ஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் – தொடர் ஆரம்பம்

எழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது.

இளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் அவர் காலூன்றிய போது பெரும் வரவேற்புக் கிட்டவில்லை. பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குனர்கள் ராஜாவின் இசையைப் பயன்படுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.

ரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான “ரங்கீலா”. ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் “ரங்கீலா”வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்தேய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல்த்தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார். ரங்கீலா குறித்த இன்னொரு விபரமான பதிவைப் பின்னர் பார்ப்போம்.

அடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் “ஹிந்துஸ்தானி” இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.

இந்தத் தொடரில் ரஹ்மானின் இசையில் ஹிந்தியில் வெளியான தனித்துவமான திரைப்படங்கள் குறித்த பார்வை இடம்பெறப் போகின்றது. அதில் முதலாவதாக வருவது 1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குனரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களுக்கு இலகுவாகிப் போனதொன்று.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான்.

இதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன. இப்படத்தில் வந்த Banno Raani பாடல் மேலே மேலே இருக்கிறானே என்றும் Ruth Aa Gayee Re என்ற பாடல் “மச்ச மச்சினியே” என்றும் பின்னர் தமிழ் பேசின. Dheemi Dheemi என்ற ஹரிஹரன் பாடல் அப்பட்டமான வட இந்திய இசைமெட்டுக்கு ஒரு சாம்பிள். Yeh Jo Zindagi Hai என்ற பாடலில் சிறீனிவாசைப் பயன்படுத்தியிருப்பார் அதை மீண்டும் சுக்விந்தர் சிங்கோடு இணைத்தும் இன்னொரு பாடலாகத் தந்திருப்பார், அழகாக வந்திருக்கிறது. சிறீனிவாஸ் போன்று சுஜாதா என்ற இன்னொரு தென்னாட்டுக் குயிலையும் Ishwar Allah பாடலில் தேர்ந்தெடுத்தது பொருத்தமான தெரிவுகள்.

1947: Earth படத்தில் வந்த முத்துக்களில் சில இங்கே

படத்தின் மூலப்பின்னணி இசைக் கோர்ப்பு

பியானோ இசையில் இன்னொரு கலவை

சுக்விந்தர் சிங் குழுவோடு பாடும் Ruth Aa Gayee Re, நளினமான இசையோடு அளவெடுத்த சுக்விந்தர் குரல் எவ்வளவு இனிமையைக் கொடுக்கிறது பாருங்கள். இந்தப் பாடல் ஹிந்தியில் வசீகரித்த அளவுக்கு தமிழில் எடுபடவில்லை.

ஹரிஹரன் பாடல் Dheemi Dheemi

Yeh Jo Zindagi Hai பாடலில் இணையும் சிறினிவாஸ், சுக்விந்தர் சிங் குழுவினர்