இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகி P.பானுமதியின் தாலாட்டு

அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்த வார இறுதியில் கோரஸ் புதிர்களை வழங்க எண்ணி இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களாகத் தேடிக் கேட்டபோது தான் “மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே” எதேச்சையாகக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. 

http://soundcloud.com/kanapraba/mani-oonjal-periyamma/s-sbuyI
இந்தப் பாடல் “பெரியம்மா” என்ற திரைப்படத்துக்காக கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்டு இசைஞானி இளையராஜா இசையமைப்பில்  1992 ஆம் ஆண்டு வெளிவந்தது. பலருக்கு இப்படி ஒரு படம் வந்திருப்பதே தெரிந்திருக்காது. என்னளவில் இந்தப் படத்தில் மனோ, சித்ரா பாடிய “பூவே வருக” பாடலைத் தான் அடிக்கடி கேட்டிருப்பேன். (இதுவரை கேட்காதோர் அந்தப் பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்கவும்)
“மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே” பாடலைக் கேட்டுப் பாருங்கள் அருமையான தாலாட்டுப் பாடலாக அமைந்திருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்கும் போது பி.பானுமதி நடித்த அன்னை படத்தில் அவரே பாடிய “பூவாகிக் காயாகிக் கனிந்த மனம் ஒன்று” என்ற பாடல் நினைவில் எழக் காரணம் இவரின் சுபாவமே துடுக்கான பெண்மணியாக அறியப்படுபவர். குறிப்பாக கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே பாடலில் அந்த பானுமதியின் கம்பீரக்குரலைக் கேட்கலாம். அதிலிருந்து மாறுபட்ட, சோகம் இழையோடுமாற்போல அடக்கமான குரலின் வெளிப்பாடாக இந்த “பூவாகிக் காயாகி” பாடல் இருக்கும்.  அன்னை படம் அருமையான கதையோட்டம் கொண்ட படமும் கூட. அந்தப் பாடல் போன்றே பெரியம்மா படப் பாடலான “மணி ஊஞ்சல் மீது” பாடலை அதே உணர்வோட்டத்தில் ரசிக்கமுடிகின்றது.
அந்தக் காலத்துப் பெரும் நடிகர்களுக்கு நிகராக இவர் மிடுக்காக நடித்தும், பாடிய பாடல்களில் அந்தத் தொனி இருக்கும் அதே வேளை மென்மையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு நடிகையாக மட்டுமன்றி தயாரிப்பாளராக, பாடகியாக, இசையமைப்பாளராக, இயக்குனராகப் பன்முகம் கொண்ட பானுமதி அந்தந்தத் துறைகளில் தன்னை நிரூபித்தும் காட்டினார்.
“வாடா மல்லியே நான் சூடா முல்லையே” என்ற பானுமதி பாடிய பாடல் தான் இளையராஜா இசையில் இவர் பாடிய முதல் பாடல் என்பது என் நினைவுக்கெட்டியவரை இருக்கின்றது. http://m.soundcloud.com/kanapraba/vaada-malliye-kannukku-mai-ezhuthu-1/s-6qpJf
இந்தப் பாடல் “கண்ணுக்கு மை எழுது” என்ற திரைப்படத்துக்காக இசையமைக்கப்பட்டது. கண்ணுக்கு மை எழுது திரைப்படம் “தாய், மகள்,பேத்தி” உறவை மையப்படுத்தி இயக்குனர் மகேந்திரனால் எடுக்கப்பட்டபோது அந்தப் படத்தில் பானுமதி நடித்ததோடு இந்தப் பாடலையும் பாடினார். இந்தப் பாடலும் முன்னர் குறிப்பிட்ட “மணி ஊஞ்சல் மீது” பாடலைப் போன்றே ஒரு இனிமையான தாலாட்டுப் பாடலாக அமைந்திருக்கிறது.
1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் “அன்பு மலர்களின் சோலை இது”, “வண்ணப்பூவே நீ நானாகவும்” போன்ற அருமையான மெல்லிசைப் பாடல்கள் உண்டு. இயக்குனர் மகேந்திரன் தோல்வி முகத்தில் இருந்த காலகட்டத்தில் வந்தது என்பதால் எடுபடாமல் போயிற்று. இந்தப் படத்தின் பாடல்கள் குறித்த சுவாரஸ்யமான குறிப்பு என்னவென்றால் “பூவே நீ நானாகவும்” பாடலை கங்கை அமரன் எழுத, “வாடா மல்லியே உள்ளிட்ட அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பார் அதிமுகவின் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த கா.காளிமுத்து அவர்கள். இசைத்தட்டிலும் மாண்புமிகு கா.காளிமுத்து என்றே சிறப்பிக்கப்பட்டிருப்பார். ஆகவே தமிழ்த்திரையிசை வரலாற்றில் ஒரு பாடலாசிரியர் பெயருக்கு முன்னால் “மாண்புமிகு” என்ற அடைமொழியோடு வந்த பெருமை இப்பாடல்களுக்கு உண்டு. கலைஞர் கருணாநிதி அதே அடைமொழியோடே படத்திலும் இடம்பெற்றிருப்பார். கா.காளிமுத்து அவர்கள் தமிழில் முது நிலைப் பட்டதாரி என்பதும் ஏற்கனவே அறியப்பட்ட கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
பி.பானுமதியின் மிடுக்கான குணாம்சத்துக்குப் பொருத்தமாக அமைந்தது இளையராஜா இசையில் “செம்பருத்திப் பூவு” என்ற குழுப்பாடலில் இவர் பாடிய பகுதி.  http://www.youtube.com/watch?v=MkmOkJOG9lI&sns=em
ஒரேயொரு வரி மட்டும் தான் பானுமதியின் பங்களிப்பு அதிலும் அவரின் தனித்துவம் இருக்கும். ஆனால் பல இசைத்தட்டில் மனோ, சித்ரா, குழுவினரின் பெயர் மட்டுமே இந்தப் பாடல் பாடியோராகச் சொல்லப்பட்டிருக்கும். 
அண்மையில் இளையராஜாவைப் பேட்டி எடுத்த நிகழ்வில் அருண்மொழி அவர்கள் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அதுவரை ராஜாவின் இசை குறித்துப் பேசாதிருந்த பானுமதி அவர்கள் “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ” பாடலைக் கேட்ட பின்னர் ராஜாவின் இசையைச் சிலாகித்துப் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்த்திரையிசை வரலாற்றில் பி.பானுமதி அவர்களின் சாகித்தியம் குறிப்பிடத்தக்கதொன்று. அவரோடு இசைஞானி இளையராஜா இணைந்து கொடுத்த பாடல்கள் அதிகம் அறியப்படாவிட்டாலும் இருவருக்கும் ஆத்ம திருப்தியைக் கொடுத்திருக்கும். 
“வாடா மல்லியே நான் சூடா முல்லையே”
http://m.soundcloud.com/kanapraba/vaada-malliye-kannukku-mai-ezhuthu-1/s-6qpJf
“மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே”
http://soundcloud.com/kanapraba/mani-oonjal-periyamma/s-sbuyI
இந்தப் பாடல்களை நான் அடிக்கடி கேட்காவிட்டாலும் கேட்கும் போதெல்லாம் தாயின் அரவணைப்பை உணர்கின்றேன்.

மெல்லிசை மாமன்னனுக்கு வயசு எண்பத்தைந்து

ஜூன் 24 இன்றைய தினம் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய எண்பத்தைந்தாவது வயதை எட்டியிருக்கின்றார். தமிழ்திரையிசைச் சாதனையாளர்களில் மூன்று முக்கியமான ஆளுமைகளான மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆ.ரஹ்மான் ஆகியோர் இயங்குகின்ற சூழலில் நாமும் இருக்கின்றோம் என்பதில் ஒரு பெருமை தானாக வந்து சேர்கின்றது. இன்றைக்கு கணினி யுகத்தில் ஏராளம் டெஸ்ட் டியூப் பேபிகள் இசையமைப்பாளர்களாகக் குவிந்து விட்டார்கள் ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசையுலக மாமன்னன் எவ்வளவு பெரிய சாதனையை தசாப்தங்களைக் கடந்து செய்து காட்டிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் பார்க்கின்றார் என்னும் போது சாதாரணர்களாகிய நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொன்றையும் அந்த அடக்கம் காட்டி நிற்கின்றது.

இன்றைக்குப் பன்மடங்கு பெருகிவிட்ட தொழில் நுட்ப முன்னேற்றத்தின் பல படிகள் பின்னோக்கிய காலகட்டத்தில் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏராளம் பாடல்களை விதவிதமான சூழலுக்கேற்ப விதையாக்கிக் கொடுத்தார், இன்றைக்கும் பட்டுப்போகாத நல் விரூட்சம் போல அந்தப் பாடல்கள் ரசிகர் மனதில் எழுந்து நிற்கின்றன. ராமமூர்த்தி அவர்களோடு இணைந்து கூட்டாகப் படங்கள் கொடுத்த போதும், தனித்து இயங்கிய போதும் தன் அடையாளத்தை மிகக் கச்சிதமாக நிறுவியவர். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்துப் பாடல்களைக் கேட்கும் போது எம்.எஸ்.வி தனம் இருக்குமளவுக்கு அடுத்த சகாப்தத்திலும் கொஞ்சப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டவர். மெல்லிசை மாமன்னர் விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்கள் லேசுப்பட்டவர்களல்ல, ஒவ்வொருவருக்கும் தனிப்பாணி, இவர்கள் எல்லோருக்கும் ஏற்ற பாடல்களைப் பண்ணுவதோடு மட்டுமல்ல கவியரசு கண்ணதாசனோடு போராடியும், சந்தோஷித்தும் மெட்டுக் கட்டிய கதைகளைப் புத்தகம் ஆக்குமளவுக்கு அந்தப் பாடல்களுக்குப் பின்னால் ஏராளம் கதைகள். இவையெல்லாம் ஒரு மாமூல் கலைஞனுக்கு கிட்டாத அனுபவங்கள். அந்த வகையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் முழுமையான வரலாறு எவ்வளவு தூரம் பதிவாகியிருக்கின்றது என்பது கேள்விக்குறி.

படத்தின் கதையோட்டத்தோடு மாறுபடும் காட்சியமைப்பு வரும்போது ஒரு கட்டியக்காரனாகவும், அசரீரியாகவும் பல படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஒரு பாடகராகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுதவிர காதல் பாடல்கள் சிலவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் பாங்கே தனி. அதற்கு உதாரணமாக மூன்று பாடல்களை இங்கே பகிர்கின்றேன்.

“சொல்லத்தான் நினைக்கிறேன்” படத்தில் வரும் “சொல்லத்தான் நினைக்கிறேன்” பாடலை எஸ்.ஜானகியோடு பாடுகின்றார்.

“நிலவே நீ சாட்சி” பாடலில் “நீ நினைத்தால்” பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியோடு பாடும் பாங்கைக் கேளுங்கள், இவர்தான் பாடியிருக்கிறார் என்று ஊகிக்கமுடியாத அளவுக்கு மிகவும் கட்டையான சுருதியில் பாடுவார்.

“முத்தான முத்தல்லவோ” படத்தில் “எனக்கொரு காதலி இருக்கின்றாள்” பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு பாடும் போது எப்படி அநாயசமாக  போட்டு வாங்குகிறார் பாருங்கள்

எம்.எஸ்.விஸ்வநாதன் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களோடு நேசம் கொண்டு, அவர்களின் படங்களிலும் கெளரவப்பாடகராக வந்துகாட்டும் போது அவரின் இன்னொரு பரிமாணம் வெளிப்படுகின்றது. இவர் அளவுக்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு தொகை இசையமைப்பாளர்கள் இசையில் பாடிய இன்னொரு இசையமைப்பாளரை அடையாளம் காட்டுவது மிகக்கடினம், இரண்டாவது இடத்தில் கங்கை அமரனைச் சேர்த்துக் கொள்ளலாம், அந்த வகையில் தமிழ்த்திரையுலக முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எம்.எஸ்.வி பாடிய பாடல்கள் சில இங்கே,

இளையராஜா – தாயே மூகாம்பிகையே (தாய் மூகாம்பிகை) நல்ல காலம் ( கருவேலம் பூக்கள்)
ஏ.ஆர்.ரஹ்மான் –  ஆலாகண்டா (சங்கமம்), விடை கொடு எங்கள் நாடே (கன்னத்தில் முத்தமிட்டால்)
ஜி.வி.பிரகாஷ்குமார் – “மேகமே ஓ மேகமே ( மதராசப்பட்டணம்)
வி.குமார் – உனக்கென்ன குறைச்சல் (வெள்ளி விழா)
பரத்வாஜ் – மெட்டுத் தேடித் தவிக்குது  (காதல் மன்னன்)
தேவா – கதிரவனை முத்தமிட்டு கடல் மேலே வித்தை செய்து (வைதேகி வந்தாச்சு)
சந்திரபோஸ் – எந்த வழி போவது (குற்றவாளி)
கங்கை அமரன்  இசையில் இனி ஒரு சுதந்திரம் படத்தில் ஒரு பாடல்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் –  நட்பு நட்பு (உன்னைச் சரணடைந்தேன்)

சினிமாத் தயாரிப்பாளராக கலைக்கோயில் படம் உட்படக் கையைச் சுட்டுக் கொண்டாலும், குணச்சித்திர நடிகராக ஏற்ற பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியவர் இவர்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இசைஞானி இளையராஜாவும் தனித்தே சாதித்துக் காட்டியவர்கள் ஆனாலும் இவர்கள் இருவரும் புதுமையான முயற்சியாக ஜோடி கட்டி இசையமைத்த படங்கள்
மெல்லத் திறந்தது கதவு ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)
என் இனிய பொன் நிலாவே ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)
செந்தமிழ்ப்பாட்டு
செந்தமிழ்ச் செல்வன்
இரும்புப்பூக்கள்
விஸ்வதுளசி

மெல்லிசை மாமன்னரின் பாடல்கள் ஒவ்வொன்றும், பயன்படுத்திய வாத்திய வகையறாவில் இருந்து பல்வேறு காட்சிமைப்புக்களுக்கேற்ப என்னவெல்லாம் புதுமையான மெட்டையும், குரல் அமைப்பையும் புகுத்தியிருக்கிறார் என்பதையும் ஒரு பெரிய ஆய்வுக்குட்படுத்திப் பார்க்கவேண்டும், ஆண்டுக்கணக்கில் எடுக்கும் ஆய்வாக இது அமைந்து விடும் அளவுக்கு அள்ள அள்ள ஏராளம் புதையல்கள் அவர்தம் பாடல்களுக்குள்ளே ஒளிந்திருக்கின்றன.

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வாழிய பல்லாண்டு

ஷ்ரேயா கொஷல் எனும் இளங்காத்து வீசுதே…!

கடந்த வாரம் Zee TV இன் பாலிவூட் படங்களின் விருது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையிடையே தங்களின் பிரபல்யமான நிகழ்ச்சிகளின் படத்துண்டுகளைக் காட்டிக் கொண்டு வந்தார்கள், அப்படி வந்தது தான் “சரிகமப” என்ற இசை நிகழ்ச்சி குறித்த ஒரு சில நிமிடத்துளிகள் கொண்ட காட்சித்துண்டு. அதில் சின்னஞ்சிறுமியாக கலந்து கொண்ட ஷ்ரேயா கொசலைக் காட்டியபோது இந்தப் பத்துவருஷ காலத்தில் அவரின் நதிமூலம் எப்படித் தொடங்கியது என்பதைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. இன்றைக்குப் பாட்டுப் போட்டி நடத்தாத தொலைக்காட்சிகளே இல்லை எனலாம், எல்லோருக்கும் பாடி நம்மைப் படுத்த ஆசை இருக்கின்றது. அதற்கான களம் கூடக் கட்டற்று ஏன் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது. ஆனால் கடந்த இருபதாண்டுகளுக்கு உட்பட்ட திரையிசையில் பாடகிகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழில் கூட சுவர்ணலதாவுக்குப் பின் சின்மயியை ஓரளவு சொல்லி வைப்பதோடு சரி. மற்றோர் எல்லாம் கூட்டத்தில் கும்மாளம் என்ற நிலை தான். இந்த நிலையில் ஒரு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் கலந்து தன்னை நிலை நாட்டிப் பின்னர் ஹிந்தி தவிர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் சொல்வாக்குக் கொண்டிருக்கும் பாடகி என்ற பெருமையை ஷ்ரேயா கொசல் பெற்றிருக்கின்றார். இது இன்றைய கூட்டத்தில் கோவிந்தா என்ற சூழலில் அவ்வளவு சுலபமான விஷயமல்ல. தனித்துவமான திறமை ஒன்றே அவரின் மூலதனம், அதிலும் எந்த மொழியில் பாடினாலும் அந்நியம் இல்லாதது ஷ்ரேயாவினுடைய குரல். இந்த அந்நியமற்ற மொழி கடந்த குரல் மொழியை வடநாட்டுச் சகோதரிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்லே கூடப் பெற்றிருக்கவில்லை.

சஞ்சய் லீலா பான்சாலியின் “தேவதாஸ்” என்ற ஹிந்திப் படம் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சிட்னித் திரையரங்கில் காண்பிக்கப்பட்டபோது அந்தப் படம் தரப்போகும் பிரமாண்ட்டத்துக்காக மட்டுமே தியேட்டருக்குச் சென்றேன். ஆனால் கட்டிப்போட்டது இஸ்மாயில் தர்பாரின் இசை. அதில் தான் தொடங்கியது ஷ்ரேயா கொசலின் இசைப்பயணம். எடுத்த எடுப்பிலேயே அந்த முதற்படத்தில் தேசிய விருது வேறு.

ஆனால் அவ்வளவு சீக்கிரம் தமிழுக்கு இந்தப் பாடகி வருகின்றார் என்று நினைக்கவேயில்லை, வந்தார் இங்கும் முத்திரை பதித்தார். “எனக்குப் பிடித்த பாடல் அது உனக்குப் பிடிக்குமே” ஜீலி கணபதி படப் பாடலில் உருகிய ஷ்ரேயா கொஷலின் குரல் உருக்கியது எம்மை. ஆனால் அந்தப் பாடலை ஒரு சொதப்பல் காட்சியமைப்பில் பயன்படுத்திய பாலுமகேந்திரா மேல் இன்றளவும் கோபமுண்டு. இசைஞானி இளையராஜா, ஷ்ரேயா கொஷலுக்கு வள்ளலாக மாறிப் பாடல்களை அள்ளிக்கொடுக்க முன்னோடியாக அமைந்து விட்டது இந்தப்பாட்டு.

“இளங்காற்று வீசுதே” பாடல் ஶ்ரீராம் பார்த்தசாரதியின் தனிப்பாடலாகவும் இருக்கிறது, ஷ்ரேயா கொஷலோடு ஜோடி கட்டிய பாடலாகவும் இருக்கிறது. இரண்டையும் ஒருதடவை சுழல விட்டுப் பின் எடை போட்டுப்பாருங்கள் ஷ்ரேயா கொஷலின் அந்தக் கொஞ்சும் குரல் பாடலுக்குக் கொடுத்திருக்கும் வலிமையை. ஊனினை உருக்கிப் பார்க்கின்றது பாடல்.


“ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை” சரணாகதி கொண்டு பாடும் அந்தத் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு கிராமத்தின் வெள்ளாந்திக்குரலுக்குப் பின் பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து வந்த வடநாட்டுக் குரல் உருக்கொண்டிருப்பதை யாரும் நம்ம முடியுமா?

தங்கர்ப்பச்சனின் சொல்ல மறந்த கதையிலும் அதே கதை தான் “குண்டுமல்லி குண்டுமல்லி தென்றல் காத்து அடிச்சதும் கண்ணத்தெறக்குது” புதுமனைவியின் வெட்கத்தையும் கூட அழைத்துக் கொடுக்கும் குரலில். பாடலை முழுவதுமாக ஓட்டிப்பாருங்கள்.குங்குமம் கிட்டிய கையோடு பாடும் ஒரு பெண்ணின் கிறங்கடிக்கும் குரல், அப்படியே அள்ளித் தெளித்தது போல என்ன ஒரு அனாயாசமாகப் பாடியிருக்கிறார்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் மலையாளிகள் இந்த விஷயத்தில் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனானப்பட்ட இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன் நவீன் பாடிய மலையாளப்பாடலில் ஒலிச்சுத்தம் தேடிக் கிழித்துக் காயப்போட்டவர்கள். அப்படியிருக்க அங்கும் ஷ்ரேயா கொஷல் சென்று மயக்கினார் தன் குரலால்.
மலையாள சினிமாவின் இன்றைய இசையரசர் ஜெயச்சந்திரன் இசையில் பனாரஸ் படத்தில் பாடும் “சாந்து தொட்டில்லே”
பாடலில் அவர் கொடுக்கும் குரலின் ஜாலத்தில் கிறங்கி விருதுகள் கொடுக்குமளவுக்குப் போய்விட்டார்கள். “பிரியனொராள் இன்னு வன்னுவோ” என்று தொடங்கும் அந்த ஏக்கம் தொனிக்கும் குரல் எப்படியெல்லாம் போகிறது என்று கேளுங்களேன்.

ஷ்ரேயா கொஷல் இந்த ஆண்டோடு தன் கலைத்துறையில் பத்தாண்டுகளைத் தொடுகின்றார். இந்தப் பத்தாண்டுகளில் இஸ்மாயில் தர்பார் கொண்டு, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் என்று எல்லா இசையமைப்பாளர்களிடம் இருந்தும் இவருக்குக் கிடைத்த பாடல்கள் மணிமுத்துக்கள். தொடரட்டும் அவரின் கலைப்பயணம்.
ஷ்ரேயா கொஷலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பாடகர் அருண்மொழி பாடல்களோடு பேசுகின்றார்


எண்பதுகளின் இறுதிக் காற்பகுதியில் இருந்து தொண்ணூறுகளின் ஆரம்ப காலங்கள் வரை தமிழ்த்திரையிசைப்பாடல்களில் பாடகர் அருண்மொழியை விலக்கி விட்டுப் பட்டியல் இடமுடியாத அளவுக்கு நிறைய அருமையான மெலடிப் பாடல்களைத் தந்தவர். அதுவும் இசைஞானியின் செல்லப்பிள்ளை போல அவருக்குக் கிடைத்த மெட்டுக்கள் எல்லாமே அதியற்புதம். அருண்மொழி வேறு இசையமைப்பாளர்களிடம் பாடிப் புகழ் பெற்றிருந்தாலும், இசைஞானி அவருக்குக் கொடுத்த முகவரி தான் இன்று வரை அவரின் பேர் சொல்ல வைத்திருக்கின்றது.

பாடகர் அருண்மொழியை வானொலிப் பேட்டி காணச் சில வாரங்கள் முன்னர் எண்ணிய போது, அவரின் தொடர்பிலக்கத்தைப் பெற்றுத் தருவதில் பெரிதும் துணை நின்றவர் வழக்கம் போல ரேகா ராகவன் சார். அவர் நண்பர் ஆர்.வி.எஸ். மூலமாகப் பெற்றுத் தர உதவினார். ஆர்.வி.எஸ் அவர்களும் றேடியோஸ்பதியோடு இணைந்த இசைரசிகர் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

பாடகர் அருண்மொழியைத் தொடர்பு கொண்டபோது எந்தவிதச் சாக்குமின்றி உடனேயே வானொலிப்பேட்டிக்குச் சம்மதித்தார். என் ஆதர்ஷப் பாடகர்களில் ஒருவர், இசைஞானியின் இசைப்பண்ணையில் இருப்பவரோடு பேசும் போது கனவுலகத்தில் மிதந்தவண்ணம் உரையாடினேன். தெரியாத பல சுவையான தகவல்களோடு அருண்மொழி அவர்கள் கொடுத்த அந்தப் பேட்டியை “முத்துமணி மாலை” என்னும் என் வானொலி நிகழ்ச்சியில் அவருடைய முத்தான பல பாடல்களோடு ஒலிபரப்பினேன்.

அந்தப் பேட்டியைக் கேட்க

Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்

இந்தப் பேட்டியை நான் வானொலியில் ஒலிபரப்பும் போது, பேட்டியைக் கேட்டவண்ணம் ட்விட்டர் வழியாக அறிமுகமான நண்பர் நாமக்கல் ராஜா வேகவேகமாக பேட்டியில் அருண்மொழி சொன்ன சுவையான குறிப்புக்களைத் தட்டச்சுச் செய்து தன் நண்பர் ஒருவருக்குப் பகிர்ந்ததாகக்ச் சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார். என் வானொலிப்பேட்டியில் அவர் சேர்த்த துளிகள் இவைதான்.

-இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் தான் என்னை அறிமுகம் செய்தார்கள்.

– மலையாளப் படத்திற்கு பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதுதான் இளையராஜா என் வாசிப்பை கேட்டு என்னை சேர்த்துக் கொண்டார். அவருடன் சேர்வதற்கு முன்னால் பெரும்பாலான எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி இருந்தேன்.

– ‘ஒரே முறை உன் தரிசனம்’ இளையராஜாவுடன் என் முதல் பாடல். அதில் வரும் புல்லாங்குழல் இசை என்னுடையது.

– பாடகரானதும் சுவையான அனுபவம் தான். ராஜா பாடகர்களுக்கு ரிட்டர்ன் நோட்ஸ் தான் எழுதுவார். அது வெஸ்டர்ன் நோட்ஸில் இருக்கும். ஆரம்பத்தில் புரியவில்லை. பின்னர் அதை நானே கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு விளக்கும் அளவுக்கு தேறினேன். நான் அப்படி வாய்ஸ் ரூமில் பாடிக்காட்டுவதை ஹெட்போனில் ராஜா சார் கேட்டார். அப்படித்தான் ஒருமுறை கங்கை அமரன் பாடிய ஒரு பாடலை என்னை பாட வைத்து வாய்ஸ் தேர்வு செய்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் ரிலீஸாகவில்லை.

அடுத்த நாளே சூரசம்ஹாரம் பட பூஜை. அதில் பாடினேன். அவராகவே அருண்மொழி எனப் பெயரிட்டார். வாலியும் ராஜாவும் சேர்ந்து இட்டப் பெயர். அன்று நான் பாடிய பாடல் தான் ‘நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி’. அதில் எல்லாப் பாடல்களும் நான் தான் பாடினேன். அது பெரிய ஹிட் ஆனது. அதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள்.

– பார்த்திபனுக்காக என் குரலை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. அது தானாக அமைந்தது. எதேச்சையாக அவருக்கு பாடப்போய், என் குரல் அவருக்கு மாட்ச் ஆனதும், பார்த்திபனே என்னை மற்ற இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று பாட வைத்தார்.

– பிற இசையமைப்பாளர்களிடம்: ‘சலக்கு சலக்கு சரிகை சேலை’ எஸ்.ஏ.ராஜ்குமாரிடம் பாடிய பிறகு அதேபோல் குத்துப் பாடல்களாக தொடர்ந்து வர ஆரம்பித்தன. அதனால்தான் பாடுவதை நிறுத்தினேன்.

– பாடல்கள் கூட எழுதியிருக்கிறேன். ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ படத்தில் எல்லா பாடல்களும் நான் தான் எழுதினேன். போலவே, அரசியல் படத்திலும், வித்யாசகர் இசையில் ‘வாசுகி வா சகி’ பாடலும் நான் எழுதியது.

– பாடகர் அருண்மொழியை விட இசைக் கலைஞர் அருண்மொழிதான் எனக்குப் பிடிக்கும்.

– நான் பணியாற்றிய பாடல்களில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘இள நெஞ்சே வா’, ‘தாலாட்டும் பூங்காற்று நீ அல்லவா’ ஆகிய பாடல்களிலும், சின்னத்தம்பி படத்தின் பாடல்களிலும் புல்லாங்குழலுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அப்படி இன்னும் பலப்பாடல்கள் உள்ளன.

– ராஜாவின் பாரவையிலேயில் நான் விஜய்க்கு பாடிய சோகப் பாடல் ‘அம்மன் கோவில் எல்லாமே’ நான் ட்ராக் பாடியது. அதை அப்படியே படத்தில் பயன்படுத்திக்கொண்டு விட்டார்கள்.

– அஞ்சலி, மௌனராகம் இப்படி கிட்டத்தட்ட எல்லா படங்களையுமே பின்னணி இசையில் வேலை வாங்கிய படங்களாகச் சொல்லலாம். அவற்றுள் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின் ரீ ரெகார்டிங்கை ராஜா சார் என்னை செய்ய சொல்லிக்கொடுத்து விட்டார். நாட்டுப்புறப் பாட்டு படத்தையும் நானே செய்தேன். இப்படி சில படங்களில் என்னுடைய ரீ ரெகார்டிங் பங்களிப்பு இருந்தது.

– ராஜா சாரிடம் பணியாற்றி வருவது பெருமைக்குரிய விஷயம். இதுவரை நான் அவரிடம் ஒரு கோபச்சொல் கூட வாங்காதது என் அதிர்ஷ்டம்.

– இன்றைய இசையை மிகவும் மாறிவிட்டது. என்னால் அதன் வித்தியாசத்தை உணர முடிகிறது. அன்று 20 முறை ரிகர்சல் செய்து வாசித்த காலம் மாறிவிட்டது. இப்போது சில சமயம் வீட்டில் வாசித்து ஈமெயில் நான் அனுப்பிவிட்டால், அதையே கூட பயன்படுத்திக்கொண்டு விடுகிறார்கள். தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது.

இளையராஜா இசையில் பாடகி மின்மினி

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். பாடகி மின்மினி விஷயத்திலும் அப்படித்தான் அமைந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் “மீரா”திரைப்படத்தின் மூலம் தமிழில் பாடகியாக வந்த அவருக்கு, அந்த ஆரம்ப காலத்தில் நிறையைப் பாடல்களைக் கொடுத்து வாய்ப்பளித்திருக்கின்றார் ராஜா. மலையாள தேசத்துக் குரல்களின் மீது ஏனோ ராஜாவுக்குத் தீராக் காதல். சுஜாதா, சித்ரா, சுனந்தா, செர்ணலதா (இவர் எம்.எஸ்.வி இசையில் தான் அறிமுகமானார் ஆனால் ராஜா கொடுத்த பாடல்களால் கிடைத்த புகழை இங்கே சொல்லவா வேண்டும்), என்று நீளும பட்டியலில் மின்மினியும் இணைந்து கொண்டார். ரோஸில்லி என்ற இயற்பெயர் கொண்ட

மினி ஜோசப் என்ற பெயரிலேயே வலம்வந்திருக்கின்றார் இது தமிழ்த்திரையுலகுக்கு வரமுன்னர். மினி ஐ மின்மினி என்று பெயர் சூட்டியதும் ராஜாவே தான். செர்ணலதா போல இவருக்கும் ஓரவஞ்சனை இல்லாது நிறைய நல்ல நல்ல பாடல்களை ராஜா கொடுத்திருக்கின்றார். ஆனால் அன்றைய சூழலில் ஜானகி, சித்ரா போன்ற முதல் வரிசைப் பாடகிகள் அளவுக்கு வராமற் போயிருந்தார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு ரோஜா படத்தின் மூலம் ஆரம்பமாக, அந்தப் படத்தின் முத்திரைப் பாடல் “சின்னச் சின்ன ஆசை” பாடல் மின்மினிக்குக் கிடைக்க அவர் அதுவரை தொடாத உயரங்களைத் தொட்டார் இந்தப் பாடல் கொடுத்த புகழால். இசைஞானியின் பாடகிகளில் செர்ணலதாவையும், மின்மினியையும் வைத்து ரஹ்மான் தன் ஆரம்ப காலப் படங்களில் நிறையவே கொடுத்திருக்கின்றார். ஆனால் மின்மினி என்பது வானத்தில் ஒளிர்ந்து மறையும் என்பது இவரின் வாழ்க்கையிலும் எழுதப்பட்ட துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது. மின்மினிக்குத்க் திடீரென்று பேச்சாற்றால் இழக்கப்பட, அதுவரை சேர்த்த அத்தனை புகழும் அங்கீகாரமும் ஒரே நாளில் கலைந்து போகின்றது. பாடகி மின்மினி, தமிழ்த்திரையுலகின் முக்கிய ஆளுமைகள் இளையராஜா, ரஹ்மான் தவிர தேவா உள்ளிட்ட மற்றைய இசையமைப்பாளர்களின் இசையில் பாடினாலும் இந்த இரு இசையமைப்பாளர்களிடம் இருந்து பெற்ற பாடல்கள் அளவுக்கு இல்லை என்பதையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும்.

மாலைச் சந்திரன் (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) பாடலை எஸ்.பி.பி என்ற ஜாம்பவானுடன் பாடும் போது அதில் வரும் 2.28 நிமிடத்துளிகளில் மின்மினி அனாயாசமாக “மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மன்மத ராகத்திலே” என்று பாடுவதிலாகட்டும் “ஏ அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே” (திருமதி பழனிச்சாமி) என்று ( 2.47 நிமிடம்) அதுவரை கலாய்த்துப் பாடிய எஸ்.பி.பி, சுந்தரராஜன் குழுவுக்குப் போட்டி போட்டுப் பாடுவதிலாகட்டும் மின்மினியின் குரலின் கனிவுக்கு சில சான்றுகள். “அடி பூங்குயிலே பூங்குயிலே” (அரண்மனைக் கிளி) பாடலில் மனோவோடு இணைந்து பாடும் மின்மினிக்கு மாற்றீடாக இந்தப் பாடலில் இன்னொரு குரலைப் பொருத்திப் பார்க்கமுடியவில்லை. ஆர்.வி.உதயகுமாரின் உதவியாளராக இருந்து இயக்குனராக வந்த செய்யாறு ரவியின் இயக்கத்தில் வந்த தர்மசீலன் படத்தில் வரும் “தென்றல் வரும் முன்னே முன்னே” பாடல் மின்மினிக்கு ராஜா கொடுத்த அங்கீகாரங்களில் ஒன்று. வள்ளி படத்தில் வரும் “என்னுள்ளே என்னுள்ளே” என்ற பாடலில் சொர்ணலதா வழியாக ஏங்கும் காதலியின் உணர்வைக் கொண்டு வந்த ராஜா, உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் “தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே” பாடலை மின்மினிக்குக் கொடுத்து அதே பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். இவையெல்லாவற்றுக்கும் மேலாக என் மனசுக்கு நெருங்கிய பாடல்களில் ஒன்றான “நல்ல தலைவனும் தலைவியும்” (பிள்ளைப்பாசம்) பாடலில் “எங்கும் பொழியுது ஒளிமழை வண்ண விளக்குகள் பலவகை… ஊரெல்லாம் திருவிழா” என்று பாடும் அந்தக் கணங்களில் நெஞ்சில் நிறைந்த் நிற்கின்றார்.

இந்தப் பகிர்வில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகி மின்மினிக்குக் கிட்டிய பாடல் முத்துக்கள் சிலவற்றைப் பகிர்கின்றேன். கேட்டு அனுபவியுங்கள்.

“லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு” (மீரா) மனோவுடன் மின்மினி

“மாலைச் சந்திரன் மலரைத் தேடுது” (உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்) எஸ்.பி.பியுடன் மின்மினி

“அம்மன் கோயில் வாசலிலே” (திருமதி பழனிச்சாமி) எஸ்.பி.பி, சுந்தரராஜன், மின்மினி

“தொட்டுத் தொட்டுத் தூக்கிப்புட்டே” (உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்) மின்மினி தனித்து

“தென்றல் வரும் முன்னே முன்னே” (தர்மசீலன்) அருண்மொழியுடன் மின்மினி

“நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம்” (பிள்ளைப்பாசம்) மனோவுடன் மின்மினி

“அடி பூங்குயிலே பூங்குயிலே” (அரண்மனைக்கிளி) மனோவுடன் மின்மினி

பாடகர் ஜாலி ஏப்ரஹாம் பேசுகிறார்


கே.ஜே.ஜேசுதாஸில் இருந்து கேரளத்தில் இருந்து தமிழ்த்திரையுலகில் கோலோச்சிய பாடகர்கள் எழுபதுக்குப் பின்னாலும் எண்பதுகளிலும் கணிசமாகவே இயங்கிவந்தார்கள். இவர்களில் பாடகிகள் ஒருபக்கம் இருக்க, பாடகர்களை எடுத்துக் கொண்டால் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், உன்னிமேனன், கிருஷ்ணச்சந்தர் இவர்களோடு ஜாலி ஏப்ரஹாமின் பாடும் தொனி ஒரே அலைவரிசையில் இருப்பதை ஏனோ உணரமுடியும். அதிலும் “உறவுகள் தொடர்கதை” போன்ற பாடல்களில் ஜெயச்சந்திரனா, ஜேசுதாஸா என்ற குழப்பத்தில் ஒரு சில ரசிகர்கள் என்னோடு தர்க்கம் புரிந்தும் இருக்கிறார்கள்.
அதே குழப்பத்தின் ஒரு படியாக ஜாலி ஏப்ரஹாம் இசைஞானி இளையராஜாவுக்காக முதலில் பாடிய “அடடா அங்கு விளையாடும் புள்ளி மானே” (மாயாபஜார் 1995) பாடலை ஜேசுதாஸ் பாடியதாக இசைத்தட்டுக்களுமே வெளியிட்டுத் தம் ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜாலி ஏப்ரஹாம் சிட்னி வருகின்றார் அறிந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஜாலி ஏப்ரஹாமை வானொலிக் கலையகத்துக்கு அழைத்துவரக் கேட்டேன்.

என் சின்ன வயசில் இலங்கை வானொலியின் “பொங்கும் பூம்புனல்” நிகழ்ச்சியில் அடியேனைப் பாரம்மா என்று காலையில் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் பல வருஷங்கள் கழிந்த நிலையில் என் முன்னே வானொலிப் பேட்டிக்கு வந்திருக்கின்றார் என்ற பெருமிதத்தோடு ஜாலி ஏப்ரஹாமுடன் பேட்டியை ஆரம்பித்தேன். தான் பாட வந்த கதையில் இருந்து, தன் இறுதிப்பாடலான ஒரு சின்ன மணிக்குயிலு (கட்டப்பஞ்சாயத்து) பாடலோடு திரையிசைப்பாடலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கிறீஸ்தவ மதத் தொண்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தது வரையான தன் இசைவாழ்வில் மைல்கல்லாய் அமைந்த பாடல்களைப் பாடிக்கொண்டே தன் வாழ்வின் சுவையான அம்சங்களைப் பகிர்ந்து கொண்டே 30 நிமிடங்கள் கடந்து பயணித்தது அவர் பேட்டி.

பேட்டி முடிந்தபின் “காஷுவலாக பேட்டி அமைஞ்சிருக்கு, ரொம்ப நல்லா இருக்கு”என்று அவர் திருப்தியோடு சொல்லிக் கொண்டே ஆசையாகத் தன் காமராவிலும் எங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டார். கூடவே தன் இரண்டு பாடல் இசைத்தட்டுக்களை அன்பளித்தார்.
ஜாலி ஏப்ரஹாம், நான் வானொலிப் பேட்டி கண்ட கலைஞர்களில் இன்னொரு பண்பட்ட மனிதர்.

பேட்டியைக் கேட்க


Download பண்ணிக் கேட்க

ஜாலி ஏப்ரஹாம் பாடிய சில திரையிசைப்பாடல்கள்

அடியேனைப்பாரம்மா – படம்: வணக்கத்துக்குரிய காதலியே, இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

அடடா அங்கு விளையாடும் புள்ளிமானே – படம்: மாயாபஜார் 1995, இசை: இளையராஜா

அட மன்மதன் ரட்சிக்கணும் – படம்: ஒருதலை ராகம் இசை: டி.ராஜேந்தர்

ஒரு சின்னமணிக்குயிலு சிந்து படிக்குதடி (பவதாரணியோடு) – படம்: கட்டப்பஞ்சாயத்து இசை:இளையராஜா

பாடகி சித்ராவின் பிஞ்சுக்குரல்

காதலிக்கும் பருவத்தின் ஆரம்ப நாட்களைப் போலத் தொடர்ந்து வரும் காலங்கள் இருக்காது போல ஒரு சில பாடகர்களின் ஆரம்பகாலத்துப் பாடல்களைக் கேட்கும் சுகமே தனிதான். ஒரு பாடகர் அனுபவம் மிக்கவர் ஆகிவிடும் போது குறித்த பாடகரின் பாடல்களைக் கேட்கும் போது மிதமிஞ்சிய தன்னம்பிக்கை உணர்வோடு பாடுவது மாதிரி இருக்கும். இப்போதெல்லாம் ஓரிரண்டு பாடல்களைப் பாடி விட்டு அடுத்த முதல்வர் கனவில் இருக்கும் இளைய நடிகர்கள் போல ஆர்ப்பாட்டம் பண்ணும் இளம் பாடகர்கள் சிலரின் பாடல்களைக் கேட்கும் போது வெறுப்புத் தான் மிஞ்சும். எல்லோரும் எஸ்பிபி ஆகிவிடமுடியுமா என்ன?

எஸ்.ஜானகியின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் “உள்ளம் தேடாதே என்று சொல்லுதே” (எதையும் தாங்கும் இதயம்), “மலரோடு விளையாடும் தென்றலே வாராய்” (தெய்வபலம்),எஸ்.பி.சைலஜாவின் அறிமுகக் குரலில் “சோலைக்குயிலே” (பொண்ணு ஊருக்கு புதுசு), “மலர்களில் ஆடும் இளமை புதுமையே” (கல்யாண ராமன்), சுஜாதா அறிமுகமான வேளை “காலைப்பனியில் ஆடும் மலர்கள்” (காயத்ரி) இப்படியாக இந்த முன்னணிப் பாடகர்களின் அன்றைய பின்னணிப் பாடல்களைக் கேட்பதே தனி சுகம்.

இப்படியான அரிதான பாடல்களைப் பற்றிப் பேசும் போது அதே அலைவரிசையில் இருந்து ரசித்துக் கேட்கும் நண்பனோ, ரசிகனோ கூட இருந்து என்னளவில் சிலாகித்துப் பேசாவிட்டால் அது துரதிஷ்டமாகிவிடும். வானொலியில் பாடல்களை ஒலிபரப்பும் போதும் ஜனரஞ்சக அந்தஸ்துக் கிட்டிய பாடல்களைக் கேட்டால் தான் வானொலிப் பக்கம் நேயர்கள் வருவார்கள் என்ற கள்ளத்தனத்தால் இப்படியான அரிய பாடல்கள் மனசுக்குள் மட்டுமே முடங்கிவிடும். அப்படியான பாடல்களை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொருவர் சிலாகித்துப் பேசும் போது வரும் கிளர்ச்சி தான் இந்தப் பதிவாக வெளிப்பட்டிருக்கின்றது. ட்விட்டரில் நண்பர் கிரிஷ்குமார் என்னிடம் சித்ராவின் ஆரம்பகாலப் பாடல்களைப் பற்றிச் சிலாகித்த போது என் பங்கிற்கும் அவற்றைப் மீளப் புதுப்பிக்கக் கூடியதாக இருக்கிறது.


1984 ஆம் ஆண்டில் தமிழில் அறிமுகமாகிய சித்ராவின் ஆரம்ப காலப்படங்களில் குருவை மிஞ்சாத சிஷ்யை போல ஒரு அடக்கமான தொனியிலேயே அவரின் பாடல்கள் இருப்பது போலத் தென்படும். அந்த ஆரம்பப் பாடல்களைக் கேட்டாலே போதும் தானாக ஆண்டுக் கணக்கு வெளிவந்து விடும். வருஷங்கள் நான்கைக் கடந்த பின்னர் தான் ஒரு முதிர்ச்சியான தொனிக்கு அவரின் குரல் மாறிக் கொண்டது, அதாவது இன்றிருப்பதைப் போல.சித்ராவின் வருகை பூவே பூச்சூடவாவில் ஆரம்பிக்கிறது. அந்தக் காலத்து முன்னணி நாயகிகள் நதியா, ராதா, அம்பிகா, சுஹாசினி என்ற பட்டியலுக்குக் குரல் இசைத்தாலும் நடிகை ரேவதியின் குரலுக்கும் குணாம்சத்துக்கும் பொருந்தி வரக்கூடியாதான பாங்கில் அமைந்திருக்கின்றது.

எங்களூரில் 80 களின் மையப்பகுதியில் வீடியோப் படப்பிடிப்புக்காரர்கள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருந்த வேளை அது. பெண் பூப்படைந்ததைக் கொண்டாடும் நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கல்யாணக் காட்சி என்று வீடியோக்காரருக்கும் புதுத் தொழில்கள் கிட்டிக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாள் விழாக்களை எடுக்கும் வீடியோக்காரருக்கு அந்தக் காட்சிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும் பின்னணியில் பொருத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது தவறாமல் பயன்படுத்தப்படும் பாடல்களில் ஒன்று டிசெம்பர் பூக்கள் படத்தில் வரும் “இந்த வெண்ணிலா என்று வந்தது எந்தன் பாடலை நின்று கேட்டது”. சித்ராவின் ஆரம்பகாலக் குரலில் ஒன்று இது, இசைஞானி இளையராஜா இசையமைத்த பாட்டு. அளவான மேற்கத்தேய இசையும் சித்ராவின் அடக்கமான குரலும் சேர்ந்து இப்போது கேட்டாலும் அந்தப் பிறந்த நாள் வீடியோக்காலத்தைச் சுழற்றும்.

மனிதனின் மறுபக்கம் என்றொரு படம். இசைஞானி இளையராஜாவை எண்பதுகளில் அதிகளவில் பயன்படுத்திய இயக்குனர்களில் முதலிடத்தில் இருப்பவர் என்று சொல்லக்கூடிய கே.ரங்கராஜ் இயக்கத்தில் வந்த படம். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றையும் எழுதத் தனித்தனிப் பதிவுகள் தேவை. அவ்வளவுக்கு வித்தியாசமான கலவையாக இருக்கும். அப்படியானதொரு பாடல் தான் சித்ராவின் குரலில் ஒலிக்கும் “சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்”. ராஜாவுக்கே உரிய ஒழுங்குபடுத்தப்பட்ட வாத்தியக் கலவைகளின் நேர்த்தியான அணிவகுப்பில் இருக்கும் இசை, பாடலின் சரணத்திற்குப் பாயும் போது “மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி” என்று இன்னொரு தடத்துக்கு சித்ரா மாறுவார் அப்போது பின்னால் வரும் ட்ரம்ஸ் வாத்தியத்தின் தாளக்கட்டும் இலாவகமாக மாறி வளைந்து கொடுக்கும். பாட்டின் பின் பாதியிலும் “உன்னைக் கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்” என்னும் இடத்திலும் முந்திய பாங்கில் இருக்கும். ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்கும் காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அகப்பட்டு அவஸ்தைப்படும் நடிகர்கள் போல இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பலதும் அவரின் படங்களுக்கு இரையாகியிருக்கின்றன. அப்படியொன்று தான் “எனக்கு நானே நீதிபதி” படமும். இந்தப் படத்தில் சித்ரா பாடும் “திருடா திருடா” என்ற பாடல் அதிகம் கேட்காத பாடல்களுக்குள் அடங்கும். ஆனால் இசைஞானியின் பாடல்களைத் தேடிக் கேட்கவேண்டும் என்ற முனைப்பில் இருப்போர் தவறவிட்டிருக்காத பாடல். நீங்கள் தவற விட்டிருந்தால் இதோ கேளுங்களேன்

புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை…..

இத்தாலியின் பொலோனியா என்ற சிற்றூரில் இருக்கும் ஒருவன் ஒரு இந்திய சினிமாப் பாடலைக் கேட்கின்றான். அந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே குறித்த பாடலை இசையமைத்த இசையமைப்பாளர் யார் என்ற வேட்கை கிளம்பவே அவன் இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றான். தமிழகத்திலே இருக்கும் அந்த இசையமைப்பாளரைத் தேடிக் கண்டுபிடித்துத் தரிசிக்கின்றான். அந்த இசையமைப்பாளரை 40 இசைக்கலைஞர்களோடு இத்தாலிக்கு அழைத்துச் சென்று இசைக் கச்சேரி நடத்தி அவருக்குப் பாராட்டு வைக்க நினைக்கின்றான். அவன் கனவு 2004 இல் நிறைவேறுகின்றது. அந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, இத்தாலியின் குக்கிராமத்தில் இருந்த இத்தாலிக்காரனைச் சென்னைக்கு இழுத்து வந்த அந்தப் பாடல் “புத்தம்புதுக் காலை பொன்னிறவேளை”. இயக்குனர் சங்க 40 ஆவது ஆண்டு விழாவில் இந்தத் தகவலை மேடையில் வைத்துப் பகிர்ந்து கொண்டவர் யூகி சேது. அரங்கத்தில் இருந்து யூகி சேதுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார் இசைஞானி இளையராஜா.

“புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை” பாட்டைக் கேட்கும் கணங்கள் எல்லாம் விடிந்தும் விடியாத காலையில் சந்தடியில்லாத கடற்கரை மணலில், கடற்காற்று மெலிதாகச் சில்லிடக் கண்களை மூடிக் கொண்டு கேட்கும் சுகானுபவம் எப்போதும் எனக்கு. புல்லாங்குழல் மெல்ல மெல்லத் தனியாவர்த்தனம் கொடுத்துப் பாடலைக் கேட்கத் தயார்படுத்த ஒரு சில வயலின்கள் தொகுதி உடன்பாடு வைத்துக் கொண்டு தொடர பின்னணியில் கீபோர்ட் நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கும். பாட்டு முழுக்க ஒற்றை நோட்டிலேயே பயணிக்கிறது.ஜானகியின் குரல் தனக்கு மட்டுமே கேட்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பாடுமாற்போல கீழ்ஸ்தாயில் ஆரம்பித்து அதே அலைவரிசையில் 4.34 நிமிடங்களையும் தொட்டுச் செல்வார். மேற்கத்தேய வாத்தியங்களோடு கிராமியத்தனமே சுத்தமாக இல்லாமல் ஒரு நகர்ப்புற மங்கையின் உணர்வுகளாகப் பிரதிபலிக்கும் இந்தப் பாடலுக்கு வயசு 31. ஆனால் இப்போது கேட்டாலும் அதே புத்துணர்வு. இந்தப் பாடலுக்கு இன்னார் தான் என்று இறைவன் எழுதி வைத்திருப்பான் போல, எஸ்.ஜானகியைத் தவிர்த்து மற்றைய பாடகிகள் பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால் எல்லாரையும் ஓரங்கட்டி விட்டுக் கடைசிச்சுற்றிலும் ஜானகி தான் பொருந்துகிற அற்புதம். மேல்ஸ்தாயில் ஆர்ப்பாட்டம் பண்ணும் பாட்டுக்களாகட்டும் இம்மாதிரிக் காதுக்குள் கிசுகிசுக்கின்ற கீழ்ஸ்தாயி ஆகட்டும் எஸ்.ஜானகி தான் சூப்பர் ஸ்டாரிணி போல.

சில பாடல்களை இந்த நேரத்தில் தான் கேட்கலாம் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வதுண்டு. ஆனால் எல்லாக் காலத்திலும் எல்லா நேரத்திலும் சுதந்திரமாக என் செவிகளுக்குள் நடமாடிச் செல்லும் சுதந்திரத்தைக் கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

இயக்குனர் பாரதிராஜாவுக்கும் சில பாடல்களுக்கும் அப்படி என்ன பெரும் பகையோ தெரியவில்லை. இவரின் இசையில் வந்த படங்களில் கிழக்கே போகும் ரயில் படத்திற்காக “மலர்களே நாதஸ்வரங்கள்”, நிழல்கள் படத்திற்காக “தூரத்தில் நான் கண்ட உன் முகம்”, வேதம் புதிது படத்திற்காக “சந்திக்கத் துடித்தேன் பொன்மானே” என்று மெட்டுப் போட்டு ரசிகர்களைக் கட்டிப் போட்ட பாடல்களைத் திரையில் வராமல் கட் போட்டு விடுவார். அந்த வரிசையில் அலைகள் ஓய்வதில்லை திரைக்காக இசையமைத்த “புத்தம் புதுக்காலை” பாடலும் சேர்ந்து விடுகின்றது. அலைகள் ஓய்வதில்லை படத்தின் ஒரு காட்சியில் (ராதா அறிமுகக் காட்சி என்று நினைக்கிறேன்) கடற்கரை மணற்பரப்பில் டேப் ரெக்கார்டர் சகிதம் ராதா இருக்கும் வேளை இந்தப் பாடலின் மெலிதான இசை வந்து போகிறது அனேகமாக அந்தக் காட்சியில் தான் “புத்தம் புதுக்காலை” ஆரம்பத்தில் ஒட்டியிருக்கலாம்.

இந்த அதியற்புதமான பாடலைக் கழற்றி விட்டு “வாடி என் கப்பக்கிழங்கே” சேர்த்த பாரதிராஜாவை என்ன செய்யலாம்? பாரதிராஜா ஒருபக்கம் இருக்க, இந்தப் பாடலை அணுவணுவாக ரசித்து மெட்டுப் போட்டு முத்துமாலையாக்கிய இசைஞானி இளையராஜாவின் உணர்வலைகள் எப்படி இருக்கும்? சரி அலைகள் ஓய்வதில்லை படத்தில் தான் வரவில்லை, வேறு ஒரு படத்திலாவது இதே பாடலைச் சேர்த்திருக்கலாமே? அப்படி வந்த ஒரு பாட்டுத் தானே இங்கேயும் ஒரு கங்கை படத்தில் “சோலைப் புஷ்பங்களே” என்ற இன்னொரு முத்து. 30 வருஷங்களுக்குப் பின்னர் “Paa” ஹிந்திப் படத்தின் ஆரம்பக் காட்சியில் பள்ளிக் குழந்தைகள் பாடும் ஒரு சின்ன கோரஸ் பாட்டுக்கு மட்டும் வந்து தலைகாட்டிப் போகிறது இந்தப் பாட்டின் மெட்டு.

மூலப்பாடலைக் கேட்க

“Paa” ஹிந்திப்படத்தில் வந்த மீள் கலவையைப் படத்தில் இருந்து பிரித்துக் கொடுத்திருக்கிறேன்

“புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை” பாடலை தாரா என்றொரு ரசிகை பாடி அதை இணையத்தில் பதிவேற்றியிருக்கிறார், கேட்க இதமாக இருக்கிறது அந்த மீள் இசையும் அவரின் முயற்சியும்

Get this widget | Track details | eSnips Social DNA

கேட்டதில் இனித்தது “என்ன குறையோ என்ன நிறையோ”


சாஸ்திரிய சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்கள் பலர் திரையிசை உலகுக்கு வந்து தம் தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது காலாகாலமாக நடந்து வரும் சமாச்சாரம். ஆனால் அதற்கும் கூட நல்லதொரு தருணம் வாய்க்கவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் பாடகி சுதா ரகுநாதன். இன்றைய நிலையில் சாஸ்திரிய சங்கீதப் பரப்பில் சுதா ரகுநாதன் ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையில்லை. உள்ளூரில் மட்டுமன்றி தமிழர்கள் பரந்து வாழும் வெளிநாடுகளிலும் இவருக்கான பரந்துபட்ட ரசிகர் வட்டம் இருப்பதே அதற்குச் சான்று.
சுதா ரகுநாதனையும் திரையிசை உலகம் விட்டுவைக்கவில்லை. இசைஞானி இளையராஜா (இவன்), தேனிசைத் தென்றல் தேவா (கல்கி), வாரணம் ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்) என்று சுதா ரகுநாதனின் குரலைத் திரையிசைப்பாடல்களில் முன்னணி இசையமைப்பாளர்கள் இவர்கள் பொருத்திப்பார்த்தார்கள். உண்மையில் அவர்களுக்கெல்லாம் கட்டுப்படாத இந்தக் குரல் இலாவகமாக, கச்சிதமாகப் பொருந்திப் போனது என்னவோ அண்மையில் வந்த ஒரு பாடலில் தான் என்பேன். அந்தப் பாடல் தான் “மந்திரப் புன்னகை” படத்தில் வரும் “என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்”

இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் இன்னும் ரசிகர்களால் முன்னோ தூக்கி நிறுத்திப் பாராட்டப்பட வேண்டிய இசையமைப்பாளர் வித்யாசாகர் என்பேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக வித்யாசாகர் இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று சீசனுக்கு சீசன் வந்து போகும் நிலை இவருடையது. இவரைக் கச்சிதமாகப் பயன்படுத்தக் கூடிய இயக்குனர்களில் கரு.பழனியப்பனும் ஒருவர். பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், (இன்னும் வெளிவராத)சதுரங்கம், தற்போது வெளியாகியுள்ள மந்திரப்புன்னகை போன்ற படங்களில் இந்தக் கூட்டு எவ்வளவு தூரம் சிறப்பாக அமைந்திருக்கின்றது என்பதற்கு அந்தப் படங்களின் பாடல்களே சான்றாக விளங்கி நிற்கின்றன. இவர்களோடு இன்னொரு முக்கியமானவர், அவர் தான் பாடலாசிரியர் அறிவுமதி. ஒரு நீண்ட அஞ்ஞாதவாசம் இருந்து மீண்டவருக்கு ஒரு அறிமுகமாக இப்படம் கிட்டியிருக்கின்றது. அறிவுமதியைப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கின்றார் வித்யாசாகர். மெட்டுக்குப் பாட்டெழுதும் பெரும்பான்மைச் சூழலில் பாடல்வரிகளுக்கு மெட்டமைக்கும் சவாலை வித்யாசாகர் ஏற்கும் போது அறிவுமதி போன்ற கவிஞர்களின் பாடல்வரிகள் தான் அந்தச் சவாலுக்கு உறுதுணையாக வளைந்து கொடுத்து இசை வளையத்துக்குள் கட்டுப்பட்டுவிடுகின்றன.

சரி, இனி இந்தப் பாடலுக்கு வருவோம். ஆண்டவனிடம் தன்னை முழுமையாகக் கொடுத்து விட்ட சரணாகதி நிலையில் உள்ள ஒரு சூழ்நிலைக்கு ஒப்ப இந்தப் பாடல் பின்னப்பட்டிருக்கின்றது. இங்கே ஆண்டவன் என்ற நிலைக்குக் கண்ணன் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்.
கண்ணனுக்கே பிடித்தமான புல்லாங்குழல் மெல்ல அடியெடுத்துக் கொடுக்க சுதா ரகுநாதன் முதல் அடியை ஆரம்பிக்கிறார்.

கண்ணா….கண்ணா….கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

புல்லாங்குழல் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது இடையில் உறுத்தாத மேற்கத்தேய இசைக்குப் போய் மீண்டும் மிருதங்கம் ஒரு சிறு ஆவர்த்தனம் பிடித்து சுதா ரகுநாதனிடம் ஒப்படைக்க
அவர்

நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்….கண்ணன்….கண்ணன்…கண்ணன்

மீண்டும் புல்லாங்குழலோடு இம்முறை இன்னொரு கோஷ்டி மேற்கத்தேய வாத்தியங்களின் மெல்லிசை பரவ மிருதங்கம் அதைக் கைப்பற்றி சுதாவிடம் கொடுக்க

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிராகக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே…….

அப்படியே மீண்டும் முதல் அடிகளுக்குத் தாவாமல் நின்று விடுகிறது பாடல் அப்படியே எமது நெஞ்சிலும் நின்று நிலைத்துவிடும் அளவுக்கு. ஒரு சாஸ்திரிய இசைப்பாடகிக்குத் தோதான மெட்டும், இட்டுக்கட்டத் தேர்ந்த ஒரு பாடலாசிரியரும், ரசனை மிகுந்து பொறுக்கி எடுக்கும் வல்லமை வாய்ந்த இயக்குனரும் அமைந்தால் என்ன குறை?
சுதா ரகுநாதனின் இந்தப் பாடல் காலங்கள் கடந்தும் நிற்கும் கண்ணனைப் போலே.

பாடகர் இளையராஜா – பாகம் 2 (மேற்கத்தேய இசை ஸ்பெஷல்)


பாடகர் இளையராஜா என்ற தொகுப்பு ஆரம்பித்து இசைஞானி இளையராஜாவின் தேர்ந்த முத்துக்களைத் தொடராகக் கொடுக்கவிருந்தேன். பாகம் ஒன்றோடு அது இடை நடுவில் நின்று விட்டது. இதோ மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றேன்.

பாகம் 2 இல் இளையராஜா பாடிய மேற்கத்தேய இசைக்கலவையோடு இணைந்த பாடற் தொகுப்புக்கள் அணி செய்கின்றன. இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் அவருக்கே உரித்தான கிராமிய மணம் கமிழும் பாடல்கள், தாயின் மகிமை குறித்த பாடல்கள் போலவே “ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா” பாணியிலான மேற்கத்தேய இசை கலந்த பாடல்களும் தனித்துவமானவை. இவற்றில் பெரும்பாலானவை கோஷ்டி கானங்களாகத் தான் இருக்கும். அக்னி நட்சத்திரம் படப்பாடலான “ராஜா ராஜாதினெங்கள் ராஜா” பாடல் மூலமே இந்தவகையான பாடல்களை அதிமுக்கியத்துவம் கொடுத்து ராஜா அள்ளி வழங்கியிருந்தார். அவற்றில் ஐந்து முத்துக்களை இங்கே கோர்த்துத் தருகின்றேன்.

அந்தவகையில் முதலில் வருவது “பொண்டாட்டி தேவை” படத்தில் வரும் “யாரடி நான் தேடும் காதலி”. ராஜா இல்லாமல் சந்திரபோஸ் துணையோடு தன் முதற்படமான புதிய பாதை” படத்தை எடுத்துப் பெருவெற்றி கண்ட பார்த்திபன் இயக்கி நடித்த இரண்டாவது படம் “பொண்டாட்டி தேவை”. வித்தியாசமான ஒரு கதைப்புலத்தைக் கொண்டிருந்தாலும் படம் தோல்விப்படமா அமைந்தது. ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசையில் எல்லாப்பாடல்களுமே இப்படத்தில் கலக்கலாக இருக்கும். இந்தப் படத்தின் நாயகன் ஒரு பஸ் கண்டெக்டர். அப்படியான ஒரு பாத்திரத்தின் அறிமுகமாக முகப்புப் பாடலாக வருகின்றது “யாரடி நான் தேடும் காதலி”.
“ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா” பாடலின் வாடை அதிகமாகவே இப்பாடலில் தென்பட்டாலும் பாடலின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரு பஸ்ஸுக்குள் இருந்து இளசு ஒன்றின் மனக்கிடக்கை அழகான பீட் உடன் கொண்டு வருகின்றது. பலருக்கு இந்தப் பாடலை இப்போதுதான் முதற்தடவை கேட்கும் அனுபவமும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அடுத்த தெரிவாக வருவது பரதன் படத்தில் வரும் “அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும் பூஞ்சோலையே ” . இந்தப் படத்தை இயக்கிய எஸ்.டி.சபாவுக்கு இதுதான் முதற்படம். இவர் தான் பின்னாளில் சபாபதி என்றும் சபாபதி தக்க்ஷணாமூர்த்தி என்று இன்னாளிலும் தன் பெயரை மாற்றிக் கொண்டு தன் சினிமா வாழ்க்கையில் ராசியைத் தேடிக்கொண்டிருக்கின்றார். ஆனால் இவர் இயக்கிய படங்களைப் பார்த்தால் ஒன்றைச் சிலாகிக்கலாம். அது, பாடல்களைப் படமாக்கும் விதம். பரதன் படத்திலும் இளையராஜா, ஜானகி பாடும் “புன்னகையில் மின்சாரம்” பாடலை எடுத்த விதமே ஒரு சாம்பிள். இங்கே நான் தரும் பாடல் “அழகே அமுதே” வை தனித்துப் பாடியிருக்கிறார் இசைஞானி. பாடலின் ஆரம்பத்திலேயே திடுதிப்பாக வேகமானதொரு பீட் ஓடு ஆரம்பிக்கும் இசை அதையே தொடர்ந்தும் முடிவு வரை இழுத்துச் செல்கின்றது. அண்ணன் தம்பி பாசப் பின்னணியைக் காட்டும் இந்தப் பாடலில் வழக்கமான இப்படியான சூழ்நிலைக்கு வரும் மெலடி இசையைத் தவிர்த்துப் புதுமை காட்டியிருக்கிறார். பாடலில் அண்ணனாக நடிப்பது எஸ்.பி.பாலசுப்ரமணியம், தம்பியாக விஜயாகாந்த். இந்தப் பாடலில் இசைஞானி புகுத்தியிருக்கும் மேற்கத்தேய இசைக்கோவை தனித்துவமானது, அழகானது, அடிக்கடி இதைக் கேட்டு ரசிப்பேன்.

90களில் வந்த கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் இருந்து அடுத்து வரும்
“கானம் தென்காற்றோடு போய்ச்செல்லும் தூது” பாடல் ஒலிக்கின்றது. இந்தப் படத்தில் ஆஷா போன்ஸ்லே உட்பட எல்லாப் பாடல் பிரபலங்களும் பாடியிருந்தாலும் யாரோ ஒரு ஞான சூனியம் இயக்குனராக வாய்த்ததால் வெறும் பாடல் சீடியோடு சிலாகிக்கப்பட்டு விட்டது. இசைஞானி இளையராஜா விழலுக்கு இறைத்ததில் இந்தப் படத்தின் பாடல்களும் ஒன்று. இங்கே நான் தரும் “கானம் தென்காற்றோடு போய்ச்சொல்லும் தூது” , ஒவ்வொரு வாத்தியங்களையும் வெகு லாவகமான அணிவகுக்க வைத்து ராஜா தரும் பரிமாறலைக் கேட்கும் போது சுகம். மனுஷர் ரொமாண்டிக் மூடில் “மது மது” என்று உருகிப் பாடும் போதும், கிட்டார், புல்லாங்குழல், வயலின்களின் காதல் ஆர்ப்பரிப்பும் இன்னொரு முறை காதலிக்கத் தோன்றும்.

திரைப்படக்கல்லூரியில் இருந்து செல்வமணி என்ற இயக்குனர் வருகிறார். அவர் இயக்கும் முதற்படம் “புலன்விசாரணை”. முதற்படத்திலேயே இளையராஜா என்ற பெரும் இசையமைப்பாளர் துணை நிற்கின்றார் அவரை வைத்து ஐந்து பாடல்களை எடுத்து அதன் மூலமே படத்தை ஓட்டிவிடலாம் என்ற சிந்தனை ஏதும் இல்லாமல் ராஜாவிடம் பின்னணி இசையில் கவனித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மூன்று பாடல்களை மட்டும் வாங்கிக் கொண்டு அவற்றில் இரண்டை மட்டுமே பயன்படுத்தியதாக நினைவு. அதில் வரும் ஒரு பாடல் தான் “இதுதான் இதுக்குத் தான்” என்ற மேற்கத்தேய இசைக்கலப்பில் ராஜா பாடும் பாடல், துணையாக கங்கை அமரனின் பாடல் வரிகள். “நிலா அது வானத்துமேலே” பாட்டு எப்படி ஒரு பரிமாணமோ அதே வகையானதொரு சுகத்தை இந்தப் பாடலும் கொடுக்கவல்லது.

நிறைவாக வருவது தன் மகன் கார்த்திக் ராஜா இசையில் இசைஞானி இளையராஜா பாடும் “ஏய் வஞ்சிக் கொடி” என்ற பொன்னுமணி படத்தில் வரும் பாடல். படத்திற்கு இசை இளையராஜா என்றாலும் இந்தப் பாடல் மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்தது. பொன்னுமணி என்ற கிராமியப்பின்னணிக் கலப்பில் வந்த படத்தில் இப்பாடல் வித்தியாசப்பட்டு நிற்கின்றது. பாடலின் தனித்துவம் என்னவென்றால் பாடலின் இடையில் ஹோரஸாக “விட்டா ஒன்னோட ராசி எட்டுத்திக்கும் வரும் யோசி” என்று வரும் கணங்கள் புதுமையான கலவையாகப் பாடலை மெருகேற்றி ரசிக்க வைக்கின்றது. பாடல்வரிகள் ஆர்.வி.உதயகுமார். ராஜாவுக்குப் பொருந்தக் கூடிய பாடல்களில் இதுவும் சிறப்பானது.