சஹானா சாரல் தூவுதோ – மழைப்பூக்களின் பாட்டு

“சஹானா சாரல் தூவுதோ” மழைப்பூக்களின் பாட்டு

கண்ணாடிச் சன்னலின் உருண்டைப் புள்ளியாகப் பட்டுத் தெறிந்து அப்படியே இழுபட்டுக் கீழிறங்குகின்றன மழைத் துளியின் கோடுகள், சிட்னி ரயிலில் கூட்டமில்லாத காலை ஏழுமணிப் பயணத்தில். மழைப்புள்ளிகள் ஜன்னலில் திட்டுத் திட்டாகப் பரவி மறு முனையில் இருந்து சினேக விசாரிப்பாய்.

“சஹானா சாரல் தூவுதோ” காதுக்குள் கண்கூடாகத் தொனித்த அந்த மழைத் துளியின் தெறிப்புகளுக்கு இசை வடிவம் கொடுக்குமாற் போல மலருகின்றது இன்றைய காலை.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் A380 என்ற காண்டாமிருகப் பயணி வண்டி சிங்கையில் இருந்து சிட்னி நோக்கிப் பயணிக்கிறது. நெருக்கம் காட்டாத அகன்ற இருக்கை, ஹெட்ஃபோனால் காதுகள் நத்தை தன் கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டது போல இசைக்குள் அடைக்கலம். 
சாக்ஸ் ஆலாபனை எழுப்ப 
2.27 நிமிடத்தில் வந்து சறுக்கிக் கொண்டே மெல்ல எழும்புமே ஒரு இசை அந்தக் கணம் விமானப் பயணத்திலும் சன்னலின் முத்தம் பதித்தன மழைத் துளிகள்.
“தீம் தரனன தீம் தரனன திரனன திரனன” என்று அந்த இசையை வாரியணைக்கும் ரஹ்மானுடன் சேர்ந்த கூட்டுக் குரல்களைக் கேட்கும் போது மழையின் நர்த்தனம் தான் அதைக் காட்சிப்படுத்த முடியும்.
எட்டு வருடங்களுக்கு முன்னான அந்த விமானப் பயணம் அது. விமானத்தின் பிரத்தியோக இசைப்பெட்டியில் சேமித்து வைத்திருந்த பாடலில் ஒன்றாக இதுவும் இருந்தது.
அன்று வானத்தில் மிதக்கும் போது தந்த மழைச் சுகம் இன்று தண்டவாளத்தில் வழுக்கிப் பயணிக்கும் வண்டியில்.
உதித் நாராயணனின் தேங்காய் உரிக்கும் தமிழோடு சின்மயி மெல்லிசைக் குரல் ஜோடி போடும். பாடலில் தனக்கான ஒவ்வொரு சொல்லையும் நோகாமல் வளைத்தும் நெளித்தும் கொடுத்த வகையில் சின்மயி வெகு சிறப்பாக உழைத்திருக்கிறார்.
“தலை முதல் கால் வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்து விடு” என்று கிசுகிசுக்கும் போது பின்னால் தாள வாத்தியம் டுடுடுடும்ம்ம்மென்று  ஆரவாரமின்றி இழுபட்டு அப்படியே மிருதங்கத்திடம் போகும் போது இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அந்தத் தாளத்தைப் பின்னணியில் கொடுத்துக் கொண்டே போகுமே, ஹெட்போனில் மிக நெருக்கமாக இந்தப் பாடலோடு உட்கார்ந்து கொள்ளும் போது அந்த நொடிகள் தரும் பரவசமே தனி.
ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இதுவரை வந்த பாடல்களில் ஆகச் சிறந்த பாடலாக இதையே என் பட்டியலில் முதலில் சேர்ப்பேன்.
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை (மழைப்) பூக்களில் நிரப்பட்டுமா 
பிஞ்சுக் கால்களைத் தொப்பென்று பதித்துக் குதித்து விளையாடும் குழந்தை போல
சன்னல் கண்ணாடியில் குதிக்கும் மழைத் துளிகள்
 http://www.youtube.com/watch?v=MSCBx07ENGQ&sns=tw 

பாடல் தந்த சுகம் : என் வீட்டுத் தோட்டத்தில்

“சொல்லுக்கும் தெரியாமல் 
சொல்லத்தான் வந்தேனே 
சொல்லுக்கும் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே”
“சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் 
 தூரங்கள் கிடையாது 
சொல்லாத காதல் எல்லாம் 
சொர்க்கத்தில் சேராது”
 ‘என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்” பாடலின் முத்தாய்ப்பாக அமைந்து, இந்தப் பாடலை நினைக்கும் போது முதலில் முணுமுணுக்க வைப்பதும், பாடலின் இந்த வரிகளைக் கடக்கும் போதெல்லாம் கற்பனையில் அந்தக் காதலர்களுக்கிடையிலான நேசத்தை மனக் கண் முன் எடுத்து வரத் தூண்டும்.
காதலர்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளும் அன்பின் வெளிப்பாட்டினை இம்மாதிரி தர்க்க ரீதியாகப் பேசிக் கொள்ளுமாற் போல அமைந்த திரையிசைப் பாடல் வரிகள் ரசிக்க வைப்பவை. வைரமுத்து அவர்கள் எழுதும் போது  கொஞ்சம் அதிகப்படியான இலக்கியச் சாயம் போட்டிருந்தால் இவ்வளவு தூரம் நெருங்கியிருக்குமோ தெரியாது.
இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் வாத்தியப் பயன்பாட்டில் புதுமையைப் புகுத்தினாலும் மெட்டுக் கட்டிய வகையில் அவருக்கு முந்திய காலத்து மெல்லிசை மன்னர் யுகத்தை நினைவுபடுத்துமாற் போல எனக்குத் தோன்றும். ஏ.ஆர்.ரஹ்மான் காலத்தில் இதே மாதிரியான ஒப்புவமையைக் காட்ட முனைந்தால் ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ பாடல் தான் முன்னே வரும்.
‘ஜென்டில் மேன்’ திரைப்படம் தான் ரஹ்மானின் முந்திய படங்களை விட
அவரின் இசையின் பரிமாணங்களை அகலத் திறந்த படம். குறிப்பாக ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ பாடல் அவர் முன்னர் கொடுத்த படங்களின் காதல் மெலடியில் இருந்து தனித்து நிற்கும். 
ஜூனியர் போஸ்ட் இதழ் விகடன் குழுமத்தில் வந்த வேளை அறிமுக இயக்குநர் ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ படம் வருவது குறித்த பேட்டி ஒரு பக்க மூலையில் வந்திருந்தது. அந்தச் சின்னப் 
பொடியரைச் சாதித்துக் காட்ட வைத்துப் பெருமையைத் தந்த படம்.
இந்தப் பாடல் இவ்வளவு சிறப்பாக வருவதற்கு பாடகர் தேர்வும் முக்கிய காரணியாக அமைகின்றது. மிகவும் பயந்த சுபாவம் கொண்ட, வெட்கத்தோடு தன் நேசத்தைப் பகிரும் காதலியாக அச்சொட்டாகப் பொருந்துகின்றது சுஜாதாவின் குரல். இடையில் வரும் ம்ம்ம் என்ற ஹம்மிங் இல் வெட்கத்தோடு தன் பெருவிரலால் கிராமத்து மண்ணைக் கிளறி அளையும் காதலி போல.
அதற்கு மாறான ஒரு மிடுக்கான காதலனாக வலம் வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரலின் ஏற்ற இறக்கங்களும் கிண்டல் சிரிப்பே இசையாகவும், அவரின் பாடல் வரிகள் முடியும் போது அமையும் “கிடையாது” “சேராது” போன்ற இடங்களில் வித்தியாசப்படுத்திக் கொடுக்கும் போதும் தான் திரையிசைப் பாடகர் பணி என்பது அவ்வளவு சுலபமில்லை என்று பதிய வைக்கிறார்.
சுஜாதா பட படவென்று தன் ஆசையைக்  கொட்டித் தீர்க்கும் போது நிறுத்தி நிதானமாக எஸ்.பி.பி பாடுவது போல வரும் பகுதிகளையும் நுணுக்கமாகக் கவனித்து அனுபவிக்கலாம். 
‘என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்’ காலை ரயில் பயணத்திலும் மாலை சாய்ந்து வீடு திரும்பும் போதும் கேட்கிறேன், கேட்கிறேன் அலுக்கவில்லை, இந்தப் பாடல் கொணர்ந்து வரும் அந்தக் கால நினைவுகளும் கூடச் சுகமே.
 http://www.youtube.com/watch?v=TsNNIm9Dab4&sns=tw 

"வீசும் தென்றல் காற்றினைப் போல்" – மலர்ந்தும் மலராதது

வீசும் தென்றல் காற்றினைப் போல் என் இதயத்தில் நீ நுழைந்தாய் – ஏ.ஆர்.ரஹ்மானின் மலர்ந்தும் மலராத பாடல்

நேற்று YouTube இல் 90 களின் இறுதியில் வந்த பாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டு வந்தேன். அப்போது உல்லாசம் படத்தில் வந்த “வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா” பாடலைக் கேட்டு முடித்ததும் YouTube தானாகவே ஒரு பாடலைப் பரிந்துரைத்தது. அந்தப் பாடல் தான் “வீசும் தென்றல் காற்றினைப் போல்”. இந்தப் பாடலை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்று மனசைக் கேட்கும் அளவு சுத்தமாக மறந்து விட்ட பாட்டு, கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கேட்கிறேன். 
தொண்ணூறுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் அலை 
அடித்துக் கொண்டிருந்த போது அடுத்து இவர் எதைக் கொடுப்பார் என்று கன்னம் வைத்துக் கொண்டிருந்த நேரம். மலையாளத்தில் இருந்து வந்த அசோகா, தெலுங்கில் இருந்து வந்த சூப்பர் போலீஸ், மனிதா என்று தமிழ் மாற்றுப்பட்ட பாடல்களையும் விட்டு வைக்கவில்லை. அப்போது தான் “மோனலிசா” என்ற படப் பாடல்கள் வந்திருந்தன. ரஹ்மான் படமும் மோனலிசா ஓவியமும் பொதிந்த விபரங்கள் தவிர வேறு எதுவும் அப்போது மட்டுமல்ல இப்போதும் தெரியாத ரகசியமாக வந்த பாடல் பொதி இது.
சம காலத்தில் ரஹ்மான் இசையில் வந்த  doli saja ke rakhna (காதலுக்கு மரியாதை ஹிந்திப் பதிப்பு) பாடல்கள் “ஊஞ்சல்” என்ற இசைத் தொகுப்பாக வந்திருந்தது. அதுவும் பெயரளவில் மட்டுமே வந்த  திரைப்படமாக்கப்படாத தமிழாக்கப் பாடல்கள். பின்னர் இது ஜோடி திரைப்படத்துக்காக வேறு பாடகர்கள் பாடித் திரை வடிவம் கண்டது.
Daud ஹிந்திப் படமும் ஓட்டம் என்ற பெயரில் தமிழில் பாடல்களாக ஒரு வருட இடைவெளியில் வந்தது.
மோனலிசா படத்தின் பாடல்கள் 1998 காலப்பகுதியில் வெளியானது. இந்தப் பாடல்கள் அனைத்துமே பழநி பாரதி அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த “வீசும் தென்றல் காற்றினைப் போல்” பாடலைப் பரிந்துரைத்த YouTube இல் அப்போது கேட்டுக் கொண்டிருந்த “வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா” பாடலும் பழநி பாரதியால் எழுதப்பட்டது ஆச்சரியமான இன்னொரு ஒற்றுமை. இந்தப் பாடலை அப்போது வகை தொகையில்லாமல் கேட்டிருக்கிறேன். இப்போது திருவிழாவில் தொலைந்த குழந்தை மீசை முளைத்த விடலைப்பையனாக அடையாளம் காணமுடியாத அளவுக்கு  என் முன்னால் நிற்பது போல பிரமை 🙂
உன்னி கிருஷ்ணன், ஸ்வர்ணலதா பாடிய அட்டகாசமான பாடல் இது.
இந்தப் பாடலின் நதிமூலத்தை ஆராய்ந்தால் முதலில் ஹிந்தியில் வெளியான “Kabi Naa Kabi” படத்திற்காகத் தான் இந்தப் பாடல்கள் முதலில் பதிவாகித் திரை வடிவம் கண்டன. குறிப்பாக இந்த “வீசும் தென்றல் காற்றினைப் போல்” பாடலின் மூலப் பாடலான “Tu Hi Tu” பாடலை சித்ராவும் மலையாளப் பாடகர் ஶ்ரீகுமாரும் பாடியிருப்பார்கள். இதுவரை கேட்காதவர்கள் கேட்டுப் பாருங்கள். https://m.youtube.com/watch?v=6Y_8-Wg0qIA 
பாடகர்கள் ஏதோ வீராணம் குழாய்க்குள் இருந்து பாடுவது போல அமுங்கிப் போய் இருக்கும் ஹிந்தி வடிவம். வழக்கமாக பாடல்களின் மூல வடிவத்தைக் கேட்கும் போது இனிமையாக சுகமாகவும் இருக்கும். அதை மொழி மாற்றும் போது பாடகர் தேர்வில் சறுக்கல் இருக்கும். குறிப்பாக அக்னி நட்சத்திரம் பாடல்களை தெலுங்கில் வாணி ஜெயராம் பாடியதைக் கேட்டால் தெரியும். 
இங்கோ தலைகீழ் ஹிந்தியில் எடுபடாதது போல இருக்கும் பாட்டு தமிழில் உன்னிகிருஷ்ணன், ஸ்வர்ணலதா பாடும் போது ஏதோ தமிழுக்காகவே
தாரை வார்க்கப்பட்ட மெட்டுப் போல பாடல் வரிகளும், பாடும் திறனும் வெளிப்படுகின்றது. கிட்டத்தட்ட இதே பாணியில் ஏ.ஆர். ரஹ்மான் பல்லாண்டுகளுப்பின் கொடுத்த இன்னொரு பாட்டு “அழகிய தமிழ்மகன்” படத்தில் வரும் “கேளாமல் கையிலே வந்தாயே காதலே” பாடல் இருக்கும்.
“வீசும் தென்றல் காற்றினைப் போல்” பாடலை இன்னொரு பாடலில் கண்டுகொண்டோமே என்று முடியைப் பிய்த்துக் கொள்ளாதீர். வழக்கம் போல தேனிசைத்தென்றல் தேவாவின் பெருங்கருணையால்  ” நெஞ்சினிலே” படத்தில் வரும் “மனசே மனசே கலக்கமென்ன” https://m.youtube.com/watch?v=YVqvSMDXsFk பாடலின் ரிதம் ஒரே காலேஜ்ல ஒண்ணாப் படிச்சவங்க என்று சொல்லும். அண்ண்ணன்ன் அண்ண்ணன்ன் ?

பாடல் தந்த சுகம் : “வீரபாண்டிக் கோட்டையிலே”

சமீபத்தில் “திருடா திருடா” பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இப்போது வரும் எந்த வெற்றிப்படங்களுக்கும் குறைவில்லாத சுவாரஸ்யமான பொழுதுபோக்குச் சித்திரமாக அது இருந்தது. நாயகி ஹீராவுக்கு சுஹாசினி கொடுத்த பின்னணிக் குரல் உறுத்தல் தவிர. மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் கைகோர்த்த முதல் தோல்விப்படம் ஆனாலும் ரஹ்மானைப் பொறுத்தவரை நின்று விளையாடியிருக்கிறார். அந்தப் படத்தின் பாடல்களை இப்போது கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

சாகுல் ஹமீது பாட, கோரஸ் குரல்கள் மட்டுமே பின்னணியில் வரும் “ராசாத்தி என் உசிரு” பாட்டும், அந்தக் காலத்தில் கொழும்பின் பண்பலைவரிசை முளைவிட்ட காலத்தில் FM 99 ஒலிபரப்பிய “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” அனுபமா பாடிய “கொஞ்சம் நிலவு”, “புத்தம் புது பூமி வேண்டும்”
இதையெல்லாம் கடந்து “தீ தீ தித்திக்கும் தீ” பாட்டுத்தான் என்னை முதலில் ஈர்த்தது. ஒரு மேடையில் சீனப்பெண் ஒருத்தி இந்தப் பாடலைப் பாட ரஹ்மானும் மெய்மறந்து ரசித்த காட்சி அழகு.

திருடா திருடா படப் பாடல்கள் வந்த நேரம் எமக்கோ ராஜா பாடல்கள் மீதான பாசப்போராட்டம். டியூசனுக்கு வரும் நண்பர் கூட்டத்தில் எம்மைச் சீண்டுவதற்காகவே ரஹ்மான் பாடல்களை வந்த கையோடு கேட்டு ரஹ்மானைப் பாரடா என்ன மாதிரி வெஸ்டேர்னில் கலக்கியிருக்கிறார் என்று வெறுப்பேற்றுவார்கள். ஆனால் ராஜா என்றால் எதிராளியின் சட்டையைப் பிடித்து உலுப்பி நியாயம் கேட்கும் சதீஷ் இருக்கும் வரை கவலை இல்லை நமக்கு. இதுக்கெல்லாம் பதிலடி கொடுக்க ஏதாவது பதிலைத் தயாரித்து வைத்திருப்பான். “வீரபாண்டிக் கோட்டையிலே” எண்ட பாட்டைக் கேட்டனியே? ரகுமான் கலக்கியிருக்கிறார் மச்சான்” சைக்கிளில் உடன் வந்த ரமேஷ் அப்பாவித்தனமாகப் பேசவும், காத்திருந்த கொக்காக “அடி ராக்கம்மா கையத்தட்டு” என்று பாடிக்கொண்டே “மச்சி உங்கட ஆள் எங்கை எடுத்திருக்கிறார் தெரியும் தானே” என்று பதிலுக்கு சதீஷ். அவனளவில் ரஹ்மானின் பாட்டை நல்லது என்று சொன்னவனுக்குச் சூடு போட்ட திருப்தி.

உண்மையில் “வீரபாண்டிக் கோட்டையிலே” பாடல் என்னை அவ்வளவுக்கு ஈர்க்கவில்லை அப்போது. ஆனால் இப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கும் போது, இன்னும் ஒருக்கா என்று மனசு கேட்கும். உன்னிமேனன் போன்ற மென்மையான குரல்வளம் மிக்க பாடகரை, மனோவோடு மல்லுக்கட்ட வைத்து இடையில் “ரெட்டைச் சூரியன் வருகுதம்மா ஒற்றைத் தாமரை கருகுதம்மா” என்று சித்ராவையும் இணைத்த இந்தப் பாடல் ரஹ்மானின் முத்திரைகளில் ஒன்று என்பதை இன்று உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்குன் சதீஷ் உடன் வாதிட என்னைத் தயார்படுத்தும் அளவுக்கு நான் தயார்.

பாடகர்களைக் கோர்த்துவிட்டு, வாத்தியங்களைப் பொருத்தமான இடங்களில் ஏற்றியும் இறக்கியும் நீட்டியும் குறுக்கியும் செய்யும் ஜாலங்களை உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள்.

ரஹ்மான் தமிழ்ச்சூழலில் இருந்து அந்நியப்படாத காலத்தில் வைரமுத்துவின் தெள்ளு தமிழோடு துள்ளி விளையாடிய பாட்டு, காலம் கடந்து உருசிக்கும் திராட்சைப் பழரசத்துக்கு ஒப்பானது.

ஏ.ஆர்.ரஹ்மான் – புதுக்குரல்களைத் தேடிய பயணம்

தமிழ்த்திரையிசையின் அடுத்த போக்கைத் தீர்மானித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்றோடு வயது 45. இந்தி இசைப்பக்கம் ஓடிக்கொண்டிருந்த தென்னகத்து ரசிகனைக் கட்டிப்போட்டுக் கட்டுக்குள் வைத்தவர் இசைஞானி இளையராஜா, அடுத்து வந்த ரஹ்மானோ வட இந்திய ரசிகர்களை வளைத்துப் போட்டதுமல்லாமல் ஹாலிவூடையும் கைக்குள் போட்டுக்கொண்டார். அந்த வகையில் இசைப்புயலுக்கு இனிய வாழ்த்துக்களைப் பகிர்வதோடு, ஆஸ்கார் விருதை அவர் தட்டிக்கொண்ட சமயம் “அம்ருதா” என்ற சஞ்சிகைக்காக ஏப்ரல் 2009 இல் நான் எழுதிய கட்டுரையை இங்கே தருகின்றேன்.

00000000000000000000000000000000000000

54 ஆவது பிலிம் பேர் அவார்ட் மேடையில் அறிவிக்கப்படுகின்றது, சிறந்த வளர்ந்து வரும் பாடகர் என்ற பிரிவில் கஜினி (ஹிந்தி)
படத்துக்காக பென்னி தயாள் விருதை வாங்கிக்கொள்ள அழைக்கப்படுகின்றார். இது சமீபத்தில் நடந்த ஒரு அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தின் பின்னால் இருந்தது பென்னி தயாள் என்ற பாடகனை அறிமுகப்படுத்தி வேலை வாங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைச் சாரும் என்று சொல்லத் தேவையில்லை. இந்தப் பண்பு இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளன் திரைமறை காயாக இருந்து 1992 இல் வெளிப்பட்ட போது ஆரம்பித்தது. இன்றும் தொடர்கின்றது.

1992 ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு “ரோஜா” படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய
“காதல் ரோஜாவே” ஒரு பாடல் மட்டுமே அந்த நேரத்தில் தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமான குரலாக ஒலிக்கின்றது. ஏற்கனவே
இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டுப் பாடிக் கொண்டிருந்த மின்மினி என்ற பாடகியை எல்லைகள் கடந்து தெரியவைத்ததும், விஜய் என்ற பெயரில் முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடி வந்த உன்னிமேனன் என்ற பாடகனை எல்லா ரசிகர் முன்னும் அறியவைத்ததும், பத்து வருஷங்களுக்கு மேல் தமிழில் பாடாமல் ஓய்ந்திருந்த பாடகி சுஜாதாவை மீள இயங்கவைத்ததும், மும்பையை கடந்தால் யார் இவர் என்று கேட்க வைத்த ஹரிஹரன் குரலை தேசங்கள் கடந்தும் ஒலிக்கவிட்டதும் என்று ஆரம்பித்தது ரஹ்மானின் இசைப்பயணம். பொதுவாகவேமிகவும் கஷ்டப்பட்டுக் கிடைக்கும் வாய்ப்பு, அதுவும் பேர் போன ஒரு தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா, நாடறிந்த இயக்குனர் மணிரத்னம் இப்படியாக மிகவும் சவாலாக வந்த அந்த இசைப்பணிக்கு வேறு யாரும் என்றால் நிச்சயம் இவ்வளவு புதுக் குரல்களைப் போடுவதைக் கொஞ்சம் யோசித்திருப்பார்கள். ஆனால் அங்கே தான் ரஹ்மானுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகின்றது. அதுவரை இளையராஜா என்னும் மாபெரும் கலைஞன் பதினாறு ஆண்டுகளாகக் கட்டிப்போட்ட இசைமுடிச்சை அவிழ்த்துப் புதிதாக ஒன்றை ரசிகனுக்குக் கொடுப்பது என்பது மிகவும் சவாலானதொரு விடயம். ஒரு ட்ரெண்ட் செட்டராக ரஹ்மான் அடையாளப்படும் போது வெறுமனே அவரின் புது மாதிரியான இசை மட்டுமே மாற்றத்தைக் கொடுக்கவில்லை, கூடவே ஆண்டாண்டு காலமாக ஒரு குறிப்பிட்ட பாடகர் வட்டத்துக்குள்ளே இருந்த தமிழ் சினிமாவின் கூட்டை அகலத் திறந்து விட்டார் இவர். குறிப்பிட்ட பாடகர்களைத் தவிர்த்து வேறும் புதுப் பாடகர்களை அறிமுகப்படுத்துவது ரஹ்மான் காலத்துக்கு முன்னரும் இருந்திருக்கின்றது. ஆனால் ரஹ்மானுக்குப் பின்னான போக்கைப் பார்த்தீர்களானால் இந்த மாற்றம் எவ்வளவு பெரியதாக அமைந்திருக்கின்றது என்பதை இனங்காணலாம்.

இப்போதெல்லாம் ஒரு படத்தில் ஐந்து பாட்டென்றால் ஐந்து பாடகர்களோ, இல்லாவிட்டால் ஒரு பாட்டையே இரண்டு மூன்று பாடகர்களோ பாடுவது சர்வசாதாரணம். இந்த மாற்றத்தின் விதையைப் போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் அது மிகையில்லை. டிவிக்களில் வரும் அறிமுகப் பாடகர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த சப்தஸ்வரங்கள், ராகமாலிகா, பாட்டுக்குப் பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் திறமையை வெளிக்காட்டும் பாடகர்களில் பலருக்கு இப்போதெல்லாம் சினிமா வாய்ப்பு என்பது எட்டும் கனியாகி விட்டது. ஆனால் இப்படியான நிகழ்ச்சிகள் பரவலாக இல்லாத காலத்தில் ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு நடுவராகப் போன ரஹ்மானில் கண்ணில் பட்டார் அந்த நிகழ்ச்சியில் பாடிய ஹரிணி. பின்னர் நிலாக் காய்கிறது என்று ஆரம்பித்தது ஹரிணியின் இசையப்பயணம்.

ஹோரஸ் கொடுக்கும் பாடகர்கள் என்னதான் திறமைசாலிகளாக இருந்தாலும் அந்த எல்லையைக் கடந்து பெரும் பாடகராகச் சாதிக்க முடியாத காலமும் இருந்தது. ரஹ்மானின் காலத்தில் தான் இந்த விஷயத்திலும் மாறுதல் கண்டது. இவரின் பாடல்களுக்கு ஹோரஸ் கொடுத்த பலர் பின்னாளில் முன்னணிப் பாடகர்களாக வரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ரஹ்மானின் பாடல்கள் வரும் இசைத் தட்டுக்களைக் கவனித்தால் வெறுமனே முன்னணிப் பாடகர்கள், மற்றும் இசையமைப்பாளர் பெயர் மட்டுமே இருக்காது. கூடவே அந்தப் பாடல்களுக்குப் பயன்பட்ட வாத்தியக் கலைஞர்கள், மற்றும் ஹோரஸ் பாடிய பாடகர்கள் பெயர் இருப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. அது என்னதான் பெரிய லிஸ்டாக இருந்தாலும் கூட.

ரஜினி என்றாலும் கமல் என்றாலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற முன்னணிப் பாடகர்களின் பின்னணிப் பாடல் தான் ரசிகர் மனதில் ஒட்டும் என்ற நினைப்பை மாற்ற வைத்தது “முத்து” படத்தில் உதித் நாராயணன் பாடிய “குலுவாயிலே” பாட்டும் “படையப்பா” படத்தில் வந்த “மின்சாரப் பூவே” என்ற பாடலும். இந்தியன் கமலுக்கு போட்ட “டெலிபோன் மணி போல்” ஹரிஹரன் குரல்கூட அளவாகப் பொருந்தியதே.

சுரேஷ் பீட்டர்ஸ் குரலில் அமைந்த “சிக்கு புக்கு ரெயிலே” பாட்டு கொடுத்த புகழ் சுரேஷை ஒரு இசையமைப்பாளனாகவே மாற்றி அழகு பார்த்த்து. ஜென்டில்மேனில் “உசிலம்பட்டி பெண்குட்டி” முத்துப் பேச்சி பாடிய சாகுல் ஹமீத்தின் வித்தியாசமான குரலைக் கூட ரஹ்மான் இசையில் அறிமுகப்படுத்த முடிந்தது, தொடர்ந்து அவர் வெறும் வாத்திய இசையில்லாமல் ஹம்மிங்கோடு அமைந்த “ராசாத்தி என்னுசிரு” பாட்டில் கூட வசீகரித்தார். சாகுல் ஹமீத்தின் நட்பு ரஹ்மான் திரைக்கு வரும் முன்னரே அவர் இசையமைத்த தீன் இசைமாலை போன்ற ஆல்பங்களில் ஆரம்பித்தது. அந்த நட்பினை முறிக்காது ஹமீதின் குரலை திரையிலும் தொடர்ந்தார் ரஹ்மான். ரஹ்மான் கொடுத்த திரைப்பாலம் ஹமீதை மற்றைய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடவைத்தது. கடல் கடந்தும் இசைப்பயணத்தைத் தொடர்ந்த ஹமீத் துரதிஷ்டவசமாக பெரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரஹ்மானையும் வெகுவாகவே பாதித்தது.

அனுபமா போன்ற மேற்கத்தேயச் சாயல் கொண்ட குரல்களுக்கு “கொஞ்சம் நிலவு” (திருடா திருடா) போன்ற பாடல்கள் களம் அமைத்து போல சுவர்ணலதா போன்ற பாடகிகளுக்கு “போறாளே பொன்னுத்தாயி” போன்ற கிராமிய மெட்டுக்களும் கைகொடுத்து தேசிய விருது வரை அழைத்துச் சென்றது.

திரையிசைக்கு பாலமுரளி கிருஷ்ணா போன்ற முழு நேர சங்கீத வித்துவான்களின் அறிமுகம் புதிதல்ல. ஆனால் ஜேசுதாஸ் போன்று கர்னாடக மேடைகளிலும் திரையிசையிலும் சமகாலத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் வண்ணம் பாடகர்கள் அமையாதிருந்தனர். அந்தப் போக்கினையும் ரஹ்மானின் காதல் திரைப்படம் உன்னி கிருஷ்ணன் மூலம் மாற்றிக் கொண்டது. ரஹ்மான் இசையில் காதலன் படத்தில் “என்னவளே அடி என்னவளே” பாடலுக்கும் “பவித்ரா” படத்தில் “உயிரும் நீயே” பாடலுக்கும் பாடியதன் மூலம் உன்னிகிருஷ்ணன் தேசிய விருது வரை அங்கீகாரம் பெற்றதோடு உன்னிகிருஷ்ணனுக்கு சபா மேடைகள் தாண்டி ஒலிப்பதிவுக் கூடங்களையும் தினமும் செல்லவைத்தது. கர்நாடக சங்கீதச் சாயல் மட்டுமன்றி ஜீன்ஸ் போன்ற படங்களில் இளமை துள்ளும் பாடல்களுக்கும் உன்னி கிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வைத்தார் ரஹ்மான்.
அந்த வகையில் இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகமாக அமைந்தது நித்யஶ்ரீயின் “கண்ணோடு காண்பதெல்லாம்” ஜின்ஸ் படப்பாடல்.
நித்யஶ்ரீ போன்ற திரையிசைச் சாயல் கலக்காத அக்மார்க் சபா மேடைக் குரலை ஜீன்ஸ் போன்ற மெகா பட்ஜெட் படத்தில் நுழைத்தது
ரஹ்மானின் சாமர்த்தியம்.

சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு நடுவராகச் சென்ற ஶ்ரீநிவாஸ் அந்த நிகழ்ச்சியில் பாடிய சின்மயியின் குரலை ஞாபகம் வைத்திருந்து
பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான், “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் வரும் “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலுக்கு புதுக்குரலைத் தேடியபோது ஶ்ரீநிவாஸ் சின்மயியை பரிந்துரைக்கிறார், சின்மயி என்ற திரையிசைப்பாடகி பிறந்தார். அது போல் அப்துல் ஹமீது நடாத்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் தன் திறமையைக் காட்டிய முகேஷுக்கு ரஹ்மானின் “கண்களால் கைது செய்” அறிமுகம் கொடுக்கின்றது. திறமை எங்கிருந்தாலும், அதை யார் வழிமொழிந்தாலும் அதனைப் பாவிக்கும் ரஹ்மானின் திறனுக்கு இவை சில உதாரணங்கள்.

ரஹ்மான் தமிழுக்கு அறிமுகப்படுத்திய வட நாட்டுக்குரல்கள் விளைவித்த மொழிச் சேதத்தையும் கண்டிக்க இசை ரசிகர்கள் தவறவில்லை. உதித் நாராயணன், மதுஶ்ரீ, சாதனா சர்க்கம் போன்ற பாடகர்களின் அந்நியமான தமிழை ரஹ்மானின் இசை உள்வாங்கிக் கொண்டாலும் அந்தக் குரல்களில் அமைந்த நல்ல பல பாடல்களை ஒதுக்க முடியவில்லை. ஆனால் ரஹ்மானின் அறிமுகத்தில் வந்த கார்த்திக், நரேஷ் ஐயர் போன்ற குரல்களும் சரி சங்கர் மகாதேவன், கவிதா சுப்ரமணியம், ஹரிஹரன் போன்ற ஏற்கனவே அறிமுகமாகி
ரஹ்மானின் பாடகளால் உச்சத்துக்கு சென்றவர்களும் சரி அந்தக் குறையையும் தீர்த்து விட்டார்கள்.

வட நாட்டுக் குரல்களை தமிழில் அழைத்து அறிமுகப்படுத்திய ரஹ்மானின் இன்னொரு சாதனை தமிழில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பலரையும் ஹிந்தித் திரையுலகிலும் வெளிக்காட்டி நின்றமை. ஶ்ரீநிவாஸ், கார்த்திக், பென்னி தயாள், சின்மயி போன்ற பாடகர்கள் பலர் ஹிந்தியிலும் தடம் பதிக்க ரஹ்மானின் பாடல்கள் களமாக அமைந்திருந்தன. ஹிந்தித் திரையுலகில் கூட மரபு ரீதியாக அமைந்த பாடகர்கள் வட்டத்திலிருந்து விலகி புதுப் புதுக் குரல்களின் தேடல் அமைந்து வருகின்றது. தமிழிலும் சரி ஹிந்தித் திரையுலகிலும் சரி ரஹ்மானின் அறிமுகத்தில் வெளிக்கொணரப்பட்ட பாடகர்களை ஒரு கட்டுரைக்குள் அடக்கிப் போட்டு விட முடியாது. அந்த அளவுக்கு அவரால் அறிமுகப்படுத்திய பாடகர் பட்டியல் நீள்கிறது.

ஆரம்பத்தில் ரஹ்மான் என்ற இளைஞன் தன் திறமையை வெளிக்காட்டச் சந்தர்ப்பம் தேடிக் காத்திருந்தது போல இன்னும் எத்தனை எத்தனை இளைஞர்கள் யுவதிகள் இப்படி இருப்பார்கள் என்ற அவர் மனதுக்குள் எண்ணியிருக்கலாம். அதுவே பின்னாளில் புதியவர்களைக் கை தூக்கி விடும் பண்பை அவருள் விதைத்திருக்கலாம்.

முதல் படம் கொடுத்த வெற்றிப் போதையில் படங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு இசையமைத்துத் தன் அடையாளத்தைத் தொலைத்து விடாமல் மிகவும் நிதானமாக நடைபோடும் ரஹ்மானால் தான் இன்று ஆஸ்கார் வரை செல்ல முடிந்தது. பெரும்பாலும்
ரஹ்மானின் சாகித்யத்தையும் புதிய முயற்சிகளையும் காட்டுவதற்கேற்ற களங்களாகத் தான் அவர் ஒப்புக் கொண்ட படங்கள் அமைந்தன.
அதனால் தான் கிராமியப் பின்னணியில் அமைந்த படங்களும் சரி நகர வாழ்வியலோடு அமைந்த கதைக்களனாயினும் சரி புதுப் புதுக் குரல்களைத் தன் மெட்டுக்களுக்குப் பயன்படுத்தி குறித்த அந்தத் திரைப்படங்களின் சாயத்தை வேறுபடுத்திக் காட்டினார். காலாகாலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடல்களின் குரலோசைக்கு ரஹ்மானால் புது அர்த்தம் கற்பிக்கப்பட்டது. இன்று அவருக்குப் பின் தொடரும் இசையமைப்பாளர்கள் இப்போது புதுக்குரல்களைத் தேடும் பார்முலாவுக்கு வித்திட்டதும் ரஹ்மான் உருவாக்கிய இன்னொரு பாணி தான்.

அம்ருதா ஏப்ரல் 2009 இல் வந்த என் கட்டுரையின் மூலம்தீபாவளி இன்னிசை விருந்து

தீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலகெங்கும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் தீபாவளி நாளில் போட்டுத் தீர்க்கப் போகும் பாடல் பட்டியலை இங்கே தீபாவளிப் பரிசாகப் பரிமாறுகிறேன். பாடல்களைக் கேட்டு அனுபவியுங்கள்

உன்னைக் கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி (கல்யாணப்பரிசு)

நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதசி (நாயகன்)

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா (பூவே பூச்சூடவா)

தினம் தினம் தினம் தீபாவளி (காட்பாதர்)

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் (தேவதை)

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் (ஆத்மா)

சிட்னியில் ஒளிர்ந்த “வைர(த்தில்) முத்து(க்கள்)


திரையிசைக்கவிஞர்கள் கறிவேப்பிலையாய்ப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு வந்து காட்டியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவருக்கு முன்னான காலகட்டத்தின் சகாப்தங்களான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்ற ஆளுமைகள் தமிழ்த்திரையிசைப் பாடல்களின் தனித்துவங்களாக இருந்தாலும், கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடலாசிரியர்களுக்கான தனித்துவம் என்ற விஷயத்தில் முன்சொன்னது போல நட்சத்திர முத்திரையைப் பதித்திருக்கின்றார். அந்த வகையில் ஒரு பாடலாசிரியரை முன்வைத்து அவுஸ்திரேலியாவில் நடக்கும் முதல் கலை நிகழ்ச்சியாக அமைந்தது சரிண்டா வழங்கிய “வைரத்தில் முத்துக்கள்”. இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை யூலை 4 ஆம் திகதி சிட்னி நகரமண்டபத்தில் இரவு 7.30 முதல் இரவு 10.30 வரை நடந்தது. கவிஞர் வைரமுத்துவோடு பாடகர்கள் மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா (சுஜாதா மகள்) ஆகியோரோடு நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் இணைந்து இந்த “வைரத்தில் முத்துக்கள்” நிகழ்ச்சியைப் படைத்திருந்தனர்.

ஓவ்வொரு திரையிசைப்பாடல்கள் பிரசவிக்கும் போதும் அதன் பின் சுவையான ஒரு சம்பவம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதைத் தன் பாணியிலே வைரமுத்து அவர்கள் விவரித்து தருவது தனித்துவமானது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றதற்கும் முதற்காரணம் “வைரமுத்து”வே தான். “நேற்றுப் போட்ட கோலம்” என்ற நூலில் தன் திரையிசைப்பாடல்கள் பிறந்த கதையைக் கவிதையாக வர்ணித்து எழுதியதைப் பலமுறை ரசித்திருக்கின்றேன். அந்த சுகானுபவம் நேரிலே கிட்டவெண்ணி நிகழ்ச்சிக்குப் படையெடுத்தேன்.

நிகழ்ச்சி ஆரம்பமானது, தன் அக்மார்க் தும்பைப்பூ வெள்ளை உடைக்குள் கறுப்பு வைரம் மேடையில் தோன்றப் பார்வையாளர் கூட்டம் ஆரவாரித்ததில் இருந்தே என்னைப் போலவே இன்னொரு கூட்டமும் அங்கே வந்திருந்ததைக் கைதட்டிக் காட்டியது. முதற்பாடல் நிழல்கள் படத்தின் தன் முதற்பிரசவமான “இது ஒரு பொன்மாலைப்பொழுது” பாடல் பிறந்த கதையைச் சொன்னார். மார்ச் 10 ஆம் திகதி இயக்குனர் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா ஆகியோரோடு இந்தப் பாடலை எழுதும்போது மனைவி பொன்மணி வைரமுத்து தன் முதற்பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த நாள் முப்பது நிமிடத்தில் இட்டுக்கட்டிய அந்தப் பாடலின் நினைவை 30 வருசங்களுக்குப் பின் மேடையில் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஏற்கனவே கேட்ட விஷயம் என்றாலும் ஒரு மெய்சிலிர்ப்பான அனுபவம். தன் முதற் பாடல் எழுதி முடிந்ததும் இளையராஜா, வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்தபோது “அட இந்தக் கருவாயன் லேசில் இப்படியெல்லாம் செய்ய மாட்டானே” என்று வைரமுத்துவிடம் சொல்லியதைச் சிரித்துக் கொண்டே சொன்னவர் “யாரை யார் கருவாயன் என்று சொல்லுகிறார்” நாம் மூன்றுபேருமே இந்த விஷயத்தில் ஒற்றுமையானவர்கள் ஆச்சே, வைகை ஆத்துத் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்களல்லவா நாம் மூவரும்” என்று அவர் சொன்ன கணம், பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்துவின் அந்தப் பொற்காலம் நினைவுக்கு வந்து ஏங்க வைத்தது. இந்தப் பாடலை மனோ பாடி முடிந்ததும். இந்தப் பாடலுக்காக விடுபட்ட சரணத்தை இங்கே தருகின்றேன் என்று சொல்லியதும், மனோ “இரவும் பகலும் யாசிக்கிறேன்” என்று தொடர்ந்தார் அந்தக் கேட்காத கவிவரிகளை.

பாடகர் மனோவைப் பொறுத்தவரை ராஜா வைரமுத்துவோடு உரசிக்கொண்ட எண்பதுகளின் அந்த நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ராஜாவின் வளர்ப்பு மகனாகச் சீராட்டப்பட்டவர் பாட்டுலகில். எனவே வைரமுத்துவின் வரிகளில் மனோவுக்கான தனி அங்கீகாரம் பெற்ற பாடல் ஒன்றுமே இல்லை என்றே சொல்லி விடலாம். பின்னர் ரஹ்மானின் சகாப்தம் மலர்ந்த போதுதான் மனோவுக்கும் வைரமுத்துவுக்குமான கூட்டணி என்பது ஓரளவு சொல்லத் தக்கதாக இருந்தது. எனவே வைரமுத்துவை முன்வைத்து நடந்த இந்த நிகழ்ச்சியில் மனோ, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நகலாகவே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம், குறிப்பாக இசைஞானியின் பாடல்கள் என்று வந்த போது. அந்த வகையில் மூன்று மணி நேர இசைவிருந்தில் இரண்டே இரண்டு இளையராஜா பாடல்கள் தான் கிட்டியது. இதுவே வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் கூடவே சித்ரா என்று கூட்டணி வைத்துக் கச்சேரி பண்ணியிருந்தால் எந்திரன் அளவுக்கு எகிறியிருக்கும்.


உன்னிகிருஷ்ணன் முதல் நாள் வெள்ளிக்கிழமை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நடத்திய “தித்திக்கும் வெள்ளி” வானொலி நிகழ்ச்சிக்கு நேராகக் கலையகம் வந்து பேட்டி தந்தவர். அந்தப் பேட்டியைக் கேட்க

சிட்னிக்குளிர் உன்னிகிருஷ்ணனின் எதிரியாக அமைந்து அவரின் குரல்வளையை நெரித்ததை முதல் நாள் பேட்டி எடுத்த போதே உணர்ந்தேன். அது நிகழ்ச்சி நடந்த போதும் தொடர்ந்தது துரதிஷ்டம். “என்னவளே அடி என்னவளே”, “பூவுக்குள் ஒளிந்திருக்கும்” (ஸ்வேதாவோடு) போன்ற தன் பாடல்களைத் தந்ததோடு சிவாஜி படத்தில் உதித் நாராயணன் குரலுக்காக இவர் மேடையில் பாடிய “சஹானா சாரல் தூவுதோ” என்ற பாடலை எடுத்தது பெரிய ரிஸ்காக அமைந்து விட்டது. சென்னையில் பாடினால் மும்பையில் எதிரொலிக்கும் உச்சஸ்தாயி உதித் இன் குரலில் உன்னி மேலே சென்ற போது குரல்வளையை இன்னும் இறுக நெரித்து இயற்கை சதி செய்தது. வெகு லாவகமாகப் பாடித் தேசிய விருதைக் கைப்பற்றிக் கொண்ட “உயிரும் நீயே உடலும் நீயே” பாடலைக் கொடுத்துக் கொள்ளை கொண்டிருக்கலாமே.

ஆந்திரா தமிழ் நாட்டுக்கு இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் பி.சி.சுசீலா, மற்றவர் ஜானகி. அதேபோல் கேரளம் இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் சித்ரா மற்றவர் சுஜாதா என்ற வைரமுத்துவின் அறிமுகத்தோடு சுஜாதா தோன்றினார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது ஐந்து முறை கிடைத்த போதும் அந்தப் பாடல்களுக்குத் தேசிய விருது கிட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பாடலுக்கு எதிர்பார்த்தேன் ஆனால் கிட்டவில்லை, விருது என்பதே எதிர்பாரால் கிடைக்க வேண்டியது தானே என்று சொல்ல சுஜாதா பாடிய பாடல் “காற்றின் மொழி ஒலியா இசையா ” என்று சுஜாதா பாடி அந்தப் பாடலை முடிக்கும் நிமிடத்துளிகள் வரை சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கி ஒன்றித்தது அந்தப் பாடலை அவர் கொடுத்த அந்தத் தெய்வீகக் குரலில். சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்தப் பாடலை ஶ்ரீலேகா பார்த்தசாரதி ஒரு இசை நிகழ்ச்சியில் பாடி, வாழைத்தோப்புக்குள் யானை புகுந்த கதையாய் துவம்சம் பண்ணியிருந்தார். அந்த வலிக்கு ஒத்தடமாக அமைந்தது சுஜாதாவின் இந்த அட்சர சுத்த அக்க்ஷய திருதைத் தங்கக் குரல். சுஜாதாவுக்குப் பின் வந்த சித்ராவுக்குக் கூட இப்போதெல்லாம் மேடைக்கச்சேரி செய்யும் போது உச்சஸ்தாயியில் ஒரு பாடலைக் கொண்டு போகும் போது, லிப்ட் இயங்காத நேரம் பாத்து பத்து மாடிக்கு ஏறிய களைப்பு வருவதைப் பார்க்கலாம். ஆனால் சுஜாதா இந்த விஷயத்தில் வெகு லாவகமாக ஸ்கோர் செய்து ஆட்டத்தில் இருக்கிறார். தன் சுத்தத்தமிழுக்கு ஆசான் வைரமுத்து என்றார் சுஜாதா.

பாடகி சுஜாதாவுக்கும் , அவர் மகள் ஸ்வேதாவுக்கும் வயசில் தான் வித்தியாசம், வாய்சில் அல்ல என்ற வைரமுத்துவின் கூற்றைப் பலமடங்கு நிரூபித்தது சுஜாதாவின் குரல்.

பாடகி சுஜாதா சிட்னியில் இறங்கும் நேரம் பார்த்து திரையிசையின் பெரும் பிதாமகர்களில் யாராவது இறப்பது ஒரு வாடிக்கையாக விட்டதோ என்று நினைக்கத் தோன்றியது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி சுஜாதா இங்கே வந்து வானொலியில் பேட்டி கொடுத்த நேரம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இறந்த சேதியைச் சொன்னேன் அவருக்கு. அந்த நேரம் அவர் அதிர்ச்சி கலந்த கவலையோடு “மகாதேவன் மாமா” என்று உருகி, மகாதேவனின் பெருமையைச் சிலாக்கித்திருந்தார். மீண்டும் இந்த முறை அவர் வந்த நேரம் இன்னொரு இசையமையாளரின் இறப்புச் செய்தியும் வந்தது. மலையாள சினிமாவின் சாகித்யங்களில் ஒருவரான எம்.ஜி.ராதாகிருஷ்ணன் கடந்த ஜீன் 2 ஆம் திகதி இறந்த சேதி வந்தது. இரண்டுமே வெள்ளிக்கிழமைகள். மலையாள இசையின் ஆளுமை எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு இந்த வேளை என் இரங்கல்களைப் பதிவு செய்கின்றேன்.

எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மலையாள சினிமாவின் தனித்துவம் மிக்க இசையமைப்பாளராக விளங்கி வந்திருக்கின்றார். கே.ஜே.ஜேசுதாசின் சக பாடகி சுஜாதாவை முதன்முதலில் தனிப்பாடல் ஆல்பம் மூலமாகவும் , சித்ராவை திரையிசைப்பாடகியாகவும் அறிமுகப்படுத்தியவரே இவரே. கமலா சுரையாவின் கவிதைகளை “சுரையா பாடுன்னு என்ற இசை அல்பமாக ஆக்கியிருக்கின்றார். தலைசிறந்த இயக்குனர் அரவிந்தனின் அரவிந்தனின் ‘தம்ப்’ ஆர்ட் பிலிம் மூலம் இசையமைப்பாளர், ஆல் இந்தியா ரேடியோவில் தம்புரா கலைஞராக மாதச் சம்பளத்தில் சேர்ந்து வாய்ப்பாட்டு கிளாஸ் திருவனந்தை வானொலியில் நடத்தியது மூலம் பிரபலம், மனைவி பத்மஜா மலையாளத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், இவரின் சகோதரர் எம்.ஜி.ஶ்ரீகுமார் பிரல பின்னணிப்பாடகர்.(தகவல் குறிப்புக்கள் ஆதாரம் விக்கிபீடியா, இரா.முருகன்). அத்தோடு தமிழில் சந்திரமுகியாகக் குதறப்பட்ட மணிசித்ரதாளு மலையாளப்படத்தில் இவர் வழங்கிய இசை அந்தப் படத்தின் அடிநாதமாக விளங்கியதைப் படத்தைப் பார்க்கும் போதே அனுபவித்திருக்கின்றேன். குறிப்பாக மணிச்சித்ரதாளுவில் வரும் தமிழ்ப்பாடலான “ஒருமுறை வந்து பார்ப்பாயா” என்ற கே.எஸ்.சித்ரா, கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் உட்பட இந்தப் படத்தில் வந்த மற்றைய பாடல்களும். இவரின் இசையை நான் எல்.வைத்யநாதனின் இசை வரிசையில் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.

மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் தோட்டத்தில் இருந்த பாலசந்தரின் அலுவலகத்துக்கு ஒருமுறை வைரமுத்துவை அழைத்து புதுசா ஒரு பையன் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறான், வந்து பாருங்கள் என்று பாலசந்தர் அழைத்தபோது அங்கே ஜமுக்காளம் விரித்துத் தரையில் கீபோர்டுடன் உட்கார்ந்திருந்த திலீப் என்ற பையன் பின்னாளில் ரஹ்மான் என்ற ஆஸ்கார் நாயகனாக வந்த நினைவைப் பகிர்ந்து கொண்ட வைரமுத்து, “சின்னச் சின்ன ஆசை” என்ற ரோஜா பாடலைக் கேட்டு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஒரு தமிழர் கடிதம் எழுதிய போது தன்னோடு இருக்கும் மற்ற மொழிக்கார சகாக்கள் இந்தப் பாடலின் ஹிந்தி வடிவத்தை விடத் தமிழைத்தான் விரும்பிக் கேட்கிறார்கள் என்று சொல்லி நெகிழ வைத்தார். ஸ்வேதா அந்தப் பாடலைப் பாடிய போது அச்சொட்டாக மின்மினியின் குரல் தான். இந்த ஸ்வேதா இன்னும் ஆறுமாதங்களில் திருமண பந்தத்தில் இணைகிறார் என்றவாறே வைரமுத்து “மணமகளே மருமகளே வா வா” என்று குறும்பாகப் பாடிய போது ஸ்வேதா முகத்தில் அவர் அம்மா அடிக்கடி காட்டும் வெட்கம். பத்து வருசங்களுக்கு முன் அம்மாவோடு சிட்னி வந்திருக்கேன் ஆனா அப்போது நான் மீண்டும் இங்கே ஒரு பாடகியாக வருவேன்னு நினைச்சுப் பார்க்கலை என்று ஸ்வேதா நெகிழ்ந்தார். அது மட்டுமே அவர் பேசிய முதலும் கடைசியுமான வார்த்தைகள்.

“வேற்றுமொழிப்பாடகர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடலாமா” என்று என்னிடம் கேட்ட போது, தமிழைச் சிதைக்காதவரை யாரும் அதைச் செய்யலாம். செளராஷ்டிரர் செளந்தரராஜன், கன்னடர் ஶ்ரீனிவாஸ் தொட்டு பல உதாரணங்களைச் சொன்ன வைரமுத்து தமிழ்ப்பாடல்களைப் பாடிய பெரும்பான்மை வேற்றுமொழிப்பாடகர்கள் தான் அதைச் சிதையாமல் பாடியிருக்கின்றார்கள் என்றவாறே பாடகர் உதித் நாராயணன் ஈஸ்வரா என்ற பாடலில் “பிரியமான பெண்ணை ரசிக்கலாம்” என்பதை “பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்” என்று மாற்றிப் பாடிய அந்த நிகழ்வைச் சொன்ன போது அரங்கம் சிரிப்பு மழையில் அதிர்ந்தது. எட்டு நிமிடங்கள் மட்டுமே எழுத நேரம் பிடித்தது என்று பாட்ஷா பாடலான “ரா ரா ராமையா” பாடலைச் சொல்லிவிட்டு, இரண்டு நாள் இடைவெளியில் காதல் ஓவியம் படத்தில் பாடலான “சங்கீதஜாதி முல்லை” பாடலை இரவோடிரவாக இளையராஜா விட்டுக் கதவைத் தட்டி, லுங்கி கட்டிய ராஜா ஆர்மோனியம் வாசிக்க மெட்டமைத்துக் கண்ணீர் விட்டுப் பின் விநியோகஸ்கர்கள் படத்தின் தோல்வியால் கண்ணீர் விட்ட கதையைச் சொன்னார். அந்தப் பாடலை மனோ பிரதிக் குரலெடுத்துப் பாடினார்.

ராக்கமா கையத் தட்டு பாடல் போல ரஹ்மான் தன் பங்குக்குத் தந்த திருடா திருடா பட “வீரபாண்டிக் கோட்டையிலே” பாடலின் மூல வடிவில் மனோ, உன்னிமேனன், சித்ரா ஆகியோர் பாடியிருப்பார்கள். அதே பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா பாடியது சிறப்பாக இருந்தது. பாடி முடிந்ததும் முதல் தடவையா முயற்சி பண்ணியிருந்தேன் என்று மூச்சு வாங்கியவாறே சிரித்தார்.

“வைரமுத்துவின் ரசிகை” என்ற நகைச்சுவை நாடகத்தை விவேக் தன் பரிவாரங்களான செல் முருகன், சுஹாசினி ஆகியோருடன் நான்கு பாடல்களுக்கு இடையில் என்று பாகங்களாகக் கொடுத்திருந்தார். வைரமுத்து போல நடித்து காதலிக்கும் ஆண்மகனாக விவேக். முடிவில் வைரமுத்துவே தோன்றி “ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்” ஆனால் காதலுக்கு ஒரு பொய்யும் சொல்லக்கூடாது என்று முத்தாய்ப்பாய் முடித்தார். அளவான நகைச்சுவை என்பதால் ரசிக்க முடிந்தது.

செம்மொழி மாநாட்டில் பேச வந்த கலிபோர்னிய நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் புழங்கிய சொற்களையும் இன்றும் காத்துப் பேசிவரும் மொழி தமிழ்மொழி என்று சிலாகித்ததைச் சொல்லி மகிழ்ந்த வைரமுத்து பாரிமன்னனின் மகளிர் பாடும் சங்கத்துப் பாடலை ஆதாரமாகக் கொண்டு எழுதிய “நறுமுகையே நறுமுகையே” பாடலைச் சொல்ல, உன்னிகிருஷ்ணனோடு ஸ்வேதா பாடினார்.

கொச்சி தாஜ் ஹோட்டலில் முத்து பாடல்பதிவு இடம்பெற்ற சமயம் நெப்போலியின் கடைசி ஆசையினை ரஜினிக்குச் சொன்ன போது கேட்டு வியந்த அவர் ஏதாவது ஒரு பாடலில் புகுத்தவேண்டும் என்று ஆசை கொண்ட போது எழுதியது தான் “மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை” என்ற “ஒருவன் ஒருவன் முதலாளி” பாடல் என்றார். முத்து படத்தில் இருந்து இன்னொரு முத்தாக மனோ, சுஜாதா பாடிய “தில்லானா தில்லானா” பாடலை ரஜினி போல ஆடிக்கொண்டே மனோ பாட , மீண்டும் சுஜாதாவின் முகம் வெட்கத்தால் நிரம்பியது.

திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு இசைக்குழு ஒன்று பக்கவாத்தியமாக வந்தாலும் பெரும்பாலான பாடல்களுக்குப் கரோக்கி இசை தான் என்பதை உன்னிப்பாகப்பார்த்தாலே தெரியும். ஆனால் சேட்டன்கள் நீண்ட நேரமாக “நல்லவங்க மாதிரியே வாசிச்சு நடிச்சாங்க” . ஏதோ ஒரு பாடலில் புல்லாங்குழல் ஸ்கோர் செய்யும் நேரம் முடிந்தும் புல்லாங்குழலை வச்சு பாவ்லா பண்ணி வாசிச்சுக் கொண்டிருந்தார் சேட்டன்.

“புத்தம் புது பூமி வேண்டும்” பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா ஆகியோர் பாட நிறைவாகியது நிகழ்ச்சி. இதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் தமிழர்களை மட்டும் இல்லாது பொத்தம் பொதுவாக விளம்பரப்படுத்துவதால், ஓவ்வொரு பாடலுக்கும் இடையில் “தமிழ் பாட்டு பாடுக”, “கன்னட சாங் பிளீஸ்”, “மலையாளம் ஒன்னு”, “தெலுகு நம்பர் பிளீஸ்” என்றெல்லாம் கூக்குரல் வரும் ஆனால் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பிரச்சனை இல்லை. இருந்தாலும் நிகழ்ச்சி ஓய்ந்து விட்டது என்றதும் மேல்மாடியில் இருந்த சேட்டன்ஸ் & சேச்சிஸ் மலையாளம் மலையாளம் என்று கத்த சுஜாதா, ஸ்வேதா கடலினக்கரை போனோரே பாடலில் இருந்து சமீபத்தைய வரவு கோலக்குயில் கேட்டோ பாடல்களைத் துண்டு துண்டாகப் பாடி நிறைத்தார்கள். குறிப்பாக ஸ்வேதாவுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்த நைவேத்யம் திரைப்படப்பாடல் “கோலக்குயில் கேட்டோ ராதே என் ராதே” பாடலை அவர் அம்மா சுஜாதா பாடியது வல்லிய சுகமானு.

வைரமுத்து என்ற சகாப்தம் தமிழ்த்திரையிசையின் முக்கியமான சகாப்தங்களான இளையராஜா, ரஹ்மான் போன்ற ஆளுமைகளோடு இணைந்த காலங்கள் தனித்துவமானவை. அதை ஒரே நிகழ்ச்சியில் கொடுப்பதென்பது மகா கஷ்டம். இருந்த போதும் முன் சொன்னது போல இந்தப் பாடல்களுக்குப் பின்னால் அணி செய்த ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்றோரோடு இணைந்து இந்த நிகழ்ச்சியைப் படைத்தால் அந்த நிகழ்ச்சியின் வடிவமே இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கும் . கூடவே இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வைரமுத்து அவர்கள் ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுத்த விளக்கம் என்பது விலாவாரியாக சுவையாக இருந்து ஒருகட்டத்தில் சுருங்கி பின் நேரப்பற்றாக்குறையால் விளக்கங்களே இல்லாத வெறும் பாடல்களாக இருந்தது பெரும் குறை. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் படைத்த பாடல்கள் பிறந்த கதைகளைக் கேட்டாலும் மீண்டும் சலிப்புத் தட்டாவிட்டாலும் இதை விட இன்னும் பல அனுபவங்களை வேறு பாடல்களோடு கேட்க வேண்டும் என்ற ஆசையும் வருகின்றது. இதை விட முக்கியமாக, ராஜாவோடு முரண்பட்டு இருந்த காலத்தில் தன் இருண்ட காலத்தில் வெளிச்சமாய் மாற்றிக்காட்டிய முக்கியமான பாடல்களை வைரமுத்து அந்தக் காலகட்டத்து இசையமைப்பாளர்கள் சந்திரபோஸ் மற்றும் சங்கர் கணேஷ் போன்றோருடன் பணியாற்றிய போது ஏற்பட்ட பாடல் பிரசவ அனுபவங்கள் மேடைகளில் பதியப்படாதவை. அவை அரங்கேற வேண்டும் என்ற தீரா ஆசை இருந்தாலும் அந்தப் பாடல்களை ரசித்துக் கேட்கும் கூட்டம் எவ்வளவு தூரம் இந்த டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் என்பதும் கேள்விக்குறி.
இவையெல்லாம் கடந்து “வைரத்தில் முத்துக்கள்” நம் மனதில் இடம்பிடித்த சுகானுபவம்.

காதலர் தினம் 2010

காதலர் தினம் என்பது காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள். இந்தத் தினத்தைக் கேட்டாலேயே பதின்ம வயது நினைவுகள் அப்படியே மீண்டும் ஒரு சுற்று வரும். ஹலோ ஹலோ ஓடாதீங்க, இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை 😉

வானொலியில் “காதலர் கீதங்கள்” என்ற நிகழ்ச்சியை 6 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்திருக்கின்றேன். குறிப்பாக மு.மேத்தா போன்றோரின் கவிதைகளை நறுக்கிச் சிலவரிகளை மட்டும் சொல்லி அதற்குப் பொருந்துமாற்போலப் பாடல்களைப் பகிர்வேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு தீம் வைத்துச் செய்திருப்பேன. எனவே காதலர் கீதங்களைப் பகிர்வது என்பது எனக்கு இன்னும் அலாதியான விருப்பு. அந்த வகையில் காதலர் தினம் 2010 சிறப்புப் படையலாக இங்கே வைரமுத்து எழுதிய காதல் கவிதைகளையும் எனக்குப் பிடித்த சில காதல் பாடல்களையும் பகிர்கின்றேன். காதலனாகவும் கவிஞனாகவும் இருந்ததால் வைரமுத்து அணு அணுவாகப் பிளந்து காதலைக் காதலித்து எழுதிய மணியான வரிகள் அவை.

காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி

ஒளிவட்டம் தோன்றும்…

உலகம் அர்த்தப்படும்…

ராத்திரியின் நீளம்

விளங்கும்….

உனக்கும்

கவிதை வரும்…

கையெழுத்து

அழகாகும்…..

தபால்காரன்

தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே

கண்ணாடி உடையும்…

கண்ணிரண்டும்

ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்

மூன்று முறை

பல்துலக்குவாய்…

காத்திருந்தால்

நிமிஷங்கள் வருஷமென்பாய்…

வந்துவிட்டால்

வருஷங்கள் நிமிஷமென்பாய்…

காக்கைகூட உன்னை

கவனிக்காது

ஆனால்…

இந்த உலகமே

உன்னை கவனிப்பதாய்

உணர்வாய்…

வயிற்றுக்கும்

தொண்டைக்கமாய்

உருவமில்லா

உருண்டையொன்று

உருளக் காண்பாய்…

இந்த வானம்

இந்த அந்தி

இந்த பூமி

இந்த பூக்கள்

எல்லாம்

காதலை கவுரவிக்கும்

ஏற்பாடுகள்

என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி

இடம் மாறித் துடிக்கும்…

நிசப்த அலைவரிசைகளில்

உனது குரல் மட்டும்

ஒலிபரப்பாகும்…

உன் நரம்பே நாணேற்றி

உனக்குள்ளே

அம்புவிடும்…

காதலின்

திரைச்சீலையைக்

காமம் கிழிக்கும்…

ஹார்மோன்கள்

நைல் நதியாய்ப்

பெருக்கெடுக்கும்

உதடுகள் மட்டும்

சகாராவாகும்…

தாகங்கள் சமுத்திரமாகும்…

பிறகு

கண்ணீர்த் துளிக்குள்

சமுத்திரம் அடங்கும்…

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்

சிலிர்க்க முடியுமே…

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்

புதுப்பிக்க முடியுமே…

அதற்காகவேனும்…

ஆண் என்ற சொல்லுக்கும்

பெண் என்ற சொல்லுக்கும்

அகராதியில் ஏறாத

அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்…

வாழ்ந்துகொண்டே

சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே

வாழவும் முடியுமே…

அதற்காக வேணும்…

காதலித்துப் பார்!

டூயட் திரைப்படத்தில் இருந்து “கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?”

கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?

என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?

பேச்சுக்கு உயிர் தந்த சத்தங்கள் நீயா?

என்னைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?

சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?

என்னைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?

பருவத்தின் தோட்டத்தின் முதற் பூவும் நீயா?

என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணுகின்ற ஒளிவட்டம் நீதான்!

என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!

வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்!

என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சு நீதான்!

தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்!

என் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான்!

காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்!

நான் காதலித்ததால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்

அடுத்து இருவர் படத்திற்காக வைரமுத்து குழைத்த காதல் வரிகள்

உன்னோடு நானிருந்த

ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும்

மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள்

தொட்டணைத்த காலம் தான்

எண்ணூறு ஆண்டுகளாய்

இதயத்தில் கணக்குதடி

பார்வையிலே சில நிமிடம்

பயத்தோடு சில நிமிடம்

கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்

இலக்கணமே பாராமல்

எல்லாயிடங்களில் முத்தங்கள்

விதைத்த மோகத்தில் சில நிமிடம் (உன்னோடு)

எது ஞாயம் எது பாவம்

இருவருக்கும் தோன்றவில்லை

அது இரவா அது பகலா

அதை பற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க

ஒரு வழியும் தோன்றவில்லை

இருவருமே தொடங்கிவிட்டோம்

இதுவரைக்கும் கேள்வியில்லை

அச்சம் கலைந்தேன்

ஆசையினை நீ அணைத்தாய்

ஆடை கலைந்தேன்

வெட்கத்தை நீ அணைத்தாய்

கண்டதிரு கோலம்

கனவாக மறைந்தாலும்

கடைசியிலே அழுத கண்ணீர்

கையிலின்னும் ஒட்டுதடி

உன்னோடு நானிருந்த

ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும்

மறக்காது கண்மணியே

அடுத்து என்னை ஆட்கொண்ட சில காதல் பாடல்களைப் பகிர்கின்றேன்.

முதலில் வருவது “படித்தால் மட்டும் போதுமா” திரைப்படத்தில் இருந்து “பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை” (குரல்கள்: பி.பி சிறீனிவாஸ், டி.எம்.செளந்தரராஜன்)

அடுத்து வருவது “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தில் இருந்து “காதல் ஓவியம் பாடும் காவியம்” (குரல்கள்: இளையராஜா, ஜென்சி)

“நலம் நலமறிய ஆவல்” ஒலிப்பது “காதல் கோட்டை” திரையில் இருந்து (குரல்கள்: கிருஷ்ணராஜ், அனுராதா சிறீராம்)

நிறைவாக “என்ன விலை அழகே” கேட்கும் “காதலர் தினம்” (குரல்: உன்னி மேனன்)

சிட்னியில் மையம் கொண்ட “இசைப்புயல்”

எம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கும் கூட வரும், அது எத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும். அப்படி ஒரு விதமான அனுபவம் தந்த திளைப்பில் அதனை இங்கே பதிவாக்கிக் கொண்டிருக்கின்றேன்.

இந்தியாவின் பெரும் இசையமைப்பாளர், ஆஸ்கார் விருது பெற்றவர் என்ற அடைமொழிகளோடு தான் அவுஸ்திரேலிய ஊடகங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசை மேதையை சமீபகாலமாக அதிகம் உச்சரித்தன. அதற்குக் காரணமாக அமைந்தது நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் Sydney Festival 2010. ஆம் இந்த நிகழ்வுக்கு வந்து சிறப்பிக்க இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் அவர் யார் என்று சிறு குறிப்போடும் அவ்வப்போது அடையாளப்படுத்திக் கொண்ட இந்த நிகழ்வு ஆரம்பமாகும் தினம் வரை.

நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் மேற்குப் பிராந்தியம் பெருமளவு ஆசிய நாட்டவர்களையும் உள்வாங்கிக் கொண்ட பிரதேசமாகும். இங்கு தான் சிட்னி முருகன் ஆலயம் என்னும் பெரியதொரு ஆலயமும், இலங்கை, இந்திய மக்களின் குடியேற்றம் பரவலாக உள்ள இடமுமாகும். இந்த மேற்குப் பிராந்தியத்தின் தலைநகராக விளங்குவது Parramatta என்ற பெருநகராகும். இந்த நகரில் உள்ள Parramatta Park என்ற விசாலமான பூங்காவே ஏ.ஆர்.ரஹ்மான் நடத்த இருக்கும் அதுவும் உலகின் முழுமையான இலவச நிகழ்ச்சியாக அமைந்த Indo Australian Peace concert என்ற நிகழ்வாகும். இதனை நியூசவுத்வேல்ஸ் மாநில அரசாங்கமே பொறுப்பேற்று நடத்தியதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்பும், ஆர்வமும் தொற்றிக்கொள்ள, இரவு 7.30 மணிக்கு நடைபெறவிருந்த அந்த நிகழ்வுக்கு நண்பர்கள் புடைசூழ மதியம் 12 மணிக்கே Parramatta Park இற்கு நடைபயில்கின்றோம். வழியெங்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு அன்று தற்காலிகத் தடை போடப்பட்டிருந்தது. வீம்புக்காக ஏற்கனவே தரித்து நின்ற கார்களைத் தூக்கி அகற்றும் பணியில் போக்குவரத்து அதிகார சபையின் tow away வாகனங்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. Sydney Festival என்று பெயர் தாங்கிய ரீ சேர்ட் அணிந்து, விழாவின் கையேட்டுடன் வெள்ளைக்கார இளசுகள். இதையெல்லாம் கடந்து பூங்காவுக்குள் நுழைகின்றோம். அது நாள் வரை சுதந்திர வலயமாக இருந்த பூங்கா கூட்டுப் படைத் தலைமையகம் கணக்காக ஆங்காங்கே தடுப்பும் மறிப்புமாக இருக்கிறது. ஒற்றைப் பாதை மட்டும் தான். அந்தப் பாதையால் போக முன்னர் எல்லோருடைய கைப்பைகளும் சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்படுகின்றார்கள். “என்ன இது வழியில் போகின்றவர்களைப் பார்த்தால் சில நூறும் தேறாதே” என்ற சொல்லிக் கொண்டே நிகழ்வு நடக்கும் திடலை நோக்கி நடக்கின்றோம். சிட்னியின் முன்னணி நாளேடான Daily Telegraph ஏ.ஆர்.ரஹ்மானின் முழு அளவிலான படத்தை முன் அட்டையாகப் போட்டு souvenir இதழாகத் தயாரிக்கப்பட்டு அந்தத் திடலின் முகப்பில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஓரமாக தற்காலிக உணவகங்கள் போடப்பட்டும், தாக சாந்திக்காக Sydney Water தன் இலவசப்பணியையும் செய்து கொண்டிருந்தன.

நிகழ்வு நடைபெறும் அரங்கம் திடலில் நடுநாயகமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. பார்வையாளர் பகுதிகள் வலயங்களாகத் தடுப்புக்கள் போடப்பட்டு இருக்கின்றன. நேராக அந்த முதல் வலயத்தில் நிகழ்வு நடைபெறும் மேடைக்குச் சமீபமாக இடம் பிடித்துக் கொள்கின்றோம். 30 பாகைக்கு மேல் சூரியன் சோதனை செய்து கொண்டிருந்தான். பானி பூரி தட்டுக்களுடன் சூழவும் ஹை ஹை வட இந்தியக் கூட்டம். பன்னிரண்டு மணியில் இருந்து காத்திருப்போர் பட்டியலில் சில நூறு வெள்ளையர்கள், மற்றைய சமூகத்தினரும் அடக்கம். மெல்ல மெல்ல நூறு இருநூறாகப் படையெடுக்கின்றது நம் முதல் வலயத்துக்குள் சூரியக் குளியலில் நாம் வேர்த்துப் போன இடியப்பம் கணக்காகத் தவமிருக்கிறோம் வெறும் தரையில். மூன்று மணிக்குள் முதல் வலயம் நிரம்பி கூட்டம் ஐந்தாயிரத்தைக் கடந்திருக்கும். இதிகாசம் வர்ணிக்கும் ஆஜானுபாகு தோற்றம் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வலுக்கட்டாயமாக முன் வலயத்தை மூடித் தடுப்புப் போடுகிறார்கள். அங்கிருந்து வெளியே சென்று திரும்புபவர்களுக்கு அடையாளமாக சிவப்பு முத்திரையைப் பொறிக்கப்படுகின்றது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேனே என்று சில புத்திசாலிகள் நான்கு, ஐந்து மணி கணக்கில் வந்து முன் இருக்கைகளுக்காக நுழையப் பலவிதமான அஸ்திரங்களையும் பாவிக்கிறார்கள்.
“My brother sits inside” இது லேட்டா வந்த ஒருவர் பாவித்த அஸ்திரம்
“Who cares man” இது ஆஜானுபாகு செக்யூரிட்டி.

ஐந்து மணி அளவில் சூரியன் ஏமாற்றத்தோடு அங்கிருந்து நகர்ந்து கொள்ள மெல்லிய சிலிர் காற்று வந்து ஹலோ சொல்லிக் கொள்கிறது. ஆங்காங்கே பொருத்தப்பட்ட பெரும் திரைகள் இயங்க ஆரம்பிக்கின்றன. பாலிவூட் சினிமா குறித்து உலகெங்கும் உள்ள விமர்சகர்களும், ஹிந்தி சினிமாவின் கரன் ஜோகர் அசுதேஷ் கோவாரிகர், குல்சார் உள்ளிட்ட பிரபலங்களும் பேசுகிறார்கள். அவ்வப்போது ராஜ்கபூர் காலத்தில் இருந்து ஷாருக், சல்மான், அமிர் கான்கள் ரித்திக் ரோஷன் காலம் வரையான தேர்ந்தெடுத்த படத்துண்டுகளும் பாடல்களாக வருகின்றன.
“இந்தி சினிமா ஒன்றும் இந்திய சினிமா இல்லை” என்று மம்முட்டி கணக்காகக் கத்த வேண்டும் போலிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முன்னுறுத்திச் செய்கின்ற விழாவில் அவரின் பெருமைகளையாவது ஒரு பத்து நிமிடத்தில் சொல்லியிருக்கலாமே, சிட்னியிலும் வடக்கு வாழ்கிறது.

எங்களுக்குப் பின்னால் பரந்து விரிந்த அந்தத் திடலை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றேன். சில மணி நேரங்களுக்குள் சில ஆயிரங்களாக இருந்த கூட்டம் எண்பதாயிரத்தைத் தொட்டு நிரம்பி வழிகின்றது.

மணி ஏழுமணியைக் காட்ட விழா ஆரம்பமாகின்றது என்ற அறிவிப்போடு அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளின் பிரதிநிதியாக Uncle Sam இன் பேச்சோடு ஆரம்பிக்கின்றது.
அவரைத் தொடர்ந்து நியூசவுத் வேல்ஸ் மாநிலப் பிரதமர் Kristina Keneally இன் சம்பிரதாயமான பேச்சு சுருக்கமாக வந்து நிறைகிறது. அவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானை வரவேற்க அவுஸ்திரேலிய முன்னாள் கிறிக்கற் அணித்தலைவர் Steve Waugh. தனக்கும் இந்தியாவுக்கும் கடந்த 25 வருஷ பந்தம் இருக்கிறது என்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையுலகின் சச்சின் டெண்டுல்கர் என்று தன் ட்ரேட் மார்க்கைப் பதித்தார். இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்புச் செய்து கொண்டிருந்த ABC தொலைக்காட்சி சார்பில் இன்னொரு கிறிக்கற் வீரர் மத்தியூ ஹெய்டன் நிகழ்ச்சித் தொகுப்புச் செய்தது இன்னொரு சுவாரஸ்யம்

அரங்கம் மெளனமாகிறது. அடுத்து என்ன என்ற ஆவலோடு முழுக்கூட்டமும் மயான அமைதியில். ட்ரம்ஸ் சிவமணி தன் கழுத்தில் ட்ரம்ஸ் ஐத் தொங்க வைத்துக் கொண்டே ஆரம்பிக்கிறார் தன் கச்சேரியை, அது மெல்ல மெல்ல டிக்கு டிக்கு டிக்குடீ Rang De Basanti என மாறி வேகம் பிடிக்கின்றது. அரங்கத்தில் மேல் அடுக்குகளில் இருந்து நடன மங்கையரும் கீழ் அடுக்குகளில் இருந்து ஆடவர்களும் ஆடியவாறே பாடுகின்றார்கள். தலேர் மெஹந்தி, சித்ரா பாடிய பாட்டு பாடகர் இல்லாமல் கண்கவர் ஆட்டத்தோடு நிறைகிறது.

மேடையின் வாய் மெதுவாகப் பிளந்து நகர்கிறது, இருக்கையில் அமர்ந்தவாறே ரஹ்மானைத் திருப்பிக் காட்டுகிறது. கூட்டம் வாய் பிளந்து ஹோஓஓஓ என்று ஆர்ப்பரிக்கின்றது. ரஹ்மான் “வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி” என்று விட்டுப் பாடத் தொடங்குகிறாரே ஒரு பாட்டு, வந்திருந்த minority தமிழ்க் கூட்டமும் majorityக்கு சவால் விடுவது போல கைகளை அகல விரித்து அசைத்தவாறே கூக்குரல் இடுகிறார்கள். சும்மாவா, அவர் பாடிய முதல் பாட்டு சிவாஜியில் இருந்து “அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே”.

இதுக்கு மேல் இருக்கவே முடியாது என்று முழுக்கூட்டமுமே மொத்தமாக எழுந்து நின்று இரண்டு மணி நேர நிகழ்ச்சி முடியும் வரை நின்று கொண்டே ஆடியும் பாடியும், கைதட்டியும் ரசித்தது இதுவரை நான் பார்த்திருக்காத புதுமை.

தொடர்ந்து A.R.Rahman Connections என்ற தனி ஆல்பத்தில் இருந்து JIYA SE JIYA பாடலும், தில் சே படத்தில் இருந்து தில் சே ரே, Tere Bina என்று குரு படத்தில் இருந்தும் பாடினார் ரஹ்மான். அவரோடு கூட்டுச் சேர்ந்து சுருதி கூட்டினார்கள் பிளேஸ், பென்னி தயாள் , அஸ்லாம் , மற்றும் சில வட நாட்டுக் குரல்கள்.

பிளெஸ்ஸிக்கு வழக்கம் போல பாடல்களுக்கு முன்னும் இடையிலும் வரும் சிறப்புச் சப்தப் பணி தான் இந்த நிகழ்ச்சிக்குக் கொடுக்கப்பட்டது. தன் வழக்கமான வெள்ளைக் கலர் ஜம்பரும், வெள்ளைக் கோடு பிளாஸ்டிக் கண்ணாடி சகிதம் வந்த பென்னி தயாள் ஹோரஸ் கொடுத்தும் ஒரு சில பாடல்களில் ஆடவும் செய்தார். அஸ்லாமுக்கு இன்னும் கூடுதல் தகுதியாக அதிக பாடல்களில் ரஹ்மானுடன் சேர்ந்து பாடிச் சிறப்பித்தார். அஸ்லாமின் குரலில் ரஹ்மானுக்கு பெரு விருப்பு போல. காதல் தேசம் காலத்தில் இருந்து மனுஷரை விடமாட்டேன் என்கிறார். அஸ்லாம் இடையே ஒரு சில படங்களுக்கு இசையமைப்பாளராக ப்ரொமோஷன் கிட்டிப் போனாலும் ரஹ்மானிடமே மீண்டும் வந்து விடும் யோகம் அவருக்கும்.

இடையில் Pray For Me Brother என்ற தனிப்பாடலும் பெருந் திரைகளில் காட்சியாக விரிந்தது.

ஹோரஸ் குரல்களாக ரஹ்மானின் தங்கைகளில் வழக்கமாக மேடையில் வரும் ரைஹானா உடன் இஸ்ராத்தும் இணைந்து கொண்டார்.
சைய சையா (தைய தையா) பாட்டின் “காட்டு வழியே தூக்கணாங்குருவீகளாம்” என்று ரெஹ்னா சுபாவின் குரலில் அச்சொட்டாகப் பாட ஹிந்தியாகத் தொடர்ந்தது.
பாடகிகளில் “ஜெய ஹோ” புகழ் தான்வீ உடன் ஒரு இன்னொரு வட நாட்டுப் பாடகியும் இணைந்து பாடினார். அவர் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ரஹ்மானோடு கூடவே பயணிக்கும் வெள்ளை இனப்பாடகி Clare ஆங்கிலத்தில் பாடியும் , பாடல்களிடையே மெருகேற்றியதோடு அழகாக ஆடவும் செய்தார்.
இவர்களின் குரல்களில் குரு (ஹிந்தி) படத்தில் இருந்து நன்னாரே பாடலும் Delhi 6 இல் இருந்து Delhi 6 பாடலும் கூட வந்தன. “கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ பாடலை தான்வி உடன் அந்த வடநாட்டுப் பாடகியும் இணைந்து பாடியதுயது ஆடியதும் Fire 😉

“குட் ஈவினிங் சிட்னி” என்றவாறே தன் நாசியை உயர்த்திய சிரிப்பைக் காட்டி விட்டு பக்காவாக பாடல்கள் சிலதைக் கொடுத்தார் ஹரிஹரன். Nahin Saamne (தமிழில் கலைமானே) என்ற தால் பாடலை அவர் பாடியபோது கள் வெறி கொண்டு களிப்பில் இருந்தது ரசிகர் கூட்டம். நம் ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைப்போமா ரஹ்மான் என்று சொல்லி விட்டு கூட்டத்தின் இரு பக்கமுள்ள ரசிகர்களுக்கும் தான் பாடுவதை மீண்டும் பாடுமாறு கேட்டவாறே சில ஸ்வர வரிசைகளை அள்ளி விட்டார். இரண்டு பக்கமும் சேர்ந்திசையாக மீள எதிரொலித்தன அவை. போட்டியில் எல்லோருமே வெற்றி ஏனென்றால் இங்கே வெற்றி தோல்விக்கு இடமில்லை என்று முறுவலித்துக் கொண்டே சொன்னார் ரஹ்மான்.

உங்களுக்காக ஒரு ரொமான்டிக் பாட்டு என்றவாறே பம்பாய் படத்தின் ஹிந்தி தழுவலாக துஹிரே (உயிரே) என்று ஹரிஹரன் பாட ஆரம்பிக்க மீண்டும் ஒரு கலக்கல் பாட்டாச்சே என்று கூட்டமும் ஆரவாரித்தது. அந்தப் பாடலை ஹரிஹரன் தன் பாணியில் உச்ச ஸ்தாயியில் சாதகம் பண்ணி மெல்லக் கீழிறங்க அதைக் கையில் ஏந்துமாற் போலப் பிடித்து “உதயா உதயா உளறுகிறேன்” என்று பாடி தேசிய நதி நீர் இணைப்பாகச் செய்து வைத்தார் சாதனா சர்க்கம்.


இடையில் ஒரே பாடல் பாடிய அந்த ஆபிரிக்கப் பாடகரும், இன்னொரு ஹிந்தி முகமும் அந்த நேரத்தில் அந்நியமாக இருந்த புதுப்பாட்டுக்களிலும் சிறப்பாகவே செய்தார்கள்.

பின்னணி இசைத்தவர்களில், ட்ரம்ஸ் சிவமணி, புல்லாங்குழல் இசைத்த நவீன் தவிர மற்றையவர்கள் பழக்கமற்ற முகங்கள். ஆனால் வாசிப்போ ரஹ்மானின் பஞ்சாதன் ஸ்டூடியோவில் கேட்ட ஒலித்தரம். அதுவும் நிகழ்ச்சி முடியும் போது சிதார் இசைத்த Asad Khan உம், கீபோட் இல் கொத்து பரோட்டா போட்டவரும் அவரவர் கணக்கில் சுயேட்சையாக நின்று ஜெயித்து விட்டார்கள்.

இடையில் கழுத்தில் ஸ்டைலாக கீ போர்ட் போட்டுக்கொண்டே அதை வாசித்தவாறே பாடிய அதே ரஹ்மான், தலையில் வெண் தொப்பியுடன் சம்மணமிட்டுக் கொண்டே ஆர்மோனியத்தை வாசித்தவாறே கூட அஸ்லாம் துணை சேர்க்க Khwaja Mere Khwaja (ஜோதா அக்பர்) போன்ற சூஃபி வடிவ மெட்டுக்கள் சிலதைப் பாடித் தன் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார். குறித்த ஜோதா அக்பர் பாடல் மழை வேண்டிப் பாடுவது போன்றே பாடப்பட்டது என்று அவர் சொல்லிப் பாடிய போது அதுவரை ஆங்காங்கே மெல்லிய துளிகளாக துமித்த மழை மேகம் பாடல் முடியும் போது வெறிகொண்டு சுழற்றி அடித்தது. மழையில் நனைந்தாலும் இசை மழையை விடமாட்டோம் என்று அப்படியே கட்டுப் போட்டுக் கிடந்தது கூட்டம்.

அது மட்டும் போதுமா மீண்டும் நவீன உலகிற்குத் திரும்பிய இசைப்புயல் “முஸ்தபா முஸ்தபா’ என்றும், பிளேஸ் புதுவிதமான ஒரு ராப் போட்டுக் கொண்டே பார்வையாளர் கடலில் இருந்து வர “அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே” என்றும் கலகலக்கினார். நிகழ்ச்சி முடிந்து ஒரு நாள் கடந்த நிலையிலும் முஸ்தபா முஸ்தபாவை என் காதே கதி என்று சுற்றிக் கொண்டு இருக்கின்றது.ஒவ்வொரு பாடலுக்கும் விதவிதமான காட்சிகள் பின்னே விரிகின்றன. சில இடங்களில் பாடல்களுக்கு அணி சேர்த்த பாடகர்கள், பாடலாசிரியர் என்ற விபரம் வேறு. அத்தோடு தேவையான பாடல்களுக்கு உறுத்தல் இல்லாத நடன அமைப்புக்கள் அவை இந்திய நடனங்களில் இருந்து மேற்கேத்தேயம் வரை, எண்பதாயிரம் பேரையும் சம அளவில் எட்ட வைத்த ஒலித் துல்லியம், நீட்டி முழக்கும் பேச்சுக் கச்சேரிகள் இல்லதது இப்படி இந்த இந்த இசை நிகழ்ச்சியினை மெருகேற்றிய அம்சங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
மேடை நிகழ்ச்சி என்று வந்து விட்டாலே போதும் முன்னே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதில் வைத்த புத்தகத்தை ஒப்புவிக்கும் பாடகர்களை ஒழித்த பெருமை ரஹ்மான் காலத்திலாவது வந்ததே என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மேடை இசை நிகழ்ச்சி என்றாலே வழக்கமாக ஒலிப்பதிவு செய்த பாடலைக் குறித்த பாடகரை வைத்து மீண்டும் அச்சொட்டாகப் பாடவைப்பது என்ற கலாச்சாரத்தை இனியாவது இப்படியான நிகழ்ச்சிகளைப் பார்த்து மற்றவர்களும் குறிப்பெடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொரு பாடகனும் பாடகியும் அந்தப் பாடல்களை மனதில் இருந்து எழும் உணர்வாகப் பாடிக் கொண்டே அவற்றினை அனுபவித்துப் பாடியது வெகு சிறப்பு. ரஹ்மானின் வெற்றிக்குப் பின்னால் அவரோடு இசைக்கும் வாத்தியக் கலைஞர்களும் இருக்கின்றார்கள் என்று நேரே உறுதிப்படுத்தினார்கள் உறுத்தல் இல்லாத இசை கொடுத்த அந்த வாத்தியக்காரர்கள்.

போர்க்களக் காட்சி ஒன்று விரிகின்றது. பின்னே திரையில் ஆயிரம் ஆயிரம் படைகள். அதற்கு முன்னே நிஜமான படையணி ஒன்று நடுவே ரஹ்மான். பெரும் முரசறைதலோடு ஜோதா அக்பரின் Azeem-O-Shaan Shahenshah பாடலை அவர் பாடி அதையும் லாவகமாக ‘வீரபாண்டிக் கோட்டையிலே மின்னல் அடிக்கும்” வேளையிலே என்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கித் தன் பாட்டுப் படையைத் திருப்பி விட்டார்.

மற்றவர்களை நேசியுங்கள், உலகத்தை ஒன்றாகப் பாருங்கள் என்று நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாகச் சொல்லியவறே இரண்டரை மணி நேரமாக வழங்கிய அந்த நிகழ்ச்சி முடியப் போகின்றது என்று ரஹ்மான் சொல்லவும் ரசிகக் கண்மணிகள் விடுவார்களா? மேலெழுந்து பரவியது தொடர்ச்சியான வாண வேடிக்கைகள் வின்ணில் பரவ ஜெய ஹோ என்ற தன் விருதுப் பாடலோடு வந்தே மாதரம் பாடலையும் இணைத்துக் கூட்டாகப் பாடிக் கூட்டத்தை அரை மனதோடு கலைய வைத்தார். மார்ட்டின் லூதர் கிங் இன் பொன்மொழிகளும் மகாத்மா காந்தியின் வாசசங்களும் திரைகளை நிறைத்தன.

be the change you wish to see in the world!

ரஹ்மான் வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கலாம், பொம்பிளைகள் பொட்டு வைத்து கும்மி அடித்திருக்கலாம், ரஹ்மான் இன்னும் நிறையத் தமிழ்ப்பாடல்களைப் பாடியிருக்கலாம் என்ற வழக்கமான விமோசனமில்லாத விமர்சனங்களும்(!) ஒலிக்காமல் இல்லை. ரஹ்மான் என்ற கலைஞன் தமிழைக் கடந்த பொதுவான இந்திய இசையின் அடையாளமாக மாறி எவ்வளவோ காலம் கடந்து விட்டது. இசைக்கு மொழி இல்லை என்பதை அந்த அரபிக் கடலோரம் ரசித்த ஹிந்திக்காரனும், ஜோதா அக்பர் பாட்டுக் கேட்டு ரசித்த தமிழனும் ஒத்துக் கொள்வான். ஏன் இந்த இரண்டு மொழிகளும் தெரியாமல் இசை மழையை அனுபவிக்க மட்டும் வந்த சில நூறு அவுஸ்திரேலியனும் உணர்ந்து கொள்வான். உண்மையான/நேர்மையான ரசிகனுக்கு அதுதான் இலக்கணம். ஆனால் இந்த அரைவேக்காட்டு விமர்சனங்கள் எல்லாம் கடந்து, புதிய குரல்களை நான் தேடிக் கொண்டே இருப்பேன், இசையை இன்னும் நான் தேடிப் படித்துக் கொண்டே இருப்பேன் என்று ஓடிக் கொண்டே இருப்பார் ரஹ்மான். ஒவ்வொரு வெற்றியாளனின் ரகசியமும் அதுதான் சாகும் வரை தேடுவார், ஓடுவர் ரஹ்மானைப் போல.

பதிவும் படங்களும் முன் அனுமதி பெற்று மீள் பிரசுரம் செய்யப்படவேண்டியவை.
video courtesy: senthilles1