K.பாலாஜி அளிக்கும் ?

ஒரு நல்ல படத்தை எதிர்பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உத்தரவாதம் கொண்ட
தயாரிப்பு முத்திரையை கே.பாலாஜி பெற்றிருந்தார். காரணம் அவர் தமிழில்
எடுத்த படங்கள் ஏற்கனவே வெவ்வேறு மொழிகளில் வெற்றி வாகை சூடியவை.
அவரது தயாரிப்பில் வெளிவந்த படங்கள் தான் தமிழில் அதிகமாக மீள் தயாரிப்பு (remake) செய்த படங்களாக இருக்கக் கூடும்.
எம்.ஜி.ஆர் VS சிவாஜி காலத்தில் இவர் சிவாஜி அணியில் இருந்ததால் தன்னுடைய தயாரிப்புகளில் சிவாஜிக்கே நாயக வாய்ப்பளித்தவர்.
கே.பாலாஜி வில்லனாக, குணச்சித்திர நடிகராக வலம் வந்த காலத்திலும் கவனத்தை
ஈர்த்த நடிகர். குறிப்பாக பலே பாண்டியா அவரின் முத்திரைப் படங்களில் ஒன்று.
இவர் தயாரித்த ஆரம்ப காலப் படங்களில் “நீதி” படம் எனக்குப் பிடித்தமானது.
படத்தின் ஆரம்பத்தில் எழுத்தோட்டத்துக்கு முன்னர் வந்து அழகோடு சிரிக்கும் இவரின் முத்திரை சிறப்பாக இருக்கும்.

“சுஜாதா சினி ஆட்ஸ்” என்ற தயாரிப்பு முத்திரையோடு எண்பதுகளின் இறுதி வரை மிக முக்கியமான தயாரிப்பாளராக இருந்தார்.
குறிப்பாக எண்பதுகளில் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் பிரபலமான
படங்களின் தயாரிப்பாளர். ஒரு பக்கம் முன்னணி நாயகர்களோடு மசாலா இன்னொரு
பக்கம் கதையை முன்னுறுத்தும் குடும்பச் சித்திரங்கள் என்று எடுத்துத்
தள்ளிவர்.
ஹிந்தியில் அமிதாப் நடித்த Don படத்தை பில்லா ஆகவும்
குர்பானியை விடுதலை ஆகவும் ஆக்கியவர் இன்னொரு பக்கம் விதி,நிரபராதி என்று
வித்தியாசமான கதைக்களன்களையும் மீள் தயாரித்தார்.
இலங்கையின் உச்ச வர்த்தக நிறுவனம் மகாராஜாவோடு கை கோர்த்து இலங்கை இந்தியன் கூட்டுத் தயாரிப்பாக “தீ” படத்தை எடுத்தார்.
பெரும்பாலும் இவரின் படத் தலைப்புகள் ஒற்றைச் சொல்லாகவே இருக்கும். அதை வைத்தே இது பாலாஜி படம் என்று கண்டு பிடிக்கலாம்.
தயாரிப்பாளர் ஜி.வி முதலில் திரைப்பட விநியோகத்தை ஆரம்பித்த போது “சுஜாதா”
என்றே ஆரம்பித்தார். பின்னர் கண்டிப்பாக இவர்களுக்குள் பேச்சு வார்த்தை
இருந்திருக்கும் அதன் பின்னரேயே “ஜி.வி.பிலிம்ஸ்” ஆனது.

கே.விஜயன் மற்றும் பில்லா கிருஷ்ணமூர்த்தியை அதிக படங்கள் இயக்க வைத்தார்.
பாலாஜி தயாரித்து மாதவி முக்கிய வேடமேற்ற “நிரபராதி” படம் மலையாளத்தின் 23 Female Kottayam படத்துக்கு முன்னோடி.

இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் அரவணைத்த பெரும் தயாரிப்பாளர் என்ற
சிறப்பும் பாலாஜிக்கு உண்டு. இவர் தயாரித்த தீபம் படம் இளையராஜா ஒப்பந்தமான
இரண்டாவது படம் என்று சொல்லக் கேள்வி. ஆனால் ஒரு குறிப்பிட்ட
இசையமைப்பாளர் என்ற வட்டத்தில் இருந்து விலகி மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன், சங்கர் கணேஷ், சந்திரப்போஸ் என்று
அரவணைத்தவர். இசையமைப்பாளராகக் கங்கை அமரனுக்கு மகுடம் சேர்த்த வாழ்வே
மாயம், சட்டம், நீதிபதி போன்றவற்றோடு சந்திரபோஸ் இற்கு மறு வாழ்வு அளித்த
விடுதலை படம் என்று சேர்க்க முடியும்.

“விதி” படம் வந்த போது
அந்தப் படத்தின் பாடல்களை விட படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற விவாதக்
காட்சிகளை அப்போது Recording Bar களில் ஒலி நாடாக்களில் பிரதியெடுத்துக்
கேட்டுக் கேட்டு அனுபவித்த தலைமுறை உண்டு. அவ்வளவுகு அட்டகாசமான வசனங்களை
ஆரூர்தாஸ் எழுதிக் கொடுத்திருப்பார். இந்தப் படத்தின் ஒலிப்பதிவுத் தரம்
எண்பதுகளில் வெளிவந்த மற்றைய படங்களோடு ஒப்பிடும் போது வெகு சிறப்பாக
இருக்கும்.

கே.பாக்யராஜ் : யாராவது ஒரு பத்தினி பேர் சொல்லுங்க?

ஊர்ப் பெருசுகள் : சீதை, நளாயினி, சாவித்திரி

கே.பாக்யராஜ் : பத்தினின்னு கேட்டப்ப உங்கம்மா பேரு உங்க சம்சாரம் பேரு சொன்னீங்களா?

மேற் சொன்ன உரையாடல் “விதி” படத்தில் வரும். இந்தக் காட்சியை
விசிலடித்துப் பார்த்தார்கள் அப்போது. கே.பாலாஜியின் விதி படத்தில் கெளரவ
வேடத்தில் நடித்த கே.பாக்யராஜ் இன் நட்பு அப்போது இன்னொரு விதியை எழுதியது
சற்றே பலமாக.

தொடர்ந்து கே.பாலாஜி தயாரிக்க கே.விஜயன் மற்றும்
அவரின் புதல்வர் சுந்தர் கே.விஜயன் இயக்க கே.பாக்யராஜ் நடித்த படம் “என்
ரத்தத்தின் ரத்தமே” இந்தப் படம் ஹிந்தியில் அனில்கபூர் மற்றும் ஶ்ரீதேவி
நடித்த வசூலில் சாதனை படைத்த Mr India படத்தின் தமிழாக்கம். கே.பாக்யராஜ்
மற்றும் மீனாட்சி சேஷாத்ரி அறிமுகமாக நடித்த படம். சங்கர் கணேஷ்
இசைமைத்தார்கள். படத் தயாரிப்பு நடக்கும் போது கே.பாலாஜிக்கும்
கே.பாக்யராஜ்ஜுக்கும் முட்டிக் கொண்டது. தயாரிப்புச் செலவை எகிற
வைக்கிறார், தலையீடு அதிகம் என்று கே.பாக்யராஜ் மீது விசனம் கொண்டு அப்போது
பத்திரிகைகளில் மனம் திறந்து பேட்டி கொடுத்தார் கே.பாலாஜி. என்
ரத்தத்தின் ரத்தமே என்று எம்.ஜி.ஆரின் தாரக வாக்கியத்தைப் பாக்யராஜ்
வைக்கும் போதே சுதாகரித்திருக்க வேண்டும். படத்திலும் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர்
குறியீடுகள்.
“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” பாடலைப் போலவே “இந்த ராகமும்” https://youtu.be/_WPWqF9zhL் என்ற பாட்டெல்லாம் உண்டு. “ஓராயிரம் பெளர்ணமி நிலவு போல்” https://youtu.be/D4aM8rU2D5c அப்போது வானொலிகளில் கொடி கட்டிப் பறந்த பாட்டு.
அதுவரை நல்ல நண்பர்களாக இருந்தவர்களைப் பிரித்த பாவம் இந்தப் படத்துக்குக் கிட்டியது. தொடர்ந்து

சத்தியராஜ் ஐ வைத்து திராவிடன் (மலையாளத்தில் பாலாஜியின் மருமகன்
மோகன்லால் நடித்த ஆர்யன் படத்தின் தமிழாக்கம்) என்று எடுத்த கே.பாலாஜிக்கு
அந்தப் படம் கை கொடுக்காமல் ஓய வைத்தது.

இன்று கே.பாலாஜி மறைந்து எட்டு வருடங்கள்.

வைரவிழாப் பாடகி எஸ்.ஜானகி எனும் பாட்டுப் பல்கலைக் கழகம் ???

தன்னுடைய இசை வாழ்வில் அறுபதாண்டைத் தொட்டு நிற்கும், திரையிசை கண்ட
உன்னதமான ஆளுமைகளில் எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம். “எஸ்.ஜானகி
அளவுக்கு பாடல் தாங்கியிருக்கும் உணர்வை வெளிப்படுத்த இந்தியாவிலேயே யாரும்
இல்லை” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிடுவது வெறும்
புகழ்ச்சி மாலை அல்ல என்பதை எம் போன்ற கடைக் கோடி ரசிகனும் உணர்ந்து நிற்பான்.
பாடகி சித்ராவின் ஆரம்ப காலத்தில் ஜானகி அம்மாவின் பாட்டைக் கேளு அவங்க
ஒரு பாடலை எவ்வளவு தூரம் நியாயம் செய்து பாடியிருக்காங்க என்று இளையராஜா கை
காட்டிய போது அங்கே நடமாடும் பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து
காட்டுகிறார்.

திரையிசைப் பாடல் என்பது வெறுமனே சங்கீத
சாகித்தியத்தின் திரட்டு அல்ல அது பாத்திரத்தின் பண்பை, காட்சிச் சூழலின்
அனுபவத்தைக் இசைக் கூட்டில் குரல் வழியே கடத்துவது. அங்கே ஒட்டுமொத்த
பாடலுமல்ல ஒவ்வொரு வரிகளுக்குமே உணர்வு பேதம் கற்பித்துக் கொண்டு வர
வேண்டும் என்ற நுட்பத்தைப் போதித்தவர்கள் திரையிசையில் ஒரு சிலரே. அங்கு
எஸ்.ஜானகி அம்மாவின் பங்கு அளப்பரியது.

ஒரு சாதாரண அல்லது அமைதியாகப் போகும் பாட்டின் உணர்ச்சியை நம்முள் அசுரத்தனமாக ஊடுருவி இறக்கி விடுகிறது எஸ்.ஜானகியின் குரல்.
“ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க” ஒலிக்கையில் தனிமையின்
குரலாகவும் “சின்னச் சின்ன வண்ணக் குயில்” பாடும் போது குதூகத்தின்
வெளிப்பாடாகவும் மனது மொழி பெயர்க்கும் போது எஸ்.ஜானகி ஒரு பெண்ணின்
உணர்வாக மட்டும் அடையாளம் இல்லாது ஆணின் மனோபாவங்களின் மொழியாகவும்
அடையாளப்படுத்தப்படுகிறார்.
அதனால் தான் அந்தந்த மன நிலைகளுக்குத்
தோதாகச் சவாரி செய்யப் பாட்டு வாகனம் தேடும் போது அது எஸ்.ஜானகி ஓட்டும்
குதிரையிலும் சுகமாகச் சவாரி செய்கிறது.

ஒரு பாடலுக்குக் கொடுக்கும் உச்ச பட்ச நேர்த்தியையும், உருவாக்கத்தையும் வைத்து
எப்படி இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்ற எல்லை கடந்து இயக்குநர்
என்ற நிலையில் வைத்துப் பார்க்க முடிகிறதோ அது போல எஸ்.ஜானகி ஒவ்வொரு
பாடலையும் கையாளும் விதத்தில் இசையமைப்பாளராகவே மிளிர்கிறார்.
மெல்லிசை
மன்னர் காலத்தில் T.M.செளந்தரராஜன், P.சுசீலா என்று அமைந்ததோ அது போல்
இசைஞானி இளையராஜா காலத்தில் எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று
பரிணமித்தது.
இவர்கள் காலத்தில் நாமெல்லாம் இருப்பது பெருமை என்ற நினைப்பு வரும் போது கண்டிப்பாக இவர்களும் இருப்பர்.

“மம்மி பேரு மாரி” https://youtu.be/pwbekjLgZWg (நெஞ்சத்தைக் கிள்ளாதே) என்று விடலைப் பையனாகவும், “கண்ணா நீ எங்கே” https://youtu.be/HFDzZBCT0OI (ருசி கண்ட பூனை) என்று குழந்தையாகவும், “போடா போடா பொக்கை” https://youtu.be/BpaHQVXD62g (உதிரிப் பூக்கள்) என்று கிழவியாகவும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கற்றவர்.

“லல்லி லலிலலோ” என்ற ஆலாபனையோடு மச்சானைப் பார்த்தீங்களா பாடலை நினைத்தாலேயே உச்சந்தலை உறைந்து போனதொரு உணர்வு கிட்டும் எனக்கு.

எந்த ஒரு துறையிலும் இறங்கியவர்கள் அப்படியே மாற்றமின்றி அதன் போக்கில் வாழ்ந்தவர்கள் அப்படியேதானிருக்கிறார்கள்,
அதையும் தாண்டிக் கடந்து சிந்தனையைச் செயல்படுத்தியவர்கள் சாதனையாளர்களாக
மாறுகிறார்கள். எஸ்.ஜானகியின் இந்த அறுபதாண்டு இசை வாழ்வு அவரைச்
சாதனையாளராக முன்னுறுத்துகிறது. தனக்கு வாய்ந்த அழகிய குரல் என்பது அதன்
இனிமையைச் சுவைக்க அல்ல அனுபவிக்கவென்று குரல் பேதங்களில் வெளிப்படுத்தும்
உணர்வின் வழி நிரூபித்துக் காட்டியவர்.

எமக்கெல்லாம் இசையரசி
பி.சுசீலா அம்மாவின் பாட்டு அன்னையின் குரல் என்றால் பாட்டுக் குயில்
எஸ்.ஜானகியின் ஓசை தோழியின் குரலாக நிற்கின்றது.

எஸ்.ஜானகியின் தனிப் பாடல்கள் குறித்து நான் எழுதியதில் சில

பாடல் சிலாகிப்புகள்

காற்றில் எந்தன் கீதம்
https://www.facebook.com/kana.praba/posts/10206112214709720

கண்ணா நீ எங்கே
http://www.radiospathy.com/2016/06/blog-post.html

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
http://www.radiospathy.com/2014/11/blog-post.html

ராதா அழைக்கிறாள்
https://www.facebook.com/kana.praba/posts/10208646658469230

புத்தம் புதுக் காலை
http://www.radiospathy.com/2014/11/blog-post_11.html

வசந்த காலக் கோலங்கள்
https://www.facebook.com/kana.praba/posts/10210837822606964

எஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு 78
http://www.radiospathy.com/2016/04/blog-post_23.html

tag

செவ்வந்தி திரைப்படப் பாடல்கள் வந்த போது

அப்போதெல்லாம் அயற் கிராமமான சுன்னாகம் பொது நூலகத்திற்கு ஓடுவேன். தமிழகத்தில் இருந்து வரும் வித விதமான பத்திரிகைகள் படிக்க. அதுவும் குறிப்பாக தினத்தந்தி வெள்ளிமலர்.  
தினத்தந்தி வெள்ளிமலரில் கலர் கலரான அழகான வடிவமைப்புடன் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு ஈடான  பட விளம்பரமொன்று வந்தபோது இசைஞானி இளையராஜாவைத் தவிர மிச்சது எல்லாமே அறிமுகமற்றதாக அமைந்திருந்தது. வழக்கம் போல இளையராஜா என்ற அமுதசுரபியில் நம்பிக்கை வைத்துக் கொண்டு அப்போதைய பொருளாதார நெருக்கடியில் ( ஹிஹி நமக்கெல்லாம் பாக்கெட் மணியும் இல்லை உசிலைமணியும் இல்லை) கையில் இருந்த காசை முதலிட்டு றெக்கோர்டிங் பார் இல் பதிவு பண்ணி ஆசையாகக் கொண்டு வந்து கேட்டால் அமுதசுரபி கை விடுமா என்ன?
அதுதான் செவ்வந்தி படப் பாடல்கள்.
“அன்பே ஆருயிரே” என்றொரு காதல் சோகப் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியது.  http://www.youtube.com/watch?v=q70UdcTpeKc&sns=tw கடந்த வருடம் சூப்பர் சிங்கரில் சிறப்பு விருந்தினராக எஸ்.பி.பி வந்திருந்த போது ஒரு பையன் பாட, இந்தப் பாடலைத் தான் பாடியதையே மறந்து விட்டதாகச் சொன்னபோது நமக்குத் தான் ஆச்சரியம் கிளம்பியது. ஆனால் ரெக்கார்டு படைத்தவருக்கு இதுபோல் இன்னும் பல மறந்தே போயிருக்கும்.
ஜெயச்சந்திரன் & சுனந்தா  ஒரு அட்டகாஷ் பாட்டு ஜோடி. சுனந்தாவின் அறிமுகமும் ஜெயச்சந்திரனோடு ஜோடி கட்டிய “காதல் மயக்கம்” பாடலால் நிகழ்ந்ததால் செவ்வந்தி படத்துக்காகக் கூடு கட்டிய “செம்மீனே செம்மீனே” 
பாட்டிலும் அதே ரசதந்திரம்.
செம்மீனே செம்மீனே பாடலைக் கல்யாணக் கொண்டாட்டப் பாடலோடு சேர்த்து விடுவோம்.
 http://www.youtube.com/watch?v=BBeOajpOadA&sns=tw 
வாத்தியக் கூட்டிசையோடு கூடிக் குலாவும் சேர்ந்திசை குரல்கள் (கோரஸ்) ஐத் தவிர்க்காமல் கேட்டுக் கேட்டுச் சுவைக்க வேண்டும்.
இதே போல் இன்னொரு மெல்லிசை குரல் கூட்டணி அருண்மொழி & ஸ்வர்ணலதா. இருவரும் சேர்ந்து பாடிய “புன்னைவனப் 
பூங்குயிலே பூமகளே வா” 
 http://www.youtube.com/watch?v=upXge9OLt2E&sns=tw 
செம்மீனுடன் போட்டி போட்ட ஹிட். என் தனிப்பட்ட விருப்புப் பாடல் ஒப்பீட்டளவில் “புன்னைவனப் பூங்குயிலே” தான் அதுவும்
“என் கண்கள் சொல்லும் மொழி காதலே” என்று ஸ்வர்ணலதா உருகும் தருணம் கரைந்து விடுவேன்.
அது போல் “அலை ஓய்ந்து போகும் ” என்று அருண்மொழி தொடங்கும் வகையறாவும்.
ஸ்வர்ணலதாவுக்கு இரட்டைப் பரிசு இந்தப்  படத்தில். “பொன்னாட்டம் பூவாட்டம் சின்னப் பொண்ணு”  http://www.youtube.com/watch?v=nZEJ4xHWQ58&sns=tw என்று கோரஸ் குரல்கள் பாடி ஆரம்பிக்க மனோ, ஸ்வர்ணலதா கொடுக்கும் இந்தச் சரக்கு பிரபு போன்றோர் படங்களுக்கு அப்போது சென்று சேர்ந்திக்க வேண்டியது.
படத்தில் பெண் தனிக்குரல் பாடலாக உமா ரமணன் பாடும் “வாசமல்லிப் பூவு பூவு” http://stream.shakthi.fm/ta/Sevanthi_www.shakthi.fm/shakthi.FM-Vasamally.mp3 இந்தப் பாடல் எல்லாம் எவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டாடியிருக்க வேண்டிய பாடல் ஹும்.
பாடல்களை கவிஞர் வாலி, முத்துலிங்கம், பொன்னடியான், பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
ஒளிப்பதிவாளர் நிவாஸ் எழுபதுகளிலே கல்லுக்குள் ஈரம், எனக்காகக் காத்திரு போன்ற படங்களை இயக்கி மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கிய படம் இந்த செவ்வந்தி.
அப்போது எம்.ஜி.ஆர் அதிமுகவில் அமைச்சராக விளங்கிய அரங்கநாயகத்தின் மகன் சந்தனபாண்டியன் தான் நாயகனாக அறிமுகமாகிறார் என்றும் கண்டுபிடிச்சாச்சு. மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த ஶ்ரீஜா அப்போது தமிழில் மெளனம் சம்மதம், சேரன் பாண்டியன் படங்களில் நடித்தார். செவ்வந்தி அவருக்கு தனி நாயகி அந்தஸ்த்தையும் கொடுத்தது.
செவ்வந்தி படத்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு தூரம் நன்மை கிட்டியிருக்குமோ தெரியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் சந்தனபாண்டியன் & ஶ்ரீஜா ஜோடி திரையைத் தாண்டி நிஜத்திலும் மணம் முடித்தனர். சந்தனபாண்டியன், ஶ்ரீஜாவின் மகள் பேட்டி கூட சமீபத்தில் வந்தது. வயசாகிப் போச்சேடா கலியபெருமாள்.
சரி சந்தனபாண்டியன் & ஶ்ரீஜாவை விட்டு இசை ரசிகர் நமக்கு இந்தப் படத்தால்  21 ஆண்டுகள் தாண்டியும் தெவிட்டாத தேன் கிட்டியது இன்னொரு பேறு.
இந்தப் படத்தின் உதவி இயக்குநர் ரதன் சந்திரசேகர் இப்பதிவைக் கண்டு பகிர்ந்தது.
நன்றி KANA PRABA… உங்கள் பதிவில் இணையிலாப் பெருமகிழ்ச்சி எனக்கு….நான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம். படம் பல்வேறு சிக்கல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்தபோதும் – முதல்நாள்தொட்டு கடைசிநாள் வரை பணியாற்றிய ஒரே உதவி இயக்குனர் நான்தான்.  அப்பா….என்னவோர் அனுபவம்…என் இயக்கத்தில் வெளிவரப்போகும் ‘என் பெயர் குமாரசாமி’ படத்தை இயக்கும்போது எனக்கு பல இடங்களில் கை கொடுத்தது இந்தப் படத்தின் ‘அசிஸ்டென்ட் ‘ அனுபவங்கள்தாம்.  என் பெயர் குமாரசாமியின் டைட்டிலிலும்  ‘முதல் வணக்கம் – ஒளிப்பதிவாளர் இயக்குனர் பி.எஸ்.நிவாஸ்.’ என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். 
செவ்வந்தி பாடல்களை  சுளைசுளையாக சுவைத்திருக்கிறீர்கள்…நன்றி. பாடல்கள் குறித்து நீங்கள்  பதிவிட்டிருப்பதனால்…’பொன்னாட்டம் பூவாட்டம்’ பாடல் குறித்த ஒரு சுவையான தகவலை கீழே பகிர்ந்திருக்கிறேன்….உங்களுக்கு பயன்படக் கூடும்……
நான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம் ‘செவ்வந்தி’. 
அந்தப்  படத்தின் படப்பிடிப்புக்காக கிளம்பிய நேரத்தில்…இளையராஜா படு பிசி. அவரது பாடல்களுக்காக க்யூவில் நின்றுகொண்டிருந்தார்கள் .  படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான நிவாஸ் அவர்களுக்கு ஒரு டைட்டில் பாடல் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. நாங்கள் இருப்பதோ ஊட்டியில் உள்ளத்தி என்கிற ஒரு மலை கிராமத்தில். இளையராஜாவிடம் வந்து ட்யூன் கேட்டு வாங்கி வர நேரமில்லை. நிவாஸ் அவர்கள் என்ன செய்தார் தெரியுமா?
‘ஜானி’ படத்தின் ஒரு பாடல் காசெட்டை வாங்கி வரச் செய்து…அதில் வரும் ‘ஆசையக் காத்துல தூதுவிட்டு…..’பாடலை டேப் ரெக்கார்டரில் ஒளிபரப்பி அதற்கு நடனத்தை கம்போஸ் செய்யும்படி டான்ஸ் மாஸ்டர் சின்னாவிடம் கூறினார். ‘ஜானி’ படப் பாடலுக்கு நடன அசைவுகள் படமாக்கப்பட்டன. சினிமா தெரியாத நாங்கள் சிலபேர்  (வடிவேலு வார்த்தையில் சொல்வதானால் ‘அப்ரசண்டிசுகள்’….)   முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
படப்பிடிப்பு முடித்து அந்தப் பாடலுக்கான புட்டேஜுகளை  எடிட் செய்து ‘ஜானி’ பாடலை உருவிவிட்டு  இளையராஜாவிடம் கொண்டு போய்  ‘பப்பரப்பே’ எனக் காட்டினோம். அதற்கு ஓரிரு மணிநேரத்தில் ட்யூனையும் பின்னணி இசையையும் கம்போஸ் செய்து அடுத்த நாள் வாலியை வரச் சொல்லி பாடல் எழுதி வாங்கி , பதிவு செய்தும் கொடுத்துவிட்டார் இசைஞானி. நாங்கள் மலைத்து நின்றோம். எங்களைப் பார்த்து நிவாஸ் அவர்கள் சிரித்த நமுட்டுச் சிரிப்பில் இளையராஜாவின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை தெறித்து விழுந்தது. 
 ‘பொன்னாட்டம் பூவாட்டம்’ வீடியோவில் ‘ஜானி’ பாடலைப் பொருத்திப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை என் நெஞ்சில் நெடுநாளாய்க் கிடக்கிறது….

அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே

அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாட வா
பாடகர் ஜெயச்சந்திரனுக்கான முத்திரைப் பாடல்களில் தனித்து நிற்பவை சாஸ்திரிய இசைக் கலவையைத் தூவி இசையமையமைத்தவை. குறிப்பாக “மாஞ்சோலைக் கிளி தானோ”, “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே” சில பருக்கைகள். 
தொண்ணூறுகளில் இவ்விதமாக அமைந்த இரண்டு பாடல்கள் தனிச்சிறப்பு மிக்கவை. ஒன்று 1992 ஆம் ஆண்டு ராமராஜன் அலை ஓயும் வேளை வந்த “பொண்ணுக்கேத்த புருஷன்” படப்பாடலான 
“ஜல் ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள்” 
கங்கை அமரன் வரிகளுக்கு ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா பாடியிருப்பார்கள். இந்தப் படம் வந்த சுவடே தெரியாதவர்களும் உண்டு என்ற காரணத்தால் இன்னும் வெகுவாகப் புகழப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பாடலும் அதிகம் ஆர்ப்பாட்டம் அற்று அமுங்கிவிட்டது. 
இதே படத்தில் வந்த “மாலை நிலவே” (மனோ, சித்ரா, குழுவினருடன்) பாடல் என்னுடைய நெருக்கத்துக்குரிய விருப்பத் தேர்வுகளில் ஒன்று. 
பாடல் ஆரம்பிக்கும் குதிரைக் குளம்பொலி ஓசையைக் கேட்டவுடனேயே “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என்று அன்பே வா காலத்தை நினைப்பூட்டிவிடுவதால் காட்சியிலும் அதை உருவிப் போட்டு ராமராஜன், கெளதமி ஜோடியை ஊடால விட்டு கொலவெறி பண்ணிருப்பார்கள். பார்த்தலில் கேட்டல் இனிது 🙂
“அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா” ஆர்.வி.உதயகுமார் என்ற அற்புதமான பாடலாசிரியர் இசைஞானியின் மெட்டுகளுக்கு வரிகளால் வைர மோதிரம் பூட்டிய இன்னொரு பாட்டு. 
“உரிமை கீதம்”, “புதிய வானம்” என்று வெவ்வேறு இசையமைப்பாளர்களோடு பயணப்பட்டுவிட்டு இளையராஜாவோடு கூட்டணி அமைக்க ஆரம்பித்த போது இணைந்த “உறுதி மொழி” படத்தின் இந்தப் பாடலே இந்தக் கூட்டணியை வெற்றிக் கூட்டணியாகப் பிரகடனப்படுத்த உதவியது. ஆனால் “கிழக்கு வாசல்” வெற்றி இன்னும் மணிமகுடமாக.
மணியோசை வரும் திறப்பு இசையே காதலர் கூடும் கொண்டாட்டத்தை விரும்பி வரவேற்பதாய்த் தொனிக்க எஸ்.ஜானகியின் ஆலாபனை, அதனைத் தொடர்ந்து பீறிடும் உற்சாக இசை அப்படியே மேலெழுந்து அடங்க ஜெயச்சந்திரன் ஆரம்பிப்பார்.
இந்தப் பாடலின் முழு வரிகளுமே மன்னர் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருப்பதும் அதே சமயம், பின்னணி இசை இதமான மேற்கத்தேய ஒலிப்பாய்ப் பின்னியிருக்கும் ஆனால் அந்த முரணில் உறுத்தல் இருக்காது.
இணைந்த வாத்தியங்கள் எல்லாவற்றுக்கும் கெளரவம் கொடுத்திருந்தாலும் புல்லாங்குழல் தான் இதில் குணச்சித்திரம். முதல் சரணத்தில் கிட்டாருடன் குலவும் போது சிறப்பாகவும், இரண்டாவது சரணத்தின் ஆரம்பத்தில் மெது மெதுவாக அடியெடுத்து வந்து ஆடும் போதும் புல்லாங்குழல் தரும் சுகம் ஆகா.
பாடல் வரிகளை ஜெயச்சந்திரன் உச்சரிக்கும் போது அறுத்து உறுத்துத் தமிழை ஈறு கெடாமல் காப்பாற்றியிருப்பார். எஸ்.ஜானகி பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இந்தப் பாடலில் அவர் பாடும் தொனி, மாப்பிள்ளை காதில் கிசுகிசுக்கும் புதுமணப் பெண் போல இருக்கும்.
உறுதி மொழி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிட்டவில்லை. ஆனால் இந்தப் பாடலை ஓராயிரம் முறை கேட்டுக் கொண்டாடிருப்பேன்.

பாடல் தந்த சுகம் : வானமென்ன கீழிருக்கு

சில பாடல்களைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்தப் பாடல் எப்படி இசை வடிவம் கண்டிருக்கும் என்ற கற்பனையை வளர்த்திருப்போம். அதுவே பின்னர் உறுதிப்படுத்தப்படும் போது உள்ளூரப் பெருமையாக இருக்கும். அப்படி ஒரு அனுபவம் தான் “வெற்றி விழா” படத்தில் வந்த “வானமென்ன கீழிருக்கு” பாடல் வழி கிட்டியது.

இந்தப் பாடலில் மூல வரிகளைத் தாண்டிய சோடிப்பு அடியாக “ததாகுதூது ததாகுது தூதூ” என்ற சேர்க்கை இடம்பெற்றிருக்கும். அதைக் கேட்கும் போதெல்லாம் இசைஞானி இளையராஜா வழக்கமாகத் தன் மெட்டுக்குப் பாட்டைத் தருவிக்கப் போடும் டம்மி வரிகளோடு இசைந்ததாக அவரே அமைத்துக் கொடுத்த வரியாகத் தான் இருக்கும் எனவே அந்தத் தத்தகரத்தோடு சேர்த்தே அமைத்த அந்த அடிகளைப் பின்னர் பாடலாசிரியர் தான் போடும் வரிகளோடு பிணைத்து அதாவது “ததாகு தூதூ ததாகு தூதூ” வை அந்தமாக்கி அமைத்திருப்பார் என்று நினைத்து வைத்திருந்தேன்.
அதை உறுதிப்படுத்தியிருந்தார் பாடலாசிரியர் கங்கை அமரன் கடந்த சன் சிங்கர் நிகழ்ச்சியில். இந்தப் பாடலை இளையராஜா மெட்டமைக்கும் போதே “தார தார தார தார தார ராரா ததாகுதூதூ ததாகுதூதூ” என்றே அமைத்ததாகச் சொல்லிருந்தார். கூடவே இந்தப் பாடலில் இடைச் சேர்க்கையாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பெருத்தமான சேஷ்டைக் குரல்களும் சேர்ந்து அமர்க்களப்படுத்தியிருந்ததாகக் கிண்டலோடு சொல்லிச் சிலாகித்தார். அவர் சொல்ல மறந்தது எஸ்.பி.பியோடு இணைந்து பாடி வெகுவாகச் சிறப்புச் சேர்த்த மலேசியா வாசுதேவன் குரலை.
“வானமென்ன கீழிருக்கு பூமியென்ன மேலியிருக்கு” பாடல் கவிஞர் வாலி அவர்கள் எழுதியது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் “வெற்றி விழா” திரைப்படம் வருவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால் இதே கமல்ஹாசனுக்காக “வானம் கீழே வந்தாலென்ன அட பூமி மேலே போனால் என்ன” என்று வாலி அவர்களே பாடி வைத்தது. ஐந்து வருடங்களுக்குப் பின் மறக்காமல் வானத்தைக் கீழே வைத்துப் பூமியை மேலே வைத்திருக்கிறார் குறும்புக்கார வாலி.
இந்த மாதிரி இசைக்கட்டுப் பொருந்திய பாடல்கள் வழக்கமாகக் கங்கை அமரனுக்கே போய்ச் சேரும். உதாரணம் தம்தன நம்தன தாளம் வரும். ஆனால் வெற்றி விழா படத்தில் “சீவி சிணுக்கெடுத்து” பாடல் மட்டுமே கங்கை அமரன். மீதி எல்லாமே வாலி எழுதியது.
“மாருகோ மாருகோ மாருகோயி” துள்ளிசைக் கலவையை மறக்க முடியுமா? அந்த நாளில் கல்யாண வீட்டுக் கொண்டாட்டங்களிலும், ஏன் கோயில் திருவிழா நாதஸ்வரக்காரரிடமும் கூட இந்தப் பாடல் தப்பாமல் முழங்கிக் கொட்டிய அந்த நினைவுகள் இன்னமும் தேங்கியிருக்கிறது. பின்னாளில் வாலியே இந்த ந்மாருகோ மாருகோ பாடலை சதி லீலாவதிக்காக இன்னொரு சாஸ்திரீயத் தளத்தில் அரங்கேற்றினார்.
“பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே அன்று” சைக்கிள் வாகனமேதிஅய் காதல் முளை விட்ட காலங்களிலா இது இனித்தது, இன்று கூட நாலு சில்லு Subaru யாத்திரையிலும் காருக்குள் சத்தமாக ஒலிக்க விட்டு, அதிவேகத் தடத்தில் பயணிக்கும் போது இருக்கும் சுகம் இருக்கிறதே சொர்க்கம்.
பள்ளிக்கூடத்துச் சகபாடி விஜயரூபன் கொழும்புக்குப் போய் வந்த பவிசில் எங்களுக்குப் பசம் காட்டியது “வெற்றி விழா” படத்தின் ஓலி நாடாப் பேழையைத் தான். வழக்கமாகக் கலர்ஃபுல்லாக இருக்கும் ஒலி நாடா அட்டைகளில் இருந்து வித்தியாசப்பட்டுப் பள்ளிக்கூட மாணவன் போன்ற வெள்ளைச் சீருடை மேலட்டையில் எக்கோ ஆடியோவின் அந்த வெற்றி விழா ஒலிநாடாப் பேழையை திருப்பித் திருப்பி ரசித்துப் பார்த்தோம் அப்போது.
“குரு சிஷ்யன்” படத்தில் ரஜினிகாந்த் & பிரபு இணைந்து நடித்த போது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்குமிடையில் தள்ளு முள்ளு அப்போது 
சிவாஜி புரெடக்ஷனில் “வெற்றி விழா” முதன் முதலாக கமல்ஹாசன் இந்த நிறுவனத்துக்காகப் பிரபுவோடு இணைந்து நடித்தது. இரு தரப்பு ரசிகர்களால் அப்போது  சேதாரம் வரவில்லை என்பது என் நினைவு. இளமைக் காலங்கள் நாயகி சசிகலா மீண்டும் இன்னும் நிறைய மேக் அப் ஐ அள்ளிப் போட்டுக் கொண்டு நடிக்க வந்தார் இந்தப் படத்தில்.
தர்மத்தின் தலைவன் வழியாகத் தமிழில் வந்த குஷ்புவை இந்தப் படத்திலும் ஜோடியாக்கிக் கொண்டார் பிரபு. சி.மு (சின்னத்தம்பிக்கு முன்)
அந்தக் காலகட்டத்தில் அமலாவைப் பாதிப் படத்திலேயே சாவடிக்கும் வழக்கம் இருந்தது (படுபாவிப் பசங்க, இதை வாசிக்கும் போது காந்திமதி மண்ணை அள்ளி வீசுறாப்ல கற்பனை செய்யவும்) . உதாரணம் உன்னை ஒன்று கேட்பேன், மெல்லத் திறந்தது வரிசையில் வெற்றி விழாவும் அமலாவைப் பாதியிலேயே அவ்வ்.
“வானமென்ன கீழிருக்கு” பாடலின் ஆரம்பத்தில் வரும் முதல் முப்பது விநாடிகளைக் கேட்கும் போது  “இரவு நிலவு உலகை ரசிக்க” (அஞ்சலி) பாட்டுக்குள்ளும் போய் விடுவேன். 
எண்பதுகளின் சூப்பர் ஸ்டார் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் கூட்டணி அமைத்த பாடல்களில் “என்னம்மா கண்ணு செளக்யமா”  எள்ளும், கொள்ளும், லொள்ளும் கொட்டிய பாடல் என்றால், இந்த “வானமென்ன கீழிருக்கு பூமியென்ன மேலிருக்கு” அதற்கு நேர்மாறான ரகம்.
எஸ்.பி.பி க்கு இந்த மாதிரி ஜாலிக் குத்துகளில் அவரின் குஷிக்குக் கேட்கவே வேண்டாம். பின்னிப் பெடலெடுத்து விடுவார் தகுதகுதுதகுது 
ஆனால் மலேசியா வாசுதேவனின் பாணி பாசில் படங்களில் வரும் வில்லன் மாதிரி நோகாமல் குத்தும் பாணி. பாடும் தொனியிலே ஒரு அப்பாவித்தனம் ஒட்டியிருக்கும். அதை அப்படியே வைத்துக் கொண்டிரு திடீர் சங்கதிகளைப் போட்டுச் சிக்சர் அடித்து விடுவார். எவ்வளவு உன்னதம் நிரம்பிய பாடகர்கள் இந்த இருவரும் அப்பப்பா.
 http://www.youtube.com/watch?v=Nssfv7-kowQ&sns=tw 

பாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி

கண்மணி கண்மணி ? ஒம்புல வைகரி 

தெலுங்குத் திரையுலகில் எண்பதுகளின் ஆர்.சுந்தராஜன் வகையறா இயக்குநராக எண்ணத் தகுந்தவர் இயக்குநர் வம்சி.
இசைஞானி இளையராஜா இசையில் இயங்கிய வம்சி குறித்து முன்னரும் ஒரு பாட்டம் சொல்லியொருந்தேன் இங்கே http://www.radiospathy.com/2014/11/blog-post.html
நேற்று இலங்கை சூரியன் எஃப் எம் இல் லோஷன் தொகுத்து வழங்கிய “சூரிய ராகங்கள்” நிகழ்ச்சியில் ஒலித்த “கண்மணி கண்மணி மின்னிடும் பைங்கிளி பாடலைக் கேட்ட போது மீண்டும் வம்சி ஞாபகத்துக்கு வந்தார்.
வம்சி தெலுங்கில் இயக்கிய April 1st Vidadala படத்தில் இடம்பெற்ற “ஒம்புல வைகரி” பாடலின் தமிழ் வடிவமே இந்த “கண்மணி கண்மணி” பாடல்.
“தெலுங்கு பாக்யராஜ்” ராஜேந்திர பிரசாத் மற்றும் ஷோபனா நடித்த April 1st Vidudala திரைப்படத்தைத் தமிழில் “சத்தியவான்” என்ற பெயரில் ராஜ்கபூர் இயக்கி “முரளி , கெளதமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் வந்த “சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ” பாட்டு அந்த நாளில் வீடியோக் கடைகளின் விளம்பரத்துக்கும் கூடப் பாவிக்கப்பட்டது. “காற்றினிலே வரும் கீதம்” திரைப்படத்தில் வந்த “சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்” என்ற பாடலை மீள் வடிவமாக “எப்பவும் நாந்தாண்டா இங்கொரு ராஜா” என்றும் பயப்படுத்தினார் இளையராஜா.
அதன் தெலுங்கு வடிவம் இதோ
 http://www.youtube.com/watch?v=NJRnVi9gBR4&sns=tw 
“கண்மணி கண்மணி மின்னிடும் பைங்கிளி” பாடலின் ரிதம் 90களில் இசைஞானி பயன்படுத்திய பக்கா காதல் துள்ளிசை. இதே காலகட்டத்தில் வந்த பாடல்களில் இந்த ஒலி நயத்தை ஒப்பு நோக்கி நயக்கலாம். பாஸ் மார்க் படத்தில் தேவா இசையமைத்த “உன் புன்னகை போதுமடி” பாடலும் இந்தப் பாடலோடு அன்போடு உரசிக் கொள்ளும் 🙂
மனோ, சித்ரா கூட்டுக் குரல்களோடு தமிழில் பாடிய “கண்மணி கண்மணி பாடல்”
http://www.mayuren.org/site/mayurengorg/1Tamil/Movie%20A%20-%20Z%20Collection/S/SATHYAVAN/Kanmani%20Kanmani%20%20%20Mano%20%20%20Ch.Mp3.MP3?l=12
மேலே தந்த பாடலைக் கேட்டு ரசித்தவர்களைக் கொஞ்சம் தெலுங்குப் 
பக்கம் அழைத்துப் போகிறேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடிய “ஒம்புல வைகரி” பாடலைக் கேளுங்கள் இன்னொரு புது அனுபவம் கிட்டும்.
 http://www.youtube.com/watch?v=5xyyhECcC1k&sns=tw 

இசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52

இன்று சின்னக் குயில் சித்ரா தனது 52 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 

எனவே ஒரு சிறப்புத் தொகுப்பைக் கொடுக்கலாமே என்று எண்ணி இசைஞானி இளையராஜா இசையில் சின்னக்குயில் சித்ரா பாடிய 52 தனிப்பாடல்களின் திரட்டாக இங்கே பகிர்கிறேன். இவை தனித்தும் கூட்டுக் குரல்களோடும் சித்ராவால் பாடிச் சிறப்பிக்கப்பட்டவை. இயற்கை, அன்பு, காதல் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாடல் தொகுப்பு இது.
இந்தப் பாடல்களில் சிறப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இசைஞானி இளையராஜா இணைந்த மெல்லத் திறந்தது கதவு படப் பாடலும், அறுவடை நாள் படத்தில் ராஜாவே கூட்டுக் குரலாக இணைந்து பாடிய பாடலையும், சித்ரா பாடிய மலையாளப் பாடல்களில் என்னைக் கவர்ந்த, உள்ளத்துக்கு மிக நெருக்கமான இரண்டு பாடல்களும் அணி செய்கின்றன.
1. சின்னக்குயில் பாடும் பாட்டு (பூவே பூச்சூடவா)

2. இந்த வெண்ணிலா எங்கு வந்தது (டிசெம்பர் பூக்கள்)
3. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்)
4. நானொரு சிந்து (சிந்து பைரவி)
5. தேவனின் கோயில் (அறுவடை நாள்)
6. ஆத்தாடி அம்மாடி பூ மெட்டு (இதயத்தைத் திருடாதே)
7. சொந்தம் வந்தது வந்தது (புதுப்பாட்டு)
8. ஹே சித்திரச் சிட்டுகள் (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)
9. சந்தோஷம் இன்று சந்தோஷம் (மனிதனின் மறுபக்கம்)
10. கொட்டிக் கிடக்குது செல்வங்கள் (தீர்த்தக் கரையினிலே)
11. நின்னுக்கோரி வர்ணம் (அக்னி நட்சத்திரம்)
12. ஒரு ராஜா வந்தானாம் (மெளனம் சம்மதம்)
13. மாமனுக்கும் மச்சானுக்கும் (அரங்கேற்ற வேளை)
14. உச்சிமலை மேகங்கள் (வெள்ளையத் தேவன்)
15. வண்ணப் பூங்காவனம் (ஈரமான ரோஜாவே)
16. வானம்பாடி பாடும் நேரம் ( சார் ஐ லவ் யூ)
17. மாலை சூடும் நேரம் (புதிய ராகம்)
18. தூளியிலே ஆட வந்த (சின்ன தம்பி)
19. கற்பூர முல்லை ஒன்று (கற்பூர முல்லை)
20. வந்ததே ஓ குங்குமம் (கிழக்கு வாசல்)
21. மன்னன் கூரைச் சேலை (சிறைச்சாலை)
22. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் (ராமன் அப்துல்லா)
23. நல் அன்பே தான் தாயானது (கை வீசம்மா கை வீசு)
24. தென்மதுர சீமையிலே (தங்கமான ராசா)
25. காலை நேர ராகமே (ராசாவே உன்னை நம்பி)
26.யாரைக் கேட்டு (என் உயிர்க் கண்ணம்மா)
27. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)
28. ஒத்தையிலே நின்னதென்ன ( வனஜா கிரிஜா)
29. கொட்டிக் கிடக்கு குண்டு மல்லி (தாயம் ஒண்ணு)
30. குத்தம்மா நெல்லு குத்து (பாடு நிலாவே)
31. பொடி நடையாப் போறவரே (கடலோரக் கவிதைகள்)
32. இளமை ரதத்தில் (நினைக்கத் தெரிந்த மனமே)
33. பழைய கனவை (தாயம்மா)
34. மங்கலத்துக் குங்குமப் பொட்டு (சாமி போட்ட முடிச்சு)
35. உன்னை நானே அழைத்தேனே (சின்ன குயில் பாடுது)
36. காலம் இளவேனிற்காலம் (விடிஞ்சா கல்யாணம்)
36. காற்றோடு குழலின் நாதமே (கோடை மழை)
37. கண்ணே என் (கிராமத்து மின்னல்)
38. மழலை என்றும் (சேதுபதி IPS)
39. குன்றத்துக் கொன்றை (பழசி ராஜா)
40. உல்லாசப் பூங்காற்றே (கோலங்கள்)
41. துளியோ துளி (காத்திருக்க நேரமில்லை)
42. ஶ்ரீராமனே உன்னை (கண்களின் வார்த்தைகள்)
43. வண்ண நிலவே (பாடாத தேனீக்கள்)
44. நான் வண்ண நிலா (கட்டளை)
45. வா வாத்தியாரே (பரதன்)
46. திருடா திருடா (எனக்கு நானே நீதிபதி)
47. ஆயிரம் பூவும் உண்டு (பாச மழை)
48. மஞ்சள் நீராட்டு (இல்லம்)
49. சிட்டுப் போலே (இனிய உறவு பூத்தது)
50. எந்து பறஞ்ஞாலும் (அச்சுவிண்ட அம்மா – மலையாளம்)
51. புழயோரத்தில் (அதர்வம் – மலையாளம்)
52. குழலூதும் கண்ணனுக்கு ( மெல்லத் திறந்தது கதவு)

"இலங்கை சூரியன் எஃப் எம்" – வாழ்த்தும் நன்றியும்

இலங்கையின் முன்னணிப் பண்பலை வானொலியான சூரியன் எஃப்.எஃம் தனது பதினேழு அகவையை நிறைத்திருக்கின்றது.
உலக வானொலிப் பிரியனான என் வானொலி நேரத்தில் சூரியனுக்கும் தனித்துவமான இடமுண்டு.
குறிப்பாக
“பொற்காலப் புதன்” என்று நாள் முழுக்க 80கள், 90கள் என்று அந்தக்
காலகட்டத்துப் பாடல்களைக் கொண்டாடி மகிழும் புதன்கிழமைகள் என்னளவில்
தைப்பொங்கல், வருஷப் பிறப்பு, தீபாவளிக்கு ஈடான சந்தோஷம் தருபவை. 
“கள்ள
மனத்தின் கோடியில்” என்ற சுறுக் நறுக் பேட்டி வழியாக பத்து
நிமிடத்துக்குள் தமிழகத்தின் திரையுலக, கலையுலக ஆளுமைகளின் முழு வரலாற்றைத்
தெரிந்து கொள்ள வைத்திருப்பது தேர்ந்த வானொலித் திறனுக்கு எடுத்துக்
காட்டு. எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட பிரபலங்களில் இருந்து “உன்னைத் தானே தஞ்சம்
என்று” பாடிய பாடகி மஞ்சுளா போன்ற புகழ் வெளிச்சம் படாத கலைஞர் வரை இதில்
கலக்குவார்கள். தொகுத்து வழங்கும் டிஜே அஷ்ராப் கேள்விகளிலும் காரசாரம்
இருக்கும். 
“ஹலோ யாரு பேசுறீங்க”, “மாளிகாவத்தை
சின்னக் கொமாண்டோ” எல்லாம் நான் டவுன்லோட் பண்ணித் திரும்பத் திரும்பக்
கேட்டு வரும் நகைச்சுவைப் பகிர்வுகள்.
சகோதரன்
காஸ்ட்ரோவை ஊடகத்துறை மாணவனாக இருக்கும் போதே பழக்கம். இன்று காலை காரில்
பயணிக்கும் போது காலை நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தார். என் மனைவியிடம்
அவரைப் பற்றிப் பெருமையாகச் சொன்னேன். அந்த அளவுக்குச் சூரிய வெளிச்சத்தில்
அவர் புடம் போடப்பட்டிருக்கிறார்.
சந்த்ரு, மேனகா ஏட்டிக்குப் போட்டிக் கூட்டணியின் கல கலா கலக்குற நிகழ்ச்சிப் பகிர்வையும் சிரித்துக் கொண்டே ரசிப்பேன்.
லோஷனுடன்
பயபக்தியோடு நிகழ்ச்சி செய்யும் தம்பி டிஜே டிலான் மற்றும் பிரஷா,
பிரசந்தா, தரணி, கோபிகா, நிஷாந்தன் – வர்ஷி கூட்டணி (ரஜினிகாந்த் பாடல் பிரியர்கள் போல ஒரு பாட்டாவது சூப்பர் ஸ்டார் பாட்டு வரும்) என்று நீளும்
நிகழ்ச்சிப் படைப்பாளிகளின் நிகழ்ச்சிகளை அவுஸி நேரத்தில் கேட்க வாய்ப்புக்
கிடைப்பதால் பலமுறை கேட்டு ரசித்ததுண்டு. மற்றைய உறவுகளின் நிகழ்ச்சிகளை
இன்னார் பெயர் என்று தெரியாமல் கேட்டதால் அவர்களையும் கண்டிப்பாக வரவு
வைக்க வேண்டும்.
“நேற்றைய காற்று” என்றொரு
நிகழ்ச்சி முன்னர் சூரியன் எஃப் எம் இல் படைக்கப்பட்டு வந்தது. இப்போது
வருகுதோ தெரியவில்லை. ஆனால் ஒரு வானொலி நிகழ்ச்சியின் தலைப்பு எவ்வளவு
தூரம் உள்ளார்த்தம் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தத் தலைப்பு
உலக வானொலி வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டியது.
சூரியன் எஃப். எம் தன் விடிகாலை வாடிக்கையாளர்கள் பெரும்பலும் இரவு நேரப் பணியாளர்கள் என்பதாலோ என்னமோ கும்மாங்குத்துப் பாடல்களைப் போட்டுத் தாக்குவார்கள். அது ஏற்கக்கூடிய பணியாக இருப்பினும் நல்ல மென் மெட்டுகள் பொருந்திய பாடல் கோப்பு நிகழ்ச்சிக்காகவும் காத்திருக்கிறேன்.  
பொற்காலப் புதனில் வரும் ஒரே பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். சில நேரம் ஒரே நேரத்திலேயே சொல்லி வைத்தால் போல வரும் அவ்வ்வ்.
 இதெல்லாம் நான் இந்த வானொலியை நேசிக்கும் நேயர் என்ற உரிமையோடு  சொல்பவை.
மற்றப்படி “தலைவர் எவ்வழி சனமும் அவ்வழி” (என்ன விளங்குது தானே 😉 ) என்று லோஷன் அண்ணையோடு சேர்ந்து பெட்டி, படுக்கையோடு நாங்கள் பயணப்படக் காரணமே அவரின் திறம்பட்ட வானொலி முகாமைத்துவம் தான்.  எந்த நேரம் எது செய்ய வேண்டும் என்று கால நேரத்துக்கேற்பத் தன் படைப்புகளை வழங்குபவர். எங்கிருந்தாலும் தன் கூட்டணியின் சிறப்பான பணியில் லோஷனின் பங்கும் இருக்கும். மைக் இருக்கோ இல்லையோ அண்ணை Cricket Bat ஐ நிலையக் கலையகத்துக்குத் தப்பாமல் கொண்டு போவாரோ என்ற சந்தேகம் நெடு நாளாக இருக்கு. நிகழ்ச்சிப் படைப்பாளராக, தயாரிப்பாளராக, மேலாண்மைப் பணியாளராக அவரின் தேரின் பல குதிரைகள் எல்லாமே நிதானம் தப்பாமல் பயணிக்கும்.  வானொலி உலக ஆளுமை சானாவின் பேரன் ஆச்சே இதெல்லாம் ரத்தத்தின் ஒவ்வொரு செல் இலும் ஊறியிருக்குமே.
சூரியன் எஃப் எம் சேவை இன்னும் பல தசாப்தங்கள் இன்று போல் என்றும் நீடித்து நிலைத்து நிற்க என் வாழ்த்துகளும், நன்றிகளும்.

பாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி

கை தட்டல்  ஒலியாய் இசையெழுப்ப தொடரும் சலங்கைச் சத்த நடையோடு மேளமும், நாயனமும், இன்ன பிற வாத்தியங்களும் அப்படியே குதியாட்டம் போட்டுத் துள்ளிக் குதித்துப் பிரவாகிக்கும் போதே மனசு அப்படியே டிக்கெட் வாங்காமல் கிராமத்துக்குப் பாய்ந்து விடும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஜோடிக் குரலுக்கு இம்மாதிரிக் கிராமியத் துள்ளிசை சர்க்கரைப் பொங்கலை அளவு கணக்கில்லாமல் சாப்பிடுவது போல, கேட்பவருக்கோ அந்த அதீத இனிப்பின் சுவையை அப்படியே கடத்துவது போல.
பாடல் முழுக்க இந்த ஜோடி கொடுக்கும் நையாண்டித் தொனி பாடலின் சாரத்தை ஈறு கெடாமல் காப்பாற்றும்.
“முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெட்கமா” என்று இரண்டு அடிகளாக ஒலிக்கும் எஸ்.பி.பியின் குரலின் முதன் அடிகளைக் கவனியுங்கள் அந்த “முத்தம்மா”வில் ஒரு கொஞ்சல் இருக்கும் “வெட்கமா” வில் வெட்கம் ஒட்டியிருக்கும். பாடலை எப்படி வளைத்து நெளித்து உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற குறும் பாடம் ஒட்டியிருக்கும். 
அதே போல் “சாடை” (சொல்லிப் பேசுதடி) இல் சாடை செய்யும் பாவனை, “குத்தாலத்து” வில் குதிக்கும் குதூகலம்.
“சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா” எனும் எஸ்.ஜானகியின் எசப்பாட்டில் வண்ணத்துப் பூச்சியாகப் புல்லாங்குழல் ஊடுருவும்.
இடையிசையில் குலவைச் சத்தத்தோடு  “வந்தது வந்தது பொங்கலின்று” என்று கலக்கும் மகளிரணியோடு சேர்ந்து “தந்தகத் தந்தத் தந்தகத் தந்த” சோடி கட்டும் ஆடவருமாகப் போடும் துள்ளாட்டம்
கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தை அப்படியே படம் போட்டுக் காட்டும்.
ரஜினிகாந்த் இற்குக் கிடைத்த பாடல்களில் அவருக்கேயான பாடல்கள் என்ற தெம்மாங்குப் பாடல் பட்டியல் போடும் போது தவிர்க்க முடியாத பாட்டு இது. எண்பதுகளில் வந்த மசாலாப் படங்களில் இயக்குநர் ராஜசேகர் கொடுத்த பங்களிப்பு மகத்தானது. ஆனால் அவர் இயக்கிய படங்கள் பல எஸ்.பி.முத்துராமன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டவர்களும் உண்டு. 
1991 ஆம் ஆண்டு “தர்மதுரை” படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் நூறு நாள் ஓட்டத்தைக் கூடக் காணும் அதிஷ்டமில்லாமல் இறந்துவிட்டார் இந்தப் பட இயக்குநர் ராஜசேகர்.
“தர்மதுரை” படத்தின் பாடல்களைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? “ஆணெண்ண பெண்ணென்ன” பாடல் மட்டும் கங்கை அமரன். மீதி எல்லாம் பஞ்சு அருணாசலம் தன் கணக்கில் வைத்துக் கொண்டார்.
“சந்தைக்கு வந்த கிளி” பாடல் கங்கை அமரனின் பாணியில் எழுந்த வரிகள். “மதுர மரிக்கொழுந்து வாசம்” பாடலுக்கு ஒரு வகையில் உறவுக்காரி.
இசைஞானி தந்த கிராமத்துப் பாடல்களை ஒவ்வொரு தசாப்தங்களாகப் பிரித்து நுணுக்கமாக ஆய்வுப் பட்டம் செய்யலாம். அந்த வகையில் தொண்ணூறுகளின் முத்திரை இது.
அந்தக் காலத்துச் சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பிவிட்டது போன சனிக்கிழமை இரவில் இந்தப் பாட்டு. ஒரு அலுவல் காரணமாக  என் காரில் அந்தச் சனிக்கிழமை இரவு தனியனாகப் பயணித்த போது சிங்கப்பூர் ஒலி “சந்தைக்கு வந்த கிளி” பாடலைக் கொண்டு வந்து தந்தது.
பால்ய நண்பனை வெகு காலத்துக்குப் பின் சந்தித்துக் கதை பேசும் சுகானுபவம் தான் இந்தப் பாடல். அந்த நேரம் என் கார் யாழ்ப்பாணத்துக்கு பஸ் பிடித்து இணுவில் கிராமத்தின் செம்பாட்டு நினைவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.
https://soundcloud.com/arulselvam-sekar/sandhaikku-vanda 
 http://www.youtube.com/watch?v=z_MQod9HCuY&sns=tw

தமிழ் திரையிசையில் குளிரும் பனியும்

சிட்னியில் குளிரோ குளிர் இதைச் சொன்னால் கனடாக்காரர் கொக்கட்டம் விட்டுச் சிரிப்பார்கள். ஆனாலும் நம்புங்க மக்கா நம்புங்க ?

இன்று காலை வேலைக்குப் போக முன்னர் என் லஷ்மியை அதான் கார் ஐ எட்டிப் பார்த்தால் பின் கண்ணாடி பூராவும் மீன் செதில் போல பனிக்கட்டித் துகள்கள். அவை எல்லாவற்றையும் வழித்துத் துடைத்து விட்டு ரயிலேறினேன் வேலைக்குப் போக.
எங்க ஊரு பாட்டுக்காரன் கண்ட நேரமெல்லாம் சங்கதி தேடி சங்கதி போட்டுப் பாடுமாற் போல எனக்கும் இந்தப் பனி மேல் ஒரு பனி வந்து (ஈழத்தில் உனக்கென்ன பனியோ என்று கேட்டால் உனக்கென்ன பைத்தியமா என்று அர்த்தமுங்கோ) பனிக்குளிரை வைத்து வந்த பாடல்களை தேடு என்று மூளைக்குக் கட்டளை போட்டேன். 
சும்மாவே பட்டென்றால் குதியன் குத்தும் என்ர மூளை இந்த விளையாட்டுக்கு நான் ரெடி என்று நாள் முழுக்கப் போட்ட பட்டியல் தான் இது.
இளையராஜா இசையில் 
1. பனி விழும் மலர்வனம் – நினைவெல்லாம் நித்யா

2. பனி விழும் இரவு – மெளன ராகம்

3. இளம்பனித் துளி விழும் நேரம் – ஆராதனை

4. அடிக்குது குளிரு – மன்னன்
5. பனி விழும் மாலையில் – மீரா
6. பனிமழை விழும் – எனக்காகக் காத்திரு
7. ஊட்டிக் குளிரு அம்மாடி – ஆயிரம் நிலவே வா
8. காலைப் பனியில் ஆடும் மலர்கள் – காயத்ரி
9. பனி விழும் பூ நிலவில் – தைப்பொங்கல்
10. சிலு சிலுவெனக் குளிர் அடிக்குது – ராஜாதி ராஜா
பிற இசையமைப்பாளர்கள்
11. புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை – அன்பே வா (எம்.எஸ்.விஸ்வநாதன்)
12. புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது – ரோஜா (ஏ.ஆர்.ரஹ்மான்)
13. பனித்துளி பனித்துளி  – கண்ட நாள் முதல் (யுவன் ஷங்கர் ராஜா)
14. பனிக்காற்றே பனிக்காற்றே – ரன் (வித்யாசகர்)
15. முன் பனியா – நந்தா (யுவன் ஷங்கர் ராஜா)
16. பனி இல்லாத மார்கழியா – ஆனந்த ஜோதி (விஸ்வநாதன் ராமமூர்த்தி)
17. பெளர்ணமி நிலவில் பனி விழும் நிலவில் – கன்னிப் பெண் (எம்.எஸ்.விஸ்வநாதன்)
18. அனல் மேலே பனித்துளி – வாரணம் ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்)
19. பனி படர்ந்த மலையின் மேலே – ரத்தத் திலகம் (கே.வி.மகாதேவன்)
20. வெள்ளிப் பனிமலை மீது – கப்பலோட்டிய தமிழன் (ஜி.ராமநாதன்)