத்தும் என்னிடமிருக்கும் இந்தப் படத்தின்     ஒலியிழைப் பேழை.

சிட்னியில் இருக்கும் நம்மூர் மளிகைக்கடையில் 15 வருஷங்களுக்கு முன்னர் இதைக் கண்டபோது முதலில் வாங்க வைத்ததே “நீ வருவாய் என” பாடல்கள் இருப்பதால் தான். வாங்கிய பின்னர் தான் தெரிந்தது கூடவே இருக்கும் சக படங்களான அந்தப்புரம், கண்களின் வார்த்தைகள் இவற்றின் இசை இளையராஜா என்று. அப்போது தான் எனக்கு அறிமுகமானது “அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி”
இப்படி ஒவ்வொரு பாடல்களும் என்னை வந்தடையும் போது ஏதோவொரு பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துடன் வந்துவிடுகின்றன 🙂
நேற்று #RajaChorusQuiz இல் இந்தப் பாடலை நான் போட்டிப் பாடலாகக் கொடுத்த போது பலருக்கு அதுவே முதல் அனுபவம் என்றும், பாடலை மிகவும் ரசித்துக் கேட்டதாகவும் சொன்னபோது ஏதோ நானே இந்தப் பாடலை இசையமைத்த திருப்தியடைந்தேன்.
“கண்களின் வார்த்தைகள்” திரைப்படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் முக்தா பிலிம்ஸ் சார்பில் முக்தா.V.சுந்தர் இயக்கத்தில் வெளிவந்தது. இந்தப் படம் முக்தா பிலிம்ஸ் இன் நூறாவது தயாரிப்பு என நினைக்கிறேன் சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஏதோவொரு சிறப்பு அடையாளத்துடனேயே நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இவர்கள் இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். விக்ரம், கரண், 
பிரேமா நடித்திருக்கிறார்கள். சேதுவுக்கு முந்திய விக்ரம் என்பதால் வழக்கமான அவரது ஆரம்பகாலத் தோல்வியோடு சேர்ந்துவிட்டது இந்தப் படமும்.
Nammoora mandara hoove என்று கன்னடத்தில் வெளிவந்த படம். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் ஷிவ்ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க ரமேஷ் அர்விந்த், பிரேமா ஆகியோர் இணைந்து நடித்த வெற்றிப் படமாக அமைந்தது. இசைஞானி இளையராஜா இசையில் மொத்தம் ஏழு பாடல்கள்.
இளையராஜாவை ஒவ்வொரு மொழிக்காரரும் ஒரு குறிப்பிட்ட படப்பட்டியலோடு வெகுவாகக் கொண்டாடும் போது அந்தப் பட்டியலில் கன்னடம் என்று வரும் போது கண்டிப்பாக இந்தப் பாடல்களும் இருக்கும் அளவுக்கு கன்னடர்களுக்கு இந்தப் படப்பாடல்கள் மேல் கொள்ளைப் பிரியம்.
நான் சொன்னதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினால் YouTube இல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் படப்பாடல்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் பின்னூட்டங்களில் உச்சி மோந்து பாராட்டிக் கொண்டிருப்பதை ஒரு எட்டு பார்த்து விடுங்கள். 
குறிப்பாக இங்கே நான் பகிர்ந்திருக்கும் “அல்லி சுந்தரவல்லி லாலி” பாடலைத் தமிழில் பாடகர் அருண்மொழியும், மூலப் பாடலான “ஹள்ளி லாவணியல்லி லாலி சுபலாலி” பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் குழுவினரோடு பாடியிருக்கிறார்கள். 
இந்தப் பாடலை ஏற்கனவே தெரிந்த பலருக்கு கன்னடம் வழியாகவே தமிழ் அறிமுகமாகியிருக்கிறது. எனக்கே தலைகீழ். எஸ்.பி.பாலசுப்ரமணியம், அருண்மொழி ஆகிய இரு வேறுபட்ட பரிமாணம் கொண்ட பாடகர்களின் பாடல்களைத் தனித்துக் கேட்கும் போது இரண்டுமே உறுத்தலில்லாமல் ரசிக்க வைத்திருப்பதே சிறப்பு.
சேர்ந்திசைக்கும் குரல்களை பாடல் முழுதும் தூவி, அவர்களையும் சிறு சிறு ஆலாபனை இசைக்க வைத்திருப்பது சிறப்பு. 
சந்தோஷம் கொட்டும் இந்தக் காதல் பாடலில் ஆண்குரல் மட்டும் தனியே இசைக்க, கூட ஜோடி போட்டுப் போட காதலிப்பெண் குரல் இல்லாது அந்தப் பெண்ணின் தோழியர் அவளின் மன நிலையைப் பிரதிபலிக்குமாற்போல வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும். பாடலின் ஆரம்பம் முதல் இறுதிவரை அதே சீர் பின்பற்றப்பட்டிருக்கும்.
கற்பனை பண்ணிப்பாருங்கள் பாடலில் வரும் தோழிமார் பாடும் பகுதி இல்லாமல் கூட இந்தப் பாடலைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் ஒரு பாடலை எவ்வளவு தூரம் தனித்துவமாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற உழைப்பின் வெளிப்பாடே அந்தச் சேர்க்கை என்பது புலனாகும்.
பாடலின் இசைக்கோர்ப்பைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பில் பாடலாசிரியர் பழனிபாரதியின் பங்கும் சிறப்பானது.
இப்படியான பாடல்கள் இன்னும் வெகுவாகக் கொண்டாடப்படவில்லையே என்ற ஆதங்கம் இசை ரசிகனுக்கு என்றும் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் அதையெல்லாம் இசைஞானி கடந்து போய் வெகுகாலமாயிருக்கும்.
“ஹள்ளி லாவணியல்லி லாலி சுபலாலி” கன்னடப் பாடலைக் கேட்க
http://soundcloud.com/kanapraba/hallilavaniyalli 
“அல்லி சுந்தரவல்லி லாலி சுபலாலி” தமிழ்ப்பாடலைக் கேட்க
http://soundcloud.com/kanapraba/alli-suntharavalli 

இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம் "காரோட்டிப் பாட்டுப் பெற்றார்"


1997 ஆம் வருஷம், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய நேரம் அது. ஒரு நாள் எஸ்.பி.பி பாடல் பதிவுக்காக இளையராஜாவின் ஒலிப்பதிவு கூடம் செல்ல வேண்டும் ஆனால் ஆஸ்தான கார்ச்சாரதி வரவில்லை. எஸ்.பி.பி.சரணே காரை ஓட்ட பிரசாத் ஸ்டூடியோ செல்கிறார்கள்.

அங்கே எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காகக் காத்திருந்த இளையராஜா, நீண்ட நாட்களுக்குப் பின் சரணைக் கண்டதும் குசலம் விசாரிக்கிறார். திடீரென வந்த யோசனையில் “இந்தப்பாட்டில் பாலுவுடன் நானும் பாடுறேன், நீயும் சேர்ந்து நம்ம கூடப் பாடிடு” என்று ராஜா, எஸ்.பி.பி.சரணை அழைக்கிறார். கரும்பு தின்னக் கூலியா? சரணும் மகிழ்வோடு தன் தந்தை மற்றும் ராஜாவுடன் சேர்ந்து தன் முதற்பாடலான “உனக்கொருத்தி பொறந்திருக்கா” என்ற பாடலை புண்ணியவதி திரைப்படத்துக்காக, காமகோடியன் பாடல் வரிகளைப் பாடுகின்றார். “மின்னாம மின்னுறா மீனாட்சி அம்மனா” என எஸ்.பி.பி சரண் பாட, “சபாஷ்” என்பார் ராஜா, அவரை வாழ்த்துமாற்போலப் பாடலில். இதுதான் எஸ்.பி.பி.சரண் பாடகராக வந்த கதை.

இவர் பின்னாளில் ஏதோவொரு வகையில் பாடகராக வந்திருக்க முடியும் என்றாலும் இந்த மாதிரி சுளையான திடீர் வாய்ப்பு கிட்டியிருக்குமா தெரியவில்லை. புண்ணியவதி படத்தில் மேலும் அற்புதமான பாடல்கள் இருந்தாலும், துரதிஷ்டவசமாக இதன் தயாரிப்பாளர் கொலையால் படம் வெளிவராமலேயே முடங்கிப்போனது.

1998 ஆம் வருஷம் நான் அப்போது மெல்பனில் படித்துக்கொண்டிருந்தேன். முதன்முறையாக சரண் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகிறார். வானொலிப்பேட்டி ஒன்றில் அறிவிப்பாளர் சரணைப் பார்த்து ” நீங்க பாடிய முதல் பாட்டு பற்றி சொல்லுங்களேன்” என்று கேட்டபோது மேற்சொன்ன சம்பவத்தைச் சொன்ன சரண், அந்தப் பாடலை மட்டும் மறந்தே போய்விட்டார், மெட்டை மட்டும் முணுமுணுக்கிறார். அப்போது வானொலி நேயராக மட்டும் இருந்த நான், தொலைபேசியில் அழைத்துப் பாடல் பற்றிய விபரத்தைச் சொல்கிறேன். அடுத்த நாள் இசைக்கச்சேரி மேடையில் “பிரபா தான் என் முதல்பாட்டை ஞாபகம் வெச்சிருந்து சொன்னார் அவருக்கு என்னோட நன்றி” என மறக்காமல் நன்றி பாராட்டினார் 🙂

இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம் “பாடல்களைத் தேர்ந்தெடுக்க இன்னொரு இயக்குனர்”

 றேடியோஸ்பதியின் இன்னொரு தொடராக, “இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம்” இந்தப் பதிவின் வாயிலாகத் தொடர்கின்றது. இந்தத் தொடர் வழியாக, இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்குப் பின்னால் உள்ள சுவையான துணுக்குச் செய்திகளைப் பகிரலாம் என்ற எண்ணம் வாய்த்திருக்கின்றது. இந்தத் துணுக்குச் செய்திகள், குறித்த பாடல்கள் தோன்றும் போது பணிபுரிந்த கலைஞர்களின் கருத்து வழியே பெறப்படுகின்றன. எனவே இயன்றவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே இத்தொடர் வாயிலாகப் பகிரலாம் என்றிருக்கின்றேன்.

பாடல்களைத் தேர்ந்தெடுக்க இன்னொரு இயக்குனர்

 கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த படம் வேலைக்காரன். இந்தப்படத்தின் மொத்தம் ஆறு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் மு.மேத்தா. இந்தப் படத்தின் பாடல்களுக்குப் பின்னால் ஒரு சுவையான சேதியுண்டு.

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்புக்காக இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் குழு வட இந்திய மாநிலத்துக்குப் பயணப்பட்டு விட்டார்கள். அங்கே அவர்கள் பரபரப்பாக படத்தின் வசனப்பகுதிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படத்தில் இடம்பெறவேண்டிய பாடல்களைப் இளையராஜாவிடம் பெற்றுக்கொள்ள எஸ்.பி.முத்துராமனின் குழுவில் இருந்த உதவி இயக்குனர் வரை அந்தச் சமயம் வெளியூரில் இருக்கிறார்கள். எனவே படத்தின் தயாரிப்பாளர் கே.பாலசந்தரே, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்ற இயக்குனர் பாடல்கள் எப்படி வரவேண்டும் என்று விரும்புவாரோ  அதே முறையில் ராஜாவிடம் பெற்று, கவிஞர் மு.மேத்தாவிடம் அனைத்துப் பாடல்களையும் எழுதவைத்து, பாடல்களை ஒலிப்பதிவாக்கி, ஒலிநாடாவை வட இந்திய மாநிலத்துக்கே அனுப்பும் பொறுப்பை கே.பாலசந்தரே கவனித்துக் கொண்டார். ஆக, இந்தப் படத்தின் உருவாக்கத்தில் தயாரிப்பாளர் என்ற எல்லையைக் கடந்து, படத்தின் அமைப்புக்கேற்ப பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் கே.பாலசந்தர் கவனித்துக் கொண்டார். இன்றைய நவீன இணையத் தொடர்பாடலில் வீடியோ கான்ஃபரன்ஸிங் வரை வசதியும், பாடல்களை இணைய வழி அனுப்பக்கூடிய வாய்ப்பும் வாய்த்து முன் சொன்ன நிகழ்வை எல்லாம் நீர்த்துப்போகும் அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறிவிட்டாலும், தமிழ்த்திரையிசை வரலாற்றில் ஒரு சுவையான சம்பவம் நேர்ந்து விட “வேலைக்காரன்” படப்பாடல்கள் உதவி விட்டன.


இந்தப் பதிவு ராணி மைந்தன் எழுதிய “ஏவி.எம் தந்த எஸ்பி.எம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

தமிழ்த்திரையிசையில் “கெளரவ”ப்பாடகர்கள்

தமிழ்த் திரையிசைப்பாடல்களில் வாத்திய இசையோடு கூட்டுக் குரல்களும் வரிகளை உச்சரிக்காது ஆலாபனை செய்யும் வண்ணம் பல பாடல்கள் தொன்று தொட்டு வந்திருக்கின்றன. இன்னும் விசேஷமாக பிரபல பாடகர்களை இந்த இடைக் குரலுக்குப் பயன்படுத்தியது எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துப் பாணி. எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோரின் பாடல்கள் சில உதாரணமாக விளங்கி நிற்கின்றன. உதாரணமாக பாலிருக்கும் பழமிருக்கும் பாடலை P.சுசீலா பாட, பின்னாலே “ம்ஹும்” என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்பாடல் முழுக்கக் குரல் கொடுத்திருப்பார்.
இன்னும் சொல்லப்போனால் எண்பதுகளில் பிரபல பாடகியாக விளங்கிய எஸ்.பி.சைலஜாவின் அறிமுகமே இப்படியான ஒரு இடைக்குரலாக “மழை தருமோ என் மேகம்” என்ற பாடல் மூலமே ஆரம்பித்தது. இசைஞானி இளையாராஜாவின் இசையில் மலர்ந்த பல பாடல்கள் தான் இவ்வாறான பிரபல பாடகர்களின் இடைக்குரல்களோடு அதிகம் காதுக்கு எட்டுகின்றன. பின்னாளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களில் கோரஸ் பாடியவர்கள் முன்னணிப் பாடகர்களாகவும், அதே குரல்கள் இடைக்குரல்களாகவும் பாடல்களில் விளங்கியிருக்கக் காணலாம்.

இவ்வாறு அமைந்த ஐந்து பாடல்களை கடந்த றேடியோஸ்புதிரில் கொடுத்திருந்தேன். அவற்றோடு இன்னும் சேர்த்து இங்கே பகிரும் இந்த பிரபல பாடகர்களின் கெளரவ இடைக்குரல்களோடு அமையும் பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.
இதே பாங்கில் வந்த பாடல்கள் உங்களுக்கும் தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள்.

பாடல் ஒன்று : மெளனமேன் மெளனமே திரைப்படம்: என் ஜீவன் பாடுது இடைக்குரல்: சித்ரா, முன்னணிக் குரல் மனோ: இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் இரண்டு : நாரினில் பூத்தொடுத்து மாலை ஆக்கினேன் திரைப்படம்: இரண்டில் ஒன்று இடைக்குரல்: சித்ரா இசையமைத்துப் பாடுகின்றார் இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் மூன்று: அதோ மேக ஊர்வலம் திரைப்படம்: ஈரமான ரோஜாவே இடைக்குரல்: சுனந்தா முன்னணிக்குரல்: மனோ இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் நான்கு : தீர்த்தக்கரை தனிலே திரைப்படம்: தைப்பொங்கல் இடைக்குரல் ஜென்சி முன்னணிக்குரல்: கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் இசை: இசைஞானி இளையராஜா. இதே பாடலை ஜென்ஸி முழுமையாகப் பாடும் இன்னொரு வடிவமும் உண்டு 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் ஐந்து : மழை தருமோ என் மேகம் திரைப்படம்: மனிதரில் இத்தனை நிறங்களா இடைக்குரல்: சைலஜா முன்னணிக்குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: ஷியாம் 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் ஆறு: சின்னப்புறா ஒன்று திரைப்படம்: அன்பே சங்கீதா இடைக்குரல்: எஸ்.பி.சைலஜா முன்னணிக்குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல்: வானுயர்ந்த சோலையிலே திரைப்படம்: இதயக்கோவில் இடைக்குரல்: எஸ்.ஜானகி முன்னணிக்குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: இசைஞானி இளையராஜா